பெரணமல்லூர் சேகரன் எழுதிய "முதியவரின் மௌனம்" சிறுகதை | Peramallur Sekeran's "Muthiyavarin Mounam" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

பெரணமல்லூர் சேகரன் எழுதிய “முதியவரின் மௌனம்” சிறுகதை

“முதியவரின் மௌனம்” சிறுகதை

“முத்தமிழ் முதியோர் இல்லம்” அதிகாலைப் பொழுதிலேயே களை கட்டியிருந்தது. இன்று அந்த மாவட்டத்தின் கலெக்டர் வருவதாக இருப்பதுதான் அதற்கான காரணம்.

முதியோர் இல்ல நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் வருகையை முந்தைய நாளே சொல்லியிருந்ததால் முன்கூட்டியே தங்களை மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சிக்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டனர். மற்றவர்களைப் போல் தங்கப்பன் இல்லை. அவர் வழக்கம் போலவே மௌனித்திருந்தார். எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

அவரவர் தங்களுக்குரிய நட்புகளுடன் தங்களது பழைய வாழ்க்கையின் துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமான பாணியை விட்டு இன்று மாவட்ட ஆட்சியர் வருகை குறித்தே அளவளாவிக் கொண்டிருந்தனர்.

“கலெக்டர் நம்மள மாதிரி ஒரு பொம்பளயாமே”

“அவங்க பொம்பள இல்ல. அறியாத இளவயசுப் பொண்ணுதான்.”

“சின்ன வயசுல கூட கலெக்டர் வருவாங்களா?”

“ஓ தாராளமா வரலாம்”

இப்படியான உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்த இரு மூத்த பெண்கள் உட்கார்ந்திருந்த சிட்டிங் பெஞ்சில் காலை லேசாக ஆட்டிக் கொண்டிருந்ததை எதிர் சிட்டிங் பெஞ்சில் அமர்ந்திருந்த தங்கப்பன் கவனித்தார்.

காலைத் தொங்கப் போட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால் கால் வீக்கமாகிவிடும். அதனால் காலை ஆட்டியபடியே உட்கார்ந்திருக்க வேண்டுமென அவரது மகன் தங்கமணி சொல்வது வழக்கம். தனது மகனைப் படிக்க வைத்து அவனாகவே பரீட்சை எழுதி அரசு வேலை கிடைத்ததில் தங்கப்பனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

“எல்லாமே உங்களாலதானப்பா.. நான் கொழந்தையா இருக்கும்போதே நீங்க மட்டும் வேற கல்யாணம் கட்டிக்கிட்டிருந்தா நான் இந்த அளவுக்கு இந்த பத்து வருசத்துல தாசில்தார் அளவுக்கு உயர்ந்திருப்பேனான்னு சொல்ல முடியாதுப்பா”

தங்கமணியின் வார்த்தைகள் இன்று பேசுவதைப் போலவே இருக்கும் தங்கப்பனுக்கு. ஆனால் தங்கப்பனுக்கு வாய்த்த மருமகள் அப்படியில்லை என்பது தங்கமணிக்குத் திருமணமான ஒரு மாதத்திலேயே உணர்ந்து கொண்டார் தங்கப்பன்.

தங்கமணிக்குத் தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. நல்ல குடும்பப் பாங்கான பெண்ணாக அதிலும் பட்டதாரியான பெண்ணாக அமைய வேண்டும் என்று காத்திருந்தான் தங்கமணி. ஜாதகம் ஜோசியம் பொருத்தம் என்று நாள் மாதம் ஆண்டு கடந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இவற்றுக்கெல்லாம் காரணமான இருவருமே கலந்து பேசும்போது,

“தங்கமணி, இதுக்கு மேலயும் நம்மால பொறுமையா இருக்க முடியாது. கடைசியாக கல்யாணத் தரகர் நம்மக்கிட்ட கொடுத்த ஜாதகத்துல பத்துக்கு ஆறு பொருத்தம் இருக்குன்னு சொன்னாரே அந்தப் பெண்ணையே முடிச்சிடலாம்” என்றார் தங்கப்பன் தங்கமணியைப் பார்த்தபடி.

“நாம ரெண்டு பேரும் நேர்ல போய் பார்த்த நாலு பெண்கள்ளயே இந்தப் பொண்ணு அழகா இருந்தாலும் நம்ம குடும்பத்துக்கேத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்குமா? உங்களை சரியா கவனிச்சிக்குமான்னு சந்தேகமா இருக்குப்பா!” என்றான் தங்கமணி.

“என்னை நானே பாத்துக்குவேன். நீ கவலையேபடாத. நீ வாழறதப் பாரு. என் கதை முக்கால்வாசி முடிஞ்சிப் போச்சி”

இப்போது சொன்ன மாதிரிதான் இருந்தது தங்கப்பனுக்கு. ஆனால் தன் கதை முடியவில்லையே என்று சப்புக் கொட்டிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தார்.

“வானமே இடிஞ்சி விழுந்தாலும் தங்கப்பன் மட்டும் மௌன சாமியாவே இருக்காரு பாருய்யா” என்றபடி இரண்டு முதிய ஆண்கள் சொல்லிக் கொண்டே போனது தங்கப்பன் காதுகளில் விழுந்தன.

தங்கப்பன் அப்படி ஒன்றும் மௌன சாமியல்ல. அவர் வாழ்ந்த கிராமத்தில், அவர் வாழ்ந்த தெருவில், அவர் பார்த்த விவசாய நிலத்தில் அவருக்கென்று மரியாதை இருந்தது. காரணம் அவர் என்றுமே தானுண்டு தன் வேலையுண்டு என்று உழைத்து வந்தவர் என்பதால் மட்டுமல்ல. அவர் தாயில்லாமல் இருந்த தன் மகன் தங்கமணிக்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். அம்மாவுக்கு அம்மாவாக அப்பாவுக்கு அப்பாவாக தங்கமணி யைக் கவனித்துக் கொண்டதைப் பாராட்டிப் பேசாத ஆளே கிடையாது. மற்றவர்கள் பேசும் பேச்சுக்குப் பதில் பேசுவதோடு தானும் எல்லா உரையாடல்களிலும் கலந்து கொண்டவர் தான். தங்கப்பன் பேச ஆரம்பித்தால் கலகலப்பாகிவிடும் அந்த இடம்.

அப்படிப்பட்ட தங்கப்பன் மௌன சாமியானது இப்பவும் வந்து மோதியது மனதில். எதிர்பாராத மகனின் மரணம் நிலைகுலையச் செய்தது தங்கப்பனை. தாசில்தாராக வேலை பார்த்து ஆறு மாதம் கூட முடியவில்லை. தான் கும்பிட்டு வந்த எந்த சாமிக்கும் தன் மனைவி கும்பிட்டு வந்த எந்த தெய்வத்துக்கும் இரக்கமில்லாமல் சாலை விபத்தில் தங்கமணியை அள்ளிக் கொண்டு போனதை இப்போது நினைத்துக் கொண்டாலும் கண்களில் கண்ணீர் மாலை மாலையாக வரும். இப்போதும் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நினைவுகளில் நீந்தினார் தங்கப்பன்.

மகன் இறக்கும்போது பேத்தி உருவாகியிருந்தாள் மருமகள் வயிற்றில். அந்தக் குழுந்தையைப் பார்க்க்கக் கூட மகன் கொடுத்துவைக்கவில்லையே என்று மகனின் மரண நிகழ்வில் தங்கப்பன் அழுது புரண்டது அனைவரையும் கரைத்தது. ஆனால் மருமகளைத் தேற்ற ஆணாக இருக்கும் தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் தங்கப்பனை வதைத்தது.

எத்தனையோ குடும்பங்களில் வரும் மருமகள்கள் மாமனாரை அப்பாவாக அழைத்துப் பாசமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி வாய்க்கவில்லை தங்கப்பனுக்கு. அந்த வருத்தத்தை என்றைக்குமே மகனிடம் காண்பித்துக் கொண்டதில்லை தங்கப்பன். தாசில்தார் பணியில் இருக்கும் தங்கமணி டென்ஷன் முடிந்து வீட்டுக்கு வரும்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் அவனுக்கு வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் தங்கப்பன். அதனால் எல்லாவற்றையும் மென்று விழுங்கிக் கொண்டார் தங்கப்பன்.

எதிர்பாராதவை தொடர்ந்தே வந்தன தங்கப்பன் வாழ்வில். தனது நாற்பது வயதிலேயே மனைவி மாண்டு போனதும் தனது அறுபது வயதில் மகன் மாண்டு போனதும் ஆறாத வடுவானது தங்கப்பனுக்கு. அடுத்த எதிர்பாராத நிகழ்வாக அமைந்தது மருமகள் ஜானகியின் பெற்றோர் செய்த செயல்.

மகன் மறைந்த ஐந்து நாட்களிலேயே கர்ப்பிணியான தன் பெண்ணை அழைத்துப் போன பெற்றோர் எந்தத் தொடர்பையும் தங்கப்பனிடம் வைத்துக் கொள்ளாதது பேரதிர்ச்சியாக இருந்தது தங்கப்பனுக்கு.

மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்கப் போவதாகக் கேள்விப்பட்ட தங்கப்பன் அதற்காக மகனுக்குச் செய்ய வேண்டிய நடப்பு கருமாதிக்குக் கூட எந்த ஒத்துழைப்பையும் வழங்காத சம்மந்திகளை நினைத்து நினைத்துப் புழுவாகத் துடித்துப் போனார் தங்கப்பன்.

சில மாதங்களிலேயே தன் மருமகளுக்கு அரசு வேலை கருணை அடிப்படையில் கிடைத்ததும் அதைத் தொடர்ந்து ஜானகி மறுமணம் செய்து கொண்ட தகவலும் கிடைத்தது. அந்த நிகழ்வுகளுடன் வாயடைத்துப் போய் மௌன சாமி என்ற பட்டம் பெற்றவரானார் தங்கப்பன்.

வாழ்க்கையே வெறுத்துப் போய் நாளடைவில் தனது நிலத்தை விற்றுப் பாதிப் பணத்தைத் தான் படித்த பள்ளிக்கும் பாதிப்பணத்தை முதியோர் இல்லத்துக்கும் தந்து தொலை தூர மாவட்ட முதியோர் இல்லத்தில் நிரந்தர உறுப்பினரானார் தங்கப்பன்.

சிந்தனையிலிருந்து மீண்ட தங்கப்பன், மைக்கில் அனைவரையும் அழைப்பதைப் புரிந்து கொண்டு நடந்து சென்றார் விழா மேடைக்கு.

கலெக்டர் பேசிக் கொண்டிருந்தார்.
சின்ன வயதுப் பெண். பார்த்தவுடன் ஏதோ ஒரு பரவசம்.

“முதியோர் எனப்படுபவர்கள் முடிந்து போனவர்கள் அல்ல. வாழ்க்கை முழுவதும் போராடி தங்களது வாரிசுகளுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களை அவர்களின் வாரிசுகள் இறுதிவரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் போனதால் முதியோர் இல்லத்தில் வாழ்பவர்கள் நீங்கள். நானும் எனது தாத்தாவைத் தொலைத்து விட்டு நிற்கிறேன். நான் செல்லும் முதியோர் இல்லத்தில் எல்லாம் விசாரிப்பேன். எனது அப்பா தங்கமணியைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தியவர். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். அவர் அப்படி முதியோர் இல்லத்தில் சேரக் காரணமே எனது அம்மாவும் அவரது பெற்றோருமே.”
என்றபடி கண்ணீர் சிந்தினாள். தங்கப்பனும்கூட.

📚 எழுதியவர்:

✍️ பெரணமல்லூர் சேகரன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *