புலியூர் முருகேசன் அவர்களின் “பீ தணக்கன்” சிறுகதை – நூல் அறிமுகம்
காணிகளெங்கும் கதிர் அரிவாக்கள்
தமிழ்ச் சமூகத்தில் எங்கெல்லாம் ஏழை எளிய பாட்டாளி மக்கள் போராடுகிறார்களோ அங்கெல்லாம் களத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு உற்றத் துணையாக நின்று அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் பொதுநலமான தோழர்கள் இருக்கும் வரை சுரர்கள் அச்சப்படத் தான் செய்கின்றன. பூர்வீகக் குடிகளிடம் நிலங்களை ஏமாற்றிப் பெற்று அதிகாரத்தில் எக்காளமிடும் சாதிய வர்க்க வாரிசுகளிடமிருந்து மீண்டும் எப்போது நிலங்களை கைப்பற்றப் போகிறார்கள் நிலமிழந்த வெள்ளந்தியான சம்சாரிகள். இவற்றையெல்லாம் முன்வைத்து தோழர் புலியூர் முருகேசன் (Puliyur Murugesan) தம்மைச் சுற்றி அரங்கேறிய நிகழ்வுகளை கதைகளாக்கி “பீ தணக்கன்” எனும் நூலாகத் தந்திருக்கிறார். எட்டு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பை பல்வேறு வகையான கோணங்களில் புலப்படுத்தியிருக்கிறார்.
வேடசந்தூரில் ஆரம்பித்து கரூர், திருச்சி என தஞ்சைப் படுகை வரை கதைகள் நீள்கின்றன. முதல் கதையே மீன்வாசத்தோடு தொடங்குகிறது. அதிலும் அயிரை மீன் குழம்பு.வாசகனின் நாசியைத் துளைக்கிறது.
கணவர் இறந்த பிறகு அவரது நினைவாக தோட்டத்திலே குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார் களத்து வீட்டம்மா.ஆற்றில் முட்டி வைத்து அயிரை மீன்கள் பிடிக்கும் சிறுவாண்டுகள் களத்துவீட்டம்மாவிடம் படி அம்பது காசென விற்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு வருதலும் குழம்பு வைப்பதும் அதற்கிடையே நடக்கும் கதைச் சம்பவங்களும் கண்களை கசியச் செய்கின்றன.
ஒரு குடும்பத்தில் பெண்ணின் பங்கு எவ்வளவு என்பதனையும் குடும்பத்திற்குள் ஏற்படும் சூழ்நிலை சண்டைகள் சச்சரவுகள் என அன்றாடக் காட்சிகளை கதைகளில் காணமுடிகிறது.
தெந்து இலைச் செவ்வெறும்புகள் எனும் இக்கதை பழங்குடி மக்களின் உழைப்பைச் சுரண்டி த் தின்னும் பெரும் முதலாளிகள் பற்றியும் கூலி உயர்வு கேட்டுப் போராடும் தோழர்களின் போராட்டங்களையும் தனித்தியங்கும் இடதுசாரி அரசியலையும் பேசுகிறது .
வட மாநிலங்களில் பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தெந்து இலைகளைப் பறித்து உழைக்கும் வர்க்கப் பழங்குடி மக்களின் இரத்தத்தை ஒய்யாரத்தில் நின்று உறிச்சிக் குடுத்தி ஏமாற்றிப் பிழைக்கும் பணமுதலைகளுக்கு துணைபோகும் காவல்துறை. குடிசைகளைப் பொட்டலாக்கி நாசம் செய்யும் ஒரு வேதனைச் சம்பவத்தை தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் புலியூர் முருகேசன் (Puliyur Murugesan) .
மரவியாபாரம் செய்து வரும் மேல் இனத்தைச் சேர்ந்த உலோகநாதன். ஊருக்குள் பொய்ச்சாமியாடியாகவும் வலம் வருகிறார். இந்த ஊரில் என்னவோ பைரவர் சாமி இறங்கியாடுகிறார். ஊர் வழக்கம் போல் தெரிகிறது. தனக்கு விலைக்குக் குடுக்காத தீப்பெட்டி மரத்தை (வழுக்கு மரம்) எப்படியாவது தோட்டக்காரன் வீரப்பனிடமிருந்து பெற வேண்டும் என்று கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருக்கும் உலோக நாதனுக்கு இதுதான் சமயம் என்று ஊர்த்திருவிழா வருகிறது .இத்திருவிழாவை காரணம் காட்டி பைரவர் சாமியிறங்கியாடி வழுக்கு மரம் வேண்டும் அது வீரப்பன் தோட்டத்தில் இருக்கு என்று ஊர் மக்களை அழைத்துச் சென்று தோட்டக்காரர் வீரப்பன் சம்மதத்தோடு சல்லிபைசா கூட இல்லாமல் மரத்தை வாங்கி வருகிறான். தான் இல்லை என்று சொன்ன வழுக்கு மரத்தை பொய்ச் சாமியாடி பெற்றுவிட்டான் உலோகநாதன். ஆண்டுகளாக பிள்ளைகள் போல் வளர்த்த வீரப்பன் அழுது கொண்டிருக்கிறார்.
உலோகநாதன் ஊருக்குள் அவுத்துவிட்ட கோவில் காளை போல சுற்றுகிறான். கலியாணம் ஆகா நபர் என்பதால் காதல் சோடிகளை பிரித்து விடுகிற வேலையும் செய்து வருகிறார். கீழத்தெரு மேலத்தெரு பிரிவினை பேசுபவராக இருக்கிறார்.
இப்படியிருக்கும் நபர் பைரவர் சாமியாடி எனும் போலியான அடயாளத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருவதை “பீ தணக்கன்” கதையில் காண முடிகிறது.இப்படியெல்லாம் உண்மையிலேயே நடந்திருக்குமோ என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. உலோகநாதனைப் போலவே நூற்றுக்கணக்கானோர் இச்சமூகத்தில் நடமாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
மேளகாரர்களை வீட்டுத் திண்ணையில் கூட உட்கார வைக்க மாட்டார்கள். ஊருகளில் கோவில் கொடை திருவிழா இழவு, நாடகம், போன்ற நிகழ்வுகளில் மேளத்தை ரசிக்கும் சமூகங்கள் , அவர்கள் முன் இடுப்பில் துண்டு கட்டி கைகட்டி தான் நிற்க வைக்கிறார்கள். கிராமங்களில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றால் கூட மேளகாரர்களை ஆடு மாடு கட்டி வைக்கும் கொட்டங்களில் ஒக்கார வைத்து சோறு போடுகிறார்கள்.எவ்வளவு அபத்தமானது. இதே மேளகாரர்கள் திருவிழாக்களில் வாசித்து அடித்தால் தான் சாமியே இறங்கிவருவதை நாம் கண்கூட காணுகிறோம்
மேளம் வாசிக்கும் தொழிலைக் கொண்ட கருணாநிதி தாத்தா மற்றும் பள்ளி விடுமுறையில் தாத்தா வீட்டுக்கு வரும் பெயரனும் இங்கே ஏற்பட்ட சாதியக் கழிவுகளால் வீசும் நாற்றத்தை கொஞ்சம் கூட பிசிராமல் “கருந்துளையின் இரண்டு விழிகள் ” என்ற கதையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் புலியூர் (Puliyur Murugesan) முருகேசன்.
உழுகுடிச் சம்சாரிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்த தானியப் பேய்க்கூட்டங்களையும் அதனால் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றி விரிவாகப் புலப்படுத்தியிருக்கிறார் தோழர் புலியூர் முருகேசன் (Puliyur Murugesan) தானியப்பேய்க்கூட்டம் என்கிற கதையில்.
“உழுதவன் கணக்கு பாத்தா உழக்குக்கூட மிஞ்சாது” என்ற பழமொழியை சம்சாரிகள் சொல்லிவருவதைக் கேள்விப் பட்டிருப்போம்.
இந்தக்கதையில் உழக்கும் மிஞ்சவில்லை உயிரும் பிழைக்கவில்லை.
ஊரில் தொடர்ந்து விவசாயிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து வருகிறார்கள். காரணம் (தானியப் பேய்க்கூட்டம் )பசுமையான புரட்சி எனும் போர்வையில் விவசாயிகளிடமிருந்து காணிகளைப் பிடுங்கும் தந்திர நரிகள்.அந்த ஊரிலேயே இந்தப் பேய்க்கூட்டத்திலிருந்து யாருக்கும் சிக்காமல் தப்பித்த வீரையன்.தன்னுடைய காணி நிலத்தில் செய்த வெள்ளாமையை கதிர் அறுப்புக்குத் தயாராகையில் பெரு மழையால் மூழ்கி கதிர்கள் நாசமாகிறது. கடைசியில் வீரையனும் வேறு வழியின்றி தானியப் பேய்க்கூட்டத்திடம் தஞ்சம் அடைய வேண்டிய சூழ்நிலை. தானியம் வாங்கி விதைக்கிறார். பயிராகிறது.அறுவடைக்குத் தயாராகும் போது தானியப்பேய்க்கூட்டங்கள் நிலத்தையும் களத்தையும் சுற்றி வளைக்கிறது.
அய்யனார் கோயிலில் தூக்கிடச் சென்ற வீரையனை தடுத்து நிறுத்தும் சிறுவன். கையில் கதிர் அறுவாளைக் கொடுத்து காணிக்கு அனுப்புகிறான்.
இறுதியில் என்னவோ கீழ்தஞ்சையில் உள்ள ஒரு குளத்தில் உயிரற்ற உடலாக மிதந்து வரும் அவனின் இடது கையில் கதிர் அரிவாள் மட்டும் இருக்கிறது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு முழுக்க முழுக்க பொதுநலப் பிரச்சனைகளையும் பாட்டாளி மக்களின் உழைப்புச் சுரண்டலையும்,ஏழை எளிய கிராமத்துச் சம்சாரிகள் சுமக்கும் காயங்களையும் வலிகளையும் அடர்த்தியாகக் கொண்டுள்ளது.அதிகார நிறுவனங்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் பழங்குடிகளின் வாழ்வியல் சாரந்தவைகளை எடுத்துரைக்கின்றன. அறப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சமூக உரையாடல்களை கதைகளில் முன் வைத்திருக்கின்றன.
படைப்பாக்கிய தோழர் புலியூர் முருகேசன் (Puliyur Murugesan) அவர்களுக்கு வாழ்த்துகள்
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: பீ தணக்கன் [சிறுகதைத் தொகுப்பு]
ஆசிரியர்: புலியூர் முரு
பதிப்பகம்: குறி வெளியீடு.
பக்கங்கள்:96
விலை: ரூ 100/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
அய்யனார் ஈடாடி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.