penandrum-indrum webseries-16-by-narmadha devi அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
penandrum-indrum webseries-16-by-narmadha devi அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி

தொழில்வளர்ச்சியில் நிலக்கரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் 1850-களில் ரயில்வேயும், நிலக்கரி தொழிலும் ஒருங்கே வளர்ச்சியடையத் தொடங்கின. 1774 ஆம் ஆண்டிலேயே வங்கத்தின் கவர்னர் வாரன்ஹேஸ்டிங்ஸிடம் ஒரு சில ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று ராணிகஞ்ச் பகுதியில் சுரங்கங்களை அமைத்தார்கள். 1777-ல் இவர்கள் செய்த உற்பத்தி வெறும் 90 டன்கள்தான். முறையான உற்பத்தி என்பது 1830-களுக்குப் பிறகே சாத்தியமாகத் தொடங்கியது. ரவீந்திரநாத் தாகூரின் பாட்டனாரான பாபு துவாரகநாத் தாகூரின் பெங்கால் நிலக்கரி கம்பனி தொடக்க காலத்தின் முக்கிய பெருநிறுவனமாக விளங்கியது. இந்தக் காலகட்டத்தில் எல்லாம் நிலக்கரிக்கான தேவை மிகக் குறைவுதான். 1846 ஆம் ஆண்டில் 91,000 டன்கள் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. கல்கத்தாவிற்கும் நிலக்கரி பகுதியான ராணிகஞ்சிற்கும் இடையே 1854-ல் ரயில் பாதை வந்ததும் மிகப்பெரும் மாற்றங்கள் நடந்தன.

1860-களில் ராணிகஞ்சில் 50 சுரங்கங்கள் செயல்பட்டன. அன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சம் டன் நிலக்கரியில் 99% இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்பட்டது. 1880 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி 10 லட்சம் டன்கள்; 1900ல் உற்பத்தி 60 லட்சம் டன்களைத் தொட்டது. 1912-ல் ஒரு கோடியே 20 லட்சம் டன்கள்; 1917-ல் 2 கோடியே 20 லட்சம் டன்கள். ஜப்பானிற்கு அடுத்து இந்தியாதான் ஆசியாவிலேயே பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக விளங்கியது.

1924 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரி வளங்கள் 54 பில்லியன் டன்கள் என்று கணிக்கப்பட்டது. (இங்கிலாந்தின் நிலக்கரி வளம் 189 பில்லியன், ஜப்பானுடையது 8 பில்லியன்). வங்கம், பீகார், ஒரிசா பகுதிகளில் நிலக்கரி வளம் அபிரிமிதமாக இருந்தது. என்றாலும், அஸாம், மத்திய இந்தியா, ஹைதராபாத் மாகாணங்களிலும் நிலக்கரி கிடைத்தது. 1927 ஆம் ஆண்டு அறிக்கைபடி ஜாரியா, ராணிகஞ்ச், பொக்காரோ ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே 90 சதவிகித நிலக்கரி உற்பத்தி நடந்தன.

மனித உழைப்பே பிரதானம்

1850-களில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்கப்பணிகள் பெரும்பாலும் மனித உழைப்பை அதிகம் கோருகிற பணியாகவே இருந்தன. நிலக்கரியை வெட்டியறுத்து, நிலப்பரப்புக்கு தூக்கி வருவது, நிரப்புவது உள்ளிட்ட பணிகள் எல்லாமே தொழிலாளர்களால் பெரிதாக இயந்திரங்களின் துணை ஏதும் இல்லாமல் செய்யப்பட்டன. தொடக்க காலத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட பவுரி சமூகத்து மக்கள், பிறகு தன்கர், கோரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள்தான் சுரங்கப் பணிகளுக்குச் சென்றார்கள். இந்தச் சமூகங்களில் பெண்களும் சுரங்கத் தொழிலாளர்களாக வேலைக்குப் போனார்கள். பவுரி மக்களைத் தொடர்ந்து சந்தால் பர்கானா பகுதியிலிருந்து (அப்போது வங்கத்தின் பகுதி; இப்போது ஜார்கண்ட்டைச் சேர்ந்தது) சந்தால் பழங்குடியினரை, ‘விவசாய நிலம் தருகிறோம், அங்கேயே தங்கி நீங்கள் பணியாற்றலாம்’ என்று அழைத்துவந்து பணியாற்ற வைத்தார்கள். சந்தால் சமூகத்திலும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

நிலக்கரியை கீழிருந்து மேலே இழுப்பது, சாய்வான பாதைகளில் தலையில், இடுப்பில் நிலக்கரியை கூடைகளில் சுமந்து நிலப்பரப்புக்கு எடுத்துச் செல்வது, நிலக்கரியைப் பிரிப்பது, நிலப்பரப்பில் தள்ளுவண்டிகளில் நிலக்கரியை இழுத்துச் செல்வது, சரக்குவண்டிகளில், ரயில்பெட்டிகளில் நிரப்புவது ஆகிய பணிகளில் பெண்கள் ஈடுபட்டார்கள். ஆண்கள் நிலக்கரியை வெட்டுவது, சுரங்கம் தோண்டுவது போன்ற வேலைகளையும் நிலக்கரி நிரப்பும் பணிகளையும் செய்தார்கள்.

கடுமையான பணிகளில் பெண்கள்

தொடக்க காலத்தில் நிலக்கரிச் சுரங்கங்களில் கீழே இரும்புச் சங்கிலிகளில் இணைக்கப்பட்டிருக்கும் நிலக்கரி நிரப்பட்ட வாலிகளை மேலிருந்து சகடையை சுழற்றி இழுக்கும் பணியைச் செய்தது பவுரி சமூகத்துப் பெண்கள். இந்த இழுவை கருவிக்கு மர-ஜின் (Wooden gins) என்று பெயர். பர்துவான் மாவட்ட செசன்ஸ் நீதிபதியின் மனைவி திருமதி பென்தால் இது குறித்து தனது நினைவுப்பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். “இந்தப் பெண்கள் சகடைகளை (Windlass) சுழற்றி வாலிகளை இழுப்பதில் திறமையானவர்கள். 32 பெண்கள் லாவகமாக முன்னே நகர்ந்து, குதித்து ஓடி, சக்கரத்தை இழுத்து ஒரே தருணத்தில் இயக்குவார்கள். கடுமையான காட்டுக் குரலில் பாடிக்கொண்டே இந்த வேலையை அவர்கள் செய்வார்கள்” என்கிறார். உண்மையில் இந்தப் பெண்கள் வேலையை நிறுத்தினால் சுரங்கப் பணிகள் முழுமையும் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலை. ஆனால், ‘இந்தப் பெண்கள் வாயாடிகள், வம்பு செய்பவர்கள், இவர்களுக்குத் தண்டனையாக சிறிதுநேரம் குடோனளில் அடைத்துவைப்பேன்’ என ஒரு ஸ்காட்லாந்து பொறியிலாளர் திருமதி பென்தாலிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

பல்வேறு தொழிற்சாலைகளில் நீராவி இயந்திரங்களை இயக்க அன்றைக்கு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் நிலக்கரியைத் தோண்டி எடுத்த நிலக்கரி சுரங்கங்களிலோ, பணியை எளிமையாக்கிட, தொழிலாளர்களின் சுமையைக் குறைத்திட, இயந்திரங்களைக் கொண்டு வருவதில் கம்பனிகள் அக்கறை காட்டவில்லை. ‘சுமைதூக்க, மாடு மாதிரி உழைக்கத்தான் இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களே! இயந்திரங்கள் பெரிய செலவீனம், மனிதர்களைப் பயன்படுத்துவதுதான் சிக்கனம்!’ -இதுவே முதலாளிகளின் அணுகுமுறையாக இருந்தன. பிற்காலங்களில் நிலக்கரியை வெட்டுவதற்கு, மேலே இழுப்பதற்கு, கடத்துவதற்கு கருவிகள் வந்தன என்றாலும், பிரிட்டனின் சுரங்கங்களை ஒப்பிடும்போது இந்தியாவில் அந்த மாற்றங்கள் மிகமிக மெதுவாகவே நடந்தன.

1913-ல்கூட கல்கத்தாவில் இருந்து 120 மைல்கள் தொலைவில் இருந்த ஒரு சுரங்கத்தில் மர-ஜின்களைப் பயன்படுத்தி நிலக்கரியை மேல் இழுக்கும் பணி நடந்தது என்கிறார் ‘இந்தியாவில் முதலாளித்துவ நிறுவனத்தின் வளர்ச்சி’ நூலின் ஆசிரியர் டி.ஹெச். புக்கானன். ‘1927-ஆம் ஆண்டில், ஒரு சுரங்கத்தில் 60 அடி ஆழத்துக்கு மர-ஜின் இயக்கப்பட்டதை நான் கண்டேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 1928 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஏறத்தாழ 2100 நிலத்தடி கன்வேயர்கள் இயக்கப்பட்டன, ஆனால், 1929 ஆம் ஆண்டில் இந்தியாவிலோ நிலத்தடியில் கன்வேயர்களே இல்லை என்ற நிலைதான் என்கிறார் புக்கானன்.

சுரங்கத்தொழிலில் கதை வேறு

1895 ஆம் ஆண்டில் தொழிற்சாலை சட்டத்திற்குள் வந்த மொத்த ஆலைத் தொழிலாளர்களில் ஆண்களின் சதவிகிதம் 79.1 ஆக இருக்க, பெண்களின் சதவிகிதம் வெறும் 14.7 மட்டும்தான். ஆனால், இதே காலகட்டத்தில் மிகக்கடுமையான சுரங்கத்தொழிலிலோ பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 1892 ஆம் ஆண்டில் சுரங்கத்தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் சதவிகிதம் 39. அதுவும் நிலத்தடிப்பணிகளில் இவர்கள் 60 சதவிகிதம் வகித்தார்கள். தரைப்பணிகளைக் காட்டிலும் நிலத்தடிப்பணிகளில் அதிகம் பணியாற்றினார்கள். ‘கடுமையான பணிகளை, அடிபணிந்து செய்யும் தன்மை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம். கூலியும் சொற்ப அளவு கொடுத்தால் போதும்’ இந்தப் புராதனச் சிந்தனையே, சுரங்கப்பணிகளில் பெண்கள் வேலைக்கு எடுப்பதற்கான அடிப்படையாக இருந்தது.

பெண் தொழிலாளர்கள் குறுகலான, சாய்வான பாதைகளில் தலையில் கூடைகளில் நிலக்கரியைப் சுமந்து எடுத்துச்செல்ல வேண்டும். உயரம் குறைவான பாதைகளில் இடுப்பில் கூடையை வைத்துக்கொண்டு, தலையை ஒரு பக்கமாக இடுப்புவரை சாய்த்து தூக்கிச் சென்றிருக்கிறார்கள் பெண் தொழிலாளர்கள். 30-40 கிலோ எடையை அரை கிலோமீட்டர் தூரமெல்லாம் சுமந்தார்கள். சிறுமிகளும் எடைதூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு, வாரத்துக்கு இவ்வளவு நிலக்கரியை அள்ளி இருக்க வேண்டும், சுமை தூக்கியிருக்க வேண்டும், நிரப்பியிருக்க வேண்டும் என்று அளவுகள் உண்டு. இவ்வளவு அளவுக்கு, இவ்வளவு கூலி என்ற உருப்படி கணக்கில்தான் சுரங்கங்களில் கூலி உழைப்பு இருந்தது. குழுவாக வேலை பார்த்தாலும், ஒரு குழு இவ்வளவு டன்களை இவ்வளவு காலத்திற்குள் எட்டியிருக்க வேண்டும், என்ற உருப்படி அடிப்படையிலான பணியாகத்தான் இருந்தன.

ஒரு டன் கொள்ளவு கொண்ட பெரிய வண்டிகளில் நிலக்கரியை நிரப்ப வேண்டும். கணவன் மனைவி இரண்டு பேர் கொண்ட ஒரு ஜோடி ஒரு நாளைக்கு 4 வண்டிகளை நிரப்பினால் 1 ரூபாய் 4 அணா கூலி பெறுவார்கள். (1930 நிலவரம்). வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறோம். எல்லா நாட்களிலும் வண்டிகளை நிரப்பிடும் அளவிற்கு நிலக்கரி கிடைக்காது. குறைவாக நிரம்பினால் பாதி கூலி வரை பிடித்தம் செய்யப்படும். குறிப்பிட்ட அளவை நிரப்ப முடியாமல் போனால் 2, 5, 8 அணாக்கள் என தண்டம் வசூலிக்கும் முறையும் இருந்தது. ‘சென்ற வாரம் நான் 5 அணா கட்டினேன்.’ – அசன்சாலின் ஒரு சுரங்கத்தில் பணியாற்றிய ஆண் தொழிலாளி காசியா இவ்வாறு இந்தியாவில் தொழிலாளர்கள் குறித்த ராயல் கமிஷனிடம் (1929-1931) சாட்சியளித்திருக்கிறார். காலை 6 மணி- மாலை 6 மணி, மாலை 6 மணி-காலை 6 மணி, என இரண்டு ஷிஃப்டுகளில் வேலை நடக்கும். வண்டி நிரம்புவதற்கு நேரம் பிடித்தால், வேலை நேரமும் நீடிக்கும் என்ற நிலையில்தான் பெரும்பாலான சுரங்கத்தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள்.

பீகாரின் தன்பாத் பகுதி சுரங்கத்தில் பணியாற்றியவர் மோக்‌ஷதா என்ற பெண் தொழிலாளி. இவர் பணியாற்றிய லோயாபாத் சுரங்கத்தில் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 சதவிகிதம். “நான் இங்கேயேதான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயதில் இருந்தே இங்கேதான் வேலை செய்கிறேன். எனக்கு கணவர் இல்லை. ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு கண் தெரியாது. பட்டறையில் துருத்தியை இயக்கும் வேலை செய்கிறான். சுரங்கத்தில் நிலகரியை வண்டியில் நிரப்பும் வேலையை நான் செய்கிறேன். மத்திய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் இணைந்து நான் வேலை பார்க்கிறேன். அவர் நிலக்கரியை உடைப்பார், நான் அதை வண்டியில் நிரப்புவேன். ஒரு வண்டியை நிரப்ப எனக்கு 3 அணா கூலி தருகிறார்கள். சில நாட்கள் 4-6 வண்டிகள் கூட நிரப்ப முடியும், சில நாட்களில் 2 வண்டிகளைக் கூட நிரப்ப முடியாது. நேற்று மாலை 6 மணிக்குச் சென்று இன்று காலை 6 மணிக்குத்தான் வெளியேறினேன். நேற்று என்னால் ஒரு வண்டியைத்தான் நிரப்ப முடிந்தது. வாரத்திற்கு 2 ரூபாய் என்னால் ஈட்ட முடிகிறது. எனது மகனுடைய கூலியும் சேர்ந்து எங்களுக்கு வாரம் 4 ரூபாய் கிடைக்கும். இங்கு குடியிருப்பில் தங்கிக்கொள்கிறோம். வாடகை கிடையாது. கூலியில் அரிசி, பருப்பு, டீ வாங்குவோம். அரிசிக்கே ஒரு ரூபாய் செலவாகிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெண்களை நிலத்தடி வேலைக்கு எடுக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்” ராயல் கமிஷனிடம் மோக்‌ஷதா பகிர்ந்த அவருடைய அனுபவத்தில் இருந்து, 12 மணி நேரம் இரவுப் பணி செய்தும், கணவர் துணையில்லாமல் தனித்து வாழும் ஒரு பெண் தொழிலாளி ஒரு நாளைக்கு 3 அணா கூலி பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம். வாரத்திற்கு ஒரு ரூபாய் செலவழித்து அரிசி வாங்கிச் சாப்பிடும் நிலையில், கண் பார்வையற்ற மகனும் ஆபத்தான பட்டறை வேலைக்குப் போக வேண்டும் என்பது எவ்வளவு கொடூரமான நிலை?

‘சராசரியாக இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு சாப்பாட்டிற்கு மட்டுமே வாரம் 6 ரூபாய் செலவானது, இந்நிலையில் அன்றைக்கு சுரங்கத் தொழிலாளர்கள் பெற்ற வாரக்கூலி சராசரியாக 2 ரூபாய் 6 அணா மட்டுமே’, என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், ஏ.ஐ.டி.யு.சியின் தலைவருமான எஸ்.கே. டாங்கே.

எவ்வளவு உழைத்தாலும் சாப்பாட்டிற்கே வழியற்ற நிலை! தனித்துவாழ்ந்த நிலகரிசுரங்கப் பெண் தொழிலாளர்களின் நிலைமை மிகக்கொடூரமாக இருந்திருக்கிறது.

மைக்கா, மாங்கனீஸ், இரும்பு, எஃகு எல்லாம் ஒன்றே நிலக்கரி சுரங்கத்தொழில் தவிர, 1900-களில் மத்திய இந்தியப் பகுதிகளில் இரும்பு, எஃகு பணிகளும், மைக்கா, மேங்கனீஸ் சுரங்கப்பணிகளும் நடைபெற்றன. இரும்புப் பணிகள் பெரிய முக்கியத்துவம் பெற்றிருந்தது.

மத்திய இந்தியப் பகுதியில் இரும்பு உற்பத்தி என்பது பல நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்துவந்த தொழில். என்றாலும், பட்டறை உற்பத்தி அமைப்பில்தான் இந்த உற்பத்தி நடந்தது. இந்தியாவில் நவீன இரும்பு உற்பத்தி குறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கவனம் செலுத்தவில்லை. மும்பை, நாக்பூரின் பஞ்சாலைத் தொழிலில் மூலதனத்தைப் பெருக்கிக்கொண்ட இந்தியப் பெருமுதாளியான ஜெ.என். டாட்டா, தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விண்ணப்பித்து இறுதியாக உருவானதுதான் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து, பொறியிலாளர்களை வரவழைத்து, இரும்பு, எஃகு உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது டாட்டா நிறுவனம். டி.ஹெச் புக்கானன் தன்னுடைய ‘இந்தியாவில் முதலாளித்துவ நிறுவனத்தின் வளர்ச்சி’ நூலில், இந்தியாவில் நவீன இரும்பு, எஃகு உற்பத்தி வளர்ச்சியைக் கதைபோல சொல்லிச் சென்றிருப்பார்.

“இரும்பு எஃகு துறை மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பணியமர்த்தி இருக்கிறது. திறந்த குழி சுரங்கங்களில் மட்டுந்தான் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பணியாற்றுகிறார்கள். இருந்தாலும் இந்த எண்ணிக்கையும் மிகவும் குறைவுதான். ஒட்டுமொத்தமாகவே மொத்தம் 2700 பெண் தொழிலாளர்கள்தான் இந்தத் துறையில் பணியாற்றுகிறார்கள்” என்கிறார் புக்கானன். சில ஆலைகளில் துப்புறவு செய்யும் பணிகளில் பெண்கள் பணி செய்கிறார்கள் என்றும், பொதுவாகவே இரும்பு, எஃகு ஆலைகளில் உழைப்பை மிச்சப்படுத்துகிற திறன்மிக்க இயந்திரங்கள் புதிது புதிதாக வழவழைக்கப்பட்டன என்றும் பதிவு செய்திருக்கிறார்.

“என்றாலும், தாது சுரங்கங்களில், இரும்புத் தாதை வாரி எடுக்க நீராவி இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பெண்கள் தலைச்சுமையாக தூக்கிச் செல்லும் வழக்கொழிந்து போன புராதன முறை இன்னும் இருக்கிறது” என்ற அவல உண்மையையும் அவர் பதிவு செய்திருக்கிறார். என்ன விஷயம் என்று புக்கானன் கேட்டதற்கு, அங்கிருந்த அமெரிக்க மேலாளர், ‘இது ஒரு பொருளாதார விஷயம் – இயந்திரத்திற்கு செலவாகும் நிலக்கரியைக் காட்டிலும், பெண்களுக்கு செலவாகும் அரிசியின் விலை குறைவு தானே?’ என்று பதில் சொல்லி இருக்கிறார். மார்க்ஸ் மூலதனம் நூலில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருப்பார்: ‘இங்கிலாந்தில் கால்வாய்ப் படகுகளை இழுப்பதற்கு இன்னமும் பெண்கள் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறார்கள். ஏனெனில், குதிரைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பும், இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பும் துல்லியமாகத் தெரிந்த அளவு. ஆனால், உபரியாக இருக்கும் மக்கள்தொகையில், பெண்களைப் பராமரிக்கத் தேவையான உழைப்பு என்பது எல்லாவற்றையும்விட மிகவும் குறைவானது அல்லவா?’ மார்க்ஸ் குறிப்பிட்ட முதலாளித்துவத்தின் குணம் உலகம் முழுவதும் ஒன்றுதானே!

மைக்கா சிறுமிகளும், மாங்கனீஸ் பெண் தொழிலாளர்களும்…

‘என்னுடைய வயது எனக்குத் தெரியாது, எனக்குத் திருமணம் ஆகிவிட்டது, இன்னும் திருமண வாழ்கையைத் தொடங்கவில்லை, கணவர் வீட்டுக்குப் போய் வாழத் தொடங்கவில்லை’ என்று சொன்ன சிறுமிகள் கோடர்மா பகுதியின் (இன்றைய ஜார்கண்ட்) மைக்கா சுரங்கங்களில் வேலை செய்தார்கள். ‘6 வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறேன். காலை 9 மணிக்கு வேலைக்கு வந்தால் இடைவெளியே இல்லாமல் மாலை 5 மணி வரை வேலை பார்ப்பேன்’ என்று கோடர்மாவின் லோகாய் சுரங்கத்தில் பணியாற்றிய சிறுமி அக்லி ராயல் கமிஷனிடம் கூறி இருக்கிறார்.

நாக்பூரின் மாங்கனீஸ் சுரங்கப் பெண்களோ பிரசவத்திற்கு முதல் நாள் வரை, இரண்டு நாட்கள் வரைகூட வேலை பார்த்தோம் என்று ராயல் கமிஷனிடம் பதிவு செய்திருக்கிறார்கள். மாங்கனீஸ் சுரங்கத்திலும்கூட உருப்படி அடிப்படையிலான வேலைதான். கணவன் மனைவி ஜோடிகள், தனிநபர்கள் அடங்கிய மூவர் குழு, ஐவர் குழு என்று குழுவாகத் தொழிலாளர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். கணவன், மனைவி இரண்டு ஜோடிகள், தனி ஆண் ஒருவர் அடங்கிய ஐவர் குழு 6 நாட்கள் வேலை பார்த்தது. ‘திருமணமான இரண்டு ஆண்கள் வாரக்கூலியில் தலா 7 ரூபாய் எடுத்துக்கொண்டோம், தனி ஆண் 4 ரூபாய் எடுத்துக்கொண்டார்’ என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ‘இந்தக் குழுவில் இரண்டு ஆண்களின் மனைவிகளான இரண்டு பெண் தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்களே! இவர்களுக்கு என்னப்பா கூலி?’ என்று யோசித்தால், திருமணம் ஆன ஆண்களுக்கு 7 ரூபாய் கூலி என்று தலைக்கட்டு அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள், இந்த மாதியியான குழுக்களில் ஆண்கள் அடிப்படையிலான கூலிப்பங்கீடு இருந்திருக்கிறது, திருமணமான ஆண் பெற்ற அந்த 7 ரூபாய் கூலியில், கணவனின் கூலி 4 ரூபாயும், மனைவியின் கூலி 3 ரூபாயும் அடக்கம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவில் சரிசமமாகக் கூலியைப் பிரித்துக்கொண்டதைக் காணமுடிகிறது. சோட்டி என்ற பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ஐந்து மகன்கள் அவருக்கு. இளைய குழந்தைக்கு வயது 3. ‘இன்னொரு பெண்ணோடு இணைந்து கல் உடைத்து, எடை நிரப்புகிறேன். வாரம் எங்களுக்கு 3 ரூபாய் கூலி. இருவரும் தலா ஒன்றரை ரூபாய் பிரித்துக்கொள்கிறோம்’ என்று ராயல் கமிஷனிடம் சொல்லி இருக்கிறார். இந்தக் கூலியில் ஐந்து மகன்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் எனக் கமிஷன் கேட்டதற்கு, ‘இரண்டு மகன்கள் ஊரில் சொந்தக்காரர்களோடு இருக்கிறார்கள். என்னுடன் மூன்று மகன்கள் மட்டுமே இருக்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார் சோட்டி. எப்படி கதை?

மூலதனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஒரு தொழிலாளியால், இந்த அமைப்பிற்குள் வாழ முடியவில்லை. ‘முதலாளித்துவ முறையின் கொடூரங்களையும் அனுபவித்து, நிலவுடைமைச் சமூகத்தின் பிடிக்குள்ளும் அவர் இருந்தாக வேண்டும். அந்தத் தொழிலாளியின் குடும்ப உறுப்பினர்கள் இன்னமும் பூர்வீக கிராமப் பொருளாதாரத்தில் சிக்கி இருந்தாக வேண்டும்’ -இதுவே, இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நுழைந்த பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமையாக அன்றைக்கு இருந்தது.

பெண் தொழிலாளர்களுக்குத் தடை

மத்திய மாகாணங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அவர்களைச் சார்ந்திருந்தவர்களின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும், பெண்களும் வேலைக்குச் சென்றால்தான் சோறு என்ற நிலையில்தான் அங்கு பெரும்பாலான உழைக்கும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைபார்த்த பெரும்பாலான தொழிலாளர்கள் ஊரில் விவசாயக்கூலிகளாக வேலை பார்த்தவர்கள். ‘ஊரில் எங்களுக்குக் கூலியாக அரிசி, தானியங்கள் தரப்பட்டன. அவற்றை மிச்சம்பிடித்து விற்றால் காசு கிடைக்கும். ஊரில் இருந்த காலத்தில் பெரும்பாலும் சாப்பிட மட்டுமே முடிந்தது. உடை வாங்கிட முடியாது. இங்கு உணவுக்கான செலவை மிச்சம் பிடித்தால் வாரம் 4 அணா சேமிக்கலாம். இப்படி சேமித்து ஊரில் பட்ட கடனை அடைக்கிறோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். நிலவாடகை, திருமணம், சாவு போன்ற காரணங்களுக்காக இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் கடன்பட்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான கடன்கள் நபருக்கு 100 ரூபாய்கூட இருந்திருக்கிறது. ஊரில் இருந்து வருவதற்கான ரயில் கட்டணத்திற்காகத் தொழிலாளர்கள் கடன்படுவது என்பது சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் சாதாரணமான விஷயமாக இருந்திருக்கிறது. இப்படியான வரிய நிலையில் இருந்த தொழிலாளர்கள் முதலாளித்துவ முறைக்கு தீனியல்லவா? எனவே, சுரங்கப்பணிகள் போன்ற கடுமையான பணிகளில் இந்தத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இவர்களில் பெண் தொழிலாளர்கள் படுமோசமாக சுரண்டப்பட்டார்கள்.

இங்கிலாந்து சுரங்கங்களில் நிலத்தடிப் பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்ற தடை 1842 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இந்தக் காலகட்டத்தில்தான் நிலக்கரி சுரங்கப் பணிகள் வீச்சாகத் தொடங்கின என்பதையும், மிகக் கடுமையான பணிகளை அன்றைக்கு நம்முடைய பெண் தொழிலாளர்கள் செய்துகொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் 1923-ல் இருந்துதான் பெண்களை சுரங்கங்களில் நிலத்தடிப்பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்பட்டன. இந்திய சுரங்கச் சட்டம் 1923 வந்த பிறகு, பெண்களைப் படிப்படியாக நிலத்தடிப்பணியில் இருந்து அகற்ற வேண்டும் என்று மாகாண அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சுரங்கப்பணி கட்டுப்பாடுகள் 1939 ஆம் ஆண்டிற்குள் பெண்கள் நிலத்தடிப்பணியில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்ற கெடு விதித்தது. இதன் விளைவாக 1929-ஆம் ஆண்டில் 23 சதவிகிதமாக இருந்த நிலத்தடிப் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1930-ல் 18 சதவிகிதமாகக் குறைந்தது.

ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் பணிபுரியும் சூழலை பாதுகாப்பானதாக வைத்திருப்பதில் துளியும் அக்கறை இல்லாத அமைப்புதான் இந்த முதலாளித்துவ அமைப்பு. கண்ணியமான வேலைவாய்ப்பை அது மனிதர்களுக்கு எந்த நாளும் உறுதிப்படுத்தியது கிடையாது. முந்தைய உற்பத்தி முறையின், சமூகத்தின் அடிமை முறைகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிற அமைப்பாகவே அது பரிணமித்தது.

முதலாளித்துவ முறை சாதியமைப்பைப் பயன்படுத்தி தலித் மக்களை, பழங்குடியினரை குறைவான கூலிக்குப் பணியமர்த்தியதும், குறைவான கூலி நிர்ணயிக்க அவர்களைப் பயன்படுத்தியதும் இதே அடிப்படையில்தான். குறைவான கூலி கொடுக்க முடியும், உற்பத்தி செலவு குறையும், உபரியை அதிகரிக்கலாம் என்ற காரணங்களை ஒட்டியே அது பெண்களை வீட்டிற்கு வெளியே, கிராமங்களுக்கு வெளியே வேலைவாய்ப்பிற்குள் இழுத்துவந்தது. வர்க்கசமூகத்தின் அம்சமான பெண்ணடிமைத்தனத்தைக் கச்சிதமாகத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டது.

‘எவ்வளவு மோசமான சூழலாக இருந்தாலும் பரவாயில்லை. குடும்பத்தில் அனைவரும் சம்பாதித்தால்தான் சோறு!’ என்ற நிலையில் இருந்த தொழிலாளர் குடும்பங்களில் இருந்து பெண்கள் சுரங்கப் பணிகளைச் செய்வதற்குப் போனார்கள். மிகக்கடுமையான, பாதுகாப்பற்ற வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, இந்த வேலைவாய்ப்பை விட்டால் வேறு பிழைப்பே இல்லை என்ற நிலை அவர்களுக்கு. இப்படியான சூழலில், ‘பெண் தொழிலாளர்களை நிலத்தடிப் பணிகளுக்கு எடுக்கக்கூடாது என்ற தடை வரப்போகிறது’ என்ற செய்தி தொழிலாளர்களை இடியாகத் தாக்கி இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்து ராயல் கமிஷனிடனிடம் கடுமையாக ஆதங்கப்பட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

‘எங்கள் பெண்களை நிலத்தடி வேலைக்கு தடை செய்துவிட்டால், எங்களால் எப்படி வாழ முடியும்?’ என்று கேட்டிருக்கிறார் காசியா. ‘எங்கள் வீட்டில் பெண்களும் உழைக்க வருவது வயிற்றை நிரப்பத்தான், பெண்களை வேலைக்கு எடுக்கக்கூடாது என்றால் அவர்களுக்கு யார் சோறு போடுவது? அரசாங்கமா போடப்போகிறது? ஆண்கள், பெண்கள் எல்லாருமே இங்கே ஒரே மாதிரிதான் வேலை செய்கிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார், அசன்சாலில் பணியாற்றிய பன்சி என்ற ஆண் தொழிலாளி. பிலாஸ்பூரில் இருந்து இடம்பெயர்ந்த குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். முன்னதாக நாம் பார்த்த பெண் தொழிலாளி மோக்‌ஷதாவும் இந்தத் தடை குறித்த பயத்தை வெளிப்படுத்தியதை நாம் கண்டோம்.

உண்மையில் இயந்திரங்களைப் புகுத்தி பணிச்சூழலை முதலாளிகள் மேம்படுத்தத் தொடங்கி இருந்தால், பெண்களை உள்ளடக்கி எல்லாத் தொழிலாளர்களின் பணிச்சூழலும் சுரங்கங்களில் மேம்படத் தொடங்கி இருக்கும். ஆனால், முதலாளிகள் அப்படிச் செய்வார்களா என்ன? ‘பெண்களுக்கு நிலத்தடிப்பணியைத் தடை செய்தால், ஆண்கள் அந்தப் பணியை செய்ய முன்வரமாட்டார்கள். நாங்கள் என்ன செய்வோம்? நிலக்கரி உற்பத்தியே பாதிக்கும்!’ என்று ஆரம்பத்தில் குய்யோ முறையோ எனக் கூச்சல் போட்டார்கள். இயந்திரங்களைப் புகுத்தி பணிச்சூழலை மேம்படுத்த அப்போதும் அவர்கள் தயாராகவே இல்லை. பெரும் பொருளாதார வீழ்ச்சியைப் (Great Depression 1929-39) பயன்படுத்தி பட்டினி அளவிற்குக் கூலியைக் குறைத்து, பெண்கள் செய்த பணிகளை ஆண்கள் செய்ய நிர்பந்தித்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நிலை படுமோசமாக இருந்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்கப்பணிகளில் கிட்டத்தட்ட நிரந்தரமாகிவிட்ட தொழிலாளர் படையின் முக்கிய அங்கமாக இவ்வளவு காலம் அவர்கள் இருந்தார்கள். நிலத்தடிப்பணியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, தரைப்பணி கிடைப்பதற்குகூடப் படாத பாடுபட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்களைத் தாங்கியாக வேண்டும் என்ற நிலைக்கு சுரங்கப்பகுதி பெண்கள் தள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1937-39 வாக்கில் பெண்கள் நிலத்தடிப்பணிகளில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டிருந்தார்கள்.

பிறகு, இரண்டாம் உலகப் போரைக் காட்டி, 1943 ஆம் ஆண்டில் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து பெண் தொழிலாளர்களை மீண்டும் நிலத்தடிப் பணிகளுக்கு வரவழைத்தார்கள் சுரங்க முதலாளிகள். விளைவு, 1945 வாக்கில் 20000 பெண் தொழிலாளர்கள் நிலத்தடியில் பணியாற்றி இருக்கிறார்கள். எப்படி கதை?

கூலியை மிகக்குறைவாகக் கொடுக்க வேண்டும் என்றால், ‘பெண்களைத் தொழிலாளர்களாகக் கூப்பிடு!’ கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வந்துவிட்டனவா? ‘கடைசியாக வேலைக்கு எடுத்து, முதலில் வேலையில் இருந்து தூக்கும் தொழிலாளர்களாகப் பெண்கள் இருக்க வேண்டும்!’ – இதுதான் முதலாளித்துவமுறை பெண்களைக் குறித்து காலங்காலமாகக் கொண்டிருக்கிற அணுகுமுறை. பிரிட்டிஷ் காலத்தில் சுரங்கப்பணிகளில் ஈடுபட்ட இந்தியப் பெண் தொழிலாளர்கள் நிலை, இதை நமக்கு வலுவாக உணர்த்துகிறது.

தொடரும்…

REFERENCES

The Development of Capitalist Enterprise in India, D.H.Buchanan

Conditions of Women Coal Mine Workers in Bihar till 1947, Md Shakeeb Akthar

RCLR -1929-31; Vol IV. Bihar and Orissa with Coalfields. Pt. 2, Vol. III. Central Provinces & United Provinces. pt. 2

Death Pits in our Land, S.A.Dange, Report on the Indian Coal Miners submitted to Miners’ International Federation Conference, Paris, 1945

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *