செறிவூட்டப்பட்ட அரிசியை அவர்கள் சாப்பிடட்டும் ! இலாபத்தை நாம் விழுங்குவோம்!
75ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. ஏழை இந்தியர்களுக்கு இரும்பு சத்து மற்றும் விட்டமின் சத்து கலந்த செறிவூட்டப்பட்ட அரிசி, நியாய விலைக்கடைகள், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற அரசு திட்டங்களின் மூலம் அளிக்கப்படும். 2021இல் அறிவிக்கப்பட்ட இதன் நோக்கமாக மக்களிடையே காணப்படும் சத்துக் குறைபாட்டையும் ரத்த சோகையையும் குறைப்பதுவே என்று சொல்லப்பட்டது. ஆனால் இதன் பலனாளியாக டச் ஸ்டேட் மைன்ஸ் (DSM) எனப்படும் முதலாளிகளின் கூட்டே இருக்கும் என்று யார் நினைத்திருப்பார்? 1902இல் தொடங்கப்பட்ட இது விலையை உயர்த்தி வைத்திருப்பதற்கும் போட்டியை தவிர்ப்பதற்கும் தொடங்கப்படும் கார்டெல் வகை ஆகும். இந்த நிறுவனம் மிகுந்த இலாபத்தை தரும் உணவுத் தொழிலில் இறங்கியது.
படோடபமாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் ரகசியம் இப்போது அரிசி சாக்கிலிலிருந்து வெளிவரும் பெருச்சாளி போல் வந்துவிட்டது. 80 கோடி இந்தியர்களை பாதிக்கப் போகும் இந்த திட்டம் அறிவியல் ஆதாரமில்லாமலும் திட்டிமிடப்படாமலும் தொடங்கப்பட்டுள்ளது என்பதை செய்தியாளர்களின் கூட்டமைப்பு(reporters collective) வெளிக்கொண்டு வந்துள்ளது. இதற்கான முன்னோடி திட்டத்தின் விளைவுகளை முதலில் ஆய்வு செய்யாமல் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை எல்லோருக்குமானதாக ஆக்குவது அரைகுறையானது என்று 2019இல் ஒன்றிய அரசின் செலவுத்துறையே எச்சரித்தது.
செறிவூட்டப்பட்ட அரிசி இந்திய மற்றும் உலகளாவிய சூழலில் இரத்த சோகையையும் சத்துக் குறைபாட்டையும் போக்கும் என்பதற்கு தரமான ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் ஏழைகளுக்கு அதை வழங்கியே தீர வேண்டுமாம். ஏனென்றால் அதில் கலக்கும் சத்துக்களை ஆறு நிறுவனங்களின் கார்ட்டெல் கூட்டே தயாரிக்கின்றது. 2024 வரை வழங்கப்படும் இதற்கான செலவு ரூ 2700 கோடிகள். இதன் விளைவாக அந்தக் கூட்டிற்கு ரூ1800 கோடி புதையல் கிடைக்கும்.
இதற்கு முன் 1953இல் வனஸ்பதி சமையல் எண்ணெயில் விட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டது. 1960இல் உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டது. அது இமாச்சல பிரதேசில் கங்கிரா பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட சிறப்பான ஆய்வின் அடிப்படையில் செய்யப்பட்டது. அங்கு காணப்பட்ட முன் கழுத்துக் கழலை (goitre) நோய்க்கு ஐயோடின் குறைபாடே காரணம் என்றும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு அந்த நோயை கணிசமாக குறைத்தது என்றும் அறியப்பட்டது.
முதலில் நோய் காணப்பட்ட பகுதிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகள் அந்தக் குறைபாடு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது என்று காட்டியது. அதற்குப் பிறகே அந்த திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது.அப்போதும் உப்பில் அயோடின் சேர்ப்பது கட்டாயமாக இல்லாமல் பொதுக் கொள்கை அமுலாக்கம் என்கிற முறையிலேயே பரிந்துரை செய்யப்பட்டது.
தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வேக்களின் அடிப்படையில் ரத்த சோகை மற்றும் சத்துக்குறைபாடு குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. நுண்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் ‘உள்ளார்ந்த பசி’ போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டாக 2019-21இல் நடத்தப்பட்ட ஐந்தாம் சர்வேயின் படி சத்துக்குறைபாடு குறித்து 1496 கட்டுரைகளும் ரத்தசோகை பற்றி 793 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
ஆனால் இதற்கு தீர்வு இரும்பு சத்தையும் மற்ற நுண் ஊட்ட சத்துக்களையும் சும்மா அள்ளி தெளிப்பதா? ஒரு பிரச்சினை என்னவென்றால் இந்த இரண்டு குறைபாடுகளும் பொருளாதார அசமத்துவத்துடன் தொடர்புடையவை. அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுவது போல் அதிக அளவில் ரத்தசோகை காணப்படுவது பாதகமான சமூக-பொருளாதார நிலைமைகள், குறைவான கல்வி, பாலினம், கிராமப்புற பின்னணி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை போன்றவற்றுடன் இணைந்ததாகும். அதற்கு வெறும் தொழில்நுணுக்க தீர்வு மட்டுமே போதாது; சமூக,கலாச்சார, பொருளாதார தீர்வுகளின் கலவையே சரியாக்கும். மேலும் இப்போதுள்ள சூழலிலும் சத்துணவு நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, உள்ளூரில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படும் பல்வகை உணவே சத்துக்குறைப்பாட்டை போக்கும் நீண்ட கால தீர்வாகும்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நாடாளுமன்ற செயலகத்தின் நூலக மற்றும் ஆய்வு சேவை ( Parliamentary Library and Reference, Research, Documentation and Information Service (LARRDIS) இந்தியாவில் உணவு செறிவூட்டுதல் குறித்து ஒரு குறிப்புரையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 2022 ஜுலை மாதம் வெளியிட்டது. உபியிலும் தெலங்கானாவிலும் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொண்டதால் அதிக அளவில் நுண் சத்துக்கள் உடலில் சேர்ந்தது குறித்த நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் பற்றி இது விளக்குகிறது.
“அதிக அளவில் நுண் சத்துக்கள் சேர்வது பரவலாக உள்ளதை ஆதாரங்கள் காட்டுகின்றன. உணவு செறிவூட்டல் திட்டத்தின் சாரமான பல்வேறு நுண்சத்துகளை சேர்ப்பது,அதனால் ஏற்படும் ஆபத்துகளை மிகக்குறைவானதாக்குவது மற்றும் பொது ஆரோக்கியத்திற்கு நலம் பயப்பது என்பதையே இது சிதைத்துவிடுகிறது” இதற்கு தீர்வாக அந்த குறிப்புரை கூறுகிறது ” செறிவூட்டலை ஒற்றை தானியத்திற்கு கட்டாயமாக்காமல் பல்வேறு வகை உணவு மக்களுக்கு அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இரும்பு அடங்கிய மருந்துகள் துணை சத்தாக கொடுக்கப்படும் நிலைமையில், அதிக நுண்சத்துகளை பிரதான உணவான அரிசி போன்றவற்றில் கலப்பது தலைகீழ் விளைவுகள் ஏற்படுத்தி நோயைவிட மருந்து கேடு என்பது போலாகும். தேசிய ஆரோக்கிய அமைப்பின் மேனாள் செயல் இயக்குநர் மரு.டி.சுந்தரராமன் கூறுகிறார்”பல குழந்தைகளுக்கும் அதிக இரும்பு சத்து தவிர்க்க முடியாதது என்று கூறுவது தீவிரமான கேடுகளையே விளைவிக்கும் என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.
இவை இன்னும் நிரூபிக்கபபடவில்லை. இருந்தாலும் ஆரோக்கியமான குழந்தைகள் குறித்து பேசுவதால் எச்சரிக்கை உணர்வு அதிக அளவு இருக்க வேண்டும்” என்கிறார்.
ஆற்றின் ஆழத்தை சராசரியில் அளந்து இறங்குவதுபோல் எல்லோருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை கட்டாயப்படுத்துவதன் அறிவின்மையை அலையன்ஸ் ஃபார் சஸ்டயினபிள் அண்ட் ஹோலிஸ்டிக் அகிரிகல்சர்(ASHA) மற்றும் உணவுக்கான உரிமை பரப்பு இயக்கமும்(RTFC) அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள் மே மற்றும் ஜூன் 2022 மாதங்களில் ஜார்கண்டிலும் சட்டிஸ்காரிலும் நடத்திய கள ஆய்வில் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் குறிப்பாக ஆதிவாசிகளிடம் தலசீமியா மற்றும் சிக்கிள் செல் நோய்கள் காணப்படுவதால் இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி உண்டால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்று கண்டறியப்பட்டது.
மருத்துவ ஆய்வில் மதிப்பளவாக கருதப்படும் கொஹிரன் மதிப்பாய்வும் உலக சுகாதார நிறுவனமும் “அரிசியில் இரும்பு சத்து மட்டுமோ அல்லது வேறு நுண்ணூட்ட சத்துடன் சேர்த்தோ செறிவூட்டப்படுவது ரத்த சோகை நோயை தடுப்பதில்லை.”என்று கூறுகிறது.2019இல் அரசின் திட்டங்கள் மூலம் செறிவூட்டிய அரிசி கட்டாய வழங்கல் திட்டத்தின் விளைவுகளை ஆய்வு செய்ய ஒரு முன்னோடி திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது.ஏதாவது ஒரு மாவட்டத்தில் அமுல்படுத்தும் இந்த திட்டத்திற்கு 15 மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. ஆனால் ஆறு மாநிலங்கள் மட்டுமே தொடங்கின.
அதிலும் ஒரு மாநிலம் மட்டுமே அறிக்கை அளித்தது. இவ்வாறு முன்னோடி திட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே ஏழைகளின் மீது செறிவூட்டப்பட்ட அரிசியை திணிக்கும் கட்டாய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஒப்புதல் பெற தயாரிக்கப்பட்ட அலுவலக கோப்புகள் பிரதம மந்திரியின் 2021 ஆகஸ்ட்15 உரையை மேற்கோள்காட்டி முடிக்கப்பட்டன . ஆணைக்குப் பின் எட்டு மாதங்கள் கழித்து நிதி ஆயோக் தூக்கத்திலிருந்து விழிப்பது போல முன்னோடி திட்டங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன் ரகசிய அறிக்கையில் முன்னோடி திட்டங்கள் தாழ்ந்த தரக் கட்டுப்பாடுகளுடனும் எந்தவித அறிவியல் இல்லாமலும் மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் சக்கரவர்த்தி பிறந்த மேனியாய் கம்பீரமாக நடைபோட்டார்.
ஆதாரங்கள் இல்லாமலும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கை இருந்தும் செறிவூட்டப்பட்ட அரிசி அவசர அவசரமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?
வளரும் நாடுகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை அதிகமாக்கும் நிகழ்ச்சி நிரலை விவாதிக்க, டிஎஸ்எம் நிறுவனம் உலகளவில் செயல்படும் இலாபத்திற்கில்லா நிறுவனங்களின் கூட்டத்தை புரவலராக முன்னின்று 2016இல் மெக்சிகோவில் நடத்தியது. இந்தியா போன்ற அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுக்க கொள்கை பரப்பு முக்கியமானதாக ஆனது. இதற்குப் பிறகு இரண்டே மாதங்களில் இந்திய அரசாங்கத்தின் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI இந்தியா முழுவதும் செறிவூட்டலை முன்னெடுக்க ஒரு மையத்தை உருவாக்கியது.
பயனாளிகள் யார்?
இந்த மையமானது முன்பு குறிப்பிட்ட இலாபத்திற்கில்லா அமைப்புகளுடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டதில் எந்த ஆச்சரியமுமில்லை. இதனால் உள்ளறைக் கூட்டங்கள் என்று சொல்லப்படுகிற கொள்கை முடிவெடுக்கும் கூட்டங்களில் அவை பங்கெடுக்க இயலும். முடிவெடுக்கும் பதவிகளில் உள்ளவர்களிடம் உணவு செறிவூட்டலை லாபி செய்ய முடியும். அரிசி செறிவூட்டலில் அரசாங்கம் மதிப்பளவுகளை நிறுவுவதற்கும் அவை வசதியாக உதவி செய்ய முடிந்தது.
இலாபத்திற்கில்லா நிறுவனங்களின்’டூல் கிட்டில்’இருந்து அரசாங்க கையேடுகள் ஈயடிச்சான் காப்பி செய்ததையும் செய்தியாளர்களின் கூட்டமைப்பு அம்பலப்படுத்தியது! மரு .சுந்தரராமன் சொல்வதை போல “இந்த கொள்கை முடிவெடுப்பதற்கான ஆதாரங்களை திரட்டுவது முழுவதும் முரண் நலன்களாலும் கார்ப்பரேட் செல்வாக்கினாலும் நிரம்பி வழிகின்றன என்பது அம்பலப்பட்டுள்ளது”
ஏப்ரல் 2023இல் 3600 டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் தயாரிக்கும் ஆலை ஒன்றை டிஎஸ்எம் ஹைதிராபாத்தில் நிறுவியது. அதன் ஆசியா பசிபிக் தலைவர் பிரான்கோஸ் ஷெஃபளர் “அரிசி செறிவூட்டலை கட்டாயமாக்கியதற்காக மோடி அரசாங்கத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் ஊடே சத்துக்குறைபாடோ சோகையோ இல்லாமல் டிஎஸ்எம் தளதளவென்று வளர்ச்சி கண்டுள்ளது.