நூல் அறிமுகம்: முனைவர் வே. வசந்தி தேவியின் “பெண்ணுக்கு ஒரு நீதி-மகளிர் ஆணையத்தில் மூன்றாண்டுகள் ” -கே.ராஜு

 

முனைவர் வசந்தி தேவி அவர்களை எனக்கு கடந்த சுமார் 40 ஆண்டுகளாகத் தெரியும் ஆசிரியர் இயக்கம் மீதும் மாணவர் உரிமையின் மீதும் அக்கறை உள்ளவராக அவரை 1980-களில் அறிந்திருந்தேன். 1985 ஜாக்டி போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளுக்காக பயமின்றி தெருவில் இறங்கி போராடத் துணிந்தமைக்கு முக்கிய உந்து சக்தியாக அவர் திகழ்ந்தார். பிறகு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த போது அவர் ஆற்றிய சிறந்த பணியையும் நன்கு அறிவேன். அங்கு மகளிரியல் துறையை நிறுவி, பாலினப் பாகுபாடு குறித்த பாடத் திட்டங்களை உருவாக்க அவர் காரணமாக இருந்தார். மதச்சார்பின்மை, மனித உரிமைகள் போன்ற பல கல்விப் பாடங்களை பாடத்திட்டத்திற்குள் கொண்டு வந்தார். சிறந்த கல்வியாளராகவும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகவும் அவர் இருப்பதை நாடு நன்கறியும்.  சமூக ஆய்வாளராகவும், சமத்துவம், சமநீதி ஆகியவற்றை முன்வைத்துச் செயல்படும் கல்வியாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார். 

இவை போக மேலும் சில பரிமாணங்களை உடையவர் அவர் என்பதை நான் சென்ற வருடம் தெரிந்துகொண்டேன். ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி பி எஸ் கிருஷ்ணன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்ச்சி சென்ற வருடம் நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்றது. முனைவர் வசந்திதேவியின்  50 கேள்விகளுக்கு பிஎஸ்கே அளித்திருந்த விரிவான பதில்கள் அடங்கிய  A Crusade for Social Justice என்ற புத்தகம் அந்த விழாவில் வெளியிடப்பட்டது. அப்போதுதான் வசந்தி தேவி அவர்களின் இந்தப் பரிமாணம் எனக்குப் புரிந்தது. மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள் என்ற அவருடைய அனுபவப் பதிவு காலச்சுவடு பத்திரிகையில் தொடராக வெளிவந்திருக்கிறது. அந்தத் தொடரில் வெளிவந்த கட்டுரைகளை மைத்ரி புக்ஸ் நிறுவனம் இந்த வருடம் ஜனவரி 4 அன்று புத்தகமாக வெளியிட்டபோது நான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்திதேவி ஆற்றிய பணி பற்றிய பரிமாணத்தை அன்று தெரிந்து கொண்டேன். அவர் தன் வரலாற்றை எழுத முற்பட்டால் அது வரும் தலைமுறைக்கு மிகப் பெரிய வழிகாட்டுதலாக அமையும் என்ற எனது விருப்பத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

பெண்ணிய வரலாற்றியலாளர் திருமிகு. வ.கீதா தன்னுடைய விரிவான முன்னுரையில் வசந்தி தேவி பற்றிய பல முக்கியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 2002-ல் மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்பில் 2002 முதல் 2005 வரை அவர் பணிபுரிந்த அந்த மூன்று வருடங்கள் அலாதியானவை. தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்தும், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள், சமூகப் பணியாற்றுபவர்கள் என்று பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்பை நாடியும் ஆணையத்தை மக்களுக்கான அமைப்பாக அவர் உருவாக்கினார். காவல் துறை, வருவாய்த் துறை போன்ற அரசு இயந்திரங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மெத்தனத்தை சாடியதுடன், அரசு இயந்திரங்களும் அலுவலர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

வசந்தி தேவி யார்? அரசியலுக்கு ...

வசந்தி தேவியின் குடும்ப சூழல் வித்தியாசமானது. சென்னையில் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி சர்க்கரைச் செட்டியார் அவருடைய அம்மாவின் தந்தை. பாரதியாருக்கு நெருக்கமானவர். தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர். பின்னர் நீதிக் கட்சியிலும் பணியாற்றியவர். இதனால் இயல்பிலேயே வசந்தி தேவி மனித உரிமைகளில் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார்.

உசிலம்பட்டி சிசுக் கொலைகள் தொடர்பான ஊடக செய்திகள் 1983ல் வெளிவந்தன இப்பிரச்சினைகள் குறித்j கள ஆய்வுகளை வசந்திதேவி மேற்கொண்டார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். இப்பிரச்சினை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், பெண் சிசுக்களைக் கொல்வது யார் போன்ற தகவல்களைத் திரட்டி, அவற்றைத் தீவிரமாக ஆய்வும் செய்தார். 

சாதி, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான உறவை அவர் அத்தனை சிக்கல்களோடும் முரண்களோடும் புரிந்து கொண்டதால்தான், மகளிர் ஆணையத் தலைவராக இருந்தபோது, குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை அல்லது சமுதாய, வேலைத்தளங்களில் எதிர்கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, குறிப்பிட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்படும் கேடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார். அரசால்அமைக்கப்பட்ட நிறுவனம் எவ்வாறு திறம்பட செயல்பட முடியும், பெண்கள் கோரும் நீதியை நிலைநிறுத்த சிவில் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி, அரசு அதிகாரிகளை சட்டத்துக்கு முன் கொணர்ந்து நிறுத்துவது ஏன், முக்கியமாக பெண்களுக்கான நீதி என்பது என்ன, அதை எவ்வாறு நிறுவ முடியும், அந்த நீதி அரசு இடும் பிச்சை அல்ல, மாறாக பெண்களின் போராட்டங்கள் சாத்தியப்படுத்தும் ஒன்றுதான் என்பதை எவ்வாறு ஐயத்திற்கிடமின்றி நிறுவமுடியும்… என்பதையெல்லாம்  நூலில் உள்ள கட்டுரைகள் விரிவாகப் பேசுகின்றன. 

இக்கட்டுரைகள் உண்மை அறியும் குழுக்கள் வழங்கும் அறிக்கைகள் போல் அமைந்திருந்தாலும், அவை வெறும் விவரங்களாக மட்டுமில்லாமல் செயல் விளக்கங்களாகவும் உள்ளன. வரும் தலைமுறையினருக்கு பெண்ணிய, பெண்ணுரிமை செயல்பாடுகள் என்றால் என்ன என்பதைத் தெரியப்படுத்துபவையாகவும் அவை இருக்கின்றன.

வசந்தி தேவி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என்று வந்துகொண்டிருந்த வழக்குகள், பெரும் எண்ணிக்கையில் குவியத் தொடங்கின. ஆணையத்தின் கதவுகளை வந்து தட்டிய ஒவ்வொரு மனுவின் பின்னும் ஒரு பெண்ணின் ஆற்றாதழுத கண்ணீர், கதறல், வேதனை. அவமானம், ஆதரவின்மை, ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஆணாதிக்க சமுதாயத்தின் பாதகங்கள், நவீன இந்தியாவின் புதிய விகாரங்கள் அனைத்தும் ஒரு மனு வடிவில் வந்து  குவிந்த உயிர்த் துளிகளாக இருந்தன.

Ananda Vikatan - 22 January 2020 - படிப்பறை | Padipparai ...

“எனது மிகப்பெரிய பலம் சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் மிகப்பெரும் ஆதரவு” என்கிறார் வசந்தி தேவி. உண்மையில் அவரது பதவிக் காலம் மக்கள் அமைப்புகளுடனான கூட்டமைப்பு என்றே சொல்லவேண்டும். வசந்தி தேவி பதவி ஏற்றதை அவை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆணையத்திற்கு அனைத்து ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தன

மகளிர் ஆணையம் என்றாலே குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறைகள் ஆகியவை மட்டுமே கொண்டு செல்லும் இடம் என்ற எண்ணம் நிலவுகிறது. அத்தகைய குடும்ப உறவுகளில் எழும் மனுக்கள் ஆணையத்தில் பெறப்பட்டாலும் அவை பெரும்பான்மையானவை அல்ல என்கிறார் வசந்தி தேவி. எடுத்துக்காட்டாக, முதலாண்டு பெற்ற மனுக்களில் எண்ணிக்கையில் அதிகமானவை துன்புறுத்தல்கள், சொத்துப் பிரச்சினைகள், காவல்துறைக்கு எதிரான புகார்கள், வரதட்சிணை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம், குடும்ப வன்முறை, பணப்பிரச்சினை, இருதார மணம் போன்ற பல புகார்களும் இருந்தன. இவற்றில் குறிப்பிட வேண்டியவை காவல்துறைக்கு எதிரான பல வகைப்பட்ட புகார்கள். வழக்குகளைப் பதிவு செய்ய மறுத்தல், குற்றவாளிகளின் பக்கம் சேர்ந்து கொள்ளுதல், சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்து காவலில் வைத்தல், பெண்களின் மீது காவல்துறையே வன்முறையில் ஈடுபடுதல், கொடிய குற்றங்களை குறைந்த தண்டனை பெறும் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்தல், குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் குற்றங்களை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் எளிதாகத் தப்பிவிடும் பிரிவுகளில் பதிவு செய்தல், பெண்களைக் கைது செய்யும்போது உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறுதல், காவல் நிலையத்திலேயே பெண்களைச் சித்திரவதை செய்தல் போன்ற பல்வேறு புகார்கள் ஆகும்.

தனது மூன்று ஆண்டு பணிக் காலத்தின் முக்கிய சாதனைகளாக வசந்தி தேவி கருதுவது ஆணையம் நடத்திய பொது விசாரணைகளைத்தான். பொது விசாரணை நடுவர் மன்றங்கள் கவனமாக அமைக்கப்பட்டன.  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தலைவராகவும், மக்கள் நலத்தில் ஆர்வமுடைய சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள்,வேறு சில நிபுணர்கள் கொண்ட நடுவர் மன்றங்கள் அமைந்ததால், அவற்றின் தீர்ப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் அரசினால் உதாசீனம் செய்ய இயலாத தார்மீக வலிமை இருந்தது. மீடியாக்களும் விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்தன. பெண்களின் மீதான அநீதிகள், வன்முறைகள்பால் கவனம் ஈர்ககும் வலிமைமிக்க வடிவமாக பொதுவிசாரணைகள் வடிவெடுத்தன.  வழக்கறிஞர் திருமிகு சுதா  ராமலிங்கம் அவர்களை ஆணையத்தின் இலவச சட்ட ஆலோசகராக வசந்தி தேவி நியமித்துக் கொண்டார்.

நீதியைத் தேடிய ஒரு நீண்ட பயணத்தை மகளிர் ஆணையம் நடத்த வேண்டிவந்தது. 2002-ம் ஆண்டில் மதுரை மக்கள் கண்காணிப்பகத்திடமிருந்து ஒரு அவசர வேண்டுகோள் வந்தது. கருப்பி என்ற 48 வயது அருந்ததியர் சமூகத்துப் பெண் பரமக்குடி காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு இறந்தார். அதைத் தற்கொலை என்று காவல் துறை மூடி மறைக்கப் பார்த்தது. சாட்சிகளும் குடும்பத்தினரும் அச்சத்தில் இருந்தனர். மகளிர் ஆணையம் இதில் உடன் தலையிடவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் வைத்தது.

கருப்பி வீட்டு வேலை செய்து கொண்டிருந்த ஒரு தலித் குடும்பத்தில் நகை திருடு போய்விட்டது. கருப்பியின் மீது அந்தக் குடும்பத்தின் சந்தேகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நவம்பர் 25 ஆம் நாள் கருப்பி கைசெய்யப்பட்டு காட்டுப் பரமக்குடி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். அடுத்த ஐந்து நாட்கள் காவல் நிலைய சித்திரவதைக்குப் பின் அவரது உடல் காவல் நிலையத்தின் பின்புறம் இருந்த மின்சார டவரில் தொங்கிக்கொண்டிருந்தது.கருப்பி தற்கொலை செய்து கொண்டார். காவல்துறைக்கு அவர் மரணத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் காவல் நிலையத்தில் வைக்கப்படவேயில்லை” என்றது காவல்துறை.

பெண்ணுக்கு ஒரு நீதி : மகளிர் ...

அந்தக் காவல் நிலையக் கொலையை ஒரு பொது விசாரணை வழியாக வெளிக்கொணர முடிவு செய்தார் வசந்தி தேவி. ஆனால் அவரது பதவிக் காலத்தில் மாநில மகளிர் ஆணையம் சட்ட அதிகாரம் பெற்ற நிறுவனமாக இல்லை. விசாரிக்க வேண்டியவரை சம்மன் செய்வதற்கும், பிரமாணத்தின் மேல் உண்மையைச் சொல்ல வைக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. ஆகவே தேசிய மகளிர் ஆணைய தலைவர் திருமிகு பூர்ணிமா அத்வானி அவர்களுக்கு வழக்கினை அனுப்பி தன்னுடன் இணைந்து பொது விசாரணை நடத்த வேண்டினார் வசந்தி தேவி. தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒரு நீதிமன்றத்திற்கு இணையான சில அதிகாரங்கள் உண்டு. அவரும் இதற்கு  இசைந்தார். இப்படி ஒரு உபாயத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர வசநதி தேவி முடிவு செய்தார்,

2003 அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது விசாரணை நடந்தது. நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்கியது. இறுதியாக இராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 2013 பிப்ரவரி 14-ம் நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொடிய இந்த சித்திரவதைக் கொலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் போராடிய பிறகுதான் நீதியைப் பெற முடிந்தது. குற்றவாளிகளுக்கு பத்து ஆண்டுகள். ஏழு ஆண்டுகள் என தண்டனை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது.

அடுத்து. பொதுவாக பெண் சிறைக்கைதிகள் மீது நம் கவனத்தை ஈர்க்கிறார் வசந்தி தேவி. நம் சமுதாயத்தின் அடர்ந்த இருள் கவிந்த மூலையில் நமது கண்ணுக்கும் கவலைக்கும் கருணைக்கும் அப்பால் மறைந்திருக்கும் சபிக்கப்பட்ட ஜென்மங்கள் அவர்கள் என்கிறார். பெண்கள் சிறைப்படுத்தப்பட்டால் அவர்களது குடும்பம் முழுவதுமே சிதைந்து, சிதறுகிறது. குழந்தைகள் தாயின் அரவணைப்பின்றி அனாதைகளாய், உடலும் உணர்வும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெண் கைதிகள் பற்றி ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு  4 ஆண்டுகளுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு வழக்கை விசாரித்தது. உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திருமிகு சுதா ராமலிங்கம் அவர்களை அனைத்து பெண்கள் சிறைகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கப் பணித்தது. அவர் தமிழ்நாட்டின் 11 மகளிர் சிறைகளைப் பார்வையிட்ட பிறகு அறிக்கை அளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் அந்த அறிக்கையை ஏற்று, தமிழக அரசு அறிக்கையின் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆணையிட்டது.

அடுத்து, கடலூர் மாவட்டத்தின் ஒரு கோடியில் ஒதுங்கி இருந்த கிராமத்தின் கதையை நம் முன் வைக்கிறார் வசந்தி தேவி. கிராமத்தின் நிலம் முழுவதும் ஆதிக்க சாதியினரின் கைகளிலிருந்தது.  தலித்துகள் விவசாயக் கூலிகள். அந்தப் பெண்கள் எத்தனையோ ஆண்டுகளாக அனுபவித்து வரும் ஆதிக்க சாதியினரின் தாங்கொணா பாலியல் கொடுமைகளை கதை கதையாக ஆணையத்திடம் விவரித்தனர். காவல்துறையிடம் புகார் அளித்து எந்த பயனும் இல்லை. காவல்துறைக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையேயான ஒட்டும் உறவும் ஊரறிந்த விஷயம். நீதியோ நிவாரணமோ கிடைக்கும் வழியே இல்லை. ஆணையத்தின் தலையீடு அவர்கள் கிராமத்தில் உண்மையாகவே ஒரு சகாப்த மாற்றத்தைத் தொடங்கி வைத்தது. காலம் காலமாக அமிழ்ந்து கிடந்த இருள் அகன்று, புதிய ஒளி பரவியது. விடுதலைக் காற்று வீசியது. சாதிய ஆதிக்கக் கொடுமையும் பெண்கள் அனுபவித்து வந்த பாலியல் வன்முறையும் தாங்கொணா அவமானமும் முடிவுக்கு வந்துவிட்டன. ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் மக்கள் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டனர். தலித் பெண்களின் கண்ணியம் காப்பாற்றப்பட்டது.

Image may contain: 3 people, people smiling

 ஆனால்..  இது மிகப்பெரிய ஆனால்!

தலித்துகள் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து விட்டனர். உக்கிரமான பதிலடி அவர்கள் மேல் விழுந்தது. சுற்றிலுமிருந்த அனைத்து கிராமங்களின் ஆதிக்க சாதியினரும் வைராக்கியத்துடன் ஒன்றுபட்டனர். அந்தக் கிராமத்து தலித்துகளுக்கு தங்கள் நிலத்தில் வேலை கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். கடைசியில், தலித் மக்களுக்கு பட்டினியில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அவர்கள் முன் வைக்கப்பட்டது.

முழுவதும் ஆதிக்க சாதிகளின் இரும்புப் பிடியில் இருக்கும்போது, நிலச்சீர்திருத்தம் பகல் கனவாய் மறந்து மறைந்து விட்ட போது தலித் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. அவர்களது  மனித மாண்பைச் சுமக்கும் கனவுகளுக்கு விடிவுகாலம் எப்போது என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார் வசந்தி தேவி.

இன்னும் ஏராளமான விஷயங்களை தனது கட்டுரைகளில் அவர் நம்முடன் பகிர்ந்திருக்கிறார். எழுதுவதற்குத்தான் இடம் போதாது. இறுதியாக, ஆணையத்தின் பணியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மக்கள் அமைப்புகள், மாதர் அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள், மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிஃபேன், சென்னை மனித உரிமை நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஆஸி ஃபெர்னாண்டஸ், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், தேசிய மகளிர் ஆணையத்தின் அன்றைய தலைவர் பூர்ணிமா அத்வானி ஆகியோருக்கு நன்றிகள் பல சொல்லி கட்டுரைகளை நிறைவு செய்கிறார் வசந்தி தேவி.

நூலைப் படித்து முடிக்கும்போது நெஞ்சு கனக்கிறது. பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள், விடுதலை பெறுவது எப்போது என்ற கேள்வி நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது…

பெண்ணுக்கு ஒரு நீதி-மகளிர் ஆணையத்தில் மூன்றாண்டுகள் 

முனைவர் வே. வசந்தி தேவி 

வெளியீடு மைத்ரி புக்ஸ், மடிப்பாக்கம்

தொ.பே : 94455 75740

மின்னஞ்சல் : [email protected]

-கே.ராஜு

ஆசிரியர், புதிய ஆசிரியன் மாத இதழ்