Subscribe

Thamizhbooks ad

அத்தியாயம் 25: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

 

மண்ணாய்ப் போன மரபும், பெண்களும்

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை உறுதிசெய்வதும், அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியமானவற்றை உறுதிசெய்வதும் அரசின் கடமை. மக்கள் தொகையில் சரிபாதி வகிக்கும் பெண்கள் காலங்காலமாக ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து பெண்கள் உண்மையிலேயே விடுதலை பெற வேண்டுமென்றால், பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவுகிற அனைத்து வகையான பாகுபாடுகளையும் களைவதற்குத் தேவையான உண்மையான, பாசாங்கில்லாத முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், பொதுவாக அரசுகள் (சோஷலிச அரசுகள் தவிர) பெண்களின் அடிமை விலங்கொடிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை.

நவீன காலத்தின் சோஷலிச நாடுகளைத் தவிர, வரலாறு நெடுகிலும் சொத்துடைய வர்க்கங்களே ஆளும் வர்க்கங்களாக இருந்து வருகின்றன. இந்த ஆளும் வர்க்கங்களின் நலன்களை, தேவைகளை உறுதிசெய்வதற்கான ஸ்தாபனமாக தோன்றிய அமைப்புதான் அரசு. ‘ஆட்சிக்குட்பட்ட அனைத்து மக்களின் நலனுக்குமான அரசு’ என சொல்லப்பட்டாலும், உண்மையில் ஆளும் வர்க்கதின் ஸ்தாபனமாகவே அரசு செயல்படும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. தேர்தல் ஜனநாயக முறை பரிணமித்தபோது, ‘சொத்துடையவர்களுக்கே வாக்குரிமை!’ என்ற அரசுகளின் அணுகுமுறை இதற்கு ஒரு நிரூபனம்.

‘எங்கே கொந்தளிப்புகள் உருவாகி இருக்கிற சமூக அமைப்பு சிதைந்துவிடுமோ?’ என்ற அச்சம் ஏற்பட்டால், சுரண்டப்படும் பகுதியினருக்கு/உடைமையற்ற வர்க்கங்களுக்கு ஒரு சில விஷயங்களை/சலுகைகளை அரசு உறுதிசெய்திடும். அது ஓட்டுரிமையாக இருக்கலாம், எட்டு மணி நேர வேலையாக இருக்கலாம், வேலை உத்தரவாதமாக இருக்கலாம். ஆனால், அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரக் கருவியாகவே அரசு செயல்படும் என்பது உறுதி.

பெண்ணடிமைத்தனத்தை, பெண்களின் சார்ந்திருக்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வர்க்க சமூகங்கள் இயங்குகின்றன. ஆணாதிக்க/பெண்ணடிமை முறை ஏற்பாடு வர்க்க சமூகத்தின் அடிப்படைத் தேவையான வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கு அவசியமாக இருக்கிறது. எனவே, ‘குடிமக்கள்’ என்ற அந்தஸ்தை சமூகத்தில் மேலும் சிலருக்கு நீட்டிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தபோது, பெண்களை குடிமக்களாக அங்கீகரிக்க அரசுகள் விரும்பவில்லை. இதன் காரணமாகவே ‘அனைத்து வயதுவந்தோர் வாக்குரிமை’ கோரிக்கை வலுத்த காலத்தில் ‘பெண்களுக்கு வாக்குரிமை இல்லை’ என்ற கொடூரமான நிலைப்பாட்டை அரசுகள் எடுத்தன. காலப்போக்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி அவர்களைக் குடிமக்கள் என சட்டப்படி அங்கீகரித்தாலும் தொடர்ந்து இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்துகின்றன. அரசிலமைப்பு சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் எல்லாம், பெண்களின் அடிமைவிலங்கொடிக்கத் தேவையான அம்சங்களை உறிதிசெய்வதில்லை.

மரபு வழக்கம்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ‘இந்தியர்களின் மரபு வழக்கங்களில் தலையிடாமல் ஆட்சி நடத்திட வேண்டும்!’ என்ற அணுகுமுறையைத்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் பொதுவாகக் கடைப்பிடித்தது. ‘இந்து, இஸ்லாமிய வழக்கப்படி இந்தியாவில் தனிநபர் வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும்’ என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருதினார்கள். நீதிமன்றங்களில் இந்து பண்டிதர்கள் (பார்ப்பண ஆண்கள்), இஸ்லாமிய மௌலிகளை நியமித்து, அவர்களின் ஆலோசனை பெறப்பட்டு, தனிநபர் வழக்குகளில் தீர்ப்பு எழுதுவது என்பது வங்கத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு காலத்தில் (1772) நடைமுறையாக்கப்பட்டது. இந்த வழக்கம் 1864 வரை தொடர்ந்தது. இந்த லட்சணத்தில் ‘பிற்போக்கில் திளைக்கும் இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் காலனிய அரசால் மட்டுமே விடிவைத் தர முடியும்!’ என்று வேறு பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்க்கமாக நம்பிவந்தது.

இந்திய பெண்ணடிமைத்தன மரபு எத்தகையது என்பதற்கு மனுசாஸ்திரம் ஒன்றே போதிய ஆதாரங்களை வழங்கிடும்.

“பெண்களின் இயல்பே ஆண்களை காமஇச்சைக்குத் தூண்டுவதுதான். இந்தக் காரணத்தால்தான் அறிவுள்ளவர்கள் பெண்களுடன் இருக்கும்போது பாதுகாப்பில்லாமல் இருக்கமாட்டார்கள்” (அத்தியாயம் 2, சுலோகம் 213)

“பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தந்தையின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, மகன்களின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (அத்தியாயம் 5, சுலோகம் 148)

மனுசாஸ்திரத்தை இயற்றிய மனு, “சூத்திரர்களைவிட பெண்களிடம் மென்மையைக் காட்டியதாக சொல்லவே முடியாது” எனக் குறிப்பிடும் டாக்டர். அம்பேத்கர், மனுசாஸ்திரம் எப்படியெல்லாம் பெண்களை இழிவான பிறவிகளாக சித்தரிக்கிறது என்பதைப் பட்டியலிடுகிறார்.

“திருமணமாகிவிட்டால் கணவனிடமிருந்து மனைவிக்குப் பிரிவே கிடையாது” (அத்தியாயம் 9, சுலோகம் 45) என்ற மனுசாஸ்திரக் கருத்தை சுட்டிக்காட்டும் டாக்டர். அம்பேத்கர், “‘திருமணம் என்பது பிரிக்கப்பட முடியாத தெய்வீக பந்தம் என மனு கருதியதால்தான், விவாகரத்தை அவர் அனுமதிக்கவில்லை’ என இந்துக்கள் பலர் உயர்த்திப் பேசுகிறார்கள். ஆனால் இதில் துளியும் உண்மையில்லை.

விவாகரத்திற்கு எதிரான மனுவின் விதிக்கு வேறு உள்நோக்கம் இருக்கிறது. ஒரு ஆணை ஒரு பெண்ணுடன் இணைப்பதல்ல நோக்கம்; ஒரு பெண்ணை ஆணுடன் இணைத்துவிட்டு, ஆணை மட்டும் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதே நோக்கம்.

ஏனெனில் மனைவியை ஒரு ஆண் கைவிடுவதற்கு மனு தடைவிதிக்கவில்லை. ஒரு ஆண் தன்னுடைய மனைவியைக் கைவிடுவதற்கு மட்டுமல்ல, விற்பதற்குக்கூட மனு அனுமதிக்கிறார்.

மனு சொல்வதைப் பாருங்கள்: “விற்பனை செய்யப்படுவதாலோ, ஒதுக்கப்படுவதாலோ கூட ஒரு மனைவி கணவனிடம் இருந்து விடுதலை பெறுவதில்லை.” (அத்தியாயம் 9, சுலோகம் 46)

இதன் பொருள் ஒரு மனைவி தன்னுடைய கணவனால் கைவிடப்பட்டாலோ, விற்கப்பட்டாலோ கூட இன்னொரு ஆடவனின் முறையான மனைவி என்ற அந்தஸ்தை அடையவே முடியாது என்பதே. இது அரக்கத்தனமான விஷயம் இல்லை என்றால், எதுவுமே அரக்கத்தனமானது கிடையாது” என்று குறிப்பிடுகிறார்.

‘குழந்தை, ஆண் வாரிசு இல்லாத பெண்ணிக்கு குழந்தை பிறக்க வைக்க, திருமணம் தாண்டிய தாற்காலிக உடலுறவுகளை பெண்ணின் திருமண வீட்டைச் சேர்ந்த பெரியவர்கள் அனுமதிக்கலாம்’ (அத்தியாயம் 9, சுலோகங்கள் 59, 50) என்று கூட மனுசாஸ்திரம் கூறுகிறது. இவ்வகையான முறைமைகள் பரவலாகக் கடைப்பிடிக்கப்படாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில், ‘வாரிசை உற்பத்தி செய்யும் இயந்திரம் அன்றி, நீ வேறெதுவும் இல்லை!’ என்று பெண்களை படுஇழிவான நிலையில் இந்தச் சமூகம் வைத்திருப்பதில் மனுசாஸ்திரம், பிற இந்து மத கோட்பாடுகள் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கு ‘மகத்தானது’.

எனவே, திருமணம், வாரிசுரிமை, சொத்துரிமை, சாதி ஆகியவற்றில் மரபு வழக்கத்தைப் பின்பற்றுவது என்ற ஏற்பாடு, பார்ப்பனீய, சாதிய, பெண்ணடிமைத்தன, ஆணாதிக்க ஒடுக்குமுறைகளை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. மீதாக்ஷரம், தயபாகம், தய கிராமம், தய தத்வம், தத்தக சந்திரிகா, தத்தக மீமாம்சம், விவாத சிந்தாமணி, திதி தத்வம், சுத்தி தத்வம், பிராயச்சித தத்வம் – இப்படி பல்வேறு புராதனக் கோட்பாடுகளை ‘இந்து தனிநபர் சட்டம்’ என்ற பெயரில் நவீன காலத்திற்கும் கடத்தும் வேலை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. திருமணம், சொத்துரிமை, வாரிசுரிமை, சாதி வழக்கம் எனப் பல்வேறு அம்சங்களில் பாரபட்சமான புராதனக் கோட்பாடுகள் தொடர்ந்து கோலோச்சுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

‘எங்கள் பகுதி வழக்கத்திற்கு இந்தக் கோட்பாடு செல்லாது’ போன்ற மேல்முறையீடுகள் வந்தபோது, பகுதிகளுக்கேற்ற சட்டங்கள் சிலவற்றையும் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தது. ‘ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கும் ஒரு இந்து சட்டம்’, ‘ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துக்கும் ஓர் இஸ்லாமிய சட்டம்’ என்று கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் பகுதி வாரியாக எழுந்தன. உதாரணத்திற்கு, கட்சுப் பகுதியைச் சேர்ந்த மேமன் இஸ்லாமியர்கள், ‘நாங்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறியவரகள்; இந்து முறைப்படிதான் சொத்துரிமை, வாரிசுரிமையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்; எனவே இந்து முறைப்படியே எங்களுக்கு வாரிசுரிமை நிலைநாட்டப்பட வேண்டும்’ என வாதிட்டார்கள். இந்த முரண்பாட்டை ஒட்டி ‘கட்சி மேமன் சட்டங்கள்’ இயற்றப்பட்டன.

அதேபோல, கேரளாவின் மாப்ளா சமூக இஸ்லாமியர்கள் தாய்வழிச் சமூகத்தினர். மதறாஸ் மாகாணத்திற்கு குடியேறிவிட்ட மாப்ளா சமூக மக்கள், குடியேறிய பகுதியில் வாங்கிய அசையா சொத்துகளில் சில வகைகள் இஸ்லாமிய சட்டப்படி பிரிக்கப்படலாம் என்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்து மரபு முழுசொத்துரிமையை ஆண்களுக்கு வழங்கி பெண்களுக்கு வாரிசுரிமையை மறுப்பதால், இந்து அல்லாத பிற மதத்து ஆண்கள் சொத்து விவகாரங்களில் உள்ளூர் மரபு வழக்கத்தையே நாங்கள் பின்பற்றுகிறோம், பின்பற்றுவோம் என வழக்கு போட்டார்கள். இந்து, இஸ்லாமியர் அல்லாத கிறிஸ்தவர்களுக்கு இந்திய வாரிசுரிமை சட்டம் (1865) சட்டம் கொண்டு வரப்பட்டபோதும், இந்த அடிப்படையில் சிக்கல்கள் எழுந்தன.

1863 ஆம் ஆண்டு பிரைவி கவுன்சில் வரை சென்ற ஆப்ரகாம் எதிர் ஆப்ரகாம் வழக்கு மிகவும் புகழ்பெற்றது. கோவாவில் பிறந்த ஆங்கிலேயே-போர்ச்சுகீய வம்சாவளி கிறிஸ்தவப் பெண்ணான சார்லாட் ஃபாக்ஸ் பெங்களூரில் வளர்ந்தவர். இவர் மேத்யு ஆப்ரகாம் என்ற பெங்களூர்வாசியான கிறிஸ்தவ ஆணை மணந்தார். சென்னை மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மேத்யூ. நான்காம் தலைமுறை கத்தோலிக கிறிஸ்தவர். பறையர் சமூகத்தில் பிறந்தவர். ஆப்ரகாமுக்கு பூர்வீக சொத்துகள் இல்லை. என்றாலும், மதுபான உற்பத்தி, வர்த்தகத்தில் ஈடுபட்டதால், மிகப்பெரும் பணக்காரர் ஆனார்.

1842-ல் ஆப்ரகாம் மரணமடைந்தபோது அவருடைய சொத்து மதிப்பு 3 லட்சம் ரூபாய். இந்த மிகப்பெரும் சொத்து ஆங்கிலேய சட்டப்படி ஆப்ரகாமின் மனைவிக்கும் இரு மகன்களுக்கும் போகுமா அல்லது ஆப்ரகாமின் பூர்வீக இந்து வழக்கப்படி அவருடைய சகோதரர் பிரான்சிஸிடம் போகுமா என்ற வழக்கு வந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரைவி கவுன்சில், ‘ஆப்ரகாம் ஆங்கில கிறிஸ்தவ வழக்கப்படித்தான் வாழ்ந்தார் என்பதால், ஆங்கிலேய சட்டப்படி அவருடைய மனைவிக்கும், மகன்களுக்கும் செல்லும்’ என்று தீர்ப்பளித்தது. இரண்டாண்டுகள் கழித்து 1865-ல் வந்த இந்திய வாரிசுரிமை சட்டம் கிறிஸ்தவர்கள் எந்த வழக்கத்தைக் கடைப்பிடித்தாலும் அவர்களின் வாரிசுரிமை ஆங்கிலேயே முறையையே பின்பற்றும் என்று உறுதிசெய்தது.

சீர்திருத்த சட்டங்கள்

இப்படி இந்து, இஸ்லாமிய சமூகத்தில் தனிநபர் சட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் மரபு வழக்கப்படியான சட்டங்களை இயற்றிப் பின்பற்றுவது, மாற்றம் வேண்டும் என இந்திய சமூகத்திற்குள்ளிருந்து சீர்திருத்தவாதிகள் கோரிக்கை எழுப்பினால் அதில் தலையிட்டு, சட்டங்கள், திருத்தங்கள் கொண்டுவருவது என்ற நிலைப்பாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. சகித்துக்கொள்ளவே முடியாத வன்முறைகளான விதவைகள் உடன்கட்டை ஏற்றப்படுதல் போன்ற கொடுமைகளை ஆங்கிலேய அதிகாரிகள் தடை செய்திருக்கிறார்கள். (1798-ல் வங்கத்தின் ஷாகாபாத் மாவட்ட கலக்டர் சட்டவிரோதம் என்று சொல்லி உடன்கட்டையைத் தடைசெய்தார்)

என்றாலும், ‘இம்மாதிரியான மரபு வழக்கத்தை அணுகும்போது, அதிகாரத்தைப் பயன்படுத்துவதைவிட மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என கவர்னர் ஜெனரல் அறிவுறுத்தி இருக்கிறார். 1805 பீகாரின் தற்காலிக மாஜிஸ்ட்ரேட் எல்ஃபின்ஸ்டன், ஒரு 12 வயது சிறுமியை போதையேற்றி உடன்கட்டை ஏறவைக்கும் சம்பவத்தில் தலையிட்டார். அப்போது, சுர்மோனோ என்ற ஒரு பண்டிதரை அழைத்து, ‘உடன்கட்டை ஏறும் விதிகள் பற்றி உங்கள் மதநூல்கள் என்ன சொல்கின்றன?’ எனக் கேட்டிருக்கிறார்.

“பெண் முழுமனதோடு சம்மதிக்க வேண்டும். பெண்ணை போதையேற்றி சிதையில் ஏற்றக் கூடாது. பெண் கர்ப்பிணியாக இருக்கக்கூடாது. 16 வயதிற்கு குறைவாக இருக்கக்கூடாது. கட்டாயப்படுத்தக்கூடாது.” – என அந்த மனிதர் சுர்மோனோ சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன விதிகள் அடிப்படையில் குறிப்புகளை உருவாக்கி, விதவைகள் உடன்கட்டை ‘வைபவங்களில்’ இதைக் கடைப்பிடிக்கிறார்களா எனப் பாருங்கள் என மாவட்ட நீதிபதிபதிகளுக்கு சுற்றிக்கைகள் சென்றிருக்கின்றன. எனவே தொடக்ககாலத்தில் சதி போன்ற கொடுமைகளைக்கூட பெரும்பாலும் தடை செய்யாமல், இந்து மத கோட்பாட்டுப்படி ஒழுங்குபடுத்தவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

1815-1824-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வங்கம், மதறாஸ், பம்பாய் சமஸ்தானங்களில் 6,632 உடன்கட்டை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 90 சதவிகிதம் வங்கத்தில் நடந்தது என்ற ஆய்வு விவரங்களை ஆய்வாளர் ஜானகி நாயர் பதிவு செய்கிறார். ராம்மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் சதிக்கொடுமையை எதிர்த்து வலுவாகப் போராடியதைத் தொடர்ந்து, சமூகத்திற்குள்ளிருந்தே குரல்கள் வருகின்றன என சதிக் கொடுமை தடுப்பு சட்டம் (1829), பெண்சிசுக்கொலை தடுப்பு சட்டம் (1870) போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. காலப்போக்கில் விதவைகள் திருமணம் (1856), திருமண வயதை அதிகரித்தல் (1929) போன்ற விஷயங்களில் இந்து மதத்திற்குள் சீர்திருத்தவாதிகளின் கருத்துகள், கோரிக்கைகள் பரவலானதன் பின்னணியில், அவை குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன.

உண்மையில் 1870 பெண் சிசுக்கொலை தடுப்புச் சட்டம் (வடமேற்கு மாகாணம், ஔத், பஞ்சாப்பிற்கு தொடக்கத்தில் கொண்டுவரப்பட்டது) வடமேற்கு பகுதிகளில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பெண் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டன. கடுமையான எதிர்ப்பு வரவே, 1906-ல் இந்தச் சட்டம் திரும்பப்பெறப்பட்டது. இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட அந்தஸ்திற்கு கீழான குலங்களில் திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால், திருமணம் ஆவது கடினம் என்ற நிலை இருந்தது. ‘திருமணம் ஆகாத வயதான பெண்கள் வீட்டில் இருப்பது குடும்பத்துக்கு இழுக்கு’ எனக் கருதப்பட்டதால், பிறந்தவுடனே பெண்களை ‘ஒழித்துக்கட்டிவிடும்’ பெண் சிசுக்கொலை முறை இங்கு வழக்கில் இருந்தது.

சாதியமுறை, ஆணாதிக்க/பெண்ணடிமை முறை, வர்க்க ஒடுக்குமுறைகள் நிறைந்திருக்கும் இந்திய சமூகத்தில் பெண்ணாக வாழ்வது, மகளாக, மனைவியாக, தாயாக விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றி மடிவது என்பது கொடுமையான விஷயம். நவீன உலகில் நாடாளுமன்றம், புதிய சட்டங்கள் வருகின்றன. ஆனால் அந்த சட்டங்கள் அடிமைகால அம்சங்களை மரபு வழக்கம் என்ற பெயரில் சுமந்து வருகின்றன.

ஆங்கிலேயர்கள் தேடிக் கண்டுபிடித்து தொகுத்த மீதாக்ஷரம், தயபாகம் எனும் சட்ட முறைகள் இரண்டுமே பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கின்றன. 1937, 1956 இந்து வாரிசுரிமை சட்டத்திற்கு முன்பிருந்த சட்டங்கள்படி, தயபாகம், மீதாக்ஷரம் இரண்டு முறைகளிலுமே, ஒரு ‘விதவை’ “கணவனின் சொத்திற்கு வாரிசாவது என்பது, இறந்த கணவனுக்கு மகன் இல்லை, மகனுக்கு மகன் இல்லை (பேரன்), மகனுடைய மகனுக்கு மகன் இல்லை (கொள்ளுப்பேரன்) என்ற நிலையில் தான் சாத்தியம்.” என்றது. அதாவது நான்கு தலைமுறைகளில் ஆண் வாரிசு இல்லாத நிலையில் ‘விதவை’ பெண் வாரிசாவார். அந்த சொத்தையும் அந்தப் பெண் தன் வாழ்நாள் காலம் வரை அனுபவிக்கலாமே தவிர, யாருக்கும் எழுதிவைக்கவோ, விற்கவோ முடியாது. அந்தப் பெண் இறந்தபிறகு அவருக்கு நெருங்கிய வாரிசு யாரோ அந்த நபருக்கே சொத்து போகும். இந்த ஏற்பாடும் அந்தப் பெண் கணவனுக்கு விசுவாசமான கற்புடைய பெண்ணாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

‘இறந்த கணவனுக்கு இறுதிவரை மனைவி விசுவாசமாக இருந்திட வேண்டும். வேறு யாரையும் அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ளக்கூடாது.’ – இப்படி இந்துச் சமூகம் கணவனை இழந்த ‘விதவை’ பெண்ணிற்கு சாகும்வரை ஒடுக்குமுறைகளை விதிக்கிறது. ஆனால், இறந்துபோன கணவன் சொத்தில் அந்தப் பெண்ணுக்கு உரிமை கிடையாது. கணவன் வீட்டில் படுமோசமான அடிமைநிலையில் வாழ வேண்டும். அவமானங்களையும், வன்முறைகளையும் சுமந்து தன்னுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும். கணவனுக்குப் பிறகு மாமனாரையோ, மகனையோ, பேரனையோ, கொள்ளுப்பேரனையோ சார்ந்து வாழ வேண்டும். எப்படி கதை?

‘நான் மனு மீது கடினமாக நடந்துகொள்கிறேன் எனக் கருதலாம். ஆனால், என்னுடைய சக்தி மனுவின் ஆவியை அழிக்கப் போதுமானதாக இல்லை’ என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுவார். மனுசாஸ்திரம் போன்ற புராதனக் குப்பைகள் சமூகத்தில் எற்படுத்திச் சென்றிருக்கிற தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்து மத்திற்கு ஆபத்து

தேசியத் தலைவர்களில் திலகர் போன்றவர்கள் இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘சட்டம் இயற்றி இந்திய மரபுகளை சீர்திருத்தம் செய்வதற்கு ஆங்கிலேயர்கள் யார்?’ என்று திலகர் விமர்சித்தார். ஆங்கிலேய ஏதாதிபத்தியத்திற்கு எதிராக ‘பெருமைமிகு இந்து மரபை’ நிறுத்துவது என்ற புரிதலைத்தான் திலகர் கொண்டிருந்தார். புகழ்பெற்ற ருக்மாபாய் வழக்கில் திலகரின் குறைவான புரிதலை உணரலாம்.

குழந்தைத் திருமணம் செய்யப்பட்ட ருக்மாபாய் என்ற மராத்தியப் பெண், வயது வந்ததும் தன்னுடைய கணவர் பிக்காஜியுடன் போய் வாழ விரும்பவில்லை. தன்னுடைய மனைவி மீதான தாம்பத்திய உரிமை கோரி பிக்காஜி வழக்கு தொடர்ந்தார். இதுதான் ருக்மாபாய் எதிர் பிக்காஜி வழக்கு.

ருக்மா சார்ந்த குறிப்பிட்ட மராத்தி சாதியில் விதவை மணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே ருக்மாவின் தந்தை பாண்டுரங் மரணமடைந்த பிறகு, அவருடைய தாயார் ஜெயந்திபாய், சாகாராம் அர்ஜுன் என்ற கல்விகற்ற ஆங்கில மருத்துவரை மணந்தார். சாகாராம் தன்னுடைய சொந்தக்காரப் பையனான 19 வயது பிக்காஜியை ருக்மாவிற்கு 11 வயதில் திருமணம் செய்து வைத்தார். ‘கல்விகற்று முறையான வேலைவாய்ப்பை உறுதி செய்துகொண்டு உருப்பிட வேண்டும்!, அப்போது தான் ருக்மா உன்னோடு வாழ்வாள்’ என்பது பிக்காஜிக்கு ருக்மா குடும்பம் விதித்த நிபந்தனை. ருக்மா ஆங்கிலக்கல்வி கற்று சிந்தனைத்திறன் மிக்க முற்போக்காளராக வளர்ந்தார். (1898 மருத்துவர் பட்டம் பெற்று சூரத், ராஜ்கோட் மருத்துவமனைகளில் பெண் மருத்துவராகப் பணியாற்றினார் ருக்மா). ஆனால், பிக்காஜிக்கு படிக்க விருப்பமில்லை. கடன்கள், ஒழுங்கீனம் என சுற்றிக்கொண்டிருந்தார். விளைவாக, ருக்மாவிற்கு அவருடன் சென்று வாழ விருப்பமில்லை. அவருடைய தந்தை டாக்டர் சாகாராமும் ருக்மாவை பிக்காஜியுடன் வாழ அனுமதிக்கவில்லை. எனவே, 1884 ஆம் ஆண்டில் தனது மனைவி ருக்மா மீதான தன்னுடைய தாம்பத்திய உரிமை கோரி பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிக்காஜி. பின்ஹே என்ற ஆங்கிலேய நீதிபதி, “நிர்கதியற்ற சிறுவயதில் நடந்த திருமணம் இது. இந்த இளம்பெண்ணை என்னால் வற்புறுத்த இயலாது” எனக் கருத்து தெரிவித்தார். அவ்வளவுதான்! கொதித்துவிட்டார்கள் தேசியவாதிகள்.

திலகர் நடத்திய மராத்தா வார இதழ், “நீதிபதி பின்ஹே இந்து சட்டங்களின் உணர்வைப் புரிந்துகொள்ளவில்லை.” என விமர்சித்தது. 1886 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ருக்மாவிடம், ‘நீ உன் கணவருடன் சென்று வாழவேண்டும். மனைவிக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். மறுத்தால் சிறைக்கு செல்ல வேண்டும்!’ என்று மிரட்டினார்கள். ருக்மாவோ, ‘கணவருடன் வாழ்வதைவிட நான் ஜெயிலுக்கே போகிறேன்’ என்றார் உறுதியாக. செய்தித்தாள்கள் ருக்மாவின் ‘தில்லான’ பதிலைப் பற்றி எழுதிக் குவித்தன.

திலகரோ ருக்மாவின் உறுதியைப் பார்த்துப் பெருமைப்படாமல், ‘எல்லாம் ஆங்கிலக் கல்வி செய்த வேலை’, ‘இதனால் இந்து மதத்திற்கு ஆபத்து’ என்றே குறிப்பிட்டார். “சீர்திருத்தத்தை எல்லாம் சுதந்திரம் பெற்ற பிறகு நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்தியா விடுதலை அடையும் நாளில் 100 ‘விதவை’ திருமணத்தை நான் நடத்துகிறேன்” என இரட்டைநாக்கில் பேசி இருக்கிறார் திலகர்.

பிற்காலத்தில் பெண்கள் திருமண வயது சட்டம் குறித்த விவாதங்களில் பெண்களின் திருமண வயதை 12-க்கு மேல் ஏற்றக்கூடாது என மதன்மோகன் மாளவியா காரசாரமாக வாதிட்டிருக்கிறார்.

இந்து சட்ட மசோதா கொல்லப்பட்டது

பிற்போக்கான வாதங்களைக் கடந்து, சீர்திருத்தங்களைப் புகுத்தி மேம்பட்ட இந்து சிவில் சட்டத்தை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும் என ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் சீர்திருத்தவாதிகள் கடுமையாக முயன்றார்கள். ‘இந்துக்களுக்கான பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது’ என்ற கோரிக்கையும் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்வதற்கு 1941-ல் B.N. ராவ் தலைமையிலான நான்கு நபர் கமிட்டி நியமிக்கப்பட்டது. இதில் பெண்களே இல்லை என்பது முக்கியமான அம்சம். நிற்க!

1937 வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு கூடுதல் சொத்துரிமை வழங்குவது குறித்த பரிந்துரைகளை இந்தக் கமிட்டி வழங்கியதுடன், இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் வருவதை நோக்கி நகர வேண்டும் என்ற பரிந்துரையையும் வழங்கியது.

1944-ல் மீண்டும் B.N ராவ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்து சட்ட கமிட்டியின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்து சட்ட மசோதா இயற்றப்பட்டது. திருமணம், விவாகரத்து, உயிலில்லாத மரணங்களில் வாரிசுரிமை, மைனர் குழந்தைகளின் நிலை, பாதுகாவலர் பொறுப்பு, பராமரிப்பு, தத்து உள்ளிட்ட விஷயங்களுக்கான சட்டவிதிகளை உள்ளடக்கி இயற்றப்பட்ட இந்த மசோதா அரசியல்சாசன சபையில் 1947-ல் டாக்டர். பி.ஆர் அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னரும் இந்த சட்டம் குறித்த விவாதங்கள் தொடர்ந்தன. மொத்தம் நான்காண்டுகள் விவாதங்கள் நடந்தன. இந்த மசோதாவை பல வகைகளில் நீர்த்துப்போகச் செய்தும் பிற்போக்குவாதிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. 1951-ல் மசோதா கைவிடப்பட்டது. “நான்காண்டுகள் உயிருடன் இருந்த இந்த மசோதா, கண்ணீர் சிந்தப்படாமல், பாடப்படாமல் கொலைசெய்யபட்டுவிட்டது” என டாக்டர். அம்பேத்கர் விரக்தியோடு பதிவுசெய்தார். இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை என்ற காரணத்தால் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அண்ணல் அம்பேத்கர்.

1952-ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் இந்து சட்ட மசோதாவைப் பயன்படுத்தி காங்கிரஸை தோற்கடிக்க வலதுசாரி பிற்போக்குவாதிகள் முயற்சித்தார்கள். தேர்தல் பயத்தின் காரணமாக நேரு அரசாங்கம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தது. மேலும், “இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், ஆய்வு செய்து ஒப்புதல் வழங்காமல் இருக்கும் உரிமை எனக்குள்ளது. அப்படிச் செய்தால் அரசாங்கத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொள்க!” என்று இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் வேறு பிரதமர் நேருவுக்கு மிரட்டல் கடிதம் எழுதியிருந்தார்.

குடிமக்களாகப் பெண்களைக் கருதி, ஆண்களுக்கு உரிய உரிமைகளை பெண்களுக்கும் உறுதிசெய்வதில் அரசுகளுக்கு இருக்கும் அக்கறை இருக்கிறதே! வாழ்க ஜனநாயகம்! நிற்க…

மீண்டும் இந்து சட்ட மசோதாவிற்குத் திரும்புவோம். இந்த மசோதாவின் ஒரு சில அம்சங்களை எடுத்துக்கொண்டு, இந்து திருமண சட்டம் 1955, இந்து வாரிசுரிமை சட்டம் 1956 போன்றவை வந்தன. 1956 வாரிசுரிமை சட்டப்படி பூர்வீக சொத்தல்லாத தனிப்பட்ட சம்பாத்திய சொத்துகளில் மனைவி, மகள்களுக்கு உரிமை உண்டு, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம-உரிமை கிடையாது.

உதாரணத்திற்கு, ஒரு ஆணிற்கு 60 ஏக்கர் பூர்வீக சொத்து இருக்கிறது, என்றும், அவருக்கு S1, S2 என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள் என்றும் கொள்வோம். 1956 இந்து வாரிசுரிமை சட்டப்படி 60 ஏக்கர் பூர்வீக சொத்தில், தந்தைக்கு 20 ஏக்கர், S1 மகனுக்கு 20 ஏக்கர், S2 மகனுக்கு 20 ஏக்கர் என்று பிரிக்கப்படும். S1 ஆண் வாரிசுக்கு, ஒரு தாய், மனைவி, ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள் எனக் கொள்வோம். 1956 சட்டப்படி, S1 மகனுக்கு சேர்ந்த 20 ஏக்கர் 10+2.5+2.5+2.5+2.5 என 5 பாகங்களாகப் பிரிக்கப்படும். S1க்கு 10 ஏக்கர்கள் சேரும். மற்ற நான்கு பேருக்கு ஆளுக்கு 2.5 ஏக்கர்கள் வரும். S1 மறைந்தபிறகு S1னுடைய பங்கான 10 ஏக்கர் அவருடைய மகனுக்கு மட்டுமே போகும். இது எவ்வளவு பெரிய பாரபட்சம்?

இந்த பாரபட்சம் 2005 வரை தொடர்ந்தது. இறுதியாக, 2005 சட்டதிருத்தம் பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் சம-உரிமை உள்ளது என்றது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் இருக்கும் பாலின பாரபட்சத்தை நீக்க 2005 ஆம் ஆண்டுவரை இந்தியப் பெண்கள் ஜனநாயக நாட்டில் காத்திருக்க வேண்டும். 49 ஆண்டுகள்! ‘கணவனே கண்கண்ட தெய்வம். மணாளனே மங்கையின் பாக்கியம். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என விதிக்கப்பட்ட ‘குடிமக்களாக’ப் பெண்கள் இருக்கிறார்கள். பிறப்பில் இருந்து இறப்பு வரை குடும்ப ஆண்களைச் சார்ந்து, இவர்கள் அண்டிப் பிழைக்க வேண்டும். இவ்வளவு ஒடுக்குமுறையை சந்திக்கும் இந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை எவ்வளவு முக்கியம்? ஆனால், ஒரு அரசாக, இந்திய அரசிற்கு இந்தியப் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையும், முனைப்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சமூகமும் எந்தளவுக்கு பெண்ணுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

2005 சட்டத்திருத்தத்திற்கு முன்பே தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்தன. தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமானது, ‘பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்குண்டு என்றாலும், 26.03.1989-க்கு முன்பு திருமணமான பெண்களுக்கு அது பொருந்தாது’ எனக் கூறியது.

2005 சட்டதிருத்தத்திற்கும் ஒரு முட்டுக்கட்டை வந்தது. ‘9.9.2009 க்கு முன்பு மரணித்த தந்தையர்கள், அவர்களின் மகள்களுக்கு இது பொருந்தாது’ என ஒரு வழக்கில் (பிரகாஷ் எதிர் புலாவதி) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ‘அப்படி இல்லை, ஒரு பெண் குடும்பத்தில் பிறந்துவிட்டால், பிறப்பின் மூலமாகவே சொத்தில் அவர் பங்குதாரராக ஆகிறார்’ என உச்சநீதிமன்ற அமர்வு 2020 ஆகஸ்டில் தீர்ப்பு வழங்கியது.

பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என சட்டம் சொன்னாலும் நடைமுறை என்னவாக இருக்கிறது? சொத்தில் பெண்கள் பங்கு கேட்டால் அவ்வளவுதான்! பிறந்த வீட்டில் சகோதரர்கள், தாய் தந்தையரின் பகைமைக்குப் பெண்கள் ஆளாகிவிடுகிறார்கள். ‘வரதட்சணை, அதிக பணம் செலவழித்து திருமணம் செய்து கொடுப்பதால், பெண்களுக்கு சொத்தில் பங்கு தர முடியாது’ என பெண்ணின் ‘பிறந்த’ வீட்டுக் குடும்பம் மறுக்கிறது. நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை பணம் செலவழித்து நடத்தும் தெம்பும், வாய்ப்புகளும் பெண்களுக்கு இல்லை.

எனவே, “…தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி…உனக்கு தங்கக்கொலுசு கொண்டு வாராண்டி…” எனப் பாடல்பெற்ற பெண்கள் எல்லாம் சொத்தில் பங்குகேட்டால் அருங்காட்சியாக கதாப்பாத்திரங்களாக மாறிவிடுகிறார்கள்.

தொடரும்…

ஆதாரங்கள்:

Women and law in colonial India: a social history, Janaki Nair, 1996, Kali for Women.

Dr. Babasaheb Ambedkar Writings and Speeches, Volume 3, Volume 14, Part 1

South Asia Research, Vol. 12, No.2, November 1992, The Age of Consent Act (1891)

Reconsidered: Women’s Perspectives and Participation in the Child-Marriage Controversy in India, Padma Anagol-McGinn

Clash between President Dr Prasad and PM Nehru over Hindu Code Bill most serious, India Today, Feb 28, 1987

Meet the Abrahams: Colonial Law and a Mixed-Race Family from Bellary, South India, 1810-63, Chandra Mallampalli, Modern Asian Studies, Vol. 42, No. 5 (Sep., 2008)

Escaping the Grip of Personal Law in Colonial India: Proving Custom, Negotiating Hinduness, Chandra Mallampalli, Law and History Review, Vol. 28, No. 4 (November 2010)

Author’s References from a lecture by Dr. Bina Agarwal, Director, Institute of Economic Growth on Gender and Land Rights, at a National Consultation on Women Farmers organised by Initiatives: Women In Development, 8th Sep 2010, New Delhi.

சட்டமும் துணை: குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு, வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா, இந்து தமிழ் திசை, 30 ஆகஸ்ட், 2020

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான்...

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற அழகு! எந்த ஒரு மனிதனும் இவ்வுலகத்தை அழகாக்கியதில்லை; மாறாக.... அசிங்கப்படுத்தியே வந்தான், வருகிறான்; வருவான்? அந்த அசிங்கப் படுத்தல் வேறொன்றும் இல்லை; சாதி செய்து.... சமயம் செய்து.... சாக்கடையாய் ஓட விட்டதுதான்! ******** ... கவிஞர் பாங்கைத் தமிழன்...  

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்;...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here