அத்தியாயம் 33: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 33: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

 

 

 

மனமாற்றத்தை விதைப்பது என்றால் என்ன?

பாட்டாளி வர்க்க சோஷலிச அரசு வந்ததும் சமூகத்தில் காலங்காலமாக நிலைப்பெற்றிருக்கும் ஆணாதிக்க முறை போன்ற சமூகப் புற்றுகளை உடனே அகற்றிவிட முடியாது. இந்தச் சமூகப் புற்றுகளுக்கு அடிப்படையாக இருக்கும் கட்டமைப்புகளைத் தகர்ப்பதன் வாயிலாக பெண் விடுதலைக்கான அடிப்படைகளை உருவாக்க முடியும்.

சோஷலிச கட்டமைப்பை உருவாக்கிய பிறகு, மக்கள் மத்தியில் தொடர்ச்சியாகப் பணியாற்றி முற்போக்கு சிந்தனை வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடம் தொடங்கி, சமூகத்திற்குள் கடைக்கோடி மக்கள் வரையில் மனப்பான்மையில் மாற்றங்களைக் கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும்.

சோஷலிச கியூபாவில் புதிய குடும்பச் சட்டம் செப்டம்பர் 2022-ல் கொண்டுவரப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆலோசனைக் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தி, சட்ட வரைவை முன்வைத்து மக்களிடம் தொடர்ச்சியாக உரையாடி, இறுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி இந்தச் சட்டத்தை இயற்றியது கியூபா. கியூபாவின் மக்கள்தொகையில் 67 சதவித பெரும்பான்மையினர் வாக்களித்து இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உலகின் மிக முற்போக்கான குடும்பச் சட்டம் இது என மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது.
  • வீட்டு வேலை கணவன் மனைவி இருவராலும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்கிறது.
  • விவாகரத்தானால் யார் யாருக்கு என்னென்ன உரிமை உள்ளது என இணையர்கள் திருணமனத்திற்கு முன்பே ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வழிகாட்டுகிறது.
  • ஆணும் பெண்ணும் செய்துகொள்வது மட்டுமே திருமணம் அல்ல, இரண்டு வயதுவந்தோர் யாரும் மனமொத்து திருமணம் செய்துகொள்ளலாம் எனச் சொல்கிறது. இதனால், ஒரே பாலினத்திற்குள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குகிறது.
  • குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் உள்ளடக்கிய குடும்பச்சட்டமாக இருக்கிறது.

இந்தச் சட்டவரைவை முன்வைத்து கியூப அரசாங்கம் நாடு முழுவதும் நடத்திய கலந்துரையாடல் கூட்டங்கள் 79,000 க்கும் மேல்.

இந்தக் கூட்டங்களில் கியூபாவின் மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கியூப மக்கள் முன்வைத்த ஆலோசனைகள் திருத்தங்களை சட்டவரைவில் உள்ளடக்கி, இறுதி சட்டவரைவுக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
கிறிஸ்தவ மதம், தேவாலயங்களின் தாக்கம் காரணமாக தன்பாலின உறவுகளை, ஆண், பெண் தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள், மாற்றுப்பாலினத்தவர், பால் புதுமையினர் (Queer), பாலினத்தை உறுதி செய்ய விருப்பமற்ற நபர்கள், பாலீர்ப்பு இல்லாத நபர்கள் (Asexual) மற்றும் பிறரை உள்ளக்கிய LGBTQA+ சமூகத்தினர் உரிமைகளை எற்றுக்கொள்ளாத மனநிலை கியூப சமூகத்திலும் உள்ளது. ஆனால், கியூபாவில் மக்கள் மத்தியில் தொடர்ச்சியான உரையாடல்களை நடத்தி, அனைத்து பாலினத்தை சார்ந்தவர்களுக்கும், பாலீர்ப்பாளர்களுக்கும் உரிய உரிமைகள் குறித்த சிந்தனை மாற்றத்தை சோஷலிச கியூபா சாத்தியப்படுத்தி இருக்கிறது.

எவ்வளவு மெனக்கெட்டு, ஜனநாயகப் பூர்வமாக மக்களுடன் உரையாடல் நடத்தி, குடும்ப அமைப்புகளில் ஜனநாயகத்தை உறுதி செய்ய கியூபா முயற்சி எடுத்துள்ளது! சோஷலிசம் என்ற மேம்பட்ட ஜனநாயக வடிவிற்குள் சென்ற கியூபா போன்ற ஒரு நாட்டினால்தான் இந்தப் பணியை முன்னெடுக்க முடிந்திருக்கிறது.
அதேபோல் மக்கள் சீனம். இதுவரை மனித சமூகத்தில் வழக்கில் இருந்த உச்சபட்ச கொடூரங்களைப் பட்டியலிட்டால், பண்டைய, மத்தியகால, காலனிய கால சீனாவில் நிலவிய அடக்குமுறைகள், சுரண்டல் வடிவங்கள் முன்னணியில் இடம்பெறும். பெண்களின் பாதங்களை, வெட்டிக் கட்டி வளர்ச்சியைத் தடுக்கும் கொடூர முறை புரையோடிப் போயிருந்த சமூகம் அது.

இப்படிப்பட்ட சீன தேசம், சோஷலிசப் புரட்சிக்கு பிறகு மக்கள் சீனமாகப் மலர்ந்த பிறகு, அங்கு 1950-ல் புதிய திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் 1950 ஆம் ஆண்டின் மே தினத்தன்று அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தின் முதல் விதி: தரகர் மூலமும், நிர்ப்பதமாகவும் நடைபெறும் நிலப்பிரபுத்துவத் திருமண முறையானது, பெண்ணுக்கு ஆண் உயர்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது; குழந்தைகளின் நலன்களைப் புறக்கணிப்பதாக அமைந்தது. அந்த மணமுறை ஒழிக்கப்படுகின்றது.
புதிய ஜனநாயகத் திருமண முறையானது, இஷ்ட பூர்வமாகவே, கணவன் – மனைவியாவதை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு ஆணுக்கு ஒரு பெண்; கணவனுக்கும், மனைவிக்கும் சம உரிமைகள்; பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் சட்டப்பூர்வமான உரிமைகளுக்குப் பாதுகாப்பு-என்ற அடிப்படையில் அமைந்த மண முறை அமுலுக்குக் கொண்டுவரப்படுகின்றது.

‘புதிய ஜனநாயகத் திருமண முறை’- எவ்வளவு அழகான வார்த்தைகள்! குடும்ப அமைப்பை ஜனநாயகப் படுத்துவதற்கான திருமண முறை. நமது நாட்டை எடுத்துக்கொள்வோம். ‘இத்தனை முறை அக்னியை சுற்றி வராவிட்டால் அது திருமணமாகாது’ என்று நீதிபதிகள் ‘புரட்சிகரத்’ தீர்ப்புகளை இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம்- சோஷலிச நாடுகளின் தனித்துவம்

சோவியத் யூனியனில் இணைந்திருந்த குடியரசுகள், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச நாடுகளாக முன்னேறிய நாடுகள் கலாச்சார ரீதியாக பெருமளவில் வேறுபட்டிருந்தன. என்றாலும், சோஷலிச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பணியைப் பிரதான குறிக்கோளாக இந்த நாடுகள் கொண்டிருந்தன. கூட்டுப்பண்ணைகள், அரசின் கட்டுப்பாட்டில் திட்டமிட்ட உற்பத்தி, அனைவருக்கும் வேலை உத்தரவாதம் போன்ற குறிக்கோள்களை நிறைவேற்றின.

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச்செயலாளருமான தோழர் பி. சுந்தரய்யா 1969 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடான ருமேனியாவிற்கு சென்று திரும்பிய பிறகு, அந்த நாட்டில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை இவ்வாறு பதிவுசெய்தார்:

“ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பம் என எங்களுக்கு தோன்றிய வீடு ஒன்றை அணுகினோம். அந்த வீட்டின் அம்மாளிடம் நாங்கள் உங்கள் வாழ்க்கை நிலையைப் பார்க்கலாமா என்று கேட்டோம். அவர் சம்மதித்து எங்களை அழைத்துச் சென்றார்.

வீட்டில் நான்கு அறைகள் இருந்தன. ஒன்று அவர்களது இரு குழந்தைகளுக்கும்; மற்றொன்று அவருக்கும், அவரது கணவனுக்கும்; ஒன்று சாமான்கள் வைக்கும் அறை; நான்காவது சமையலறை. கட்டில்களும், நல்ல மெத்தைகளும், மேஜை, நாற்காலிகளும் இருந்ததை கவனித்தோம், சமையலறையில் ஒரு வாயு ஸ்டவ்; ஒரு குளிர்படுத்தும் கருவி; சுத்தம் செய்யும் இயந்திரம் ஒன்றும் இருந்ததைப் பார்த்தோம். ஒரு ரேடியோ ஒலிபெருக்கி இருந்தததையும் பார்த்தோம். இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஒரு டெலிவிஷனை (தூரக் காட்சிகளைப் பார்க்கும் கருவி) வாங்கப் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

60 செண்ட் உள்ள இந்த இடத்திற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் வந்து இந்த வீட்டைக் கட்டினோம் என்று அந்த அம்மாள் சொன்னார். தோட்டம் ஓரளவு போட்டிருக்கிறோம். இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்றார். அவருடைய கணவன் மட்டும் கூட்டுப் பண்ணையில் டிராக்டர் ஓட்டியாக வேலை பார்க்கிறார். அவருடைய மாத வருமானம் 2300 லிப் (880 ரூபாய்), அந்தப் பெண்ணும் கூட்டுப் பண்ணையில் வேலைபார்ப்பவர் தான். அவருக்கு ஒரு நாள் வருமானம் 25 லிப் (10 ரூபாய்), அது தவிர வருடத்திற்கு காய்கறி, தானியங்கள் வேறு கிடைக்கும் என்றார். இப்பொழுது ஆப்பரேஷன் ஏதோ செய்து கொண்டதனால் வேலைகளுக்குச் செல்லவில்லையாம். அவர் வீட்டை சுற்றி ஆப்பிள், கொடிமுந்திரி வகைகளையும் வளர்த்திருந்தார்.

அவருடைய 17 வயதுப் பையன் பள்ளி இறுதியாண்டு படித்து அடுத்த ஆண்டு கல்லூரி செல்லப் போகிறான். தனது 15 வயது மகளை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவள் 9-ஆம் வகுப்புப் படிக்கிறாள். குழந்தைகள் இலவசமாகப் படிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து தருகிறது. அதிக வருமானம் உள்ள குழும்பங்களுக்கு இலவசப் படிப்பு கிடையாது. இந்த விவரங்களைத் தந்தவளும் அவரே…

…ருமேனிய மக்கள் 1944 ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி ஹிட்லரின் கைக்கூலியாக இருந்த அன்டானென்க்யூ என்ற ராணுவ சர்வாதிகாரியின் ஆட்சியைத் தூக்கியெறிந்தார்கள். ஒரு தேசபக்த விடுதலை அணியின் ஆட்சியை ஏற்படுத்தினர். இதில் முன்னாள் மன்னரும் உறுப்பினராக இருந்தார். மன்னராட்சியை ஒழித்து மக்கள் குடியாட்சியை 1947-ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்றுதான் உருவாக்கினார். இதே காலத்தில் 1947-ல் தான் இந்தியாவும் சுதந்திரம் அடைந்தது. நம் நாட்டின் நிலைமையை ருமேனிய குடியரசின் நிலைமையுடன் ஒப்பிட்டால் தொழிலாளர் வர்க்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமர்ந்த ருமேனியக் குடியரசு இந்தக் குறைந்த காலத்தில் அதாவது 25 ஆண்டுகளில் சாதித்த சாதனைகள், பெருமுதலாளிகளின் தலைமையில் அமர்ந்த இந்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு சாதித்த சாதனைகளைவிட பிரம்மாண்டமானவை என்பது கண்கூடு” (தீக்கதிர், 7.11.1969).

1969 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த நிலையோடு ஒப்பிடும் போது எவ்வளவு கண்ணியமான வாழ்க்கையை ருமேனியாவின் பாட்டாளி வர்க்கம் வாழ்ந்திருக்கிறது என்பதை உணரலாம். 1969-ல் ஒரு கிராமத்தில் மக்கள் டிவி வாங்கும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்கள்.

தோழர் சுந்தரய்யா குறிப்பிட்ட குடும்பத்தில் கணவர் டிராக்டர் ஓட்டி, மனைவி கூட்டுப் பண்ணைத் தொழிலாளி. இருவரின் ஊதியத்தில் நிறைய வேறுபாடு இருந்தது என்பதைக் காண்கிறோம். பல சோஷலிச நாடுகள் வேலைவாய்ப்பில், தொழிற்பயிற்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக்கூடாது என்ற நோக்கில் பெண்களுக்கு தொழிற்கல்வி, இயந்திரம் இயக்கும் பயிற்சிகளை அளித்தன. பல்கேரியாவின் கூட்டுப்பண்ணைகளில் 1950களில் பெண்கள் டிராக்டர்கள் ஓட்டி இருக்கிறார்கள். “நான் ஒரு பெண் டிராக்டர் ஓட்டுனர்” என்ற ஆவணப்படத்தில் பல்கேரியப் பெண் டிராக்டர் ஓட்டுனர்களின் அனுபவத்தை பல்கேரிய அரசு பதிவுசெய்து 1954-ல் வெளியிட்டிருக்கிறது.

சோஷலிச நாடுகள் பலவும் பெண் விடுதலைக்கான பணிகளில் பல்வேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தன. ருமேனியா, அல்பேனியா போன்ற நாடுகள் கருக்கலைப்பு உரிமை கூடாது என்ற மோசமான ஆணாதிக்க அணுகுமுறையைக் கடைப்பிடித்தன. ஒரே நாட்டில்கூட குறிப்பிட்ட காலகட்டத்தில் சில முற்போக்கு அனுகுமுறைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

ஆனாலும், ஆண்களைச் சாராமல் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தோடு வாழும் நிலையை தங்கள் நாடுகளில் உறுதிசெய்தன. ஆண்களும், பெண்களும் ஒரே அளவில் அரசின் உரிமைகளைப் பெற்றார்கள். ஒரு நாட்டில் பெண்களுக்கு வருமான வாய்ப்பு இருக்கிறது, அரசு சமூகப் பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கிறது, வயோதிகம், இயலாமை, உடல் நலம் பாதிக்கப்பட்ட காலங்களில் அரசின் அரவணைப்பு உள்ளது என்றால், அந்த நாட்டில் பெண்கள் பொருளாதாரக் காரணங்களினால் மோசமான, வன்முறை நிறைந்த, மன நிறைவைத் தராத, காதலும், அன்பும் அறவே இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள்.

கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, யூகோஸ்லாவியா, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகள் சோஷலிச நாடுகளாக இருந்த காலத்தில், பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டன. இதனால் அந்நாட்டுப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் உறவுகள் பொருளாதாரத்தில் இருந்து பிரிக்கப்பட்டிருந்தன.

கிழக்கு, மேற்கு ஒரு ஒப்பீடு

கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி இரண்டிலுமே ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் காலங்காலமாக வாழ்ந்துவந்தார்கள். ஒரே கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த ஜெர்மானியர்களே இரண்டு பகுதிகளிலும் குடிமக்கள். ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோஷலிசப் பாதையைத் தேர்வு செய்கின்றன. 1949-ல் கிழக்கு ஜெர்மனி, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு (German Democratic Republic) என்ற நாடாக மலர்ந்து, சோஷலிசப் பாதையில் பயணிக்கிறது. மேற்கு ஜெர்மனி முதலாளித்துவ ஏகாதிபத்திய பாதையிலேயே தொடர்கிறது. இரண்டு நாடுகளிலுமே ஒரே மக்கள். ஆனால், அவர்களின் அரசியல் பொருளாதார அமைப்பு மட்டும் வெவ்வேறானது, நேரெதிரானது.

1949 முதல் 1989 வரை கிழக்கு ஜெர்மனி சோஷலிச நாடாகத் திகழ்ந்தது. இந்த 40 ஆண்டு காலத்தில் இரு நாடுகளிலும் பெண்கள் இருந்த நிலையை ஒப்பிட்டால், இரண்டு வகையான அரசுகளின் தன்மையை நம்மால் வேறுபடுத்தி உணர முடியும்.
1957 ஆம் ஆண்டு வரை மேற்கு ஜெர்மானியப் பெண்கள் தங்களுடைய கணவர்களின் அனுமதியோடுதான் வேலைக்குச் செல்ல வேண்டும். 1977 வரை பெண்களின் வேலைவாய்ப்பு அவர்களின் குடும்பக் கடமைக்கு இடையூறாக இருக்கக் கூடாது. இந்த ஒடுக்குமுறைகள் எல்லாம் சட்ட விதிமுறைகளாகவே இருந்தன.

இன்றைக்கும் நமது நாடு உட்பட பெரும்பாலான சமூகங்களில், வேலைக்குச் செல்வதற்குப் பெண்கள் தங்கள் குடும்பத்தின் அனுமதியைச் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது என்பதே, எதார்த்த சூழல். என்றாலும், ‘பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சட்டப்படி கணவர்களின் அனுமதி தேவை’ என ஓர் அரசே நிர்பந்திப்பது என்பது, எவ்வளவு மோசமான அடக்குமுறை. இத்தகைய அடக்குமுறையை முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடாகத் திகழும் மேற்கு ஜெர்மனி ஒரு காலத்தில் கடைப்பிடித்தது.

சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், ஆளும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளின் வளர்ச்சிக்கான கருவியாக அரசு இருக்கும்போது, சுரண்டல் முறைகளுக்கு அவசியமான பிற்போக்குத்தனமான கலாச்சாரங்களை அரசு காப்பாற்றும். அதைத் தனது கடமையாகவே நிறைவேற்றும். பெண்களுக்குரிய கண்ணியமான வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யாது. ‘பெண்களின் இடம் வீடு’ என்பதைக் காலந்தோறும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்.

அதே சமயம், தான் கட்டிக்காப்பாற்றும் முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்குக் குறைந்த கூலிக்குப் பெண்களின் உழைப்பு தேவைப்படுகிறது என்றால், இதே முதலாளித்துவ அரசு, பெண்களை வீட்டிலிருந்து உற்பத்தித்துறையின் வேலைவாய்ப்புகளுக்கு இழுத்துவரும். உலகப் போர் சமயங்களில் இதுதான் நடந்தது.
ஆண்கள் இராணுவப் பணிகளுக்குச் செல்ல வேண்டி இருந்த சூழலில், உற்பத்தித்துறைகள் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பையே பிரதானமாக நம்பி இருந்தன. அமெரிக்கா, இதே மேற்கு ஜெர்மனி போன்ற முதலாளித்துவ நாடுகளில் போர்க்காலங்களில் பெண்கள் வேலைக்குச் சென்றார்கள். போர் முடிந்ததும் பெண்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை ஆண் தொழிலாளர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
மேற்கு ஜெர்மனியில் போருக்குப் பிறகு, மீண்டும், ‘கணவர் அனுமத்தித்தால்தான் வேலை! இல்லையேல், வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டும்!’ என்ற பழைய நிலை. விளைவு? ஆடுமாடு போன்ற அடிமை வாழ்க்கைதான் பெண்களுக்கு. மேற்கு ஜெர்மனியின் சட்டம் முதலாளித்துவ அரசு பெண்களின் மீது ஏவிய அடக்குமுறைக்கு ஓர் உதாரணம்.

குழந்தைகளின் பள்ளி நேரம், குழந்தைகள் பாதுகாப்பங்களுக்கு அரசு பொறுப்பேற்காத நிலை, பாரபட்சமான சட்டங்கள் இவை எல்லாம் மேற்கு ஜெர்மானியப் பெண்களை, வேலைக்குச் செல்லவிடாமல் வீடுகளிலேயே அடைத்து வைத்தது. மேலும், மேற்கு ஜெர்மனி பின்பற்றிய பொருளாதாரப் பாதையில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக்கொம்பு. இருக்கிற குறைவான வேலைவாய்ப்புகளை ஆண்களே ஆக்கிரமித்துக் கொண்டார்கள். எனவே, மேற்கு ஜெர்மானியப் பெண்களின் இடம் பெரும்பாலும் வீடு என்றானது. குழந்தைகள், அடுப்படி, தேவாலயம் – கிண்டர், கூச்சே, கிர்ச்சே! (Kinter, Kuche, Kirche- Children, Kitchen, Church) இதுதான் பெண்களின் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என ஜெர்மனியின் மன்னராட்சி வலியுறுத்தியது. ஹிட்லரும் இதுதான் பெண்களின் வாழ்க்கைத் தர்மம் என விதித்தான். பாசிஸ்ட் ஹிட்லரை சோவியத் செம்படை வீழ்த்திய பிறகும், ‘ஜனநாயக’ மேற்கு ஜெர்மனி, பெண்களின் வாழ்க்கையாக கிண்ட்ர், கூச்சே, கிர்ச்சேதான் என்றே விதித்தது.

கிழக்கு ஜெர்மனியின் சோஷலிச அரசோ, திட்டமிட்ட பொருளாதாரம், மொத்த உற்பத்தி சாதனங்களும் உழைக்கும் மக்களின் பொதுச் சொத்து அரசே உற்பத்தியை நிர்வகிப்பது – என்ற ஏற்பாட்டிற்குள் சென்றது. ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது உரிமையாகவும், கடமையாகவும் வகுக்கப்பட்டது. அனைத்து வேலைவாய்ப்புகளையும் அரசே உருவாக்கியதால், பாலினப் பாரபட்சம் இல்லாத ஊதியம், கண்ணியமான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு உறுதிசெய்யப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பகம் போன்ற பெண்களின் குடும்ப வேலைப்பளுவைக் குறைப்பதற்கான கட்டமைப்புகளில் அரசு கவனம் செலுத்தி, பெண்களைப் பொது வேலைவாய்ப்பிற்குள் கொண்டுவந்தது. மேற்கு ஜெர்மானியப் பெண்களின் வாழ்க்கை, ‘குழந்தை, அடுப்படி, தேவாலயம்’ என அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கையில், ’தரமான தொழிற்கல்வி, கண்ணியமான வேலைவாய்ப்பு, கண்ணியமான மனித வாழ்க்கை’ – இவை கிழக்கு ஜெர்மானியப் பெண்களுக்கு சாத்தியமானது.

குடும்பத்தின் இறுக்கமான பிடியில் இருந்து விடுபட்டுப் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்புகள் கிழக்கு ஜெர்மனிப் பெண்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நிகழந்தன.

  1. ‘புதிய சோஷலிச கிழக்கு ஜெர்மன் சமுதாயத்தில் பெண்களின் சார்புத்தன்மை குறையும், பெண்களின் சுயமான வாழ்க்கைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், இது பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும். திருமணமாத தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்’ -என்பதையெல்லாம் கணித்து, கிழக்கு ஜெர்மனியின் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு அரசு பல்கலைக்கழக கல்விநிலையங்களில் குழந்தைகளுடன் வசிக்கும் மாணவ தாய்மார்களுக்குப் பிரத்யேகமான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்தது.
  2. 1989-ல் கிழக்கு ஜெர்மனியில் திருமண உறவுகளில் இல்லாமல் குழந்தைகளுக்குத் தாய்மார்களாக இருந்த பெண்களின் சதவிகிதம் 34%. மேற்கு ஜெர்மனியிலோ இந்த எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே.

ஒரு சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை, திருமணம் செய்துகொள்ளாத தாய்மார்களின் எண்ணிக்கை உயர்ந்தால், திருமணம், காதல் வாழ்க்கை, வாரிசுகள், குழந்தைகள் பற்றிய சமூகக் கண்ணோட்டம் அந்தச் சமூகத்தில் முற்போக்காக மாறிக்கொண்டு வருகிறது என்று பொருள். ‘அய்யகோ! இதெல்லாம் கலாச்சாரச் சீரழிவு!’ என அந்தச் சமூகத்தில் கலாச்சாரக் காவலர்கள் கூச்சல் போடுவது குறைவாக இருக்கும். அல்லது, அப்படியான கலாச்சாரப் பாதுகாப்பு கூச்சல்களை அங்கு பெண்கள் சட்டை செய்யவே மாட்டார்கள். ‘திருமணம் செய்துகொள்ளாமல் காதல் உறவுக்குள் செல்வது இழுக்கு, அப்படியான உறவில் குழந்தை பிறப்பது இழுக்கு’, ‘தந்தை இல்லாமல் தாய் மட்டுமே குழந்தையை வளர்க்க முடியாது’, ‘திருமணம்’ என்ற ஏற்பாடு குழந்தைப்பேறுக்கு அவசியம்’ – இப்படியான அழுத்தங்கள் சமூகத்தில் குறைந்திருக்கும். இந்தச் சமூகங்களில் பெண்கள் உண்மையாகவே பாலியல் சுதந்திரம், காதல் சுதந்திரம் உடையவர்களாக இருப்பார்கள். ‘சோஷலிச சமூகங்களில் காதல், திருமணம் எல்லாம் மனிதர்களின் தனிப்பட்ட விஷயங்களாக இருக்கும்’ என ஏங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம் நூலில் கூறியதைப் பார்த்தோம். அந்தக் கூற்று சோஷலிச சமூகத்தில் மெய்யாகி வந்ததை கிழக்கு ஜெர்மனியின் பெண்கள் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

3.பொதுவாக கிழக்கு ஜெர்மனியில் பொதுவேலைவாய்ப்பிற்குள் இருக்கிற பெண்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா, இல்லையா என்பதே வெளியில் தெரியாத அளவிற்கு, அவர்களால் அலட்டிக்கொள்ளாமல், நிம்மதியாக, கவலையின்றி பணியில் ஈடுபட முடிந்தது.

தலைகீழ் நிலை

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட காலத்திற்கு முன்பாக ஒரு சில ஆண்டுகளும், மேற்கு ஜெர்மனியுடன் இணைந்து ஒரே நாடாக, ‘கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான சந்தை’ என்ற பாதைக்குள் கிழக்கு ஜெர்மனி சென்ற பிறகு ஒரு சில ஆண்டுகளும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மன் பகுதிகளில் பணியாற்றியவர் பேராசிரியர் காட்ஸீ. இந்தக் காலகட்டத்தில்க் கண்கூடாக கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி பெண்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களைப் பார்த்தவர். இவருடைய பல்கேரிய நண்பர் ஒருவர் கிழக்கு ஜெர்மனியின் லீப்சிக் நகரில் 1990களில் படிப்பை முடித்தவர். இவர், தன்னுடன் படித்த இரண்டு மாணவிகளுக்குக் குழந்தைகள் இருந்த விவரமே தனக்கு மூன்று ஆண்டுகள் கழித்துதான் தெரியும் என்று சொல்வாராம்.

கிழக்கு ஜெர்மன் நாட்டில் திருமணம், காதல், குழந்தைகள் தனிப்பட்ட விவகாரங்களாக இருந்திருக்கின்றன; இந்த அம்சங்கள் பெண்களின் தொழில் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை; குழந்தை வளர்ப்பை சமூகக் கடமையாகக் கருதி கிழக்கு ஜெர்மனின் சோஷலிச அரசு அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் நிம்மதியாக வேலைவாய்ப்பில் இருந்திருக்கிறார்கள். பொருளாதார சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமான தனிப்பட்ட அந்தரங்க வாழ்வு- இவற்றைக் கிழக்கு ஜெர்மன் பெண்கள் பெற்றிருந்தார்கள்.

பெர்லின் சுவர் தகர்ப்புக்குப் பிறகு, ஜெர்மனி ஒரே நாடான பிறகு, கிழக்கு ஜெர்மனியின் முன்னாள் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப்பட்டன. தனியார்கள், ‘எதற்கு இவ்வளவு தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்க வேண்டும்’ என்று சொல்லி ஆட்குறைப்பு செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டபோது பெண்கள் தான் பெருமளவில் வேலை இழந்தார்கள். குழந்தைப் பாதுகாப்பகங்களை இனி அரசு நடத்திடாது.

நிதிப்பற்றாக்குறை நிரந்தரமாக இருக்கப் போகிறது. முதலாளித்துவ அரசு செலவீனங்களைக் குறைத்திட வேண்டும். எனவே, குழந்தைப் பாதுகாப்பங்கள் கெடுவைத்து மூடப்பட்டன. ‘பாரம்பரிய ஜெர்மானிய வழக்கப்படி பெண்கள் மீண்டும் குடும்பங்களைக் கவனித்துக்கொள்ளட்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
கிழக்கு, மேற்கு ஜெர்மனி இணைப்புக்குப் பிறகான மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் வாயிலாக, கிழக்கு ஜெர்மானியப் பெண்கள் மத்தியில் குழந்தைப் பிறப்பு விகிதம் 60% வரை குறைந்தது என்பது தெரியவந்தது. சுதந்திர சந்தை உலகில் எல்லா சேவைகளுக்குமே பணம். எனவே, குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் நமது பொருளாதார நிலைக்கு ஒத்துவராது என்ற எண்ணம் கிழக்கு ஜெர்மானியப் பெண்களின் மனதில் பதியத் தொடங்கி இருக்கலாம்.
‘கெட்டதிலும் சில சிறிய நல்லது உண்டு’ என்ற ஒரு சொலவடை உண்டு. 1990-களுக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனிப் பகுதிக்கு வேலைதேடி கிழக்கு ஜெர்மானியப் பெண்கள் செல்லத் தொடங்கினார்கள். இந்தப் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பம் போன்ற வசதிகளுக்குப் பழக்கப்பட்டவர்கள். எனவே, ‘எங்களுக்கு கிரெச், பாலர் பள்ளிகள் வேண்டும்!’ என அழுத்தம் கொடுத்தார்கள். இவர்களால் மேற்கு ஜெர்மானியப் பெண்களுக்கும் சில வசதிகள் கிடைத்தன.

‘1989க்கு முன்பு மேற்கு ஜெர்மானியப் பெண்கள் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. நல்ல வேளை இந்தப் பெண்கள் இங்கு வந்தார்கள். இவர்கள் வராவிட்டால் என்னால் வேலைக்கு வந்திருக்கவே முடியாது. நான் வேலைக்கு வந்ததற்கு இந்த கிழக்கு ஜெர்மானியப் பெண்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!’ – ஸ்டட்கார்ட்டில் ஒரு புகழ்பெற்ற கல்வி நூல் பதிப்பகத்தில் உயர்பொறுப்பில் பணியாற்றிய ஒரு பெண்ணின் பதிவு இது. பேராசிரியர் காட்ஸீயிடம் அந்தப் பெண் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக ருமேனியாவில் ஒரு கிராமத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றி தோழர் பி.சுந்தரய்யாவின் பகிர்வு வாயிலாக அறிந்துகொண்டோம் அல்லவா? 1990-களில் சோவியத் சோஷலிச முகாம் தகர்க்கப்பட்டதற்குப் பிறகு இதே ருமேனியாவில் வேலைவாய்ப்புகள் இன்றி மக்களின் வாழ்க்கை நிலை ‘பராரி’ நிலைக்குச் சென்றதையும், பெண்கள் நிலை படுபாதாளத்திற்குள் சென்றதையும் பார்ப்போம்!

1989-ல் பெர்லின் சுவர் தகர்ப்பிற்குப் பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் புதிய அரசாங்கங்களுக்கு புதிய ‘ஜனநாயக’ அரசுகள் என்று முதலாளித்துவ உலகம் பெயர் சூட்டியது. பல கட்சித் தேர்தல் முறையைக் கொண்டு ஜனநாயகத்தை அளவிடும் முறைப்படி, இந்த நாடுகள் ‘ஜனநாயக’ நாடுகள் ஆகிவிட்டன. இந்த நாடுகளின் புதிய நாடாளுமன்றங்கள், உலகப் பெரு முதலாளிகள் போட்டிப் போட்டு வாங்குவதற்கு வசதியாக, அதுவரை நாட்டின் உழைப்பாளி மக்கள் பாடுபட்டு கூட்டாக உருவாக்கி வைத்திருந்த பொதுச்சொத்து வளங்களை ஏலமிட்டன. இந்தப் புதிய ‘ஜனநாயக’ அரசுகளின் நாடாளுமன்றங்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை எல்லாம் இழுத்து மூடின. வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. பெண்கள் வேலையில்லாமல் ஆண்களை, குடும்பத்தைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற புராதன நிலைக்குள் மீண்டும் தள்ளப்பட்டார்கள். கண்ணியமான வாழ்க்கை பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.

“ஃபோர்னோ கடைகள், ஃபோர்னோ இதழ்கள், மறைவுக் காட்சி விடுதிகள், ஆடை அவிழ்ப்புக் காட்சிகள், வேலையின்மை, அதிகரித்துக்கொண்டே செல்லும் வறுமை- இவற்றிற்கு மத்தியில் நாங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறோம். புடாபெஸ்ட் நகரத்தை, ‘காதல் நகரம்’ ‘கிழக்கு ஐரோப்பாவின் பேங்காக்’ என ஊடகங்கள் அழைக்கின்றன. ருமேனிய பெண்கள், ருமேனிய யூகோஸ்லாவியா எல்லையில் ஒற்றை டாலருக்காக தங்கள் உடலை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். இவ்வளவு கொடுமைகளை எங்களுக்கு இழைத்துவிட்டு, எங்கள் தேசியவாத அரசுகள், எங்களுக்குக் கருக்கலைப்பு உரிமைகள் கிடையாது என்று மிரட்டுகின்றன” ஸ்லவேன்கா டிராக்கூலிச் என்ற குரொவேசிய பெண் பத்திரிகையாளரின் பதிவு இது.

சோவியத் யூனியனைத் துண்டு துண்டாகக் கழற்றி எறிந்தபிறகு, ஸ்வீட் கேப்பிடலிசம் பெண்களுக்கு அளித்த பரிசு எத்தகையது என்பதை உணர முடிகிறதா?

சோஷலிச அரசை ஸ்தாபித்த பிறகும், மார்க்சிய லெனிய சித்தாந்தைத்தை சமரசம் இல்லாமல் பற்றிக்கொண்டு பயணிக்க வேண்டும். சவால்களை தொய்வில்லாமல் எதிர்கொண்டு முன்செல்ல வேண்டும். முதலாளித்துவ அமைப்பின் கருத்துகள் திருத்தல்வாத கருத்துகளாக கம்யூனிஸ இயக்கத்திற்குள் ஊடுருவாமல் விழிப்போடு செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன அமைப்பில் ஜனநாயக மத்தியத்துவத்தை முறையாகப் பின்பற்றிட வேண்டும். மக்களுக்கு கம்யூனிஸத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்திட, வலுப்படுத்திட வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்தையும் கம்யூனிஸ இலக்கை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

இத்தகைய பணிகளை பக்குவத்தோடு முன்னெடுத்துச் செல்லும் சோஷலிச அரசால், கம்யூனிஸ்ட் கட்சியால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையால், வர்க்கங்களை ஒழிக்கும் கடமையோடு, பெண்ணடிமை முறை உள்ளிட்ட சமூகத்தின் பண்டைய கேடுகளையும் ஒழிக்கும் பணியை சிறப்பாக முன்னெடுக்க முடியும்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதைப் போல சோஷலிச சமுதாயத்திற்கு அடிப்படையான மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தைக் கைவிட்டால், முதலாளித்துவ ஏகாதிபத்திய சூழலைத் தாக்குப்பிடிக்க இந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது என முதலாளித்துவ சிந்தனைப் போக்கில் சோஷலிச அரசுகள் சென்றால் என்ன ஆகும்? ஓர் அழகிய சோஷலிச உலகத்தை, உதாரண உலகத்தைப் பாட்டாளி வர்க்கம் இழக்கும்.

சோவியத் சோஷலிச முகாம் தகர்க்கப்பட்டது என்பது அந்த முகாமில் இருந்த சோஷலிச நாடுகளின் பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டும் இழப்பல்ல. உலகின் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்திற்கும் மிகப் பெரும் இழப்பு.

  • 1940-60களில் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகள் விடுதலை பெற்றன என்றால், உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசான சோவியத் யூனியனின் இருத்தலும், நாடுகளின் விடுதலை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து அதன் வலியுறுத்தலும், வழிகாட்டலும் தான் காரணம். லீக் ஆஃப் நேஷன்ஸ், அதைத் தொடந்து ஐ.நா அமைப்பு உருவாக்கப்பட்டது, மனித உரிமைகளைப் பிரகடனம் நடந்தது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது எல்லாம் சோவியத் யூனியன் என்ற பிரம்மாண்டமான அமைப்பு இல்லாத நிலையில் சாத்தியம் ஆகி இருக்காது.
  • சோவியத் சோஷலிச முகாம் என்ற வலுவான அரண் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு இருந்ததன் விளைவாகவே, தொழிலாளர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளித்துவ அரசுகளும் தள்ளப்பட்டன. வைப்புநிதி, ஓவ்வூதியம், மகப்பேறு விடுப்பு போன்ற உரிமைகளை உலகப் பாட்டாளி வர்க்கம் பெற்றதற்கும், ‘மக்கள் நலனுக்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்ற சிந்தனை உலகில் வலுப்பெற்றதற்கும் சோவியத் யூனியன், சோஷலிச முகாம் வலுவாக இருந்ததே காரணம்.
  • பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பெண்ணின் பொருளாதார விடுதலையில் பெண் விடுதலை தொடங்குகிறது என்ற சிந்தனை உலகம் முழுவதும் பரவி, வலுப்பெற்றதற்கு சோவியத் யூனியன் பெண்களின் விடுதலை, மேம்பாடு குறித்து நிறைவேற்றிய சாதனைகள் காரணம்.

இன்றைக்கு நவீன தாரளமய உலகில், வலுவான சோஷலிச முகாம் இல்லாத நிலையில், இனி அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் ஒப்பந்தப் பணிகள் மட்டுமே என்ற நிலை. ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்திற்கும் கண்ணியமான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பெண்கள்தான் மிகமோசமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். வீடுகளிலும், சமூகத்திலும் அந்தஸ்தில்லாத அடிமைகளாக, இரண்டாந்தர, மூன்றாந்தர குடிமக்களாக வலம்வருகிறார்கள். சோவியத் சோஷலிச முகாம் தகர்க்கப்பட்டதால் உலகப் பாட்டாளி வர்க்கம் தனது பாதுகாப்பு அரணை இழந்தது. பாட்டாளி வர்க்கத்திலேயே பெண்களுக்கு மிகப்பெரும் வீழ்ச்சி! வலி!

-தொடரும்…

ஆதாரங்கள்:

ருமேனியாவில் கண்ட புதுமை, பி.சுந்தரய்யா, தீக்கதிர், 7.11.1969.
Address of Dr. Aleida Guvera at the All-India Conference of AIDWA, Trivandrum, 2023, Address of U. Vasuki, at the Felicitation meeting organised for Dr. Aleida Guevera and Dr. Estephania Guevera, Chennai, Jan 2023
சீன மக்கள் குடியரசின் திருமண சட்டம், ஜனசக்தி பிரசுராலயம், 1955
Why women have better sex under socialism and other arguments for economic independence, Kristen R. Ghodsee

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *