அதுல் தில்கோன்கர் (தமிழில்:மோசஸ் பிரபு) எழுதிய "மாதவ் காட்கில் என்ற மக்கள் விஞ்ஞானி" கட்டுரை | Madhav Gadgil Article - www.bookday.in

மாதவ் காட்கில் என்ற மக்கள் விஞ்ஞானி – அதுல் தில்கோன்கர் (தமிழில்:மோசஸ் பிரபு)

மாதவ் காட்கில் என்ற மக்கள் விஞ்ஞானி

அதுல் தில்கோன்கர் (பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்)

தமிழில்:மோசஸ் பிரபு.

 ஒரு நாள் இரண்டு பள்ளி மாணவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சதாராவுக்கு அருகிலுள்ள யவ்தேஷ்வர்  என்ற மலையில் சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தனர். அவர்கள் தாகம் எடுத்து தண்ணீர் அருந்துவதற்கு கோயிலுக்கு அருகிலுள்ள கிணற்றின் அருகே சென்றபோது, அங்கிருந்த பூசாரி ஒருவர் அவர்களை இடைமறித்தார்,

“நீங்கள் பிராமண ஜாதியை சேர்ந்தவர்களா என்ற கேள்வியெழுப்பினார்?  இந்த தண்ணீர் மற்ற ஜாதியை சேர்ந்த மக்களுக்கு இல்லை” எனக்கூறினார். அதில் ஒரு மாணவரான மாதவ் காட்கில், “நாங்கள் இருவரும் பிராமணர்கள் அல்ல” என்று பதிலளித்தார்.

ஜாதி அமைப்பு என்பது இந்திய சமூகத்தைப் பீடிக்கும் ஒரு கொடிய நோய் என்ற கருத்தை அவரது பெற்றோர்கள் அவருக்குள் விதைத்தனர். தாகத்தால் வறண்டு போனாலும், ஜாதிய பாகுபாட்டை அவரால்  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மாதவ் காட்கில் தந்தை, தனஞ்சய்ராவ் காட்கில் ஒரு தாராளவாத பொருளாதார நிபுணர், சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணையிலிருந்து நீர் விநியோகத்தை மேற்பார்வையிடும் ஆணையத்தில் பணியாற்றியவர்.

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்துறை முன்னேற்றம் அவசியம் தொழில்துறை முன்னேற்றத்திற்கு மின்சாரம் அவசியம். ஆனால் இயற்கையை பெருமளவு அழித்து அதை நிறைவேற்றக்கூடாது அது மக்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும் என்பார் மாதவ் காட்கில்.

ஆய்வாளர் இராவதி கார்வே என்பவர் மாதவ் காட்கில் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர். அவரது அகழ்வாராய்ச்சி பற்றிய  விவரங்களை கேட்டறிந்து, ஆராய்ச்சி களப் பயணங்களில் அவருடன் செல்ல ஆர்வம் காட்டினார் மாதவ். பறவையியலாளர் சலீம் அலியுடனான உரையாடல்கள் பறவைகளை பற்றி அறிந்துகொள்வதில் அவரது ஆர்வத்தை அதிகரித்தது.

இந்த  சம்பவங்கள் அனைத்தும் மாதவ் காட்கிலுக்கு பதினான்கு வயதாக இருந்தபோது நடந்தவை. அதே ஆண்டில், அவர் “காடுகளிலும் வனாந்தரங்களிலும் சுதந்திரமாக பயனம் செய்யும் ஆர்வமிக்க மாணவராக இருந்தார்.  ஒரு உயிரியலாளராக”(BIOLOGIST) மாறவும் முடிவு செய்தார்.

எறும்புகள், பட்டாம்பூச்சிகள், தவளைகள் மற்றும் திமிங்கலங்கள் முதல் பாசிகள், களைகள், கற்றாழை மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான பைன் மரங்கள் வரை அனைத்து வகையான உயிரினங்களையும் காட்கில் நேசித்தார். இயற்கையை அதன் பல வடிவங்களில் காண, அவர் இமயமலையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரை, நாகாலாந்திலிருந்து தார் பாலைவனம் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் மலையேற்றம் செய்தார். அவரது கல்லூரி காலங்களில், அவர் ஒரு திறமையான ஓட்டப்பந்தய வீரர், நீச்சல் வீரர், டென்னிஸ் வீரர் மற்றும் ஸ்குவாஷ் வீரராக இருந்தவர். திமிங்கலங்கள் தண்ணீரை உமிழ்வதையும், கடல் மின்மினிப் பூச்சிகளைப் போல ஒளிரும் பயோலுமினெசன்ட்  நோக்டிலுகாவையும் (ஒளியை வெளியிடு உயிரினங்கள்) பார்த்து ரசிப்பது அவருக்குபிடிக்கும். ஒருமுறை, ஒரு காட்டை ஆய்வு செய்வதில் முழுமையாய் ஈடுபட்டபோது, திடீரென்று நேரம் அதிமாகி இருட்டிவிட்டது. காட்டு யானைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால்  அதிலிருந்து தப்பிக்க இரவு முழுவதையும் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அப்படியே உறங்கிவிட்டார்.

உயிரினங்கள் மீதான இந்த உள்ளார்ந்த அன்பு “பயோபிலியா”(BIOPHILIA) என்று அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி காட்கில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து அறிந்து கொண்டார், சமூக உயிரியலை நிறுவிய இயற்கை ஆர்வலர் எட்வர்ட் ஓ. வில்சனுடன் நெருக்கமாக பணியாற்றினார். டி.என்.ஏவின் இரட்டை ஹெலிக்ஸ் கட்டமைப்பைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான மரபணுவியலாளர் ஜேம்ஸ் வாட்சனுடனும் அவர் தொடர்பு கொண்டார். தொலைதூரம் சென்றாலும் சரியான பூக்களில் இருந்து துல்லியமாக தேனைச் சேகரிக்கும் தேனீக்களைப் போல, காட்கில் ஒரு  ஆக்கப்பூர்வமான மனோபாவத்தை வளர்த்துக்கொண்டார் அதாவது உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரை சந்தித்தாலும் சரி, கடலுக்குச் செல்லும் மீனவரைச் சந்தித்தாலும் சரி, அவர் அனைவரையும் ஒரே மாதிரியான அன்புடன் அணுகினார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார், நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் அவர்களுடன் வாழும் உழைக்கும் மக்கள் சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்ய எண்ணற்ற மக்களுடன் ஆர்வமுடன் உரையாடினார்.

புனிதமான தோப்புகள் (SCARED GROVES)

Champions of the Earth Award 2024 - Rau's IAS

ஹார்வர்டில் கணித உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய பிறகு, காட்கில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா வித்யான் வர்தினியில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். அவரது வழிகாட்டியும், தாவரவியலாளருமான வாமன்ராவ் வர்தக், அவரை புனாவில் உள்ள போர் (BHOR) என்ற பகுதிக்கு அருகிலுள்ள வரந்தா படித்துறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த அடர்ந்த காடுகளின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருந்தாலும், இப்பகுதியில் உள்ள “புனித தோப்புகள்” அப்படியே இருந்தன. இருவரும் விரிவாகப் பயணம் செய்தனர், உள்ளூர் மக்களுடன் பேசினர், இந்த புனித தோப்புகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர், பெரும்பாலும் கிராமங்களில் அல்லது மரங்களின் கீழ் உறங்கினர் இந்த வேலையின் போதுதான் அவர்கள் பல புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்தனர்.

அவர்களின் கூட்டு ஆய்வுக் கட்டுரையான “இந்தியாவின் புனித தோப்புகள்: பாதுகாப்புக்கான ஒரு வேண்டுகோள்” (SCARED GROVES OF INDIA: PLEA FOR CONSERVATION) மும்பை BOMBAY NATURAL SOCIETY என்ற  இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை வாசித்த குஷ்வந்த் சிங் ILLUSTRATED WEEKLY OF INDIA என்ற இதழிலும் இதை வெளியிட்டார். அதன்பிறகு, காட்கில் ஆங்கிலம் மற்றும் மராத்தி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்து சூழலியல் சார்ந்து எழுதினார்.

பின்னர், விண்வெளி விஞ்ஞானியான சதீஷ் தவான் அவர்கள்  பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு (INDIAN INSTITUTE OF SCIENCE) மாதவ் காட்கிலை அழைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டில், காட்கில் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தை (CENTRE FOR ECOLOGICAL SCIENCES) நிறுவினார், இது இந்தியாவில் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கு அடித்தளம் அமைத்தது. உலகளவில், 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பொருளாதாரம், சமூகவியல், மானுடவியல், தத்துவம் மற்றும் அறிவியல் போன்ற பாடத்திட்டத்தோடு சுற்றுச்சூழலையும் ஒரு பகுதியாக இணைத்துப் படிக்கத் தொடங்கினார்கள். இது பிரத்யோகமான சுற்றுச்சூழல் கல்விக்கு வழிவகுத்தது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 1980ஆம் ஆண்டுகளில், காட்கில் பொருளாதார நிபுணர்கள், சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், உள்ளூர் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ள முக்கிய அதிகாரிகளை ஒன்றிணைத்து மக்களை மையப்படுத்திய சுற்றுச்சூழல் குறித்த புரிதலை தனது “சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின்” மூலமாக உருவாக்க துவங்கினார்,  இந்த அமைப்பு  பாதிக்கப்படும் மக்கள் பார்வையிலிருந்து பன்முகத்தன்மை கொண்டதாகவும் செயல்பட்டது.

அரசின் அநீதியான பாகுபாடு

உள்ளூர் மக்களின் அனுபவங்களை ஆவணப்படுத்த அவரது மாணவர்கள் நேரடியாக காடுகளுக்குச் சென்றனர். அந்த நேரத்தில், கர்நாடக அரசு ஒரு டன் மூங்கிலை காகித ஆலைகளுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு விற்றது, அதே நேரத்தில் கூடைகள் மற்றும் பிற மூங்கில் பொருட்களை தயாரிக்கும் சாதாரன கைவினைஞர்கள் ஒரு டன்னுக்கு ரூ 5,000 செலுத்த நிர்பந்தித்தது. இது ஏழைகளுக்கு எதிரான அப்பட்டமான அநீதியாகும் மற்றும் அதீத லாபத்திற்காக சுற்றுச்சூழல் அழிவை ஊக்குவித்தது. காட்கில் இதுபோன்ற பிரச்சனைகளை முறையாக ஆவணப்படுத்தவும் கடுமையாக பகுப்பாய்வு செய்யவும் தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள காடுகள் மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள மக்கள் குறித்து அவர் ஆய்வுகளை செய்தார்.

“மகாத்மா ஜோதிபா பூலே ஷேத்கார்யாஞ்சா அசுத்” (1883) என்ற புத்தகத்தில் இந்த அடக்குமுறை கொண்ட வனத்துறையை வலுவாக எதிர்க்க வேண்டும்” என்று முழங்கினார். இது கடந்த காலத்தில் நிலவிய பாகுபாடு மட்டுமல்ல,  நிகழ்காலத்திலும் இதுதான் நிலை என்பது புரிந்தது. காட்கில் 1982 ஆம் ஆண்டு எழுதிய “இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை” என்ற கட்டுரையில் இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் பெருமளவு இருந்தபோதிலும், இந்த வளங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மிகக் குறைவாக இருந்ததாக கருதினார், இது கணக்கிட முடியாத இழப்புகளுக்கு வழிவகுத்தது எனக் கூறினார். உள்ளூர் மக்கள் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்து வந்ததால், அவர்கள் அதைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருந்தனர், மேலும் பாதுகாப்பதற்கான பொறுப்பும் நிர்வகிப்பதற்கான உரிமையும் அவர்களிடம் இருக்க வேண்டும்.

அவரது முயற்சியால், நீலகிரி பகுதி இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டது, மேலும் பந்திப்பூர் காடுகளுக்கு சரணாலய அந்தஸ்து வழங்கப்பட்டது. கர்நாடகாவில் பெட்டி ஆற்றில் அமைக்கப்பட உள்ள அணையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து  ஒரு  அறிக்கையை வெளியிட்டார்; அவரது கண்டுபிடிப்புகளைக் கவனத்தில் கொண்டு, அணை கட்டும் முயற்சி ரத்து செய்யப்பட்டது.

காட்கில் ஒரே நேரத்தில் ஆராய்ச்சி, கற்பித்தல், கற்றல் மற்றும் பொதுமக்களோடு உரையாடுதல் ஆகியவற்றை அர்ப்பணிப்புடன் தொடர்ந்தார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை நிறுவ இந்திரா காந்தி நியமித்த குழுவில் பணியாற்றினார். அப்போது நடைபெற்ற, அமைதி பள்ளத்தாக்கு, சிப்கோ மற்றும் கர்நாடகாவின் கிட்டிகோ-ஹச்சிகோ போன்ற முக்கிய சுற்றுச்சூழல் இயக்கங்களிலும் இணைந்து பணியாற்றினார்.

மேற்கு தொடர்ச்சிமலை அறிக்கை

மாதவ் காட்கில் | ஐநாவின் பூமி வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்

மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 1,600 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பல்லுயிர் பெருக்கம் நிறைந்தது. அவற்றை பாதுகாக்கக்கோரி, உள்ளூர் மக்கள் 1987 இல் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தனர், அதில் காட்கில் கலந்து கொண்டார், அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டார்.

2011 ஆம் ஆண்டில், மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் 300 பக்க அறிக்கையை அவர் எழுதினார், சுற்றுச்சூழல் மண்டலங்களை வகைப்படுத்தினார், அழிவுக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தார் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்தார். ஆக்கிரமிப்பு, சட்டவிரோத சுரங்கம் மற்றும் காற்றாலை பண்ணைகள் போன்ற நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், மேற்குத் தொடர்ச்சி மலையை காப்பாற்ற முடியாது என்று அவர் எச்சரித்தார். அப்பகுதிகளில் வாழும் உள்ளூர் மக்கள் பல நூற்றாண்டுகளாக இயற்கையைப் பாதுகாத்து வருவதால், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அரசின் விரிவாக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.  நீர் ஆதார வளங்கள், சிறிய அணைகள் மற்றும் நுண்ணிய நீர்மின் திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை மட்டுமே அவர் முன்மொழிந்தார். ஆயினும், எந்த மாநில அரசும், மத்திய, அரசும் அது எந்த கட்சியாக இருந்தாலும், அவரது பரிந்துரையை செயல்படுத்த தயாராக இல்லை.

“வளர்ச்சி தவிர்க்க முடியாதது, எனவே சுற்றுச்சூழல் சேதம் பொறுத்துக் கொள்ளப்பட வேண்டும்.” என்ற வழக்கமான பழைய பல்லவியே தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் செங்குத்தான சரிவுகளில் உள்ள காடுகளை அழித்தால் நிலச்சரிவுகள் அதிகரித்து பாதிப்பை உருவாக்கும், மேலும் பெருமளவு மண் அரிப்பு அடிக்கடி பேரழிவு வெள்ள அபாயத்திற்கு வழிவகுக்கும்.

ஒவ்வொரு பேரழிவும் இந்த வளர்ச்சி என்றழைக்கப்படுவது எவ்வளவு தற்காலிகமானது மற்றும் பலவீனமானது என்பதை வெளிப்படுத்துகிறது – ஆயினும் அதே பாதை தொடர்கிறது. பெரிய பேரிடர்களுக்குப் பிறகு, மக்கள் “காட்கில் பரிந்துரையை” நினைவு கூறுகிறார்களா. என்று கேட்டபோது, “நீங்கள் தவறான திசையில் ஓடுகிறீர்கள் என்றால், வேகமாக ஓடுவது உதவாது” என்று பதிலளித்தார்.

சூழலியல் அமைப்பு

பல ஆண்டுகளாக சமூக வாழ்க்கை, அரசியல் மற்றும் நிர்வாகத்தை உன்னிப்பாக கவனித்த காட்கில், இந்திய சமூகத்தை சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் மூன்று குழுக்களாகப் பிரித்தார்:

சுற்றுச்சூழல் சார்ந்து வாழும் மக்கள் அதாவது உள்ளூர் இயற்கை வளங்களை நம்பியுள்ளவர்கள்.
புவிப்பரப்பில் வாழக்கூடிய அனைத்துவிதமான மக்கள் அனைத்தையும் உண்ணக்கூடிய உயிரினங்கள் (சந்தைகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் பெரியளவில் வாய்ப்பை பெற்றவர்கள்), மற்றும்
சுற்றுச்சூழல் அகதிகள் (குறைந்த சந்தை வாய்ப்பை பெற்ற பாரம்பரிய வளங்களை இழந்தவர்கள்).

இந்த சூழலியல் கட்டமைப்பு சமமற்ற முறையில் உள்ளது என்றும்  மக்களுக்கிடையே மோதலை எவ்வாறு தூண்டுகிறது என்பதையும் காட்டுகிறது, புவிபரப்பில் வாழும் மக்களின் நுகர்வு சுற்றுச்சூழல் மக்களை அகதி நிலைக்கு தள்ளுகிறது. இயற்கை வளங்களின் இழப்பு நிலமற்ற தொழிலாளர்கள், குறு விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், சிறு மீனவர்கள், நாடோடிகள் மற்றும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை அழித்துள்ளது.

அவரது சுயசரிதையின் ஒவ்வொரு அத்தியாயமும் காளிதாச, கேசவ்சுத், பஹினாபாய், போர்கர், மஹனோர் மற்றும் விந்தா ஆகியோரின் கவிதைகளுடன் தொடங்குகிறது. ஜார்க்கண்டை தளமாகக் கொண்ட கவிஞர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் ஜெசிந்தா கெர்கெட்டா இடம்பெயர்ந்தவர்களின் வேதனையை வெளிப்படுத்தும் ஒரு கவிதையையும் இது மேற்கோள் காட்டுகிறது:

கோயில்கள், மசூதிகள் மற்றும்
தேவாலயங்கள் அழிக்கப்பட்ட பிறகு,
உங்கள் வலி மிகவும் தீவிரமாக உள்ளது
பல நூற்றாண்டுகளாக நீங்கள்
அதைப் பற்றிய அக்கறையை வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் சூழலிய
அழிவுக்கு யார் பொறுப்பேற்பார்…?

சூழலியல் பிரச்சனைகளை கவிதை, அறிவியல் மற்றும் நகைச்சுவையாக எழுதுவதில் திறன்பெற்ற காட்கில், தனது பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்களை தொடர்ந்து ஈடுபடுத்தி, பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை வளர்த்து வருகிறார். 82 வயதிலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட நேரடி மற்றும் மறைமுக சேதங்களை அவர் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்.

“அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வந்தர்களுக்கும், நான் எப்போதும் உண்மை என்று நம்புவதை துணிவுடன் பேச வலியுறுத்தி வருகிறேன்” என்று அவர் கூறுகிறார். ஒரு உண்மையான விஞ்ஞானி எல்லாவற்றையும் கேள்வியெழுப்புவார் நான் ஒருபோதும் அதிகாரத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளமாட்டார், எப்போதும் ஆதாரம் இல்லாதவற்றை கேள்வியெழுப்புவார். இந்தக் கொள்கையை காட்கில் தனது வாழ்நாள் முழுவதும் நிலைநிறுத்தி வந்துள்ளார்.

எழுதியவர்:

– அதுல் தில்கோன்கர் 
சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்
தமிழில்:மோசஸ் பிரபு

ஜனவரி மாதம் ப்ரண்டலைன் இதழலில் வெளீயான கட்டுரை

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *