📖👖👗👚மனித பரிணாம வளர்ச்சியின் முக்கிய குறியீடு இன்று நாம் பயன்படுத்தும் ஆடை.
ஆதிகாலத்தில் மனிதன் உருவான காலத்தில், அவர்கள் வாழ்ந்த இடங்களின் தட்பவெப்பநிலையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளதற்கவே ஆடையானது உருவாக்கப்பட்டது.
📖👖👗👚அடுத்து நாகரீக வளர்ச்சி என்ற பெயரிலும், சாதி, மத, இன பாகுபாட்டின் அடிப்படையில் பாலின பாகுப்பாட்டை புகுத்தி, பெண்களின் ஆடை சுதந்திரத்தை பறித்ததோடு அவர்களையும் மூளைச் சலவை செய்து ஆணாதிக்க விருப்பம் போல ஆடையை அணிய வைத்திருக்கிறது இந்த சமூகம்.
📖👖👗👚அதிலும் குறிப்பாகப் பெண்கள் இன்று பயன்படுத்தி வரும் ஆடைகளுக்கு பின்னால் எவ்வளவு அரசியலும், வரலாற்று தகவலும் மறைந்திருக்கிறது என்பதை இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது ஆடைகள் குறித்த நம்முடைய எண்ணங்களில் தெளிவும் பெரும் மாற்றமும் உருவாகக் கூடும்.
📖👖👗👚இன்று நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆடையை மையமாக வைத்து பல மில்லயன் கணக்கில் லாபம் பார்க்கிறது மேலாதீக்க நாடுகள்.
📖👖👗👚நாகரீகம் என்ற பெயரில் நம்மையும் முட்டாளாக்கி, நம்மையே அறியாமல் ஒரு வித மாய வலைக்குள் சிக்க வைத்து, நம்முடைய தேவையை நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக நம் தேவை இது தான் என இந்த சமூகத்தின் விருப்பத்தை நம்மிடம் திணித்திருக்கிறது என்பது புத்தகம் வாசிக்கும் போது புரியும்.
📖👖👗👚வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி பெண்களுக்குப் பிரச்சனைகள் என்று வரும் போது தவறு செய்தவர்களை முதலில் கேள்வி கேட்பதை விடுத்து, பாதிப்பிற்குள்ளாகியது பெண் என்ற ஒரே காரணத்தினால் பெண்களை நோக்கி பாயும் தோட்டாக்கள் பல்லாயிரம். அதிலும் பெண்களை அவமானப்படுத்த அவர்கள் சுட்டிக்காட்டி பேசும் பொருளாக இருப்பதில் முக்கிய கருப்பொருளாக இருப்பது ஆடை என்பது வேதனைக்குரிய விஷயம் .
📖👖👗👚இந்நூலில் 15 தலைப்புகளில்
மனித நாகரீக வளர்ச்சியில் ஆடையின் தோற்றம், பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள் உருவான வரலாறு, தன் விருப்பம் போல ஆடையை அணிய முடியாமல் ஆணாதிக்க சமூகத்தின் பிடியிலிருந்து ஒவ்வொரு ஆடையயையும் அணிய பல பெண்கள் எவ்வளவு போராடி அதைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்?
📖👖👗👚ஒரு ஆணின் ஆடையை பெண் அணியும் பொழுது கம்பீரத்தின் அடையாளமாகவும், அதே பெண்ணின் ஆடையை ஆண் அணியும் பொழுது கேலிக்கூத்தாக, இழ்வானதாகச் சித்தரிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
📖👖👗👚இன்று உலகமே பார்த்து வியக்கும் பெருமை பீற்றிக் கொள்ளும் நாடான அமெரிக்கா, பெண்கள் பேண்ட் அணிவதையும், மீறினால் அபராதம் சிறை தண்டனை வழங்கியதோடு, பெண்கள் பேண்ட் அணிவதை சட்டவிரோதமான செயல் என்றெல்லாம் அறிவித்திருக்கிறது.
📖👖👗👚பெண்கள் அணியும் சட்டைகளில் பெரும்பாலும் பொத்தான்கள் இடது புறம் இருப்பதற்கான காரணம் என்ன?
தமிழ் சமூகத்தின் கலாச்சாரமாக கருதப்படும் புடவைக்கு பின் இருக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் நோக்கம் தெரியாமல் அதை தன் கலாசாரத்தின் அடையாளமாகவும், குடும்பத்தின் கவுரமாகவும் பின்பற்றி வரும் அப்பாவி பெண்களின் மூளைச் சலவையை குறித்தும் விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
📖👖👗👚லுங்கி அணிந்து வெளியே செல்லும் ஆண்களின் ஆடையை குறித்து மட்டும் கேள்வி கேட்காத சமூகம், பெண்கள் தங்களுடைய வசதிகேற்ப நைட்டி அணிந்து வீட்டு முற்றத்திற்கு வந்தால் அவளது ஒழுக்கத்தை குறித்து பேசும் அளவிற்கு அதிகாரம் தந்தது யார்?
📖👖👗👚சுட்டெரிக்கும் கோடை வெயிலில் ஆண்கள் மட்டும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை தேர்வு செய்ய சுதந்திரம் கொடுத்த இந்தச் சமூகம், பெண்ணுக்கு மட்டும் அவளுக்கு சௌகரிமான ஆடையை தேர்வு செய்து அணியும் சுதந்திரத்தை தடுப்பது ஏன்?
📖👖👗👚அழகு என்ற பெயரில் ஆடையின் வாயிலாக நடக்கும் அரசியல், பெண்களை அழகிப்போட்டி என்ற பெயரில் அவளை போகப் பொருளாகக் காட்டி, அவளைக் குறித்த பிம்பத்தை தவறாக பிரதிபலித்து கொண்டிருக்கிறது.
📖👖👗👚மாதவிடாய் சானிட்டரி நாப்கினின் வரலாற்று பக்கத்தை புரட்டும்போது, அக்காலத்தில் பெண்கள் இதை பெறுவதற்குக் கூடவா போராடி பெற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்று சகப் பெண்ணாக மனம் வேதனையில் சிக்கித் தவித்தது.
ஆசிரியர் எழுதிய கவிதையொன்று அனைவரையும் சிந்திக்க வைக்கும்.
மாதம் மாதம்
மாதவிடாய்
மங்கை இவள்
தீட்டானால்
மானுப் பிறப்பும்
தீட்டே…
மாதத்தில் வரும்
மூன்று நாட்களுக்கு
முற்றத்தை
மூடுபவனும்
மூடனே…
மாதம் மாதம்
முதுகுத்தண்டு
மூச்சிரைக்கிறது
உதிர்ந்த உதிரம்
உடுத்த துணி
கந்தலும் கிழிச்சலுமே
மங்கையின் உடல்
மாற்றம்
எப்படி
மனித நேயமற்றோருக்கு
தீட்டாகிறது தெரியவில்லை?
📖👖👗👚தொடர்ந்து திரைப்படங்களின் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகளை குறித்தும், அவர்களுக்கு புத்திப் புகட்டும் படியாக தன்னுடைய எழுத்துக்களால் சவுக்கடியும் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
பெண் உடல் அதிகாரம் செலுத்துவதற்கான பொருள் அல்ல. அவளது ஆடையும் அவமானப்படுத்துவதற்கான ஆயுதமும் அல்ல.
புத்தகத்தின் கடைசி பத்தியில்
📖❤இந்திய சமூகமே, பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவளது உடலைப் புனிதப்படுத்த வேண்டாம்.உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டு போய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும். இந்தப் புரிதலை எல்லோரிடத்திலும் விதைப்போம்!
என்று கூறி நிறைவு செய்கிறார்.
📖அனைவரும் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம். குறிப்பாக பெண்கள் படிக்கும் போது ஆடை குறித்த சரியான புரிதல் அவர்களுக்கு தெரிய வரும். அது அடுத்த தலைமுறையினரிடம் ஆடையைக் குறித்த தேவையை சரியாகக் கொண்டு போய் சேர்ப்பதற்கான வழிகாட்டியாகவும் அமையும்.
நூலின் விவரம்:
நூல் : பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் (Penkalin Aadai Varalarum Arasiyalum)
ஆசிரியர் : சிந்துஜா
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2021
மூன்றாம் பதிப்பு : மார்ச் 2024
பக்கம் : 144
விலை : ரூ.160
நூலைப் பெற : thamizbooks.com
நூல் அறிமுகம் எழுதியவர்:
இராஜதிலகம் பாலாஜி
எழுத்தாளர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.