புத்தக அறிமுகம்: ஈ.வே.ரா பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” – மா.சுகினா பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

இன்று எல்லா வகையிலும் பெண் முன்னேறி விட்டதாகவும் சுதந்திரம் அடைந்து விட்டதாகவும் நாம் கூறிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் ஈவே.ராமசாமி பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூலினை வாசிக்கும் பொழுது இன்றும் பெண்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார் பல்வேறு இடங்களில் அவர் வெளிப்படுத்திய பெண் சுதந்திரம் குறித்த  கருத்துக்களின் தொகுப்பாக 1933ஆம் ஆண்டு இன் நூலின் முதல்பதிப்பு வெளியாகியுள்ளது. இன்றய நிலையைவிட ஆணாதிக்கம் அதிகம் நிறைந்த அக்காலத்தில் பெண் சுதந்திரம்  குறித்தும், பெண் ஏன் அடிமையானாள் என்பது குறித்தும் அவர் எழுதிய  இத்தொகுப்பு மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய ஓர் விஷயமாக இருக்கிறது. இந்நூல் வெளியாகி 87 ஆண்டுகளை கடந்த பிறகும் இந்நூலின் கருத்துக்கள்  இன்றைய தேவையாகவும் திகழ்கின்றன.
இந்நூலின் கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை (விவாகரத்து), மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை (கருத்தடை), பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும் என்று  பத்து அத்தியாயங்களாக அமைந்துள்ளது.
முதல்  அத்தியாயத்தில் கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதனை யார்? எப்போது நிறுவினர்? என்பதனை கேள்வியாக்குகிறார். அதனை விளக்கும் விதமாக அவரே இலக்கியங்களில் இருந்தும் மொழிவாரியாக இருக்கும் அர்த்தங்களை கொண்டும் கற்பு என்பதனை பெண்ணுக்கு மட்டுமே உரிய விஷயமாக எந்த மொழியிலும்  வழங்கப்படவில்லை என்பதனை விளக்கி கூறுகிறார். அதோடு திருக்குறளில் வரும் இரண்டு குறள்களை மேற்கோள்காட்டி  திருக்குறளை ஒரு பெண் எழுதியிருந்தால் இக்கருத்துக்கள் வெளிப்பட்டு இருக்காது என்பதனையும் குறிப்பிடுகிறார் பெரியார்.
பெரியாரின் திருக்குறள் சார்ந்த கருத்துக்களுக்கு ஓரு தோழர் எழுதிய விளக்கமாக வள்ளுவரும் கற்பு எனும் இரண்டாம் அத்தியாயம் அமைகிறது.
பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF ...
மூன்றாவது அத்தியாயமான காதல் –ல், காதல் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? என்பதை விளக்குகிறார். ஒரு பொருளின் மீதுஎப்படி ஈர்ப்பு ஏற்படுகிறதோ அதுபோல தான் ஓர் மனிதரின் நடவடிக்கையின் மீதோ அல்லது அவரின் செயல்பாடுகளின் மீதும் ஏற்படும் ஈர்ப்பு தான் காதல் என்று விளக்குகிறார் பெரியார். காதல் என்பது சூழலுக்கு ஏற்றார்போல் மாறக்கூடிய தன்மை உடையது என்பதனையும் விளக்குகிறார். ஆனால் இத்தகைய மாறக்கூடிய காதலை புனிதப்படுத்தி அதன் மூலம் பெண் அடிமை படுத்தப்படுவதையும் தெளிவுபடுத்துகிறார்.
கல்யாண விடுதலை (விவாகரத்து) அத்தியாயத்தில் திருமணங்கள் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைக்கின்றன என்பதை கூறியுள்ளார். திருமண சடங்குகள் அனைத்தும் பெண் சார்ந்தவையாகவே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை என்றால் அவளைவிட்டு நான் விலகுவது போல் ஒரு ஆணைப் பிடிக்கவில்லை என்றால் பெண்ணும் விலகிக்கொள்ள உரிமை வேண்டும் என்பதனை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் வலியுறுத்தி  பேசியுள்ளார். குழந்தை இன்மை, நோயுறுதல்  மனைவியின் மரணம் ஆகியவை ஒரு ஆண் மறுமணம் செய்து கொள்வதற்கான காரணங்களாக இருக்கும்பட்சத்தில் அதே காரணங்களுக்காக பெண்ணும் மறுமணம் செய்ய உரிமை உடையவள் என்பதை மறுமணம் தவறல்ல என்ற அத்தியாயத்தில்  விளக்குகிறார்.
கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும் என்பதை விளக்கும் அதே புரிதலோடு இந்த அத்தியாயத்தில் விபச்சாரம் என்பது ஆண் பெண்  இருவருக்கும் தவறானது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் 1921 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 26 லட்சத்து 31 ஆயிரம்  பெண்கள் விதவைகளாக இருப்பதை குறிப்பிட்டு வயது வாரியாக விதவைகளின் நிலமையை ஏழாவது அத்தியாயத்தில் தெளிவுபடுத்துகிறார். குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட 18000 பெண்குழந்தைகள் விதவைகள் எனவும் 15 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பெண் குழந்தைகள் விதவைகளாக இருப்பதையும் பார்க்கும்போது அன்றைய காலகட்டத்தில் விதவைகளின் நிலைமையும், குழந்தை திருமணங்களின் கொடுமையும் எடுத்துரைக்கப்படுகிறது.
பெண் ஏன் அடிமையானாள்? (பாரதி ...
பெண் சுதந்திரம் அடைவதற்கு முக்கியமான ஓர் அம்சமாக பொருளாதார சுதந்திரத்தை பெரியார் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாத சூழலில் பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை சொத்துரிமை மட்டுமே வழங்கும் என்பதை வலியுறுத்துகிறார். அதே சமயத்தில் பெண்களுக்கு கல்வியையும் அதன் மூலம் வேலையையும் பெற்றோர் பெற்றுத் தந்தால் பெண்கள் சொத்து சம்பாதிக்க சக்தி பெறுவர் என்றும் தெளிவுபடுத்துகிறார்.
கர்ப்பத்தடை (கருத்தடை) எனும் அத்தியாயத்தில் அன்றைய காலகட்டத்தில் பரவலாக வலியுறுத்தப்பட்ட கர்ப்பத்தடை குறித்தும் கர்ப்பம் தரிப்பதனால் பெண் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் உடல் உபாதைகள் குறித்தும் விளக்கி கூறியுள்ளார். தேவையான நேரத்தில் கர்ப்பத்தடை என்பது தவறு இல்லை என்பதனை வலியுறுத்தி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை இந்த அத்தியாயத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் என்ற கடைசி அத்தியாயத்தில் ஆண்மையும் பெண் அடிமைத்தனமும் கடவுளால் வழங்கப்பட்டது என்று ஆண்களால் கூறப்பட்டு, பெண்களை அடிமைப்படுத்துதல் வழிவழியாக இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.  திராவிடர் விடுதலைக் பார்ப்பனரும், எலியின் விடுதலைக்கு பூனையும், இந்தியரின்  செல்வம் பெருக ஆங்கிலேயரும் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு பெண்களுக்கான விடுதலை என்பது ஆண்களால் கிடைக்காது என்பதனை விளக்குகிறார் பெரியார். ஆகையால் ஆண்மையும் அதனை வலியுறுத்தும் தெய்வத்தன்மையும் ஒழிந்தால்தான் பெண் விடுதலை கிட்டும் என்பதனை இங்கு தெளிவுபடுத்துகிறார்.
பெண் அடிமையானதற்கான காரணங்களாக பெரியார் விளக்கும் காதல், கற்பு, விபச்சாரம், ஆண்மை ஆகியவை இன்றும் பல்வேறு பெயர்களில் பல்வேறு விதங்களில் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், பெண் விடுதலை குறித்து சிந்திக்கும், பேசும், செயல்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்களின் வரிசையில் முதல் இடத்தில் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் இடம் கொள்க
பெண் ஏன் அடிமையானாள்? (பாரதி ...
நூல் – பெண் ஏன் அடிமையானாள்?
ஆசிரியர் – – ஈ.வே.ரா பெரியார்.
பக்கங்கள் –79
விலை -₹50
பதிப்பகம் – பாரதி புத்தகலயம்
மா. சுகினா பாரதி
இந்திய மாணவர் சங்கம்