பெண்: அன்றும் இன்றும் - நூல் அறிமுகம் - Pen Andrum Indrum tamil book review by V.Meenakshi Sundaram - Nartmaha Devi - https://bookday.in/

பெண்: அன்றும் இன்றும் – நூல் அறிமுகம்

பெண்: அன்றும் இன்றும் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: 

நூல்: பெண்: அன்றும் இன்றும்

ஆசிரியர் : நர்மதா தேவி

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ.520 /-

தோழர் நர்மதா தேவி எழுதிய “பெண்: அன்றும் இன்றும்” என்ற 512 பக்கங்களை கொண்ட கனமான புத்தகத்தை வாசித்த பிறகுதான், புத்தகத்தின் கனத்தைவிட அதில் உள்ள கருத்துக்கள் கனமானவை என்பதை உணர்ந்தேன்.  பெண்மையை மட்டுமல்ல; உழைப்பு சக்தியை இழிவுபடுத்தும் மூத்த பொய்களை தகர்க்கும் வெடிமருந்தாக அது எனக்குப் பட்டது. உழைப்பு சக்தியை கேவலமாக கருதும் சமூகப் பார்வையை மாற்றவல்ல, கூட்டுச் செயலுக்கு நம்பிக்கையூட்டும் வரலாற்றுப் பதிவுகளை கொண்ட பெட்டகமாக இப்புத்தகம் திகழ்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் பார்வையோடு பெண்ணின் பிரச்சினைகளை குறிவைத்து பேசுகிறது என்பதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பாகும். பிரபுக்கள் மற்றும் அம்பானி போன்ற பணக்கார வீட்டு பெண்களுக்கும் இருக்கும் நகைகள் பூட்டி அழகு பதுமைகளாக உலாவரும் ஆசைகளை, ஏக்கங்களை டி.வி சீரியல்கள் பெரிதுபடுத்தும் குடும்பத்தில் இருக்கும் கவுரவ உறவு மோதல்களை பெண்ணின் பிரச்சினையாக தொடவில்லை. 

இப்புத்தகத்தின் உள்ளடக்கம் எட்டுத் தலைப்புகளை கொண்டது. பெண்ணின் அந்தஸ்தில் ஏற்பட்ட மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. புராதன பொதுஉடமை கட்டத்தில், அடுத்துவந்த வர்க்க பிரிவினை உருவான புராதன அடிமை சமூகத்தில், அதை கடந்து நிலஉடமை மன்னர்கள் ஆட்சி நிலவிய காலத்தில், அதையும் கடந்து பணப்பட்டுவாடா உறவு முதலாளித்துவ சமூகத்தில் மீண்டும் தலையெடுத்த அடிமை கட்டத்தில், அதைத் தாண்டிய இன்றைய தாராளவாத முதலாளித்துவ கட்டம் வரை பெண்ணின் இருப்பை மற்றும் சுயமரியாதையோடு வாழத் தொடுத்த போராட்டங்கள் இவற்றைப் பதிவு செய்கிறது.

பாட்டாளி வர்க்க புரட்சியால் துவக்ககால சோசலிச கட்டத்தில் பெண் சுயமரியாதையோடு வாழ கிடைத்த வாய்ப்புகள், இந்தியாவில் சோசலிச புரட்சிக்கு மக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள், என்கவுண்டர்கள், அவதூறுகள், முன்னோடிகளின் தியாகம் இவை பற்றி வரலாற்று கடலில் படிப்பினையாக கொள்ளத்தக்க நிகழ்வுகளை தேர்வு செய்து ஆசிரியர் தொகுத்துள்ளார். 

நிறைவாக, ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ சுயமரியாதையுள்ள குடிமக்களாக வாழும் உரிமையை பறிக்கும் இந்து சாம்ராஜ்யவாத ஆட்சியை அகற்றுவதை நம் உடனடிக் கடமையாக ஆசிரியர் முடிக்கிறார். வர்க்க போராட்டத்தின் போர்முனைகளில் ஒன்றாக பெண்ணின் சுயமரியாதைக்கான போராட்டம் இருக்கிறது என்பதை இப்புத்தகம் தெளிவாக காட்டுகிறது.

உடலையும் உழைப்புச் சக்தியையும் பிரிக்க முடியாது. ஆனால் உழைப்பு நேரத்தை விலை கொடுத்து வாங்குவதன் மூலம், கரும்பிலிருந்து சாறை பிழிவது போல் உழைப்புச் சக்தியை உழைப்பவர் உடலிலிருந்து பிரித்து மூலதனம் உழைப்பவர்களை சக்கை ஆக்கிவிடுகிறது. அதிலும் கொடுமை என்னவெனில், பெண் உழைப்பு சக்திக்கு விலை குறைவு. 

அதிலும் பெண் என்பவள் எளிதில் சோர்வோ, களைப்போ அடையா உழைப்பு சக்தியை பெற்றவள் என்பதை அங்கீகரிக்க மறுக்கும் ஆணாதிக்க மனோபவம் ஒரு மூத்த பொய்யை திரும்ப திரும்ப சொல்கிறது. 

பெண் மென்மையானவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவையே அவளது பிறவிக் குணம். அதனை மாற்றக் கூடாது. ஆணைச் சாராமல் அவள் வாழமுடியாது என்று ஆதிகால அற நூல்களில் மண்டிக் கிடக்கும் மூத்த பொய்களை இன்றும் சொல்கிறது. இப்புத்தகம் இந்த ஆணாதிக்க பார்வை இன்று வரை தொடர்வதை, அதனை எதிர்த்த வரலாற்று ரீதியான கருத்துப் போர்களை நேர்த்தியாகப் பதிவாக்கியுள்ளது. .

இந்திய அதிகார மையத்தில் இது இன்றும் நீடிப்பதை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் கூறியதை மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறது. (பக்கம் 43)

பெண்ணின் “பின் தூங்கி முன்னெழும் தன்மை”, சமையல் கலையில் “கை பக்குவம்” தாளத்திற்கேற்ப ஆடும் பாதங்கள், பிரசவவலியை மகிழ்வோடு தாங்கும் தாய்மை இவைகளை பாராட்டும் ஆணுக்கு, பெண்ணிற்கு சுயமரியாதை உண்டு என்பதை ஏற்க மறுப்பதை இப்பகுதி தெளிவாக காட்டுகிறது. வாசிக்க வாசிக்க ஆணாதிக்க மனோபாவம் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பது நம் கண்முன் விரிகிறது.

தனது உரிமைக்காக மட்டுமல்ல; ஒடுக்கப்படும் சமூக பிரிவின் உரிமைக்கான போரில் பெண்ணின் பங்களிப்பு பற்றிய தகவல் பெட்டகமாக இந்த நூல் உள்ளது.

குறிப்பாக, அமெரிக்க கருப்பர் சுயமரியாதை போராட்டத்தில் பெண்களின் பங்கை பதிவு செய்கிறது. லட்சியத்தை நோக்கிய பயணத்தில் சமரசமற்ற போராட்டத்திற்கு அடையாளமாக இருப்பதையும், முன்னெடுப்பு போராளியாக பெண்கள் இருந்ததையும், ஐஸ்லாந்து நாட்டு பெண்கள் நடத்திய நூதன இயக்கம் பற்றியும், படிக்க நேரும் ஒரு பெண், தன் மீதே நம்பிக்கையற்றவராக இருந்தால், அந்த பயத்திலிருந்து மீண்டெழுந்து ஜனநாயக இயக்கத்தில் இணைவார். இதுவரை பார்வையாளராக இருந்துவிட்டோமே என மனம் வருந்துவார்.

அத்தியாயம் 11லிருந்து 22 வரை உள்ள பகுதியே இந்நூலின் துடிக்கும் இதயமெனலாம். இப்பகுதி தனியாக வருவது அவசியம். கண்ணீரும், கோபமும் கொப்பளிக்காமல் இப்பகுதியை வாசித்துத் தாண்டமுடியாது. தமிழ்நாட்டில் சுமங்கிலி திட்டத்தின் கீழ் இளம் பெண்கள் படும் அவதியை மற்றும் தேயிலைத் தோட்டத்து உழைக்கும் பெண்களின் நிலை இவற்றைப் படிக்கிற பொழுது கண்ணிலே நீர்கசியும். முதலாளிகள் சட்டத்தை மீறினால், தேச மொத்த வருவாய் உயர இது தேவை என்று அரசு கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலை பற்றியும், சட்டத்தை மீற அரசே ஜி.ஓ மூலம் அனுமதிப்பதுவும், தமிழ்நாட்டில் சமூக நீதி பல்லை இளிப்பதையும் படிக்கிறபொழுது கோபம் வராத வாசகர் மரக்கட்டையே.

பெண் போராடிப் பெற்றதைப் பற்றியும், சுயமரியதையுள்ள சிட்டிசன் அந்தஸ்தை பெற நடத்தும் போராட்டத்தை பற்றியும், ஆணாதிக்க வரலாறு கூறும் பொய்களையும், இன்றைய பம்மாத்தையும், இப்புத்தகம் தோலுரித்து காட்டுகிறது.

பாலின சமத்துவத்தை நேர்மையாக கடைபிடிப்பது, மார்க்ஸ் எங்கெல்ஸ் வித்திட்டு புரட்சிக்கு மக்களை தயார் செய்யும் கம்யூனிச அரசியல் இயக்கம் தவிர வேறு எதுவுமில்லை என்பதை இப்புத்தகம் தெளிவுபடுத்துகிறது. இப்புத்தகத்தை வாசகர் கையடக்க புத்தகங்களாக 4 வால்யூம்களாக வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

எழுதியவர் : 

வி. மீனாட்சிசுந்தரம்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. பக்தவத்சலம்

    சுயமறியாதை=சுயமரியாதை

    • க. சுவாமிநாதன்

      அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *