Subscribe

Thamizhbooks ad

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு – அடிப்படை உரிமை

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு.

பெண்களின் உழைப்பு, சமவேலைக்கு சமகூலி, உழைப்புச் சந்தையில் ‘பிரட் வின்னர்’ (உணவை ஈட்டுபவர்) என்ற அங்கீகாரம், இனப்பெருக்க உரிமை, பாலியல் மற்றும் இனப்பெருக்க கல்வி, கருக்கலைப்பு உரிமை– போன்ற பல அம்சங்களை உள்ளடக்கி, ஐஸ்லாந்தில் 1970 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த பெண்ணுரிமை கூட்டமைப்பு ‘ரெட் ஸ்டாக்கிங்ஸ்’. இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிர செயல்பாட்டாளர்கள், ‘பெண்களின் உழைப்புக்கு எங்கே அங்கீகாரம்?’ என்ற கேள்வியை முன்வைத்து, ‘ஐஸ்லாந்து பெண்கள் ஒரு நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்திட வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

‘வெளிவேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டும் அல்ல, வீட்டில் இருந்து வீட்டுவேலைகளை மட்டுமே செய்யும் பெண்களும் இதில் பங்கேற்க வேண்டும்!’ என்று தொடர் பிரச்சாரம் செய்துவந்தார்கள். ‘அதெப்படி தாங்கள் நிறைவேற்றுகிற அத்தியாவசியப் பணிகளைப் பெண்கள் நிறுத்த முடியும்? அப்படியெல்லாம் செய்யக்கூடாது!’ என்று வயதான தலைமுறைப் பெண்கள் ஆரம்ப காலத்தில் மறுத்துவந்தார்கள்.

தொடர்ச்சியான கூட்டங்கள், பிரச்சாரங்கள், தயாரிப்புகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் ஐ.நா மன்றம் 1975 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்தபோது, ‘இந்த ஆண்டு அக்டோபர் 24 அன்று ஐஸ்லாந்து நாட்டில் எந்தப் பெண்ணும் வேலை செய்யமாட்டோம்!’ என நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

அக்டோபர் 24 அன்று, 90 சதவிகித ஐஸ்லாந்து பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். நாடு முழுவதிலும் வீட்டிற்கு வெளியே வேலை பார்த்த பெண் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிற்குள்ளேயும் சமையல், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை பெண்கள் செய்யவில்லை.

அன்றைய தினம் சமையல் உள்ளிட்ட எல்லா வீட்டு வேலைகளையும் ஆண்களே செய்ய வேண்டி இருந்ததால், கடைகளில் கிடைத்த ரெடிமேட் உணவுகள் மலமலவென்று விற்பனையாகி காலியானது. குழந்தைகளை, வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக அன்றைக்கு ஆண்கள் விடுப்பு எடுத்தார்கள். வேலைக்குச் சென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த ஆண்கள், குழந்தைகளைத் தங்களுடன் பணியிடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். வானொலியில் செய்திவாசிப்பாளர்கள் செய்திவாசித்தபோது, வீட்டில் கவனிக்க வழியின்றி வானொலி நிலையத்தின் ஆண் பணியாளர்கள் அழைத்துவந்திருந்த குழந்தைகளின் இரைச்சல் சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஒட்டு மொத்தத்தில், ஐஸ்லாந்து பெண்கள் தாங்கள் யார் என்பதை தங்கள் நாட்டிற்கு, ‘ஒரு காட்டு காட்டிட்டாங்க’ எனலாம்.

How did Iceland close its gender pay gap? - Vox

பெண்களாக, தொழிலாளர்களாக, நாட்டின் குடிமக்களாக எவ்வளவு சுரண்டல்களை, பாரபட்சங்களை ஐஸ்லாந்து பெண்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியது. எங்கே எங்களுக்கான கல்விவாய்ப்புகள்? வேலைவாய்ப்புகள்? முறையான ஊதிய பலன்கள்? பதவி உயர்வுகள்? பெண்கள்மீது சுமையை ஏற்றாமல் குழந்தைகளை, பெரியவர்களைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் எங்கே? என்ற குரல்கள் அந்தப் போராட்டத்தில் ஒலித்தன. ஐஸ்லாந்து சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த விவாதங்களை இந்தப் போராட்டம் வலுப்படுத்தியது என்றும், விளைவாக அங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

‘பெண்ணின் இடம் வீடுதான். வேறு வழியில்லாத நிலையில் வேலைக்கு வரும் பெண்கள் சுரண்டலைகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்’ என்ற நிலை ஐரோப்பிய சமூகத்திலும் இருந்த ஒன்றுதான். தொழிற்புரட்சியை ஒட்டி வளர்ந்த தொழிலாளர் உரிமை இயக்கங்கள், சுரண்டல் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வளர்த்தெடுத்த விஞ்ஞான சோஷலிச சிந்தனைகள், கம்யூனிஸ தத்துவம், சோஷலிசப் பெண்கள் உலகெங்கிலும் வலுப்படுத்திய பெண் விடுதலை சிந்தனைகள், ரஷ்யப் புரட்சி, சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோஷலிச நாடுகள் பெண்களை அணுகிய விதம், பெண்களைத் தொழிலாளர் படைக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள்- இந்த அம்சங்கள் எல்லாம் முதலாளித்துவ நாடுகளின் பெண்ணுரிமை இயக்கக் கோரிக்கைகளில் எதிரொலித்தன. (கம்யூனிஸ இயக்கங்கள், ஷோஷலிச நாடுகள் பெண் விடுதலைக்கு இட்ட அடித்தளங்களை நாம் இந்தத் தொடரில் வரவிருக்கும் சில அத்தியாயங்களில் பிரத்யேகமாக அலச இருக்கிறோம்) ஐஸ்லாந்து பெண்கள் போராட்டத்திலும் இந்தத் தாக்கங்கள் நிறைந்திருந்தன. நாடு தழுவிய பெண்ணுரிமை இயக்கங்களுக்கு உற்சாகமளிக்கும் ஓர் உதாரணமாக ஐஸ்லாந்து பெண்கள் போராட்டம் திகழ்கிறது. கலாச்சார ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை இரண்டையும் இணைத்தே அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது என்பது முக்கியமான அம்சம்.

இன்றைக்கு நம்முடைய இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த விவாதங்களில், பெண்கள் சந்திக்கும் கலாச்சார ஒடுக்குமுறைகள் பற்றிய உரையாடல்களை ஒப்பீட்டளவில் நிறைய காண முடிகிறது. இந்த விவாதம் மிக முக்கியமானது. இந்த விவாதங்களினால்தான் இந்தியாவில் சதிக்கொடுமை போன்ற கொடூரக் கயமைகள் ஒழிக்கப்பட்டன. திருமண வயது உயர்த்தப்பட்டது. பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் சமூகத்துக்கு வரத்தொடங்கியது.

அதே சமயம், இந்த விவாதங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, குறைவாக இருப்பது, சமவேலைக்கு குறைவான கூலி தருவது, பதவி உயர்வில் பாரபட்சம் போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இந்த அம்சங்களை இணைத்தும், முக்கியப்படுத்தியும் நடத்தப்படும் பெண்ணுரிமை இயக்கங்கள், போராட்டங்களைப் பெரிதாகப் பார்க்க முடிவதில்லை.

அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பதை, கலாச்சார ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிடும் அணுகுமுறையே பிரதானமாக இருக்கிறது. பெண் கல்வியின் அவசியம் ஓரளவுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. ஆனாலும், ‘பெண் கல்வியின் பலன் பெண்ணின் கண்ணியமான வாழ்க்கைக்கான வேலைவாய்ப்பில் எதிரொலிக்க வேண்டும்’ என்ற அணுகுமுறை இல்லை. சமூகக் கலாச்சார, பொருளாதார ஏற்பாடுகள் பின்னிப்பிணைந்து, பெண்களை ஒடுக்குவதை உணர்ந்து, பெண்ணுரிமைக்கான குரல்கள் பெரும்பாலும் எழுப்பப்படுவதில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து தன்னெழுச்சியான போராட்டங்களை நிறைய பார்க்க முடிகிறது. இது நம்பிக்கை அளிக்கும் விஷயம். மிக முக்கியமான விஷயம். அதேசமயம், கடந்த சில பத்தாண்டுகளாக பெண்களின் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை தேசிய மாதிரி கணக்கெடுப்புகளின் வாயிலாகத் தெள்ளத்தெளிவாகக் கண்டு வருகிறோம். ஆனாலும், ‘ஏன் இப்படி நடக்கிறது? பெண்களை உள்ளடக்கிய வேலைவாய்ப்புக் கொள்கை எங்கே? எங்களின் உழைப்புக்கு எங்கே அங்கீகாரம்?’ என்ற உளுக்கும் குரல்கள் அணிதிரப்பட்ட பெண்ணுரிமைக்கான போராட்டங்களில் பெரும்பாலும் கேட்க முடிவதில்லை. மொத்தத்தில், இந்திய மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை நாம் வேண்டிய அளவிற்குக் கவனப்படுத்துவதே இல்லை.

ஊரகப் பகுதிகளில்…

கிராமப்புறங்களில் விவசாயம் மிக மோசமாக நலிவடைந்ததன் காரணமாக, விவசாய வேலை, விவசாயக் கூலி வேலைகள் குறைந்துவிட்டன. இதனால், கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு மோசமான அளவுக்குப் பறிபோயிருக்கிறது.

1990-களில் கிராமப்புறங்களில் இருந்து ஆண் தொழிலாளர்களின் நகரம் நோக்கிய இடப்பெயர்வால் பெண்களின் வேலைப் பங்கேற்பு விகிதம் 35% ல் இருந்து 39% சதவிகிதமாக அதிகரித்தது. 2005 மாதிரி கணக்கெடுப்பில் இந்த விகிதம் மேலும் அதிகரித்திருந்தது. ஆனால், அதன் பிறகு இந்த எண்ணிக்கை சரிய தொடங்கியது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, விவசாயத் தொழிலாளர்படையில் (Agricultural workforce) பெண்களின் எண்ணிக்கை 2% குறைந்தது என்றது. அதைத் தொடர்ந்து வெளியான மாதிரி கணக்கெடுப்பு, 2004-05 ல் 42% ஆக இருந்த பெண்கள் பங்கேற்பு விகிதம் 2011-12 ல் 35% என்ற அளவிற்கு மிக மோசமாக குறைந்தது என்றது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி விவசாயத்தைவிட்டே 90 லட்சம் சாகுபடியாளர்கள் வெளியேறிவிட்டார்கள். 2001-ல் 12.7 கோடியாக இருந்த சாகுபடியாளர்கள் எண்ணிக்கை 2011-ல் 11.8 கோடியாக சுருங்கியது. ஆண் சாகுபடியாளர்கள் எண்ணிக்கை குறைவை விடப் பெண் சாகுபடியாளர்கள் எண்ணிக்கை குறைவு இருமடங்கு அதிகம் (ஆண்கள் 27.1 லட்சம் குறைவு, பெண்கள் 59 லட்சம் குறைவு).

மறுபக்கம் விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டிலும், ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு இருமடங்கு அதிகம். ஒட்டுமொத்தமாக, விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெண்கள் 46% ல் இருந்து 43% ஆகக் குறைந்தார்கள். சாகுபடியாளர்கள் எண்ணிக்கையில் பெண்கள் விகிதம் 33% ல் இருந்து 30% ஆகக் குறைந்ததார்கள்.

ஒட்டுமொத்தமாக விவசாயத்தை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் எந்தளவுக்கு பராரி நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும், விவசாயத்தில் பெண் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. தமிழகம் போன்ற போக்குவரத்து, தொழில்வளர்ச்சி மிக்க மாநிலங்களில் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள், அருகிலுள்ள நகரங்கள் சார்ந்த தினக்கூலிப் பணிகள் கிடைத்தால், கூடுதலாக செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடமையைத் தட்டிக்கழிக்கும் அரசு

1990-களில் விவசாயம் நலிவடைந்து, விவசாயத்தை நம்பியிருந்த கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து, தொடர் தற்கொலைகளுக்கு விவசாயிகள் தள்ளப்பட்ட பின்னணியில், இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலால் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கடந்த 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.

குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்ய வேண்டிய இந்தத் திட்டத்திற்கு, இதுவரை எந்த ஆண்டிலும் தேவையான முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில்லை. பொதுவாக, 40 நாட்கள்கூட வேலை கிடைக்கவில்லை என்பதுதான் இந்தியாவின் சராசரி நிலையாக இருக்கிறது. அதிகபட்சமாக 85 நாட்கள் வேலை, ஆதிவாசி ஏழைகளுக்கு 92 நாட்கள் வேலை வழங்கிய சிறப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த போது திருப்புரா மாநிலத்திற்கு மட்டுமே சாத்தியமானது.

மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இந்தத் திட்டம் பெயரளிவிற்கே தொடர்கிறது. திட்டத்தில் பயனாளிகளாகப் பதிவு செய்தவர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கிட 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும், வெறும் 40 நாட்கள் வேலை வழங்குவதற்குக் கூட ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கோவிட் தொற்றுக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்தபோது, கடந்த 2023-2024 பட்ஜெட்டில் வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கீடு செய்தது. முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து 33% வெட்டு. முந்தைய ஆண்டு ஒதுக்கீடான 73,000 கோடிகூட 25% வெட்டுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தொகையே. யாருக்கான அரசு? எந்த வர்க்கத்தின் நலனுக்காக இந்த அரசு செயல்படுகிறது? என்பதை ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மிக எளிமையாக விளக்கிவிடும்.

ஊரகப் பகுதிகளில், ‘வேலையே இல்லை. நூறு நாள் வேலை, ரேஷன் உணவுப் பொருட்கள், இவற்றை நம்பித்தான் உயிர்வாழ்கிறோம்’ என மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் வேலைவாய்ப்பு, கூலிக்கு உத்தரவாதம் இல்லா நிலையில், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியம் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிற நிலையில், குடும்ப உறுப்பினர்களைக் காக்கும் சுமை கிராமப்புறப் பெண்கள் மீதே விடிகிறது.

நகர்ப்புறங்களில்…

நகர்ப்புறங்களில் பெண்களின் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை பெரும் தொழிற்சாலைளில் ஒப்பந்த முறையில் வேலைக்குப் போவது, வீட்டில் இருந்தே உருப்படி அடிப்படையில் உற்பத்தியில் ஈடுபடுவது, அமைப்புசாரா தொழில்களில் கட்டட வேலை போன்ற வேலைக்கு தினக்கூலிக்குப் போவது, சேவைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணிகள் போன்ற வேலைக்குச் செல்வது, ஷாப்பிங் மால்களில் சிப்பந்திகளாக செல்வது, வீட்டுவேலைக்குச் செல்வது இப்படியான வேலைகள்தான், அடித்தட்டில் இருக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு வாய்க்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ‘அதிகாரப்பூர்வ தரவுகள்படி இந்தியாவில் மொத்தம் 47.5 லட்சம் வீட்டு வேலைத் தொழிலாளர்கள்; அவர்களில் 30 லட்சம் பேர் பெண்கள்; ஆனால், உண்மையில் அதிகபட்சமாக 80 லட்சம் தொழிலாளர்கள் இருக்கக்கூடும்’ என்று கணிக்கிறது. இந்தியப் பெண்களின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 3.5% வீட்டுவேலைப் பணி என்கிறது.

வர்க்க சமூகங்களில் பெண்கள் காலங்காலமாக செய்ய நிர்பந்திக்கப்பட்ட வேலை, இந்த நச்சுப்பிடித்த வீட்டுவேலை. ஊதியமில்லா பராமரிப்பு வேலை – Unpaid Care work என்று இந்த வேலையை வகைப்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மிகப்பெரும் அழுத்தத்தைத் தரக்கூடிய சுமையாக இந்த வேலை இருக்கிறது. சமைப்பது, துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற பணிகளைவிட, குழந்தைகள், வயதானவர்களைக் கவனிக்கும் பராமரிப்பு வேலை (Care work) ஒரு நாளில் அதிக நேரத்தை இழுக்கும் பணிகள். இவை முழுநேரமும் பெண்களை வீட்டிற்குள் முடக்கிவிடுகின்றன.

குழந்தைகள், வயதானவர்கள் இயற்கையாகவே பிறரை சார்ந்திருப்பவர்கள். இவர்களைக் கவனித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், இவர்களைக் கவனிக்க வேண்டிய முழுபொறுப்பும் குடும்பங்களில் பெண்கள் மீதே விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுமையோடு, தங்களைத் தாமே முழுமையாகக் கவனித்துக்கொள்ளும் வயதை எட்டிய குடும்ப ஆண்களையும் கவனிக்க வேண்டிய கூடுதல் சுமையும் பெண்கள் மீதுதான் வன்முறையாகத் திணிக்கப்பட்டிருக்கிறது. விளைவாக, ஒரு நாளின் 24 மணிநேரம் போதவில்லை எனும் அளவுக்கு நேர வறுமை (Poverty of Time) பெண்களுக்குத்தான் இருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், 81 சதவிகிதப் பெண்கள் ஒரு நாளில் 5 மணி நேரத்தை ஊதியமற்ற வீட்டுப் பணிகளுக்காகச் செலவிடுகிறார்கள் என்று தெரிவித்திருந்தது. (Women and Men in India, A Statistical Compilation of Gender related Indicators of India, 2022) இந்தியாவில் பெண்கள் சராசரியாக 7.2 மணி நேரம் ஊதியமில்லா பராமரிப்புப் பணிகளுக்கு செலவிடுகிறார்கள். ஆண்கள் 2.8 மணிநேரம் செலவிடுகிறார்கள் என்று ஒரு IIMA ஆய்வு தெரிவிக்கிறது. 5, 7 மணிநேரங்கள் என்ற இந்த ஆய்வுகளைக் கடந்து, நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் எவ்வளவு நேரம் இழுக்கக்கூடியவை என்பதை யார் வேண்டுமானாலும் கணித்துவிடலாம்.

‘சராசரியாக ஐந்து மணி நேரங்களை வீட்டில் ஊதியமில்லா பராமரிப்புப் பணிக்காக பெண்கள் செலவிடும் நாடுகளில் 50% சதவிகிதம் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வரும் நிலையில் இருக்கிறார்கள். ஊதியமற்ற பராமரிப்புப் பணிக்கான நேரம் மேலும் இரண்டு மணிநேரங்கள் சராசரியாகக் குறைகிற நாடுகளில் 60% சதவிகித பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருகிறார்கள்.’ என்று OECD நாடுகளின் ஆய்வறிக்கை ஒன்று பதிவுசெய்கிறது. ‘2 மணிநேரம் பராமரிப்பு வேலைகள் குறைந்தால், பெண்களுக்கு வெளிவேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது!’ என்பது எவ்வளவு முக்கியம். இந்தியாவில் அரசுக்கும் சரி, சமூகத்திற்கும் சரி இந்த வாய்ப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்தித் தருவது குறித்த அக்கறை துளியும் இல்லை.

நவீனதாராளமயக் காலத்தில் இந்திய அரசாங்கம் எரிவாயு, பெட்ரோல் டீசல் என சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிற பொருட்களுக்கான மானியங்களை வெட்டுகிறது. கல்வி, மருத்துவம், நலத்திட்டப் பணிகளுக்கான ஒதுக்கீடுகளை மோசமாகக் குறைத்து வருகிறது.

‘உண்மை ஊதிய உயர்வே இல்லை! கிடைத்துவந்த ஊதியத்திற்கே இனி வழியில்லை!’ எனும் அளவிற்கு சாமானிய உழைக்கும் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளின் மூலம் ஒரு தொழிலாளி சம்பாதித்துக்கொள்ளலாம் எனும் கிக் பொருளாதாரத்தை (Gig Economy) அரசு மெச்சிக்கொள்கிறது. ‘எவ்வளவு மணிநேரங்கள் வேலைசெய்தாலும் எங்களுக்கு வாழ்கையே போராட்டம்தான். நிரந்தர வருமானம், வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை’ என்ற நிலையை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதில் அரசாங்கத்திற்கு அவ்வளவு பெருமிதம்.

இருநூற்றாண்டுகளாக உலகின் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பெற்றுத்தந்த சட்டரீதியான உரிமைகள் இன்றைக்கு இந்திய அரசாங்கத்தால் பறிக்கப்பட்டு வருகின்றன. 29 மத்திய சட்டங்களை இணைத்து வெறும் நான்கே புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவருகிறோம் பேர்வழி, என கடந்த 2019-2020 ல் பாஜக அரசு வம்படியாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தொகுப்புகளை நிறைவேற்றியது. தொழிலாளர்களை எல்லையற்ற வகையில் சுரண்டும் உரிமைகளை, வேலைக்கு எடுக்கும் முதலாளிகளுக்கு இந்தப் புதிய சட்டங்கள் வழங்குகின்றன. இவை மட்டும் அமல்படுத்தப்பட்டால் இருக்கிற கொஞ்சநஞ்சமும் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து பிடுங்கப்படும் நிலை ஏற்படும் என்பது உறுதி.

இப்படித் தொழிலாளர் வர்க்கத்தின் மூச்சை நிறுத்தும் அளவிற்கு எல்லையற்ற சுரண்டல்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே போவதால், தொழிலாளர் வர்க்கப் பெண்கள் மீது ஏற்றப்படும் சுமைகளும் எல்லையில்லாமல் பன்மடங்கு அதிகரிக்கின்றன. சிலிண்டர் விலை ஏறினாலும், ரேஷனில் பொருட்கள் போடவில்லை என்றாலும், சம்பளமே இல்லை என்றாலும், ஒரு மந்திரவாதியைப் போல வீட்டில் மூன்று வேலை பொங்கிப் போட வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே. முதலாளித்துவ சமூகத்தில், குறிப்பாக நவீன தாராளமய காலத்தில் பெண்களின் பராமரிப்புப் பணிகள் பன்மடங்காக அதிகரிக்கிறது.

இச்சூழலில் பெண்கள் ஏற்கனவே செய்துவந்த பராமரிப்புப் பணிகளுக்கான நேரமும் அதிகரிக்கிறது. பெண்களால் வெளிவேலைக்குச் செல்ல நேரம் இருப்பதில்லை. ஆனாலும், எப்படியாவது பொருள் ஈட்டி குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு செய்ய முடிந்த ஒரே வேலை வீட்டுவேலை. எனவே, நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களில் வீட்டுவேலைகளுக்குச் செல்வது பெண்களின் பிரதான வேலைவாய்ப்பாக இருக்கிறது.

ஏற்கனவே, மாடு மாதிரி வேலை செய்தாலும் மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்காத வேலைதான், பெண்கள் அவரவர் வீடுகளில் செய்யும் வீட்டுவேலை இருக்கிறது. எனவே, பெண்கள் தொழிலாளர்களாக இந்த மதிப்பிழந்த பணிகளை, எவ்வளவு நேரம் செய்தாலும் அதன் முக்கியத்துவம் யாருக்கும் புரிவதில்லை. விளைவு? வீட்டுவேலைப் பெண் தொழிலாளர்கள் செய்கிற வீட்டுவேலைக்கு உரிய மரியாதை இன்றி, மிகக்குறைந்த கூலிதான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இடையில் தங்கள் வீடுகளையும் கவனித்துக்கொண்டு செய்கிற வேலையாக வீட்டு வேலை இருக்கிறது. எனவே, இந்த வேலையை மட்டுமே செய்கிறோம் என்கிறார்கள் வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்கள். “காலை 5 மணியில் இருந்து, இரவு 10 மணிவரை என் வீட்டிலும் சரி, நான் வேலை பார்க்கும் வீடுகளிலும் சரி, ஒரே மாதிரியான வேலையைக் கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகிறேன். என் வாழ்க்கை மாறவே இல்லை. அப்படியே இருக்கிறது. எனக்கு படிப்பு இருந்திருந்தால் நல்ல மாதசம்பளத்திற்கு வேலைக்குப் போயிருக்கலாம்.” சமீபத்தில் வீட்டுவேலை தொழிலாளியாக இருக்கிற தோழி ஒருவர் விரக்தியாகக் குறிப்பிட்டார்.

சத்தம் கேட்கவில்லை

பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக இருப்பது, கிடைத்த வேலைவாய்ப்பு மோசமானதாக இருப்பது, வேலைவாய்ப்பிற்குள் வரமுடியாத அளவிற்கு புராதனக் குடும்பச் சுமை பெண்கள் மீது ஏற்றப்படுவது குறித்து நமது இந்திய சமூகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பு தேவையாக இருக்கிறது. ஆனால், மாதிரிக் கணக்கெடுப்புகள் மாதிரியான ஆய்வுகளில், ‘பெண் தொழிலாளர்கள் விகிதம் குறைந்து வருகிறது, பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது’ எனும் போதுகூடப் பெரிதாக சத்தத்தை கேட்க முடிவதில்லை. பெண்களுக்கு வேலைகள் பறிபோவதைப் பற்றிய உணர்வு ஏன் அவ்வளவாக இல்லை? என்ற கேள்வி எழுகிறது.

‘இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கை வேர்விடத் தொடங்கியபோது, நகர்ப்புறங்களில் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெண்கள் சில துறைகளில் வேலைக்குச் சென்றார்கள், பெரும் எண்ணிக்கையிலான இளம் பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கியது போன்று ஒரு தோற்றம் ஏற்பட்டது. இவற்றால்தான், உண்மையில் பெண்களின் வேலைப் பங்கேற்பு விகிதம் குறைந்தன என்று சுட்டிக்காட்டும் புள்ளிவிவரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையோ?’ என்ற ஐயத்தை ஆய்வாளர் இந்திராணி மஜூம்தார் பதிவுசெய்கிறார்.

‘முந்தைய தலைமுறைகள் கற்பனை செய்திறாத சில புதிய வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு உருவாகி இருக்கின்றன என்பது உண்மையே. பெரும் வணிக வளாகங்களில் விற்பனைப் பணிப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஊடகங்கள், விளம்பரங்களில் நிறைய பெண்கள் கண்ணில்படுகிறார்கள். புதிய தாராளமயக் காலத்தில் நாம் அன்றாடம் கவனிக்கும் உலகில் ஒரு பகுதியாக இந்தப் பெண்கள் இருக்கிறார்கள். நகர்ப்புற மத்திய வர்க்க வீடுகளின் அங்கமாக விட்டுவேலைப் பணிக்கு வரும் பெண்கள் இருக்கிறார்கள்.

ஏற்கனவே நம்முடைய பல தலைமுறைகள் நிறைய பெண் ஆசிரியர்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். கால் சென்டர்கள் முதல் பெரும் தொழில்நுட்பப் பணிகளான தகவல் தொழில்நுட்பத்துறை முதல் உற்பத்தித் துறையில் ஆயத்த ஆடைத்துறை வரை, நவீன தாராளமயக் காலத்தில் அதிகம் பேசப்படுகிற தொழில்கள், சேவைத்துறைகள் ஆண்மைக்கு முக்கியத்துவம் தருவதில்லை; சில துறைகள் உண்மையில் பெண்களையே தேர்வுசெய்கின்றன. ஒரு சில வேலைவாய்ப்புகளும், ஒரு சில பிரிவுகளில் இருந்து வேலைக்கு வரும் பெண் தொழிலாளர்களும் அதிகம் தென்படுவது, புதிய சில வேலைவாய்ப்புகளில் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் வருவது – இவையெல்லாம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சில பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைகள் பறிபோனதை இருட்டடிப்பு செய்துவிட்டதோ என்று நினைக்க வைக்கின்றன’ என்கிறார் இந்திராணி.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு இருக்கிறது என்ற பிரமை

கடந்த 1993 ஆம் ஆண்டில் இருந்து தேசிய மாதிரி கணக்கெடுப்புகளில் பழங்குடி, பட்டியல் சாதிப் பிரிவுகளில் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. 1999-ல் இருந்து இதர பிற்படுத்த வகுப்பினரின் தரவுகளும் இடம்பெறுகின்றன.

1999-00, 2011-12 மாதிரி கணக்கெடுப்புகளை ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் இஸ்லாமியர் அல்லாத உயர்சாதிகளைச் சேர்ந்த சமூகங்களின் பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன என்ற அம்சம் வெளிப்படுகிறது. அட்டவணை 1ல் இதைக் காணலாம்.

அட்டவணை 1:

பல்வேறு சமூகப் பிரிவுகளில் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம்

ஊரக இந்தியா 1999-00 2011-12 1999-00 மற்றும் 2011-12க்கு இடையிலான வேறுபாடு
ST 43.8 36.6 -7.2
SC 32.5 26.2 -6.3
இஸ்லாமியர்கள் நீங்கலாக OBC 31.4 25.6 -5.8
இஸ்லாமியர்கள்16.1 15.3 -0.8
இஸ்லாமியர்கள் அல்லாத உயர்சாதியினர் 24.6 21.3 -3.3
மொத்தம்29.7 24.8 -4.9
நகர்ப்புற இந்தியா 1999-00 2011-12 1999-00 மற்றும் 2011-12க்கு இடையிலான வேறுபாடு
ST 20.4 19.6 -0.8
SC 18.5 17.3 -1.3
இஸ்லாமியர்கள் நீங்கலாக OBC 16.8 16.5 -0.3
இஸ்லாமியர்கள்9.7 10.5 0.7
இஸ்லாமியர்கள் அல்லாத உயர்சாதியினர் 11.2 13.4 2.2
மொத்தம்13.9 14.7 0.8

 

1. கிராமப்புறங்களில் ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது. என்றாலும், சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள, கல்வியிலும், பொருளாதாரத்திலும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சாதி, பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை வேலையிழப்பு கூர்மையாகத் தாக்குகிறது. அடுத்ததாக பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

2. நகர்ப்புறத்தில் உயர்சாதிப் பெண் தொழிலாளர்களின் வேலைபங்கேற்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 2.2% அதிகரிப்பு என்பது நல்ல முன்னேற்றம்.

ஆய்வாளர் நீத்தாவின் 2014 ஆய்வை மேற்கோள்காட்டி இந்திராணி சில விவரங்களைப் பதிவு செய்கிறார்.

1. மாதிரி கணக்கெடுப்பு ஆய்வுகளில் பங்கேற்ற இஸ்லாமியர் அல்லாத உயர்சாதிப் பிரிவு பெண் தொழிலாளர்களில், ஒப்பந்த அடிப்படையிலான வேலை/கூலி வேலை விகிதம் 8%. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் இது இரண்டு மடங்கு அதிகம், பழங்குடிப் பிரிவில் ஐந்து மடங்கு அதிகம்.

2. இஸ்லாமியர் அல்லாத உயர்சாதிப் பிரிவில் 40% பெண் தொழிலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமான வேலைவாய்ப்பு உத்தரவாதம் இருந்தது. மற்ற சமூகப்பிரிவுகளில் வெறும் 25% பேருக்கே இது கிடைத்திருக்கிறது. உயர்சாதிப் பிரிவு பெண் தொழிலாளர்களில் 57% பேருக்கு ஊதியத்துடனான விடுப்பு பலன்கள் இருந்தது. மொத்தத்தில் பிற பிரிவினரைக் காட்டிலும், வேலை உத்தரவாதம் மிக்க, முறைசார் துறை வேலைவாய்ப்புகள் இஸ்லாமியர் அல்லாத உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு சாத்தியமாகி இருக்கிறது.

3. கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும், உயர்சாதிப் பிரிவுப் பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் சேவைத்துறையில் (மூன்றாம் நிலை பிரிவில்-Tertiary sector), குறிப்பாக கல்வியில், அதிலும் குறிப்பாக உயர்கல்வித்துறையில் பணியாற்றுகிறார்கள். மாதிரி கணக்கெடுப்பில் கல்வித்துறையில் பணியாற்றிய உயர்சாதிப் பிரிவுப் பெண் தொழிலாளர்களில் பாதிபேர் உயர்கல்வியில் இருந்தார்கள். பட்டியல் சாதி, பழங்குடி பிரிவில் இந்த அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

4. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களில் தலித், பழங்குடி பெண்களுக்கு உயர்கல்வி அவசியமாக இருக்கிற வேலைவாய்ப்புகளில் நழைவது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

கண்ணாடிக் கூரை, ஒட்டும் தரை

ஒவ்வொரு வர்க்கத்திலும் ஆண் தொழிலாளர்களை ஒப்பிடும்போது பெண் தொழிலாளர்கள் பாரபட்சத்திற்கு ஆளாகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. கார்ப்பரேட் உலகில் வேலைவாய்ப்பில் பாலின பாகுபாடுகளைப் பற்றிப் பேசும்போது, கிளாஸ் சீலிங் (Glass Ceiling), ஸ்டிக்கி ஃப்ளோர் (Sticky floor) என்ற இரண்டு பதங்களைக் கேட்க முடியும். ‘ஒட்டும் தரை’, ‘கண்ணாடிக் கூரை’ என்று இவற்றை மொழிபெயர்க்கலாம்.

கண்ணாடிக் கூரை: உயர் வேலைவாய்ப்புகளில், உயர் நிர்வாகப் பதவிகளுக்கு முன்னேறும் வாய்ப்புகள் கண்களுக்குத் தென்படும். ஆனால் கண்ணாடிக் கூரை போல இருக்கும் தடைகள் உயர் வேலைவாய்ப்புகளில் உள்ள பெண் தொழிலாளர்களை, மிக உயரிய நிலைகளுக்கு முன்னேறவிடாது. உயர் வேலைவாய்ப்புகளில் ஒரு கட்டம் வரையே பெண் தொழிலாளர்களால் வளர்சியடைய முடியும். பெண்கள் என்ற காரணத்தால், பாலின பாகுபாட்டால் இது நடக்கிறது.

ஒட்டும் தரை: பெண்கள் என்ற காரணத்தால் பெண் தொழிலாளர்கள், தரை நிலையில், ஒரு சில வேலை வாய்ப்புகளிலேயே ஒட்டவைக்கப்பட்டு, தங்கிவிடுவது. சிப்பந்திகள், விற்பனையாளர்கள் போன்ற பிங்க் காலர் சேவை வேலைகளில் இந்த வகையான பாகுபாடு நிலவும்.

பெண்கள் என்ற காரணத்தால் வேலைவாய்ப்புகளின் எல்லா மட்டங்களிலும் நிலவும் பாரபட்சங்களை எதிர்த்து நாம் பேச வேண்டும். அதேசமயத்தில் ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்ட பெண்களிலேயே, மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள வர்க்கங்களை, சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களின் கண்ணியமான வேலைவாய்ப்பிற்கு உரிய அளவில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பெண் தொழிலாளர் படையில் இவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். குரலற்றவர்களாக மிக வரிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

அடிப்படை மனித உரிமை!

இந்தத் தொடரின் 12-17 அத்தியாயங்கள் வரை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன தொழிற்சாலை உற்பத்தி இந்தியாவில் தொடங்கிய காலகட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தொழிலாளர் படையில் நுழைந்த நிலையை ஆய்வு செய்தோம். ஜவுளி, சுரங்கப்பணிகள், தோட்டப்பணிகளில் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டதைப் பார்த்தோம். இப்போதும் இந்தத் துறைகளில் சுரண்டல்கள் மாறவில்லை.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பல்வேறு துறை வேலைவாய்ப்புகளில் சட்டப்பாதுகாப்பு என்பது மிகக் குறைவான தொழிலாளர்களுக்கே இருக்கிறது. பெரும்பகுதி தொழிலாளர்கள் எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில்தான் சமூக உழைப்பில் ஈடுபடுகிறார்கள். சிறிய அளவில் சுயதொழில் புரிபவர்களுக்கு முறையான கடன்வசதி கிடையாது. எனவே, இந்த வர்க்கத்தைச் சேர்ந்த சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் நிலையும் படுமோசமாக இருக்கிறது.

கண்ணியமான வேலைவாய்ப்பு அடிப்படை மனித உரிமையாக ஆக்கப்பட வேண்டும்!

குறிப்பாக, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் விடுதலைக்கு கல்வி வாய்ப்புகள், கண்ணியமான வேலைவாய்ப்பு வேண்டும்!

குறிப்பாக, வர்க்கம், சாதி, ஆணாதிக்கம், மதங்கள் எனப் பல கூறுகளால் பன்மடங்கு பாகுபாடுகளை அனுபவிக்கும் பெண்களின் விடுதலைக்கு கல்வி வாய்ப்புகள், கண்ணியமான வேலைவாய்ப்பு வேண்டும்!

இந்தக் கோரிக்களை நாம் முன்னிறுத்திப் போராட வேண்டும்.

1. பெண்களாகப் பெண்கள்

2. தொழிலாளர்களாகப் பெண்கள்

3. குடிமக்களாகப் பெண்கள்

இந்த மூன்று நிலைகளில் பெண்கள் அனுபவிக்கும் சுரண்டல்கள், பாரபட்சங்கள் என்ன? இந்த அடிப்படையில், பெண்களின் நிலையை நாம் அணுகுவது அவசியம். முதலாளித்துவ முறை, அதற்கேற்ற ஆட்சி முறைதான் உலகின் மிகப்பெரும்பாலான பகுதிகளை ஆதிக்கம் செலுத்துகிறது. இத்தகைய சமூகத்தில், பெண்களின் இந்த மூன்று நிலைகளையும் ஆய்வு செய்யும் அணுகுமுறை அவசியம். அப்போதுதான் சமூகத்தில் பெண்களின் நிலையை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு சில அம்சங்களை விடுத்து, ஒரு சில அம்சங்களை மட்டும் பற்றிக்கொண்டு போராடுவது பலனளிக்காது என்பதை உணர முடியும்.

தொடரும்…

ஆதாரங்கள்:

The day Iceland’s women went on strike, Kirstie Brewer23, October 2015, https://www.bbc.com/news/magazine-34602822

A Gendered Employment Crisis and Women’s Labour in 21st Century India, Indrani Mazumdar, JMC Review, Volume 1, 2017

Crisis in Female Employment: Analysis across Social Groups, Neetha N, EPW, Nov, 22

https://www.ilo.org/newdelhi/areasofwork/WCMS_141187/lang–en/index.htm

Budget 2023-MNREGAGS fund cut by 33% to 60,000 crores, Feb 1, 2023, The Hindu

A Betrayal by Governments, Hannan Mollah & Vijoo Krishnan, Foundation for Agrarian Studies

Women spend 7.2 hours on unpaid domestic work compared to 2.8 hours spent by men: IIMA prof’s research, Feb 12, 2023, ET

Unpaid Care Work: The missing link in the analysis of gender gaps in labour outcomes, OECD Development Centre, December 2014

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here