penandrum-indrum-webseries-20 -by-narmadha-devi அத்தியாயம் 20: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
penandrum-indrum-webseries-20 -by-narmadha-devi அத்தியாயம் 20: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 20: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

உதாரணப் பணி அமர்த்துனரும், பெண் தொழிலாளர்களும்

அரசாங்கம் ஒரு உதாரணமான பணி அமர்த்துனராக (Model Employer) இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் வழக்கத்தை ‘புராதனமான வழக்கம்’, ‘முற்காலத்திய வழக்கம்’, ‘தடைசெய்ய வேண்டிய வழக்கம்’ என்று பல முறை சுட்டிக்காட்டியதோடு, சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆன பிறகும், நமது நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் மூலமாக தொழிலாளர்களைப் பணியமர்த்தும் செயல், இயல்பான பணி அமர்த்தும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது. நிற்க!

உதாரண பணி அமர்த்துனராக இருக்க வேண்டிய அரசாங்கம் தொழிலாளர்களில், பெண் தொழிலாளர்களை எப்படி உச்சபட்சமாக சுரண்டுகிறது, பல ஆண்டுகளாக ஊழியர்களாகப் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு விரோதமாக எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு, சத்துணவு/அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட திட்டப் பணியாளர்களின் பணிநிலை ஓர் உதராணம்.

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை உறுதிசெய்தல், முறையான மருத்துவமனை பிரசவத்தை உறுதிசெய்தல்
  • குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை உறுதிசெய்தல், ஊட்டச்சத்து உணவை உறுதிசெய்து, எடை, உயரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்து ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்தல், ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆகியவற்றோடு முன்பருவக் கல்வியையும் குழந்தைகளுக்கு உறுதி செய்தல்
  • வளரிளம் பருவ சிறுமிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் ஊட்டச்சத்தை உறுதி செய்தல்…

இந்தப் பணிகள் எல்லாம் ஒரு நாட்டின் மக்கள் நல அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய மிக முக்கியமான கடமைகள். பிரவசத்தில் தாய் சேய் மரண விகிதத்தை குறைப்பது, குழந்தைகள் மரண விகிதத்தை குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கிய மேம்பாட்டிற்கு இந்தப் பணிகள் அவசியமானவை.

இந்தக் கடமைகளை நிறைவேற்ற பல பத்தாண்டுகளாக ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. மதிய உணவுத் திட்டம், 1980-களின் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் குடும்பல நலம், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைகள் வகுக்கின்றன.

உலகின் மிகப்பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டின் அடிப்படை நலத்திட்டங்கள் இவை. மாபெரும் திட்டங்களாகவும் இவை இருக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த அங்கன்வாடி, ஆஷா தொழிலாளர்கள் (அங்கீகரிப்பட்ட சமூக சுகாதார செயல்பாட்டாளர்கள்) போன்ற பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

நான்கு தசாப்தங்கள் பணியாற்றியும் அரசு ஊழியர்கள் இல்லை

இந்தியாவில் மாநிலங்களின் பள்ளிக் கல்வித் துறைகளின் மதிய உணவுத் திட்டப்பணியாளர்கள், 0-6 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியம், முன்பருவக் கல்வி உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடும் அங்கன்வாடிப் பணியாளர்கள், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார பணிகளை கிராம அளவில் மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட திட்டப் பணியாளர்கள் (Scheme workers) ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. இவர்களில் 95% சதவிகிதம் பெண்கள் மட்டுமே.

தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்களை மட்டும் எடுத்துக்கொண்டால் முழுவதும் பெண் தொழிலாளர்களே. இவர்களின் பணி நியமனங்களில் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% ஒதுக்கீடு என்ற அளவில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. எனவே, இந்தக் குறிப்பிட்ட பெண் தொழிலாளர் படையில் தனித்து வாழும் திருமணமான பெண்கள் மிக அதிகம். தமிழகத்தின் ஏறத்தாழ 50 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்கள், உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். ஏறத்தாழ 38 ஆண்டுகளாக மாநிலத்தின் குழந்தைகள் நலம், கர்ப்பிணிப் பெண்கள், இளம்பெண் நலம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்தப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். என்றாலும், இவர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது.

‘எங்களை அரசு ஊழியராக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுக்குப் பிறகு முறையான பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என அனைத்து சமூகப் பாதுகாப்புப் பலன்களும் வழக்க வேண்டும்!’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடிப் பணியாளர்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாகப் போராடி வருகிறார்கள். இரவு, பகல் தொடர்ந்து பல நாட்கள் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களில், ‘பெண்கள் என்பதால் எங்களை சுரண்டுவதை நிறுத்து!’ என்ற இந்தத் தொழிலாளர்கள் முழங்குவதைக் கேட்க முடியும்.

‘கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகளுக்கு தடுப்பூசி, முன்பருவக் கல்வி போன்ற மருத்துவம், சுகாதாரம், கல்விப் பணிகளில் சமூக நலத்துறையின் கீழ் பணியாற்றி வருகிறோம். வருவாய்த்துறை, தேர்தல் ஆணையம், வேளாண்துறை என எந்தத் துறை பணித்தாலும் வேலைகளை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். 38 ஆண்டுகளாக பணியாற்றியும் நாங்கள் அரசு ஊழியர்களாக்கப் படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வாக்குறுதி அளித்தும், எங்கள் அரசு ஊழியர் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டெய்சி பதிவுசெய்திருக்கிறார்.

எவ்வளவு பணிச்சுமை?

தங்களுடைய துறை சார்ந்த பணிச்சுமையோடு கூடுதலாக, தேர்தல் பணியில் வாக்குசாவடி நிலை அலுவலர் பணிகளை ஆண்டு முழுவதும் செய்வது, வேளாண் துறையின் மாடித்தோட்ட திட்டத்தில் பணியாற்றுவது, டெங்கு, மலேரியா, தொழுநோய் கணக்கெடுப்புப் பணிகளை சுகாதாரத் துறைக்காக மேற்கொள்வது என அவ்வப்போது விதிக்கப்படும் பல்வேறு துறைகளின் பணிகளையும் இந்தத் தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள்.

ஒரு சில மாநிலங்களில் அங்கன்வாடிப் பணியாளர்களின் நிலை இன்னும் மோசம். டெல்லியில், ‘தெருநாய்கள், பூனைகளைக் கணக்கெடுக்கும் பணிகளைக்கூட நாங்கள் ஒரு காலத்தில் செய்திருக்கிறோம்!’ என அங்கன்வாடிப் பணியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை வைத்து அங்கன்வாடித் திட்டத்தை நடத்த முடியாத நிலை இருக்கிறது. எனவே ஆளும் பாஜக மாநில அரசாங்கம் ‘போஷான் மட்கா’ என்கிற ‘புல்லரிக்கும்’ திட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது. அங்கன்வாடி மையத்தில் மொத்தம் ஐந்து மட்கலன்கள் வைக்கப்பட்டிருக்குமாம். அங்கன்வாடிப் பணியாளர்கள் ஊர்க்காரர்களிடமிருந்து தானியங்களை சேகரித்து, ஒவ்வொரு கலனிலும் தலா ஒரு குவிண்டால் ஒவ்வொரு மாதமும் நிரப்ப வேண்டுமாம். ஐந்தில் மூன்று கலன் தானியங்களை விற்று, கிடைக்கிற பணத்தில் பிற பொருட்களை வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளைத் தயாரித்து வழங்கிட வேண்டுமாம். எப்படி கதை?

மத்தியப் பிரதேசம் மட்டும் இல்லாமல், வேறு சில மாநிலங்களும், அங்கன்வாடி மையங்களை புரவலர்கள் தத்து எடுத்துக்கொள்ளும் ‘புதுமைத்’ திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இதன் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் தன்னுடைய பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து, பணியாளர்கள் மீது சுமத்துகிறது. இந்தப் பணியாளர்கள் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஏழைப் பெண்கள் என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

நிரந்தரத் தன்மை கொண்ட வேலை

தமிழ்நாட்டின் அங்கன்வாடித் திட்டம், மதிய உணவுத் திட்டமும் பரவலாகப் பாராட்டப்படுகிற திட்டங்களாக இருக்கின்றன. என்றாலும், இந்தத் திட்டங்களை செயல்படுத்தும் பெண் தொழிலாளர்கள் நிலை பரிதாபகரமானது. தமிழ்நாட்டில் தொடக்க காலத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள், ‘பகுதிநேர பணியாளர்கள்’ என்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு சிறப்பு காலமுறை ஊதியம் இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தடையற்ற சேவைகளாக குடிமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிகளை இந்தத் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இவர்களின் பணிகள் தொடர்ச்சியான தன்மை கொண்டது. எனவே, ‘வெறும் திட்டப்பணிகளைச் செய்பவர்கள்’ என்று இவர்களை சுருக்கிவிட முடியாது. மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களை எந்தக் காலத்திலும் அரசாங்கங்கள் நிறுத்திவிடவும் முடியாது. எனவே, அரசின் இந்தத் திட்டப்பணிகளை அமல்படுத்த, இந்தப் பெண் தொழிலாளர்கள் என்றைக்குமே அவசியமான நிரந்தர ஊழியர்களாகத் தேவைப்படுபவர்கள்.

‘தொடர்ச்சியான தன்மை கொண்ட பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி இருக்கிறது. இருந்தும், பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக ஆக்கப்படவில்லை. சுமார் 10 வருட அனுபவமுள்ள தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முறையே ரூ. 12,000 மற்றும் ரூ. 7,000 மட்டுமே மாத ஊதியம் பெறுகிறார்கள்.

அற்ப ஊதியம்

இந்த அற்ப ஊதியத்தை வைத்துக்கொண்டு இன்றைக்கு இந்தியாவின் விலைவாசி நிலைமைகளில் ஒரு நபர்கூட வாழ்ந்திட முடியாது என்பது உலகறிந்த உண்மை. இந்நிலையில் அங்கன்வாடிப் பணியாளர்களால் எப்படி வாழ்க்கையை நடத்திட முடியும்? அதுவும், பெரும்பாலும் தனித்து வாழும் பெண் தொழிலாளர்களாக இருக்கும் இந்தப் பெண் தொழிலாளர்களால் எப்படி கண்ணிமான வாழ்க்கை வாழ முடியும்? காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பத் தகுதியில், விண்ணப்பிப்பவர்களின் குடும்பத்தில் குடும்பத் தலைவர் மாத ஊதியம் 12,000 ரூபாய்க்கு மிகக்கூடாது என்பது விதியாக இருக்கிறது. அப்படியென்றால், எத்தகைய வரிய நிலையில் உள்ள பெண்கள் இந்தப் பணிக்கு வருவார்கள்?

பெண்கள், அதுவும் வரிய வர்க்கங்களில் இருந்து வரும் பெண்கள், எனவே, ‘இவர்கள் கீழ்ப்படிந்த நிலையில் அதிக வேலைப்பளுவை சுமப்பார்கள்; சொல்கிற கூடுதல் வேலைகளை எல்லாம் மறுக்காமல், தட்டாமல் செய்வார்கள்’ -இந்த அணுகுமுறையைத்தான் அங்கன்வாடிப் பெண் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசாங்கமே கடைப்பிடிக்கிறது.

இந்தியாவில் ஆஷா மருத்துவப் பணியாளர்கள் நிலை இன்னும் மோசம். இவர்களைப் பணியாளர்கள் என்றுகூட அரசாங்கம் குறிப்பிடவில்லை. ‘தன்னார்வ செயல்பாட்டாளர்கள்’ என்று பெயரிட்டு, பணியாளர்கள் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்ய வைத்து சுரண்டுகிறது. ‘வெகுமதி’ ‘ஊக்கத்தொகை’ என்ற பெயரில், மாதம் வெறும் 2000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை மட்டுமே, இந்தப் பெண் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.3,000-க்கும் குறைவான ‘ஊக்கத்தொகை’ மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களின், பெரும்பாலான ஆஷா பணியாளர்களுக்கு வேறு வருமான வாய்புகள் ஏதும் இல்லை. இந்தப் பணியை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். வேறு எந்தப் பணியையும் செய்ய முடியாத அளவிற்கு வேலை பளு அதிகம் கொண்ட பணியாகவும் இருக்கிறது. இந்நிலையில் 3000, 3500 ரூபாய் மாத ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயம்?

உதாரண பணியமர்த்துனராக இருக்க வேண்டிய அரசாங்கமே பெண் தொழிலாளர்கள் விஷயத்தில் படுமோசமாக செயல்படுகிறது என்கிறபோது, லாபம் தவிர வேறெதுவும் கண்ணுக்குத் தெரியாத தனியார் துறைகளில் சட்டப் பாதுக்காப்பிற்குள் வராத பணிகளில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் நிலை?

குறைந்துவரும் அரசு வேலைவாய்ப்புகளும் பெண் தொழிலாளர் நிலையும்

அரசுப் பணிகள் நிரந்தரத் தன்மை கொண்டவை, முறையான வேலைநேரம், ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உரிய பலன்களைக் கொண்டவை. எனவே, வேலைவாய்ப்ப்பில் அரசுப் பணிகள் மிக முக்கியமானவை. மக்கள் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அரசு வேலைவாய்ப்பு அவசியமானது. ஆனால், அரசுப் பணிகளிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி, தற்காலிகப் பணி, அவுட் சோர்சிங் செய்யும் முறைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இன்றைக்கு அநேக அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியிடங்கள் மிக வேகமாக ஒழிக்கப்பட்டு வருகின்றன.

‘2013 ஆம் ஆண்டில் அரசாங்கப் பணிகளில் இருந்த முறைசார் தொழிலாளர்களில், 44% பேர் தற்காலிகப் பணியாளர்கள்’ என்று ஓர் ஆய்வு பதிவு செய்திருக்கிறது. 1995-2011-க்கு இடைப்பட்ட காலத்தில், முறைசார் அரசுப் பணி வேலைவாய்ப்புகள் 10 சதவிகிதம் என மிகப்பெரும் அளவில் குறைந்தன. மாநில அரசு, உள்ளாட்சித் துறைப் பணிகள் ஆண்டிற்கு 0.65% அளவிற்கு குறைந்தது என்றால், ஒன்றிய அரசுப் பணிகள் 1.99% சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஏறத்தாழ 2%.

கடைநிலை ஊழியர்களான குரூப் C, D பணியாளர்கள்தான் தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். 2001-2002 முதல் 2011-2012 வரையிலான பத்தாண்டுகளில், குரூப் A, B பணியாளர்கள் எண்ணிக்கை முறையே 27%, 24.1% அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், குரூப் C, D தொழிலாளர்கள் எண்ணிக்கையோ 8.4% சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. வரிய நிலையில் உள்ள வர்க்கங்களின் வரிய நிலையை மேன்மேலும் அதிகரிக்கும் ஏற்பாடு இது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2013 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 36% ஆக உயர்ந்தது. தினக்கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2.5% லிருந்து 6.6% ஆக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 2013 ஆம் ஆண்டில் இருந்த 19% ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டில் 42.5% அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ‘நான்கு துறைகளைத் தவிர மற்ற துறைகளின் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்றுவிடுகிறோம்’ என இன்றைய பாஜக ஒன்றிய அரசு வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகிறது. இராணுவத் துறையில்கூட நான்காண்டுகள் ஒப்பந்த அளவில் பணியமர்த்தும் மிகமட்டமான நிலைக்கு இந்தியாவை ஆளும் பாஜன அரசு கொண்டுவந்துவிட்டது.

தமிழ்நாட்டிலும் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம், மின்சார விநியோகம், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் பணிகள் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் சமீபத்திய அரசாணைகள் 152, 139, 10 வரிசையாக, பஞ்சாயத்து, நகராட்சிப் பணிகளை அவுட்சோர்சிங் முறைக்குள் கொண்டு வருகின்றன. பாதுகாப்பு, வரி வசூல், குடிநீர் விநியோகம், வாகன ஓட்டுனர்கள், தூய்மைப்பணி என அநேக பணிகளை ஒப்பந்தக்காரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்ய வழிவகுக்கிறது. ஏற்கனவே, இந்தத் துறையில் ஒப்பந்த முறை என்பது ஓரளவில் இருப்பதுதான் என்றாலும், இந்தப் புதிய அரசாணைகள் 20 மாநகராட்சிகளின் 35,000 என்ற பணியாளர்கள் எண்ணிக்கையை 10% அளவிற்குக் குறைத்துவிடும் என்பதோடு பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய தொழிற்சங்க மையத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இப்படி முறைசார் பணிகளில் கண்ணியமான அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் நிலை, தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் பாதிக்கும். அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்ற தொழிலாளர்கள் பெண்கள் என்ற காரணங்களால் அதிகம் சுரண்டப்படுகிறார்கள் என்பது உண்மை என்றாலும், வேலைக்கு எடுப்பதில் பாலின அடிப்படையிலான பாரபட்சங்கள் அரசுத் துறையில், அரசே நேரடி பணியமர்த்துனராக இருக்கும்போது குறைவு. ஒப்பந்தப் பணி, அவுட்சோர்சிங் முறையில் வேலைக்கு எடுக்கும்போது பாலின பாரபட்சமும் இருக்கும், இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படாது. எனவே, கண்ணியமான நிரந்தர அரசு வேலைவாய்ப்புகளை உதாரண பணி அமர்த்துனரான அரசு குறைத்திடும்போது, ஒடுக்கப்பட்ட பெண்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தொடரும்…

ஆதாரங்கள்:

38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கு, CPIM Tamilnadu

Tamil Nadu: Anganwadi Workers, Helpers protest proposed merger centres, low-wages and pension, News Click, 21 April, 2023

‘Taken for Granted and Ignored’, Anganwadi Workers Demand Better Pay, Conditions, The News Minute, 10 September, 2018

AIFAWH Protests on Children’s Day, Nov 14: ‘No More Bhajans; We Want Food and Infrastructure’, People’s Democracy, 20 November, 2022

Number of Temporary Workers in Government Jobs Seen Rising, Live mint, 20 August 2014

43% of government sector manned by contract workers: Study, ET, 21 August 2014

Central PSUs witness cut in total employment; 2.7 lakh jobs down since 2013, ET, June 16, 2023

TN: Protests erupt DMK Govt as moots outsourcing in departments and urban local bodies, News Click, 6 Dec, 2022

TN: Sanitation Workers Protest Outsourcing in Local Bodies, Demand Permanent Jobs, 15 July 2023

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *