நூல் அறிமுகம்: பெண்ணும் ஆணும் ஒண்ணு – அ.மீனாட்சிபுத்தகத்தின் பெயர்:- பெண்ணும் ஆணும் ஒண்ணு
எழுத்தாளர்:- ஓவியா
மொத்த பக்கங்கள்:-  155
பதிப்பகம்:- நிகர் மொழி பதிப்பகம் 2019
விலை:- 110

முதலில் எனக்கு இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் தினமும் ஒரு பக்கமாவது படிக்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் வாசித்து முடிக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. ஓவியாயுடைய இக்கட்டுரைத் தொகுப்பு இந்திய சமூகத்தில் இருக்கும் பாலின பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது.  சிறு வயதில் இருந்து ஓர் ஆணின் துணையில் இருந்து வாழ பெண் தாயாரிக்கப்படுகிறாள். சில பெண் தன் சம்பாத்தியத்தில் தன்  தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என்பது பற்றியெல்லாம் ஓவியா இக்கட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

இந்த புத்தகம் இந்திய சமூகத்தில் வாழும் அனைத்து பெண்களின் வாழ்க்கை. அது ஓவியாவின் வழியில் வார்த்தைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணாதிக்க சமூகம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஏன் பெண்கள் மொபைல் உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகித்தாலும் ஏன் ஆண்களிடம் பேச வேண்டும்? அவளின் உடை அப்படி இப்படி என்று பெண்களையே பெண்களை வைத்தே தாக்க வைத்து இந்த ஆணாதிக்க சமூகம். திருமணத்திற்கு முன் என்ன உடையை வேண்டுமானாலும்  அணியலாம். ஆனால் திருமணத்திற்கு பின் புடவை மட்டும் தான் அணிய வேண்டும். அது தான் அழகு. அது தான் தமிழ் கலாச்சாரம். குடும்ப பொம்பளயா தெரியும் என்று ஓர் உடையில் கூட ஆதிக்கம்.ஆனால் அந்த ஆண் திருமணத்திற்கு முன் எந்த ஆடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரோ அந்த ஆடையிலேயே பெண்ணை காதலித்திருப்பார் அல்லது அழகா இருக்க என்று கூறியிருப்பார். அப்பொழுது அழகாக தெரிந்தவள் திருமணத்திற்கு பின் ?

இப்படி பல எளிமையான கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் ஓவியா. இந்த புத்தகம் தனிச்சிறப்பு அதன் எளிமை. இது அனைத்து வயதினர்களும் வாசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.  குறிப்பாக இன்றைய பள்ளி மாணவர்களுக்கு இந்த புத்தகத்தை வாசித்தால் பாலின சமத்துவம் சார்ந்து சிந்தனைகள் முளைவிடும்.  இந்த கட்டுரைகளை எழுதியதர்க்காக ஓவியாக்கு நன்றி.  இந்த புத்தகத்தை வாசித்ததுக்கு எனக்கு எதிர்ப்பு வரும். ” இதுலாம் படிக்காத. எப்படி ஒரு பெண் குடும்பத்தை ஒழுங்காக நடத்துவது” என்ற தலைப்பில் எனக்கு புத்தகங்களை கூட சிபாரிசு செய்து என்னை திசை திரும்புவார்கள். எல்லாவற்றையும் மீறி 21 ஆம் நூற்றாண்டில் என் பாலின விடுதலையை நோக்கி வாசிப்பு பயணத்தை தொடங்கிவைக்கிறது “பெண்ணும் ஆணும் ஒண்ணு” புத்தகம்.

அ.மீனாட்சி
சென்னை கிறித்தவக் கல்லூரி.