penandrum-indrum-webseries-23 -by-narmadha-devi அத்தியாயம் 23: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
penandrum-indrum-webseries-23 -by-narmadha-devi அத்தியாயம் 23: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 23: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத வன்முறை

‘நம்முடைய பிரபஞ்சம் எப்படி தோன்றியது? பிரபஞ்சம் தோன்றியபோது வெளிப்பட்ட துகள்கள் எத்தகையது?’

பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்றைக்கு மனிதகுலம் ஒரு புறம் பாய்ச்சல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபவர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் குறைவு. இந்தியாவில் மிகமிகக் குறைவு. என்றாலும், உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, ஒரு காலத்தில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழையவே முடியாது என்ற நிலை மாறி, இன்றைக்குப் பெண்களும் ஆராய்சிக்கல்வி, ஆராய்ச்சிகளில் ஓரளவு பங்குபெற முடிகிறது.

மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மையம், இந்திய அறிவியல் கழகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் போன்ற அமைப்புகளில் பெண் ஆராய்ச்சியாளர்கள் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உயர்கல்வி, ஆராய்ச்சித்துறை மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களைக் காண முடிகிறது என்பது மிக முக்கியமான விஷயம். நாம் அனைவரும் பெருமைபடக்கூடிய விஷயம்.

இன்னும் சொல்லப்போனால், ‘ஆண், பெண்’ – ‘இருபாலர்’ என்ற கண்ணோட்டத்தைக் கடந்து ‘அனைத்து பாலினங்களையும், பாலீர்ப்பாளர்களையும் உள்ளடக்கிய சமூக முன்னேற்றம்’ என்ற உரையாடலைக்கூட சில பகுதிகளில், அரங்கங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. இதுவும் மகிழ்ச்சிக்குரிய முக்கியமான முற்போக்கு அம்சம்.

ஆனால் ‘பெண்கள் மேம்பாடு’, ‘பாலினம் குறித்த பார்வையில் முற்போக்கு’ என்பதெல்லாம் நமது இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை, பொருளாதார ரீதியாக வளர்ச்சிபெற்ற சிலருக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்களில் பெண் கல்வி, பெண்களின் வெளிவேலைவாய்ப்பு போன்ற அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் பெண்களின் நிலையில் சிறிது எதிரொலிக்கிறது. வடமாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு பெண்களின் நிலை சற்று மேம்பட்டிருக்கிறது. என்றாலும், நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம். இதுவே எதார்த்த நிலை.

ஆராய்ச்சியாளர்கள் முதல் ‘சூனியக்காரி’ பட்டம் கட்டப்பட்டு கொல்லப்படும் பெண்கள் வரை

மகாரஷாட்டிரா மாநிலம் புனேவில் டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் மனித சமூகத்திற்கு மிக அவசியமான அறிவியல் ஆராய்ச்சிகளில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் அதே மகாரஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா பகுதிகளில் பெண்கள் ‘சூனியக்காரி’ பட்டம் கட்டப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

‘மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி தனித்துவாழும் பெண்கள் மீது, அவர்களுடைய சொத்துகளைக் குறிவைத்து இந்தக் கொடுமை நிகழ்த்தப்படுகின்றன’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டவுன் டு எர்த் குறிப்பிடும் ஒரு ஆய்வு, 24% சதவிகித ‘சூனியக்காரி’ பட்டக் கொலைகள் நில-அபகரிப்போடு தொடர்புடையது என்கிறது. 2000-2016 வரை இந்தியாவில் மொத்தம் 12 மாநிலங்களில் (ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், அஸாம், ஒடிசா, சட்டிஷ்கர், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹர்யானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத்) 2500 பெண்களுக்கு மேல் ‘சூனியக்காரி’ பட்டம் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவிக்கிறது. அதாவது, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 150 பெண்கள் இப்படிக் கொல்லப்படுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 12 பெண்கள். ‘ஏறத்தாழ இரண்டு நாடுகளுக்கு ஒரு பெண் ‘சூனியக்காரி’ பட்டம் சுமத்தப்பட்டு கும்பலால் அடித்துக்கொலை செய்யப்படுகிறார்’ எனக் கொள்ளலாம்.

ராஜஸ்தானில் 1980-களில்கூட ரூப் கன்வர் என்ற பெண்ணை சதி வழக்கப்படி சிதையில் தள்ளிய கொடூரம் நிகழ்ந்தது. இன்றைக்கு சதி கொலைகள் நடக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும், ஒரு காலத்தில் சதி கொடுமையால் உயிர் பறிக்கப்பட்ட பெண்களை தெய்வமாக்கி வழிபடும் ‘சதி மாதா’ வழிபாடு, இந்தியாவின் பல பகுதிகளில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது. என்ன மாதிரியான சமூகம் சதி மாதா வழிபாடு போன்ற வழக்கங்களைக் கடைப்பிடிக்கும்? எத்தகைய பிற்போக்குக் குரூர மனப்பான்மை சமூகத்தில் நிலவினால் இந்தக் கொடுமைகள் தொடரும்.

சதி கொடுமையை புனிதப்படுத்தும், பெருமைபடுத்தும் பழக்கங்களும் ஒழிக்கப்படுவதாகவே சதி ஒழிப்புச் சட்டம் சொல்கிறது என்றாலும், சதி வழிபாடு ஒழிக்கப்படவில்லை. சென்னையில்கூட ராஜஸ்தான் மார்வாரி மக்கள் வாழும் பகுதிகளில் ‘சதி’ மாதா கோவில்கள் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தளங்களாக இருக்கின்றன.

பர்தா முறை ஒடுக்குமுறையின் குறியீடு

பொதுவாகவே, காப் சாதி அமைப்புகளின் பிடியில் உள்ள வடமாநிலங்கள், வட-மேற்கு மாநிலங்களில் பெண்களின் நிலை படுமோசம். இந்தப் பகுதியில் இஸ்லாமியப் பெண்கள் மட்டும் முக்காடு போடவில்லை. இந்துப் பெண்களும் முக்காடு போடும் வழக்கம் உள்ளது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை மிகவலுவாக இருப்பதன் வெளிப்படையான அடையாளமே இந்த பர்தா முறை. வட-மேற்கு இந்தியாவில் ஹர்யானா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்துப் பெண்கள் முகத்தை மறைத்து முக்காடு போடுவதற்குக் காரணம் அவர்கள் மீதான மோசமான ஒடுக்குமுறைதான்.

பெண்களின் நிலவுரிமை குறித்து தெற்காசிய அளவில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வறிஞரான பீனா அகர்வால், ‘முக்காடு போடும் முறை, குறையக் குறைய நிலவுடைமையில் பெண்களை ஓரளவுக்குக் காண முடிகிறது’ எனக் குறிப்பிடுகிறார். அரேபியா தொடங்கி, தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வட-மேற்கு, மேற்கு, வட-இந்தியா, மத்திய இந்தியாவில் பர்தா எனப்படும் முக்காடு முறையைப் பார்க்கலாம். முழு உடலையும் மூடுவதை முழு பர்தா முறை, தாவணி, புடவை தலைப்பால் தலையை, முகத்தை மறைப்பது அரை பர்தா முறை எனக் குறிப்பிடுகிறார் பீனா (Full Purdha, Semi-Purdha System). ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்து பெண்கள் மத்தியில் நாம் காண்பது அரை பர்தா முறை/ அரை முக்காடு முறை. பொதுவாகவே நிலத்தின் உடைமையாளராக இருத்தல் என்பது வர்க்க சமூகத்தில் பெண்களைப் பொறுத்தவரை மிகமிகக் குறைவு. என்றாலும், பர்தா முறை அதிகமாக இருக்கும் பகுதிகளில் குடும்ப சொத்துகளான நிலங்களை வாரிசுரிமையாகப் பெண்கள் பெறுவது என்பது படுபாதாளம் என்கிறார் பீனா.

வடக்கே ஒரு முனையில் முன்னேறிய பெண்கள்-மறுமுனையில் ‘சூனியக்காரி’ கொலைகள், சதி வழிபாடுகள் போன்ற உச்சபட்ச பெண்ணடிமைத்தனம் திணிக்கப்பட்ட பெண்கள்- என இருவகையான பெண்களைப் பார்த்தோம். சூனியக்காரி கொலை போன்ற கொடூரமான ஒடுக்குமுறைகள் இருக்கும் வடக்கிலும், வர்க்கம், சாதி அந்தஸ்து காரணமாக நல்ல உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வசதி வாய்ப்புகள் கிடைத்த பெண்களுக்கு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் வாய்ப்புகள் சாத்தியமாகி இருக்கின்றன. என்றாலும், வடக்கைப் பொறுத்தவரை பெரும்பாலான பெண்கள் முன்னேற்றத்தின் சுவடே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

தெற்கில் என்ன நிலை?

நம்மூரிலும் ஒரு முனையில் முன்னேறிய பெண்கள்-மறுபுறம் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடியாமல் உழலும் பெண்கள்–என இருவகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒரு முனையில் தமிழகத்தின் பெண்கள் உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஜொலிக்கிறார்கள். என்றாலும், மறுமுனையில் ஆணாதிக்க, சாதி ஆணவக் கொலைகளை சந்திக்கக் கூடிய பெண்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் சாதிக்குள் திருமணம் செய்யும் அகமணமுறையை வைத்தே சாதியமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நமது சமூகத்தில் மிகப்பெரும்பாலான திருமணங்கள் சாதிக்குள் நடக்கும் திருமணங்களாகத்தான் இருக்கின்றன. இந்த விதியைப் பின்பற்றாதவர்கள் குடும்பத்தைவிட்டு விலக்கப்படுகிறார்கள்; அல்லது கொலை அளவுக்கு வன்முறையை சந்திக்கிறார்கள்.

வடக்கு, தெற்கு என்கிற வேறுபாடு இன்றி இந்தியா முழுவதும் ஆணாதிக்க, சாதிய சமூகத்தின் வன்கொடுமைகளில் ஒன்றாக ஆணவக் கொலைகள் நடக்கின்றன. தனக்கான இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகூட மறுக்கப்பட்ட மனிதர்களாகத்தான் இந்தியாவில், தமிழ்நாட்டில் இன்றைக்குப் பெரும்பாலானோர் வாழ்கிறார்கள். ‘சாதிக்கு வெளியே இணை தேர்வு’ என்பதில் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை கூடுதலானது.

ஒரு பெண், தான் பிறந்த சாதிக்கு வெளியே ஒருவரை தனது காதல் இணையராக, திருமண இணையராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால், ‘அவ்வளவுதான்!’ என்கிற நிலை. ‘சாதிக் கௌரவம்’, ‘குடும்ப கௌரவம்’ என்ற பெயரில் இளஞ்ஜோடிகள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். சாதி ஆணவக் கொலைகளில் சாதிக் கூறுகளைப் பற்றி பேசும் அளவிற்கு, அதன் ஆணாதிக்கக் கூறுகள் பேசப்படுவதில்லை.

‘குடும்பத்தை, சாதியை எதிர்த்து, மீறி, நம்மால் இந்த சமூகத்தில் ஒன்றுமே செய்ய முடியாது, வாழவே முடியாது’ என்ற நிலையில்தான் பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான திருமணங்கள் சாதிக்குள் நடப்பதற்கும், சாதி அமைப்புகள் உருக்குலையாமல் தொடர்வதற்கும் பெண்களின் கீழ்ப்படிந்த, தாழ்த்தப்பட்ட, சார்ந்திருக்கும் நிலை முக்கியக் காரணமாக இருக்கிறது. பெண்களின் இந்த கீழ்ப்படிந்த நிலையால்தான், குடும்ப அமைப்பும் சாதி அமைப்பும் கட்டிக்காக்கப்படுகின்றன.

குடும்பத்திற்குள், சாதியமைப்புக்குள் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் கொடுமையாக இருக்கின்றன. பொதுவாக, ஏதாவது ஒரு வடிவில் வன்முறையை, ஒடுக்குமுறையை குடும்ப அமைப்பில், சாதிய அமைப்பில் எதிர்கொள்ளாத பெண்கள் குறைவு என்பதுதான் தென்னகத்தின், குறிப்பாக தமிழகத்தின் நிலையாகவும் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள், ‘நாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம், நாம் ஒடுக்கப்பட்டவர்கள்’ என்பதையே உணராமல், ‘இதுதான் சமூக விதி, குல வழக்கம், சாதி வழக்கம், குடும்ப வழக்கம்’ என்று ஒடுக்கப்பட்டு, ஒடுக்குமுறையை ‘வாழையடி வாழையாக’ அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

‘தனிச்சிறப்பு’ கிராமங்கள்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள போதகாப்பட்டி கிராமம், மதுரை மாவட்டம் பொட்டல் பச்சேரி கிராமம், கூவலபுரம் கிராமம், கரூர் மாவட்டத்தில் கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் சில கிராமங்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள உரிநயனப்பள்ளி, உரிநயனிக்கோட்டூர், பாளையம், சாலர்லப்பள்ளி ஆகிய கிராமங்கள், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏகலநத்தம் கிராமம் – இந்த கிராமங்கள் எல்லாம் ஒரு ‘தனிச்சிறப்பை’ப் பெற்றிருக்கின்றன. இன்னும் முறையாக நமது சுகாதாரத்துறை கணக்கெடுத்தால், ‘இந்தத் ‘தனிச்சிறப்பு’ பெற்ற கிராமங்கள் எண்ணிக்கை நிறைய இருக்கின்றன’ என்ற உண்மை வெளிப்படலாம். அப்படி என்ன ‘தனிச்சிறப்பு?’

மாதவிடாய் காலங்களில் பெண்களை வீட்டைவிட்டு ஒதுக்கி வைத்து, மாதவிடாய் வீடு/அறை எனப்படும் பொதுக்கட்டடத்தில் தங்க வைக்கும் வழக்கம் இங்கெல்லாம் பின்பற்றப்படுகின்றன. கிருஷ்ணகிரி ஏகலநத்தம் கிராமம் இன்னும் ஒரு படி மேலே. இங்கு பெண்கள் கிராமத்தை விட்டே துரத்தப்பட்டு காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். மலைகளில் தார்ப்பாய், ஓலை போன்றவற்றைப் பயன்படுத்தி குடிசை அமைத்துக்கொண்டு தங்க வேண்டும். கைக்குழந்தை இருந்தால் அவர்களையும், தங்களுடன் அழைத்துக்கொண்டு போய்த் தங்க வேண்டும். அங்கேயே அடுப்பை மூட்டி சமைத்துச் சாப்பிட வேண்டும், அல்லது வீட்டில் இருந்து சாப்பாடு கொடுக்கப்பட்டால் சாப்பிட வேண்டும்.

ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர் கீதா இளங்கோவன் தனது மாதவிடாய் ஆவணப்படத்தில் மதுரை கூவளபுரம் கிராமத்தின் இந்த வழக்கத்தைப் பதிவு செய்திருப்பார். அவருடைய படம் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. என்றாலும், இப்படியான கிராமங்கள் தமிழகம் முழுவதிலும் நிறைய இருக்கின்றன என்பது இன்னமும் சமூக ஊடகங்களின் உதவியால் தெரிய வருகின்றன.

எனவே, ஒருபுறம் விண்வெளி, பிரபஞ்ச ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண்கள், மறுபுறம் ஆணவக் கொலைகளை சந்திக்கும் பெண்கள், மாதவிடாய் கிராமங்களில் பெண்கள் என்ற நிலையில்தான் நம்மூரிலும் பெண்கள் வாழ்கிறார்கள்.

‘எங்கள் ஊரில் மாதவிடாய் ஒடுக்குமுறைகள் இல்லை’ எனப் பலர் சண்டைக்கு வரலாம். வீட்டிற்குள்ளேயே பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒதுக்கிவைக்கப்படும் நிலையும் ஒடுக்குமுறைதானே! ‘எங்கள் வீட்டில் ஒதுக்கிவைக்க மாட்டோம்! இயல்பாக இருக்கலாம்!’ எனலாம். அப்போதும், கடவுள், கோவில் வழிபாடுகளில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கலந்துகொள்ள முடியாது என்ற விதியைப் பெரும்பாலான குடும்பங்களில் கடைப்பிடிக்கிறார்கள் தானே! இவையெல்லாம் பெண்கள் மீது கலாச்சார ரீதியாகத் திணிக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை அன்றி வேறென்ன?

பல வகைகள்

இயற்பியலில் ‘மின்காந்த அலைமாலை’ (Electromagnetic spectrum) வரும். இந்த அலைமாலையின் ஒரு முனையில் காமா கதிர்கள், எக்ஸ்-ரே கதிர்கள், புற-ஊதாக் கதிர்கள் (Ultra-Violet Rays) இருக்கும். நடுவில் கண்ணுக்குத் தெரியும் ஒளி இருக்கும். மறு முனையில் அகச்சிவப்புக் கதிர்கள் (Infra-Red Rays), மைக்ரோ கதிர்கள், ரேடியோ கதிர்கள் இருக்கும்.

பெண்களின் நிலையை இந்த அலைமாலையோடு ஒப்பிடலாம். வளர்ச்சிக் கட்டத்திற்குள் வந்த பெண்கள் அலைமாலையில் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இருமுனைகளிலும் வளர்ச்சி என்றால் என்னவென்றே அறியாத பெண்கள் கண்களுக்குப் புலப்படாத இருட்டில் சிக்கி இருக்கிறார்கள்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய பெண்களுக்கும் ஏதோ விதத்தில் பாலினப் பாகுபாடுகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முன்னேற்றத்தின் குறியீடாக உள்ள உயர்பதவிகளில்கூட பெண்கள் பல்வேறு அடிப்படைகளின்கீழ் பாரபட்சத்துக்கு, பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள். மிகப்பெரும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர்பொறுப்பில் பணியாற்றும் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் ஒரே மாதிரி நடத்தப்படுவதில்லை. விதிவிலக்குகள் அங்கொன்றும், இங்கொன்றும் இருக்கலாம். ஆனால், விதிவிலக்குகள் முழு உண்மை கிடையாது. அடையாள அரசியலுக்காகப் பழங்குடி சமூகத்திலிருந்து இந்திய ஜனநாதிபதியாக ஆக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு அவர்கள், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்விற்கே அழைக்கப்படவில்லை என்பதைக் கண்டோம். பாலினம் என்ற காரணியுடன், சாதி, வர்க்கம், சார்ந்த பகுதி, மதம், மொழி எனப் பல்வேறு காரணிகளும் இணைந்து பெண்களை வகை வகையாக ஒடுக்குகின்றன.

எனவே, பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையைப் பொறுத்தவரை, ‘சற்று மோசமான நிலை, மோசமான நிலை, படுமோசமான நிலை, கொடூரமான நிலை, மிகக் கொடூரமான நிலை’ என்று பல டிகிரிகளில் வரையறுக்கலாம்.

கண்ணுக்குத் தெரியாத வன்முறைகள்

பெண்கள் மீதான வன்முறைகளில் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் போன்றவை கண்களுக்குத் தெரியும் வன்முறைகள். இவை நமது பார்வைக்கு வருபவை. வீட்டளவில் பெண்கள் மிது திணிக்கப்படும் கண்களுக்குத் தெரியாத வன்முறைகளுக்கு கணக்கே இல்லை. நாம் மேலே பார்த்த மாதவிடாய் விலக்கம் கண்ணுக்குத் தெரியாத வன்முறை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

விடியற்காலை முறை நள்ளிரவு வரை அடிமை போலக் குடும்ப அமைப்பில் பெண்கள் வேலைவாங்கப்படுகிறார்கள். உழைப்புச்சுரண்டல் தவிர சொத்தில் பங்கு இல்லை. முடிவெடுக்கக்கூடிய நிலையில் இல்லை. சம்பாத்தியம் இல்லை. சம்பாதித்தாலும் ஏ.டி.எம் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் பிடுங்கப்பட்டு ஆண்களை சார்ந்திருக்கும் நிலை. வெளிநடமாட்டம் முடக்கப்படுகிறது. உடல் மனம் சார்ந்த வன்முறை இருக்கிறது. விதவிதமான வன்முறைகளைப் பெண்கள் குடும்ப அளவில் அனுபவிக்கிறார்கள். இவையெல்லாம் கண்டுகொள்ளப்படாத கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளாக இருக்கின்றன. இவை எல்லாம் வன்முறை என்று சொல்லப்படுவதற்கு பதிலாக ‘வாழ்வியல் விதிகள்’ எனக் கற்பிக்கப்படுகின்றன.

‘மனிதச் சமூகத்தில் வர்க்க சமுதாயம் தோன்றியபோது, அதோடு இணைந்து பெண்ணடிமை முறையும் தோன்றியது’ என்பதை ஏங்கெல்ஸின் ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூல் எப்படி நிறுவுகிறது என்பதை இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே பார்த்தோம். வர்க்க சமூகத்தில் வீட்டளவில் பெண்கள் மீதான சுரண்டல் எப்படி அரங்கேறுகிறது என்பதையும் சாத்தியமான அளவிற்கு அலசிவிட்டோம். குறிப்பாக, இந்திய வர்க்க சமூகத்தில் பெண்கள், பெண்களாக, தொழிலாளர்களாக அனுபவிக்கும் பாரபட்சங்களை, வன்முறைகளை அலசி இருக்கிறோம்.

சுதந்திர இந்தியாவிலேயே இதுவரை கண்டிறாத ‘முன்னேற்றங்களை’ கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பெண்கள், பெண்களாக, குடிமக்களாக அடைந்துள்ளார்கள். அவற்றை அடுத்து அலசுவோம்.

ஆதாரங்கள்:

https://www.outlookindia.com/national/book-excerpt-the-witches-of-india-news-286203

World Human Rights Day: Is an India free of witch-hunts possible, Debabrat Patra, Evangelina Patro, Down to Earth, 07 December 2021

A Field of One’s Own, Gender and Land Rights in South Asia. Bina Agarwal, Cambridge University Press

மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் தமிழ்நாட்டு கிராமம், BBC news தமிழ்

மாதவிடாய் நேரத்தில் பெண்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் விநோத கிராமம்!, விகடன், 03 Oct 2022

Villages in Madurai, Virudhunagar keep menstruating women away, March 02, 2020, The Hindu

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *