பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும்
ஆசிரியர் : சிந்துஜா
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2021
மூன்றாம் பதிப்பு : மார்ச் 2024
பக்கம் : 144
விலை : ரூ.160
நூலைப் பெற : thamizbooks.com
வர்க்கம் சாதி மதம் நாகரீகம் பாலினம் என பல்வேறுபட்ட காரணிகளை உள்ளடக்கிய பண்புகளின் அடிப்படையில் வளர்த்தப்பெற்றது ஆடையின் நாகரீகம். அதிகாரத்தை காண்பிக்கவும் ஆக்கிரமிப்பை நிலை நாட்டவும் அந்தஸ்தை வெளிப்படுத்தவும் இன்று நாகரீகம் என்ற பெயரில் ஆடை பல்வேறு வித தோற்றத்தில் உலா வருகிறது.
பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் பெருகிவரும் இன்றைய சூழலில் ஆணாதிக்கம் அதிகரித்து வரும் காலகட்டத்தில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று பாரதி எழுச்சி கொண்டு பாடி நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் பெண்களுக்கான சமத்துவமும் சகோதரத்துவமும் கிடைக்காத காலகட்டத்தில் பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் நூல் கவனம் பெறுகிறது.
கணினி ஆசிரியராக பணியாற்றியவர் மென்பொருள் துறையில் திட்ட இணையாளராக பணியாற்றி வருபவர் தொடர்ந்து கட்டற்ற மென்பொருள் சமூகம் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் கவிதைகள் என பல்வேறு ஊடகங்களில் எழுதி வரும் சிந்துஜா அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்
பெண்கள் அணியும் ஆடையே ஆண்களின் இச்சைகளைத் தூண்டும் ஒன்றாக சித்தரிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் ஆணின் பாலியல் இச்சைகள் நிறைந்து கிடக்கும் இந்திய பொதுப்பத்தியில் பச்சிளம் குழந்தைகளும் வன்புணர்விற்கு ஆளாக்கப்படுகிறது குறித்தும் நூல் கேள்வி எழுப்புகிறது.
ஆதி மனிதன் பிறந்த போது ஆடை இல்லை. விலங்குகளுடன் விலங்குகளாக மரங்களில் தாவியும் குகைகளில் வாழ்ந்த போதும் உயிர் வாழ்ந்த மனிதனுக்கு தனது உடல் அமைப்பின் மீதான எவ்விதமான கவர்ச்சியும் ஏற்பட்டதில்லை. நதிகளின் போக்கில் மனிதன் நகர ஆரம்பிக்கையில் மனித குழுக்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தனர்
ஒரே குழுவாக இருந்த மனிதன் ஆடையின் அவசியத்தை உணரவில்லை. விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை உட்கொண்டவர்கள் கடும் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மிருகத்தின் தோலை உடுத்திக் கொண்டனர். இப்படியே உலகின் முதல் ஆடை உருவாகிறது
மனிதன் குழுக்களாக மாறி வெவ்வேறு பிரதேசங்களில் பயணம் செய்யும் சூழல் ஏற்படுகையில் தட்பவெட்பமும் காலச் சூழலும் அவனை வெவ்வேறு தொழில்கள் செய்ய நிர்பந்திக்கின்றன. அவன் செய்யும் பணியின் தன்மையை பொறுத்து அவன் உடுத்தும் ஆடையின் அழகும் வடிவமும் மாறத் துவங்கியது
ஆதியில் மனிதன் தன்னை யார் என்று உணரத் தொடங்கிய போது தனது உடல் உறுப்புகளை மறைக்க வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகிறான். சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஆடைகளை அணியத் துவங்கினர் என ஆய்வுகள் அறுதியிடுகின்றன.
ஆடை வடிவமைப்பு என்பது இன்று நாம் பயன்படுத்தும் துணிகளின் மூலம் துவங்கியது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது நார் மூங்கில் பாப்பரஸ் போன்ற செடிகளில் இருந்தும் மனிதன் முதன் முதலில் ஆடையை உருவாக்கத் தொடங்கி இருக்கிறான்.
ஆர்மேனியாவில் குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாவாடையே உலகில் முதல் ஆடையாக கருதப்படுகிறது. விலங்குகளின் தோல் மற்றும் தாவர பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆடையின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு இன்று பருத்தி தொடங்கி பல துணிகளுக்குள் வந்து நிற்கிறது.
ஆரியர்களின் வருகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய நாகரீகமும் சிந்து சமவெளி நாகரிகமும் ஆடையின் வரலாற்றை முழுமைப்படுத்தி விவரிக்கின்றன. உண்மையில் ஆடை என்பது மனிதனின் உடலை மறைப்பதற்கான ஒரு தகவமைப்பு எனலாம்.
பெண் ஆடை உடுத்துவதும் தவறு என்ற சூழலில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்ட வரலாறு தமது உரிமைகளைக்கூட போராடியும் உயிரை இழந்தும் பெற வேண்டிய நிலையில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தை விரித்துரைக்கிறது. உலகம் நாகரீகமடையத் தொடங்கியதிலிருந்து பெண்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் . பெண்கள் பூப்பெய்தவுடன் அரசாங்கம் அவர்களின் வீட்டின் வாசலில் நின்று பெண்ணின் மார்பின் அளவுக்கு ஏற்ப வரி வசூல் செய்தது இந்த முலை வரிச் சட்டம் என்பது உயர் குடி மக்களுக்கு தாழ்த்தப்பட்ட சமூகம் செய்யும் மரியாதை தரும் செயல் என்று அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரால் அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே திருவிதாங்கூரில் பெண்களுக்கு மார்பு வரி விதிக்கப்பட்டு ஒவ்வொரு பெண்ணின் மார்பகம் அளந்து எடுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் என விவேகானந்தர் குறிப்பிட்டதும் இதை அடிப்படையாக வைத்தே. 1813 முதல் 1850 வரை முலைவரிச் சட்டத்திற்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த போராட்டம் அதற்குப் பிறகு ரத்தாகிறது
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிக்குச் செல்லும் சூழலில் ஆண்களைப் போன்ற ஆடைகள் உடுத்துவது அவர்களுக்கு ஏற்ற உடையாக கருதப்படுகிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த பொதுப்புத்தியில் பெண்களின் உடை அமைப்பும் அலங்காரமும் தனி கவனம் பெறத் துங்குகின்றன. காலம் காலமாக பெண்ணின் மீது ஆண்கள் செலுத்தும் அதிகாரமும் பெண்கள் என்பவர்கள் சந்ததியை விரிவாக்குவதற்கு உதவி செய்யும் ஒரு பொருள் என்ற அடிப்படையிலும் அவர்களை போகப் பொருளாக பார்க்கும் சமூகத்திலும் பெண்கள் ஆடை அணிவதன் கட்டுப்பாடுகளை ஆண்கள் விதிக்க துவங்குகின்றனர்
உடை என்பதன் ஒற்றைச் சொல்லுக்குள் சாதிக் கொடுமைகளும் இனப்பாகுபாடுகளும் பொருளாதார அடிமைத்தனமும் இணைநது பெண்களை மேலும் கொடுமைக்குள் தள்ளுகின்றன.
எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதையும் எத்தகு ஆடைகள் அணியக்கூடாது என்பதையும் பெண்ணுக்கு நிர்ணயம் செய்யும் கடமையை ஆணே எடுத்துக் கொள்கிறான். குடும்பம் என்ற பெயரில் பெண்ணுக்கு வழங்கப்படும் பொறுப்புகள் மிக அதிகம். அதே வேளையில் தனக்கான சுதந்திரத்தை பெண்கள் எந்த விதத்திலும் அடைந்து விடக் கூடாது என்பதில் ஆணாதிக்க சமூகம் மிகுந்த அக்கறையுடனும் கவனிப்புடனும் பெண்களை கண்காணிக்கிறது. அந்த அடிப்படையிலேயே பெண்களின் ஆடை வடிவமைப்பையும் ஆண்களை எடுத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.
தங்களின் வசதிக்காகவும் தங்களின் பனிச் சூழலுக்கு தக்க விதத்திலும் ஆடையை உடுத்துவது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்று. இதில் அவரவர் முடிவுகளை அவரவர்களே எடுக்க வேண்டும் . ஆனால் பெண்களுக்கு அத்தகு சுதந்திரமும் வழங்கப்படுவதில்லை
எது எப்படி இருப்பினும் நாகரீக வளர்ச்சி நமது கையில் ஆடைகளைத் தந்துள்ளது. சமூக வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் பல கோட்பாடுகளை பிரசவிக்கிறது. கோட்பாடுகள் மதத்தையும் அவற்றின் பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் பிரசவிக்கின்றன. மதம் இனம் என பல்வேறு அடையாளங்களையும் கட்டுப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆடை மற்றொரு தளத்திற்கு சென்றது. அது மதம் இனம் சாதி பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு இட்டுச் செல்கிறது. சக மனிதரை ஒடுக்க நினைக்கும் எதுவும் முன்னோக்கிய சமூகத்தை உருவாக்காது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதுவே மனித சமூகத்தை பாகுபடுத்தும் கருத்தியல்களை முறியடிப்பதற்கான நோக்கங்களை ஒவ்வொருவருக்குள்ளும் விதைக்கும் என்பது இந்த நூலின் வழியே உணரக் கிடைக்கிறது.
நூலில் மனித நாகரீக வளர்ச்சியில் ஆடைகளின் வரலாறு என்ற தலைப்பில் தொடங்கி பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானது அல்ல ஆடை அவமதிப்பதற்கானதல்ல என்று முடியும் கட்டுரை வழியாக 15 தலைப்புகளான தொகுப்புகள் பெண்களின் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் வரலாற்றையும் அரசியலையும் விளக்கமாக வாசித்து அறியத் தருகிறது.
உலகில் நாகரீகம் அடைந்து விட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கும் விளம்பரப்படுத்தும் நபராக பெண்கள் முன்னிறுத்தப்படுகின்றனர் பெண்களை முன்னிறுத்தியும் அவர்களின் அழகை வெளிப்படுத்தியும் அவர்கள் அணியும் ஆடைகளின் வழியே ஆண்களின் மனதிற்குள் ஏற்படுத்தும் சலனத்தின் அடிப்படையிலும் செய்யப்படும் விளம்பரங்கள் இன்று உலக அளவில் நிறையப் பொருட்களை விற்பதற்கு உதவி செய்கின்றன. ஆனால் அதே சமயம் பெண்களின் மன உணர்வுகளை அத்தகு விளம்பரங்கள் எவ்விதம் புறம் தள்ளுகின்றன என்பதையும் நாம் அலசிப் பார்க்க வேண்டிய காலச் சூழலில் தள்ளப்படுகிறோம்.
புடவை கடந்து வந்த பாதை அது சார்ந்த போராட்டங்கள் பாவாடை என்பது பெண்களுக்கு உரிய உடையா என்பது குறித்தான விவாதங்கள் ரவிக்கை உருவான வரலாறு அதன் பின்னணியில் இருக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனம் என ஒவ்வொரு தலைப்பின் கீழான கட்டுரைகளும் நிறைய நூல்களை அலசி ஆராய்ந்தும் வரலாற்றின் பின்னணியிலும் முழுமையாக தகவல்களின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வடிவமைக்கப்படும் ஆடைகளின் அமைப்பும் ஆண்களின் ஆடைகளின் அமைப்பும் வேறுபட்டு இருப்பதன் நோக்கம் என்ன என்பது குறித்தான விவாதங்களும் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன.
காலம் காலமாக பெண்களுக்கு மறுக்கப்படும் ஒவ்வொரு உரிமையையும் பெண்கள் போராடியே பெற வேண்டிய காலகட்டத்தில் மணிப்பூரில் ராணுவ அமைப்பினர் ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமைகளுக்கு விடை காணும் பொருட்டு மணிப்பூர் பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதையும் நூல் அலசி ஆராய்கிறது காலம் காலமாக பெண்கள் தமது உரிமைகளுக்கு போராடுவதற்கு தம்மையே ஒப்படைக்க வேண்டிய சூழலில் தள்ளப்படுகின்றனர்.
பொது சமூகம் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கத் தவறுதலும் வழங்க மறுப்பதும் பெண்களின் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. ஆணின் பார்வையில் பெண் உடுத்தும் ஆடை தான் பிரச்சனை என்றால் சிறு வயது குழந்தைகளும் ஏன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற கட்டுரையாசிரியரின் வினா ஒவ்வொரு ஆண்களுக்கும் எழுப்பப்படும் அடிப்படை வினாவாக அமைகிறது.
பெண் அணியும் ஆடைகளிலோ அவள் நடந்து கொள்ளும் விதத்திலோ அவள் செய்யும் பணியிலோ ஆபாசம் என்பது இருப்பதில்லை அதை உற்றுப் பார்க்கும் ஆண்களின் பார்வையில் இருக்கிறது பெண்களின் மீதான சபலமும் கவர்ச்சியும் என்பதை நூல் வெகுவாக எடுத்து இயம்புகிறது. பெண்களை போகப் பொருளாகவும் பார்க்க வேண்டாம் பெண்களை கடவுள் நிலையிலும் வைத்து போற்ற வேண்டாம் அவர்களை சக மனுசியாக மதித்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கினாலே பெண்கள் நிம்மதியாக அவரவர் பணிகளில் சிறப்புற்று விளங்குவர் என்பதை நூல் கோரிக்கையாக வைக்கிறது.
எழுதியவர் :
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.