அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

 

 

சிட்டிசன்ஸ்

‘சிட்டிசன்ஸ்’ (Citizens) என்ற ஆங்கிலப் பலர்பால் பெயர்ச்சொல்லை ‘குடிமக்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. ஆனால் ‘சிட்டிசன்’ (Citizen) என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லை பாலின பேதமின்றி மொழிபெயர்க்க ஏதாவது தமிழ்ச்சொல் இருக்கிறதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பை இந்திய ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறையின் வலைதளத்தில் காணலாம். அதில், ஆங்கில மூலத்தில், ‘Citizen’ என எங்கெல்லாம் ஒருமையில் சுட்டிக்காட்டப்படுகிறதோ, அங்கெல்லாம் ‘குடிமகன்’ என்ற ஆண்பால் பெயர்ச்சொல்லையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பிரிவு 15 (1), “The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them” என்கிறது. இதில் வருகிற ‘Citizen’ என்ற வார்த்தை ‘குடிமகன்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டு, இந்த பாலினப் பாரபட்சமான மொழிபெயர்ப்பு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக அங்கீரிக்கப்பட்டிருக்கிறது.

‘‘Citizen’ என்ற வார்த்தை ஒருமைப் பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ‘குடிமக்கள்’ என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்’ எனக் கருதி, பிரிவு 15(1)-ஐ கீழ்க்கண்டவாறு நாம் மொழிபெயர்க்கலாம்.

“இந்திய அரசு எந்த ஒரு குடிமக்களையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் அடிப்படையில் வேறுபாடு பார்க்காது”

இப்போது வேறொரு கோணத்திற்குள் நாம் செல்வோம்.

‘அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்துவோம்! பாரபட்சம் பார்க்க மாட்டோம்’ என அரசு உத்தரவாதம் அளிப்பதுதான், நவீன முற்போக்கு சமூகத்தின் போக்காக இருக்க முடியும். அவ்விதத்தில் பிரிவு 15(1) வாயிலாக, காலங்காலமாக ஒடுக்குமுறைகளை சந்தித்து வரும் பெண்களுக்கும் சமமான குடிமக்கள் என்ற அந்ததஸ்தை இந்திய அரசு நிலைநாட்டுகிறது. சிறப்பு!

அடுத்து பிரிவு 25(1) வருகிறது. இது, “பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு மற்றும் இந்தப் பிகுதியின் பிற அம்சங்களுக்கும் உட்பட்டு, அனைவரும் தங்கள் மனச்சான்றுவழி நடப்பதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக சமயநெறி மீது பற்றுவைத்தல், கடைப்பிடித்தல், பரப்புதல் ஆகியவற்றிற்கான உரிமைக்கும் உரிமைகொண்டவர் ஆவர்” எனக் கூறுகிறது.

ஆமாம். மதப்பிளவுவாதத்தைப் பயன்படுத்தி மக்களைக் கூறுபோட்டு ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்த வரலாறு இந்தியாவின் மதவாதசக்திகளுக்கு இருக்கிறது. பிரிவினைக் காலக் கொடூர சம்பவங்களை யார்தான் மறக்க முடியும்? இச்சூழலில், அனைத்து குடிமக்களும் தத்தமது நம்பிக்கைகளின்படி, தாங்கள் விருப்பப்பட்ட மதங்களைப் பின்பற்றும் உரிமை நிச்சயம் வழங்கப்பட வேண்டும். அதுதான் சரியான ஜனநாயக மரபு.

அனால், பொதுவாகவே மதங்களும், மதச்சம்பிரதாயங்களும் பெண்ணடிமைத்தனத்தை வலுப்படுத்தி, ஆணாதிக்க முறையை பேணிப் பாதுகாக்கின்றன என்பதை மனிதகுல வரலாறு முழுவதும் நாம் கண்டு வருகிறோம். ஒரு மதத்தின் ஒரு சில பழக்கவழக்கங்கள் ஒப்பீட்டளவில் இன்னொரு மதத்துடன் ஒப்பிடுகையில் ‘முற்போக்காக’ தோன்றலாம். ஆனால், அடிப்படையில் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூகத்தின் சுரண்டல் முறைகளுக்கு கேடயமாக இருப்பதே, மனிதகுலத்தில் மதங்கள் தொடர்வதற்காக அடிப்படையான காரணமாக இருக்கிறது.

மதத்தைப் பின்பற்றுவது என்பது, மதத்தின் சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. அந்தச் சம்பிரதாயங்கள், ‘பெண்களை, ஒடுக்கப்பட்ட சாதியினரை அடிமைப்படுத்தலாம்’ என்கின்றன. இதை அரசு அனுமதிக்க முடியாது; கூடாது. உரிய சட்டப்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து பெண்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அரசு பாதுகாக்க வேண்டும்.

சட்டங்களை இயற்றினாலும், சட்டங்களை அமல்படுத்தி தாழ்த்தப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது லேசுப்பட்டதில்லை. தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதி/பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தண்டனை விதிகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கே நமக்கு 1995 வரை எடுத்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் எல்லாம் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளைத் தொடுக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் எல்லாம், ‘எதிரி’ என்பவர்கள் எதிர்தரப்பினராக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் உரிமை மீட்பு வழக்குகளில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது அரசு இயந்திரத்தின் உறுதியைப் பொறுத்திருக்கிறது.
ஆனால், பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளில் அவர்களுடைய குடும்பமும், அவர்கள் சார்ந்த சாதி, மதம் உள்ளிட்ட சமூகக்குழுக்களும் ஏவும் அடக்குமுறைகளும் கணிசமான அளவில் இருக்கின்றன; அல்லது மிக அதிகமான அளவில் இருக்கின்றன. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில், ‘எதிரி’ எதிர் தரப்பினராக மட்டும் இருப்பதில்லை. பல நேரங்களில் வேண்டப்பட்ட சொந்தஉறவுகளாக இருக்கிறார்கள்.

குடும்பம், சாதிய, மத அமைப்புகள் எல்லாம் காலங்காலமாகப் பெண்கள் மீது காட்டும் பாரபட்சங்களை, தொடுக்கும் தாக்குதல்களை ஒழிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதே முதலில் குதிரைக்கொம்பான விஷயம். மத அமைப்புகள் முதலில் தங்கள் சமூகத்தின் தனிநபர் சட்டங்களில், பெண்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அம்சங்களை வைக்கவே அனுமதிக்காது. இந்து சட்ட மசோதாவிலேயே நிறைய நாடகங்களை நாம் பார்த்தோம். அப்படியே சட்டங்கள் வந்தாலும், பெண்கள் அவற்றைப் பயன்படுத்தி தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவது என்பது இன்னும் கடுமையான போராட்டம். வீடு தொடங்கி நீதிமன்றம் வரை பாலின நீதியை நிலைநாட்டுவது பெரும் போராட்டம்.

இந்நிலையில், ’அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மதங்களை மக்கள் பின்பற்றுவதற்கு சமவாய்ப்பளிக்க வேண்டும்; அதே சமயத்தில் பெண்களையும் விடுவித்து முன்னேற்றிட வேண்டும்’ என்றால்? இது எவ்வளவு கடினமான பணி? இது சாத்தியமா?
அப்படி என்றால், இப்போது இருக்கிற அமைப்பைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட பெண்களின் சமத்துவமான வாழ்க்கை குறித்து ஒன்றுமே செய்ய முடியாதா?
தலைகீழான புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. என்றாலும், பெண்ணடிமைத்தனம் போன்ற கொடுமைகளைக் களைந்திடுவதற்கான மாற்றங்கள் குறித்து, மதங்களுக்குள் தொடர்ச்சியான உரையாடல்களை நடத்துவதற்கு அரசு வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். இது கடினமான பணி என்றாலும், அரசு இந்தக் கடமையை செய்துதான் ஆக வேண்டும்.

ஆனால், இந்து சட்டமாக இருக்கட்டும், இஸ்லாமிய சட்டமாக இருக்கட்டும், பெண்ணுரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்கான வாய்ப்பு இந்தியாவில் உருவாக்கப்படவே இல்லை.

ஷாபானு வழக்கில் என்ன நடந்தது?

‘இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கும் முத்தலாக் விவாகரத்திற்குப் பிறகும் முன்னாள் மனைவியின் பராமரிப்புக்கான தொகையை இஸ்லாமிய ஆண் வழங்கிட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் ஷாபானு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரிகட்டுவதற்காக, ராஜீவ் காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே செல்லுபடியாத வகையில் நாடாளுமன்றத்தில் 1986 முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தைக் கொண்டு வந்தது. ‘இஸ்லாமிய சட்டம் சொல்கிற வரம்பிற்கு உட்பட்டு விவாகரத்தான பெண்களுக்கு ஜீவனாம்சம் தந்தால் போதும்’ என இந்தச் சட்டம் உறுதிசெய்தது.

நம் இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால், உடனே கத்திக்கதறுவது சங்பரிவாரங்கள் தானே! ‘அய்யகோ! இஸ்லாமியர்களுக்காக இந்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மாற்றுகிறது! இந்துக்களுக்கு இந்த நாட்டில் ஆபத்து! பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்!’ என சங்பரிவாரங்கள் கூச்சல் போட்டன.

இப்படி காவித்தீவிரவாதிகள் மதப்பிளவை ஆழப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எதிர்பாத்து துடிதுடித்துக் கொண்டிருக்கும் போது, உண்மையான ஜனநாயக சக்திகள் நாட்டில் பொதுசிவில் சட்டத்தின் தேவையைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்குவதற்கு எங்கே இடம் இருக்கிறது? பெண்களின் நிலையைப் பணயம் வைத்தே இந்தியாவில் மதவாத, தீய சக்திகள் அரசியல் செய்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் விஷக் கிருமிகள்

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே வாய்ப்புள்ள போதெல்லாம் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி, பார்ப்பனீய, ஆணாதிக்க, இந்துத்துவக் கோட்பாட்டை இந்திய சமூகத்தில் திணித்து வருகிற அமைப்பு ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இந்த அமைப்பில் பெண்கள் இருக்க முடியாது. எனவே ‘ராஷ்ட்ரீய சேவிகா சங்’ என்ற பெயரில் பெண்களுக்குத் தனியாக சங்கம் வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆண்கள் அமைப்பான ‘ஸ்வயம்சேவக் சங்’ என்ற பெயரில், ‘ஸ்வயம்’ – ‘சுயம்’ என்ற வார்த்தை வருகிறது. ஆனால், பெண்களுக்கான அமைப்பில் ‘சுயம்’ என்ற வார்த்தை கிடையாது. வெறும் ‘சேவிகா’ சேவை செய்பவர் என்ற வார்த்தை மட்டுமே இருக்கிறது. தலைமை அமைப்பு ‘ஆண்கள் ஒன்லி’ அமைப்பாக இருக்கிறது; அதன் ‘சேவகிகள்’ அமைப்பாக தனியாகப் பெண்கள் அமைப்பு இருக்கிறது. இந்தப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆணாதிக்க, பார்ப்பனீய, இந்துத்துவ ‘அதர்மத்தை’ நிலைநாட்டவே உழைக்கிறார்கள். 1925-ல் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு முன்னோடி வழிகாட்டியாக, 1915-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்து மகாசபை திகழ்ந்தது.

‘இந்து மதத்திற்குள் சீர்திருத்தமே தேவையில்லை. வேதகாலம் பொற்காலம். ரிஷிகள்தான் இந்திய சமூகத்தை ரட்சிக்க வந்தவர்கள்!’ என்றெல்லாம் நூற்றாண்டு காலமாக கதையளக்கிற அமைப்பு. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த அமைப்பு. இப்படி பல்வேறு ‘சிறப்புகள்’ ஆர்.எஸ்.எஸ்-க்கு இருக்கிறது.

‘சிறுபான்மை இஸ்லாமியர்களால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து’ என்ற பொய்யான பிம்பத்தை இந்து மக்கள் மனதில் கட்டமைத்து, இந்துத்துவ வெறியைத் தூண்டுவது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நொறுக்குவது. பார்ப்பனீய, ஆணாதிக்க இந்துராஷ்டிரத்தைக் கட்டமைப்பது.- இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு கால நோக்கமாக இருந்து வருகிறது.

மகாத்மா காந்தி படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்ட காலத்தில் அதன் ‘சர்சங்சாலக்’ என்ற தலைமை பொறுப்பில் இருந்த நபர் மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர். ‘குருஜி’ என சங்கிகள் இந்த ஆசாமியைப் பாசத்தோடு அழைக்கிறார்கள். 1951-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியாக ஜனசங்கம், 1964-ல் அதன் அகில உலக அமைப்பாக விஷ்வ இந்து பரிஷத் தொடங்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸுக்கு நவீன இந்தியாவில் பலமான அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது இந்த கோல்வால்கர் தான். 1940 முதல் 1973 வரையில், 33 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, இந்த நபர் சங்பரிவாரங்களுக்குப் போட்டுத்தந்த அடித்தளத்தில்தான் இன்றைக்கு சங்பரிவாரங்கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தன; இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன.

1940-களில் இருந்து கோல்வால்கர் உதிர்த்த ‘தத்துவ முத்துகள்’ எனும் வெறுப்புப் பேச்சுகள் கொடூரமானவை. பெண்களை, தாழ்த்தப்பட்ட சாதியினரை, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை இழிவுபடுத்தி சித்தரித்திருக்கிறார் இந்த கோல்வால்கர். ‘ஒழிக்கப்பட வேண்டிய எதிரிகள் கம்யூனிஸ்ட்கள்’ எனக் கொதித்திருக்கிறார். கோல்வால்கரின் மலினமான, விஷப் பேச்சுகளை ‘சிந்தனைக் கொத்து’ (Bunch of Thoughts), ‘நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசியம்’ (We or our nationhood defined) என்ற பெயரில் தொகுப்புகளாக ஆர்.எஸ்.எஸ் வெளியிட்டிருக்கிறது.

இந்து தேசம் பற்றி கோல்வால்கர்: “நமது இந்து தேசம் என்ற சிந்தனை வெறும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளின் கட்டு கிடையாது. அது கலாச்சாரத்தை சாரமாகக் கொண்டது. நமது பண்டைய பெருமைக்குரிய வாழ்வியல் மதிப்பீடுகள்தான் நம்முடைய தேசத்தின் உயிர் மூச்சை உருவாக்குகிறது.” கோல்வால்கரின் இந்தக் கருத்து, அவருடைய அரசியல் பொருளாதார உரிமைகள் பற்றிய விஷம்தோய்ந்த பார்வையைத் தோலுரிக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டும் சலுகைகள் குறித்து: ‘இந்திய அரசு இயந்திரம் சலுகைகள் மூலமாக சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்துகிறது’ என்ற தன்னுடைய கருத்தை, மகா-அயோக்கியத்தனமான மொழியில் கோல்வால்கர் விவரித்திருக்கிறார்.

“அதிகரித்து வரும் சாதி வெறுப்பு மற்றும் மோதல்களின் வேர், மோசமான சுயநலத்தையும், அதிகார மோகத்தையும் தூண்டிவிடுவதில் அடங்கி இருக்கிறது. இந்தக் கருத்து வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக அரசு இயந்திரம் கூட ‘விபச்சாரம் செய்யப்படுகிறது’.

ஹரிஜனங்கள், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் போன்ற பெயர்களில் நம்முடைய மக்களில் ஒரு சில பகுதியினரை அழைப்பதன் மூலமும், பணத்தாசை காட்டி அவர்களை அடிமைகளாக்கும் முயற்சியில், அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதன் மூலமும், பொறாமை மற்றும் பிளவுகளை வளர்த்திடும் பிரிவினை மனநிலை மக்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது”

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக அரசு இயந்திரம் இட-ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவது என்பது, இந்த நபரைப் பொறுத்தவரை அரசு இயந்திரத்தை ‘விபச்சாரத்துக்கு’ உட்படுத்திடும் செயல். தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் நலன்கள், உரிமைகள் குறித்து, இதைவிட அரக்கத்தனமாக ஒரு நபரால் பேசிவிட முடியாது. சமூக நீதி, சமத்துவம் என்பதற்கு இந்த சங்பரிவாரங்கள் எதிரிகள். இவர்கள் பாப்பனீய வெறியர்கள்.

பெண்கள் பற்றி: “‘பெண்களுக்கு சமத்துவம்’, ‘ஆண்களின் ஆதிக்கதில் இருந்து அவர்களுக்கு விடுதலை வேண்டும்’ என்பது பற்றி இப்போது நிறைய சத்தம் எழுப்பப்படுகிறது. அதிகாரத்தின் பல்வேறு இடங்களுக்கு, பால் அடிப்படையில் இட-ஒதுக்கீடு கோரப்படுகிறது. இதன் மூலம் சாதியவாதம் (Catesim), பிளவுவாதம் (Communalism), மொழிவாதம் (Linguism) போன்ற ஏற்கனவே இருக்கிற கலவையில், ‘செக்சிஸம்’ என்ற இன்னொரு ‘இச’மும் சேர்க்கப்பட்டுவிட்டது”.

பெண் விடுதலை வேண்டும், பெண்ணுரிமை வேண்டும், பாலின சமத்துவம் வேண்டும், ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ‘பால் அடிப்படையிலான வேறுபாடு’ – ‘செக்சிஸம்’ என்று முத்திரை குத்துவதுதான் கோல்வால்கரின் சிந்தனை. மனுசாஸ்திர விதிகள்படி ‘பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்து கிடப்பதே தர்மம்’ என்று பிரச்சாரம் செய்த விஷமி இந்த கோல்வால்கர்.

இஸ்லாமியர்கள் பற்றி: சிந்தனைக் கொத்து தொகுப்பு முழுவதிலும், இஸ்லாமியர்களை எப்படியெல்லாம் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தவேண்டும், எப்படியெல்லாம் பய-உணர்விலேயே, பதட்டத்திலேயே அவர்களை வைத்திருக்க வேண்டும் என சங்பரிவாரங்களுக்குப் போதிக்கிறார் இந்த கோல்வால்கர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் வாயிலாக கோல்வால்கர் போட்டுக் கொடுத்த திட்ட த்தை நிறைவேற்றத் தான் மோடி தலைமையிலான பாஜக அரசு ‘தவிக்கிறது’.

‘மனுசாஸ்திரமே வேண்டும்!’

நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ‘மனுசாஸ்திரத்தை அரசியலமைப்பு சட்டம் கண்டுகொள்ளவே இல்லை’ என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தனது அதிகாரப்பூர்வ நாளேடான ஆர்கனைசர் தலையங்கம் (நவம்பர் 30, 1949) வாயிலாகப் புலம்பி இருந்தது. “பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசமைப்புச் சட்ட வளர்ச்சியைப் பற்றி எதையும் நம்முடைய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவே இல்லை. ஸ்பார்டாவின் லைக்கர்கஸ், பாரசீகத்தின் சோலோன் நீதி எழுதுவதற்கு முன்பே மனுவின் சட்டங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்றைக்கு வரை மனுஸ்மிருதியில் சொல்லப்பட்ட விஷயங்கள் மீது உலகத்திற்கே பிரமிப்பு இருக்கிறது, அவற்றைப் பின்பற்ற வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கிறது. ஆனால், நமது அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய பண்டிதர்களுக்குத்தான் அது ஒரு பொருட்டாகவே இல்லை” என்று வருந்தியது.

மனுசாஸ்திரம் என்ற நச்சுக் குப்பையை அரசமைப்புச் சட்டத்தில் கலந்திட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவு என்பதை, இந்தக் கருத்தில் இருந்து உணரலாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவான, ‘ஆணாதிக்க, பார்ப்பனீய, இந்துத்துவத்தின் அடைப்படையிலான இந்துராஷ்டிரத்தை’ மெய்ப்படுத்தவே அதன் அரசியல் கட்சிப் பிரிவான பாஜக இன்று உழைத்துக்கொண்டிருக்கிறது.

90-களில், அயோத்தியில் பாபர் மசூதியை இடுத்துத் தரைமட்டமாக்கிவிட்டு ‘ராமர் கோவில் கட்டுவோம்! ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவோம்!’ எனக் கிளம்பிய கூட்டம். இன்றைக்கு மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து நாட்டைத் துண்டாடி வருகிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, சட்டம் ஒழுங்கு என அரசு இயந்திரத்தின் இதயமான துறைகளில் காலங்காலமாக ஊடுருவி, விஷவேர்களை இந்தியா முழுவதிலும் பரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது.

‘புதிய இந்தியா உங்களை குரோதத்துடன் வரவேற்கிறது’

இதுவரை இருந்த ஆர்.எஸ்.எஸ் அரசியல் தலைவர்களிலேயே, குஜராத்தின் நரேந்திர மோடி, அமித் ஷா இரட்டையர்கள் பல கொடூர ‘சாதனைகளைப்’ படைத்திருக்கிறார்கள்.

1) 2002 குஜராத் கோத்ரா சம்பவத்தை ஒட்டி, குஜராத்தில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி நரவேட்டை நிகழ்த்தி, 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். ‘அரசு உதவியில் தீவிரவாதம்’ என்ற பதத்திற்கு இலக்கணமாக 2002 குஜராத் படுகொலைகள் திகழ்கின்றன

2) 2000 குஜராத் படுகொலைகளின்போது, அகமதாபாத் நகரின் குல்பர்க் சொசைட்டி குடியிறுப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஹ்சான் ஜாஃப்ரியை சங்பரிவாரங்கள் வெட்டிக் கூறுபோட்டன. அந்தப் படுகொலை நடப்பதை அனுமதித்து, மௌனம் காத்த மகா-பாதகர்கள் மோடியும், அமித்ஷாவும்.

‘இஸ்லாமியர்களில் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும், அதிகாரத்துக்கு நெருக்கமானவராக இருந்தாலும், எங்களால் அவர்கள் உயிரை எடுக்க முடியும்!’ எனக் காலத்துக்கும் இந்தியாவின் இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதே இவர்கள் நோக்கம். அதனால்தான், 2002 கலவரத்தில் எஹ்சான் ஜாஃப்ரியைத் தேர்வு செய்து சங்பரிவாரங்கள் படுகொலை செய்தன.

திரு. ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, ‘தனது கணவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் குஜராத் அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது’ என்று தொடுத்த வழக்கில், இந்தியாவின் உச்சநீதிமன்றம் உலகின் மிக மோசமான ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய தீஸ்தா சேடல்வாட், போலீஸ் அதிகாரி ஸ்ரீகுமார் உள்ளிட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது குஜராத் அரசாங்கம். எப்படி கதை?

3) 2002 குஜராத் படுகொலைகளின் போது, பில்கிஸ் பானு என்ற அந்த இஸ்லாமிய பெண்ணிற்கு 21 வயது. அவர் அப்போது 5 மாத கப்பிணியாக இருந்தார். தனது 3 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு கோத்ரா பகுதிக்கு அருகில் வசித்துவந்த தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

சங்பரிவாரங்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் காரணமாக, பானுவும் அவரது உறவினர்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேறி, பல்வேறு இடங்களில் ஒளிந்துகொண்டு, தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினார்கள். ஒரு கட்டத்தில் வன்முறையாளர்களிடம் அவர்கள் சிக்கிக்கொண்டபோது, பானுவின் 14 உறவினர்களைக் காவிவெறியர்கள் கொன்று குவித்தார்கள்.

ஷைலேஷ்பாய் பட் என்பவன் பானுவின் 3 வயது குழந்தையின் தலையை தரையில் பாறையில் அடித்தே கொன்றான். அதன்பிறகு அந்த சங்பரிவார மிருகங்கள் பானுவை குரூரமாக வன்புணர்வு செய்து, சாகும் அளவிற்கு அவரைத் தாக்கிவிட்டு, சாகட்டும் எனத் தெருவில் வீசிவிட்டுச் சென்றார்கள்.

ஆனால், பானு சாகவில்லை. எப்படியோ உயிர் பிழைத்தார். கொல்லப்பட்ட அவருடைய உறவினர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத வகையில் தலைகள் கொய்யப்பட்டு முண்டங்களாக்கப்பட்டு சிதைக்கப்பட்டன. இந்த அடையாள சிதைப்பில் காவல்துறைக்கும் பங்கிருந்தது.

இந்த அளவிற்குத் தனக்குக் கொடுமை இழைத்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரப் போராடினார் பானு. குஜராத்தில் இருந்து வழக்கு மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. சிபிஐயின் விசாரணைக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரைக் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்தத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

தற்போது இந்தியாவில், குஜராத் படுகொலைகளை நடத்திய மோடி, அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு இயந்திரம் இருக்கிறது. மோடி இன்றைக்கு இந்தியப் பிரதமர். அமித்ஷா இன்றைக்கு இந்திய அரசின் உள்துறை அமைச்சர். எனவே, 75-ஆம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பில்கிஸ் பானு மீது அதீத வன்முறையை நிகழ்த்திய அந்த 11 கொடூரர்களை, ‘நன்னடத்தை அடிப்படையில்’ பாஜக அரசாங்கம் சட்ட-விரோதமாக விடுவித்தது. எப்படி கதை?

4) 2002 குஜராத் படுகொலைகளின் போது, அகமதாபாத்தின் நரோடா பாட்டியாவில் கௌஷிர் பானு என்ற கர்பிணிப் பெண்ணின் கரு அறுக்கப்பட்டு, அவருடைய சிசு வெளியில் எடுத்துக்கொல்லப்பட்டது. ஆனால், குஜராத் அரசு மருத்துவர் வழங்கிய கௌஷிர் பானுவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில், அவர் கருப்பையில் சிசு இருந்தது என்றும், அந்தப் பெண் தீக்காயங்களால் இறந்தார் என்றும் எழுதப்பட்டது.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த காலத்தில், அவர் செய்த இந்த உலக சாதனையை, பி.பி.சி நிறுவனம் ‘த மோடி கொஸ்டீன்’ என்ற ஆவணப்படமாக எடுத்துக்காட்டித் தோலுரித்தது. ஒன்றிய பாஜக அரசோ பி.பி.சிக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள பி.பி.சி அலுவலங்களுக்கு அமலாக்கத்துறையை அனுப்பிவைத்து சோதனை நடத்தியது.

‘குஜராத் மாடல்’ இந்தியா மாடல் ஆகிக்கொண்டிருக்கிறது

‘குஜராத் மாடலை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்துகிறோம்!’ என 2014-ல் மோடி தலைமையில் பாஜக சங்பரிவாரங்கள் ஆட்சிக்கு வந்தன. இந்தியாவின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதற்கான அடிப்படைகளாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கி இருக்கிற கோட்பாடுகள்- மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி தத்துவம். இவை அனைத்தையும் கடந்த பத்தாண்டுகளாக சிதைத்து ஜனநாயகம் இல்லாத பாசிச நாடாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசும், பாஜவின் மாநில அரசுகளும்.
‘ஆணாதிக்க, பார்ப்பனீய, இந்துத்துவத்தின் அடைப்படையிலான இந்துராஷ்டிரம்’ – இதைக் கட்டமைக்கும் நோக்கில் செயல்படுகிற ஒன்றிய பாஜக அரசு. இந்த ஆட்சி நிர்வாகத்தில் பண்டைக்காலம் தொட்டு ஒடுக்கப்பட்ட பிரிவினராகவே தொடரும் பெண்களின் நிலை எப்படி இருக்கும்?

பாஜகவின் ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல்களில் மிகச் சில:

1. காஷ்மீரின் கத்துவாவில் ஒரு இஸ்லாமியப் பெண் குழந்தை சங்பரிவாரங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டாள். பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி சென்றார்கள்.

2. ‘இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையின் மேல் எங்களுக்கு அக்கறை உள்ளது’ எனச் சொல்லி ஒன்றிய பாஜக அரசு முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது. ‘தவறிழைக்கும் இஸ்லாமிய ஆண்களைக் குற்றவியல் நடைமுறையின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்குவோம்!’ என்றது. பிற மதத்தவரின் சிவில் வழக்குகளில் குற்றவியல் நடைமுறை அடிப்படையில் ஆண்களைத் தண்டிக்காத போது, இஸ்லாமிய ஆண்களை மட்டும் குற்றவியல் நடைமுறையின் கீழ் தண்டிப்பதன் நோக்கம் என்ன? இதற்கான பதிலை உலகமே அறியும்.

3. ஒரு புறம் முத்தலாக் தடைச்சட்டம் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி வழங்குகிறோம் என்ற பாஜக, இன்னொரு புறம் ஹிஜாப் அணிந்து இஸ்லாமியப் பெண்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு கர்நாடக மாநிலத்தில் தடை விதித்தது. பர்தா போர்த்தப்பட்டு, பிற்போக்கு நிலையில் பெண்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து, பெண்கள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ‘எப்படியோ அவர்கள் கல்வி நிலையங்களுக்கு வந்து,’ கல்வி கற்றால் போதும் என்ற அணுகுமுறையைத் தான் ஒரு ஜனநாயக அரசாங்கம் கொண்டிருக்க முடியும். ஆனால், இந்தியாவில் பாஜக அரசோ, ‘கல்வி நிலையங்களுக்கு மத-அடையாளங்களுடன் மாணவிகள் வரக்கூடாது’ எனச் சொல்லி ஹிஜாப்பிற்கு தடைவிதித்தது. அதன் மூலம் இஸ்லாமியப் பெண் கல்விக்கு மறைமுகமான தடையை விதிக்க முயன்றது.

4. 2017-ல் உ.பியின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னிடம் வேலைகேட்டு வந்த ஒரு 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தான். புகார் அளித்து, வழக்கு தொடர்ந்த அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்ந்து மிரட்டி, கொலை செய்து துன்புறுத்தி வந்தான். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், அத்தையும் இவ்விதம் கொல்லப்பட்டார்கள். முதல்வர் ஆதித்யநாத் வீட்டின்முன் நியாயம் கேட்டு அந்தச் சிறுமி தனக்குத் தானே தீவைத்துக்கொள்ள முயன்றபோது, இந்த விஷயம் வெளியுலகின் கவனத்திற்கு வந்தது. நீதிமன்றமே நேரடியாக தலையிட்டதனால், குற்றவாளி எம்.எல்.ஏவுக்கு ஆயுள்தண்டனை கிடைத்து.

5. உத்திரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தலித் இளம்பெண் ஒருவர் சாதி வெறியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டார் (2020 ஆம் ஆண்டு). குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக யோகி ஆதித்யநாத் அரசாங்கம் காவல்துறையைக் கொண்டு, அந்தப் பெண்ணின் சடலத்தை அவருடைய பெற்றோர்கள் இல்லாமலேயே இரவோடு இரவாக தகனம் செய்தது. இந்தப் படுகொலையில் ஈடுபட்ட நான்கு ‘உயர்சாதி’ ஆண்களில் மூவரை பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநில நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட பெண் மரணிப்பதற்கு முன் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார்.

6. ஒலிம்பிக் விருது பெற்ற இந்திய மல்யுத்த வீரர்கள், உத்திரப் பிரதேசத்தின் பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார்கள். அந்த ஆசாமி மீது, முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அவரைக் கைது செய்யக்கோரி டில்லியில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். உலகின் கவனத்தை இந்தப் போராட்டம் ஈர்த்தது. ஆனால், இதுவரை அந்த எம்.பி அசைக்க முடியாத பாஜக எம்.பியாக வலம் வருகிறார்.

7. மணிப்பூரில் ஆளும் மாநில அரசும், மத்திய பாஜக அரசும் கூக்கி பழங்குடிகள், மெய்தி இனத்தவருக்கு இடையில் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி, மதரீதியிலான பிளவையும், மோதல்களையும் ஏற்படுத்தின. கூக்கி சமூகத்தினரின் மீது தாக்குதல் நடப்பதற்குத் தேவையான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் ஆளும் பாஜக மாநில அரசு செய்துகொடுத்தது. ஒன்றிய பாஜக அரசோ தன் பங்கிற்கு இயன்ற அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கியது.

ஒரு கூக்கி பழங்குடி சமூகத்துப் பெண்ணை நூற்றுக்கணக்கான மெய்தி சமூக ஆண்கள் நிர்வாணப்படுத்தி, துன்புறித்தி, ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகே ‘பாரதப்’ பிரதமர் மோடி, மணிப்பூர் கலவரம் குறித்து தன் திருவாய் மலர்ந்தார். 79 நாட்கள், அதாவது 1896 மணி நேரங்கள் கழித்து, வெறும் 36 நொடிகள் பிரதமர் பேசுவதற்கு, ஒரு பெண் சித்திரவதை படுத்தப்படும் கொடூர வீடியோ ஜனநாயக இந்தியாவில் வெளியாக வேண்டி இருக்கிறது.

குஜராத்தில் இஸ்லாமியப் பெண்களைக் கருவறுத்துக் கொலைசெய்த கல்நெஞ்ச சங்பரிவாரங்கள் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ஜனநாயக அணுகுமுறைகள் காற்றில் பறக்கின்றன. இந்திய நாடு பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு சமூகத்தின் மீது ஒடுக்குமுறையை ஏவவேண்டும் என்றால், அந்த சமூகத்துப் பெண்களின் உடல்கள் வன்முறைக்கான களமாக மாற்றப்படுகின்றன. இந்தக் கொடுமை உலகெங்கிலும் நடக்கிறது. இன்னும் சொன்னால் காலங்காலமாகவே நடந்து வருகின்றன. என்றாலும், இத்தகைய மகா-பாதக கொடுமையை, உலக அளவில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற ‘பெருமை’ நிச்சயம் மோடி-அமித்ஷா கொடூர இரட்டையர்களைச் சேரும். பில்கிஸ் பானு வழக்கு போன்ற ஒரு வன்முறை வழக்கில், ‘குற்றவாளிகளை விடுவிக்க எங்களுக்கு ஆட்சேபம் இல்லை!’ என உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் மத்திய அரசை சொல்லவைக்க இவர்களால் முடிந்ததே! எவ்வளவு பெரிய ‘பெருமைக்குரிய உலகசாதனை’ இது!

ஆக, பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை வெறியாட்டங்கள் தான் இந்தியப் பெண்களுக்கு பாஜக, சங்பரிவாரங்கள் வழங்கிவருகிற ‘பரிசுகள்’. காலங்காலமாகப் ‘பெண், உழைப்பாளி, குடிமக்கள்’ என்ற அடிப்படைகளில் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருகிற ஒரு சமூகத்தில், பாஜக ஆட்சியில் இருப்பது, பெண்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம்?!

மதவாத சக்திகளின் எழுச்சியில் நாட்டில் ஒடுக்குமுறைகளை அதிகம் சந்திப்பது, சிறுபான்மை சமூகத்துப் பெண்கள் மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகத்துத்துப் பெண்களும்தான் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

‘சர்வதேச அளவில் பெண்கள் விரோத அரசு எனப் பெத்த பெயர் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த அவப்பெயரைத் துடைக்க என்ன செய்யலாம்?’ – இப்படி சிந்தித்தது மோடி அரசு. பாஜக-ஆர்.எஸ்.எஸ்,-விஷ்வ இந்து பரிஷத்தின் தலைமை அலுவலகப் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது, நவீன இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம். இந்தக் கட்டடத்தின் முதலாவது அலுவலாக, ‘இதுவரை நாம் கிடப்பில் போட்டு இழுத்தடித்த மசோதா- அதாவது, மக்களவை, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கிடும் பெண்கள் இட-ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம்!’ ‘பெண்களுக்கு பாஜகதான் இட-ஒதுக்கீடு வழங்கியது’ என்ற பெயரைத் தட்டிச் செல்வோம்!’ எனக் கணக்குப் போட்டது.

செப்டம்பர் 21, 2023 ஆம் தேதி அன்று, பெண்கள் இட-ஒதுக்கீடு மசோதவை இந்திய நாடாளுமன்றங்களின் இரு அவைகளும் நிறைவேற்றின. கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக இந்தியாவின் பெண்கள் இயக்கங்கள், இடதுசாரி ஜனநாயக சக்திகள் போராடி இந்திய சமூகத்தில் கருத்தொற்றுமையை உருவாக்கி விஷயம் 33% பெண்கள் இட-ஒதுக்கீடு. ஆனால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்குப் பொருளே அறியாத, மனுசாஸ்திரத்தின் படி இந்தியாவை ஆட்சி செய்ய விரும்புகிற ஃபாசிச பாஜக கட்சி, பெண்களுக்கு இட-ஒதுக்கீட்டை வழங்கியதாம்?! எப்படிக் கதை?

அதுவும், இந்தச் சட்டம் உடனே அமலாகாதாம். அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமாம். அதன் பிறகு தொகுதிகள் மறுசீரமைப்பு நடந்து, பெண்களுக்கான சுழற்சிமுறை தொகுதிகள் தீர்மாணிக்கப்பட்டு… அதன் பிறகு அமல்படுத்தபடுமாம். ‘போஸ்ட் டேட்டட் காசோலை போல இந்தச் சட்டம்’ என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம். ஏ. பேபி அவர்கள் பகடியாகத் தெரிவித்திருந்தார். ‘2029 தேர்தலில்கூட இந்தச் சட்டம் அமலாகாது’ என சர்வதேச அளவில் இந்தியாவிற்கு மோடி அரசால் பெரும்பெயர் கிடைத்திருக்கிறது.

மதவாதிகள் நாட்டின் அரசதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் பெண்கள் நிலை என்னவாகும் என்பதற்கு ஆப்கானிஸ்தான் நாடு ஓர் உதாரணம். அந்த நாட்டை தலிபான்கள் முதன்முறையாகக் கைப்பற்றுவதற்கு முன்பு, அங்கு பெண்கள் மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாகப் பணியாற்றி வந்தார்கள். தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியவுடன், பெண்கள் கல்வி நிலையங்களுக்கு, வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பர்தாவிற்குள் முடக்கப்பட்டு பெண்கள் வீட்டிற்குள் தள்ளப்பட்டார்கள்.

வீட்டில் ஆண்கள் இல்லாத குடும்பங்களில் குழந்தைகள் வேலைக்குப் போகும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதுவும் தனித்து வாழும் தாய்மார்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால், அவர்களின் நிலை மகாகொடூரம். ஆண் குழந்தைபோல உடை அணிவித்து, பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி மாட்டிக்கொண்டு, கொடூரமான தண்டனைகளை ஆஃகானிய பெண்கள் அனுபவித்தார்கள்.

மக்களின் அறியாமைதான் மதவாத சக்திகளின் பலம்

நடைமுறையில் உள்ள சுரண்டல் முறைகளுக்கு, அடிமை முறைகளுக்கு மதங்கள் நியாயங்கள் கற்பிக்கின்றன. பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் வர்க்க சமூகத்தில், மதங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் பலாத்காரக் கருவியாக, கலச்சாரக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தீவிர வலதுசாரி சக்திகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை படுமோசமாகிறது.

ஆனால், சாதாரண உழைப்பாளி வர்க்கத்திற்கு, எளிய மக்களுக்கு, பெண்களுக்கு சமூகத்தின் இந்தக் கட்டமைப்பு புரிபடுவதில்லை. சுரண்டப்படும் மக்களுக்கு கடவுள், மதநம்பிக்கைதான் வாழ்க்கைக்கான நம்பிக்கையாக, பிடிமானமாக இருக்கிறது. இந்த நம்பிக்கையை பாஜக போன்ற பிளவுவாத, சுரண்டல் சக்திகள் பயன்படுத்திக்கொள்கின்றன. சுரண்டல்கள் இல்லா சமத்துவ உலகம் படைக்கும் நோக்கம் கொண்ட மக்கள் இயக்கங்கள் உழைக்கும் மக்கள், பெண்களுக்கு நடைமுறையில் உள்ள சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பு குறித்த தெளிவை ஏற்படுத்திட வேண்டும்.

‘மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி…மக்களின் மாயையான மகிழ்ச்சியாக இருக்கும் மதத்தை ஒழிப்பது என்பது அவர்களின் உண்மையான மகிழ்ச்சியைக் கோருவதாகும்” என்கிறார் மார்க்ஸ். ஆழமான இலக்கிய அணிநயம் மிக்க இந்த வார்த்தைகள் வாயிலாக, மதம் சமூகத்தில், உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் வகிக்கும் பாத்திரத்தை உணர முடியும்.

மதங்கள் பிற்போக்கு புராதண நிலைமைகளைத் தக்கவைக்கின்றன; மனிதகுல வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வழிபாடும், மதநம்பிகைகளும் தொடர்கின்றன. இயற்கை, மனிதர்களின் இருத்தல் குறித்து ஆவிகள், மந்திர சக்திகள் என தவறான சிந்தனைகளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மனிதர்கள் வளர்த்தெடுத்தார்கள். இந்தச் சிந்தனைகள் வரலாற்றுக் காலத்திற்கும் கடத்தப்பட்டிருக்கிறது. மனிதர்களின் உற்பத்தி, பொருளாதார, அரசியல் தளங்களில் இந்தத் தவறான சிந்தனைகள் தாக்கத்தை செலுத்தி இருக்கின்றன. தற்காலத்திலும் தாக்கத்தை செலுத்தி வருகின்றன.

“அறிவியலின் வரலாறு என்பது, இந்த முட்டாள்தனம் படிப்படியாக அகற்றப்பட்டு, அல்லது புதிய, குறைவான அபத்தமுள்ள முட்டாள்தனத்தால் மாற்றப்பட்டதன் வரலாறு” என்கிறார் ஏங்கல்ஸ். “பொருளாதாரம் எதையும் முற்றிலும் புதிகாக உருவாக்கவில்லை, ஆனால், ஏற்கனவே இருக்கிற ஒரு சிந்தனையின் பொருளை மாற்றி, மேற்கொண்டு வளர்த்தெடுக்கும் வேலையைத்தான் செய்கிறது” என விளக்குகிறார் ஏங்கெல்ஸ்.

இந்தியாவில் தற்போதைய சூழலில் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பார்க்க முடியும். இந்தியாவில் தற்போது மதத்தைப் பயன்படுத்திப் பயனடைவது பாஜக என்ற மதவாத சக்தி மட்டுமல்ல; புதிய தாராளமயக் கொள்கைகளின் உச்சபட்ச பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கணக்குப் போடுகிற அதானி, அம்பானி வகை குரோனி முதலாளிகளும், மூலதனமும்தான். ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கிற ‘மதம்’ என்ற சிந்தனையின் பொருளை மாற்றி, தனக்கான லாபத்திற்காக மேற்கொண்டு அந்த சிந்தனையை ‘மதவெறியாக’ வளர்த்தெடுக்கும் வேலையைத்தான் பாஜக சங்பரிவாரங்கள் துணையோடு மூலதனம் தற்போது இந்தியாவில் செய்கிறது. மூலதனம், இந்துத்துவ பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் இந்தக் கூட்டுக்களவானித் தன்மையை நாம் உணராமல், மக்களை உணரச் செய்யாமல், நம்மால் மதவாத சக்திகளை அதிகாரத்தில் இருந்து அகற்றி, பெண்களின் நிலையை முன்னிருந்த நிலைக்கு எடுத்துச்செல்ல முடியாது; பிற ஒடுக்கப்பட்டவர்களின் நிலையையும் முன்னிருந்த நிலைக்கு எடுத்துச்செல்ல முடியாது.

காலங்காலமாக மனிதர்களின் சிந்தனையில், பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருக்கும் மதநம்பிக்கைகள், மதங்கள் மறைவதற்கு, ‘சமூக வளர்ச்சியும், தொடர்ச்சியான கல்வியும் அவசியமாகிறது’ என்கிறார் மார்க்ஸ். எத்தகைய சமூக வளர்ச்சியை நோக்கி, கல்வியை நோக்கி நாம் நடைபோட வேண்டும்? பெண்களின் ஒடுக்கப்பட்ட, அடிமை நிலையை தகர்ப்பது சாத்தியமா? எப்படிப்பட்ட அமைப்பில் இது சாத்தியம்? அந்த நிகரில்லா அமைப்பை ஏற்படுத்தும் வரை நாம் சும்மா இருப்பதா?

தொடரும்…

ஆதாரங்கள்:

Bunch of Thoughts, The Hindu Centre, 1960

A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right, Introduction, 1844.

Interview with Karl Marx by H. Chicago Tribune, January 5, 1879.

Marx-Engels Correspondence 1890, Engels to Conrad Schmidt, London, October 27, 1890

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *