வேலைவாய்ப்பின் தரம்
“இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” – 2023 ஆம் ஆண்டு மகளிர் தின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இவ்வாறு பெருமிதமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் உற்பத்தித்துறை தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்கள் வெறும் 19.7% மட்டுமே என்று, தொழிற்துறையின் வருடாந்திர ஆய்வு 2023 (Annual Survey of Industries 2023) அறிக்கை பதிவுசெய்துள்ளது. ஐந்தில் ஒருவர் பெண் தொழிலாளி.
தொழிற்சாலை சட்டவரம்பிற்குள் வருகிற முறைசார் உற்பத்தித்துறையில், நேரடியாகப் பணியில் அமர்த்தப்படும் பெண் தொழிலாளர்களை மட்டுமே இந்த ASI அறிக்கை குறிப்பிடுகிறது. ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை அது சேர்க்கவில்லை. உலகமயமாக்கல் காலத்தில் பன்னாட்டு உற்பத்தியகங்களுக்காகப் பொருட்களை வீட்டளவிலேயே உற்பத்தி செய்துவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உண்டு; அவர்களில் பெண்கள் எண்ணிக்கை மிக அதிகம். இந்தத் தொழிலாளர்கள் எந்தப் பதிவிலும் வருவதில்லை. நிற்க!
இந்தியாவின் ஒட்டுமொத்த பெண் உற்பத்தித் தொழிலாளர்களில் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் மட்டும் 43% பேர் பணியாற்றுகிறார்கள் என்று ASI 2023 குறிப்பிடுகிறது. நிதியமைச்சரும் ஏறத்தாழ இந்த எண்ணிக்கையத்தான் குறிப்பிட்டிருக்கிறார். ASI அறிக்கையின்படி, உண்மையில், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகிய நான்கு தென்மாவட்டங்களில் மட்டும் 72% பெண் உற்பத்தித் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
பிற மாநிலங்களும், தென் மாநிலங்களும்
இந்தியாவின் பிற மாநிலங்களின் நிலைமைகளையும் பார்த்துவிடுவோம்.
- உற்பத்தித் துறை பணிகளில் பாலின இடைவெளி இல்லாத ஒரே இந்திய மாநிலம், பாஜக ஒன்றிய மாநில அரசுகளால் பற்றி எரிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மணிப்பூர் மட்டுமே. இம்மாநிலத்தின் உற்பத்தித் துறை தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 50.8%.
- மணிப்பூரைத் தொடர்ந்து கேரளாவில் 45.5%, கர்நாடகாவில் 41.8% தமிழ்நாட்டில் 40.4% பெண் உற்பத்தித் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
- சட்டிஷ்கரில் வெறும் 9% பெண் தொழிலாளர்களும், டில்லியில் வெறும் 4.7% பெண் தொழிலாளர்களும், ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கத்தில் வெறும் 5.5% பெண் தொழிலாளர்களும் மட்டுமே உற்பத்தித்துறையில் பணியாற்றுகிறார்கள்.
- தொழில்மயமான ஐந்து மாநிலங்களில் மகாராஷ்டிரத்தில் 12%, குஜராத்தில் 8%, உத்திரப் பிரதேசத்தில் 5.7% பெண் தொழிலாளர்கள் மட்டுமே உற்பத்தித்துறையில் பணியாற்றுகிறார்கள். ஆந்திராவில் 30.2%, தமிழ்நாட்டில் 40.4% என்பது ஒப்பீட்டளவிலும், தனித்தும் சிறப்பான எண்ணிக்கைதான்.
வேலைவாய்ப்பின் தரம்
எண்ணிக்கை இருக்கட்டும். தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் நிலை உண்மையில் எப்படி இருக்கிறது? ஒரு சில செய்தித்தொகுப்புகள், ஆய்வறிக்கைகளில் இருந்து சில விவரங்களைப் பார்த்துவிடுவோம்.
“18 வயது கலா திண்டுக்கல்லின் ஒரு ஜவுளி ஆலையில் கடந்த மூன்றாண்டுகளாக வேலை செய்கிறார். (15 வயதில் சிறுமியாக வேலைக்கு சேர்ந்திருப்பார்). காலை 6.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி, 45 நிமிடங்கள் பயணித்து மில்லுக்குச் செல்வார். 8 மணிக்கு வேலை தொடங்கும். அதன் பிறகு 8 மணிநேர வேலை. பல நாட்கள் அடுத்த ஷிஃப்டிலும் ஒரு சில மணிநேரங்கள் வேலை செய்துவிட்டே கிளம்புவார். மில்லில் காலை, மதிய உணவு கொடுத்தாலும் உணவு படுமோசமாக இருக்கும். அதனால், உணவைத் தவிர்க்கவே விரும்புவார்.
நீண்ட நேரம் வேலைசெய்து பிடித்தங்கள் போக, மாதம் 3000-3500 ரூபாய்தான் பெறுகிறார். தமிழ்நாட்டில் இத்தகைய 2000 மில்கள் இருக்கின்றன. அவற்றில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்களில் பாதிக்குமேல் பெண்கள்.” 2017-ல் இந்து ஆங்கில நாளிதழ் பதிவு இது.
கலா ஒரு நாளில் சராசரியாக 9 மணி நேரம், வாரத்தில் வாரத்தில் 6 நாட்கள் வேலைபார்த்தார் எனக்கொள்வோம். மாதத்தில் 216 மணி நேர வேலை. ஒரு மணிநேரத்துக்கு வெறும் 12-13 ரூபாய் கூலி!
‘2017 ஆம் ஆண்டில் 3000 ரூபாய் சம்பளமாக இருக்கலாம். 2023-ல் கூலி அதிகரித்திருக்கலாமே?’ என்றால், அதுவும் இல்லை. அதே திண்டுக்கல்லில் கலைச்செல்வி என்ற ஜவுளித் தொழிலாளி மாதம் வெறும் 4000 ரூபாய் சம்பளம் பெறுவதாக த வீக் இதழ் (மார்ச் 12, 2023) பதிவு செய்திருக்கிறது.
உமா என்ற 36 வயது திருப்பூர் பெண் தொழிலாளர் பற்றிய பதிவும் அதே செய்திக்கட்டுரையில் உள்ளது. திருப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக ஓவர்லாக்கிங் செய்யும் டெய்லராக இவர் பணியாற்றுகிறார். (16 வயதில் வேலைக்கு சேர்ந்திருந்திருக்கிறார்) காலையில் 4 மணிக்கு உமாவின் நாள் தொடங்குகிறது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பின்னலாடை ஆலைக்கு வந்தால் 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வேலை பார்ப்பார். 15 நிமிட தேநீர் இடைவேலைகள் இரண்டு. 40 நிமிட உணவு இடைவேலை ஒன்று. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஷிஃப்டுக்கு 45 ரூபாய் கூலி வாங்கி இருக்கிறார். இப்போது 350 ரூபாய் பெறுகிறார். அன்றைய தினம் அவர் 350 ஆடைகளுக்கு ஓவர்லாக்கிங் செய்தார். எவ்வளவு வேகமாக வேலை பார்த்தாலும் ஒரு நாளைக்கு 350 ரூபாய்க்கு மேல் தாண்ட முடியாது. (ஓர் ஆடைக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் கூலி கிடைத்திருக்கிறது.)
ஆக, 20 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த இந்தப் பெண் தொழிலாளி வெறும் 9000 ரூபாய் மாத சம்பளத்தை நெருங்குவார்!
சுமங்கலி திட்டம்
திருப்பூர், கோவை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களின் ஆயத்த ஆடைகள், பின்னலாடை, பஞ்சாலை மில்களில் பணியாற்றுவதற்கு சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் பெண் தொழிலாளர்கள் இடம்பெயரந்து செல்கிறார்கள். இடம்பெயர்ந்த இந்தப் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மணமாகாதவர்கள். இவர்கள் விடுதிகளில் தங்கிப் பணியாற்ற வேண்டும்.
பஞ்சாலை, ஜவுளி உற்பத்தித் துறையின் ‘சுமங்கலித் திட்டம்’ முதலாளித்துவ முறையில் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வர்க்க, சாதிய, ஆணாதிக்க அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு ‘துல்லியமான ஓர் எடுத்துக்காட்டு’ என்று சொல்லலாம்.
கடந்த 1990-களில் ‘சுமங்கலித் திட்டம்’, ‘திருமாங்கல்ய திட்டம்’ என்ற விதவிதமான பெயர்களில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் ஜவுளி உற்பத்தித் துறைக்கு தொழிலாளர்களாக இழுக்கப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள். 15-18 வயதுக்கு உட்பட்டவர்கள். ‘மூன்றாண்டுகள் வேலை பார்த்தால் இறுதியில் திருமண செலவுக்கு, வரதட்சணைக்கு உதவும் வகையில் 30,000 ரூபாய், அரை கிராம் தங்கம் வழங்கப்படும்! மாதம் இவ்வளவு சம்பளம் வழங்கப்படும்!’ என்று ஆசை வார்த்தைகள். இந்தப் இளம்பெண்கள் முழுமையான தொழிலாளர்கள் செய்யும் வேலைகளை, இரவு பகலாக செய்ய வேண்டும். என்றாலும், மூன்றாண்டு காலம் வரை ‘அப்ரன்டீஸ்’ அதாவது ‘தகுதி காண் பருவத்தில் பணி செய்பவர்’ என்ற பிரிவில்தான் இவர்கள் வைக்கப்படுவார்கள்.
‘தொழிலாளியாகத் தகுதி பெறுவதற்காக வேலை பழகும் காலம்’ என்பது அப்ரன்டீஷிப் காலம். 1977 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு, ‘தொழிற்கல்வி இல்லாத தொழிலாளியின் அப்ரன்டீஷிப் காலம் மூன்றாண்டுகள் வரை இருக்கலாம்’ என்ற திருத்தத்தை (G.O. Ms. No. 713 Labour and Employment Department, 04.10.1977) கொண்டுவந்தது. இத்தகைய வழிவகைகளைப் பயன்படுத்தி முதலாளித்துவ முறையால் ஜவுளி, பின்னலாடை போன்ற தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களை அப்ரன்டீஷிப் அடிப்படையில் மூன்றாண்டு காலம் வரைமுறையில்லாமல் சுரண்ட முடிகிறது. மிகக் குறைந்த கூலிக்கு சுரண்ட முடிகிறது. 1961 அப்ரன்டீஸ் சட்டம் ஒரு தொழிற்சாலையில் அப்ரன்டீஸ்கள் எண்ணிக்கை 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்கிறது. அப்ரன்டீஸ்களை ‘கூடுதல் நேரம்’ (Over time) பணியாற்ற வைக்கக்கூடாது என்கிறது. என்றாலும், இளம்பெண்களைப் பணியமர்த்தும் ஜவுளித் தொழிற்சாலைகளில் 70-90% தொழிலாளர்கள் அப்ரன்டீஸ்களாகவே வைக்கப்பட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நெடுநேரம் வேலை வாங்கப்பட்டு, சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்ட சக்கைகளாகவே இந்தப் பெண் தொழிலாளர்கள் தங்கள் விடுதிகளுக்கு செல்லும் நிலை.
2000-களில் இந்தத் திட்டங்களை எதிர்த்த குரல்கள் பலமாக ஒலித்தன. மாநில மகளிர் ஆணையம் ஒரு சில முறை பொது விசாரணை முறையில் சில புகார்களை விசாரித்திருக்கிறது. உயிரிழப்புகள், விபத்துகளில் கைவிரல்கள் போன்ற பாகங்களை இழத்தல், மோசமான முறையில் விடுதிகளில் நடத்தப்பட்ட சம்பவங்கள் இந்த பொது விசாரணையில் விசாரிக்கப்பட்டன.
2009 ஆம் ஆண்டில் மாநில மகளிர் ஆணையம் நடத்திய பொது விசாரணையின் ஒரு வழக்கில், ரேகா என்ற பெண் தொழிலாளி தன் நிலையை நேரடியாகப் பதிவு செய்தார். “நான் விடுப்பு எடுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக ஒரு மாதம் வேலை பார்க்க வேண்டும் என்று, படிக்காத எனது அப்பாவிடம் எழுதிவாங்கிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் எனது உடல்நிலை மிகவும் மோசமாகி வேலையே பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். கடுமையான அல்சர் வயிற்றுவலி. பத்து நாட்கள் விடுப்பு எடுத்தாக வேண்டிய கட்டாயம். மேலும் 10 மாதங்கள் நான் வேலை பார்க்க வேண்டும் என கம்பனி நிர்பந்தித்தது. இவ்வளவு காலம் நான் வேலை பார்த்தும் இன்னும் அந்த 30,000 ரூபாயை அவர்கள் தரவே இல்லை” என்று வலியோடும், கடுமையான கோபத்தோடும் ரேகா பதிவு செய்தார். மூன்றாண்டு முடிந்து பரிசுத் தொகையை 15-20 சதகிவித பெண் தொழிலாளர்கள் மட்டுமே பெற்றார்கள் என நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகைகூட மாதாமாதம் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது.
விடுதியில் தங்கி இருந்த காலத்தில் இந்தப் பெண் தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாது. செல்ஃபோனிற்கு அழைப்புகள் வந்தால்கூட யார், என்ன என்று விசாரிக்கப்பட்டார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற கண்காணிப்பு உண்டு. 2009 பொது விசாரணையில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு பெண் தொழிலாளி ‘எனது விடுதிக் கண்காணிப்பாளர் எனது செல்ஃபோனைப் பிடுங்கி வைத்துக்கொண்டார்’ என குற்றம் சுமத்தியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் விசாரிக்கப்பட்டார். ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணின் செல்ஃபோனைக் கைப்பற்றலாம்?’ என்ற கேள்வியை விசாரணைக்குழு அவரிடம் எழுப்பியது. அந்த ஆசாமியோ, ‘அந்தப் பெண் என்ன செய்தாள் தெரியுமா? ஒரு ஆண் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தாள். அதனால் கண்காணித்தேன்’ என்று சொல்லிவிட்டு, தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியதற்கு அந்த விசாரணை மன்றம் பாராட்டு தெரிவிக்கும் என்ற பெருமித எதிர்ப்பார்ப்பில் திளைத்து நின்றிருந்தார். அரங்கமே சிரித்து கண்டனத்தைப் பதிவு செய்தது. ‘முதலில் யார் நீ?! எப்படி அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைத்தாய்? உனக்கு யார் அந்த அதிகாரத்தைத் தந்தார்கள்?…’ இப்படியான கேள்விக்கனைகளை விசாரணைக்குழு உறுப்பினர்கள் தொடுத்தார்கள். அந்த ஆசாமி திகைப்புக்கு உள்ளானார். அவருடைய வாழ்க்கையில் இப்படியான கோணத்தில் அவருக்கு யாரும் வகுப்பு எடுத்திருக்க மாட்டார்கள். தன்னுடைய உரிமைகளுக்கான அரசு தரப்புக் குரலைக் கேட்டதில் அந்தப் பெண் தொழிலாளி முகத்தில் சிறிய மலர்ச்சி. மரியாதை குறைவாக நடத்துதல், பாலியல் குற்றச்சாட்டுகள் முதல், கொலைக் குற்றச்சாட்டு வழக்குகள்கூட அந்தப் பொதுவிசாரணையில் வந்தது. 2018-ல் கூட சுமங்கலித் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொதுவிசாரணையை மாநில மகளிர் ஆணையம் மீண்டும் நடத்தி இருக்கிறது.
இன்றும் தொடர்கிறது…
சுமங்கலி திட்டம் போன்ற பணியமர்த்தும் முறைகள் கொத்தடிமை திட்டமாகவும், குழந்தைத் தொழிலாளர் முறையின் வடிவமாகவும் விளங்குகின்றன. ‘இப்போது இத்தகைய திட்டங்கள் இல்லை, ஒழிக்கப்பட்டுவிட்டன’ என அரசாங்கங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், ‘உங்கள் பெண் பிள்ளைகளுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்குகிறோம்!’ என்ற போர்வையில் மீண்டும் இப்படியான திட்டங்கள் மறுவடிவைப்பு செய்யப்பட்டு ஆங்காங்கே தொடர்கின்றன. சில இடங்களில் ‘தங்க நகைகள், திருமணத்துக்கான ரொக்கம் தருகிறோம்!’ என்று பழைய முறையிலும் பெண் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் முறைகள் தொடர்கின்றன. இந்தப் பெண் தொழிலாளர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை வேலைக்கு சேர்த்துவிட்டால் சன்மானங்கள் தரப்படும் என்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன. இந்தத் திட்டங்கள் குறித்த விளம்பரங்கள் தொழிலாளர்களின் விடுதிகளில் ஒட்டப்படுகின்றன- இப்படி செய்தி ஊடகங்கள் அவ்வப்போது செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. (TOI, Dec 26, 2017, The Federal, Dec 10, 2021)
அமெரிக்காவின் மாசசூஷட்ஸ் மாகாணத்தில் லவல் என்ற முதலாளி ஜவுளி ஆலையை முதன்முதலாக நிறுவிய காலத்தில், இளம்பெண்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் தருகிறோம் என விடுதியில் தங்கவைத்து வேலைக்கு எடுக்கும் முறையை அமெரிக்க முதலாளிகள் பின்பற்றினார்கள் என்றும், ‘லவல் முறை’ என்ற பெயரை இம்முறை பெற்றது என்றும் அத்தியாயம் 11-ல் பார்த்தோம். கிட்டத்தட்ட 170 ஆண்டுகளுக்குப் பிறகு உலகமயம், தாரளமயம், தனியார்மயம் என முதலாளித்துவ முறை லாபப் பெருவெறியில் உலகெங்கும் அலைகிறது. விளைவு? லவல் முறை வெவ்வேறு வடிவங்களில் உலகெங்கிலும் தொடர்கின்றன. H&M, C&A, மார்க்ஸ் & ஸ்பென்சர், டீசல், ஓல்ட் நேவி, டிம்பர் லேண்ட், அஸ்டா வால்மார்ட் என உலகின் புகழ்பெற்ற பிராண்டுகள் பெயர்களைச் சொல்லுங்கள்! அவற்றிற்கெல்லாம் நம்முடைய திருப்பூர், கோவை மாவட்டங்களின் பெண் தொழிலாளர்கள் கொடூரமான சுரண்டல்களை அனுபவித்து ஆடைகளை உற்பத்தி செய்கிறார்கள்.
கோவிட் காலத்தில் READ என்ற அமைப்பு 200 பெண் தொழிலாளர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இவர்களில் 120 பேர் வெளிமாநில தொழிலாளர்கள்; 80 பேர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள். வெளிமாநிலத் தொழிலாளர்களில் 49% பேர் ஒடிசா, 14% பீஹார், 12% மேற்கு வங்கம்.
மொத்த தொழிலாளர்களில் 50% பேர் பட்டியலின/பழங்குடி வகுப்பினர்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வேலைக்கு வந்த பிறகு வெறும் 12% தொழிலாளர்களுக்கு மட்டுமே ஒரு சில கூலி உயர்வு இருந்திருக்கிறது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் மாதம் 9000 ரூபாயும், நமது மாநிலத் தொழிலாளர்கள் 11,000 ரூபாயும் பெறுகிறார்கள்.
இந்தத் தொழிலாளர்களில் பாதிபேர் ஏதாவது ஒரு வகையில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து இருக்கிறார்கள். வெளிமாநிலத் தொழிலாளர்களில் 20% பேரும், நம் மாநிலத் தொழிலாளர்களில் 50% பேரும் மட்டுமே நிறுவனத்திற்குள் பாலியல் புகார் கமிட்டிகள் இருக்கின்றன எனத் தெரிவித்திருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் ஒடுக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள். அதிலும், ஒடுக்கப்பட்ட தலித்/பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள், அதுவும், தங்கள் வீடுகளை விட்டு வெகு தொலைவில் வேலை பார்க்கும் தலித்/பழங்குடி பெண் தொழிலாளர்கள், வெளி மாநில தலித்/பழங்குடி பெண் தொழிலாளர்கள். முதலாளித்துவத்தின் சுரண்டல் பன்மடங்குகளாக விரியும்.
உற்பத்தித் துறையின் வீட்டுத் தொழிலாளர்கள்
ASI 2023 அறிக்கைப்படி, உற்பத்தித் துறையில் எலக்ட்ரானிக்ஸ், ஜவுளித் துறையில் தலா 20% பெண் தொழிலாளர்கள்.
தோல் பொருட்கள் உற்பத்தியில் 40% பெண் தொழிலாளர்கள்
ஆயத்த ஆடை உற்பத்தியில் பெண் தொழிலாளர்கள் 50% இருக்கிறார்கள்.
புகையிலை தொழிலில் மிக அதிகமாக 72% பெண் தொழிலாளர்கள்.
ஆடை, தோல் பொருட்கள் உற்பத்தியில் வீட்டளவில் பெண் தொழிலாளர்கள் செய்யும் உற்பத்தி கணிசமாக இருக்கிறது. உலக அளவில் பெயர் பெற்ற ஆடை பிராண்டுகளுக்கு திருப்பூர் பெண் தொழிலாளர்கள் வீட்டளவிலும் உற்பத்தி செய்கிறார்கள். அதேபோல் உலகின் மிகப் பெரும் லெதர் பிராண்டுகளுக்கான உற்பத்தி ஆம்பூர், வேலூர், சென்னையில் நடக்கின்றன. ஆம்பூரில் பெண் தொழிலாளர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் உழைப்புச் சுரண்டல் படுமோசமானது.
கார்டியன் இதழ் திருப்பூரின் பின்னலாடை கம்பனிகளுக்காகப் பணியாற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் குறித்த புகைப்பட செய்தித்தொகுப்பு ஒன்றை இம்மாதம் வெளியிட்டது.
வீட்டில் சமையல் செய்வது, குழந்தைகள், பெரியவர்களைக் கவனித்துக்கொள்வது போன்ற பணிகள் பெண்களின் கடமையாக இருப்பதால், தொழிற்சாலைக்கு சென்று வேலை பார்க்க இயலாது; ஆனால், ஏதாவது வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என்ற சூழல். இப்படிப்பட்ட பெண்களும், வயதான பெண்களும்தான் தொழிற்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வீட்டுத் தொழிலாளர்களாக பெரிய உற்பத்தியகங்களுக்காக உழைக்கிறார்கள்.
வாரத்தில் ஆறுநாட்கள் காலை 9 முதல் மாலை 8 மணி வரை உதவியாளராக இருக்கும் சந்தானம் என்ற பெண் தொழிலாளிக்கு ஒரு நாள் கூலி 390 ரூபாய். துணியை வெட்டுவது, மடிப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளை நேர்த்தியாக இவர் செய்ய வேண்டும். இந்த வேலையை தொழிற்சாலைக்கு சென்று செய்தால், ஓரளவு அதிகம் கூலி கிடைக்கும். ஆனால், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். வேலைக்குப் போக முடியாத சூழல். எனவே, வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் உற்பத்தி யூனிட்டில் அவர் பணியாற்றுகிறார்.
பெரிய கம்பனிகள் ஆங்காங்கே சிறிய யூனிட்களுக்கு வழங்கிடும் பணிகளை பெண் தொழிலாளர்கள் வீட்டளவில் குறைந்த கூலி பெற்றுக்கொண்டு செய்து முடிக்கிறார்கள்.
நாடா கோர்ப்பது, துணிகளை பேக்கிங் செய்வது போன்ற பணிகளை பெண்களின் வீடுகளுக்கே சென்று வழங்குகிறார்கள். அன்னலட்சுமி என்ற வயதான பாட்டி ஒரு துணியை மடித்து பாலிதீன் பை, பெட்டிக்குள் வைப்பதற்கு 30 பைசா பெறுகிறார்.
துண்டான துணிகளை கிலோ கணக்கில் வாங்கி மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் தொழில்முனைவோரும் இந்த வீட்டுப் பெண் தொழிலாளர்களையே பயன்படுத்துகிறார்கள். 80 வயதான ஒரு பாட்டி, நாள் முழுவதும் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டு, தரை துடைக்கும் மாப்புகளுக்காக துண்டுத் துணிகளை நீளமாகக் கத்தறிக்கும் வேலையை செய்கிறார். ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 90 ரூபாய் பெறுகிறார்.
உலகின் தலைசிறந்த ஷூக்கள்
உலகின் மிகப் பெரும் ஷூ கம்பனிகளின் ஷூக்களுடைய மேல் பாகங்களைத் தைக்கும் நுட்பமான பணியை, தங்கள் வீடுகளில் இருந்துகொண்டே ஆம்பூர் பெண்கள் செய்கிறார்கள். லெதர் ஷூக்கள் ஏற்றுமதியில் இந்தியா 8-வது இடத்தில் இருக்கிறது. ஆம்பூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், உற்பத்தியகங்களும் உள்ளன.
லெதர் ஷூ உற்பத்தியில் மேல் பாகத்தைத் தைப்பது மிகவும் கடினமான வேலை. செய்நேர்த்தி மிக்க வேலை. ஐரோப்பாவில் 3500-9000 ரூபாய்க்கு விற்பனை ஆகும் ஷூ ஒன்றின் மேல்பாகத்தைத் தைக்க ஆம்பூர் வீட்டுத்தொழிலாளர் பெண்கள் பெறும் கூலி வெறும் 5-7 ரூபாய். ஒரு நாள் முழுவதும் 15-20 ஷூக்களை இந்தப் பெண் தொழிலாளர்கள் தைத்தால், ஒரு மாதம் 2000-2500 ரூபாய் வரை ஈட்ட முடியும். எல்லா நாட்களிலும் வேலை கிடைக்காது. ஆனாலும், குடும்ப வருவாயில் இந்தப் பெண் தொழிலாளர்கள் ஈட்டும் கூலி பிரதானமானது.
கம்பனிகளிடமிருந்து பெரிய ஒப்பந்தக்காரர்கள் வேலை எடுத்து, இடைத்தரகர்கள் மூலமாகவோ, நேரிடையாகவோ இந்தப் பெண்களுக்கு நாள் கணக்கில் வேலை கொடுக்கிறார்கள்.
“ஒரு நாளில் 15 ஷூக்கள் வரை தைக்கிறேன். ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும். அரிசியே கிலோ 50 ரூபாய் விற்கிறது. பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இந்த வேலையை நான் செய்துதான் ஆக வேண்டும். இதுதான் எங்களுக்குப் பிழைப்பு” என குவின்ட் தளத்தின் ஒரு செய்திக்கட்டுரையில் பெண் வீட்டுத் தொழிலாளி ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.
“20 வயதில் இந்தப் பணிகளை செய்யத் தொடங்கினேன். இப்போது 56 வயது ஆகிறது. இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். கோவிட் தொற்று காலத்தில் வேலையே இல்லை. அதன் பிறகு ஒரு நாளில் 3-4 ஷூக்கள் மட்டுமே தைக்கும் அளவிற்குத்தான் மீண்டும் வேலை கிடைக்கத் தொடங்கியது” இன்னொரு தளத்தின் ஆய்வறிக்கையில் இந்தப் பதிவு இருக்கிறது.
150 ரூபாய் தினக்கூலி; அதுவும்கூட நிரந்தரம் இல்லை. ஆனால், இந்த வேலைதான் பிரதான வேலை. என்ன வாழ்க்கை இது! மாத ஊதியம், வேலை உத்தரவாதம், பேறுகால உரிமைகள், ஓய்வூதியம் எதுவும் இந்தப் பெண் வீட்டுத் தொழிலாளர்களுக்குக் கிடையாது. வாழ்தல் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இனிது இல்லை. பெண் தொழிலாளர்களுக்கு, அதுவும் வீட்டுப் பெண் தொழிலாளர்களுக்கு மிகமிகக் கடினம்.
ஆமாம்! இந்தியாவின் உற்பத்தித் துறை பெண் தொழிலாளர்களில் 42% அல்லது 43% பேர் தமிழ்நாட்டில் இருப்பது தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு ஓர் உதாரணம்தான். ஆனால், இந்த வளர்ச்சியின் பலன் பெண் தொழிலாளர்களின் நிலையில் வெளிப்படவில்லை. ‘தொழிலாளர்களின் நிலை, பெண் தொழிலாளர்களின் நிலை சராசரி’ என்ற அளவை எட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் நவீன தாராளமய காலத்தில் இல்லவே இல்லை.
தொடரும்…
ஆதாரங்கள்…
42% of women in manufacturing sector across India are from TN: PRT, March 7, 2023, Times of India
Mapping Women Workers in India’s Manufacturing Sector, The Wire, Dhruvika Dhamija, Feb 8, 2023
The warp and weft of exploitation, Women lured by the Sumangali Scheme to work in textile mills are overworked, underpaid and even sexually abused, The Hindu, January 08, 2017
Here’s what we need to do for women factory workers from TN, Lakshmi Subramaniyan, The Week, March 12, 2023
Textile mills take girls for a ride Victims forced to work for three years for just Rs 30,000, Deccan Herald, Oct 10, 2009
Nearly 50 pc of migrant women working in Tiruppur textile industry face harassment: Study, Indian Express, April 18, 2023
Fashion’s unseen stories: the homeworkers of Tirupur – in pictures, The Guardian, September 15, 2023
The Ignored Women of South India Who Stitch Shoes For the World, Ilana Winterstein, The Quint, April 20, 2016
Sumangali scheme still alive in new garb, allege activists, TOI, Dec 26, 2017
How textile mills are re-branding a ‘trap’ scheme for bonded labour, The Federal, Dec 10, 2021
Evaluation of Sumangali Eradication of extremely exploitative working conditions in southern India’s textile industry, June 2019
Kumar Polydot Mills Limited Vs The Deputy Chief Inspector of Factories (Authority under the Tamil Nadu Industrial Establishment (Conferment of Permanent Status to Workmen) Act, 1981) and Others, Judgement, available at CourtKutchery.com