பெண்குயின் சினிமா விமர்சனம் – இரா.முருகவேள்

பெண் குயின் படத்தை போதுமான அளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்டாகி் விட்டது. இருந்த போதும் திரில்லர் என்ற வகைமையைப் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் புரிதல் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.
திரில்லர் படங்களின் அடிப்படை அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற பதைப்புடன் சீட் நுனியில் பார்வையாளர்களை உட்கார வைப்பதாகும்.  பெண் குயின் படம் என்ன செய்கிறதென்றால் அடுத்து அருவருப்பூட்டும் வண்ணம்  எதைக் காட்டிவிடுவார்களோ என்று சங்கடத்துடன் உட்கார வைக்கிறது.
குழந்தையைக் கொல்வது, வதைப்பதைப் பற்றிப் பேசுவது, மனித உறுப்புகளில் புழுக்கள் நெளிவது என்று எரிச்சலூட்டும் காட்சிகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. அவை இன்றியமையாதவையும் அல்ல. பார்வையாளருக்கு உண்மையைக் காட்டுவது என்ற நோக்கத்தில் காட்டப்படுபவையும் அல்ல. உணர்வுகளையும், இரக்கத்தையும், பதட்டத்தையும் தூண்டும் மலிவான உத்தியாகவே இந்தக் காட்சிகள் வருகின்றன.
ஏன் மலிவான உத்தி என்கிறேன் என்றால் இயக்குநருக்கு அவ்வளவு அக்கறை இருந்திருந்தால் உடலுறுப்பு திருட்டின் பலவேறு பரிமாணங்களைக் காட்டியிருப்பார். ஆனால் அந்த இண்டஸ்ட்ரி பற்றி படத்தில் எதுவுமே வருவதில்லை. உடலுறுப்பு திருட்டில் ஈடுபடும் டாக்டர் ஏதோ கசாப்புக் கடைக்காரர் போல மர முட்டியை வைத்து வெட்டிக் கொண்டிருக்கிறார். அவரை சைக்கோவைப் போல வேறு காட்டுகிறார்கள். பணத்துக்காக திட்டமிட்டு இயங்கும் ஒருவர் எப்படி சைக்கோ ஆக முடியும்?
ஒரு சிறுகுழந்தையை இரண்டு வயதிலிருந்து ஒரு இளம்பெண்ணால் காட்டுக்குள் இருக்கும் குழியில் அடைத்து வைத்திருக்க முடியுமா? அப்படி வைத்திருந்தால் அது அந்தக் குழந்தை மற்றும் அடைத்து வைத்திருப்பவர் மீது என்னென்னவிதமான மோசமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்? குழந்தையின் உடலில் இருக்கும் காயங்கள் பதைப்பைத் தூண்டும் வண்ணம் திரும்பத் திரும்பக் காட்டப் படுகின்றன.
திரில்லர் படங்களில் திகிலூட்டும் காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப தன்னை நெருக்கடியான சூழலில் வைத்துக் கொள்வது திகில் என்பதை விட அபத்தம், மெண்டல்தனம் என்றே தோன்றுகிறது. பதட்டப் படுங்கள் பதட்டப் படுங்கள் என்று இயக்குநர் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு நம் பின்னால் நிற்பது போலிருக்கிறது. வலிந்து திணிக்கப் பட்ட சாடிசத் தனமான வசனங்களும், இது போன்ற காட்சிகளும் சீச்சீ என்றாகிவிடுகின்றன.
PenguinReview ``ஓ இதுதான் த்ரில்லரா... அப்ப ...
ஒரு படத்தின் தரம் என்பது ஐயோ அய்யோ என்று படம் முழுவதும் அலறிக் கொண்டே இருப்பது அல்ல. எல்லாப் படங்களிலும் நிதானமான, ஆழமான சில கணங்கள் வேண்டும். அவையே படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டித் தருகின்றன.  காட்சிகளை மனதில் வாங்கிக் கொள்ளவும் அசைபோடவும் வாய்ப்பளிக்கின்றன.
மனநோய்க்கூறு கொண்ட காட்சியமைப்பு பார்வையாளர்களிடம் ஒரு விலக்கத்தையே ஏற்படுத்தும்.
 குழந்தையை வதைப்பது, அதைப் பற்றிப் பேசுவது, குழந்தை வளர்ப்பு, ஒப்பிடுவது ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவற்றை திரில்லரிலேயே கூட ஆழமாகப் பேசலாம். ஆனால் அதற்கு வேலை செய்ய வேண்டும். உழைக்க வேண்டும். தன் கற்பனையும் அறிவும் எவ்வளவு தூரம் எட்டுகிறதோ அவ்வளவு தூரத்தில் நின்று கொண்டு படம் எடுத்தால் வெறும் புலம்பலாகத்தான் அமையும்.
வெளிநாட்டுப் படங்களைப் பார்த்துக் காப்பி அடித்தால், அதை நமது சூழலுக்குப் பொருத்திப் பார்க்கத் தவறினால் படத்தில் அபத்தம் மட்டுமே மிஞ்சும். பெருநகரஙக்ளின் அன்னியமான தன்மையே சைக்கோ கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. இந்தியா மிகத் தாமதமாகவே நகரமயமாக்கலுக்குள் நுழைந்திருக்கிறது. இங்கே கூட்டுக் குடும்பங்களும், நெருக்கமான கிராம சமூக அமைப்பும் ஒரு பஃப்பர் ஆக இதுவரை இருந்தன. இங்குள்ள சிக்கல் வேறுவிதமானது.
காதல், வீரம், பகைமை, குடும்பம் எல்லாவற்றையும் மலினமாக்கிய தமிழ் சினிமா உளவியல் சிக்கல்களையும் மலினமாக்க முயல்கிறது. ஆழ்ந்து சிந்திக்க முடியாத ஒரு வகை அற்பத்தனம் இது. ஒரு படம் இயக்க ஒருவர் பத்து வருடம் போராட வேண்டி இருக்கிறது. அப்படிப் போராடி வாய்ப்புப் பெறும் ஒருவர் இப்படியா படம் இயக்குவது?
 உடலுறுப்பு திருட்டு போன்றவற்றை காட்டியவிதம் உச்சகட்ட வெறுப்பை ஏற்படுத்துகிறது. சமூக உணர்வு, மெஜேஜ் சொல்வது ஆகியவற்றைப் போலியாகப் பயன்படுத்துவதும் ஒரு பேஷன் ஆகிவருகிறது.