அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

 

 

 

பெண் விடுதலைக்கு அடித்தளம்

புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் விலங்கினங்களை விட மோசமான அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஸார் மன்னர் பரம்பரை ஆண்களும், பிரபுத்துவ வர்க்க ஆண்களும், தங்கள் குடும்பப் பெண்களையும் சரி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களையும் சரி, வக்கிரமான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துவதைப் பொழுதுபோக்காகவே வைத்திருந்தார்கள்.

ரஷ்யாவின் விவசாயக் குடிகளைப் பொறுத்தவரை மகள் தந்தையின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து அவளுடைய கணவனின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட வேண்டியவள். சுதந்திரமான வாழ்க்கை என்பது மகள்களுக்கு இல்லவே இல்லை.

புரட்சிக்கு முன்பு ஸார் மன்னரால் இயற்றப்பட்டு அமலில் இருந்த கடைசி குடும்பச் சட்டம் குறிப்பிட்டது: “குடும்பத்தின் தலைவனான கணவனை மதிக்க வேண்டிய கடமை மனைவியாகிய பெண்ணுக்கு இருக்கிறது. மனைவியானவள் கணவனிடம் அன்பு, மரியாதை செலுத்தி, எல்லையில்லா அளவில் கணவனுக்குக் கீழ்ப்படிந்து, எல்லாவற்றிலும் கணவனுடன் ஒத்துப்போய், இணக்கத்துடன் வாழ வேண்டும்” என்றது. கணவனும், மனைவியும் இணைந்தே வாழ வேண்டும் என்பதால், எவ்வளவு மோசமான கணவனாக இருந்தாலும், பெண்ணுக்கு விவாகரத்து என்ற விடுதலையே கிடையாது.

ஆச்சரியத்துக்குரிய அம்சமாக ரஷ்ய சமூகத்தில் சொத்துடைய ஆண்கள், பெண்கள் திருமண பந்தத்தில் இணைந்தாலும் அவரவர் சொத்து அவரவருக்கே உரியது. இந்த ஏற்பாட்டால் சொத்துடைய வர்க்கத்துப் பெண்களுக்குப் புரட்சியில் ஆர்வமில்லை. பெரும்பாலான ‘மேல்’தட்டுப் பெண்களிடம் புரட்சிக்கு எதிரான மனநிலையையே காணப்பட்டது.

சொத்தில்லாத வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கோ ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக இருந்தாக வேண்டிய சூழல். அதனால், ‘நாங்களும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும்’ என்ற சுதந்திர தாகம், ரஷ்யாவின் விவசாய வர்க்கப் பெண்கள், பாட்டாளி வர்க்கப் பெண்களுக்கு இருந்தது. சோசலிசப் புரட்சிக்குப் பிறகு தாங்கள் மனிதர்களாக வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு மாற்றத்திற்காகப் பாடுபட்டார்கள்.

மனித வாழ்க்கையை நோக்கி

போல்ஷிவிக்குகள் தோழர் லெனின் தலைமையில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, பெண்களின் மேம்பாட்டிற்கான சோஷலிஸ்ட் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, புரட்சிகர சோவியத் கட்டுமானத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள்.

புரட்சி முடிந்த கையோடு டிசம்பர் 1917-ல் கொண்டுவரப்பட்ட திருமணம், விவாகரத்து, குழந்தைகள் தொடர்பான இரண்டு சட்டங்கள், திருமணத்தை மதத்தின் பிடியில் இருந்து விலக்கி வைத்தது. திருமணம் தனிநபர் விவகாரம் என்பதைத் தெளிவுபடுத்தியது. விவாகரத்தை எளிதாக்கியது.

1918 ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு, திருமண பதிவு சட்டம் மேலும் மேம்படுத்தப்பட்ட சட்டமாக குடும்ப அமைப்பை ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
இதன்படி,

  1. மனைவி கணவனோடுதான் வாழ வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது.
  2. திருமணத்திற்குப் பிறகு, கணவனின் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் மனைவிக்குக் கிடையாது.
  3. கணவன், மனைவி, இருவரும் திருமணத்திற்கு முந்தைய, பிறகான தங்களுடைய சொத்துகளைத் தனித்தனியாக நிர்வகித்துக் கொள்ளலாம்.
  4. குழந்தைகள் வளர்ப்பில் கணவன், மனைவி இருவரும் பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா வகையிலும் குழந்தைகளைப் பொறுப்புடன் கவனித்துப் பராமரிக்கும் கடமை உடையவர்கள்.
  5. திருமண உறவுக்குள், வெளியில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பராமரிப்பு உரிமைகள், வாரிசு உரிமைகள் உண்டு.

“யாருக்கும் காயம் ஏற்படுத்தாமல், யாருடைய நலன்களையும் ஆக்கிரமிக்காமல் இருக்கும் உடலுறவு விஷயங்களில், அரசோ, சமுதாயமோ தலையிடக்கூடாது”- என்பதை சோவியத் அரசு கொள்கையாகவே அறிவித்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு இந்தளவுக்கு முற்போக்கான கொள்கைகளைக் கொண்டிருந்தது. ஆணாதிக்க முறையில் ஊறிப்போயிருக்கும் ஒரு சமூகத்திற்கு இந்தப் புதிய சிந்தனைகள் எவ்வளவு பெரிய விடியல்!  ஆக, ஸார் மன்னராட்சி காலத்தில் தந்தையின், கணவனின் பண்டங்களாக, சொத்துகளாகப் பார்க்கப்பட்ட பெண்களை, சோஷலிச ரஷ்யாவில் கண்ணியமான வாழ்வுரிமைகள் கொண்ட தனிமனிதர்களாகப் பார்க்கும் நிலைமை உருவாக்கப்பட்டது.

புதிய ஜனநாயகம்

சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு, சோஷலிச சமுதாயத்தை நிறுவுவதற்காக, சுரண்டல் வர்க்கங்களை ஒடுக்கி, பாட்டாளி வர்க்க, ஏழை விவசாய மக்களின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, நாட்டில் அடிப்படையான அரசியல், பொருளாதார மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்பதை ஆராய்ந்தால், உலகிலேயே முதன்முறையாக பெண்கள் உள்ளிட்டு ஒடுக்கப்பட்ட மக்களை, சுரண்டலில் இருந்து முழுமையாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை சோவியத் ரஷ்யா மேற்கொண்டது என்பதை உணர முடியும்.

1918 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சோவியத்துகளின் மூன்றாம் காங்கிரஸ், ‘உழைக்கும், சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை’ நிறைவேற்றியது. இந்த ஆவணத்தையும் 1918 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் நடைபெற்ற சோவியத்துகளின் ஐந்தாம் காங்கிரஸ் நிறைவேற்றிய சோவியத் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தையும் இணைத்து, அன்றைய ரஷ்ய சோஷலிச ஒன்றிய சோவியத் குடியரசின் (Russian Socialist Federated Soviet Republic) அடிப்படைச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி,

  • ரஷ்யக் குடியரசு என்பது ரஷ்யாவின் உழைக்கும் மக்களைக் கொண்ட சுதந்திர சோஷலிச சமூகம். (பிரிவு 10). ‘உழைக்கும் மக்கள்’ என்ற வார்த்தை பால் பேதமின்றி அனைத்து மக்களையும் உள்ளடக்கியது என்பதை இந்த ஆவணத்தை முழுமையாகப் படிக்கும்போது உணர முடியும்.
  • சோவியத் குடியரசின் அனைத்து குடிமக்களும், அவர்களுடைய இனம் மற்றும் தேசியத்திற்கு அப்பாற்பட்டு சமத்துவ உரிமைகள் கொண்டவர்கள். (பிரிவு 22).
  • உழைக்கும் மக்களுக்கு உண்மையான மனச்சான்றின் சுதந்திரத்தை உறுதிசெய்திட வேண்டும். இதற்காக மதம் அரசிடமிருந்தும், கல்வி அமைப்பில் இருந்தும் பிரிக்கப்படுகிறது. மதங்களைப் பின்பற்றும் உரிமையும், மதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் உரிமையும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் உண்டு. (பிரிவு 13)
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் அறிவு பெறுவதற்கான உண்மையான வாய்ப்புகளை உறுதிசெய்வதற்காக, அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், முழுமையான இலவசக் கல்வி வழங்கும் பொறுப்பை அரசு ஏற்கிறது (பிரிவு 17)
  • 18 வயதை அடைந்த சுரண்டலில் ஈடுபடாத உழைக்கக்கூடிய அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை உண்டு, சோவியத்துகளுக்கு தேர்தெடுக்கப்படும் உரிமை உண்டு. உழைக்கும் பிரிவினரில் உழைக்கும் திறனை இழந்தவர்களுக்கும் வாக்குரிமை உண்டு. மதகுருமார்கள், சக-மனிதர்களை சுரண்டிப் பிழைப்பதற்காக சொத்துகளை வைத்திருப்பவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. (பிரிவு 64)
  • சமூகத்தில் உழைக்காமல் ஒட்டுண்ணிகளாக வாழும் பகுதியினரை ஒழித்திடவும், நாட்டின் பொருளாதர வாழ்க்கையைக் கட்டமைத்திடவும் உழைப்பு அனைத்து மக்களுக்கும் கடமையாக்கப்படுகிறது. (பிரிவு 3, 6-ஆவது அம்சம்)

புதிய ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உலகின் முதல் சோஷலிச அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவதற்கான சான்று ஆவணமாக சோவியத் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது.

அன்றைய சோவியத் ரஷ்யாவும், இன்றைய ஏகாதிபத்திய அமெரிக்காவும்

சம-வேலைக்கு சம ஊதியம், ஆண் பெண் வேறுபாடு இல்லாமல், அனைவரும் தொழிலாளர்கள் என்ற அணுகுமுறை, பெண்களின் குடும்ப பாரங்களைக் குறைப்பதற்கு குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பணிகளை சமூகப் பணியாக்குவது, பெண் தொழிலாளர்களை சமூக உற்பத்தியில் ஈடுபட வைப்பது, மகப்பேறு காலத்தில் ஊதியத்துடனான விடுப்பு, பாதுகாப்பான குழந்தைப் பிரசவம், பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு, குழந்தை வேண்டாம் என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவ உதவியோடு கருக்கலைப்பு செய்யும் உரிமை, கல்வி, தொழிற்கல்வி வாய்ப்புகளை பெண்களுக்கு, பெண் தொழிலாளர்களுக்கு உறுதி செய்வது – இப்படி பெண் விடுதலைக்கு அடிப்படையான அஸ்திவாரத்தை 1917-1920 காலகட்டத்திகுள் சோவியத் யூனியன் போட்டது. பெண்களுக்கு மனித உரிமைகளை உறுதிசெய்யும் பணியில், இது எவ்வளவு பெரிய சாதனை!

இன்றைய ஏகாதிபத்திய அமெரிக்காவில் பெண் தொழிலாளர்களின் நிலையோடு 1917-20 காலத்திலேயே சோவியத் ரஷ்யா செய்த சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

  1. அமெரிக்காவில் கர்ப்பத்தைக் காரணம் காட்டி பெண் தொழிலாளர்கள் மீது நிறுவனங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது 1978-ல் தான்.
  2. 1993-ல் தான், பிரவச காலத்தில் நான்கு மாதங்கள் ‘ஊதியமில்லா’ விடுப்பை, மீண்டும் வேலைக்குர்த்துக்கொள்ளும் உத்தரவாதத்துடன் கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற ஃபெடரல் சட்டம் இயற்றப்பட்டது. (Family Medical Leave Act 1993).
  3. இந்த FMLA 1993 சட்டப்படி, வேலை உத்தரவாதம் என்பதுதான் கட்டாயம். ஊதியத்துடனான விடுப்பு என்பது கட்டாயம் இல்லை. ‘ஊதியமில்லாத’ விடுப்பு என்பதுதான் சட்டமே என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிறுவனங்களோ, மாகாணங்களோ குழு காப்பீடு போன்ற ஏற்பாடுகளைச் செய்திருந்தால், ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பு கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. மேலும் இந்தச் சட்டம் 50 தொழிலாளர்களுக்கு மேல் வேலையில் இருக்கும் நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும். ஒட்டுமொத்த அமெரிக்காவில் 14% தொழிலாளர்களால் மட்டுமே இந்த பாதுகாப்பைப் பெற முடிகிறது.
  4. 2023 நிலவரப்படி, வேலை உத்தரவாதத்துடன் ‘ஊதியமில்லா’ விடுப்பு வழங்க வேண்டும் என்ற இந்த அற்பச் சட்டத்தைக்கூட இன்னும் 21 அமெரிக்க மாகாணங்கள் நிறைவேற்றவில்லை. இதற்குப் பொருள், இந்த மாகாணங்களில் பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற வேலை உத்தரவாதம் பெண் தொழிலாளர்களுக்கு இல்லை. வேலை கொடுக்கும் நிறுவனங்களின் கருணையைப் பொறுத்துதான் பெண் தொழிலாளர்களுக்கு வேலை இருக்கும்.
  5. 17 மாகாணங்களில் ‘ஊதியமில்லா’ விடுப்பு, வேலை உத்தரவாத சட்டம் இருக்கிறது.
  6. ஊதியத்துடனான விடுப்பு வழங்கிட வேண்டும் என்ற சட்டம் கலிஃபோர்னியா, நியு ஜெர்சி, ரோட் ஐலேண்ட், நியூ யார்க், வாஷிங்டன் உள்ளிட்ட வெறும் 11 மாகாணங்களில்தான் அமலில் உள்ளது. இந்த 11 மாகாணங்களில்கூட பெரும்பாலான மாகாணங்கள், 2017,18-க்குப் பிறகுதான் சட்டமியற்றின. நியூயார்க் இந்தச் சட்டத்தை இயற்றியது 2017 ஆம் ஆண்டில், அமல்படுத்தத் தொடங்கியது 2018-ல். வாஷிங்டன் சட்டம் போட்டது 2017-ல் அமலுக்கு வந்தது 2020-ல். ஸ்வீட் கேப்பிடலிசம் பெண்களுக்குத் தரும் இனிய விடியல்!

இந்த இடத்தில், தோழர் லெனின் 1919- ஆம் ஆண்டில் குறிப்பிட்டதைப் பதிவு செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

“பெண்களின் நிலைமையை எடுத்துக்கொள்வோம். நாம் அதிகாரத்துக்கு வந்த முதல் ஓராண்டிற்குள் செய்த சாதனைகளில் நூறில் ஒரு பங்கைக்கூட, உலகில் ஒரு ஜனநாயகக் கட்சியும், ஆகப் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ குடியரசு நாட்டில் உள்ள கட்சியும் கூட, பல பத்தாண்டுகளில் செய்யவில்லை. இந்த சாதனை பற்றிப் பெருமை கொள்ள நமக்கு ஆயிரம் மடங்கு உரிமை உள்ளது. …”
தோழர் லெனின் இவ்வாறு குறிப்பிட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. உலகிற்கே உதாரண வழிகாட்டியாக விளங்கிய சோவியத் யூனியனை ஏகாதிபத்திய அமெரிக்காவும், முதலாளித்துவ முறையும் தகர்த்து முப்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும், அந்த ஏகாதிபத்திய அமெரிக்கா பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு சட்டமியற்றுவதற்கு ஏலம்போட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் முதலாளித்துவ உலகில் பெண்களின் நிலை.

மீண்டும் சோவியத் ரஷ்யா மற்றும் லெனினின் கூற்றுக்குச் செல்வோம்! இவ்வளவு சாதனைகளை செய்தபிறகும், தோழர் லெனின் சோவியத் நாட்டின் எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு, சுயவிமர்சனத்துடன் செய்ய வேண்டிய பணிகள் குறித்துச் சொன்னார்: “…பெண்களைத் தாழ்வாக நடத்தும் இழிவான சட்டங்களை நொறுக்கித் தள்ளிவிட்டோம். ஆனால் கட்டடம் கட்டுவதற்காக மனையை சுத்தப்படுத்தி இருக்கிறோமே தவிர இன்னும் கட்டடத்தைத் கட்டிவிடவில்லை, என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.”

ஆணாதிக்க, பெண்ணடிமை முறையைத் தகர்க்கும் பணி

சுரண்டலை ஒழிப்பதற்குச் மார்க்சிய வழியில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்ற புரட்சிகர சிந்தனைகள் ரஷ்யாவில் பரவலான காலத்தில், சோஷலிஸ்ட்களுக்கும், சோஷலிஸ்ட்கள் அல்லாத பிரிவினருக்கும் பொதுவாகப் பெண் விடுதலையில் நாட்டம் ஏற்பட்டது. பெண் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஷோஷலிசப் புரட்சியில் பங்கேற்றார்கள். (இது குறித்து முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்)
என்றாலும், புரட்சிக்குப் பிறகு சோஷலிச சமூகத்தை நிர்மாணிக்கும் பணி அவ்வளவு எளிதாக இல்லை. மக்களின் உணர்வு நிலையில் மாற்றம் கொண்டு வந்து சோவியத் கட்டமைப்பில் பங்கேற்க வைக்க நிறைய திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. உழைப்பைச் செலுத்துவது, உற்பத்தியை அதிகரிப்பது போன்ற பணிகளில் பாட்டாளி வர்க்கம் உற்சாகமாகப் பங்கேற்றது, தனது கடமையைச் செய்தது. ஆனால், பெண்ணடிமை முறை, ஆணாதிக்க முறையை நொறுக்கித் தள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், சமூகத்தில் சுரண்டப்பட்ட வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திடம் போதிய அளவில் இல்லை.

காலங்காலமாக பிற்போக்குப் பழக்கவழக்கங்கள் சமூகத்தின் நடைமுறையாக தொடர்ந்து வந்துள்ளன. அவை, பாட்டாளி வர்க்க மக்கள், எழை விவசாய வர்க்க மக்கள் மீதும், இந்த வர்க்கங்களின் பெண்கள் மீதும் பெரும் தாக்கத்தைச் செலுத்தின. எனவே, பிற்போக்கான மரபுகளின் பிடியில் இருந்து முழுமையாக வெளிவர வேண்டும் என்ற புரிதல் பாட்டாளி வர்க்கத்திலேயே கணிசமானோருக்கு இல்லை.

சுரண்டல் வர்க்கங்களைச் சேராத, ஆனால், சோஷலிச சமூகத்தைக் கட்டமைப்பதில் ஊசலாட்ட உணர்வு கொண்ட வர்க்கங்களாக சிறு முதலாளி வர்க்கம், மத்திய வர்க்கங்கள் இருந்தன. இந்த வர்க்கங்களைச் சேர்ந்த மக்களும், பெண் விடுதலைக்காக சோஷலிச அரசு கொண்டுவந்த புரட்சிகர நடவடிக்கைகளை முழு மனதோடு ஆதரிக்கவில்லை. என்றாலும், சோவியத் யூனியனின் சோஷலிச அரசு உறுதியாகச் செயல்பட்டது.

“கம்யூனிஸ்ட் கட்சியின் கதவுகள் பாட்டாளி வர்க்கப் பெண்களுக்காக திறந்தே இருந்தன. சோவியத்துகளின் பணியில் பங்கேற்று, தங்கள் வாழ்க்கை முறையை மறுசீரமைத்துக் கொள்ளும் வாய்ப்பை, சட்டம் பெண்களுக்கு வழங்கியது. எனினும், பெண் தொழிலாளர்களில் பெரும்பகுதியினரும், விவசாயிகளும், கம்யூனிஸ்ட்களை அச்ச உணர்வோடே பார்த்தார்கள். மரபான அடிப்படைகளை, பண்டைய வழிமுறைகளை ஒழித்துக்கட்டுபவர்களாக, மதத்தை அரசிடமிருந்து பிரித்த கடவுளற்ற மனிதர்களாக, குழந்தைகளைத் தாய்மார்களிடமிருந்து பிரித்து, அவர்களை வளர்ப்பதற்காக அரசிடம் ஒப்படைக்கும் இதயமற்றவர்களாக அவர்கள் கம்யூனிஸ்ட்களைப் பார்த்தார்கள்.”

“கம்யூனிஸத்தைப் பாதுகாப்பதற்கு பெண் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதும், சோவியத் அதிகாரத்தின் பாதுகாவலர்களாகப் பெண்களை மாற்றுவதும் அவசியம். சோவியத் அதிகாரத்தின் நோக்கங்கள் மற்றும் கம்யூனிசம் பற்றிய பொதுவான பிரச்சாரம் மட்டும் பெண்களை இயக்கத்திற்குக் கொண்டு வருவதற்குப் போதாது. பெண் தொழிலாளர்கள் மற்றும் எழை விவசாயிகள் மத்தியில் பணிபுரிவதற்கு தனிச்சிறப்பான அணுகுமுறை தேவைப்படுகிறது. பெண்கள் மத்தியில் பணியாற்றி, அவர்களின் நலனுக்கு என்ன செய்ய வேண்டும், ‘பெண்களின் நலனுக்கு எந்த அமைப்பு சரியானது? – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமா அல்லது முதலாளித்துவ ஆட்சிக்குத் திரும்புவதா?’ என்ற புரிதலை ஏற்படுத்துவதற்கு தனிச்சிறப்பான முறை தேவைப்படுகிறது.” இவ்வாறு, தோழர் அலெக்சாண்ட்ரா கொலோந்தாய், புரட்சிக்குப் பிறகான சூழலில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கான தேவை குறித்துப் பதிவு செய்கிறார்.

சோவியத் யூனியனில் ஸெனோட்டெல் எனும் பெண்கள் துறை

சோவியத் குடியரசில் பெண்ணுரிமையை நிலைநாட்டிட என்னென்ன கடமைகளை நிறைவேற்றிட வேண்டும், பெண்களை உள்ளடக்கி சோவியத் சோஷலிசக் குடியரசை வலுப்படுத்திட என்ன செய்ய வேண்டும் என்பதை எதார்த்த நிலையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. இது குறித்து விவாதிப்பதற்காக, 1918-ல் அனைத்து ரஷ்ஷிய பெண் தொழிலாளர்கள், பெண் விவசாயிகளின் முதல் காங்கிரஸ் மாஸ்கோவில் கூட்டப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து பெண் தொழிலாளர்கள், விவசாயிகள் 1200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து இந்தக் காங்கிரசுக்கு அனுப்பி இருந்தார்கள். 300 பிரதிநிதிகளை வரவழைக்கத் திட்டமிட்டு இறுதியில் 1200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்தப் பெண் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் தங்களுடைய கிராமங்களை விட்டு முதல்முறையாக வெளிவந்திருந்தார்கள். ‘சோஷலிச சமுதாயத்தை வலுவாகக் கட்டமைத்து மனிதரை மனிதர் சுரண்டும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பெண் விடுதலையை இணைத்து சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும்’ என்ற புரிதலை இந்தக் காங்கிரஸ் அவர்களிடம் வலுப்படுத்தியது.

தோழர்கள் இனேசா அர்மாண்ட், கொலோந்தாய், ஸ்வெர்ட்லோவ், நிக்கொலேவா உள்ளிட்ட பெண் கம்யூனிஸ்ட் தலைவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால் இந்தக் காங்கிரஸ் சாத்தியமானது. கிரெம்லின் மாளிகையில் நடைபெற்ற இந்தக் காங்கிரஸில் தோழர் லெனின் பெண்கள் குறித்து ஆற்றிய உரையை இதுவரை எந்த முதலாளித்துவ நாட்டுத் தலைவரும் ஆற்றியிருக்க மாட்டார்கள். சுருக்கமான, ஆனால் ஆழமான, வீச்சான உரை. மாநாட்டில் பெண் பிரதிநிதிகளின் ஆரவாரக் கரவொலி நீண்டுகொண்டே சென்றதால், தன்னுடைய கைக்கடிகாரத்தை லெனின் பார்க்க வேண்டி இருந்தது.
சோவியத் ரஷ்யா முழுமைக்கும் பெண்கள் தொடர்பான பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைகளை இந்தக் காங்கிரஸ் உருவாக்கியது. ‘சோஷலிசக் குடியரசைக் கட்டும் படையில் பெண்களைக் கொண்டு வருவதற்கு, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிரத்யேக அமைப்பை உருவாக்கிட வேண்டும்’ என்பதை இந்தக் காங்கிரஸ் வலியுறுத்தியது. அதை ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது.

பெண் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கான கமிஷன்கள் உருவாக்கப்பட்டு (Commissions for Agitation and Propaganda among Working Women) கட்சிக் கமிட்டிகள் வாயிலாக செயல்படத் தொடங்கின.

1) பெண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை சோவியத்துகளின் நடைமுறைப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலமாகப் பெண்களை கம்யூனிஸம் பற்றிய புரிதல் கொண்ட கம்யூனிஸ்ட் தொண்டர்களாக மாற்றுவது, 2) பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர நடைமுறையில் சோவியத் அரசு மேற்கொள்ள வேண்டிய விரிவான பணிகளை கட்சிக்கும், அரசுக்கும் முன்வைப்பது- இந்தக் கமிஷன்களின் நோக்கமாக இந்த இரண்டு பணிகளும் இருந்தன.

மத்திய கமிஷனின் தலைவர்களாக தோழர்கள் கொலோந்தாய், இனேசா அர்மாண்ட், மொய்ரோவா செயல்பட்டார்கள். இவர்கள் பகுதி அளவில் கமிஷன்களை உருவாக்கி செயல்பட வைத்தார்கள். இந்த ஏற்பாட்டை வரவேற்க மனமில்லாமல் முட்டுக்கட்டைகள் போடும் அணுகுமுறை பகுதி அளவில் இருந்தது.

என்றாலும், 1919 ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது காங்கிரஸ், இந்தக் கமிஷன்களின் பணிகளை அங்கீகரித்தது. கமிஷனை மேம்படுத்தி, ‘மத்தியக்குழு செயலகத்தின் பெண்கள் துறை அல்லது பிரிவு’ (ஸென்ஸ்கி ஓட்டெல் – ஸெனோட்டெல் – Zhenotdel) என்ற அமைப்பாக மாற்றம் செய்தது. இந்த ஸெனோட்டெல் அமைப்பின் முதல் இயக்குனராக தோழர் இனேசா அர்மாண்ட் நியமிக்கப்பட்டார். பகுதி அளவில் ஸெனோட்டெல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
பெண்களின் மேம்பாடு, விடுதலையைக் குறிவைத்த பணிகளையும், பெண்களை உள்ளடக்கி சோவியத்துகளின் பணிகளையும் ஸெனோட்டெல் மூலமாக அரசு மிகப்பெரும் அளவில் முன்னெடுத்தது.

பொருளாதார மறுசீரமைப்புப் பணிகளில் பெண்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவது, உற்பத்திப் பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, பொருளாதார மேலாண்மையின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது- இந்தப் பணிகள் எல்லாம் ஸெனோட்டெல்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டன.

“அக்டோபர் புரட்சி ஏற்கனவே சமூகத்தில் புரையோடிப் போயிருந்த பால் அடிப்படையிலான பாரபட்சத்தை ஒழிப்பதற்கு வழிவகுத்தது; அதேசமயம் தொழிலாளர் படை, ராணுவப் படை என்ற இரண்டு அடிப்படையான தளங்களிலும் பெண்களின் தீவிரமான பங்கேற்பை உறுதிசெய்வதே, பால் அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு அடிப்படையாக இருக்கும் கற்பிதங்களை உடைத்தெறியும்” என்றார் தோழர் அலெக்ஸாண்ட்ரா கொலோந்தாய்.

உள்நாட்டுப் போர், எதிர்ப் புரட்சி சமயங்களில் பெண்களை செஞ்சேனையில் இணைத்து சோவியத் அதிராகரத்தைப் பாதுகாக்கும் பணியில் ஸெனோட்டெல் அமைப்புகள் பெரும்பங்காற்றின. சோவியத் ராணுவம் முதல், சமூக சமையற்கூடங்கள், உணவகங்கள் வரை அனைத்துத் துறைகளின் பணிகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இரண்டாம் உலகப் போரில் சோவியத் படையில் பெண் வீரர்கள் ஆற்றிய பங்கை உலகமே வியந்துபார்த்தது. இதற்கான அடிப்படைகள் ஸெனோட்டெல் காலத்தில் போடப்பட்டிருக்கின்றன.

ஸெனோட்டெல் நாட்டின் கோடிக்கணக்கான பெண்களைச் சென்றடைந்தது. அதன் வாயிலாக பெண் விடுதலையைக் குறிவைத்து புரட்சிகரமான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘கருக்கலைப்பு செய்யும் சட்ட உரிமையை பெண்களுக்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை ஸெனோட்டெல் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு, 1920-ல் சோவியத் அரசாங்கம் அதைச் சட்டமாக நிறைவேற்றியது. புரட்சிக்கு முந்தைய காலத்தில் கருக்கலைப்பு என்பதை ரஷ்யப் பெண்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். ஐரோப்பாவில் வெறெந்த நாடும் செய்ய முன்வராத விஷயம் இது.

ஆனால், சோவியத் அரசு பெண்களுக்கு அந்த உரிமையை உறுதிசெய்தது.
இயக்குனர் தோழர் இனேசா முதல், எண்ணற்ற பெண் தோழர்கள், பெண் தொழிலாளிகள், பெண் தன்னார்வலர்கள் ஸெனோட்டெல் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு முன்னெடுத்தார்கள். தோழர் இனேசா ஒரு நாளில் 14-16 மணி நேரம் இந்தப் பணிகளில் மூழ்கிக் கிடந்திருக்கிறார். அவருடைய உடல்நலம் இதனால் கடுமையாகப் பாதிப்படையவே, 1920-ல் கட்சி அவருக்குக் கட்டாய ஓய்வு விடுப்பை வழங்கி இருக்கிறது. ஓய்விற்காக அவர் சென்ற பகுதியில் காலரா தொற்று பரவியது. ஏற்கனவே பலவீனமடைந்த நிலையில் இருந்த தோழர் இனேசா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

அடுத்து, தலைவராகப் பொறுப்பேற்ற தோழர் அலெக்ஸாண்ட்ரா கொலோந்தாய், சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஆணாதிக்க சிந்தனையை தகர்ப்பதற்கு மிகுதியான முக்கியத்துவத்தை வழங்கிப் பணியாற்றினார். பகுதிவாரியான பணிகளை முன்னெடுக்கும்போது, படுமோசமான ஆணாதிக்க வழக்கங்களில் ஊறிப்போயிருந்த பகுதிகளைக் குறிவைத்துப் பணியாற்றும் அணுகுமுறையை அவர் கடைப்பிடித்தார்.

மத்திய ஆசியா, வோல்கா, காக்கேசியா பகுதிகளின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம், யூத மதத்தைச் சேர்ந்த பெண்கள் படுமோசமான அடிமைமுறையில் சிக்கியிருந்தார்கள். இந்தக் கிழக்குப் பகுதிப் பெண்களின் விடுதலைக்காக ஸெனோட்டெல் அமைப்புகள் ஆற்றிய பணிகள் சோவியத் யூனியனின் வரலாற்றில் மட்டுமல்ல, உலகின் பெண் விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே மிக முக்கியமானவை.

பரஞ்ச்சா முக்காடு அணிந்த மத்திய ஆசியப் பெண்

குதிரைமுடியால் செய்யப்பட்ட ‘பரஞ்சா’ என்ற அழுத்தமான முக்காட்டை உஸ்பெக், தஜெக் பெண்கள் முகம் முதல் கால் வரை தொங்கவிட்டிருப்பார்கள். தோழர் கொலோந்தாய் மாஸ்கோவில் நடைபெற்ற காங்கிரஸுகளுக்கு இந்தப் பெண்களைப் பிரதிநிதிகளாக அழைத்துவந்து அவர்கள் அனுபவித்த அடக்குமுறைகளைப் பற்றிய புரிதலை ரஷ்ய சமூகத்திற்கு ஏற்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் கூட்டத்தில் இந்தப் பெண்கள் அனைவரின் முன்னிலையிலும், தாங்கள் அணிந்திருந்த பரஞ்சா முக்காடுகளைக் கிழித்தெறிந்து தங்களுடைய விடுதலை வேட்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘இதெல்லாம், மேடைநாடகம் போல இருக்கிறது’ என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ‘ஆமாம், முன்மாதிரியான தொடக்ககாலப் பணிகள் எல்லாமே மேடைநாடகத் தன்மையில்தான் இருக்கும்’ எனப் பொட்டில் அறைந்த மாதிரி பதிலடி தந்திருக்கிறார் தோழர் கொலோந்தாய்.

மத்திய ஆசியப் பகுதிகளில் வழக்கத்தில் இருந்த பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும். உள்ளூர் பகுதிகளில் போல்ஷிவிக் கேடர்கள் இல்லை. மிகப் பெரும் பரப்பு. என்ன செய்வது? கடினமான இந்தப் பணியை மேற்கொள்வதற்காக ரஷ்யப் புரட்சியாளர்களையும் கல்வியாளர்களையும் மத்திய ஆசியாவின் தொலைதூர மலைப்பகுதிகளுக்கு ஸெனோட்டெல் அமைப்பு அனுப்பி வைத்தது.

பரஞ்சா முக்காடை நீக்கிய மத்திய ஆசியப் பெண்கள்

நாதேஸ்தா கொலெஸ்நிக்கோவா, ஓல்கா சுல்கோவா போன்ற பெண் தோழர்கள் இந்தப் பணிகளை மிகுந்த அர்பணிப்போடு செய்திருக்கிறார்கள். அஸர்பைஜானின் பக்கு பகுதி, அப்காஸியா (1990களுக்குப் பிறகு, ஜியார்ஜியாவில் இருந்து தனிநாடாக தற்போது பிரகடனப்படுத்திக் கொண்டது), பத்துமி பகுதிக்கு (ஜியார்ஜியாவின் தற்போதைய தலைநகரம்) எல்லாம் சென்று பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாது. தொடக்க காலத்தில் குளியல் குளங்கள், கடைத்தெருப் பகுதிகள் போன்ற பகுதிகளுக்கு சென்று ஆண்களுக்குத் தெரியாமல் பெண்களை ரகசியமாகச் சந்தித்து, படாத பாடுபட்டுப் பெண்களைத் திரட்டியிருக்கிறார்கள்; பெண்கள் குழுக்களைக் கட்டி இருக்கிறார்கள். ஒளிப்படங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ‘வயதான நபரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று ஒரு இஸ்லாமிய ஹீரோயின் மன-உறுதியோடு போராடும் காட்சியைக் கொண்ட விழிப்புணர்வு படத்தைத் திரையிட்டு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்தக் குழுவின் கூட்டங்களில் பரஞ்சா முக்காடுகளைக் கிழிக்கும் போராட்டங்களைப் பெண்கள் சம்பிரதாயமாகச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், அடிப்படைவாத மனநிலை கொண்ட ஆண்களும், சமூகமும் ஏவிய கொடூர வன்முறைகளை எல்லாம் எதிர்கொண்டே இந்தப் பணிகள் எல்லாம் முன்னெடுக்கப்பட்டன. மோசமான ஆணாதிக்கக் கட்டமைப்பில் இருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்ற நோக்கதுடன் பாடுபடும் பெண்கள் மீது அடிப்படைவாதிகள் கொதிதண்ணீர் ஊற்றி, வேட்டை நாய்களை ஏவிக் கடிக்கவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு 22 வயது இஸ்லாமியப் பெண், பொதுவெளியில் நீச்சலுடை அணிந்து தன்னுடைய விடுதலை வேட்கையைப் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தி இருக்கிறார். அந்தப் பெண்ணின் தந்தையும், சகோதரர்களும் அவரை உயிரோடு வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். 1929 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய ஆசியாவில் 300 பெண்கள் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சர்வதேசப் பெண்கள் தினத்தன்று பரஞ்சா முக்காடுகளைக் கொளுத்தும் போராட்டம்.

என்றாலும், ஸெனோட்டெல் சென்ற பகுதிகளில் எல்லாம், பெண்கள் எழுச்சி பெற்றார்கள். தங்களுடைய சொந்தபந்தங்களிடம் இருந்தே வரும் அச்சுறுத்தல்களை எல்லாம் துச்சமென மதித்து, மொழி பெயர்ப்பாளர்களாகவும், பிரச்சாரக்காரர்களாகவும் செயல்பட்டு மாற்றத்திற்காகப் பாடுபட்டார்கள். இந்தப் பகுதிகளில், மே தினம், சர்வதேசப் பெண்கள் தினத்தன்று பெண்கள் சந்தைப்பகுதிகளில் கூடி, முக்காடு கிழிக்கும் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.

ஸெனோட்டெல் அமைப்பிடம் விவாதித்து, கலாச்சாரக் காவல் மனப்பான்மையோடு பெண்களுக்கு எதிராக ஏவப்படும் வன்முறைக் குற்றங்களை ‘எதிர் புரட்சிக் குற்றங்கள்’ என்று கருதி, உரிய தண்டனை வழங்கலாம் என்று சோவியத்தின் மத்திய செயற்குழு ஆலோசனைக் கூட்டம் முடிவெடுத்தது. வர்க்க சமூகத்தைக் காப்பாற்றுவதற்கான ஆணாதிக்க முறை எவ்வளவு கொடூரமானது! இந்தக் கேடுகெட்ட விஷ அமைப்பை நொறுக்கித் தள்ள சோவியத் அமைப்பு எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்பட்டிருக்கிறது!

இன்றைக்கு பரஞ்சா வழக்கத்தை மத்திய ஆசியாவில் பார்க்கவே முடியாது. காற்றுபுகாத மதில்சுவருக்கு ஒப்பான அந்த அடிமைச்சின்னங்கள் இன்றைக்கு அருங்காட்சியகங்களில் மட்டுமே இருக்கின்றன. சோவியத் யூனியன் சோஷலிச அரசின், ஸெனோட்டெல் அமைப்புகளின் உறுதியான பணிகள் இல்லாமல் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்காது.

பின்னடைவுகள்

1917 நவம்பர் 7 தொடங்கி, தொடர்ச்சியான போர்கள், பஞ்சம், முதலாளித்துவ சூழ்ச்சி இவற்றையெல்லாம் சமாளித்து சோவியத் ரஷ்யா ஒரு புறம் முன்னேறிச் சென்றது. உற்பத்தியில் வளர்ச்சி கண்டது. உற்பத்தியில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். பொது சமையற்கூடங்கள், உணவு விடுதிகள், குழந்தைகள் பரமாரிப்பகங்கள், பாலர் பூங்காங்கள் பெண்களின் குடும்பச் சுமையைக் குறைத்தன. சோவியத் அமைப்பின் மீது பெண்களுக்கு பற்றுறுதி வலுப்பட்டது.

1920 நிலவரப்படி, ரஷ்யாவின் மாகாணத் தலைநகரங்களின் தொழிலாளர்கள் முழுக்க வீட்டிற்கு வெளியே பொது உணவகங்களைப் பயன்படுத்தும் நிலை இருந்தது. ஏறத்தாழ 50 லட்சம் தொழிலாளர்கள் பொது உணவுவிடுதிகளைப் பயன்படுத்தினார்கள். 75,000 பெண்கள் பொது சமையற்கூடங்களில், உற்பத்தி மற்றும் சேவைப் பணிகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.

என்றாலும், வீட்டுப் பொறுப்புகளில் இருந்து பெண்களால் முழுமையாக விடுபட முடியவில்லை என்பதே எதார்த்த நிலையாக இருந்தது. ஆணாதிக்க முறையை எதிர்த்து கருத்தியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மிகப்பெரும் போராட்டத்தை கம்யூனிஸ்ட்களும், அரசியல் தெளிவு பெற்ற பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் மேலும் முன்னடத்திச் செல்ல வேண்டி இருந்தது.

எப்படி இருந்தாலும், பொது வேலைவாய்ப்பிற்குள், நாட்டின், சமூகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குள் வந்தது என்பது ரஷ்யப் பெண்கள் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான மாற்றம். உலகின் எந்த ஒரு சக்தியாலும் இந்தச் சாதனையை மறுக்கவே முடியாது. இத்தகைய புரட்சிகர மாற்றத்தை இன்றுவரை உலகில் எந்த முதலாளித்துவ நாடாலும் பெண்கள் வாழ்க்கையில் கொண்டுவர முடியவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகள் கிடைத்து, குடும்பத்தை, ஆண்களை சார்ந்திருக்காத நிலை அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டால், தங்களுடைய உடல் மீதான தங்கள் கட்டுப்பாட்டைப் பெண்களால் நிலைநாட்டிட முடியும். குழந்தைகளை வதவதவெனப் பெறும் இயந்திரங்களாக இருக்காமல், தங்களுக்காகப் பெண்கள் வாழத் தொடங்குவார்கள். பெண்களின் முன்னேற்றம் சாத்தியமான ஒரு சமூகத்தில், குழந்தை பிறப்பு விகிதம் சர்வநிச்சயமாகக் குறையும். சோவியத் ரஷ்யாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது. ‘குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பிற்கு, குடும்பத்திற்குப் பெண்கள் பழையபடி முக்கியத்துவம் தர வேண்டும்’ என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சமூகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறையத் தொடங்குகிறது என்றதும், சோவியத் யூனியனின் வளர்ச்சிக்கு மக்கள்தொகை குறைவு ஆபத்தானது என்ற பயத்தில், பெண்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட கருக்கலைப்பு உரிமை 1936-ல் திரும்பப்பெறப்பட்டது. 1919 முதல் 1930 வரை ஸெனோட்டெல் அமைப்புகள் திட்டமிட்ட பணிகளை வெகுசிறப்பாகச் செய்தன என்றாலும், 1930-ல் ஸெனோட்டெல்களின் நோக்கம் நிறைவேறியது என்று பிரகடனப்படுத்தி, அவை கலைக்கப்பட்டன. மிகச் சிறப்பாகத் தனது கடமைகளை நிறைவேற்றி, சோவியத் கட்டுமானத்தின் மீது கோடிக்கணக்கான விவசாயப் பெண் தொழிலாளர்களுக்கும், பாட்டாளி வர்க்கப் பெண் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்திய அமைப்பு. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருந்த நிலையில் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியனின் வரலாற்றில் ஸெனோட்டெல் அமைப்புகளைக் கலைத்தது பெரும் தவறு.

“தோழர் ஸ்டாலின் தலைமையில் பெண்கள் மிகப்பெறும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள். ஸ்டாலின் அளித்த ஊக்கத்தால், பாசிசத்திடமிருந்து சோவியத் யூனியனைப் பாதுகாக்கும் தேசபக்திப் போரில் பங்கேற்று, ஒப்பற்ற வீரர்களாய் போர்ப்படையின் முன்னணியில் நின்று பெண்கள் போரிட்டார்கள்.

இந்தக் காலகட்டத்திலும், குறிப்பாக, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திலும், போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில், குடும்பத்தின் பங்கு பற்றிய கருத்து உருப்பெற்று, ‘அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதில் தாய்மார்களின் பங்கு, தாய்மார்கள் மேற்கொள்ளும் பிற பாரம்பரிய பணிகள்’ போன்ற சிந்தனைகளை வலியுறுத்தியது. இந்தச் சிந்தனைகள் ஆரம்பகால போல்ஷிவிக் புரட்சியாளர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவை.

கருக்கலைப்பு உரிமை திரும்பப் பெறப்பட்டது (மீண்டும் 1955-ல் வழங்கப்பட்டது) வீட்டுத் தளத்தில் பெண்களின் பங்கு குறித்து அழுத்தம் தரப்பட்டது. 1944-ன் குடும்பச் சட்டம் தொடக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில முக்கியமான மாற்றங்களை திரும்பப்பெற்றது. போருக்குப் பிந்தைய காலத்தில் பல வகைகளில் பின்னடைவு நிகழ்ந்தது” இவ்வாறு 1930களின் நிகழ்வுகளை மதிப்பீடு செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்.
என்றாலும், 1990-கள் வரை சோவியத் ரஷ்யாவில் பெண்கள் கல்வியில், வேலைவாய்ப்புகளில், மேலாண்மைப் பதவிகளில், விஞ்ஞான ஆராய்ச்சிகளில் முன்னணியில் இருந்தார்கள். புள்ளி விவரங்களை அத்தியாயம் 31-ல் பார்த்தோம்.
ஜனசக்தி பத்திரிகையின் 1942-ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி தின சிறப்பிதழில் (7.11.1942) வெளியான சோவியத் யூனியனில் பெண்கள் நிலை குறித்த ஒரு கட்டுரையில், பல்வேறு துறைகளில் சோவியத் பெண்களின் வளர்ச்சி பை சார்ட் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியவர் பார்வதி குமாரமங்கலம்.

பெரிய தொழிற்சாலைகள் 40 சதம்

விஞ்ஞான ஆராய்ச்சி 34 சதம்

சர்வகலா சாலை மாணவிகள் 43 சதம் (பல்கலைக்கழக மாணவிகள்)

டாக்டர்கள் 51 சதம்

உபாத்தியாயர்கள் 63 சதம் (ஆசிரியர்கள்)

“பெண் விமானிகள் தினசரி விமானப் படையிலே போராடி, ஜெர்மனிய வெறியரை வீழ்த்துகின்றனர். ஜார் காலத்திலே அறியாமையிலேயும், மூடக்கட்டுகளிலேயும் ஆழ்ந்துகிடந்த ருஷ்யாவின் பிற்போக்கான பிரதேசங்களில் வாழும் பெண்கள் இத்தகைய முன்னேற்றமடைந்து இருக்கிறார்கள். இதைக் காண நாம் அதிசயப்படுகிறோம். முப்பது வருஷங்களுக்கு முன்னே யுஸ்பெகிஸ்தான், டாஜிகிஸ்தான் முதலிய பிரதேசங்களிலே யிருந்த பெண்கள் கோஷாக்களாக வீட்டுக்குள்ளேயே அழுந்திக்கிடந்தனர், இன்றோ, அவர்கள் ஸ்டாலின்கிராட் போர்முனையிலே துள்ளி முன்வந்து நிற்கிறார்கள்”- பார்வதி குமாரமங்கலத்தின் இந்த வரிகள் உஸ்பெக், தஜெக் பெண்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கலாம்.
1929-வாக்கில் இந்தப் பகுதியில் எப்படியான புரட்சிகர மாற்றத்தை ஸெனோட்டெல்கள் முன்னெடுத்தன? பரஞ்சா முக்காடுகளில் இருந்து இந்தப் பெண்களை விடுவிக்க ரத்த ஆறு பெருக்கெடுத்த போராட்டங்களை சோவியத் அரசு எவ்வளவு நெஞ்சுறுதியோடு முன்னெடுத்தது? இதை எல்லாம் இதே அத்தியாயத்தில் பார்த்தோம். தோழர் பார்வதி 1942 நிலவரத்தைக் குறித்துச் சொல்லும் போது உஸ்பெக், தஜெக் பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். முக்காடுகளால் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்கள் சோவியத் செம்படையில் சோஷலிச கட்டமைப்பைக் காப்பாற்றுபவர்களாக, தங்களுக்கு விடுதலை வழங்கிய புரட்சிகர அமைப்பின் பாதுகாவலர்களாக செயல்பட்டார்கள் என்பதை அறிகிறோம். பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க அரசு பெண்கள் வாழ்கையில் என்ன செய்தது? இதைத்தான் செய்தது.

உலகிலேயே சர்வவல்லமை பொருந்திய நாடு என மார்தட்டிக்கொள்ளும் ஏகாதிபத்திய அமெரிக்கா, வளர்ச்சியடைந்த நாடுகள் என்று சொல்லிக்கொல்கிற முதலாளித்துவ நாடுகள் எவற்றாலும் சோவியத் ரஷ்யாவின் சாதனைகளை எந்தக் காலத்திலும் நெருங்கிடவே முடியாது. தனிநபர் லாபம் என்ற அம்சத்தைப் பொருளாதார அமைப்பில் இருந்தே ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட சோஷலிஸ்ட் அரசுகளால்தான் இத்தகைய சாதனைகளை நிறைவேற்றிட முடியும்.

தொடரும்…

ஆதாரம்:

The Status of Women in the Soviet Union, Alice Erh-Soon Tay, The American Journal of Comparative Law, Vol. 20
மகளிர் தினம் உண்மை வரலாறு, இரா. ஜவஹர், பாரதி புத்தகாலயம், 2018
Constitution of the RSFSR (1918), Marxists Internet Archive
World population review, Paid maternity leave by state, 2023
The woman worker and peasant in Soviet Russia, Alexandra Kollontai, 1921
Zhenotdel: Bolshevism and Russian Women, 1917-1930, Richard Stites, Russian History, Volume 3, (1976)
October Revolution and Women’s Emancipation, Brinda Karat, Vol XL, No 45. Nov 06, 2017
Why women have better sex under socialism and other arguments for economic independence, Kristen R. Ghodsee
தொட்டிலாட்டுவோம், துப்பாக்கியேந்துவோம்-சோவியத் யூனியனில் புதுமைப் பெண், 7.11.42, ஜனசக்தி, பார்வதி குமாரமங்கலம்

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *