1.
காந்திக்கு முன்பிருந்தே
அமைதியை ஆயுதமாக்கிக்கொண்ட
இனம்.
பூமாதேவிக்கு முன்பிருந்தே
பொறுமையை அணிகலனாக்கிக் கொண்ட இனம்.
தமிழுக்கு முன்பிருந்தே
இனிமையை இயல்பாக்கிக்கொண்ட
இனம்.
பிரம்மனுக்கு முன்பே ஆக்கலை கைவரப்பெற்ற இனம்.
சிவனுக்கு முன்பே தீயனஅழித்தலை
செயல்படுத்தும் இனம்.
விஷ்ணுக்கு முன்பே காக்கும் இனம்.
யேசுவுக்கு முன்பிருந்தே பிரசங்கிக்கும் இனம்.
நபிக்கு முன்பிருந்தே ( நல்லதை) ஓதும் இனம்.
புத்தருக்கு முன்பிருந்தே போதிக்கும் இனம்.
குபேரனுக்கு முன்பிருந்தே சேமிக்கும் இனம்
கர்ணனுக்கு முன்பிருந்தே கொடுக்கும் இனம்
நளனுக்கு முன்பிருந்தே போஷிக்கும் இனம்.
யாருக்கும் முன்பே படைக்கப்பட்ட
இனம்.
யாருக்கும் முன்பிருந்தே படைக்கும்
இனம்.
யாவருக்கும் முன்பிருந்தே இருக்கும் இனம்.
யாவரையும் முந்தி இருக்கச்செய்யும் இனம்.
எல்லா செயல்களிலும் முன்னிருக்கும் இனம்.
எல்லா வெற்றிகளிலும் பின்னிருக்கும் இனம்.
எல்லா தோல்விகளிலும் தாங்கியிருக்கும் இனம்.
கடவுளுக்கும் முன்னரே கருவறையை கைப்பற்றிய இனம்.
கடவுளரையும் கருவாக்கிய இனம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்றா என்பதில் தெளிவில்லை.
பெண்ணும் பரமனும் ஒன்றென்பதில் அய்யமில்லை.
நம்பினோர் கெடுவதில்லை.
மனித நன்மைக்கே கடவுளின் அவதாரங்களும் அதிகாரங்களும்,
குடும்ப நன்மைக்கே பெண்ணின்
அவதாரங்களும் அதிகாரங்களும்.
கடவுள் உண்டென்பார்க்கு எண்ணற்ற தெய்வம்.
கடவுள் இல்லென்பார்க்கு பெண்ணே தெய்வம்.
அந்த கடவுளுக்கும் பெண்ணே தெய்வம்.
இன்னும் பெண்ணுக்கு உரிமை கோருகிறோம்,
கொடுக்கப் பழகுவோம்!
இன்னும் பெண்ணுக்கு சம அந்தஸ்து கோருகிறோம்,
கொடுத்துப் பழகுவோம்!
இன்னும் பெண்ணுக்கு பதவி
கோருகிறோம்,
கொடுத்துப் பழகுவோம்!
இன்னும் பெண்ணுக்கு பாதுகாப்பு கோருகிறோம்,
கொடுத்துப் பழகுவோம்!
இன்னும் பெண்ணைப் பொருளாய் பார்க்கிறோம், பெண்ணின் பொருள் கற்றுப் பழகுவோம்!
இன்னும் பெண்ணை பெண்ணாய் வருடத்தில் ஒரு நாள் இருக்கவிடுகிறோம்.
வருடத்தையே முழுமையாய் பெண்ணிடம் விட்டுப் பழகுவோம்.
இன்னும் பெண்ணாய் நடப்பது எப்படியென கற்பிக்கிறோம்,
இனியாவது பெண்ணாய் நடத்துவது
எப்படியென கற்றுக்கொள்வோம்.
இன்னும் பெண்ணைப் புகழந்து காரியம் சாதிக்கிறோம்
இனியாவது பெண்ணை சாதிக்கவிட்டு புகழ் சாதிப்போம்.
முதலில் பெண்ணுரிமைப் போராட்டம் இல்லாவகையில் உலகு செய்வோம்
உலகில் எந்த உரிமைப் போராட்டமும் தானே இலாது போகும்.
முதலில் பாலினப்பாகுபாடு இல்லாத சமுதாயம் செய்வோம்
சமுதாயத்தில் எவ்வினப் பாகுபாடும் தானே இலாது போகும்.
வரப்புயர, வரப்பை உயர்த்தியே வாழ்வை உயர்த்திக்கொண்டவர் நாம்!
சற்றே பெண்ணை உயர்த்திப் பார்ப்போம்
மண்ணையே விண்ணுக்கு உயர்த்தும் வல்லமை கொண்டோர் மகளிர் தாம்.
பெண்ணுயர
பெண்ணுயர
பெண்ணுயர!!
2.
எழுதியவர்
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.