penandrum-indrum-webseries-18 -by-narmadha-devi அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
penandrum-indrum-webseries-18 -by-narmadha-devi அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியப் பெண்கள் சும்மா இருக்கிறார்களா?

இந்தியப் பெண் தொழிலாளி

எம்.பி.ஏ பட்டாதாரியான ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து இரண்டு வேலைகள் பறிபோய்விட்டன. அவருடைய தந்தையும் கோவிட் தொற்றுக்குப் பலியானார். கல்விக் கடன் வாங்கித்தான் அவர் படித்திருந்தார். எனவே, குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பில் ஈடுபடும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். எம்.பி.ஏ முதுநிலைப் படிப்பு படித்த ஒரு பெண், ஒப்பந்தத் தொழிலாளியாக உற்பத்தித் தொழிற்சாலையில் செல்ஃபோன்களைக் கட்டும் பணியில் ஈடுபடுகிறார். அவர் பெற்ற மாத ஊதியம் சுமார் 8 ஆயிரம் ரூபாய்.

2021 ஆம் ஆண்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம், பெண் தொழிலாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்ற விஷயம் வெளி உலகிற்குத் தெரியவந்தபோது, குவிண்ட் இணைய செய்தித்தளம் வெளியிட்ட ஒரு செய்திக்கட்டுரையின் முதல் பத்தியிலேயே ராஜேஸ்வரியின் கதையைக் காணலாம்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 17,000 ஊழியர்களில் 85 சதவிகிதம் பெண் தொழிலாளர்கள். இவர்கள் எல்லோருமே கிராமப்புறங்களில் விவசாயம் நசிந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புறத்திலும் முறையான வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களில் இருந்து வேலைக்கு வந்தவர்கள். இடைநிலை ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஊரில் இருந்து வேலைக்கு அழைத்து வரப்பட்டவர்கள். விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு பணித்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

கம்பனியில் கடுமையான வேலை. விடுதிகளில் 5 பேர் தங்க வேண்டிய அறையில், 20-25 பேர் தங்க வைக்கப்பட்டார்கள். தண்ணீர் சரியாக வராத கழிப்பறைகள். சாப்பாட்டில் பூச்சி, புழு. ஒரு விடுதியில் கெட்டுப்போன சாப்பாட்டை சாப்பிட்ட 250 பெண் தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவர்களில் கிட்டத்தட்ட 150 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை குறித்து முறையான தகவல்களை, நிர்வாகமும், ஒப்பந்த நிறுவனமும் வழங்கவில்லை. ஆத்திரம் அடைந்த பெண் தொழிலாளர்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெருமளவில் கவனத்தை ஈர்த்த போராட்டமாக இந்தப் பெண் தொழிலாளர்களின் போராட்டம் மாறியது.

குவிண்ட் செய்தித் தளம், ஒரு சில பெண் தொழிலாளர்களின் ஊதிய சீட்டை ஆய்வுசெய்து, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் ரூ. 10273 என்றும், ஒப்பந்தக் கம்பனிகள் மூலம் மாதப்பிடித்தம் போக அவர்கள் பெற்ற ஊதியம் ரூ. 8,873 என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் 19-24 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலும் திருமணமாகாதவர்கள்.

ஒப்பந்தக்காரர்கள் ஊரில் இருந்து இந்தப் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துவரும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கு பலவிதமான உபதேசங்களை செய்து, பலவிதமான உத்திரவாதங்களை அளித்து அழைத்து வந்திருக்கிறார்கள். ‘உங்கள் மகள்கள் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் குடும்பத்தின் கஷ்டம் தீரும் அல்லவா? அவர்களுடைய திருமணத்திற்கு பொருள் சேர்க்க முடியும் அல்லவா?’- இப்படி விதவிதமான அறிவுரைகளை வழங்கி இளம்பெண்களைத் தொழிலாளர் படையில் சேர்த்திருக்கிறார்கள்.

தொழிலாளர்களாகப் பரிணமித்த இந்தப் பெண்கள், ‘எங்களை எப்படி இவ்வளவு கொடூரமாக நடத்த முடியும்?’ என போராட்டக் களத்தில் குதித்ததும், ‘குடும்பப் பெண்களாக அடங்கி, ஒடுங்கி வேலை பார்க்க மாட்டீர்களா? போராட்டங்களில் ஈடுபடுவீர்களா?’, ‘உங்கள் குடும்பத்தில் நீங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் எனக் கிளம்பியதைத் சொல்கிறோம்.’ ‘உங்களுக்கு எப்படித் திருமணம் ஆகும் என்பதைப் பார்க்கலாம்?’, ‘மரியாதையாக போராட்டம் செய்யாமல் ஊருக்குக் கிளம்புங்கள்!’ என மிரட்டி, முன்னணியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

குறைந்த ஊதியத்திற்கு அடிமைகளாக வாய்திறக்காமல் வேலை பார்க்க வேண்டும் என்றால், இளம் பெண்களைத் தொழிலாளர்களாக வெளி ஊர்களில் இருந்து அழைத்து வருவது. அதுவே, அந்தப் பெண் தொழிலாளர்கள் உரிமை கேட்டால், தொழிலாளர்களாகவே அவர்கள் இருந்திட முடியாது, மீண்டும் சொந்த ஊர்களுக்கு மூட்டை கட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்ற நிலை. ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனம், பொதுவாக பெண்மயமாக்கப்பட்ட உற்பத்தித் துறையில் பெண்களின் வேலைவாய்ப்பின் லட்சணத்தை நமக்கு உணர்த்துகிறது.

ஒன்று ஊதிய வேலைவாய்ப்பிற்குள்ளே வர இயலாத நிலை, அப்படியே வந்தாலும் குறைவான வேலைவாய்ப்பிற்குள் (underemployment) சிக்கும் நிலை – இதுதான் இந்தியாவில் பெரும்பாலான பெண் தொழிலாளர்களின் நிலையாக இருக்கிறது.

ஊதிய இடைவெளி

ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் இந்தியாவில் நிலவும் பாகுபாடுகள் குறித்த 2022 ஆம் ஆண்டு அறிக்கை, வேலைக்கு எடுக்கப்படுவதிலும், ஊதியத்திலும் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பாகுபாட்டை அளவிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒப்பந்தத் தொழிலாளராகப் (Casual labour) பணியாற்றும் ஆண்கள் சராசரியாகப் பெறும் மாத ஊதியமே வெறும் ரூ. 9,017 தான். இந்தக் குறைந்த தொகையைவிட மிகக் குறைவாகப் பெண் தொழிலாளர்கள் ரூ. 5,709 மட்டுமே பெறுகிறார்கள். ஒப்பந்தப் பணியில் ஆண் தொழிலாளர்களுக்கும் பெண் தொழிலாளர்களுக்கு இடையே நிலவும் ஊதிய இடைவெளி 58 சதவிகிதம்.

நாட்டில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 26,000 வழங்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், முறைசார் தொழிலாளர்களில் ஆண் தொழிலாளர்கள் பெற்ற சராசரி ஊதியம் ரூ.19, 779. பெண் தொழிலாளர்கள் பெற்ற சராசரி ஊதியம் ரூ. 15,578. இவர்களில் ஊதிய இடைவெளி 27 சதவிகிதம்.

நகர்ப்புறங்களில் சுயதொழில் வருமானம் ஈட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி அதிகபட்சமாக 141 சதவிகிதம் இருக்கிறது. ஆண்கள் சராசரியாக மாதம் ரூ. 15, 996 ஈட்டினால், பெண்கள் ஈட்டுவது வெறும் ரூ. 6,626 மட்டுமே.

இந்தியாவில் தொழிலாளர்களாக இருப்பது கடினம். அதிலும் பெண் தொழிலாளர்களாக இருப்பது கடினத்திலும் மிகக் கடினம் என்பதைத்தானே இந்த ஊதிய சராசரிகள் நமக்குச் சொல்கின்றன.

சும்மா இருக்கிறார்களா?

பெரும்பாலான இந்தியப் பெண்கள் காலை 4-5 மணி வாக்கில் எழுந்து, இரவு 10-11 மணிக்கு தூங்கப்போகும் வரை ஓய்வின்றி உழைப்பவர்கள். என்றாலும், இந்தியப் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் உலகிலேயே குறைவானதாக இருக்கிறது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி, 15-59 வயதுக்கு உட்பட்ட கிராமப்புறப் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம், 1999-2000 ஆம் ஆண்டில் 35 சதவிகிதமாக இருந்தது. 2011-12 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 25 சதவிகிதமாகக் குறைந்தது.

கிராமப்புறங்களை ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் எப்போதுமே குறைவுதான். நகர்ப்புற விகிதம் 1999-2000 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்தது .ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து 2011-12 ஆம் ஆண்டிலும் ஏறத்தாழ அதே 17% நிலையில்தான் இருந்தது.

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023, ‘பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் 2018-19 ல் 18.6% இருந்த தாழ்வான நிலையில் இருந்து வெகுவாக முன்னேறி, 2021-2022ல் 25.1% ஆக வளர்ச்சியடைந்திருக்கிறது’ என்கிறது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்புகள் அறிக்கை (Periodic Labour Force Survey) 2020-21, பெண்களின் பங்கேற்பு விகிதம் 23.15 விகிதம் என்றும் ஆண்களின் பங்கேற்பு விகிதம் 57.75 என்றும் குறிப்பிடுகிறது. தேசிய குடும்ப நல ஆய்வுகள் 2019-21, 25.2 சதவிகித பெண்களுக்கே வேலை இருக்கிறது எனத் தெரிவிக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், பெண்களின் வேலைப் பங்கேற்பு விகிதம் மிகக் குறைவாகவே தெரிகிறது. 18%, 23%, 25% என்பதெல்லாம் எவ்வளவு குறைவான எண்ணிக்கை. பெண்களின் இந்தக் குறைவான வேலை பங்கேற்பு விகிதத்தின் பொருள், ‘இந்தியப் பெண்கள் உழைக்காத சோம்பேறிகளாக இருக்கிறார்கள்’ என்பதல்ல. இந்தியப் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரமும், மதிப்பும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை நிலை.

பெண்களுடைய அடிபணிந்த நிலைக்குக் முக்கியக் காரணமாக இருப்பது அவர்களுடைய சார்ந்திருக்கும் நிலை. வருமானமில்லாத சூழ்நிலையில், குடும்பத்தை, குறிப்பாக குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களைக் காலங்காலமாக சார்ந்திருக்கும் நிலையில் பெண்கள் இருப்பது, அவர்களின் தாழ்த்தப்பட்ட நிலைக்குக் காரணமாக இருக்கிறது. பெண்களின் ஊதிய வேலை, யாரையும் சார்ந்திராத நிலையை அவர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது; பெண்களுடைய வெளிநடமாட்டத்தை அதிகரித்து, பல்வேறு பொதுத்தளங்களுக்கு அவர்களை அழைத்து வருகிறது; அவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.

சரி, நாம் மேலே கண்ட 35%, 25%, 15%, 16% என்ற வேலை பங்கேற்பு விகித எண்கள் குறைவானதுதான். என்றாலும், ‘இவ்வளவு சதவிகித பெண்களாவது ஊதிய வேலைவாய்ப்பில் இருக்கிறார்களே!’ என்று நாம் சந்தோஷப்படலாலாமா? முடியாது. பெண்களின் வேலை பங்கேற்பு விகிதத்தை அவர்களுடைய ஊதிய வேலைவாய்ப்பு விகிதம் என்று கருதக்கூடாது. அதாவது, ‘வேலையில் பங்கேற்றவர்கள்’ அனைவருமே ‘ஊதியம் பெற்றவர்கள்’ என்று நாம் தவறாகக் கருதிவிடக்கூடாது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வு வேலையில் பங்கேற்றவர்களை, ‘வழக்கமான பணியாளர்கள்’ (Regular workers) அல்லது ‘சாதாரண கூலித் தொழிலாளர்கள்’ (Casual workers), நிலம் அல்லது சிறிய கடைகள் போன்ற குடும்ப நிறுவனங்களில், ‘சுயதொழில் செய்பவர்கள்’ அல்லது ஊதியம் பெறாத உதவியாளர்களாக ‘வேலை’ செய்து கொண்டிருப்பவர்கள் என்கிறது. இந்தியாவின் பெண் தொழிலாளர்கள் குறித்து பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர் இந்திராணி மஜும்தார், ‘ஆண் உழைப்பாளிகளில் ஊதியம் பெறாத உழைப்பாளிகள் 15% என்றால், பெண் உழைப்பாளிகளில் மொத்தம் 40% பேர் ஊதியம் பெறாத உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்’ என்றும், 2011-2012ல் மொத்த ஊதிய உழைப்பில் பெண்களுடைய பங்கு வெறும் 22 சதவிகிதமே’ என்றும் கணிக்கிறார்.

பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், பெண்களின் வேலை பங்கேற்பு விகித கணக்கீட்டு முறைகளையே விமர்சிக்கிறார். பெண்களின் பங்கேற்பைக் குறைத்து மதிப்பிடும் வகையில்தான் இந்த ஆய்வுகள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்.

“இந்தியாவின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வுகள், ’வீட்டு வேலைகளில் மட்டும் ஈடுபடுபவர்களை’ (92 ஆவது குறியீடு) வேலைவாய்ப்பிற்குள் சேர்க்கவில்லை. இளையோர்கள், வயதானவர்கள், உடல்நலமில்லாதவர்கள், உடல்நலமிக்க குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வது, சமையல் செய்தல், சுத்தம் செய்தல், குடும்பத்திற்கு வேண்டியதை உறுதிசெய்தல்” உள்ளிட்ட பராமரிப்பு பொருளாதாரத்தின் வேலைகள் அனைத்தும் வீட்டுவேலைகளின் கீழ்தான் வருகிறது. ‘வீட்டு வேலைகளை செய்வதோடு, காய்கறிகள், விறகுகள், கால்நடைகளுக்கான தீவனங்கள், குடிநீர் போன்றவற்றை சேகரிப்பது மற்றும் வீட்டு உபயோகத்திற்கான தையல் வேலைகளையும், துணி நெய்யும் வேலைகளையும் செய்வது’ என்ற பிரிவும் (93 ஆம் குறியீடு) வேலைவாய்ப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2014 ஆம் ஆண்டு புதிய விளக்கப்படி, இந்தப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் எல்லாரும் தொழிலாளர்களாக சேர்க்கப்பட்டால், 1999-2000 த்தில் நகர்ப்புறங்களில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 89% என அதிகரித்திருக்கும். 2011-12ல் 85% என உயர்ந்திருக்கும். நகர்ப்புறங்களில் 1999-2000த்தில் 81% என்றும், 2011-2012ல் 80% என்றும் மாறி இருக்கும்” என்கிறார் கோஷ்.

பெண்கள் மட்டும் தண்ணீர் எடுக்கவில்லை, விறகு சேகரிக்கவில்லை, வீட்டுக்குத் தேவையான உணவை சமைக்கவில்லை, உணவுப் பொருட்களை சேகரிக்கவில்லை என்றால் நவீன தாராளமயக் காலத்தில் ஒரு குடும்பம் பிழைத்திருக்கவே முடியாது. ஒட்டுமொத்த குடும்பமும், நாடும் பயனடைந்தாலும் பெண்களின் உழைப்பு, உழைப்பே இல்லை என்ற நிலை. ‘அடிமை’கள் செய்யும் வேலைகளுக்குத்தான் அங்கீகாரம் இல்லாத நிலை இருக்கும். வர்க்கசமூகங்களில் பெண்களின் நிலை ’அடிமைநிலை’யே. இந்த அமைப்பில், அரசு, சமூகம், குடும்பம் எதுவும் பெண்களின் வேலையை அங்கீகரிக்காது.

தாராளமயத்தால் பயனடைந்தவர்கள்

நாம் மேலே கண்ட இந்தியப் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதங்கள் நவீன தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட காலத்தில் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆக, 30 ஆண்டுகால நவீன தாராளமயப் பாதையில் பெண்களின் வேலை பங்கேற்பு மேன்மேலும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 1983 ஆம் ஆண்டில் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் கிராமப்புறங்களில் 34%, நகர்ப்புறங்களில் 15.1%. சுதந்திர இந்தியாவிலேயே உச்சபட்சமாக நவீன தாராளமயக் காலத்தில்தான் 18% என்ற அளவிற்கு பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் அடிவாங்கியதைக் காண்கிறோம்.

‘வளர்ச்சி! வளர்ச்சி!’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்ட காலம் இது. ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது’ என்று சொல்லப்பட்ட காலம் இது. என்றாலும், பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, ‘நகர்ப்புறங்கள் ஐரோப்பாவைப் போல ஜொலிக்கின்றன!’ என்று சொல்லப்பட்ட காலம் இது. என்றாலும், நகர்ப்புறங்களில் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் ஒன்று அதிகரிக்காமல் அப்படியே இருந்திருக்கிறது, அல்லது குறைந்திருக்கிறது என்பதையே காண்கிறோம். உற்பத்தி வளர்ச்சியின் பலனை பாட்டாளி வர்க்கம் அனுபவிக்கவில்லை, அவர்களில் குறிப்பாக, பெண் உழைப்பாளிகள் அனுபவிக்கவில்லை என்பதைத்தான் பெண்களின் இந்தக் குறைவான வேலை பங்கேற்பு விகிதம் ஒட்டுமொத்தமாக நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பாலின இடைவெளி

ஒரு சமூகத்தில் பாலின அடிப்படையில் பல்வேறு துறைகளில் நிலவுகிற வேறுபாட்டை பாலின இடைவெளி (GenderGap) என்ற அளவீட்டின் வாயிலாக அறியலாம். உலகப் பொருளாதார மன்றம் (World EconomicForum) என்ற அமைப்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து உலக நாடுகளின் பாலின இடைவெளிப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டின் முதல் பட்டியலில் உலகின் 90 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட மொத்தம் 115 நாடுகள் இடம்பெற்றிருந்தன. அதில் இந்தியா பெற்ற இடம் 98. 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 146 நாடுகளைக் கொண்ட ஆய்வில் இந்தியா 127 ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது. தாலிபான்கள் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தான் கடைசி 146-வது இடத்தில் உள்ளது.

உலக நாடுகளில், 1. பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகள், 2. கல்வி பெறுதல், 3. உடல்நலம் மற்றும் உயிர்வாழ்தல் நிலை, 4. அரசியல் மேம்பாடு ஆகிய நான்கு தளங்களில் பாலின அடிப்படையிலான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு கவனப்படுத்துகிறது. நான்கு தளங்களின் சராசரியைக் கணக்கிட்டு ஒட்டுமொத்த பாலின இடைவெளி கண்டறியப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியா எட்டிய பாலின சமத்துவ விகிதம் 64.3%. அதாவது, 35.7% சதவிகித பாலின இடைவெளி இன்னும் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாவின் பாலின சமத்துவ சராசரி, 60 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதற்குக் காரணம், கல்வி, உடல்நலம் ஆகிய தளங்களில் எட்டிய அளவுகள் 90%க்கு மேல் இருப்பதே.

கல்வி பெறுதலைப் பொறுத்தவரையில், அனைத்து கல்வி நிலைகளிலும் இந்தியா சமத்துவத்தை அடைந்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. நல்ல விஷயம்தான். ஆனால், பெண்களின் கண்ணியமான வேலைவாய்ப்பு, ஊதியத்தில் பெண்களின் கல்வி நிலை வெளிப்படவில்லை என்பதே எதார்த்த உண்மை. கட்டுரையின் தொடக்கத்தில் எம்.பி.ஏ படித்த ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளி ராஜேஸ்வரியின் கதை நமக்கு உணர்த்துகிறது. படித்த பெண்கள் ஊதிய வேலைவாய்ப்பிற்குள் வராமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது இந்தியாவைப் பொறுத்தவரை, ‘இயல்பான விஷயம்’. உடல்நலம் மற்றும் உயிர்வாழ்தல் அளவீட்டில், 95% சதவிகிதம் பெற்று 142 ஆம் இடத்தில் நாம் இருக்கிறோம்.

அரசியல் மேம்பாட்டில் 25.3% சதவிகிதம் பெற்று, 59 ஆவது இடத்தில் இருக்கிறோம். இந்தத் தளத்தின் சராசரியை மொத்தம் மூன்று அம்சங்கள் தீர்மானிக்கின்றன. அதில் ஒன்று, நாட்டின் தலைமைப் பதவிகளில் பெண்கள் இருப்பது. இரண்டு பெண் ஜனாதிபதிகள் (திரௌபதி முர்மு, பிரதீபா பாட்டீல்), ஒரு பெண் பிரதமர் (இந்திரா காந்தி), என அரசின் தலைமைப் பதவிகளில் மூன்று பெண்கள் இருந்ததால், இந்தக் குறிப்பிட்ட அம்சத்தில் பத்தாவது இடத்தில் இந்தியா வகிக்கிறது. அதனால், ஒட்டுமொத்தமாக அரசியல் மேம்பாட்டில் 59 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மற்றபடி பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் 117-வது இடமும், மந்திரிப் பதவிகளில் 132-வது இடத்திலும்தான் இந்தியா இருக்கிறது.

பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளை பெண்களுக்கு உறுதி செய்வதில் இந்தியா பாதாளத்தில் இருக்கிறது. 2023 ஆண்டின் பட்டியலில் 40 சதவிகிதத்திற்கும் குறைவான வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கும் நாடுகள் மொத்தம் ஐந்து மட்டுமே. அந்த ஐந்து நாடுகளில் ஒன்று என்ற ‘சிறப்பை’ இந்தியா பெற்றுள்ளது. 36.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, மிகக் குறைவான பொருளாதார வாய்ப்புகளையே இந்தியா பெண்களுக்கு வழங்குகிறது. மொத்த பாலின இடைவெளியில் இந்தியா 127 ஆம் இடத்தில் இருந்தாலும், பொருளாதார வாய்ப்புகளில் நிலவும் பாலின இடைவெளியில் இந்தியா வகிக்கும் இடம், மொத்தம் 146 நாடுகளில் 142.

தொடரும்…

 

ஆதாரங்கள்:

‘As Foxconn Reopens Tamil Nadu Factory, Women Say They Don’t Want to Return’, thequint.com

Why women get fewer jobs and earn lower wages than men in India, Ashutosh Sharma, Frontline, Feb 27, 2023

A Gendered Employment Crisis and Women’s Labour in 21st Century India, Indrani Mazumdar, Centre for Women’s Development Studies, 2017

Jayati Ghosh, Women are the engines of the Indian economy but our contribution is ignored, The Guardian, 2016

Women Workers in India: Labour Force Trends, Occupational Diversification and Wage gaps, 2018, Bidisha Mondal, Jayati Ghosh & Others, Azim Premji University.

World Economic Forum, The Global Gender Gap Report, 2006

World Economic Forum, Global Gender Gap Report, 2023

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *