மனிதர்கள் என்ற அங்கீகாரம்
‘ஆண்கள்தான் உழைத்து சம்பாதித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சோறு போடுபவர்கள். பெண்கள் வீட்டைப் பராமரிக்க வேண்டியவர்கள்’ என்கிற சிந்தனை காலங்காலமாக வர்க்க சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. ‘உழைத்து சம்பாதிப்பவர்கள்’ என்ற பட்டம் ஆண்களுக்கு வழங்கப்பட்டாலும், குடும்பப் பராமரிப்பு பணிகள் தவிர, குடும்பத்திற்கான வாழ்வாதார உற்பத்தியிலும் பெண்கள் ஈடுபட்டே வந்திருக்கிறார்கள். என்றாலும், அங்கீகாரமில்லா, அந்தஸ்தில்லா, ஊதியமில்லா தொழிலாளர்களாகவே பெண்களின் வாழ்க்கை ஓடியது.
தொழிற்புரட்சி காலத்தில் நவீன உற்பத்தி வளர்ச்சியின் தேவைக்காக பெண்கள் வீட்டிற்கு வெளியே, கிராமத்திற்கு வெளியே, நகரத்தில் தொழிற்சாலை சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் வாய்ப்பு உருவானது. மிகக் குறைவான கூலிக்கு சுரண்டலாம் என்பதால், பெண்கள் வெளி வேலைவாய்ப்புக்குள் வருவது நவீன முதலாளித்துவ வர்க்க சமூகத்தில் சாத்தியமானது. என்றாலும், வீடு, கிராமத்திற்குள் முடங்கிக் கிடந்த பெண்களின் வெளியுலக நடமாட்டத்தை நவீன முதலாளித்துவ உற்பத்தி சாத்தியமாக்கியது.
ஆனால், நவீன உற்பத்திமுறை வளர்ச்சி உலகெங்கிலும் சமமாக இல்லை. ‘உலகின் எந்த இடத்தில் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யலாம்? நவீன உற்பத்தியையே உலக அளவில் எப்படிப் பிரிக்கலாம்? உலகளாவிய அளவில் உற்பத்தி, வேலைப் பிரிவினையை எப்படி மேற்கொண்டால் செலவைக் குறைத்து லாபத்தைப் பெறுக்கலாம்?’ இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் முதலாளித்துவ முறை இயங்குகிறது. அதனால், வளர்ச்சியின் பயனை, வளர்ச்சியினால் விளையும் முற்போக்கு அம்சங்களை காலங்காலமாக ஒடுக்கப்பட்டுவந்த பகுதியினரால் அனுபவிக்க முடியவில்லை. குறிப்பாக, பல்வேறு நிலப்பரப்புகள், வளங்கள், கலாச்சாரக் கூறுகள் உள்ள இந்திய துணைக்கண்டத்தில் நவீன வளர்ச்சியின் வாய்ப்புகள் எல்லா பகுதிப் பெண்களுக்கும் கிடைக்கவில்லை. இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலையில்தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.
‘காணாமல்போகும் பெண்கள்’
‘ஆண் பிள்ளைதான் வாரிசு! பெண் குழந்தைக்குத் திருமண செலவு, வரதட்சனைக்கு ஈட்ட வேண்டும்! எனவே, வேண்டாம் பொண்ணு!’ என்ற சிந்தனை நம் நாட்டில் வடக்கு தெற்கு பாரபட்சம் இல்லாமல் வேரூன்றி இருக்கிறது.
‘போதும் பொண்ணு’, ‘வேம்பு’ போன்ற பெண் குழந்தைப் பெயர்கள் பெண் குழந்தை வேண்டாம் என்ற மனப்பான்மை சமூகத்தில் வேரூன்றி இருப்பதைக் காட்டுகின்றன. நவீன மருத்துவ தொழில்நுட்ப பரிசோதனைகளைக் கருவில் இருக்கும் குழந்தையின் பால் கண்டறிவதற்காகத் தவறாகப் பயன்படுத்துவதை 1994 சட்டம் தடைசெய்கிறது. என்றாலும், இந்தப் பரிசோதனைகள் மூலமாக கருவின் பால் கண்டறிந்து, பெண் கருக்கொலை செய்யும் போக்கு, இந்தியாவில் எங்கெல்லாம் அதிகம் இருக்கிறது என்பதை மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஆண்/பெண் பால் விகிதம் அதலபாதாளத்தில் இருக்கும் பகுதிகள் காட்டிக்கொடுக்கின்றன.
உதாரணத்திற்கு, 1991 கணக்கெடுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் பால் விகிதம் 888. (ஆயிரம் ஆண்களில் பெண்களின் எண்ணிக்கை 888) தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தின் பால் விகிதம் 1971-ல் 990 இருந்து 1991-ல் 849 ஆக சரிந்தது. தர்மபுரியில் 1971-ல் 993 இருந்து 1991-ல் 905 ஆக சரிந்தது. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 90-களில் கருவின் பாலினம் அறிந்து பெண் குழந்தை பிறப்பைத் தடுக்கும் போக்கு மோசமாக இருந்ததை அறிவோம். 1970-களின் இறுதியில் ஹர்யானா, பஞ்சாப் பகுதிகளில், ‘இங்கு கருவின் பாலினம் கண்டறியப்படும்’ என்று அப்பட்டமாகவே விளம்பரப் பலகை வைத்து செயல்பட்ட பரிசோதனை மையங்கள் இருந்தன.
தொடக்ககால ஸ்கேன் கருவிகள் மூலம் 24-28 வாரங்களில்தான் கருவின் பால் என்ன என்பதைக் கண்டறிய முடிந்தது. ஆனால், யோனிவழி ஸ்கேன் முறையில் (Transvaginal scan) 14-16 வாரங்களிலேயே கண்டறிய முடிகிறது. டவுன் சின்ட்ரோம் போன்ற மரபணு கோளாறுகள் இருக்கிறதா எனக் கண்டறிவதற்காக பனிக்குட நீரை ஊசியில் எடுத்து சோதிக்கும் அம்னியோட்டிக் திரவ பரிசோதனை (அம்னியோசென்டசிஸ் சோதனை) 1970-களின் இறுதியில் வந்தது. இந்தப் பரிசோதனையில் பாலினத்தையும் கண்டறிய முடியும் என்பதால், மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் உத்திரப்பிரதேசத்தின் உட்பகுதியில்கூட பாலினத்தைக் கண்டறிவதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டன. அதுவும் 80-களிலே.
இப்போது செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில், கருவை கருப்பையில் செலுத்துவதற்கு முன்னதாக மரபணு நோய்களைக் கண்டறிவதற்கான மரபணு பரிசோதனைகள் உண்டு. (Pre-Implantation Genetic Diagnosis) இந்த சோதனையிலும் ஆண் கருவை உறுதிசெய்ய முடியும். ஆனால், அதற்கு இந்தியாவில் தடை இருப்பதால், ஏஜென்டுகள் மூலம் தாய்லாந்து, ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குப் பறந்து ஆண் கருவை சுமந்துவரும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. டெல்லியில் இவ்வகையில் ஆண் குழந்தையை கருத்தரிக்க வைப்பதற்கு 8.5 லட்சம் வரை வசூல் செய்த ஒரு செயற்கை கருத்தரிப்பு மையம் பிடிபட்ட செய்தி வெளியானது.
இந்தியாவில் ஆண் குழந்தைத் தேர்வு மனநிலை, பெண் குழந்தை நிராகரிப்பு மனநிலை வர்க்க பேதம் இன்றி அனைத்து பகுதி மக்களிடமும் இருக்கின்றன என்பதற்கு இந்தச் செய்திகள் சாட்சி.
2001, 2011 கணக்கெடுப்புகள் சேலம், தர்மபுரி நிலவரம் சற்று மேம்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினாலும், மாநிலத்தின் குழந்தைகள் பால் விகிதத்தை ஒப்பிடுகையில் அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்றே சொல்ல முடியும். (சேலம் குழந்தைகள் பால் விகிதம் 2001-ல் 851, 2011-ல் 917; தர்மபுரியில் 2001-ல் 869, 2011-ல் 913; மாநில அளவில் குழந்தைகள் பால் விகிதம் 2001-ல் 942, 2011-ல் 946).
1970-களில் நவீன கருப்பரிசோதனைகள் வரத்தொடங்கியதில் இருந்து பால் அடிப்படையிலான கருக்கலைப்பு இந்தியாவில் நடக்கிறது. இதனால் இந்தியாவில் இதுவரை பிறந்திருக்க வேண்டிய 6 கோடியே 30 லட்சம் பெண்கள் ‘காணாமல் போய்விட்டார்கள்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிறப்பு முதல்…
கருக்கொலை, சிசுக்கொலை எனப் பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பல்வேறு வன்முறைகளுக்கு இந்தியப் பெண்கள் ஆளாகி வருகிறார்கள். 27% சிறுமிகளுக்கு 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் நடந்துவிடுகிறது.
இந்தியாவில் பெண்கள் மீதான பாகுபாடுகள், வன்முறைகள் எல்லா பெண்களையும் ஒரே அளவில் பாதிப்பதில்லை. பிராந்திய அளவில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வர்க்கம், சாதி, இனம், மதம் மற்றும் பிற கூறுகளோடு பாலின அடிப்படையிலான பாகுபாடு இணைந்து பெண்களைப் பாதிக்கிறது. எனவே, “இந்தியா போன்ற பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சமத்துவம் இல்லாத ஒரு நாட்டில், ஒரே மாதிரியான நலன்களும் தேவைகளும் இருக்கிற ஒரே திரளாகப் பெண்கள் இல்லை” என்கிறார் ஆய்வாளர் ஜானகி நாயர் (Women and Law in Colonial India).
வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலுள்ள பிணைப்பு காரணமாக, உழைப்பு என்ற அம்சத்தில், பெண் தொழிலாளர்களிலேயே தலித் மற்றும் பழங்குடிப் பெண்கள் அனுபவிக்கும் கூடுதலான சுரண்டல்களை நாம் முன்னரே அலசி இருக்கிறோம். கிராமப்புறங்களில் இடைநிலை வர்க்கங்கள், சாதிகளைச் சார்ந்த பெண்கள் வேலைவாய்ப்பில் இருப்பதைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் இதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேலை வாய்ப்பில் இருக்க முடிகிறது. நகர்ப்புறத்தில் மத்திய வர்க்க, இடைநிலை சாதிப் பெண்களாக இருக்கட்டும், உயர் சாதிப் பெண்களாக இருக்கட்டும் வேலைவாய்ப்பிற்குள் இருப்பதற்கு அவர்களுக்கு வீட்டு வேலை சுமையைக் குறைத்திட வேண்டி இருக்கிறது. இந்தச் சுமை குறைக்கும் பணியை பெண் வீட்டுவேலைப் பணியாளர்கள் செய்கிறார்கள். நகர்ப்புறத்திற்கு கல்வித்தகுதி, உடைமை ஏதும் அற்றவர்களாக இடம்பெயர்ந்த மக்கள் திரளில் இருந்து உருவாகும் வீட்டுவேலைப் பெண் தொழிலாளர்கள், நகர்ப்புற மத்தியவர்க்கப் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் இருப்பதற்கு பேருதவியாக இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தின் பிற தளங்களில் பெண்கள் தாங்கள் சார்ந்த வர்க்கம், சாதி, மதம் காரணமாக பெருமளவிலான வேறுபாடுகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். வீடு, குடும்பம் என்ற அமைப்பிற்குள்ளும் பெண்களின் நிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
வயது அடிப்படையில் அலசினால், சிறுமிகளுக்கு அந்தஸ்து துளியும் கிடையாது.
திருமணம் ஆன பெண்களில் விதவையான பெண்களின் நிலை படுமோசம். விதவைகள் மறுமணம் குறித்த பார்வையில் பகுதியைப் பொறுத்து மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் விதவைத் திருமணம் என்பது சவாலானதுதான். இந்தியாவில் விதவைமுறை எந்தளவுக்கு கொடுமையாக இருக்க முடியும் என்பதற்கு உத்திரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் உள்ள விருந்தாவன் சாட்சி பகர்கிறது. குடும்பங்களின் புறக்கணிப்புகள் காரணமாக, மேற்குவங்கம், ஒரிசா, பீகார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விருந்தாவனின் வீதிகளுக்கு விதவைகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். 12 வயதில் திருமணம் ஆகி, 14 வயதில் ஒரு குழந்தை பிறந்து அது இறந்துபோகிறது. 15 வயதில் கணவர் இறந்துவிட்டார். 15 ஆவது வயதில் விருந்தாவனுக்கு வந்துசேர்ந்தார் புரொமிதா தாஸ். 75 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை விருந்தாவனின் வீதிகளிலேயே கழிந்தது. கைப்பிடி சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்தே மரணம் வரை அவர் வாழ்ந்திட வேண்டும். 2007-ல் சி.என்.என் தளத்தில் இவருடைய கதை பதிவாகி இருக்கிறது. 15 ஆயிரம்-20 ஆயிரம் விதவைகள் விருந்தாவனில் வாழ்கிறார்கள் என்று ஆய்வுக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஊரின் மொத்த மக்கள்தொகையே 2011 கணக்கெடுப்படி 63,000 தான்.
திருமணமாகி ஆண் பிள்ளையைப் பெற்ற பெண்ணிற்கு அந்தஸ்து கிடைக்கிறது. வயது மூப்படைந்து மகனுடைய மனைவிக்கு மாமியாராகிவிட்ட பெண்ணுக்கு அதிகாரம் கிடைக்கிறது. இந்த ‘மாமியார்கள்’ ஆணாதிக்க சமூகத்தின் கங்கானிகளாக செயல்பட்டு வரதட்சணை வசூல், மருமகள் என்ற பெண்ணின் உழைப்பை சுரண்டுவது உள்ளிட்ட ‘பொறுப்புகளைக்’ கவனிக்கிறார். இந்த அமைப்பைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு பெரும்பாலான பெண்களுக்கு வாய்ப்பதில்லை. பெண்ணைப் பெண்ணிற்கு எதிராக நிறுத்தி, பெண்களுக்கு இடையே பரஸ்பர மரியாதையும், தோழமை உணர்வும், அன்பும் இருந்திடாமல் பார்த்துக்கொள்ளும்.
ஆக, குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையில், ஒரு பெண் அடிமையாக வளர்க்கப்படுவார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும். கணவர் வீட்டில் தன்னுடைய மாமியாருக்குப் பிறகு, மூப்பு அடிப்படையில் ‘தலைமை அடிமை’ பொறுப்பிற்கு வருவார். இந்தத் தலைமை அடிமை/கங்கானியின் பிரதான கடமையாக குடும்பம் என்ற பெண்ணடிமை, ஆணாதிக்க அடிப்படையிலான முறையை கட்டிக்காக்கும் பொறுப்பு இருக்கும். இதுதான் வர்க்க சமூகம் விதித்த ‘டிசைன்’.
குடிமக்கள் என்ற அந்தஸ்திற்கே போராட்டம்
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்கள் காலங்காலமாக அடிமைநிலையில் சிக்குண்ட பெண்களுக்கு விடிவு தரும். ஆனால், பெண்களுக்கு இந்த முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் கிடைப்பதில் அரசாங்கங்களுக்கு அக்கறை கிடையாது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, உடல்/மனநலம், உடைமை, அரசியல் அதிகாரம் என எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவில் பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலையை நம்மால் பார்க்க முடிகிறது. ஜனநாயக இயக்கங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள், ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் மனித சமூகம்/ முன்னேற்றம் குறித்த பார்வையைப் பொறுத்து இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் ஒரு சில முன்னேற்றங்கள் நடந்துள்ளன.
ஒரு சமூகத்தில் பெண்கள், பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாக எப்படிப் பார்க்கப்படுகிறார்கள், நடத்தப்படுகிறார்கள் என்பது பெண்களின் மேம்பாட்டில் மிக முக்கியமானது. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் காலங்காலமாக அடிமைநிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே பெண்கள் மேம்பாடு குறித்து அரசுக்கு இருக்க வேண்டிய பார்வை மிகவும் முக்கியமானது.
ஒரு சமூகத்தில்/ நாட்டில், அனைத்து குடிமக்களும் சமம் என்கிற கட்டத்திற்கு இந்த உலகம் வருவதற்கே கம்யூனிஸ தத்துவம் உள்ளிட்ட முற்போக்கு தத்துவங்கள் தேவைப்பட்டன. உலகளவிலான அனைத்து வயதுவந்தோர் வாக்குரிமை வரலாற்றை எடுத்துக்கொண்டாலே, வெறும் அரசியல் உரிமை என்ற நிலையை எட்டுவதற்கு இந்த உலகம் எத்தகைய போராட்டத்தைக் கடந்துவந்திருக்கிறது என்பது புரியும்.
சொத்துடையவர்களுக்கும், கல்வி கற்றவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை என்ற நிலையை ஆளும் வர்க்கங்களும், அவற்றின் அரசுகளும் ஏற்படுத்தி வைத்திருந்தன. ‘மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருக்கும் உழைக்கும் உடைமையற்ற வர்க்கங்களுக்கு வாக்குரிமை இல்லை’. இந்த பாரபட்சமான ஏற்பாட்டை எதிர்த்து உலகின் தொழிலாளர் வர்க்க இயக்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்து வயதுவந்தோர் வாக்குரிமைக்கு வழிவகுத்தது. அனைத்து வயதுவந்தோர் எனும்போது, ‘அதில் பெண்களையும் உள்ளடக்க வேண்டுமா?’ என்ற மனப்பான்மைதான் உலகெங்கிலும் நிலவியது.
சோஷலிச, கம்யூனிஸ இயக்கங்கள், ‘ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை’ என்பதில் உறுதியாக இருந்தன. என்றாலும், தொடக்க காலத்தில் சோஷலிச இயக்கத்தில்கூட ஒரு சிலர், ‘பெண்களையும் உள்ளடக்கி வாக்குரிமை கோருவதுதான் சரி! ஆனாலும், இப்போதைக்கு அதற்கு சாத்தியமில்லை எனும்போது பெண்கள் வாக்குரிமையை வலியுறுத்த வேண்டாமே! என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள். இதுகுறித்து ‘மகளிர் தின உண்மை வரலாறு’ ஆய்வு நூலில் எழுத்தாளர் தோழர். இரா. ஜவஹர் பதிவுசெய்திருக்கிறார்.
சோஷலிஸ்ட் அகிலத்தின் ஏழாவது மாநாடு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் 1907-ல் நடந்தது. தோழர் லெனினும் இதில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டோடு சேர்ந்து 1907 ஆகஸ்ட் 17 அன்று முதல்முறையாக, “உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு” நடந்தது.
மகளிர் தினம் உண்மை வரலாறு நூலில் இருந்து: “…ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தொழிலாளர்கள் எழுப்பி வந்தார்கள். ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் அந்த உரிமை வேண்டும் என்று பெண், ஆண் சோஷலிஸ்டுகளில் பெரும்பாலோர் கோரி வந்தார்கள். இந்தச் சூழலில் கூடிய முதல் சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது…
…பெண்கள் மாநாட்டில் பேசிய ஆஸ்திரிய நாட்டுப் பிரதிநிதிகளும், மற்ற சிலரும், இப்போது பெண்களுக்கு வாக்குரிமை கேட்கவேண்டாம் என்றும், அது ஆண்கள் அனைவரும் வாக்குரிமை பெறுவதை பாதிக்கும் என்றும் வாதிட்டார்கள்…
இந்த வாதத்தை மறுத்து கிளாரா ஜெட்கினும் மற்ற பலரும் பேசினார்கள். கிளாரா ஜெட்கினின் விளக்கத்திற்குப் பிறகு ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதை அடுத்துப் பொதுமாநாட்டிலும் இந்தக் கோரிக்கை நிறைவேறியது…”
முற்போக்கு இயக்கத்தில் சமரசமில்லாமல் பெண்கள் குறித்த பார்வையை உள்ளடக்கிப் பணியாற்றுவதற்கு, சோஷலிஸ்ட் அகிலத்தின் மாநாடுகள் உதாரணங்களைப் பகிர்கின்றன.
நாங்களும் குடிமக்களே!
இந்தியாவில் ஒரு வகையான தேர்தல் முறையில் சட்டமன்றத்திற்கான உறுப்பினர் தேர்வு என்பதே, 1909 இந்திய கவுன்சில் சட்டத்திற்குப் பிறகே வருகிறது. 1905 சுதேசி இயக்கத்திற்குப் பிறகு பெண்கள் திரளாக இந்திய விடுதலை இயக்கத்தில் பங்குபெறுகிறார்கள். 1888 தொடங்கி இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வுகளில் பெண்களின் பங்கேற்பு இருக்கிறது. பெண்கள் உட்பட அனைத்து வயதுவந்தோர் வாக்குரிமையை காங்கிரஸ் வலியுறுத்தியது. முதல் உலகப் போருக்கு பின்பு அன்னி பெசன்ட், மார்கரட் கசின்ஸ் போன்ற பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஐரிஷ் பெண்கள் பெண்ணுரிமை, குழந்தைகள் நலனை உள்ளடக்கிய சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி கட்சியல்லாத பெண்ணுரிமை இயக்கத்தைக் கட்டமைக்கிறார்கள். சென்னையில், ‘பெண்களின் இந்திய சங்கம்’ என்ற அமைப்பை (Women’s Indian Association) 1917-ஆம் ஆண்டில் தோற்றுவித்தார்கள்.
இங்கிலாந்தின் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தில் அனுபவமிக்கவர் திருமிகு. கசின்ஸ். இவர் செயல்பட்ட WIA-வின் பெண்கள் வாக்குரிமை தொடர்பான இந்தியாவின் முதல் பெண் பிரதிநிதிகள் குழு 1919-ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவை சந்தித்தது. “பெண்களையும் மக்களாகக் கருதி ஓட்டுரிமை வழங்குங்கள்! பாலினத்தைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யாதீர்கள்!” என்று கோரிக்கை வைத்தது. ‘பெண்களையும் குடிமக்களாகக் கருதுங்கள்’! என்று குடிமக்களாகக் கருதப்படுவதற்கே பெண்கள் கோரிக்கை வைக்க வேண்டியிருந்தது என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
மாண்டேகு செம்ஸ்போடு குழுவைத் தொடர்ந்து வந்த சவுத்பரோ கமிட்டி, “பெண்களை பர்தா முறையில் வைத்துள்ள, பெண் கல்விக்கு தடை விதிக்கிற இந்த சமூகத்தில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது காலம் கனிவதற்கு முந்தைய செயல்” என்று விந்தையான ஒரு கருத்தைச் சொன்னது. சமூகத்தில் யார் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களின் அடிமை விலங்கொடிக்க முதலாவதாக அவர்களுக்கு அரசியல் உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். ஆனால், இங்கு கதை வேறாக இருப்பதைக் காண்கிறோம். எனினும், பெண்கள் வாக்குரிமை பற்றி மாகாண சட்டமன்றங்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்ற பரிந்துரையை சவுத்பரோ கமிட்டி வழங்கியது.
மாகாண சட்டமன்றங்கள் பெண்கள் வாக்குரிமை குறித்து முடிவுசெய்யட்டும் என்பதைத் தொடர்ந்து, இந்தியாவில் முதன்முதலாக 1920-ல் சென்னை மாகாணம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. என்றாலும், ஆண்களைப் போலவே, சொத்து, கல்வித் தகுதி பெற்றிருந்த பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலைதான். சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 1% பெண்களும், 11.6% ஆண்களும் மட்டுமே வாக்கு செலுத்தினார்கள். எனவே, ‘ஓட்டுரிமை உடைய குடிமக்கள்’ என்கிற அந்தஸ்து, உடைமையற்ற மக்களில் யாருக்கும் கிடைக்கவில்லை; உடைமை உடைய வர்க்கங்களிலும் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் தொடக்ககால நிலையாக இருந்தது.
குடிமக்கள் என்ற அந்தஸ்தை இந்தியாவில் பெண்கள் அடைவதற்கான போராட்டத்தைவிட, குடிமக்கள் என்ற அந்தஸ்தை இந்தியப் பெண்கள் நிலைநாட்டுவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டி இருக்கிறது. பகுதி, சார்ந்த வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் எனப் பல்வேறு கூறுகளின் அடிப்படையில் இந்தப் போராட்டத்தை பெண்களும், ஜனநாயக இயக்கங்களும் நடத்த வேண்டியுள்ளது. அதுவும் வலதுசாரிகள் கோலோச்சும் காலத்தில் வலுவான போராட்டங்களை நாம் நடத்த வேண்டி இருக்கிறது.
-தொடரும்…
ஆதாரங்கள்:
Demographic danger signals, Frontline, Jan 22, 2000
Selective abortion in India could lead to 6.8m fewer girls being born by 2030, The Guardian, 21 Aug 2020
Sex Ratios and Gender Biased Sex Selection History, Debates and Future Directions, 2014, UNFPA, UN-Women
All for a son: How couples use IVF to get past ban on sex selection, The News Minute, Sep 14, 2020
Shunned from society, widows flock to city to die, CNN, 2002.
Women and law in colonial India: a social history, Janaki Nair, 1996, Kali for Women.
மகளிர் தின உண்மை வரலாறு, இரா.ஜவஹர், பாரதி புத்தகாலயம்