“வம்பாமணல்” நாவல் – நூல் அறிமுகம்
‘ஒருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர் மேல்’
அந்த எக்கர் தான் வம்பாமணல். சூரியனும், நிலவும் மலைச்சிகரங்களும், புல்வெளிகளும், அருவிகளும்,ஆறுகளும், கடலும் வானும், ஒளிரும் நட்சத்திரங்களும், பறவைக் கூட்டங்களும் எல்லோருக்கும் பாரபட்சமின்றி மகிழ்ச்சி தருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் மனிதர்களை சந்தோசப்படுத்த எத்தனையோ பொருள்கள் இருந்தாலும் இந்த பூமி கொடுக்கும் இயற்கைக்கு எதுவும் ஈடாகாது? இவை விலையில்லாத சந்தோசங்கள். கடல் முத்து, கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி, கடல்புரத்தில், ஆழி சூழ் உலகு, கொற்கை, கடலும் கிழவனும், கடல், கடல் புறா………என கடல் சம்மந்தமான நாவல்களில் உப்புக்காற்றின் வாசனையோடு கடல்வாழ் உயிரினங்களின் வாசனையையும், ஈரமான மரத்தின் வாசனையையும் நாம் நுகர்கிறோம். ஒவ்வொரு நாவலும் நெய்தல் நிலப்பரப்பில் நின்று வெவ்வேறான கதைகளைப் படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வம்பாமணல்….உப்பும் மணலும் கலந்த ஒரு கதை. சோனாங்குப்பத்துக்கும் தேவனாம்பட்டினத்துக்கும் இடையே ஆயிரம் ஏக்கரில் பரந்து கிடக்கும் மணல்மேடுகள் வெறும் நிலமல்ல…அவை கரையோர அரண். தலைமுறைகளின் பாரம்பரியம், ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம்,
வம்பாமணல் நாவலை படைத்த பெண்ணியம் செல்வக்குமாரி புதுச்சேரியை சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தில் பிறந்த இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, ஆய்வு என எட்டு நூல்களை படைத்துள்ளார். திருநங்கையர், பெரியார், வள்ளலார் தொடர்பான ஆய்வுகளில் சிறந்து விளங்கும் இவருக்கு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. சமூக உணர்வுடன் சமூகப் பணிகள் பல செய்து வருபவர். மார்க்சியம் மற்றும் முற்போக்குச் சிந்தனை உடையவர். பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். புதுச்சேரி பெண்கள் கூட்டமைப்பின் தலைவராகவும், உலகப் பெண் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
நாவலில் வரும் செங்காந்தள் பிறந்து வளர்ந்த ஊர் சோனாங்குப்பம். அது ஓர் அழகிய மீனவக் கிராமம். சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, கோரி ஆகிய மூன்று ஊர்களையும் ஆறும், கடலும் சேர்ந்து வளைத்து நிற்கும். இம்மூன்று ஊர் மக்களும் மீன் விற்க வேண்டுமானாலும், பொருள் வாங்க வேண்டுமானாலும் ஆற்றைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஊர் மக்களின் வெளி உலகத்தோடு போக்குவரத்து சாதனமாக விளங்கியது தோணி.
குழந்தைகள் அந்தந்த சூழலில் வாழும் இடத்தின் இயற்கையை பயன்படுத்திக் கொண்டு தங்களை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்கிறார்கள்.புற உலகைப் பற்றிய எவ்வித விசாரணையுமின்றி தங்கள் உலகத்தை மட்டுமே அறிந்தவர்கள். அப்படிப்பட்ட குழந்தைகளிடம் இந்த சமூகம் காட்டும் தன்மை என்ன? ‘மூக்கைச் சுளிக்கும் முகங்கள், மீன்காரங்க தான்லே இப்படி… கவுச்சியோட வருங்க’ இப்படியான பேச்சுக்களை கேட்ட செங்காந்தள், ‘’வாசங்கள் உலகத்திற்கே உரியவை. பூக்காரிக்கு பூவாசம், குடிகாரனுக்கு குடிவாசம், கடைக்காரனுக்கு கடைவாசம், அப்படியென்றால் மீன்காரிக்கு மீன்வாசம் தவறா? எனக் கேட்கிறாள். ‘மீன்காரச்சி’ ஒரு வார்த்தை செங்குவுக்கு வானத்திலிருந்து விழுந்த எரிகல் போலவே பள்ளி வாழ்க்கையின் நடுவே அவள் மீது விழுகிறது.
கூட படிக்கும் மல்லித்தா செங்குவை வீட்டிற்குள் அழைக்காமல் திண்ணையில் உட்கார வைத்தது,தண்ணீரை அவள் பாட்டி கைப்படாமல் பழைய சொம்பில் கொடுத்தது. மல்லித்தாவிடம், அவள் பாட்டி கண்டதையெல்லாம் கூட்டிக் கொண்டு வராதன்னு சொல்வது, குச்சியால் புத்தக பையை தூக்கிக் கொடுத்தது. கள்ளம் கபடமற்ற அந்தக் குழந்தைகள் உள்ளத்தில் தீண்டாமை விஷம் ஏற்றினால் குழந்தைகள் எப்படித் தாங்குவார்கள் என்பதை கோபமாக நாவலில் பதிவு செய்திருக்கிறார்.
வயதுக்கு வந்த செங்குவை வீட்டில் நார் போன்ற பெட்டியில் படுக்கச் சொல்லி மூடி வைக்கிறார்கள். அதற்கு அவளுடைய அத்தை ஒரு கதை சொல்கிறார். பெட்டியில் இருந்த இளவரசி அந்த பெட்டியில் புகுந்த சிறிய வெளிச்சத்தின் மூலம் சூரியனை காதலித்தவள் பத்து குழந்தைகளை பெற்றாள் என்ற கதையைக் கேட்ட செங்காந்தலுக்கு எங்கே தனக்கும் சூரியனால் பிள்ளை வந்து விடுமோ என அஞ்சுகிறாள். அப்பா கடலுக்குப் போனவர் வெறுங்கையோடு வந்ததை கண்ட அம்மா , செங்குவை மூதேவி சடங்கான நேரம் சரியில்லை எனத் திட்டுவதும், மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் மூத்ததுக்கு பதினாறு வயது ஆகும்போதே இன்னும் கட்டிக் கொடுக்கலையா? எனக் கேட்கின்ற ஊர்மக்கள். அத்தகைய ஊரில் வாழ்ந்த செங்குவின் வீட்டில் அப்பா வயிறு முட்ட சோறில்லை என்றாலும், மனசு முட்ட அன்பையும், படிப்பதற்கு புத்தகங்களையும் கொடுத்தார். கதையில் அப்பாவின் அரவணைப்போடு அம்மாவின் அக்கறையான கண்டிப்புடன் வளர்கிறாள் செங்கு.
மீன் பிடிக்கச் செல்லும்போது அப்பாவை எடுத்துக் கொண்டது கடல். புயலில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் பிணமாக கண்டுபிடிக்கப் படுவதும், சிலர் கடலில் காணாமல் போவதும் நடந்தன. என்னதான் நடந்தாலும் இந்த கடலை விட்டால் அவர்களுக்கு வாழ்வேது . வாழ்வோ, சாவோ அவர்களின் வாழ்க்கை அந்த நெய்தல் நிலப்பகுதிதான் என்பதை அறிய முடிகிறது.
அங்கே திருவிழாக்கள் பத்து நாள்கள் நடைபெறும். அந்த நாளில் பகல் இரவாகும் இரவு காதலாகும். கூத்து, நாடகம், பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரி என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழா நிகழ்ச்சியை நாவலில் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கோலா மீன் காலம் வந்தவுடன் கட்டுமரக் கப்பல்களில் இறக்குமதியாகும் கொட்டாங்கச்சி தண்ணிக்கும், சம்பொட்டியிலிருந்து வரும் புளியோதரைக்கும் கோலா சீசனில் சூரியன் கொதிக்கும். கடற்கரையில் எங்குப் பார்த்தாலும் தோலை உரித்த மரவல்லிக் கிழங்கு போல கோலா மீன்கள் காய்ந்து கிடக்கும்.அவற்றின் வாசனை ஊரெங்கும் பரவி விழாக்கோலம் போல் காட்சியளித்தது என அங்குள்ள மக்கள் அந்த நிலத்துக்கேற்ற கலாச்சாரம், பண்பாட்டுடன் அவர்களின் வாழ்க்கை இருப்பதை பதிவு செய்கிறார்.
படகில் சென்று வலைபோட்டு மீன் பிடித்த காலங்களை விட, புதிய தொழில் நுட்பம் வந்த பிறகு தான் பெட்ரோல், டீசல் செலவு, மற்றும் சேதமடைந்ததை சீர்படுத்தும் செலவு என அங்குள்ள மீனவக் குடும்பம் மாளாத கடன் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாகக் கூறுகிறார். வீடு வறுமை இருளில் மறைந்தாலும் புத்தகத்தின் எழுத்துக்களில் செங்காந்தள் ஒளியாக மிளிர்ந்தாள். அவள் படித்த ‘மக்சிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும் கதாபாத்திரம் போல புரட்சிகரப் பெண்ணாகவே நாவலில் வலம் வருகிறாள் செங்காந்தள். அவள் கடல், அலை, மணல், மண்மேடுகள், சூரியன், காற்று…. என இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவள் .அதனோடு பேசி உருண்டு பிரண்டவள். ஆண்கள் மட்டுமே கூடுகின்ற பஞ்சாயத்தில் இவளும் கலந்து கொள்கிறாள். இதற்காக அண்ணனிடமும், அம்மாவிடமும் அடியும்,வசவும் வாங்கினாள். அண்ணனின் அடிக்குப் பயந்து தம்பி கபிலன் ஓடிப்போனவன், அதன் பிறகு அவன் நிழலைக்கூட காணவில்லை. இதுபோன்று நடக்கும் வீடுகளின் நிலையை அங்கே மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பெரும்பாலான வீடுகளின் நிலையை நினைவுப்படுத்துகிறது.
சுனாமியின் போது வம்பாமணல் மேடுகள் அவள் வீட்டை மட்டுமல்ல வீட்டிற்கு படிக்க வந்த பத்து குழந்தைகளையும் காப்பாற்றியது. மற்ற இடங்களைப் போல் இங்கு பெரிய அளவில் பாதிப்பில்லாமல் இருந்ததற்கு காரணம் இங்குள்ள வம்பாமணல் மேடுகள் தான் என்கிறார் எழுத்தாளர். அரசு வம்பாமணலில் சவுக்கு மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது, செங்காந்தள் அங்குள்ள மணல்மேடுகளின் நன்மைகளை ஊர் கூட்டத்தில் விளக்கினாள். அந்த ஊரிலுள்ள மக்களுக்கு அவள் சொல்வது சரியென்று ஏற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு அங்கே மரம் நடும் வேலை கிடைப்பதிலிருந்து விலகி வர முடியவில்லை. அங்கே சவுக்கு மரங்கள் நடக்கூடாது வம்பாமணல் மேடுகளை பாதுகாக்கணும் என்று செங்காந்தள் வம்பாமணலில் படுத்துக் கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டு தனியாக போராடுகிறாள். ஒவ்வொரு நாளும் குடும்பத்தாரும், நண்பர் உற்றார் உறவினர்களும் வந்து வந்து பார்த்துக் கொண்டு அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிச் செல்ல வருபவர்கள் அவளிடம் தோற்றுப் போய் வீடு திரும்புகிறார்கள். நாவலை வாசிக்கும் போதே செங்காந்தளுடன் சனங்க கூட்டமாக வந்து அவளுடன் சேர்ந்து போராட்டம் பண்ண மாட்டார்களா? என்ற ஏக்கம் நம்மையும் மீறி தொற்றிக் கொள்கிறது. அவளுடைய போராட்டம் என்னானது என்பதை நாவலை வாசித்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வம்பாமணல் நாவல் அழகாக எடுத்துக் கூறியுள்ளது. செங்காந்தள் சராசரி பெண்ணாக தன் வாழ்க்கையை நகர்த்தாமல் ஒருபோராளியாக வாழ்ந்து காட்டுகிறாள்.
இன்றைய ஏகாதிபத்யம், அரசை தன் மூலம் இயக்கி இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இயற்கையை அழிக்கும் வேலையை செய்து வருகின்றன. அந்த அலைகளில் அடித்துச் செல்லப்படும் மக்களோ பலர் அன்றாடப் பிழைப்பை நோக்கி ஓடுவதற்கே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இன்னும் பலர் வாழ்வதற்கான போட்டியில் முதலாளித்துவத்தோடு பொருள்களின் நுகர்வை அடைவதற்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தனித்தனியான குழுக்களாக ஆக்கிக் கொண்டிருக்கும் வேளையில் எப்படி கூட்டாக சேர்ப்பது. இயற்கையை எப்படி காப்பற்றுவது என்ற கேள்விகளோடு முடிகிறது நாவல்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “வம்பாமணல்” நாவல் |
| ஆசிரியர்: | பெண்ணியம் செல்வக்குமாரி |
| வெளியீடு: | ஹெர் ஸ்டோரிஸ் |
| விலை: | ₹.399 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 மா. சுமதிச்செல்வி |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

