Subscribe

Thamizhbooks ad

பெண்கழுத்து ஸர்ப்பம் கவிதைத் தொகுப்பு | மதிப்புரை நா.வே.அருள்

களச் செயல்பாட்டாளன் கவிஞனாய் இருக்க முடியுமா?

பாம்பு தோல் உரித்துக் கொள்வதால் பளபளப்பாகிறது.  பல்லி கூட தோல் உரிக்கிறது.  கழுகு சிறகுகளை உதிர்த்து நகங்களைப் பாறையில் தேய்த்துக் கொள்கிறது.  இளமையைத் தக்க வைக்கவோ, நோய் எதிர்ப்புச் சக்திக்கோ இப்படியான ஏற்பாடு.  கவிதை எழுதுதலும் இப்படியான ஒரு கலைதான். காலத்துக்கு ஏற்றவாறு அது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

கவிதையை வாழ்தல் என்பதிலிருந்து கீழிறங்கிக் கவிதையை எழுதுதல் மிகவும் பிரபலமாக இருக்கிறது.  கவிதையாய் வாழ்ந்தவன் என்றால் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பாரதிதான்.  பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை என்ற மூன்று கவிகளைத் தனது ஆதர்சமாகக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். மக்களுக்கும் கலைக்குமான இடைவெளியைத் தகர்ப்பத்தில் அதன் பங்களிப்பு குறிப்படத் தகுந்தது.  இது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சிதான். தமுஎச வில் தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட ஒரு கவிஞன்தான் செய்யாறு சோலை.இளம்பரிதி.  செய்யாறு, வேலூர், செஞ்சி, திருவண்ணாமலை என்று ஊர் ஊராக வட்டமடித்த கவியரங்கம்,  பட்டிமன்றங்களின் காலம் அது.

இணையம் போன்ற வசதிகள் இல்லாத காலம்.  ஒவ்வொரு ஊராக நேரடியாகப் பயணம். கால நேரம் கிடையாது.  இரவில் ஒழுங்கான உறக்கத்திற்கு உத்தரவாதம் கிடையாது. நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஏதோ ஒரு வகையில் புரட்சி செய்துவிட்டதாகவே புளகித்த கற்பனையின் காலம். அவர் கவியரங்கங்களில் கதாநாயகனாக மிளிர்ந்து வந்ததற்கு அவரது மாணவனாகிய நான் ரத்த சாட்சி.  இளந்தேவன் முதல் பெரியார் தாசன் வரை, பரமசிவன் முதல் தணிகைச் செல்வன் வரை, வெண்மணி முதல் கமலாலயன் வரை எல்லோரும் எங்கள் விருந்தினர்கள். அரக்கோணம் என்றால் யுவராசன், கொடுங்காலூர் என்றால் அரிதாசு, இப்படி அநேக ஊர்களில் அமைப்பாளர்களும் அறிமுகம். சோலை பழநி என்றறியப்பட்டிருந்த கவிஞர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிர்வாகி வேறு. கேட்க வேண்டுமா?

களச் செயல்பாட்டாளனாக இருந்துகொண்டே கவிச் செயல்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வது என்பது இரட்டைக்குழல் துப்பாக்கிதான்.  இருதலைக் கொள்ளி எறும்பென எண்ணி ஏணியில் ஏறாமல் விலகிப் போன இலக்கியவாதிகளும் உண்டு. இரண்டு ஏணிகளில் ஏறுகிறபோது ஏறுவதை விட இறங்குவதற்குத்தான் சாத்தியமும் உண்டு.  அதற்கொரு பக்குவம் கைவரவேண்டும்.  அப்படியான ஒரு இலக்கிய இயக்கவாதிதான் சோலை.இளம்பரிதி.  அவரது ‘அணிவகுப்பு’, ‘ஒரு நிலம் விவாகரத்து கேட்கிறது’ நூல்களைத் தொடர்ந்து வெளிவந்த கவிதைத் தொகுப்புதான் “பெண் கழுத்து ஸர்ப்பம்”.

புத்தகம் நிறைய கைத்தட்டுகளால் ஆன கவியரங்க எழுத்துகள்.  சிலாகிக்கப்பட்ட எழுத்துச் சிற்பங்கள். பாராட்டப்பட்ட வார்த்தைப் பொன்னாடைகள்.  அதே நேரத்தில் வாசகரின் உடனடிக் கைத்தட்டுகளை எதிர்பார்க்காத எழுத்தில் பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய ஆனால் எளிய கவிதைகளையும் கொண்டிருப்பதுதான் இந்தத் தொகுப்பு.

இவரது கவிதைகளில் ஓர் உள்ளார்ந்த இசை ஓடிக்கொண்டே இருக்கிறது.  அது சில நேரம் அருவியைப் போல சலசலத்து ஓடுகிறது.  சில நேரம் நதியைப் போல அமைதியாக ஓடுகிறது. சில நேரம் வெள்ளத்தைப் போல மூழ்கடித்துவிடுகிறது. சிலநேரம் கடலைப்போல உள்ளுக்குள்ளேயே குமுறுகிறது.

காதல் கடிதங்களில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்த,  காதலியிடம் குழையும், வார்த்தைகள்.  காதலை இதய உலைக்களத்தில் வைத்து கண்களின் கனல்களால் சூடேற்றி நெக நெகவென தணல்கிறபோது சம்மட்டியால் அடித்து உருவாவதுதான் காதல் ஆயுதங்கள். ஒரு வகையில் கவிஞர்கள் வார்த்தை ஆயுதங்களைச் செய்து தருகிற கருமார்கள்.

//நீ

கண்ணால் டைப் செய்த

கடித வாசகங்களை

என்னால் மட்டுமே

புரிந்துகொள்ள முடியும்.

என்றாலும்

நீ பேசு//

ஏன் என்பதற்குக் கவிஞரின் பதில்

//இல்லை என்றால்

மொழியே மூளியாகிவிடும்.//

அடுத்து சொல்கிறார்  //உன் மௌனத்திற்கு முள் உள்ளதென்பதை

என்னைக் குத்தித் தானா நீ நிரூபணம் செய்ய வேண்டும்?//

அடுத்து வருபவை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வரிகள்.

வெள்ளை வானிலே

கறுப்பு நிலாக்களா?

ஓ…

உன் விழிகள்.

வித்தியாசமானப் படிமப் பிரயோகம்தான் கவிதையின் உயிர்ப்பு.  இவருக்குப் பின்னால் வந்த கவிஞர் முத்துக்குமார் கண்களைக் “கறுப்பு வெள்ளைப் பூக்கள்” என்று திரைப்பாடலில் எழுதியிருப்பதைக் கேட்டிருக்கிறோம்.

Image

நூலாசிரியர் சோலை இளம்பரிதி

பல கவிஞர்களுக்குக் காதலில் குழையும் வார்த்தைகள் சமூகத்தைப் பற்றிச் சொல்கையில் சவ சவ என்று ஈரம் பாய்ந்து சொத சொதத்துவிடும்.  ஆனால் இவரது கவிதை புயலை எதிர்த்துப் போராடக் கிளம்பிய வண்ணத்துப் பூச்சியாக சூறாவளியைக் கொண்டை போட்டுக் கொள்கிறது.  பூக்கள் மகரந்தங்களால் தங்களுக்கான வெடிமருந்தைத் தயாரித்துக் கொள்கின்றன.  மயிலிறகுகள் உலோக ஏவுகணைகளாக உருமாறிவிடுகின்றன.

இவரது ‘பாரத் மாதா கி ஜே’ வித்தியாசமானது.

//பாரதத் தாயே நீ வாழ்க

இந்தியாவின் சுகதுக்கங்களை

நிர்ணயிப்பது நீ என்றால்

சுகங்கள் சிலருக்கும்

துக்கங்கள் பலருக்கும்

பிரிக்கப்பட்டதேன்?

அது பாகிஸ்தான் பிரிவினையைப் போல

தடுக்க முடியாததா?

என்றும்

//நான்

உன்னைப் பாடிக்கொண்டேயிருப்பேன்

உனக்காக அல்ல

உழைக்கும் கரங்களுக்காய்.

இன்னும் உன்

சந்நிதானத்தைக்

கவி சாம்ராட்டுகள் புகழ்ந்து கொண்டிருந்தாலும்

அவை

தலைப்பில்லாக் கவிதைகளே//

அரசியல் கூடாது என்கிற அரசியல் இவரிடம் இல்லை.  அரசியல் பேசுகையில் தீர்க்கம், தீர்மானம். இவரது அரசியல் இடதுசாரி அரசியல்.  ஒளிவும் இல்லை மறைவும் இல்லை.

இடதுசாரியின் மிகப் பெரிய பலம் விமர்சனம் மற்றும் சுய விமர்சனம்.  பாக்டீரியாவா கிருமியா என்று பகுத்தறிவது.  அந்தக் கலை இந்தக் ‘காம்ரேட்’ டுக்கும் கைவந்திருக்கிறது. சில உண்மைகள் சுடுகின்றன.  உணவு கூட சுடுகிறது என்று தூக்கி எறிந்துவிட முடியுமா? ஆறவைத்தாவது புசித்துத்தான் ஆக வேண்டும்.  ஏனெனில் அது சத்துணவு.

//பச்சைக் கிளிகள் கூட

சிவப்பு மூக்கு வைத்துக் கொண்டன

இவைகள்

சொன்னதைச் சொல்லும்

கிளித் தோழர்கள்//

இவரது அரசியல் கூர்மைக்கு ஒரு சின்ன சாம்பிள்.

//சுதேசியம் என்பது

இங்கிலாந்து முதலாளிக்கும்

இந்திய முதலாளிக்கும்

சண்டை வந்த போதல்லவா

சொல்லிக் கொடுக்கப்பட்டது?

இன்று சுதேசியம் என்பது உலகமயத்துடன் எப்படிக் கள்ள உறவு வைத்திருக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம்.

இவரது கவிதைகளில் பெண்களுக்கான பிரத்தியேக மென்மை.  //அவள் தோகைக்கு மட்டும் ஊரெல்லாம் கண்களா?//  இவரது மீசைகள் பெண்களின் கன்னங்களைக் குத்துவதில்லை.  அவர்களுக்காகத் தன் கவிதையால் துணி நெய்து கொடுக்கிறார்.

‘இலங்கேஸ்வரிகள்’ என்கிற கவிதை

//இரவில் மீசை வைத்த கணவர்கள்

காலையானதும் கழற்றி விடுகிறார்கள்

அதையெடுத்து

சில

மாமியார்கள் மாட்டிக் கொள்கிறார்கள்//

வாழ்க்கையைப் பேசும்போது ஒரு தத்துவ தரிசனம்.   //ஓ கவிஞர்களே. உங்கள் கண்களுக்கு எங்கள் கண்ணீர் அவ்வளவு அழகாகவா தெரிகிறது?  எங்கள் கண்ணீர்…. பூக்கள் அல்ல, எவனும் பறிப்பதற்கு?// என்கிற பார்வை மிக முக்கியமானது. //அதனால்தான் பல்லக்கு ஆவதற்காக இந்த மூங்கில் வளையவில்லை.  புல்லாங்குழல் ஆகிவிடுகிறது.//

அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன் “புல்லின் இதழ்கள்” என்கிற தொகுப்பில்

//புல் ஒரு குழந்தையோ

….ஒரே சீரான குறியீட்டுச் சொல்லோ?

அதன் பொருள்தான், ‘‘அகன்ற பகுதியிலும்

குறுகிய பகுதியிலும்

ஒரே மாதிரி தளிர்திது வளருவேன் என்றும்

கருப்பர்களிடையும் வெள்ளையரிடையும்

ஒரே சீராக வளருவேன் என்றும்,

பிரெஞ்சுக்காரன்இ, மலைசாதியான், அமெரிக்கன்,

நீக்ரோ அனைவருக்கும்

நான் ஒரே மாதிரி தருகிறேன்

ஒரே மாதிரி பெறுகிறேன்” என்பதும் தானோ?”//

என்று பிரகடனம் செய்கிறார்.

சோலை இளம்பரிதியும் புல்லின் மீது தனது கவிதைப் பனித்துளியை வைத்து ஒரு தத்துவ தரிசனத்தைத் தந்து விடுகிறார்.

//எங்களூர் சிவப்பு மண்ணிலே

முளைத்த சின்னஞ்சிறிய

புல் நான்…..

என் வித்துக்களை

எவருமே அழிக்க முடியாது

ஏனென்றால்

புல் விதைகள் யாரும்

போட்டு முளைப்பதில்லை

அது

தானாய் முளைத்திருக்கும்

ஒரு நாள்

தரையையே மொய்த்திருக்கும்//

சலுகைக்கல் வீசியதும் சந்தோஷப்படுகிற ஒட்டகங்கள், கண்களால் எரியுண்ட காதலன் தீயணைப்பு மேனிக்குத் தெரிவிக்கச் சொல்கிற திருட்டுத்தனம், ஆலயப் பிரவேசம் ஆகாத கோயில்களாய்ச் சேரிகள், தீக்குச்சிகளை அக்கினியின் பிதாக்கள் என்கிற அறச்சீற்றம், வாழுகின்ற நரகமே பட்டா ஆகாத போது சொர்க்கத்துக்கு இங்கென்ன சொற்பொழிவு என்கிற சுரணை… இப்படிப் பல்வேறு விதமான அனுபவங்களை மரபு, புதுக்கவிதை என்கிற இருவிதமாகவும் பகிர்ந்து கொள்கிற கவிதைகள்.  கவிதைகளின் வார்த்தைகளில் ஒருவித இசைலயம்.  உள்ளடக்கத்தில் மானுடத் தேடல்.  பொய்மைகள் கண்டு பொங்குதல்.  இவையெல்லாம் இளம்பரியின் அடையாளங்கள்.

பெண் கழுத்து ஸர்ப்பம் என்கிற பதினாறு வரிக் கவிதை முற்றும் முழுதுமாக நவீன உலகில் பெண்ணின் இருப்பைப் பறை சாற்றிவிடுகிறது.

இறுதியாக, இப்புத்தகத்தின் முன்னுரையாக இந்திரனின் சான்றிதழ்.  “இவர் தன் கவிதைகளில் தனக்குத்தானே உண்மையாக இருக்க முயல்கிறார்.  இந்த உண்மைதான் இவர் கவிதைகளின் முக்கிய உத்திமுறை.  மரபு, மரபுடைத்தல் எல்லாம் பிற மேல் தோல் அம்சங்கள்.  இன்னொரு முக்கியப் பண்பாக நான் காண்பது கவிதைகளில் காணப்படும் நல்ல மொழி ஆளுமை.  இலக்கிய வழக்காயினும், பேச்சு வழக்காயினும் இவரது மொழி மிகவும் திண்மையும் தெளிவும் கொண்டு பேசுகின்றன.  “பெண் கழுத்து ஸர்ப்பம்” தனது அடுத்த பரிமாணத்துக்காக இத்தொகுப்பில் தன் தோலுரித்துக் கொள்கிறது.

இதைவிடச் சொல்ல எனக்கென்ன இருக்கிறது?

–  நா.வே.அருள்

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

2 COMMENTS

  1. கவிதைகளையும் கவிஞனையும் ஒருசேர சொல்லி இருக்கிறீர்கள். சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here