1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்?” நூல், தற்போது மார்ச் 2018) தோழர் பசு கவுதமனின் விரிவுப்படுத்தப்பட்ட’ என்ற குறிப்புடன், பாரதி புத்தகாலய வெளியீடாக (12வது அச்சு வெளிவந்துள்ளது. 11-வது அச்சு இயல்பான பழைய நூலின் தொடர் பதிப்பாகவே பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருந்தனர்.

பிரசுரிப்போரின் முன்னுரையில், ‘இந்நூல் சுயமரியாதை இயக்க ஸ்தாபகர் பெரியார் ஈ. வே. ராமசாமி அவர்களால் பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவைகளை திரட்டி வெளியிடுவதாகும்’ என்கிற குறிப்பு காணப்படுகிறது. 22.08.1926 தொடங்கி 18.01.1931 வரையிலான காலத்தில் குடி அரசு இதழ்களில் பிரசுரிப்போர் குறிப்புக்கிணங்க பல்வேறு சந்தர்ப்பங்களில் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நூலின் முதல் பதிப்பு 1933ல் வெளிவந்துள்ளது. இரண்டாம் பதிப்பு 1942ல் வெளிவரும்போது முகவுரை எழுதுகிறார் பெரியார். ‘… இதில் கண்ட விஷயங்கள் இதுவரை மக்களிடையே இருந்து வருகின்ற உணர்ச்சிகளுக்கும், ஆதாரங்களுக்கும், மனித சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆச்சாரம், மதக்கொள்கை, சாஸ்திர விதி என்பனவாகியவற்றுக்கும் பெரிதும் முரணாகவும், புரட்சித் தன்மை போன்ற தலைகீழ் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டதாகவும், சாதாரண மக்களுக்கு காணப்படுமாதலால்… தக்க சமாதானம் சொல்லி மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது. எனவே, அதற்காக முகவுரை என்னும் பேரால் சில வரிகள் எழுதுகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ?” என்கிற தலைப்பில் பெரியாரின் பல்வேறு கருத்துக்களை 5 தொகுதிகளாகத் தொகுத்து வழங்கிய தோழர் பசு. கவுதமன் தொடர்ந்த முயற்சியாக விரிவுபடுத்தப்பட்ட என்கிற குறிப்புடனான “பெண் ஏன் அடிமையானாள்? நூலை வழங்குகிறார்.

பெரியாரது கருத்துக்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு மனம்போன போக்கில் விமர்சனங்களையும், வியாக்கியானங்களையும் அள்ளிவிடுகிற ஆய்வாளர்கள் ஒரு பக்கம், ‘இவரே சொல்லுகிறாரே, இல்லாமலா சொல்வார் ?’ என்று நம்பிக்கொண்டு அழுத்தம் திருத்தமாக பேசவும், எழுதவும் முற்படுகிறவர்கள் இன்னொரு பக்கம். அறிவியல் வளர்ச்சியும் பொது ஊடகங்களின் பெருக்கமும் இத்தகைய வரலாற்றுச் சிதைவுகளை மிக விரைவாகக் கொண்டு சேர்ப்பதால் பெரியார் பற்றிய உண்மையான தோற்றத்தை உரிய சான்றுகளுடன் நிறுவிட வேண்டியது அவசர, அவசியமாகிறது.

நம்மாலானவரை அரிதின் முயன்று வரலாற்றுப் பிழைகளோ, தகவல் பிழைகளோ இல்லாமல், வருங்காலத் தலைமுறைக்கு பெரியாரை வழங்கிட வேண்டும் என்று எண்ணி செயல்படுவோர் வரிசையில் தோழர் பசு கவுதமனுக்கு ஒரு இடம் உண்டு. அந்த நோக்கில்தான், “ஈ.வெ.ராமசாமி என்கிற நான்…” என்று இரண்டு தொகுதிகளை வழங்கினார். பெரியார் என்ன எழுதினாரோ, வெளியிட்டாரோ அவற்றை அப்படியே பொருள் வாரியாக வகைபிரித்து தொகுத்து வழங்கி விடுகிற முயற்சி. அந்த வகையில் தான் “பெண் ஏன் அடிமையானாள்?” நூலின் பதிப்பும் விரிவுப்படுத்தப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது.
நூல் தொகுக்கப்பட்ட வரலாறு மிக அவசியமானதாகும்.

பிரசுரிப்போர் கூற்றுப்படியே இந்தத் தலைப்புக்காக என்று எழுதப்பட்டவையல்ல, இந்தத் தலைப்பில் தொகுக்கப்பட்டவை. கட்டுரைகள், குடி அரசு இதழ்களில் வெளிவந்த நாள் விவரமும், கட்டுரைக்கு காரணமாக அமைந்த சில பின்னணிகளையும் சான்றாதாரங்களுடன் தொகுத்திருக்கிறார் பசு கவுதமன். திருச்சி சி.பி. இராஜகோபால் நாயுடு ‘விதவா விவாக விளக்கம்’ என்றொரு நூலை எழுதி பெரியாரிடம் முன்னுரை வேண்டி அனுப்புகிறார். போதிய கால அவகாசமின்மையால் முன்னுரை எழுத முடியாமல் போக 22.8.1926 குடி அரசு இதழில் அந்த நூலுக்கான மதிப்புரையாக பெரியார் எழுதிய ‘விதவைகளின் நிலைமை என்ற கட்டுரைதான் இந்த அருமுயற்சிக்கு வித்தாகிறது. (தொகுப்பில் 7வது அத்தியாயம்)

1928-ல் ‘கற்பு’ என்ற கட்டுரையை ‘சித்திர புத்திரன் என்ற பெயரில் எழுதி வெளியிடுகிறார். “கோவில்பட்டி ஸ்ரீமான் P.R. பரமசிவ முதலியார் எழுதுவது” என்று கற்பும் – சித்திர புத்திரனும் ஓர் மறுப்பு என்று எழுதப்பட்ட மறுப்பு கட்டுரையும் 22.01.1928 குடி அரசு இதழில் வெளியிடப்படுகிறது. இத்தகைய எதிர்வினைகளை பெரிதும் மதிப்பவரும், இவற்றால் ஊக்கம் பெறும் இயல்பினருமான பெரியார் இம்மறுப்புக்கு சமாதானம் அடுத்த வெளியீட்டில் சித்திர புத்திரன் வெளியிடுவான்’ என்று கட்டியம் கூறிவிட்டு, ‘வள்ளுவரும் கற்பும் என்ற சமாதானத்தை எழுதுகிறார். (தொகுப்பில் இரண்டாம் அத்தியாயம்)

அவ்வாறே, 5.10.1930 மணவிழா நிகழ்வொன்றில் பெரியார் ஆற்றிய உரை, கல்யாண விடுதலை என்ற கட்டுரைக்கு பின்னணியாக அமைந்து மறுமணம் தவறல்ல என்றும் மலர்ந்துள்ளது.
நூல் வெளியிடப்பட்ட காலம் (1933) குறித்தும், வெளியீட்டு நிறுவனம் குறித்துமான பதிவுகளுக்கு குடி அரசு இதழ்களில் வெளிவந்த விளம்பரங்களையும் செய்திகளையும் சான்றாதாரங்களாக முன்வைத்து உறுதி செய்கிறார். பெரியாரின் பதிப்பு முயற்சிகள் குறித்த வரலாறு எளிதானதன்று. மிகுந்த தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட இமாலய சாதனை. ஒரு நூறாண்டு கூட நிறைவுறாத கால இடைவெளியில் வெளியாகும் பிழையான தகவல்கள் தான் கவலை தருகின்றன.

12.02.1933-ல் எழுதப்பட்ட சந்தேக நிவர்த்தி யில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் (என்பதாக ஒரு கம்பெனியை நடத்த ஏற்பாடு செய்து…. என்று காணப்படுகிறது. இந்த நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றது. வாசகர் பரப்பையும், பதிப்பிக்க உத்தேசித்துள்ள பதிப்பித்த நூல்களையும், பதிப்பக குறிக்கோளையும் கருத்தில் கொண்டு சிந்தித்தால் மட்டுமே பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக லிமிட்டெட் முயற்சியின் முழுப்பரிமாணமும் விளங்கும். பெரியார் தவிர வேறுயாருக்கும் இத்தகைய துணிவு வரவே வராது என்று அறுதியிட்டு கூறமுடியும். தோழர் பசு. கவுதமனும் பதிப்பகம் குறித்த இன்றியமையாத தகவல்களை உரிய சான்றாதாரங்களுடன் பதிவு செய்துள்ளார். அவ்வாறு நமக்குக் கிடைக்கும் செய்திகள் நாம் பயணிக்க வேண்டிய பாதையை சுட்டிக் காட்டுவனவாகவே கருதுகிறோம்.

மனித சுபாவத்தையும், இயற்கைத்தன்மையையும் கருத்தில்கொள்ளாமல் செயற்கையான நடைமுறைகளை மேற்கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் முடக்கிப் போட்டுள்ள சூழலுக்கு எதிரான பெரியாரின் போர்முறைக்கு சிறிய எடுத்துக்காட்டுதான் காதல் கட்டுரையிலிருந்து சுட்டப்பட்ட பகுதி. மனிதகுல வளர்ச்சியில் மேம்பாட்டில், பெரியார் கொண்டிருந்த மட்டற்ற பற்றையும், அதன்வழி வெளிப்படுத்திய மதிப்பு மிக்க கருத்துக்களையும், அவற்றை நடைமுறைப்படுத்த உருவாக்கிய வழிமுறைகளையும், ஒருசேர விளங்கிக்கொள்ள வழிவகுக்கும் சிறு அரிய நூல் தொகுப்பு ‘பெண் ஏன் அடிமையானாள்?” அதனை மேலும் பயன்மிக்கதாக்கி வழங்கியுள்ள தோழர் பசு. கவுதமனின் அருமுயற்சி பாராட்டத்தக்கது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://thamizhbooks.com/pen-een-adimaiyaanal-2851.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *