குடிமக்களாகப் பெண்களின் போராட்டம்
இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் திரளாகப் பங்குபெற்றது என்பது இன்றைக்கும் உலகளவில் சமூகவியல் ஆராய்ச்சிக்குரிய அம்சமாகவே திகழ்கிறது.
1885 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் பெறுகிறது. 1889 முதலே காங்கிரஸின் வருடாந்திர அமர்வுகளில் பெண்களின் பங்கேற்பைக் காண முடிந்தது. சுதேசி இயக்க காலத்தில் (1905-08) பெண்கள் முதன்முறையாகத் திரளாக விடுதலைப் போராட்டத்திற்குள் நுழைகிறார்கள். அடுத்து ஒத்துழையாமை இயக்கம் (1920-22), சட்டமறுப்பு இயக்கம் (1930-34), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) என சுதந்திரப் போராட்டத்தில் படிப்படியாகப் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
முதல் உலகப்போருக்குப் பிறகு, கிலாஃபத் இயக்கத்தில் (1919-22) தீவிரமாக ஈடுபட்ட இஸ்லாமிய சமூகத்துப் பெண்களும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு மிக்கவர்களாக இந்திய விடுதலைப் போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்றார்கள்.
[முதல் உலகப்போரில் தோற்கடிப்பட்ட துருக்கி ஆட்டோமான் பேரரசின் பகுதிகள் லீக் ஆஃப் நேஷன்ஸ் (ஐ.நாவிற்கு முந்தைய அமைப்பு) கட்டளையால் பிரிக்கப்பட்டது. ஆட்டோமான் அரசர்களான கலிஃபாக்கள் சன்னி பிரிவு இஸ்லாமியர்களால் இஸ்லாமிய ஆட்சியின் பிரதிநிதிகளாக, இஸ்லாத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்பட்டார்கள். எனவே, துருக்கி ஆட்டோமான் கலிஃபகத்தை (Caliphate) மீண்டும் நிறுவும் நோக்கத்தில் இந்தியாவில் கிலாஃபத் இயக்கம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் 1905 வங்கப் பிரிவினையை ஒட்டி உருவாக்கப்பட்ட இந்து, இஸ்லாமிய மதமோதல்களால், மதப்பிளவு கூர்மையடைந்து கொண்டிருந்த சூழலில், கிலாஃபத் இயக்கத்தின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வினால் இஸ்லாமியர்கள் காங்கிரஸ் தலைமையிலான இந்திய விடுதலை இயக்கத்தில் பங்குபெற்றார்கள்]
‘இந்திய தேசியமே விடுதலை வழங்கிடும்’
இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் பொதுவாகவே அர்ப்பணிப்பு உணர்வு மிக்கப் போராளிகளாக செயல்பட்டார்கள். ‘சாதி, மத முறைகள் பெண்கள் மீது ஏவிவந்த தீங்குகளை எல்லாம், இந்திய தேசிய உணர்வைத் தழுவி புதிதாக இந்திய மக்கள் கூட்டாக உருவாக்கப்போகும் புதிய ஜனநாயக அமைப்பு தவிடுபொடியாக்கிவிடும்’ என்ற நம்பிக்கையை இவர்கள் கொண்டிருந்தார்கள்.
காங்கிரஸுக்குள் கணிசமான இந்து தலைவர்களும், பொதுவாக இஸ்லாமியத் தலைவர்களும் மதத்திற்குள் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதை ஏற்காத மனநிலையில்தான் இருந்தார்கள். என்றாலும், பெண்கள் பொதுத்தளத்திற்கு, குறிப்பாகப் போராட்டத்தளத்திற்கு வந்த பின்னணியில், ‘நாங்களும் சீர்திருத்தப் பார்வையில் நாட்டம் கொண்டவர்களே!’ எனக் காலப்போக்கில் தங்களை நிறுவிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
இந்தியாவிற்குள் சீர்திருத்தவாதிகள், பெண்கள் இயக்கங்கள், தேசிய இயக்கத்திற்குள் இருந்த பெண்கள் தந்த அழுத்தம் ஒரு பக்கம். இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த, ‘இந்தியர்களுக்கு ஆளவே தெரியாது’ என்ற மோசமான விமர்சனம் தந்த அழுத்தம் இன்னொரு பக்கம். எனவே, முற்போக்கை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். 1925 ஆம் ஆண்டில் சரோஜினி நாயுடு இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்வானார். இந்திய சமூகத்தில் பெண்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், ‘அரசியல் உரிமைகள் பெற்றவர்களாகப் பெண்கள் மலர வேண்டும்!’ என்ற பார்வை பொதுவாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
1920 தொடங்கி இந்திய மாகாணங்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின என்பதைப் (சில அத்தியாங்களுக்கு முன்பு) பார்த்தோம். (சொத்துடையவர்கள், கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). தேர்தல்களில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர் ஆவதற்கான அனுமதி பெண்களுக்கு வழங்கப்பட்டது 1926-க்குப் பிறகுதான். இது குறித்த கோரிக்கைகளை சிம்லாவில் மட்டிமன் (Muddiman) சீர்திருத்த விசாரணை கமிட்டி முன்பாக பெண்கள் முன்வைத்தார்கள்.
விளைவாக, 1926-ல் கவர்னர் ஜெனரல் கவுன்சில் (Governor General in Council), ‘இனி தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர் தகுதியில் பால் அடிப்படையை நீக்கும் தீர்மானத்தை அவைகளிலும், கவுன்சில்களிலும் கொண்டுவரலாம்’ என்ற திருத்தத்தை தேர்தல் விதிகளில் கொண்டுவந்தது. மத்திய அவையைத் தொடர்ந்து பம்பாய் மாகாண கவுன்சில் அத்தகைய தீர்மானத்தை 1926-ல் கொண்டு வந்தது.
1927 ஆம் ஆண்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மதறாஸ் மாகாண கவுன்சிலின் நியமன உறுப்பினராகத் தேர்வானார். 1926-ல் கமலாதேவி சட்டோபாத்தியாயா சென்னை மாகாண கவுன்சில் தேர்தலில் தெற்கு கனரா பகுதியிலிருந்து போட்டியிட்டார். இந்தியாவில் முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட பெண் இவரே. 50 ஓட்டுகள் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இவர் தோல்வியடைந்தார். (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா உள்ளிட்ட அமைப்புகளின் உருவாக்கத்தில் திருமிகு. கமலாதேவிக்குப் பங்கு உண்டு. 14 வயதில் திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகளில் ‘விதவை’ ஆனவர். சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரர் ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாயாவை மறுமணம் செய்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பரஸ்பரப் புரிதலோடு பிரிந்தார்கள்)
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வங்கப் பிரிவினை, முஸ்லீம் லீக்கின் தோற்றத்திற்குப் பிறகு, 1909 ஆம் ஆண்டில் இருந்து இஸ்லாமியர்களுக்கு சட்டமன்ற கவுன்சில்களில் இட-ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. பெண்களைப் பொறுத்தவரை நியமன முறை, தேர்தல் முறைகளின் மூலமாக பிரதிநிதியாகும் உரிமை வேண்டும் என்ற கருத்துதான் பரவலாக இருந்ததே ஒழிய, இட-ஒதுக்கீடு, தனித்தொகுதிகள் வழங்கி பெண்களின் பிரதிநிதுத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை காங்கிரஸ் இயக்கமும் சரி, பெண்கள் இயக்கத்தில் கணிசமான பகுதியினரும் சரி எதிர்க்கவே செய்தார்கள்.
‘தனித்தொகுதி முறை மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட-ஒதுக்கீடு வழங்கும்முறை இந்தியாவைப் பிளவுபடுத்தும் சூழ்ச்சி’ என்றே காங்கிரஸில் பெண்கள் உள்ளிட்ட பலரும் கருதினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அம்பேத்கர் முன்வைத்த யோசனைகளைப் புறந்தள்ளி, ‘இந்து மதத்தைப் பிளவுபடுத்த வந்தவர்’ என வசைபாடினார்கள். இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்ட சரோஜினி நாயுடு உள்ளிட்ட பிரதிநிதிகள், “எந்தவொரு முன்னுரிமையான கவனிப்பை எதிர்பார்ப்பதும், முழுமையான அரசியல் சமத்துவத்தினை அடைய வேண்டும் என்ற ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் நேர்மை உணர்வை மீறும் செயல்” என்று பதிவுசெய்தார்கள்.
இரண்டாம் வட்டமேஜை மாநாட்டிற்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் விருதின்படி (பிளவுவாத விருது என விமர்சிக்கப்படும் திட்டம்) தனித்தொகுதி இட-ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் (depressed Classes) இன்னும் சில சிறுபான்மை மதத்தினருக்கும், பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மாகாண கவுன்சில்களில் பெண்களுக்கு 2.5% இட-ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்புக்கான பணிகளைச் செய்வதற்காக ஹாமண்ட்ஸ் கமிட்டி 1924-ல் நியமிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த 1937 தேர்தலில் 56 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களுக்குச் சென்றார்கள். இவர்களில் 10 பேர் பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், 5 பேர் நியமன உறுப்பினர்கள். மீதம் பெண் உறுப்பினர்கள் தனித்தொகுதிகளில் இருந்து தேர்வாகிச் சென்றார்கள். இந்த மகளிர் தொகுதிகளில் ஒன்றைத் தவிர எல்லாமே நகரப் பகுதிகளில் இருந்தன என ஆய்வாளர் ஜானகி நாயர் தனது நூலில் பதிவு செய்கிறார்.
பெண்களுக்கான இட-ஒதுக்கீட்டை இந்திய தேசிய இயக்கத்தின் பெண் பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
இந்தியாவின் அரசியல்சானத்தை உருவாக்கி நிறைவேற்றும் பொறுப்பு கொண்ட இந்திய அரசியல்சாசன நிர்ணய சபையில் மொத்தம் 15 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களில் தாட்சாயனி வேலாயுதன் கேரளத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். பெரும் போராட்டங்களை சந்தித்து பட்டப்படிப்பு முடித்து, சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர். பெண்களின், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களின் அரசியல் பிரவேசத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர், “இட-ஒதுக்கீடு முறையை நான் பொதுவாக எதிர்க்கிறேன்” என்றே அரசியல்-சாசன சபையில் பதிவுசெய்திருக்கிறார்.
“பட்டியல் சாதியினர், அல்லது ஹரிஜனங்கள் அல்லது இப்படி ஏதாவது ஒரு பெயரில் அழைக்கப்படும் மக்கள், மற்ற மக்களின் பொருளாதார அடிமைகளாக இருக்கும்வரை, தனித்தொகுதிகளையோ (Separate electorates), கூட்டுத்தொகுதிகளையோ (Joint electorates), சதவிகிதத்தின் அடிப்படையில் எந்த வகையான தொகுதிகளைக் கோரினாலும், அதில் எந்தப் பொருளும் இல்லை. தனிப்பட்ட ரீதியில், நான் எந்தவொரு இட-ஒதுக்கீட்டையும் ஆதாரிக்கவில்லை….
… பிரிட்டிஷ் ஏதாதிபத்தியத்தியம் நம்மிடம் ஏற்படுத்தி இருக்கிற சில வடுக்களால் நாம் ஒருவரை ஒருவர் பார்த்து அஞ்சுகிறோம்…
… ஹரிஜன மக்கள் மற்ற சமூகத்தினரிடம் இருந்து தனித்து நிற்பதன் மூலமாகத் தங்கள் சமூகத்தை முன்னேற்ற முடியும் எனக் கருதினால், அவர்கள் கருத்து தவறு…
…இவ்வகையான தொகுதி முறையால் ஹரிஜன மக்களுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை. எனவே, இந்தத் திருத்தத்தை நான் எதிர்க்கிறேன்…” என தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட-ஒதுக்கீட்டுக்கு எதிராக வாதிட்டார்.
மற்றொரு பெண் உறுப்பினர் ரேணுகா ரே. வங்கத்தைச் சேர்ந்தவர். 18 ஜூலை 1947 அன்று ஆற்றிய உரையில், ‘1935 இந்திய அரசுச் சட்டத்திற்கு முன்னரே பெண்கள் இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்த்தோம்’ எனக் குறிப்பிட்டார்.
“கூட்டுப் பாராளுமன்றக் குழுவின் முன்னால், எங்கள் பிரதிநிதிகள் (அகில இந்திய பெண்கள் மாநாடு-All India Women’s Conference அமைப்பின் பிரதிநிதிகள்) ஒற்றைக் குரலில், எங்களுக்கு இட-ஒதுக்கீடு வேண்டாம் எனக் கூறினோம். எங்கள் போராட்டங்களைத் தாண்டி, எங்கள் விருப்பங்களுக்கு எதிராக, 1935 சட்டத்தில் பெண்களுக்கு இட-ஒதுக்கீடு கொண்டு வரபட்டது” என ஆதங்கப்பட்டார்.
“தேசிய இயக்கத்தில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என மகாத்மா காந்தி பெண்களுக்குக் குறிப்பாக அறைகூவல் விடுத்தபோது, நூற்றாண்டு கால சமூகக் கட்டுகள் உடைந்தன. இந்தியாவை விடுதலைக்கு அருகில் கொண்டு வந்து சேர்த்திருக்கிற இந்த மாமனிதருக்கு, இந்த நாட்டின் பெண்களுடைய நன்றியுணர்வை தெரிவித்திட வார்த்தைகளே இல்லை” என்று திருமிகு. ரேணுகா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
ரேணுகா ரேயின் வாதத்தில் இருந்து ஒன்றை உணர முடிகிறது. ‘இந்திய தேசிய இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு என்பதே அடிமை விலங்கொடிக்கப் போதுமானது! சுதந்திரத்திற்குப் பிறகு பெண்களுக்கென எந்தவித சிறப்பு சலுகைகளும் தேவையில்லை! இயற்கையான முறையில், பெண்கள் தங்கள் கடின உழைப்பாலும், திறமைகளாலும் தங்களுக்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவார்கள்!’ – இதுதான் பொதுவாக அன்றைக்கு சமூகத்தில் செல்வாக்கு செலுத்திய பெண் பிரதிநிதிகளின் பார்வையாக இருந்திருக்கிறது.
சமத்துவம் இல்லா உலகில் சமத்துவம் எனும் விதி
சமத்துவம் இல்லாத ஒரு உலகம். அதில் பாலின அடிப்படையில் கடுமையாக பேதம் பார்க்கப்படுகிறது. என்றாலும், ‘வாய்ப்புகளை உருவாக்குவதில், ‘சமத்துவம்’ தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்!’ என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.
‘சமத்துவமான வாய்ப்புகள்’ என்ற பாசாங்கை ஒடுக்கப்பட்ட சமூகத்தின்முன் வைப்பது எவ்வளவு பெரிய அபத்தம்? இந்தச் சிந்தனை எவ்வளவு தவறானது?! அவ்வளவு தடைகளை வைத்துக்கொண்டு பெண்களால், ஆண்களுடன் சரிசமாகப் போட்டிப்போட்டு எப்படி அரசியல் பொதுத்தளத்திற்கு சுயம்புவாக வர முடியும்? இந்தச் சமூகமும், குடும்ப அமைப்பும் பெண்களை அனுமதிக்குமா? இந்த அடிப்படைப் புரிதல் அந்தக் காலத்தில் இல்லை.
ஒட்டுரிமை, பெண்களின் பிரதிநித்துவம் குறித்த விவகாரங்களில், ‘பெண்களாகிய நாங்கள் தாய்மார்களாக சமூகத்திற்கு நிறைய பங்களிப்புகளைச் செய்கிறோம். வீடுகளில் பராமரிப்புப் பணிகளை நாங்கள்தான் பார்க்கிறோம். குழந்தைகள் வளர்ப்பில், நலனில் எங்களால்தான் நிறைய அக்கறை செலுத்த முடியும். பெண்கள், குழந்தைகள் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவது அவசியம் என்பதால், அரசியல் களத்தில் எங்கள் சேவை அவசியமாகிறது, எங்கள் அரசியல் பணியால் நாடு அனுகூலம் அடையும். அதனால் நாட்டைக் கட்டமைக்கும் பணியில் நாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற பார்வையையே பெண்கள் பிரதானமாக முன்வைத்தார்கள்.
‘புராதண காலத்திலிருந்து சுமந்துவரும் சேவகம், தாய்மை பிம்பத்தைக் கடந்து, ‘பெண்களும் மனிதர்கள், குடிமக்கள்’ என்ற பார்வையெல்லாம் பிற்காலத்தில்தான் தோற்றம் பெற்று, வலுப்பெறுகிறது. சர்வதேச அளவில் சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் இந்தப் புரிதலைப் பெற்றிருந்தார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டின் பெரியாருடைய பெண்ணுரிமை குறித்த சிந்தனைகளுக்கு ஈடுஇணையே இல்லை எனலாம். அந்தளவுக்கு அவருடைய சிந்தனைகள் புரட்சிகரமானவை. அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் பெரியார் அளவிற்குப் பெண்களின் சமூக ஒடுக்குமுறை குறித்து தனிநபர்களோ, இயக்கங்களோ தயக்கமின்றி வெளிப்படையாக விவாதிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
பெண் ஏன் அடிமையானாள்? தொகுப்பில் முதல் கட்டுரையான கற்பில் சொல்கிறார்:
“இந்த விஷயத்தில் (பெண்ணுரிமை விஷயத்தில்) உலகத்தில் ரஷ்யா தவிர, வேறு நாடோ, வேறு மதமோ, வேறு சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. உதாரணமாக அய்ரோப்பிய தேசத்தில் பெண்களுக்குப் பலவித சுதந்திரங்கள் இருப்பதுபோல் காணப்பட்டாலும் புருஷன் பெண் சாதி என்பதற்காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வுக் கருத்துக்கள் நுழைக்கப்பட்டிருப்பதுடன், சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்கவேண்டியதாகவே ஏற்பட்டிருக்கின்றன.
மற்றும் சில சமூகங்களில் பர்தா என்றும், கோஷா என்றும், திரை என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்கவேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போகவேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும், புருஷன் பல பெண்களை மணக்கலாம்; பெண்கள் ஏககாலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக்கொண்டு வாழக்கூடாது என்ற கொள்கையும், நம் நாட்டில் ஒரு தடவை புருஷன் பெண்சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அந்தப் பெண்ணுக்கு சாகும்வரைக்கும் வேறு எந்தவித சுதந்திரமும் இல்லையென்றும், புருஷன் அப்பெண்ணின் முன்பாகவே பல பெண்களை கட்டிக்கொண்டு கூடி வாழலாம் என்றும், புருஷன் தன் மனைவியை தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு அவளுடன் ஒன்றித்து வாழாமலிருந்தும்கூட மனைவி புருஷனைச் சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமேயொழிய, இன்பத்திற்கோ, இச்சையைத் தீர்ப்பதற்கோ அவனைக் கட்டுப்படுத்த உரிமை இல்லை என்று கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.
கற்புக்காக கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனோடு இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்…”
“மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால் ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால் ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால் பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது”.
1930-களில் இந்தளவுக்கு பெண்ணுரிமை தளத்தில் பெரியார் பேசினார் என்பது புரட்சிகரமானது அல்ல; அதிபுரட்சிகரமானது.
பெரியார் சிந்தனைகள் முழுவதிலும் நிரம்பியிருக்கு பெண்ணுரிமை, பெண் விடுதலை, பாலின சமத்துவ சிந்தனைகளின் முக்கியத்துவம், தனித்துவம் குறித்து எழுதிக்கொண்டே போகலாம். பல தொகுப்புகளுக்கு நீளும்.
தொடரும்…
ஆதாரங்கள்:
Women and law in colonial India: a social history, Janaki Nair, 1996, Kali for Women.
ஆதாரங்கள்: Reserved seats—women and the vote in Bombay, Gail Pearson, University of New South Wales, Kensington, Australia
பெண் ஏன் அடிமையானாள், தந்தை பெரியார்

