பெண் அன்றும் இன்றும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : பெண் அன்றும் இன்றும்
ஆசிரியர் : நர்மதா தேவி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்: 512
விலை: ரூ.520
தொடர்புக்கு:44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com
ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்களின் வரலாறு
“பெண் அன்றும் இன்றும்” என்கிற அற்புதமான நூலை நர்மதா தேவி ஏராளமான தரவுகளுடன் நமக்கு வழங்கி இருக்கிறார். பாரதி புத்தகாலயத்தின் புக் டே தளத்தில் 2023ல் தொடராக எழுதப்பட்டதே தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. 8 பகுதிகளுடன் 510 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்கும் போது அதற்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல், பெண்கள் பல்வேறு பரிமாணங்களில் சந்திக்கும் சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் வரலாற்றுப் பின்புலத்தோடு மட்டு மல்ல, வர்க்கப் பின்புலத்தோடு எழுதி யிருக்கிறார்.
பெண்ணடிமைத்தனத்தின் தோற்றம் என்பது வர்க்க சமூகம் உருவானதோடு ஒத்திசைந்து வந்தது என்பதை மார்கன், எங்கெல்ஸ் உள்ளிட்ட பல ஆளுமைகளின் உதவியோடு நூலாசிரியர் விளக்குகிறார். சமூக வளர்ச்சியினூடே, குடும்ப முறைமை எப்படி மாற்றத்திற்கு உள்ளானது என்பதை முன் வைப்பதன் மூலம், குடும்பக் கட்டமைப்பு புனிதமானது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்கிற மாய பிம்பத்தை தகர்க்கிறார்.
முதலாளித்துவத்திற்கு முந்தைய காலகட்டங்களின் எச்சமான பெண் அடிமைத்தனம், முதலாளித்துவத்தால் தகர்க்கப்படாமல் தன்வயப் படுத்தப்பட்டது. இதற்கான காரணம் பெண் தொழிலாளியின் மலிவு உழைப்பை பயன்படுத்தி லாபம் ஈட்ட முடியும் என்பது மட்டுமல்ல, பெண்ணின் வீடு சார் இலவச உழைப்பு, ஒரு தொழிலாளி உழைத்து விட்டு மறுநாள் மீண்டும் வந்து உழைப்பு சக்தியைக் கொடுப்ப தற்கான ஆதார வேலைகளுக்கான செலவைக் குறைக்கிறது என்பதும் தான்.
உலக அளவிலும், இந்தியாவிலும் முதலாளித்துவ முறைமையின் துவக்க காலத்தில் பெண் தொழிலாளிகள் நிலைமை எப்படிப்பட்ட கடும் சுரண்டலுக்கு உள்ளானதாக இருந்தது என்பதை ஆசிரியர் பல்வேறு விவரங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறார். குறிப்பாக தேயிலைத் தோட்டம், சுரங்கம் போன்ற தொழில்களில் பெண் தொழிலாளிகள் படும் வேதனையை தத்ரூபமாக வர்ணிக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அது சமூக சீர்திருத்தமானாலும் சரி, சுரண்டலுக்கான நிவாரணமாக இருந்தாலும் சரி, எண்ணற்ற போராட்டங்களின் மூலமே அது சாத்தியப்பட்டது என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளின் கையில் ஆட்சி அதிகாரம் சென்றதால் உழைப்புச் சுரண்டல் தொடர்வது குறித்தும், குறிப்பாக நவீன தாராளமய காலகட்டத்தில் இத்தகைய சுரண்டல் பல கோணங்களில் நடைபெறுவது குறித்தும் தமிழ்நாடு உள்ளிட்ட உதாரணங்களோடு முன்வைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவுறும்போதே பாலின தேர்வு நடக்கும் பிற்போக்குத்தனத்தை இந்நூல் தோலுரிக்கிறது.

மனுவாதக் கோட்பாட்டை தகர்க்கும் கடமை
சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய மூன்றுமே பெண்ணடிமைத்தனத்தில் ஊடாடுவதும், பிராமணிய மேலாதிக்கம், அதனை நியாயப்படுத்தும் மனுவாதக் கோட்பாடு
போன்றவற்றைத் தகர்க்கும் கடமை இத்துடன் இணைந்தது, அதே சமயம் இதனைத் தகர்ப்பது மட்டும் போதாது, வர்க்கச் சுரண்டல் அமைப்பை எதிர்க்கும் போராட்டத்தோடு ஒருங்கிணைய வேண்டும் என்பதும் நூலில் அறிவார்ந்த முறையில் முன்வைக்கப் படுகின்றன.
பெண் விடுதலைக்கும் மண் விடுதலைக்கும் சேர்த்தே குரல் கொடுத்த, களமாடிய அகில இந்திய, தமிழ்நாட்டுத் தலைவர்கள், குறிப்பாக கே.பி.ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத், என்.எஸ். ருக்மணி அம்மாள், ஷாஜாதி உள்ளிட்டவர்க ளின் பங்களிப்பு இந்நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பு சேர்க்கிறது. வீரத் தெலுங்கானா போராட்டமானாலும், வார்லி ஆதிவாசிகளின் போராட்டமானாலும் பெண்கள் அவற்றில் காத்திரமான பங்கு வகித்தது படிக்கும் போதே நம்மை உத்வேகப்படுத்துகிறது.
அனைத்து அநீதிகளும் சுரண்ட லும் ஒடுக்குமுறையும் நடக்கும்போது அரசு என்ன செய்கிறது என்பது மிக முக்கியமான கேள்வி. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்கிற அடிப்படையில் அநீதிகளுக்கு முட்டுக் கொடுப்பதாகத்தான் அரசின் பங்கு பாத்திரம் இருக்கிறது. அதே சமயம் ரஷ்ய புரட்சிக்குப் பின் நிறுவப்பட்ட சோஷலிச அரசு, சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் தகர்த்தது என்பது பெண் விடுதலைக்கு எவ்வாறு உரம் சேர்த்தது என்பதை யெல்லாம் ஆசிரியர் முன்வைக்கிறார்.
எனவே அப்போதைக்கான நிவாரணங்களுக்காக போராடுவதோடு, ஒட்டுமொத்த விடுதலைக்குக் களம் அமைக்கும் சோஷலிசம் மலர்வதற்கான போராட்டத்தில் ஈடுபடுவதே மிக முக்கியம் என இந்த நூல் சிறப்பாக வாதாடுகிறது. ஏராளமான விவரங்களை ஒரே இடத்தில் வாசிக்க வழிவகுக்கும் இந்நூல் கண்டிப்பாக அனைவரது கையிலும் இருக்க வேண்டியதாகும்.
நன்றி தீக்கதிர்
நூல் அறிமுகம் எழுதியவர்:
உ.வாசுகி
மேலும் படிப்பிக்க : பெண்: அன்றும் இன்றும்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

