கோவிட்டால் இந்தியாவில் கொடிய வறுமைக்குள் மூழ்கியுள்ள மக்கள் – ப்ளூம்பெர்க் | தமிழில்: தா.சந்திரகுரு

அரசாங்கம் விதித்த பொதுமுடக்க கட்டுப்பாடுகளின் போது புனே ரயில் நிலையத்திற்கு வந்த  பயணிகள் வெப்பநிலை பரிசோதனைக்கான சாவடியில் காத்திருக்கிறார்கள்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட திடீர் பொதுமுடக்கத்திற்குப் பிறகு தனது சேமிப்பை மட்டுமே பயன்படுத்தி மூழ்கிப் போயிருந்த மனோஜ் குமார் கோவாவில் இருக்கின்ற சுற்றுலா தளத்தில் கட்டுமானத் தொழிலாளராக ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பாதித்ததன் மூலம்  மூழ்கிய நீருக்கு வெளியே தனது தலையை சற்றே நீட்டிக் கொண்டிருந்தார்.  கடந்த மாதம் அவர் கோவாவிலிருந்து 1,490 மைல் தொலைவில் பீகாரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். உலகின் மிகவும் மோசமான சுகாதார நெருக்கடியைத் தூண்டியிருக்கின்ற கடுமையான இரண்டாவது கோவிட்-19 அலை மீண்டும் கோவாவிற்கு அவர் திரும்பி வருவதைத் தடுத்ததால் நாட்டின் குறைந்த வளர்ச்சியடைந்திருக்கும் மாநிலங்களில் ஒன்றில் சிக்கிக் கொண்டார். வாய்ப்பிருக்கும் நாளில் 300 ரூபாயைப் பெற்றுத் தருகின்ற ஏதாவதொரு வேலையை இப்போது அவர் செய்து வருகிறார். அந்த வேலைகளின் மூலம் அவருக்கு பணம் எதுவும் மிச்சமாவதில்லை என்பதால் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கும், ஆடைகளை வாங்குவதற்கும் கடன்களைப் பெற்று வருகிறார்.

பருப்பு, சமையல் எண்ணெய், உடைகள் போன்ற பொருட்களுக்கான செலவினங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தனது மனைவியிடம் கூறியிருக்கும் குமார் ‘எல்லாம் இப்போது கடவுளின் கைகளில் உள்ளது. எப்போது கோவாவிற்குத் திரும்புவேன் என்பது எனக்குத் தெரியவில்லை. கோவாவிலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எனது குடும்பத்தினர் மிகவும் கவலைப்படுகிறார்கள். எனவே நான் அங்கே திரும்பிச் செல்ல விரும்பவில்லை’ என்கிறார்.

2.9 லட்சம் கோடி டாலர் அளவிலான உள்நாட்டு தேவையைக் கொண்டிருக்கின்ற இந்தியப் பொருளாதாரத்தில் பாதியளவை தன்னிடம் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப் பரந்த முறைசாராத் துறையின் பகுதியாக விளங்குகின்ற கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவராக நாற்பது வயதான குமார் இருக்கிறார். நீடித்துக் கொண்டிருக்கும் கோவிட் அலை இந்த தொழிலாளர்களின் வருமானங்களைக் குறைத்தது மட்டுமல்லாது, குமார் போன்றவர்களின் சேமிப்பையும் முழுமையாகத் துடைத்தெடுத்து வருகிறது. அது கடந்த ஆண்டு தொற்றுநோயால் உருவான மந்தநிலையிலிருந்து மீள இன்னும் போராடி வருகின்ற ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கு இரட்டை அபாயத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டு சதவீதம் குறைந்து விட்டதாக அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறது. இது 1952ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அதிகரித்து வருகின்ற வேலையின்மையுடன் சேமிப்பும் குறைந்து வருவதால் நடப்பு நிதியாண்டிற்கான கணிப்புகளை மிகவும் குறைத்தே பல பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். எஸ் அண்ட் ப்பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தில் ஆசியா பசிபிக் பகுதிக்கான தலைமைப் பொருளாதார நிபுணராக இருந்து வரும் ஷான் ரோச் தனது கணிப்பை முந்தைய 11 சதவீதத்திலிருந்து 9.8 சதவீதம் என்று குறைத்துள்ளார். ப்ளூம்பெர்க்கின் ஒருமித்த கருத்தான 11%க்கும் கீழே பொருளாதாரம் 9.5% மட்டுமே அதிகரிக்கும் என்று ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கூறுகிறது.

No description available.

‘கோவிட்-19 பரவலின் நீட்டிப்பு இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு பெருத்த தடையாக இருக்கும்’ என்று குறிப்பிடுகின்ற சிங்கப்பூரைச் சேர்ந்த ரோச் ‘தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைக்கு மாறாக ஏற்கனவே நிரந்தர இழப்பை நாடு எதிர்கொண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% அளவிற்கு நீண்ட கால உற்பத்தி பற்றாக்குறை இருக்கும் என்று பரிந்துரைப்பதாகவே அது இருக்கிறது’ என்கிறார்.

புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக ஏற்பட்ட சமீபத்திய உயர்வால் இந்தியாவில் மொத்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 2.189 கோடியாக உயர்ந்துள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நடந்துள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கை மே 09 சனிக்கிழமையன்று 4,187 ஆக உயர்ந்துள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இந்த நெருக்கடி இன்னும் கூடுதலாக மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜூலை இறுதிக்குள் 10,18,879 இறப்புகளை ஒரு மாதிரி கணித்துள்ளது. அந்த எண்ணிக்கை தற்போதைய அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 2,38,270இலிருந்து நான்கு மடங்கு அதிகமானதாக இருக்கிறது.

மிகக் கடுமையான திடீர் அறிவிப்பு 

தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் மிகப் பெரிய பொருளாதார மையங்களில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், 2020ஆம் ஆண்டைப் போலவே இப்போதும் இந்திய ஏழைகள் மீண்டும் அதிக பாதிப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். சென்ற ஆண்டு பிரதமரால் உத்தரவிடப்பட்ட பொதுமுடக்கத்திலிருந்தே இன்னும் அவர்கள் மீண்டிருக்கவில்லை கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நரேந்திர மோடி மேற்கொண்ட கடுமையான, திடீர் நடவடிக்கை மும்பை, புதுதில்லி போன்ற நகரங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேற வழிவகுத்தது. அந்த தொழிலாளர்கள் தங்களுடைய வீடுகளுக்குச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான மைல்கள் நடக்க வேண்டி வந்தது.

பொதுவாக குமார் போன்றவர்கள் ஒப்பந்தங்கள் எதுவுமில்லாமல் மிகக் குறைந்த ஊதியத்திற்கே வேலை செய்து வருகிறார்கள். அகமதாபாத் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியரான ஜீமோல் உன்னியின் கணக்கீடுகளின்படி ஏறக்குறைய 41.1 கோடி தொழிலாளர்களை இந்திய முறைசாராப் பொருளாதாரம் பயன்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் ஆய்வுகளைப் பயன்படுத்தி அவர் இந்த எண்ணிக்கையைப் பெற்றிருந்தார். குறைந்த ஊதியம் தருகின்ற விவசாயத்துறை அந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கட்டுமானத் துறை 5.6 கோடிப் பேருடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றிராத இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் அரசாங்கங்களின் உதவிகளைப் பெற முடியாதவர்களாகவே இருக்கின்றனர். நோய்க்கிருமி உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் நிலையில் மிகக்குறைவான படுக்கைகளுடன் இயங்கி வருகின்ற நெரிசலான மருத்துவமனைகளுக்குள் தீவிர சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் அனுப்பப்படுகின்ற ஆபத்தான சூழ்நிலையில் தங்களுடைய அன்றாடச் செலவினங்களுக்காகச் செலவிட்ட பிறகு சுகாதாரப் பாதுகாப்பு, மருந்துகளுக்கு என்று மிகக் குறைவான பணம் மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்கிறது.

No description available.

தளர்ந்து போன சேமிப்பு

தொழிலாளர்களின் வீட்டு சேமிப்பு குறைந்து வருவது, அவர்களுடைய வருமானம் வீழ்ச்சியடைவது போன்றவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% இருக்கின்ற உள்ளூர் நுகர்வு மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தரகு நிறுவனமான மோத்திலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொருளாதார வல்லுனராக இருக்கின்ற நிகில் குப்தா மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.1% என்றிருந்த வீட்டு சேமிப்பு டிசம்பர் வரையிலான காலாண்டில் 22.1% ஆகக் குறைந்திருக்கிறது என்கிறார். மேலும் முழு ஆண்டிற்கான இந்த எண்கள் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஜப்பான் போன்ற நாடுகளை விட இந்தியாவின் சேமிப்பு வளர்ச்சி பின்தங்கியிருப்பதையே காட்டுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

‘வீட்டு சேமிப்பில் மெதுவான உயர்வு, அதேபோன்ற அல்லது இன்னும் மெதுவான நுகர்வு வீழ்ச்சி போன்றவை இந்தியாவில் இருக்கின்ற பலவீனமான வருமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன’ என்று குறிப்பிடுகின்ற குப்தா ‘அது அப்படி இருக்குமென்றால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்குத் தேவைப்படுகின்ற பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டு விடும்’ என்கிறார்.

தனியார் ஆய்வு நிறுவனமான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட் லிமிடெட்டின் தரவுகளிலிருந்து மார்ச் மாதத்தில் ஆறரை சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட எட்டு சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிய வருகிறது.

கடந்த ஆண்டு தொடங்கிய குழப்பங்கள் அனைத்தின் விளைவாக இந்தியாவில் வருமான சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஏழரை கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டதாக  கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது அலை இன்னும் பலரை சாய்க்கப் போகின்றது. இந்த ஆய்வில் தினசரி வருமானம் 150 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருப்பவர்களை ஏழைகளாகவும், 151 முதல் 750 ரூபாய் வரை உள்ளவர்களை குறைந்த வருமானம் கொண்டவர்களாகவும், 3,750 ரூபாய் அதற்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களை அதிக வருமானம் உள்ளவர்களாகவும் பியூ எடுத்துக் கொண்டுள்ளது.

பெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு இன்னும் மோசமான எண்ணிக்கையைக் காட்டுகிறது. அதில் இந்த தொற்றுநோயின் போது தேசிய தினசரி குறைந்தபட்ச ஊதிய வரம்பான 375 ரூபாய்க்கும் கீழே சுமார் இருபத்தி மூன்று கோடிப் பேர் சென்று விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

பொதுமுடக்கத்தின் போது புனே ரயில் நிலையத்திற்கு வெளியே மக்கள் அமர்ந்திருக்கிறார்கள்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவாகக்கூடும் என்றாலும், அது மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாகவே இருக்கும் என்று லாபநோக்கற்ற அமைப்பான ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.  கடந்த மாதம் ஒரு நேர்காணலின் போது பிளாக்ஸ்டோன் குரூப் இன்க் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் இந்தியாவின் நீண்டகால வாய்ப்புகள் மீது தனக்கு ‘நம்பிக்கை’ இருப்பதாகக் கூறியிருந்தார். பல நூற்றுக்கணக்கான கோடி ருபாய்களை முதலீடு செய்து பல பெரிய அலுவலகக் கட்டிடங்களை நாட்டில் வைத்திருக்கும் அந்த தனியார் முதலீட்டு நிறுவனம் இந்தியாவில் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தப் போவதாக அவர் கூறினார். ‘முந்தைய காலகட்டத்தில் முதலீடு செய்ததை விட அடுத்த பத்து ஆண்டுகளில் நாங்கள் இன்னும் அதிகமாக முதலீடு செய்யப் போகிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.

முறைசாராப் பொருளாதாரத்தில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற மோதல்கள் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று கூறிய ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் ‘ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இப்போது முறைசார்ந்த துறை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துள்ள அதே வேளையில்  முறைசாராத் துறை மிகுந்த துயரத்தில் உள்ளது’ என்கிறார்.

மும்பையில் உள்ள உணவகத்தில் சுமார் 20,000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு சமையல்காரராக இருந்த ஏ.கே.சிங் போன்ற தொழிலாளர்களுக்கு இதுபோன்ற மெதுவான வளர்ச்சி மிகவும் மோசமான செய்தியாகவே இருக்கும். வட இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரான கோரக்பூருக்கு டயர் தொழிலைத் தொடங்குவதற்காக சமீபத்தில் சென்றுள்ள அவர் தனது தொழிலுக்கான கடனுக்காக காத்து நிற்கிறார்.

‘எனது சேமிப்பு மற்றும் கடைசி சம்பளத்திலிருந்து பெற்ற பணத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்’ என்று கூறிய அவர் ‘ஆனால் இங்கே கடந்த ஒரு வாரமாக பொதுமுடக்கம் உள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள்கூட எனது கடையைத் திறக்க முடியவில்லை என்கிற போது அதிலிருந்து எவ்வாறு நாங்கள் சம்பாதிப்பது?’  என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

https://indianexpress.com/article/india/tens-of-millions-plunge-into-poverty-in-covid-ravaged-india-7307783/