penandrum-indrum-webseries-19 -by-narmadha-devi அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
penandrum-indrum-webseries-19 -by-narmadha-devi அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

முதலாளித்துவமும், பாகுபாடுகளும்

இந்தியாவில் ‘தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டவர்கள் 1990-களில் அளந்த கதைகளை நாம் சற்று நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘நாட்டில் முதலீடுகள் பெருகும்! தொழில்கள் வளர்ச்சியடையும்! வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருவார்கள்’ – ‘எவ்வளவு ‘வண்ண வண்ணக்’ கதைகளை அளந்திருக்கிறார்கள்!’ என்பதை தாராளயமயக் காலத்தின் எதார்த்த நிலைமைகளும், உழைக்கும் வர்க்கத்தின் வேலைவாய்ப்பு, வாழ்நிலை குறித்த ஆய்வுகளும் நமக்கு நிரூபிக்கின்றன.

மொத்த தொழிலாளர்கள்:

இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டில் 15-64 வயதுக்குட்பட்டவர்களில் 40.2 கோடி மக்கள் வேலைவாய்ப்பிற்குள் இருந்தார்கள். இவர்களில் 29 கோடி பேர் ஆண்கள். 11.2 கோடி பேர் பெண்கள். 72% ஆண் தொழிலாளர்கள். 28% பெண் தொழிலாளர்கள்.

சுயதொழில் புரிபவர்கள்: மொத்த தொழிலாளர்களில் 51.4% பேர் (20.6 கோடி பேர்) சுயதொழில் புரிபவர்கள். 48.6% பேர் (19.5 கோடி) கூலி உழைப்பாளிகள். சுயதொழில் புரிபவர்கள் என்றால், வேலை தருபவர், ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்கள் அனைவரும் அடக்கம்.

எனவே, பெண் தொழிலாளர்கள்தான் சுயதொழில் பிரிவில் அதிகம் பேர். கிராமப்புறங்களில் 59% பெண் தொழிலாளர்கள்; 53.3% ஆண் தொழிலாளர்கள். நகர்ப்புறங்களில் 41% ஆண் தொழிலாளர்கள்; 42.5% பெண் தொழிலாளர்கள்.

கூலி உழைப்பாளிகள்:

19.5 கோடி கூலி உழைப்பாளிகளில் 38 சதவிகிதம் பேர் மாத ஊதியம் பெற்ற தொழிலாளர்கள். 62% பேர் சமூகப் பாதுகாப்பு உத்திரவாதம் இல்லாத ஒப்பந்த/கூலித்தொழிலாளர்கள்.

ஆண் தொழிலாளர்களில் 41% பேர் மாத ஊதியக்காரர்களாகவும், 59% பேர் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகவும் இருந்தார்கள். அதுவே, பெண் தொழிலாளர்களில் 30% பேர் மாத ஊதியக்காரர்களாகவும், 70 % பேர் ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்களாகவும் இருந்தார்கள். நிற்க!

தாராளமயத்தில் வேலை உத்தரவாதம்

தொழிலாளர் உரிமை சட்டங்கள், தொழிற் சட்டங்களின் வரம்பிற்குள் வரக்கூடிய தொழிற்துறைகளை, முறைசார் தொழில்கள் அல்லது முறைபடுத்தப்பட்ட துறைகள் என்கிறோம். இந்தத் துறைகள் வேலை உத்திரவாதத்தைக் கொண்ட வேலைவாய்ப்புகளை வழங்கிட வேண்டும். முறைசார் வேலையில் தொழிலாளரின் வேலைகளையும், அவருக்கு உரித்தான பலன்களையும் வரையறுக்கும் முறையான பணி ஆணை உண்டு. முறைப்படுத்தப்பட்ட எட்டு மணி நேர வேலை, மாத ஊதியம், ஊதியத்துடனான விடுப்புகள், ஊழியர் வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பலன்கள் தொழிலாளர்களுக்கு உண்டு. இந்த உத்திரவாதங்கள் எல்லாம் முதலாளித்துவ முறை தானாக விருப்பப்பட்டு தங்கத்தட்டில் வைத்து தொழிலாளர் வர்க்கத்திடம் வழங்கிய விஷயங்கள் அல்ல. நூற்றாண்டுகாலத் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக, உலகத் தொழிலாளர்கள் பெற்றதுதான் இந்த முறைபடுத்தப்பட்ட, முறைசார் வேலைவாய்ப்புகள்.

‘தாராளமயப் பாதையில் நாடே சுபிட்ஷம் ஆகிவிடும்!’ என்ற வர்ணனை உண்மையாக இருந்திருந்தால், தாராளமயப் பாதை முறைசார் தொழில்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கி இருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களுக்கு உரிய பலன்களை வழங்காமல் உபரியைப் பார்ப்பது தானே முதலாளித்துவ முறை. அதன் நெடுங்காலக் கனவான தாராளமயப் பாதை எப்படித் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்திடும்?! தொழிலாளர்களுக்கு உரிய, முறையான ஊதியத்தை வழங்கிடும்?!’ உண்மையில் தாராளமயப் பாதைக்கு முந்தைய நிலைகளைக் காட்டிலும், முறைசார் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது தாராளமயப் பாதையில் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. முறைசார் தொழில்களில்கூட ஒப்பந்தக்காரர்கள் மூலமாக முறைசாரா வகையில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் முறையே பிரதானமாக இருக்கிறது.

1990-91-ல் முறைசார் தொழில்களில் ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை பார்த்த தொழிலாளர்கள் விகிதம் 14%. 2011-2012-ல் இந்த விகிதம் 35% ஆனது. முறைசார் துறைகளில் 2004-05 முதல் 2011-12 காலகட்டத்தில், மாத ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட முறைசார் வேலைகள் 3.2% சதவிகித வளர்ச்சியைத்தான் கண்டது. ஆனால், ஒப்பந்த முறையிலான சமூகப் பாதுகாப்பு உத்திரவாதங்கள் இல்லாத வேலைவாய்ப்பின் வளர்ச்சியோ 9.2 சதவிகிதம் எனப் பெருமளவில் அதிகரித்திருந்தது. உதாரணத்திற்கு பதிவுசெய்யப்பட்ட சுரங்கம் மற்றும் குவாரி பணிகள் துறையில் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள், இடைநிலை ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக ஒப்பந்தப் பணியாளர்களாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதத்தில் ஏறுமுகமாக இருந்த காலம், 1993 ஆம் ஆண்டைக் காட்டிலும் நான்கு மடங்கு உற்பத்தி பெருகியது எனச் சொல்லப்பட்ட காலம் இது. ‘வளர்ச்சியின்’ பலன்களை சர்வநிச்சயமாக தொழிலாளர்கள் அனுபவிக்கவில்லை என்பதை இந்த விவரங்கள் நிரூபிக்கின்றன.

புராதன முறை

தாராளமயப் பாதையில் இந்தியா பயணிப்பதற்கு ஒரு சில ஆண்டுகள் முன்பாக, 1987 ஆம் ஆண்டில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

“புராதன முறை என்றும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்க கட்ட எச்சம் என்றும் கூறப்படுகிற,… பிரதான பணியமர்த்துனரின் தளங்களில் ஒப்பந்தக்காரர்கள் மூலம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முறை, மிகச் சமீப காலத்திலும் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது…”

“…உதாரணமான பணியமர்த்துனராக (Model Employer) இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கும் பொதுத்துறை உள்ளிட்ட, பல முறைசார் தொழில்களில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது” – இவ்வாறு, நீதியரசர் ஒ. சின்னப்ப ரெட்டி Catering Cleaners of Southern Railway Vs Union of India & Ors., (AIR 1987 SC 777) வழக்கில் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் சட்ட பாதுகாப்பிற்குள் வரக்கூடிய தொழிலாளர்கள் 10% கூட இன்றைக்குக் கிடையாது. உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது போல, முதலாளித்துவ முறையின் தொடக்க கால எச்சமான, புராதன ஒப்பந்தத் தொழிலாளர் முறைதான், இன்றைக்குப் பிரதானமான வேலைவாய்ப்பு முறையாகவே வளர்ந்திருக்கிறது. நவீன தாராளமய, தனியார்மய, உலகமயப் பொருளாதாரம் உலகிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு வழங்கிய பல ‘பரிசுகளில்’ இந்த ‘எச்சம்’ முக்கியமானது!

முறைசார் பணிகளில் பெண்களின் வேலைவாய்ப்பு?

மோசமான சூழலில், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத் தானே இருப்பார்கள். குறிப்பாக ‘பெண்களை வேலைவாய்ப்பிற்குள் கொண்டுவரும் பாதை’ என்று வர்ணிக்கப்பட்ட தாராளமயப் பாதை, ‘பெண்களின் முறைசார் பணிகளுக்கு வேட்டு வைக்கிறது’ என்பது தொடக்க காலத்திலேயே வெட்டவெளிச்சமானது. 1995-2005 க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில், முறைசார் துறைகளில்‌ பெண்களுக்கான வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம்‌ என்பது 8 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைந்தது.

“நாட்டின்‌ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ சம அளவில்‌ பங்கேற்ற இந்தியப் பெண்கள்,‌ ‘இந்தியாவின்‌ சுதந்திரத்தைத்‌ தொடர்ந்து பல நூற்றாண்டு கால நிலப்பிரபுத்‌துவ, பாலின ரீதியான அடக்குமுறைகளில் இருந்தும்‌, விலங்குகளிலிருந்தும்‌ விடுதலை பெறுவோம்!’‌ என்று நம்பிக்‌ கொண்டிருந்தனர்‌. ஆனால்‌ முன்னேற்றம்‌ எதுவும்‌ அடைவதற்கு பதிலாக, கடந்த 50 ஆண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியானது ஒவ்‌வொரு மட்டத்திலும்‌ ஆணாதிக்கக் கொள்கைகளைத்‌ தான்‌ நீடித்திருக்கச்‌ செய்துள்ளது. பெண்கள்‌ என்ற வகையிலும்‌, தொழிலாளர்கள்‌ என்ற வகையிலும்‌, குடிமக்கள்‌ என்ற வகையிலும்‌ பல்வேறு மட்டங்களிலும்‌ பெண்கள்‌ சுரண்டப்பட்டு வருகிறார்கள்‌. தாராள மயமாக்கல்‌ செயல்முறையானது, பொருளாதார, சமூக தளங்கள்‌ இரண்டிலுமே பாலின ரீதியான சுரண்டலின்‌ புதிய வடிவங்களைக்‌ கொண்டு வந்ததோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கவும்‌ வழிவகுத்தது.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுகிறது.

பெண்ணடிமைத்தனத்தால் லாபம் அடையும் முதலாளித்துவம்

வர்க்க சமூகங்களில் பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படை அம்சங்கள்: 1) பெண்கள் உற்பத்தி வளங்களில் இருந்து அன்னியப்படுத்தப்படுவார்கள் 2)‌ ஆணாதிக்க குடும்ப முறையில், ஆண்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் வைக்கப்படுவார்கள்.

நிலப்பிரபுத்துவக் காலத்தில் குடும்ப உழைப்பு போக, குடும்பம் ஈடுபட்ட உற்பத்தியில் உழைப்பைச் செலுத்தினாலும் அன்னியப்படுத்தப்படுவதும், சார்ந்திருப்பதும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட நிலையாகவே இருந்தது. முதலாளித்துவ முறையில் உற்பத்தி சக்திகள் பெருமளவில் வளர்ந்திருக்கிறது. பெரும்‌ தொழில்களில்‌ பெண்களை வேலைக்கு அமர்த்‌துவதன்‌ மூலம்‌ புராதனப் பெண்ணடிமை விலங்குகளை உடைத்தெறியும் முற்போக்குக் கூறுகளை முதலாளித்துவ முறை கொண்டிருக்கிறது. சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத, “சுதந்திரமான தொழிலாளிகள்” என்கிற நிலையைப் பெண்களுக்கு உருவாக்கிக்தரும் தன்மை இந்த உற்பத்தி முறைக்கு இருக்கிறது.

ஆனாலும், புராதனமான பெண்ணடிமைத்தன, ஆணாதிக்க மரபைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பில் சமநிலையற்ற நிலையை முதலாளித்துவ முறை நீடிக்க செய்யும்; மேலும் வலுப்படுத்தும். பெயரளவுக்கு ‘சமவேலைக்கு சமகூலி’ சட்டங்களை முதலாளித்துவ அரசுகள் இயற்றி வைத்திருக்கும். முதலாளித்துவ முறையையோ அந்தச் சட்டத்தைத் துளியும் கண்டுகொள்ளாமல் ஆண் தொழிலாளர்களுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாட்டால் உபரியைப் பெருக்கிடும்.

வாய்ப்புள்ள துறைகளில் எல்லாம் மிகக் குறைந்த கூலிக்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி லாபம் பார்த்திடும். பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் சிக்கல்கள் இருந்தால், அவர்களை வேலையில் இருந்து அகற்றி, ஒட்டுமொத்தமாகக் கூலியைக் குறைவாக வைத்திருக்க வேலையற்ற பெண் தொழிலாளர்களைப் பயன்படுத்தும். ‘இந்தக் கூலிக்கு நீ வேலைக்கு வரவில்லை என்றால், இதைவிடக் குறைவான கூலிக்கு வீட்டிலிருக்கும் பெண்களை வெளிவேலைக்கு வரவழைப்போம்!’ என்று அழுத்தம் தந்திடும். பெண்களை வேலையற்றோர் பட்டாளத்தில் வைத்திருப்பதன் வாயிலாக கூலியைக் குறைவாக வைத்திருக்கும் தந்திரத்தை முதலாளித்துவம் கையாள்கிறது. தாராளமயக் காலத்தில் இந்தப் போக்கு மேலும் கூர்மையடைந்திருக்கிறது.

“பெண்ணடிமைத்தனமானது முதலாளித்துவ லாபத்திற்கு மாபெரும்‌ கருவியாக எவ்வாறு விளங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ள மிகவும்‌ முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்‌ நிலவும்‌ பெண்களின்‌ நிலையைப்‌ பார்த்தாலே போதுமானது. அமெரிக்காவில் சம ஊதியத்திற்கான கமிஷன்‌ 1977-ல்‌ வழங்கிய, ‘பெண்‌களுக்கு சம ஊதியம்‌ வழங்கப்பட வேண்டும்’‌ என்ற பரிந்துரை அமெரிக்காவில்‌ இன்றளவும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படவில்லை.

பெண்களுக்கு சம ஊதியம்‌ வழங்காமல்‌ இருப்பதன் மூலம்‌ மட்டுமே அமெரிக்க முதலாளிகள்‌ ஆண்டொன்றுக்கு 200 மில்லியன்‌ டாலர்‌ கூடுதல்‌ லாபத்தை பெறுகிறார்கள்‌ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” – இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2005 ஆம் ஆண்டில், பெண்கள் பிரச்சனைகள், மாதர் அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து வெளியிட்ட ‘மாதர் அரங்கில் நமது கடமைகள்’ ஆவணம் குறிப்பிடுகிறது.

உலக அளவில் பாலின ஊதிய இடைவெளி 20 சதவிகிதமாக இருக்க, இந்தியாவில் ஊதிய இடைவெளி 34% என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2018-ல் கணித்தது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நிலையிலும் பாலின ஊதிய இடைவெளியை வெவ்வேறு அளவுகளில் காணலாம். பாலின இடைவெளி குறைவாக இருக்கலாமே ஒழிய, இல்லாமல் இருக்கவே இருக்காது.

ஐ.ஐ.எம் அகமதாபாத் இந்தியாவில் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட்டப்பட்ட 109 நிறுவனங்களின் 4000 மூத்த அதிகாரிகள் பங்குபெற்ற ஓர் ஆய்வை நடத்தியது. ஒரே நிலையில் பணியாற்றிய மூத்த பெண் அதிகாரிகள், மூத்த ஆண் அதிகாரிகள் மத்தியில், ஆண் அதிகாரிகள் 100 ரூபாய் ஊதியம் பெற்றால், பெண் அதிகாரிகள் 85 ரூபாய் மட்டுமே பெற்றதை இந்த ஆய்வு பதிவு செய்தது.

அமெரிக்காவில் ஆண் தொழிலாளர்கள் பெற்ற ஒரு டாலர் ஊதியத்தில், பெண் தொழிலாளர்கள் 84 சென்டுகள்தான் ஊதியமாகப் பெறுகிறார்கள். ‘வெள்ளை’ ஆண்களோடு ஒப்பிட்டால் 77 சென்டுகள் பெறுகிறார்கள். ‘கருப்பின’ பெண் தொழிலாளர்களோ 67 சென்டுகள் மட்டுமே ஈட்டுகிறார்கள் என்று 2023 ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாதியடிமை முறையுடன் இணைந்த பெண்ணடிமைத்தனம் இந்தியவின் ‘பிரத்யேக அம்சம்’ என்பதால், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாரபட்சங்கள் மிகமோசம்.

பொனான்சா

இந்தியாவின் பெண் தொழிலாளர்களில், பட்டியல் பழங்குடி/பட்டியல் சாதி பெண் தொழிலாளர்களின் ஊதிய பாகுபாடு விகிதம் 1999-2000ல் 7.9% என்ற அளவில் இருந்து, 2017-2018 ஆம் ஆண்டில் 40.5% என்ற அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

தனியார் துறைகளில் இட-ஒதுக்கீடு கிடையாது. அரசுப் பணிகளில்கூட A, B பிரிவுகளில் மட்டும்தான் இட-ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. C, D பிரிவுகளில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். முறைசாரா துறையில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள் மீதான பாகுபாடுகளைக் களைவதற்கான முறைமைகள் இல்லை. இந்தக் காரணங்களால் பழங்குடி/தலித் பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் ஊதியப் பாகுப்பாட்டை அனுபவிக்கிறார்கள். இந்தப் பெண் தொழிலாளர்கள் பாகுபாடுகளால் இழக்கும் தொகை முதலாளித்துவத்தின் லாபமாகிறது.

வளர்ச்சியடைந்த நாடு, வளர்ச்சியடையாத நாடு என எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் வேலைவாய்ப்புகளில், ஊதியத்தில் பாலின இடைவெளி என்பது நிச்சயமான ஒரு ஏற்பாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒப்பீட்டளவில் இந்த இடைவெளி குறைவாக இருக்கும். வளர்ச்சியடையும், வளர்ச்சி குன்றிய நாடுகளில் மிக அதிகமாக இருக்கும். இதுவும் முதலாளித்துவ அமைப்பின் ஏற்பாடுதான்.

இந்தியாவில் மேல்மட்ட வேலைவாய்ப்புகளில் நிலவும் பாலின ஊதிய இடைவெளி, வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் சராரசி பாலின இடைவெளியை ஒத்திருக்கிறது என்பதைக் கண்டோம். (100 ரூபாயில் 85 ரூபாய், ஒரு டாலரில் 84 சென்டுகள் அளவுகள்). மட்டங்கள் கீழே செல்லச் செல்ல பாகுபாட்டு இடைவெளி அதிகரிக்கும்.

பாகுபாடுகள் எப்போதும் தனித்திருக்காது. பல்வேறு கூறுகளோடு பின்னிப்பிணைந்து ‘பல்வகை பாகுபாடு’களாகவே (Multiple discriminations) நிலவும். இந்தியாவில் பாலினம், சாதி, வர்க்கம், மதம், நிலப்பரப்பு அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுக் காரணிகளால் தொழிலாளர்கள் பாகுபாடுகளைச் சந்திக்கிறார்கள். சமூகத்தில் காலங்காலமாக நிலவும் அடிமை முறைகளை, பாகுபாட்டு முறைகளைப் பயன்படுத்தி முதலாளித்துவம் வளர்ச்சியடைகிறது என்பதை வளர்ந்த அமெரிக்காவிலும் காண முடிகிறது, வளர்ந்து வரும் இந்தியாவிலும் காண முடிகிறது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உறுதிசெய்கின்றன.

அமெரிக்காவில் பாலின அடிப்படையிலான பாகுபாட்டையும், நிற-இனப்பாகுபாட்டையும் பயன்படுத்தி முதலாளித்துவம் கூடுதல் லாபம் பார்க்கிறது என்றால், இந்தியாவில் பாலின அடிப்படையிலான பாகுபாட்டையும், சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் பயன்படுத்தி கூடுதல் லாபம் பார்க்கிறது. ‘Bonanza’ என்ற ஆங்கில வார்த்தையை நாம் வர்த்தக விளம்பரங்களில் பார்ப்போம். ‘ஒருவர் நிறைய லாபத்தை ஈட்டி வெற்றி பெறும் சூழல்’ என்பது இந்த வார்த்தையின் பொருள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், குறைந்தபட்சம் இரட்டைப் பாகுபாடுகளால் முதலாளித்துவம் பயனடைகிறது. ‘டபுள் பொனான்சா’ என்பதைப் போல. இவை போக, மதம், இனம், தொழிலாளர் சார்ந்த பகுதி உள்ளிட்ட காரணிகள்- என என்னென்ன வகையான பாகுபாடுகள் இருக்கின்றனவோ, அனைத்தையும் தன்னுடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் முதலாளித்துவத்திற்கு உண்டு. பல்வகைப் பாகுபாடுகளைப் பயன்படுத்திக்கொண்டால், முதலாளித்துவத்திற்கு ‘மல்டிபிள் பொனான்சா’ தான்.

இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்தில் 1) பெண் தொழிலாளர் என்ற நிலைக்காக – 2) இன்ன சாதி, இன்ன மதம், இன்ன பகுதி, இன்ன இனம் எனப் பிற அடையாளங்களாலும் தாழ்த்தப்பட்ட பெண் தொழிலாளர்கள் என்பதற்காக – பெண் தொழிலாளர்கள் பலமடங்கு பாரபட்சங்களை அனுபவிக்கிறார்கள்.

தொடரும்…

ஆதாரங்கள்:

  1. India Wage Report, Wage policies for decent work and inclusive growth, ILO, 2018
  2. Catering Cleaners of Southern Railway Vs Union of India & Ors., (AIR 1987 SC 777)
  3. Why is a woman’s salary less than a man’s? A gaze down the gap, April 2, 2023, Economic Times
  4. It’s Time For Equal Pay For Equal Work, Jeff Raikes, March 14, 2023, Forbes.com
  5. மாதர்அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005
  6. Party Programme, CPIM, 1964, 2000- Adopted at the Seventh Congress of the Communist Party of India held at Calcutta, October 31 to November 7, 1964 * Updated at the Special Conference of the Communist Party of India (Marxist) held at Thiruvananthapuram, October 20-23, 2000
  7. Unequal Reward for Equal Work- Understanding Women’s Work and Wage Discrimination in India Through the Meniscus of Social Hierarchy, Pushpendra Singh, Falguni Pattanaik, Sage, 2020
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *