Pen En Adimaiyanal பெண் ஏன் அடிமையானாள் பெரியார் Periyar

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பெண் ஏன் அடிமை ஆனாள்?” – கோ.மாலினி

 

 

 

தமிழ்த்தாய் வணக்கம்

வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்
கையி னாலுரை கால மிரிந்திட
பைய நாவைய சைத்த பழந்தமிழ்
ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்

– பள்ளியகரம்.நீ.கந்தசாமிப்பிள்ளை

தந்தை பெரியார்

“ஆரியத்தைத் தூள் தூளாய்த் தகர்த்துக் காட்டி
அற்புதம் நிகழ்த்திய வெண்தாடி வேந்தன்
மூடநம்பிக்கை இருள் போக்க முதுமையிலும்
முயன்றிட்ட மூத்த தலைவன்
பகுத்தறிவுப் பாடம் சொன்ன ஏந்தல்
ஊர் ஊராய் சுற்றி எடுத்துரைத்து
அறிவுப் புரட்சி செய்த ஆதவன்
தமிழ்நாட்டுப் பெண்குலத்துத் தந்தை பெரியார்”

– கவிஞர் கலைமணி மோகனசுந்தரம்

அன்றைய காலத்தில் திராவிட மக்களை ஆரிய வலையில் விழச்செய்து அவர்களைத் தன்மானமும் பகுத்தறிவும் அற்றவர்களாக உருவாக்கினார்கள்.இந்த நிலையை மாற்ற விடிவெள்ளியாகத் தோன்றியவர்தான் தந்தை பெரியார். ஆரியருக்கு எதிராகவே தந்தை பெரியார் குரல் கொடுத்தார்.கடவுள் மறுப்புக் கொள்கையை அனைத்து தரப்பு மக்களிடம் பரப்பி வந்தார்.

மக்களிடம் பரவியுள்ள மூடநம்பிக்கைகளை மாற்றினார். இவ்வாறு பல புரட்சிகளை செய்தாலும் அவற்றுக்கெல்லாம் முடிமணியாக திகழ்வது பெண் உரிமைக்கு தந்தை பெரியார் குரல் கொடுத்ததே. அவர் எழுதிய பெண் ஏன் அடிமையானாள?; என்ற புத்தகத்தை ஆய்வு நோக்கில் அணுக விளைந்தேன். அதன் விளைவே இக்கட்டுரை.

பெண்ணின் சிறப்பு

பெண் சுதந்திரம் என்பது இரவு 12 மணிக்கு நகைகளுடன் ஒரு இளம்பெண் தனியாக எவ்வித பயமும் இல்லாமல் சாலையில் நடந்து வர வேண்டும். அப்படிப்பட்ட சுதந்திரம் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாகிவிட்டது.பெண் என்பவளை இந்த சமுதாயம் காமப்பொருளாகவே கருதுவதால்தான் 5 வயது சிறுமி முதல் 60 வயது கிழவி வரை சாலையில் நடமாடமுடியவில்லை. இன்றைய சூழலில் பெண் கிழிந்த ஆடையுடன் நடந்தால் கூட அவளுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் அனைத்து தற்காப்பு கலைகளும் கற்று சமுதாயத்தில் தான் வாழ தன்னை உடலளவிலும், மனதளவிலும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் பெண்ணொருத்தி தாய்,மனைவி, தமக்கை, தங்கை, மகள் என பல உறவுகளின் சிறப்புற்று விளங்குகிறாள்.பெண் என்பவள் அனைவர் மீதும் அன்பும்,நல்லனவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமும், தன்னடக்கமும் கொண்டவள்.ஒழுக்க நெறியில் மிகுந்த உறுதி உடையவளாகவும் இருப்பாள். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி வாழ்பவள்.தனக்கு ஏற்படும் துயரங்களை சகித்துக்கொள்ளுதலை தன் இயல்பாகவே கொண்டவள்.

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”
என்ற திரை இசை பாடலுக்கேற்ப தம் மக்களுக்கு தாயாய் விளங்கி நல்லதை எடுத்துச் சொல்லி இவ்வுலக வாழ்வை இனிதாய் நடத்தி செல்பவள்.

மேலும் திருவள்ளுவர் மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தள் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை குறள் 51 (வாழ்க்கை துணை நலம்) குடும்பத்திற்கு தக்க சிறப்பினை உடையவளாகி கணவனின் வளங்களுக்கும் தக்கவளாய் அமைபவளே மனைவி என்பவள் என்று குறள் வழி கூறுகிறார்.தன் கணவன் தளர்வு அடையும் போது அவனுக்குத் தக்க துணையாய் இருந்து கணவனின் தளர்ச்சியை போக்கி அவனுக்கு ஊக்கத்தை அளிப்பவள்.தன் உடன் பிறந்தோருக்கு, பெற்றோருக்கு பணிவிடை செய்து மகிழ்பவள். உறவினர் மட்டும் அல்லாமல், அயலாரிடத்தும் அன்பாய் நடந்து கொள்பவள். பெண்களுக்கே உரிய நாணத்தோடு அளவோடு பிறரிடம் நட்புக்கொள்பவள். இப்படி எல்லாம் பெண்ணை காலங்காலமாக பெருமையாக பேசுகின்றோம் என்ற போர்வையில் அவர்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கின்றோம். அன்பு, அடக்கம், ஒழுக்கம், கற்பு, பணிவு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் வேண்டும். ஆனால் இன்று வரை சமுதாயத்தில் இவை அனைத்தும் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்று எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதனை மாற்றவே பெரியார் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை இந்நூலின் மூலம் எடுத்துரைக்கின்றார். இநநூலின் சில கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.

பெண் ஏன் அடிமையானாள்?

பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன.கற்பு, காதல், வள்ளுவரும் கற்பும் , கல்யாண விடுதலை,மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை,சொச்சுரிமை மற்றும் பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை” அழிய வேண்டும் போன்ற தலைப்புகளில் தன்னுடைய கருத்துகளை தெளிவாக எழுதியுள்ளார் ஆசிரியர் பெருமானாகிய பெரியார்.

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
யானை இறந்தாலும் ஆயிரம் பொன்”
என்ற பழமொழிக்கேற்ப பெரியார் இருந்தபோதும் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அவர் இறந்த பின்னும் அவருடைய நூல்கள் பெண் உரிமைக்காக குரல் கொடுக்கின்றன என்றே கூறலாம். பெரியார் வாழ்ந்த காலம் 1879 முதல் 1973 வரை.இந்த காலக்கட்டத்தில் அவர் பெற்ற அனுபவங்களையும்,அவமானங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார்.பெரியார் எழுதிய பத்து அத்தியாயங்களில் சில அத்தியாயங்களின் கருத்துகளை மட்டும் எடுத்துரைக்கிறேன்.

இந்து கைம்பெண்களின் எண்ணிக்கை

1921 ஆம் ஆண்டில் இந்து கைம்பெண்களின் எண்ணிக்கையை பார்க்கையில் அய்யோகோ! பெண்ணாய் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் நெஞ்சம் பதறும் என்பது நிதர்சனமான உண்மை.

 

வயது எண்ணிக்கை
1 முதல் 5 வரை 11,892

 

5 முதல் 10 வரை 85,937
10 முதல் 15 வரை 2,32,147
15 முதல் 20 வரை 3,96,172
20 முதல் 25 வரை 7,42,820
25 முதல் 30 வரை 11,63,720
மொத்தம் 26,31,788

 

26,31,788 என்பது தந்தை பெரியார் கூறும் கைம்பெண்களின் எண்ணிக்கை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கைம்பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதற்கு காரணம் பெரியார் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவே சிறார் திருமணம் தடைபட்டது. மறுமணம் தவறல்ல

மனிதப் பிறவி கொண்ட ஆணும் பெண்ணும் இயற்கைத் தத்துவத்திலும்,சமுதாய வாழ்க்கைத் தன்மையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்கள் இல்லை என்பது 21 நூற்றாண்டில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தே. ஆனால் பழங்காலத்தில் கணவனை இழந்த பெண் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற மூடநம்பிக்கை கையாளப்பட்டது.உடன்கட்டை ஏறுதல் என்று மூடநம்பிக்கையை இராஜாராம் மோகன் ராய் மற்றும் பெரியார் மாற்றி அமைத்தனர்.
கணவனை இழந்த பெண் சமுதாயத்தில் வாழ தகுதி அற்றவள் என்றும், சுப காரியங்களுக்கு செல்லக்கூடாதவர்கள் என்றும் இருந்ததை மாற்றி கணவனை இழந்த பெண் இந்த சமுதாயத்தில் வாழ முழு உரிமை உண்டு என்று குரல் கொடுத்தார் பெரியார்.

மறுமணத்தை மேடைகளில் பேசியதோடு மட்டும் அல்லாமல் தன் தங்கை மகள் 10 வயதில் விதவை ஆகி விட தன் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மறுமணம் செய்து வைத்தார்.கண்ணுக்கே தெரியாத பாதை ஒன்றில் ஏதோ இருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடு நடந்து இன்று ஒரு புதிய பாதையை பெண்களுக்கு உருவாக்கித் தந்துள்ளார் பெரியார். பெரியார் உருவாக்கிய புதிய பாதையில் இன்று பல பெண்கள் பயணிகளாக பயணிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும்

இத்தலைப்பில் பெரியார் கூறியுள்ள கருத்துகளை இன்றைய சூழலில் ஆணோ,பெண்ணோ ஏற்றுகொள்வதாக இல்லை. என்னாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற வழியைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்று பெரியார் கூறுவது இயற்கைக்கு விரோதமானது.

பெருகிக்கொண்டு வரும் மானிட வர்க்கம் குறைய ஆண்மை அழிய வேண்டும் என்று பெரியார் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய சூழலில் பெண்களின் அடிதைத்தன்மை பெண்களை மட்டும் பாதிப்பதில்லை,அது மற்றொரு வகையில் ஆண் சமுதாயத்தையும் பெரிதும் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தே பெண்களின் உரிமையிலும் அவர்களின் சுதந்திரத்திலும் ஆண்கள் விலகியே இருக்கிறார்கள். இதற்கு மிக சிறந்த உதாரணம் மார்ச் 8 பெண்கள் தினத்தை பெண்கள் கொண்டாடுவதற்கு ஆண்களும் துணையாக இருக்கின்றனர்.

ஆளுந்திறம்

வன்மை,கோபம்,ஆளுந்திறம் ஆண்களுக்கு என்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்கு என்றும் அன்றைய காலத்தில் வன்முறையாக திணிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்கள்.ஆனால் இன்றோ பெண்களுக்கும் வீரம்,கோபம், ஆளுந்திறம் உண்டு என்பதனை அனைவரும் கண்கூடாக கண்டறிந்த உண்மை.
பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் தருவதன் மூலம் மேற்சொன்ன குணங்கள் சாத்தியமாகின்றன. இந்த சமுதாய மாற்றத்தை மேல்மருவத்தூரில் அமைதியான முறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து,பெண்களை கருவறைக்குள் அனுமதித்து ஒரு ஆன்மிகப் புரட்சி செய்பவர்தான் அருள்திரு.பங்காரு அடிகளார்.

1ஆம் நூற்றாண்டில் ஆளுந்திறம் பெண்களுக்கு இருப்பதற்கான சான்று கிரண்பேடி, செல்வி ஜெயலலிதா மற்றும் நான் தினந்தோறும் பார்த்து பழகுகின்ற எங்கள் ஆதிபராசக்தி குழுமப்பள்ளிகளின் தாளாளர் திருமதி.ஸ்ரீதேவி அவர்கள். இன்னும் பல பெண்கள் ஆளுந்திறனுடன் சமுதாயத்தில் இருக்கின்றனர்.

நூலின் மூலம் உணரும் கருத்து
“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாண்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்”
என்ற பாரதிதாசனின் பொது உடைமைக் கொள்கையை பின்பற்றி,ஆண்களுக்கு ஈடாக பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளனர். இன்று இந்த அளவுக்கு பெண்கள் முன்னேறியதற்கு பெரியாரின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

“அன்பைக் கொன்றுவிட்டார் மனிதர் அரக்கர் ஆகிவிட்டார்.
துன்பம் செய்திடவே இன்று துணிந்து இறங்கி விட்டார்”
என்பது ஒரு கவிஞனின் கவிதை. துன்பம் கொடுப்பவரை எதிர்த்து போராட இன்று பெண்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தவர் பெரியார். முடிவுரை
ஆண்கள் சொல்லும் வேலைகளைச் செய்யும் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்த பெண்களை மாற்றி,அவர்களுக்கு அவர்களுடைய உரிமையையும்,சுதந்திரத்தையும் பெற்றுத் தருவதே பெரியாரின் பொதுவுடைமைக்கொள்கையில் ஒன்றாகும். பெண்ணடிமையை அழித்து ‘ஆணுக்கு பெண் இளைப்பில்லை” என்ற கவிஞனின் சொற்களை உண்மை ஆக்கியவர் பெரியார்.

வெறும் எழுத்தளவில் மட்டும் மறுமணத்தை பற்றிக் கூறாமல் தன்னுடைய உறவினர் பெண் ஒருவருக்கு மறுமணம் செய்து வைத்து, செயலிலும் சாதித்து உள்ளார்.பெண் அடிமைக்கானக் காரணங்களை இவர்கூறிய பின் பெண்கள் விழிப்புணர்வு பெற்று சரிநிகர் சமானமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பெண் அடிமைக்கான இவர் கூறிய காரணங்கள் அனைத்தையும் இவ்வளவ காலமாக பெண் தன் கடமை என்று கருதி வாழ்ந்து வந்தாள். தான் அடிமைப்படக் காரணம் முதலில் தன்னுடைய அறியாமைதான் என்பதை பெண்கள் உணர வேண்டும். உணர்ந்தால் மட்டுமே பெரியார் எதிர்பார்க்கும் சமுதாய மாற்றம் விரைவில் நிகழும் என்பதில் ஐயமில்லை.

எனது கருத்து:

பெண் என்ற முறையில் பெரியார் காட்டிய பாதையில் பயணிப்பதில் எனக்கு பெருமையே. ஆனால் அவருடைய கொள்கையில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. கடவுள் மறுப்புக் கொள்கை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன் என்றால் உண்மையான ஆன்மிகத்தில் பெண்கள் ஈடுபடும் போதுதான் அவர்களுக்கு தைரியமும், நம்பிக்கையும் பிறக்கின்றது என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.

நூல்: பெண் ஏன் அடிமையானாள்?
ஆசிரியர்: தந்தை பெரியார்
வகை: பெண்ணியம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹100.00

கோ.மாலினி
முதுகலைத் தமிழ் ஆசிரியை
ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *