நர்மதா தேவி (Narmadha Devi) எழுதி பாரதி புத்தகாலயம் (Bharathi puthakalayam) வெளியீட்ட பெண் - அன்றும் இன்றும் (Pen Andrum Indrum) நூல் அறிமுகம்

பெண் – அன்றும் இன்றும் – நூல் அறிமுகம்

விழித்தெழப் போகிறவர்களின் முகப்பு வளாகம்

– தேனிசீருடையான்

ஒரு தொழிலாளி ஒரு முதலாளியால் அடக்கப்படுகிறார் அல்லது சுரண்டப்படுகிறார். ஓர் அரசு ஊழிய்ர் தன் மேலதிகாரியால் ஒடுக்கப் படுகிறார். சிறைக்கைதி சிறைத்துறை அதிகாரிகளால் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர். ஆனால் ஒரு பெண் வீட்டிலும் சமூகப் பொது இடங்களிலும் தொழிற்சாலைகளிலும் வயல் வெளிகளிலும் அடக்கி ஒடுக்கப் பட்டு சுரண்டப்படுகின்றாள். ஏன் இந்த அவலம் என்ற கேள்விக்கு, பல்லாயிரம் ஆண்டுகால சமூக வளர்ச்சிப் போக்கையும் வரலாற்று நிகழ்வுகளையும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து ஆவணமாகத்தந்திருக்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான நர்மதா தேவி. பெண்விடுதலைக்கான களப் போராளிகளுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டிக் கையேடாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. மார்க்சிய அணுகுமுறையுடன் தனது எழுத்தைத் தொடங்கி, தொடுத்து,, முடித்திருக்கிறார் என்றும் சொல்லலாம். வாசிக்க எளிமையாகவும் விருவிருப்பாகவுமிருக்கிறது.

பெண் ஒடுக்குமுறை என்பது பூமிப்பரப்பின் அனைத்து நாடுகளிலும் அனைத்து இன மக்களுக்குள்ளும் விரவிப் பரவி இருக்கிறது என்பதை வரலாற்று ஆவணங்களில் இருந்தும் வாழ்வியல் நடைமுறைகளில் இருந்தும் ஆய்ந்து பதிவிட்டிருக்கிறார். மிகப் பெரிய உழைப்பைச் செலுத்தி இந்த நூற்றாண்டின் மாபெரும் பெண்ணிய ஆவணம் என்று சொல்லத் தக்க அளவுக்கு வாசக மேடையில் பார்வைக்கு வைத்திருக்கிறார். அவர் உழைப்பையும் எழுத்தையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த நூலின் அனைத்து அம்சங்களையும் இந்தச் சின்ன மதிப்புரையில் சொல்லிவிட முடியாது என்றாலும் ஒன்றிரண்டு விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாய் இருக்கும் என நம்புகி|றேன்.

கூலி என்றால் என்ன என்ற கேள்விக்குப் பொதுவாகச் சொல்லப்படும் பதில்; “ஒரு தொழிலாளி தன் உழைப்பை ஒரு முதலாளிக்கு விற்கிறான்; அல்லது ஒரு முதலாளி தனது வருவாயில் இருந்து சம்பளம் தந்து ஒரு தொழிலாளியின் உழைப்பை விலைக்கு வாங்குகிறான்” என்பதுதான். ஆனால் கூலி உழைப்பைக் கார்ல் மார்க்|ஸ் அறிவியல் ரீதியாக விளக்குகிறார். ”இப்படிச் சொல்வது வெறும் பொய்த்தோற்றம்தான். உண்மையில் தொழிலாளர்கள் முதலாளிகளிடம் விற்பது அவர்களின் உழைப்பை அல்ல; உழைப்பு சக்தியை” என்கிறார் மார்க்ஸ்.

இப்போது; உழைப்பு சக்தி என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ”மனிதனின் சதையையும் ரத்தத்தையும் தவிர வேறு சேமிப்பிடம் இல்லாத, தனித்துவம் கொண்ட பண்டம்தான் உழைப்பு சக்தி. இதன் விலையைக் குறிக்கும் தனிச்சிறப்பான பெயர்தான் கூலி.” என்கிறார் மார்க்ஸ்.

ஆக உழைப்பிடத்தில் மனித சக்தி ஒரு பண்டமாக அல்லது பொருளாக மாற்றப் படுகிறது. அந்தப் பண்டத்தின் இயக்கத்தால் உருவாவதுதான் லாபம். அப்படியானால் அந்த லாபம் முழுவதும் அந்த உழைப்பு சக்திக்குத்தானே போய்ச்சேர வேண்டும். அப்படி நடப்பதில்லை. உழைத்து முடித்து லாபம் ஈட்டிவிட்டு மீண்டும் உழைப்பு சக்தியை உள்வாங்கிக் கொள்வதற்கு எவ்வளவு பொருளாதாரம் தேவையோ அதுதான் கூலி. உழைப்பு சக்தியால் உருவான லாபத்தின் சிறிய பகுதி மட்டும்தான் கூலியாகத் தரப்படுகிறது. மீதி உபரியாக முதலாளியிடமே பதுங்கி விடுகிறது. உழைப்ப்பு சக்தியால் கிடைத்த லாபத்தின் பெரும் பகுதியைத் தனதாக்கிக் கொள்ளும் முதலாளியின் இயக்கத்துக்குப் பெயர்தான் சுரண்டல். சுரண்டல் என்ற இந்தத் தத்துவத்தைக் கண்டறிந்த உலகின் முதல் சமூக அறிவியல் விஞ்ஞானி காரல் மார்க்ஸ்.

ஓர் ஆண் தொழிலாளி பணியிடத்தில் தனது உழைப்பு சக்தியைக் கூலிக்கு விற்றுவிட்டு வீட்டுக்கு வருகிறான். வீட்டில் மனைவி, தாய், தங்கை யாரேனும் ஒருவர் அந்தத் தொழிலாளி மீண்டும் தன் சக்தியைப் பெறுவதற்காக வீட்டில் உழைக்கிறார்கள். எழுத்தாளரின் பார்வையில் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்வதற்கான உழைப்பு அது. அந்த உழைப்புக்குப் பெண்கள் எந்தக் கூலியையும் பெறுவதில்லை. இல்லத்தரசி என்ற பெண் கணவனின் சக்தியை மீட்டெடுக்கத் தனது உழைப்பின்மூலம் மறு உற்பத்தி செய்ய உழைக்கிறாள். அதோடு தமது வாரிசாக இன்னொரு தொழிலாளியையும் உற்பத்தி செய்கிறாள். ஆண் தொழிலாளிகள் கூலி வாங்கிக் கொண்டு விற்கும் சக்தியைவிட, கூலி வாங்காமலே பெண் தனது உடலியல் சக்திமூலம் ஆணின் உடலியல் சக்தியை உற்பத்தி செய்கிறாள். குடும்ப உறவு, மனித சக்தி உற்பத்தி என்ற வளாகத்துக்குள் கூலி பெறாமலே தன்னை சுரண்டுவதற்கு மனம் ஒப்புகிறார்கள் பெண்கள்.

இந்த உழைப்பை விவரிக்கும்போது மாமேதை லெனின் இவ்வாறு கூறுகிறார். “ஒரு பெண் செய்யக்கூடிய வேலைகளிலேயே மிகக் கொடூரமான, மிகக் கடினமான வேலை என்பது பெரும்பாலும் வீட்டு வேலைகள்தான். தனது வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாத மிக அற்பமான வேலையாக இந்த வேலை இருக்கிறது.” ஆக, யாரோ ஒரு முதலாளி செய்யும் தொழில் உற்பத்திக்காகத் தனது வீட்டு ஆண்களின் உழைப்பு சக்தியை உற்பத்தி செய்யும் பெண்களின் வேலை அற்பமானதும் தியாகப்பூர்வமானதும் ஆகும் என நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்கிறார்.

”உழைப்பு சக்தியை உற்பத்தி செய்வதற்குப் பெண்களின் உழைப்பு ஆதாரமாக இருக்கிறது; … இந்த அடிப்படையிலாவது பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளின் மதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் ஒரு பகுதியாகக் கணக்கில் கொள்ளப் படவேண்டும். ஆனால் பரிவர்த்தனை மதிப்பில் இயங்குகிற ஒரு சமூகத்தில், விற்பனைக்காகச் செய்யப் படாத சேவை என்பதால் பெண்களின் வீட்டுவேலைக்கு ஊதியம் இல்லை என்பதோடு அது ஒரு வேலையாகவே கருதப்படுவதில்லை.” இந்தக் கொடுமைதான் பெண்ணினத்தின் பல்லாயிரமாண்டு கால வாழ்வியல் சுவடு. நாகரீக சமுதாயம் உருவானபோது தொடங்கிய இந்தச் சுரண்டல்முறை இன்றளவும் வேறு வேறு தளங்களில் வேறு வேறு வபடிவங்களில் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வு நூலின் உள்ளடக்கம். இதை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இந்த நூலின் மையக் கருத்து.

பெண் – அன்றும் இன்றும் இந்த நூல் ஏராளமான புள்ளி விவரக் கணக்குகள் மூலம் பெண்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் சூழலை விவரிக்கிறது என்றாலும் இது புள்ளி விவரக் கணக்குகளின் அடுக்குமட்டம் அல்ல; இலக்கிய அழகோடும் எழுச்சி வீர்யத்தோடும் வாசக மனதில் பௌதீக சக்தியை உருவாக்கும் விதமாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. விழித்தெழப் போகும் பெண் சமுதாயத்தின் முன்னுரைப் பகுதியாக இந்த ஆய்வுநூல் திகழ்கிறது என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரமுடியும்.

நூலின் விவரம்:

நூல் : பெண் – அன்றும் இன்றும்
ஆசிரியர் : நர்மதா தேவி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்: 512
விலை: ரூ.520
தொடர்புக்கு:44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com

நூல் அறிமுகம் எழுதியவர்:

தேனி சீருடையான்

…………………………………………………………………………………………………………………………………


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *