சோஷலிச சமுதாயக் கனவு
‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பால், பெண்கள் முடிவே இல்லாத உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். நேர விரயம், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் வாழ்வாதரமே இல்லாத நிலையில் அடுப்படி என்பது பெண்களின் தினசரி கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
தனிநபர் வீடுகளில் உள்ள தனி சமையலறைகளை ஒழித்தால், எண்ணற்ற பெண்களுக்கு விடுதலை சாத்தியமாகும். சிறு பொறியாளர் வைத்திருக்கும் ஒரு பட்டறையைப் போன்ற காலவதியான அமைப்புதான் இந்த தனிசமையலறை. இவற்றிற்காக செலவிடும் பொருட்கள், நேரத்தைக் கணக்கிட்டால் சிறுபட்டறை, தனிசமையலறை இரண்டுமே பயனற்ற, தேவையற்ற விஷயங்கள்’ – 144 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோடி மார்சியவாதிகளில் ஒருவரான அகஸ்ட் பெபல் பதிவுசெய்த சிந்தனை இது.
சர்வதேச தொழிலாளர் இயக்கத்தையும், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் வளர்த்தெடுத்த மார்க்சியவாதிகளில் முக்கியமானவர் பெபல். மார்க்ஸ், ஏங்கெல்ஸுக்கு மிகவும் நெருக்கமான தோழராகப் பயணித்தவர். அவர்களுடன் இணைந்து முதல் அகிலத்தின் காலத்திலேயே செயல்பட்ட ஜெர்மன் தொழிலாளர் இயக்கத் தலைவர். ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவிய மார்க்சியவாதிகளில் முக்கியமானவர்.
1879 ஆம் ஆண்டில் தோழர் அகஸ்ட் பெபல் இயற்றிய ‘பெண்களும் சோஷலிசமும்’ என்ற நூல், அன்றைக்கு ஜெர்மானிய தொழிலாளர் இயக்கத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நூலில்தான் பெண்கள்மீது திணிக்கப்பட்டுள்ள குடும்ப சுமையைப் பற்றி பெபல் இவ்வாறு குறிப்பிடுகிறார். சமூகத்தின் அடித்தளத்தையே புரட்டிப்போடும் இத்தகைய புரட்சிகரக் கருத்துகள் தொழிலாளர் இயக்கங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்?!
சிந்தனையில் மாற்றம்
‘பொது சமையல்கூடங்கள், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான பகல்நேரக் காப்பகங்களை அரசே நடத்திட வேண்டும். இந்தப் பணிகள் எல்லாமே சமூகத்தின் பொறுப்புகள். இவற்றைக் குடும்ப அமைப்பில் பெண்கள் மீது மட்டுமே திணிப்பது அடிமைமுறை. பெண்கள் ஆண்களைப் போலவே சமூக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும், உரிமைகளும் பெண்களுக்கும் கிடைத்திட வேண்டும். பெண்களின் பொருளாதார விடுதலை அவர்களை அடிமைமுறையில் இருந்து விடுதலை செய்யும்’ – இப்படிப்பட்ட கருத்துகளை மார்க்சியவாதிகள் தொடக்ககாலத்தில் இருந்தே உரக்கப் பேசிவந்தார்கள்.
காலங்காலமாக ஆணாதிக்க சிந்தனைகள் வேரூன்றி இருக்கும் ஒரு சமூகத்தில்தான், புதிய உற்பத்தி முறைகள் தோன்றின; நவீன பாட்டாளி வர்க்கமும், நவீன பாட்டாளி வர்க்க இயக்கங்களும் தோற்றம் பெற்றன. பொதுவாக, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பழமைவாத சிந்தனைகள் முற்போக்கு நோக்கம் கொண்ட இயக்கத்திலும் வெளிக்காட்டும் என்பது இயற்கையே. எனவே, பெண்களைப் பற்றி அன்றைய சமூகத்தில் நிலவிய ஆணாதிக்க சிந்தனைகள், அன்றைய தொடக்ககால தொழிலாளர் இயக்கங்களிலும் இயல்பாகவே எதிரொலித்தன.
‘பெண்களின் இடம் வீடு. குறைவான ஊதியம் வழங்கிடலாம் என்பதற்காகவே முதலாளித்துவ அமைப்பு பெண்களைத் தொழிலாளர் படைக்கு இழுத்து வந்திருக்கிறது. பெண்கள் தொழிலாளர் படையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். பழையபடி அவர்கள் வீட்டை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும்! ஆண்கள் மட்டுமே சம்பாதித்து குடும்பத்திற்கு சோறுபோட்டால் போதும்! – புதிய உற்பத்தி முறைகள் வளர்ச்சி கண்ட சூழலில், அன்றைய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்கக் கருத்துகள் இவை. இந்தக் கருத்துகள் தொடக்க கால சர்வதேச தொழிலாளர் இயக்கங்களில் செயல்பட்ட ஆண் தொழிலாளர்கள் மத்தியிலும் இருந்தன. இதுவே எதார்த்த உண்மை.
முதல் அகிலம் என்று அழைக்கப்படும் ‘சர்வதேச ஆண் தொழிலாளர்கள் சங்கத்தின்’ முதல் காங்கிரஸ் 1866 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்றது. ‘இதில் பங்கேற்ற பிரெஞ்சு, ஸ்விஸ் தொழிலாளர் பிரதிநிதிகளில் பெரும்பானோர் தாங்கள் பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எதிரானவர்கள் என அறிவித்துக் கொண்டவர்கள்’. ஜெனீவா காங்கிரஸில் நிலவிய இந்தக் கண்ணோட்டத்தைப் பற்றி, ‘கார்ல் மார்க்ஸும் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸும்’ என்ற தனது ஆய்வு நூலில், தோழர் டேவிட் ரயசனொவ் பதிவுசெய்திருப்பார்.
சோவியத் யூனியனில் 1920 ஆம் ஆண்டில் தோழர் லெனின் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர் ரயசனொவ். மார்க்ஸ் ஏங்கெல்ஸின் எழுத்துகளை ஒளிப்படப் பிரதியெடுத்து, சோவியத் யூனியனுக்குக் கொண்டு வந்து, தொகுப்புகளாக்க அடித்தளமிட்டவர். தோழர் ரயசனொவின் மார்க்சிய வரலாற்று ஆய்வுகள் மிகத் துல்லியமானவை. அவர் வாயிலாக, முதல் அகிலத்தில் பெண் தொழிலாளர்கள் குறித்து ஒரு சாராரிடம் நிலவிய கருத்தோட்டத்தை நம்மால் உள்ளது உள்ளபடி உணர முடியும்.
சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் 1860-களில் நிலவிய இந்த சிந்தனைப் போக்கு அப்படியே நிலைத்திருக்கவில்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், பெபல், கிளாரா ஜெட்கின், ரோசா லக்ஸம்பர்க், லெனின், அலெக்ஸாண்ட்ரா கொலோந்தாய் உள்ளிட்ட எண்ணற்ற மார்க்சியவாதிகள், தங்களுடைய தொடர்ச்சியான எழுத்துகள், உரைகள், செயல்பாடுகள் வாயிலாகத் தொழிலாளர் இயக்கத்தின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். மேலும், பெண் சோஷலிஸ்ட்கள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் பெண் தொழிலாளர்களின் வலுவான பங்கேற்பும், பங்களிப்பும், சர்வதேச மார்க்சிய இயக்கத்தின் சிந்தனையை, செயல்திட்டங்களை மேம்படுத்தி வளர்த்தெடுத்தன.
“பெண்கள் பிரச்சனை என்பது நமது சமூக அமைப்பில் பெண்கள் என்ன நிலையை வகிக்க வேண்டும் என்பதைக் குறித்தது. தன்னால் இயன்ற அளவிற்கு சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு நபராகத் திகழ்வதற்கு, சம-உரிமைகள் பெற்ற ஒரு நபராக, தன்னுடைய சக்திகளையும், திறன்களையும் ஒரு பெண்ணால் எவ்வளவு சிறப்பாக வளர்த்துக்கொள்ள முடியும்? இதைத் தீர்மானிக்கிற விஷயம்தான் பெண்கள் பிரச்சனை” என்றார் பெபல்.
‘சமூகத்தில் ஒடுக்குமுறையை, சுரண்டலை, துயரத்தை, தேவையை ஒழிப்பதற்காகவும், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் எல்லா நபர்களுக்கும் உடல்நலமும், மனநலமும் கிடைப்பதற்காகவும் நம்முடைய சமூகத்தை நாம் எப்படி கட்டமைக்கப் போகிறோம் என்பதில்தான் பெண்கள் பிரச்சனைக்கான தீர்வு அடங்கி இருக்கிறது’ என அவர் தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் உருவாக்கப் போகும் புதிய சோஷலிச சமுதாயத்தில் பெண்கள் எப்படி இருப்பார்கள்? சமூகத்தின் வாழ்நிலை எப்படி இருக்கும் என்பதை பெபல் கணித்துச் சொன்னார்:
‘புதிய சமூகத்தில் பெண்கள் சமூகப் பொருளாதார விடுதலையை அடைந்திருந்திருப்பார்கள்…’
‘புதிய சமூகத்தில்…ஒரு பெண் தன்னுடைய உடல் மற்றும் சிந்தனைத் திறன்களை முழுமையாக வளர்த்துக்கொண்டு அவற்றைப் பயன்படுத்திட முடியும். தன்னுடைய விருப்பத்திற்கும், திறன்களுக்கும் பொருத்தமான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, ஒரு ஆணிற்கு இருக்கக்கூடிய அதே நிலைமைகளின் கீழ் ஒரு பெண்ணால் வேலை செய்ய முடியும்.’
‘இந்தச் சமூகத்தில் ஒரு பெண் ஒரு நாளின் ஒரு பகுதியில் ஏதாவது ஒரு தொழில்துறையில் உற்பத்தியாளராக பணியாற்றுவார்; நாளின் இரண்டாம் பகுதியில், கல்வியாளராக, ஆசிரியராக அல்லது செவிலியராக அவர் செயல்படலாம்; மூன்றாவது பகுதியில் ஏதாவது ஒரு அறிவியலையோ அல்லது கலையையோ அவர் பயிற்சி செய்யலாம்; நான்காவது பகுதியில் ஏதாவது நிர்வாகப் பணியில் அவர் ஈடுபடலாம். தனக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் சூழலில், ஒரு பெண், தன்னைப் போன்ற பிற பெண்களுடனோ அல்லது ஆண்களுடனோ இணைந்து கல்வி கற்பார், வேலையில் ஈடுபடுவார், சந்தோஷங்களையும், கேளிக்கைகளையும் அனுபவிப்பார்.’
‘காதல் தேர்வில் ஆணைப் போலவே சுதந்திரமான, தடைகளற்ற நபராக அவரால் இருந்திட முடியும்…’ பெண்களும் சோஷலிசமும் நூலில் பெபலின் கருத்து.
ஆக, மார்க்சியவாதிகள் வர்க்க சமூகத்தில் பெண்களின் தாழ்ந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார்கள். சுரண்டலை ஒழித்த சோஷலிச சமூகத்தில் வாழ்க்கை ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படி அமையும் என்பதைக் கணித்துச் சொன்னார்கள். பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலைக்கான தீர்வு சமூகத்தை சோஷலிச சமூகமாகக் கட்டமைப்பதில் அடங்கி இருக்கிறது என்று வரையறுத்தார்கள். ‘பெண்கள் இல்லாமல் பாட்டாளி வர்க்கப் புரட்சி முழுமைபெறாது; பெண்களின் சரிநிகர் சமானமான பங்கேற்பு இல்லாமல் சோஷலிச சமூகத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்கு சரிநிகர் சமானமான வாழ்வு உறுதிசெய்யப்படாமல் சோஷலிச சமூகம் தனது நோக்கத்தில் வெற்றியடைய முடியாது’ என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.
அமைப்பாய் திரள்வதில் சவால்கள்
பாட்டாளி வர்க்கப் பெண்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரிபாதி மக்கள். நவீன உற்பத்தி முறையின் விளைவாக, தொழிலாளர் படையில் தொழிலாளர்களாக ஏற்கனவே இணைந்துவிட்டவர்கள். என்றாலும், தொடக்க காலத்தில், தொழிலாளர்கள் என்ற அங்கீகாரமின்றி பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் உதிரிகளாகத்தான் தவித்துவந்தார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறை பரவிய பகுதிகளில் எல்லாம் நவீன பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், தொழிலாளர் அமைப்புகளில் இணைந்து தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் சூழல், ஆண் தொழிலாளர்களைக் காட்டிலும் பெண் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவாகவே வாய்த்தது.
குடும்பம், வேலையிடம் என்ற இரட்டைச் சுமை பெண்களின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கத் தானே செய்யும். பெண்களின் தொழிற்சாலை வேலைவாய்புகள் தற்காலிகப் பணிகளாகவே பார்க்கப்பட்டன. ‘திருமணம் ஆகும்வரை மட்டுமே தொழிலாளர்களாக இருக்கப் போகும் பெண் தொழிலாளர்களை, சங்கத்தில் சேர்க்க வேண்டுமா’ என்ற கேள்விகள் பெண்களை அணிதிரட்டுவதில் தடையாக இருந்தன. குடிசைத்தொழில், சிறு-உற்பத்தியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், இந்தப் பெண் தொழிலாளர்களைத் திரட்டுவது மிகக் கடினமான காரியமாக இருந்திருக்கிறது. இந்தத் தொழில்களில் பகுதிவாரியான, துறைவாரியான சங்கங்களில் பெண் தொழிலாளர்கள் இணைந்திருந்தாலும், அன்றைக்கு ஐரோப்பாவில், ரஷ்யாவில் மத்திய தொழிற்சங்கங்களில் இணைந்து பெண் தொழிலாளர்கள் பணியாற்றுவது என்பது குதிரைக்கொம்பாகவே இருந்திருக்கிறது.
1882-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் 23 லட்சம் பெண்கள், சிறுமிகளில், 5½ லட்சம் பேர் -அதாவது உழைக்கும் வயதில் உள்ள நான்கில் ஒரு பங்கு பேர் தொழிலாளர்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்… ஆனால், 1892-95 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மத்திய தொழிற்சங்கங்களில் இணைந்திருந்த ஜெர்மன் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை வெறும் 7,000 மட்டுமே. (தோழர் கிளாரா ஜெட்கின் பதிவுகள்)
சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம்
கார்ல் மார்க்சின் மறைவுக்குப் பிறகு ஏங்கெல்ஸின் உதவியுடன் இரண்டாம் அகிலம் (சர்வதேச சோஷலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் இயக்கம்) 1889 முதல் செயல்படத் தொடங்கியது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும், தொழிலாளர் இயக்கங்களும் 1896 தொடங்கி சர்வதேச சோஷலிசப் பெண்கள் இயக்கத்தைக் கட்டமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்தன.
சர்வதேச சோஷலிசப் பெண்கள் இயக்கம், பாட்டாளி வர்க்கப் பெண்களை அணிதிரட்டிடும், ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தில் பெண் தொழிலாளர்களை இணைத்திடும் பணிகளுக்கு அவசியமானது என்ற புரிதல் சர்வதேச அளவில் ஏற்பட்டது. என்றாலும், ஒரு சில நாடுகளில் மட்டுமே பெண்களை அணிதிரட்டும் பணியில் முன்னேற்றங்கள் நடந்தன.
ஐரோப்பாவில் பல்வேறு பகுதிகளில் சங்கங்களிலும், அரசியல் குழுக்களிலும் இணைந்து செயல்படும் உரிமைகள் பெண்களுக்கு சட்டப்படியாகவே மறுக்கப்பட்டன. சங்கங்களில் இணைந்து செயல்படுவதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு பெண்களும் அரசியல் இயக்கங்களில் சேரலாம் என்ற நிலை ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது 1908 ஆம் ஆண்டில்தான். அதுவரை ஜெர்மனியில் பல்வேறு மாகாணங்கள் தனித்தனியான சட்டங்கள் மூலமாகப் பெண்கள் அரசியல் குழுக்களாக ஒன்றுகூடுவதைத் தடுத்துக்கொண்டிருந்தன. இந்தத் தடைகளையும் மீறி பெண்கள் தொழிலாளர் சங்கங்களிலும், அரசியல் கட்சிகளிலும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். 1909 ஆம் ஆண்டில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி பெண் தோழர்களுக்கு ஏறத்தாழ 150 அரசியல் கல்விக் குழுக்களை உருவாக்கி இருக்கிறது. (தோழர் கிளாரா ஜெட்கின் பதிவுகள்).
இரண்டாம் அகிலத்தின் ஏழாவது மாநாடு 1907 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சர்வதேச சோஷலிசப் பெண்கள் இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இரண்டாம் அகிலத்தின் சர்வதேசப் பெண்கள் செயலகம் உருவாக்கப்பட்டது.
பாட்டாளி வர்க்கத்தின் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியம் குறித்து ஸ்டட்கார்ட் மாநாட்டில் தோழர் அலெக்ஸாண்ட்ரா கொலோந்தாய் உரையாற்றினார். (தோழர் கொலோந்தாய் புகழ்பெற்ற ரஷ்யப் புரட்சியாளர். போல்ஷிவிக் கட்சியின் முன்னணித் தலைவர். தோழர் லெனின் தலைமையிலான உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சோஷலிச நாடுகள் பாலின சமத்துவத்தை எட்டுவதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய தெளிவு கொண்டவர்.)
‘சோஷலிச சித்தாந்தம் என்ற விஷம்’ பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பாதியை மட்டும் பாதித்து, பாட்டாளி வர்க்கத்தின் ஆண்கள் மத்தியில் மட்டும் எதிர்ப்புணர்வு குவிந்திருந்தால், முதலாளிகள் நிம்மதியாக முச்சுவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏனெனில், எப்போதுமே கீழ்ப்படிந்த நிலையில், தன்னலம் பார்க்காமல் முதலாளியின் சொத்துகளைப் பெருக்கும் நோக்கத்தில் உழைக்கிற, ஓர் இணக்கமான (பெண்) தொழிலாளர் சக்தி முதலாளிகளின் அதிகாரத்தின் கீழ் இன்னமும் இருக்கும். ‘ஒருபோதும் தீராது’ என்ற அளவிற்கு அந்த தொழிலாளர் சக்தி முதலாளிகளின் வசமிருக்கும்.
முதலாளித்துவ வர்க்கம் ஒரு பாதி பாட்டாளி வர்க்கத்தை இன்னொரு பாதி பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக நிறுத்தி, அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை சிதைத்து ஆதாயம் காணும். பெண்கள்தான் ஆண் தொழிலாளர்களுக்கு எதிரிகள் என்று சித்தரித்து, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையைக் குலைப்பதன் மூலம் பலனடையும்.
வர்க்க உணர்வு பெறாத பெண்களின் அலட்சிய உணர்வைப் பயன்படுத்தி, ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பை முதலாளித்துவம் சமாளிக்கும். விழிப்புணர்வு இல்லாத உதிறிகளாகப் பாட்டாளி வர்க்கப் பெண்கள் எந்தளவுக்கு அதிகமாக சிதறிக் கிடக்கிறார்களோ, அந்தளவுக்கு பாட்டாளி வர்க்கத்தில் அணிதிரட்டப்பட்ட சக்திகளுடைய போராட்டம் தோல்வியைத் தழுவும்.
என்றாலும், பெண் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு ஒரு முறை எழுச்சிபெற்றுவிட்டால் போதும். தங்களிடம் நேசக் கரங்களை நீட்டிடும் சக-ஆண் தோழர்களுடன் கரம்கோர்த்து, வெளிப்படையான, வலுவான போராட்டப் பாதையை பாட்டாளி வர்க்கப் பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.
பொதுவான வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கப் பெண்கள் காட்டும் ஆர்வமும், ஆதரவும் அதிகரித்துவருவது முதலாளிகளின் வழக்கமான தன்நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துள்ளது. பாட்டாளி வர்க்கப் பெண் தொழிலாளர்கள் அணிசேர்வது என்பது, முதலாளித்துவ சுரண்டலின் ஆதரவற்ற கடைசி பலியை ஒழித்துவிடும் என்ற பயத்தை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.’ – பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சரிபாதியான பெண்கள் ஏன் இணைக்கப்பட வேண்டும் என்பதை எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக விளக்கி இருக்கிறார் தோழர் கொலோந்தாய்!
25 ஆண்டுகளுக்கு முன்னர், பெண் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தாலும், எந்த நாட்டிலும் சோஷலிசப் பெண்கள் இயக்கம் என்ற ஒன்றை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. இப்படியான சூழலில் ஸ்டட்கார்ட் மாநாட்டில் உலக சோஷலிசப் பெண்கள் இயக்கம் உதயமாகிறது. இந்த மாநாடு உலக சோஷலிச இயக்கத்தில் வகித்த பங்கை தோழர் கொலோந்தாய் விளக்குகிறார்:
“ஸ்டட்கார்ட் மாநாடு உலக சோஷலிச இயக்கத்தில் நிர்ணயகரமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. எதிர்காலப் பணிகளின் வெற்றிக்காக இயக்கத்திற்குள் தேவைப்பட்ட சுதந்திரத்தை ஸ்டட்கார்ட் மாநாடு உறுதிசெய்தது. இந்த மாநாட்டில், பாட்டாளி வர்க்கப் பெண்களின் இயக்கம் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் இன்றியமையாத பகுதி என்பது தெளிவானது.” எனக் குறிப்பிடுகிறார். (கொலோந்தாய், இரண்டாம் சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டு உரை, 1910, கோப்பன்ஹேகன்)
‘பாட்டாளி வர்க்க இயக்கம் இயல்பாகவே பெண்களை உள்ளடக்கித் தானே கட்டப்பட வேண்டும். பெண்களை அணிதிரட்டுவதற்கு தனியான இயக்கம் தேவையா?’ இந்தக் கேள்வி எல்லா காலத்திலும் எழுகிறது. அன்றைக்கும் எழுந்தது.
எப்படி இருந்தாலும், சமூகத்தின் இன்றைய எதார்த்த நிலையில், பெண்களின் குறிப்பான சமூக, அரசியல் நிலையைக் கணக்கில்கொண்டு, பெண்கள் குறித்து தனித்த அணுகுமுறையை சர்வதேச இயக்கம் கையாளவேண்டி வந்தது. இந்த அணுகுமுறை பல இலக்குகளை நிர்ணயித்தது என்று தோழர் கொலோந்தாய் குறிப்பிட்டார்.
பெண்களின் சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகளை தொழிலாளர் வர்க்கம் வென்றெடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
பெண்களுக்கான வாக்குரிமையை உள்ளடக்கி அனைத்து வயதுவந்தோர் வாக்குரிமை இயக்கத்தை, பெண்ணுரிமைக்கான இயக்கங்களை உலக நாடுகளின் தொழிலாளர் கட்சிகள் எப்படி முன்னெடுத்து நடத்திட வேண்டும்?
வர்க்கங்களை ஒழித்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்காமல், பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, தேர்தலில் பங்குபெறும் உரிமை என்ற சட்ட-உரிமைகளுக்காக மட்டும் குரல்கொடுக்கும் முதலாளித்துவ பெண்களின் பெண்ணுரிமைப் போராட்டங்களை எப்படி அணுக வேண்டும்? -இந்த விவகாரங்களில் எல்லாம் சர்வதேச சோஷலிசப் பெண்கள் இயக்கமும், அதன் மாநாடுகளும் வழிகாட்டின.
பெண்கள் விடுதலை பெற என்ன செய்ய வேண்டும்? என்பதில், பெண்ணியவாதிகளுக்கும், சோஷலிஸ்ட்களுக்கும் இடையே 19-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே கூர்மையான பிளவுகள் தோன்றின.
சொத்துடைய பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சொத்துரிமை, வாக்குரிமை போன்ற உரிமைகளைப் பெண்களுக்கு சட்டப்படி உறுதிசெய்தாலே போதுமானது என்றார்கள். பாலின சமத்துவத்துக்கு எட்டுவதற்கு தனியுடைமை அடிப்படையில் உள்ள சமூகத்தின் கட்டமைப்பை ஒழிக்கத் தேவையில்லை, சோஷலிச சமூகத்தை எல்லாம் கட்டமைக்கத் தேவையில்லை, வர்க்கங்களை ஒழிக்கவெல்லாம் தேவையே இல்லை என்று இவர்கள் கருதினார்கள். பெரும்பாலும், தங்களுடைய வர்க்கத்தின் காரணமாக, அந்த வர்க்கம் தந்த பலன்கள் காரணமாக, இத்தகைய கருத்துகளை அவர்கள் கொண்டிருந்தார்கள்.
முதலாளித்துவ, நிலப்பிரத்துவ சமூகத்திற்குள் பெண் விடுதலை என்று பேசியவர்களை சோஷலிஸ்ட்கள் ‘முதலாளித்துவ பெண்ணியவாதிகள்’ என்று குறிப்பிட்டார்கள். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ முறைக்குள், தனியுடைமை சமூகத்திற்குள், பெண்கள் விடுதலை பெறுவது சாத்தியமே இல்லை. சமூகத்தில் எல்லா சொத்துகளையும், எல்லா உற்பத்தி வளங்களையும் பாட்டாளி வர்க்கம் பொதுவான உடைமையாகக் கொண்டிருக்கும் சோஷலிச சமூகத்தில், ஆண்களைப் போலவே பெண்களும் தொழிலாளர் படையில் முழுமையாக இணைப்பது, பெண் விடுதலைக்கு அடிப்படையானது என்று தோழர்கள் கிளாரா ஜெட்கின், பெபல் போன்ற மார்க்சிஸ்ட்கள் வலுவாக வாதிட்டார்கள்.
“தொழிலாளர்களின் இலக்கில் இருந்து பெண்களுடைய இலக்கை நாங்கள் தனித்துப் பார்க்கவில்லை. ஏனெனில், மூலதனத்தில் இருந்து உழைப்பு விடுதலை பெறுவதில் தான், சோஷலிசத்தில் தான் பெண்களின் விடுதலை அடங்கி இருக்கிறது.” 1889 ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டில் ஜெர்மன் சோஷலிஸ்ட் தலைவரான தோழர் கிளாரா ஜெட்கின் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதலாளித்துவ பெண்ணியவாதியாக சோஷலிஸ்ட்களுடன் இணைந்து செயல்பட்ட ஜெர்மானியர் லில்லி பிரான். பிற்காலத்தில், சோஷலிச சித்தாந்தத்துக்கு நெருக்கமானவராக ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்தவர். என்றாலும், நடைமுறையில் உள்ள அமைப்பை சீர்படுத்தி மேம்படுத்த முடியும் என்ற அணுகுமுறையே அவரிடம் மேலோங்கியது. அந்த அடிப்படையில் பிரதானமாக அவர் சீர்திருத்தவாதியாகவே செயல்பட்டவர் எனலாம். ஜெர்மன் அரசு பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை உறுதிசெய்திட வேண்டும் என்று 1897 வாக்கிலேயே பிரான் முன்மொழிந்தார். கிளாரா ஜெட்கின் போன்ற சோஷலிஸ்ட்கள் இம்மாதிரியான திட்டங்கள் முதலாளித்துவ சமூகத்தில் சாத்தியமில்லை, சோஷலிச சமூகத்தில்தான் சாத்தியம் என்று தொடக்கத்தில் கருதினார்கள்.
என்றாலும், 1910 கோப்பன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாம் சர்வதேச சோஷலிசப் பெண்கள் மாநாடு வரையறுத்த செயல்திட்டம் இந்த அம்சங்களை எல்லாம் உள்ளடக்கி இருந்தது. கிளாரா ஜெட்கின், அலெக்சாண்ட்ரா கொலோந்தாய் போன்ற தலைவர்கள் நடைமுறை உலகில் பெண் தொழிலாளர்கள் விஷயத்தில் பெண் சோஷலிஸ்ட்கள் இயக்கம் அடைய வேண்டிய இலக்குகள் என்னென்ன என்பதை செயல்திட்டமாக வகுத்தார்கள். சோஷலிச நாடுகள் பெண்கள் குறித்து பிற்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவே இரண்டாம் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டின் செயல்திட்டம் திகழ்ந்தது எனலாம். இந்த செயல்திட்டத்தின் நான்காவது அம்சத்தின் தலைப்பு, சமூகப் பாதுகாப்பு, தாய்மை மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள். எட்டு மணி நேர வேலை, பிரசவத்திற்கு முன்பு இரண்டு மாதங்கள், பின்பு இரண்டு மாதங்கள் ஊதியத்துடனான விடுப்பு உள்ளிட்ட அம்சங்களை வென்றெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இதில் இடம்பெற்றிருந்தன.
முதல் அகிலத்தின் காலத்தில் பாட்டாளி வர்க்கப் பெண்களை, பெண் தொழிலாளர்களை உள்ளடக்கி சர்வதேச இயக்கம் கட்ட வேண்டும் என்ற செயல்திட்டத்தையே வகுக்க முடியாத சூழல். அடுத்த அரை நூற்றாண்டில் இந்த சூழலை மாற்றி சர்வெதேச கம்யூனிஸ்ட் இயக்கம் பயணித்தது. இரண்டாம் அகிலத்தின் சோஷலிஸ்ட் பெண்கள் செயலகம் பெண்களை உள்ளடக்கி உலக சோஷலிச இயக்கம் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற தெளிவை வழங்கியது. 1917- ஆம் ஆண்டில் பெண் தொழிலாளர்களின் மகத்தான பங்களிப்போடு, உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெறும் அளவிற்கு தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் பெண்களின் பாத்திரம் வலுப்படுத்தப்பட்டு வந்தது.
தங்களுடைய பாலினம் காரணமாக பொதுவெளிக்கு வர முடியாத மக்கள் பிரிவாக பெண்கள் இருந்தார்கள். உலகம் முழுவதுமே இதுதான் பெண்களின் நிலை. இருந்தாலும், ரஷ்யாவில் பெண்கள் பாட்டாளி வர்க்கப் போரில் முன்னணிப்படை வீரர்களாகக் களம் கண்டு புதிய சமூகத்தை உருவாக்கிடப் பாடுபட்டார்கள். இது எப்படி சாத்தியமானது?
ரஷ்யப் புரட்சியில் பெண்கள்
ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் இயக்கம் எந்த ஆண்டில் இருந்து தொடங்கியது என்று கணித்திட முடியாத அளவிற்கு ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இணைந்தே இருந்தது என்கிறார் தோழர் கொலோந்தாய்.
எப்போதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தில் இறங்கினார்களோ, அப்போதெல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் அங்கமாக, தங்களுடைய உழைப்புச் சக்தியை விற்பனை செய்யும் தொழிலாளர்களாக பெண் தொழிலாளர்களும் போராட்டக் களத்தில் நின்றார்கள்.
1872-ல் கிரென்ஹோம் (Krenholm) தொழிற்சாலையில், 1874-ல் மாஸ்கோவின் லேஸர்யேவ் (Lazeryev) ஜவுளித் தொழிற்சாலையில், 1878-ல் பெட்ரோகிராட்டின் புதிய பஞ்சு நூற்பாலை போராட்டத்தில் எனப் பெண் தொழிலாளர்கள் வலுவாகப் பங்கேற்றார்கள். ஒரேக்கோவோ ஸ்யுயேவோ (Orekovo Zyuyevo) என்ற இடத்தில் நடந்த போராட்டத்தை வழிநடத்தினார்கள். இந்தப் போராட்டங்களின் போதெல்லாம், தொழிற்சாலை கட்டடங்கள் புறக்கணிக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தன. இந்த போட்டாங்கள் தந்த அழுத்ததின் காரணமாக, வேறு வழியின்றி ஸார் மன்னரின் அரசு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரவுப் பணியைத் தடைசெய்யும் சட்டத்தை 1885 ல் கொண்டு வந்தது. இப்படி, தொழிலாளர்கள் போராட்டங்கள் மூலமாக ஒன்றிரண்டு உரிமைகளைப் பெறுவது, சட்ட-உரிமைகளை அமல்படுத்தக் கோரிப் போராட்டம் நடத்துவது என்ற நிலையே 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ரஷ்யாவில் நீடித்தது.
1905 ஆம் ஆண்டின் முதல் ரஷ்யப் புரட்சி நடக்கும்வரை தொழிலாளர் இயக்கப் போராட்டங்களில் பொருளாதாரத் தன்மை மட்டுமே முன்னுக்கு வந்தது. இந்தக் காலகட்டம் வரை தொழிலாளர் இயக்கம் தனது அரசியல் இலக்கை மறைத்துச் செயல்பட வேண்டி இருந்தது. அரசியல் கோரிக்கைகளை வெளிப்படையாக எழுப்பாமல், மறைத்து எழுப்பும் தந்திரத்தை தொழிலாளர்களும், தொழிலாளர் கட்சியும் கடைப்பிடித்தார்கள்.
பெண் தொழிலாளர்களைப் பொறுத்தவரை தங்களுடைய வர்க்க உணர்வின் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். பல சமயங்களில் பெண் தொழிலாளர்களும் அணிதிரண்டு தொழிற்சாலை போராட்டங்களை நடத்தினார்கள்.
ஆனால், வேலைநிறுத்தப் போராட்டத்தின் அலை அடங்கி ஓய்ந்தபிறகு, கோரிக்கைகளில் வெற்றியோ, தோல்வியோ ஏற்பட்டு, தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியபோது, பெண் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் கட்சி, இயக்கத்தோடு இருந்த தொடர்பு அறுந்துபோனது. தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் தோழமைத் தொடர்பில் இருக்க வேண்டும், அமைப்பாய்த் திரளவேண்டும், என்ற விழிப்புணர்வு இன்றி மீண்டும் தனித்திருக்கும் சூழலுக்குள் பெண் தொழிலாளர்கள் போய்விடுவார்கள். அன்றைக்கு சட்டவிரோதமான கட்சி அமைப்புகளில் பெண் தொழிலாளர்களைக் காண்பது மிக அரிது என்கிறார் தோழர் கொலோந்தாய்.
“20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவின் 60 லட்சம் பெண் தொழிலாளர்கள் வாழ்க்கையானது, அறியாமையில் மூழ்கி, இருள் படர்ந்து, பட்டினி, இல்லாமை, சுரண்டலில் சிக்கி இருந்தது…சோஷலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சியின் விரிவான குறிக்கோள்கள் பெண் தொழிலாளர்களை இன்னும் பற்றிக்கொள்ளவில்லை. சர்வதேச அரசியல் கோரிக்கைகளைப் பெண்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.” என்கிறார்.
ரஷ்யாவின் முதல் பெண் சோஷலிஸ்ட்களான சோஃபியா பார்டினா, சோஃபியா பெரவ்ஸ்கயா போன்றோர் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இவர்கள் பணக்கார, பிரபுத்துவக் குடும்பங்களில் பிறந்தவர்கள். தங்களுடைய பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறியவர்கள். தங்களுடைய வளமான கடந்த காலத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, சமூக அநீதியை ஒழிப்பதற்காக புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்தவர்கள்.
1890-களின் பிற்பகுதியில், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் தொழிலாளர் இயக்கம் வேரூன்றிவிட்டது. என்றாலும், இந்தக் காலத்தில்கூட கட்சி அமைப்பில் பாட்டாளி வர்க்கப் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது.
கட்சியில் தீவிரமாக செயல்பட்ட பெண்களில் பெரும்பாலோனோர், மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற அறிவுசார் பணிகளில் ஈடுபட்டவர்களே அதிகம், பெண் தொழிலாளர்கள் மிகவும் குறைவு. அன்றைக்கு நடத்தப்பட்ட சட்டவிரோத கூட்டங்களில் பெண் தொழிலாளர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்திருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோகிராட் நகரத்திற்கு வெளியே நடத்தப்பட்ட வகுப்புகளில், கணிதம், புவியியல் பாடங்களைக் கற்கிறோம் என்ற போர்வையில் மார்க்சிய வகுப்புகள் நடத்தப்பட்டன. மார்க்சிய சித்தாந்தத்தை, விஞ்ஞான சோஷலிசத்தை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் தோழர்கள் இந்த வகுப்புகளில் சேர்ந்து அரசியல் கல்வி கற்றார்கள். இந்த வகுப்புகளிலும் பெண் தொழிலாளர்களைப் பார்க்க முடியாது என்ற நிலை.
பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்ட நபர்களாக, போராட்டங்களைத் தவிர்க்க விரும்பிய பெண்களாகவே, ரஷ்ய பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் தங்களுடைய இடம், அடுப்படி, பாத்திரம் கழுவுமிடம், தொட்டில் என்று மட்டுமே நினைத்தார்கள் என்கிறார் தோழர் கொலோந்தாய்.
1905 ஆம் ஆண்டு வரைக்குமே ரஷ்யாவின் பெண் தொழிலாளர்கள் நிலை இப்படித்தான் இருந்திருக்கிறது. 1905க்குப் பிறகு சூழல் விரைவாக மாறுகிறது.
கூட்டங்கள், பேரணிகளில் பெண்களைக் காண முடிந்தது. கூட்டங்களில் உரையாற்றும் பேச்சாளர்களைப் பெண் தொழிலாளர்கள் நம்பிக்கை நிறைந்த கண்களோடு, ஆர்வத்தோடு, தேடலோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். அசைக்க முடியாத உறுதியும், ஆற்றலும் அவர்களிடம் நிரம்பியிருந்தது. நேற்றுவரை வர்க்க உணர்வு பெரிதாகக் காணப்படாதவர்கள், பொதுவேலை நிறுத்தம் என்ற முழக்கத்தைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாவதாக வெளிநடப்பு செய்தார்கள்.
தலைநகரில் மட்டுமல்ல, மாகாணங்களிலும் பெண் தொழிலாளர்கள் தங்களுடைய தோழர்களைக் காட்டிலும் சளைக்காமல் போராடினார்கள். அக்டோபர் காலத்தில், சாப்பாட்டுக்கே வழியற்ற நிலை. தங்கள் குழந்தைகளுக்கு ரொட்டி இல்லை என்றாலும், மனவலிமையோடு ஆண் தொழிலாளர்களைப் பார்த்து, ‘நாங்களும் வேலையைப் புறக்கணித்துவிட்டோம்!’ என்று உறுதியோடு கையசைத்தார்கள். சோர்வின்றி, வீரத்தோடு போராடினார்கள். பொது நோக்கத்திற்காக தங்களை வீரத்துடன் அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்களுடைய செயல்பாட்டின் தீவிரம் கூடக்கூட, அவர்களுடைய சிந்தனை மிக வேகமாக விழிப்படைந்தது.
உலகில் தங்களைச் சுற்றி இருக்கிற பிரச்சனைகளை, முதலாளித்துவ அமைப்பில் இருந்து தோன்றும் அநீதிகளைப் பெண் தொழிலாளர்கள் புரிந்துகொண்டார்கள். பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான கோரிக்கைக்களுக்கு இடையே, பாட்டாளி வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக முன்வைத்த கோரிக்கைகளைத் தெளிவாகக் கேட்க முடிந்தது என்கிறார் கொலோந்தாய்.
1905 புரட்சிக்குப் பிறகு ஸார் மன்னராட்சி ஷிட்லொவ்ஸ்க்கி என்ற கமிஷனை நியமித்தது. தொழிலாளர் பிரதிநிதிகளை ரஷ்ய நாடாளுமன்றமான டூமாவிற்குத் தேர்வு செய்து அனுப்பும் நடவடிக்கைகளில் (பெயரளவிலான ஏற்பாடு) இந்தக் கமிஷன் ஈடுபட்டது. சம்ப்ஸோனியேவ்ஸ்கி (Sampsoniyevsky) ஜவுளித் துறையில் இருந்து ஏழு பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்கள் தங்கள் தரப்பில் இருந்து ஒரு பெண் பிரதிநிதியைத் தேர்வு செய்து கமிஷனிடம் பரிந்துரைத்திருந்தார்கள். ஆனால், அந்தக் கமிஷன் பெண்களைப் பிரதிநிதியாக தேர்வு செய்ய மறுத்துவிட்டது.
சமுதாயத்திற்காகத் தொழிலாளர்களாக இவ்வளவு கடுமையாக உழைக்கிறோம். ஆனாலும், பெண்களுக்கு உரிமைகள் கிடையாது என்ற பழைய கோட்பாட்டை சுட்டிக்காட்டியே எங்களுக்கான உரிமைகளை மறுக்கிறீர்கள்- என்று இந்தக் கமிஷனுக்குப் பெண் தொழிலாளர்கள் கண்டனத் தீர்மானத்தை அனுப்பினார்கள். எத்தகைய அரசியல் தெளிவை ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் பெற்றிருந்தார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணமாக இந்தத் தீர்மானம் திகழ்கிறது.
“செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் தொழிற்சாலைகளிலும் மில்களிலும் பெண் தொழிலாளர்களாகிய நாங்கள்தான் அதிகமாக வேலை செய்கிறோம். அதிக ஊதியம் தருகிறோம் என்று கூப்பிடும் தொழிற்சாலைகளுக்கு ஆண் தொழிலாளர்கள் போய்விடுவதால், நூற்பு மற்றும் தரிகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கடுமையான வேலையின் பெரும்பகுதி சுமையைப் பெண் தொழிலாளர்களாகிய நாங்கள்தான் சுமக்கிறோம். ஆதரவற்றவர்கள் என்பதாலும், உரிமையற்றவர்கள் என்பதாலும் எங்களுடைய தோழர்களைக் காட்டிலும் தாழ்ந்த நிலையில் நாங்கள் வைக்கப்பட்டிருக்கிறோம். குறைவான கூலியே எங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
இந்தக் கமிஷன் நியமிக்கப்பட்டபோது, ‘அப்பாடா! இறுதியில் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் பெண் உறுப்பினர் ஒருவரால் இனி, பெண்களாகிய நாங்கள் அனுபவிக்கிற, ஆண் தொழிலாளர்களுக்கு அறவே தெரிந்திருக்காத ஒடுக்குமுறைளைப் பற்றி பேச முடியும். ஒட்டுமொத்த ரஷ்யாவிற்கும் எங்கள் துயரங்கள் தெரியவரும்’ என்று நினைத்தோம். ஆனால், இந்தக் கமிஷனோ நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியை நிராகரித்திருக்கிறது” என்று முறையிட்டார்கள். முதல் மற்றும் இரண்டாம் டூமாவிற்கான தேர்தல்கள் நடக்கும் முறைகளைக் கண்டித்து பெண் தொழிலாளர்கள் மாஸ்கோவில் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.
முதலாளித்துவ முறையில் பாட்டாளி வர்க்கத்திற்கு, பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் உறுதிசெய்யபட வாய்ப்பே இல்லை. இந்த உண்மையை உணர்ந்த ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் சோஷலிசப் புரட்சிக்காக உழைத்தார்கள்.
ரஷ்யப் புரட்சி
முதல் உலகப்போரில் 1914-17-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 17 லட்சம். போர்க் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட வீரர்கள் 20 லட்சம், காணாமல் போனவர்கள் 10 லட்சம் பேர். கொந்தளித்தது ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம்.
மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வக்கில்லாத ஸார் அரசு, யாருக்காகப் உலகப் போரில் ஈடுபடுகிறது? இந்தக் கேள்வியை முன்வைத்து ரஷ்யப் பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போரைத் தீவிரப்படுத்தியது. பாட்டாளி வர்க்கப் பெண்கள் அணி அணியாகப் போராட்டங்களில் இறங்கினார்கள். சமூக மாற்றத்திற்காகப் புரட்சிகரப் பாதையில் வீறுநடை போட்டார்கள்.
முதல் உலகப் போர் சமயத்தில் ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரத்தில் மட்டும் அடைக்கப்பட்டிருந்த பெண் அரசியல் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 889.
இரண்டாம் அகிலமும், சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கமும், உலகப் போருக்கு எதிராக சோஷலிஸ்ட்கள் பாட்டாளி வர்க்கத்தைத் திரட்டிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தன. ஆனால், பல்வேறு நாடுகளின் சோஷலிஸ்ட்கள், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைக் கைவிட்டு, போலி ‘தேச பக்தி’யால் பாதிக்கப்பட்டார்கள். அவரவர் நாட்டு அரசுகள் போரில் பங்கேற்பதை ஆதரிக்கும் தவறான நிலைப்பாட்டை எடுத்தார்கள். ரஷ்யாவிலோ தோழர் லெனின் தலைமையில் போல்ஷிவிக்குகள் உலக எதார்த்த நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு பெண்களை உள்ளடக்கிய பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகரப் பாதையில் அணிவகுத்தார்கள்.
போரின் விளைவாக விலைவாசி 3, 4 மடங்கு அதிகரித்தது; தொழிலாளர்கள் வேலை நேரம் உயர்த்தப்பட்டது, ஊதியம் வெட்டப்பட்டது; போர்க்கால அடக்குமுறைகள் அதிகரித்தன.
யாருக்காக இந்தப் போர்? நிச்சயமாக முதலாளித்துவ முறையின் லாபத்துக்கானது மட்டுமே! அதன் ஏதாகிபத்திய நலனுக்கானது மட்டுமே! இந்த முழுவிழிப்புணர்வை ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் பெற்றிருந்தது.
நாடுகளைப் பிடித்து மக்களை அடிமைப்படுத்துவது; நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுவது, வளங்களைக் கொள்ளை அடிப்பது; போரைப் பயன்படுத்தி போலி தேசபக்தியை, போலி தேசியவாதத்தை மக்களிடம் உருவாக்குவது; உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்துவது; சுரண்டலை ஒழிக்க நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்றி சோஷலிச அரசை நிறுவ வேண்டும் என்ற பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குணத்தை மட்டுப்படுத்துவது; புரட்சியில் ஈடுபடாமல் அவர்களைத் தடுப்பது- இதுதான் முதலாளித்துவ சக்திகளின், முதலாளித்துவ சக்திகளுடைய அரசுகளின் நோக்கம் என்பதை ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்தது.
போரை நிறுத்த வேண்டும்! – தோழர் லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகளின் அறைகூவல் ரஷ்யாவையே அதிர வைத்தது. பாட்டாளி வர்க்கத்தின் இந்தக் கோஷத்தை, ரஷ்யப் புரட்சியின் முன்னணிப் படை வீரர்களாக இருந்த பெண்கள் விடுதலைக்கான, விடியலுக்கான கோஷங்களாக மாற்றினார்கள்.
1917 ஆம் ஆண்டு, மார்ச் 8. அது ஒரு வியாழக்கிழமை. அன்றைக்கு மகளிர் தினப் போரட்டத்தை அனுசரிக்க வேண்டும் என பெட்ரோகிராட் நகரத்தின் பெண் தொழிலாளர்கள் அறைகூவல் விடுத்தார்கள். ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அன்றைக்கு நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.
உலக சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம் 1910-ல் விடுத்த அறைகூவலுக்குப் பிறகு மகளிர் தினத்தை அனுசரிக்கும் வழக்கத்தை சோஷலிஸ்ட் இயக்கப் பெண்கள் கடைப்பிடித்து வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையை மகளிர் தினமாக அனுசரிக்கும் வழக்கத்தை பெண் சோஷலிஸ்ட்கள் தங்களது நாடுகளில் கடைப்பிடித்தார்கள். ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் முதன்முதலாக ஒரு வேலை நாளான மார்ச் 8, 1917 அன்று மகளிர் தினத்தை அறிவித்து, போர் எதிர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திட்டமிட்டார்கள்.
மார்ச் 8 அன்று காலை, ‘நமக்குப் பிழைப்புக்கே வழியில்லை. அரசாங்கத்திற்குப் போர் ஒரு கேடா? பெண் தொழிலாளர்கள் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம், நீங்களும் உங்கள் வேலையைப் புறக்கணியுங்கள் தோழர்களே! – இப்படி பெண் தொழிலாளர்கள் கூக்குரல் எழுப்பினார்கள். ஒவ்வொரு தொழிற்சாலைகளாகச் சென்று தங்களுடைய சக-ஆண் தொழிலாளர்களை, சக-தோழர்களை எல்லாம் திரட்டிக்கொண்டு பெரும்படையாக ஊர்வலம் சென்றார்கள்.
மார்ச் 8 அன்று பெண்கள் தொடங்கிய வேலைநிறுத்தப் போர் மாபெரும் புரட்சிகர அலையாக மாறியது. படை வீரர்கள்கூட இந்தப் போராட்டத்தில் இணைந்தார்கள். முதல் நாளான மார்ச் 8 அன்று பெட்ரோகிராட் நகரில் 1 லட்சத்து 28 நபர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். மறுநாள் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.
போரை நிறுத்து! என்ற கோஷம், மன்னாராட்சி ஒழிக! என்ற கோஷமாக மாறியது.
மார்ச் 8, 1917 அன்று பெட்ரோகிராட் நகரத்தில் பாட்டாளி வர்க்கப் பெண்கள் புரட்சியின் முதல் அலையாக எப்படிக் கிளர்ந்தெழுந்தார்கள் என்ற வரலாற்றை மூத்த பத்திரிகையாளர் தோழர் இரா. ஜவஹர் தனது மகளிர் தினம்- உண்மை வரலாறு நூலில் விவரித்திருப்பார்.
மார்ச் 8 தொடங்கிய பிப்ரவரி புரட்சியின் (ரஷ்யாவின் பழைய நாற்காட்டியில் பிப்ரவரி) விளைவாக மன்னாராட்சி ஒழிக்கப்பட்டு, ரஷ்யா குடியரசு நாடாக மாற்றப்பட்டது. இடைக்கால முதலாளித்துவ அரசாங்கம் பதவியேற்றது.
உணவை உறுதிசெய்! போரை நிறுத்து! உழுபவருக்கே நிலத்தை சொந்தமாக்கு! இந்த மூன்று அடிப்படையான கோரிக்கைகளை புரட்சியில் மக்கள் முன்வைத்தார்கள். ஆனால், புதிய முதலாளித்துவ அரசின் வர்க்கத் தன்மை காரணமாக, அதனால் மக்களுடைய இந்த அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஏகாதிபத்திய உலகப் போரில் ரஷ்யா தொடர்ந்து பங்கேற்றது. விலைவாசி உயர்ந்தது. நிலப்போராட்டம் நடத்தி நிலத்தைக் கையகப்படுத்திய விவசாயிகளை புதிய இடைக்கால அரசு ஒடுக்கியது.
போல்ஷிவிக்குகள் சொல்வது உண்மைதான்! புரட்சியின் இரண்டாம் கட்டமான சோஷலிசப் புரட்சியை நடத்தி, சோஷலிச அரசு உருவாக்கப்பட்டால்தான் ரஷ்யாவில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். சுரண்டலை ஒழித்திட முடியும். சாமாணியர்களின், உழைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட முடியும்- இந்தத் தெளிவை, நம்பிக்கையை, உறுதியை ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் பெற்றது.
அடுத்தது சோஷலிசப் புரட்சி! ரஷ்யாவின் பழைய நாட்காட்டில்யில் அக்டோபர் மாதம். அக்டோபர் புரட்சி எனும் சோஷலிசப் புரட்சி நடந்தேறியது. நவம்பர் 7. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை, ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் உருவாக்கியது. அக்டோபர் புரட்சியில் கட்சியின் அறைகூவல்படி அரசு இயந்திரத்தைக் கைப்பற்றும் புரட்சி நடவடிக்கைகளில் பெண் தோழர்கள் எப்படியெல்லாம் பங்குபெற்றார்கள் என்பதைப் பற்றி ஏராளமான பதிவுகள் இருக்கின்றன.
ரஷ்யாவில் மன்னராட்சியை ஒழித்து சோஷலிசப் புரட்சியைத் துவங்குவதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது 1917 மார்ச் 8 அன்று தொடங்கிய மாபெரும் எழுச்சிப் போராட்டம். பெட்ரோகிராட்டில் பெண்கள் ஒருங்கிணைத்த போராட்டம். 1920 ஆம் ஆண்டில் தோழர் லெனின் தலைமையிலான சோவியத் அரசு இந்த மார்ச் 8 தினத்தை மகளிர் தினமாக அறிவித்தது.
1905- முதல் ரஷ்யப் புரட்சிக்கு முன்பும், 1905 தொடங்கி அக்டோபர் புரட்சிக் காலம் வரையிலும் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கப் பெண்கள் அரசியல்படுத்தப்பட்ட வரலாறு, புரட்சியில் ஈடுபட்ட வரலாறு, உலக நாடுகளின் பெண்கள் இயக்கங்கள் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. இன்றைக்கு, உலகின் அந்த முதல் சோஷலிச அரசு முதலாளித்துவ அமைப்பின் சதியால் தகர்ப்பட்டிருக்கலாம். ஆனாலும், மனித சமூகம் பயணிக்க வேண்டிய சுரண்டலற்ற பாதையை, பாலின சமத்துவம் உள்ள ஒரு சமூகத்தை நோக்கிப் பயணிப்பதற்கான பாதையை ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கமும், ரஷ்யப் பாட்டாளி வர்க்கப் பெண்களும் நமக்கு அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
சம-உரிமைகள் பெற்ற நபர்களாக சமூகத்தில் பெண்கள் வாழ்வதற்கான புதிய சூழலை உருவாக்க வேண்டும். இந்த நோக்கில், சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவின் சோஷலிச நாடுகள், மக்கள் சீனம், சோஷலிச கியூபா உள்ளிட்ட சோஷலிச நாடுகள் பாடுபட்டன. காலங்காலமாக சமூகத்தில் மக்கள் மனப்பான்மையில் வேரூன்றி இருந்த ஆணாதிக்க சிந்தனையை அசைப்பது அவ்வளவு எளிதில்லை. என்றாலும், பாலின சமத்துவம் காண்பதற்கான அடிப்படையான செயல்திட்டங்கள் குறித்து சிந்தித்தன.
தொடரும்…
ஆதாரங்கள்:
Women and Socialism, August Bebel, 1979
Allexandra Kollontai, Speeches at the International Socialist Conferences of Women Workers 1907-1916, On the History of the Movement of Women Workers in Russia 1919
Clara Zetkin, German Socialist Women’s Movement, 1909
மகளிர் தினம் – உண்மை வரலாறு, இரா. ஜவஹர், பாரதி புத்தகாலயம்