நூல் அறிமுகம்: கதை சொல்ல வந்த புதிய குரல்கள்… – அ.கரீம்நூல்: பேரிருளின் புதுச்சுடர்கள்
ஆசிரியர்: அ. உமர் பாரூக்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க கிளிக் செய்க: பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்

தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்கென்று தனித்த இடமுண்டு. பல  ஜாம்பவான்கள் தமிழ்ச் சிறுகதை உலகத்தை வெவ்வேறு வடிவங்களில் மெருகேற்றிக்கொண்டே வந்துள்ளார்கள். அவர்களை பின் தொடர்ந்து வந்த எல்லா எழுத்தாளர்களும் பல பரிணாமங்களைத் தமிழ்ச் சிறுகதைக்கு வழங்கி உள்ளார்கள். பல ஆயிரம் கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. பல ஆயிரம் எழுத்தாளர்கள் தமிழில் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளார்கள். புதிய புதிய மனிதர்கள்  நிலங்கள் வாழ்வியல் என்று இன்னும் கதையின் அட்சய பாத்திரம் குறையாமல் கதைகளை தந்துகொண்டே இருக்கிறது.

தமிழ்ச் சிறுகதையை முதலில் துவக்கி வைத்தவர் யார் என்ற கேள்விக்கு   இவர்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத வகையிலிருந்தாலும் தமிழ்ச் சிறுகதை உலகம் நூறாண்டு தாண்டியதை மறுப்பதற்கு இல்லை. முதல் கதை வ.வே.சு.ஐயரா? இல்லை அ.மாதவைய்யாவா? என்று கேள்வி வரும்போதே அவர்களுக்கு முன்பே  1877 இல் சாமுவேல் பவுல் ஐயர் என்பவர் ‘சரிகை தலைப்பாகை”  என்ற கதை எழுதி உள்ளதாக எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப் தனது ஆய்வின் வழியே குறிப்பிடுகிறார். இப்படியான நீண்ட தொடர்ச்சியில் புதியதாக இணைந்த கண்ணிகள் “பேரிருளின் புதுச்சுடர்கள்” என்ற தொகுப்பில் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் இணைந்துள்ளார்கள். பெரும்பாலான படைப்பாளர்கள் எல்லோருக்கும் இதுவே  முதல்கதை. 12  கதைகளில் 9பேர் பெண் படைப்பாளிகள் என்பதும் மகிழ்வான முன்னெடுப்பு.

பிரச்சார நெடி இல்லாமலும் கருத்தைத் திணிக்காமலும் கதையின் அழகியலோடு சமகாலத்தைக் கதைகளாக்குவது மிக முக்கியம், இந்த தொகுப்பில் பெரும்பாலான கதைகளைச் சமகாலத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. துவக்க நிலையில் இருக்கும் சிறுசிறு தடுமாற்றத்தை மட்டும் தவிர்த்து பார்த்தால்  எல்லா எழுத்தாளர்களும் மிகச் சிறப்பாகவே கதைகளை எழுதி உள்ளார்கள்.

ஒரு தொகுப்பை வாசிக்க முதல் கதை தேர்வு மிக முக்கியம் அதுவே தொகுப்பைத் தொடர்ந்து வாசிக்க தூண்டுவது, அவ்வகையில் முதல் கதையான ஹேமலதாவின் “பொறி” முக்கியமானது. மதவாத அமைப்பு அதிகாரத்துக்கு வந்தபின்பு சமூகத்தில் நிலவும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம், அதேநேரத்தில் குடும்பத்தில் நிகழும் உளவியல் மாற்றத்தை வாசிக்கும் எல்லோரும் “ஆமாம் உண்மை” என்று உணரும்படி நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

சாந்தி சரவணனின் ‘ஜூம்பூம்பா”. கொரானோ காலத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களில் ஒன்று குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள். நான்கு  வயது குழந்தைக்குக்கூட ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் கொடுமையைக் கதையாக்கியுள்ளார். அந்த கதையைச் சிரித்துக்கொண்டே வாசித்தேன். என் வீட்டில் தினமும் நடக்கும் கூத்தை அப்படியே எழுதியுள்ளார். பெரும்பாலான எல்லா வீடுகளிலும் இதே கூத்தைக் காண முடியும். ராதிகா விஜயபாபுவின் “சுவாதி” பொள்ளாச்சி சம்பவத்தை அப்படியே நினைவுபடுத்துகிறது. திட்டமிட்டு நடத்தப்படும் சிதைக்கும் நம்பிக்கையை “தப்பு செஞ்சவன் எல்லாம் திமிர திரியும்போது எதுவும் செய்யாத நான் ஏன் கூனிக் குறுக வேண்டும்..போடா..”என்ற வார்த்தைகளின் மூலம் சிதையும் மனநிலையை முறித்து நம்பிக்கையைத் தருகிறார். தீபா லட்சுமியின் “அடிமைகள்” கொரோனா காலத்தைச் சொல்லி  எல்லா நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. இந்த கதையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் நல்ல அடிமைகளை மட்டுமே வைத்துக் கொள்வதும் இதர நபர்களை பணியிலிருந்து நீக்குவதும் அதில் பெண்கள் மனநிலையை மிக அழகாகப் பதிவு செய்கிறார் தீபா. குறிப்பாக இஸ்லாமியப் பெண் என்பதினால் நிறுத்தப்படும் அரசியலையும் போகிற போக்கில் நுட்பமாகப் பதிவு செய்கிறார்.மீ.முத்து விஜயனின் “என்னங்க சார் உங்க சட்டம்” கதை அருகாமை பள்ளிகள் மூடப்படும் கொடுமையையும், அதனால் சாமானியர்களின் குழந்தைகளுக்குப் பறிபோகும் கல்விச் சூழலும், அதன் அபாயத்தைப் பேசும் முக்கியமான கதை. காமராஜர் எதற்காக அருகாமை பள்ளிகள் கொண்டு வந்தாரோ அதன் அடிப்படை அம்சத்தைச் சிதைக்கும் நடைமுறை அரசியலைப் பதிவு செய்துள்ளார்.

கம்பம்.மு.ஜெய்கணேஷ்யின் “முடக்கம்” கொரொனோ காலத்தில் ஓட்டல் கடை நடத்துபவர்களிடம் அரசும் கந்துவட்டிக்காரர்களும் மேற்கொள்ளும் சுரண்டலை பேசுகிறது. சமகால கதையை அன்றாட வாழ்வை அதனை உறிஞ்சிக் குடிக்கும் ஒடுக்குமுறையையும் மனதில் நிற்பதைப்போலக் கதையாக்கியுள்ளார்.

சு.இளவரசியின் “மீறல்” சாதிய அமைப்புகளும், மத அமைப்புகளும் மேலும் மேலும் கூர்மைப்படுத்தும் பிற்போக்கு சிந்தனையும் அது குடும்பத்திற்குள் பரவும் மனநிலையும் அதனை உடைத்து வெளியேறத் துடிக்கும் இளம் பறவையின் உள்மனதையும் பேசும் கதை. காயத்திரி தேவியின் ‘மொட்டுகள்” தொடர்ச்சியாக நடந்துவரும் குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறைகளைப் பேசும் கதை. வெளியே பிரச்சினை இருப்பதற்காகவே குழந்தை அதனின் குழந்தைமை இழப்பது எப்படிச் சரியாக இருக்கும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டே அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டு குழந்தைப்பருவத்தையும் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியை எல்லோரை நோக்கியும் காயத்திரி தேவி முன்வைக்கிறார். வீட்டில் மூட்டைப் பூச்சி இருப்பதற்காக வீட்டை கொழுத்தி பூச்சியை அழிக்க நினைப்பது அறிவிலித்தனம். போதிய ஏற்பாடுகள் செய்து பூச்சியை அப்புறப்படுத்தி வீட்டை அதன் அம்சங்களோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

இவள் பாரதியின் “சு’தந்திரம்” கார்ப்பரேட் பத்திரிக்கையில் பணியாற்றும்போது ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளைப் பேசுகிறது. தமிழ்நாட்டில் பல பத்திரிக்கையாளர்கள் அரசின் குறைகளைச் சொல்லியதற்காகவே அந்த நிறுவனத்திலிருந்து பலி வாங்கிய பல சம்பவங்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடியாகவே பார்த்து வருகிறோம். அப்படியான நெருக்கடிகளையும் பத்திரிக்கைத் துறையில் நடக்கும் பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டையும் இவள் பாரதி பதிவு செய்கிறார்.

கொரானோ நோய்த் தொற்று காலத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல இருந்த பல்வேறு நெருக்கடிகளைப் பேசும் கதை ஆஃப்ரின் பானுவின் “அனுமதி” நல்ல தேர்ந்த கதைசொல்லியை போல ஒரே நேர்கோட்டில் துவங்கி முடித்துள்ளார். குஜராத்தில் தனது மனைவிக்குக் குழந்தை பிறந்ததைப் பார்ப்பதற்காகப் போகும் நடைமுறை சிக்கலும், பார்க்க முடியாமல் தவிக்கும் நெருக்கடியையும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.இரா.சுகன்யாவின் “குமிழி” நாடு சுதந்திரம்  பெற்றபின்பு தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கவும் நிரந்தரமான சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையை உத்திரவாதப்படுத்தும் நோக்கில் பொதுத்துறைகளை அரசு உருவாக்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதைய அரசுகள் தயங்கிச் தயங்கி செய்ததை இப்போதைய அரசு ஒரே உத்தரவின் மூலம் தனியார்த் துறையாக அறிவிப்பதும் விமர்சிப்போரை அரசின் அசுர பலத்தைக்கொண்டு  சிறைப்படுத்தும் சூழலில் சுகன்யாவின் குமிழி வங்கி தனியார்மயப்படுத்துவதினால் ஏற்படும் நெருக்கடியையும் குறிப்பாக அரசுத் துறைகளில் மட்டும் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின்படி  வேலை கிடைக்கும் எல்லாம் தனியார்மயம் என்ற தாரக மந்திரத்தினால் மாற்றுத் திறனாளிகள் வாழ்வு நிர்மூலமாக்கப்படும் அபாயத்தைச் சொல்லும் கதை.

இந்த தொகுப்பின் கடைசி கதை கொரானோ காலத்தைத் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் காலமாகக் கட்டமைத்துக்கொண்ட கொடிய காலத்தைச் சொல்லும் முக்கியமான கதை. கொரானோ தொற்று நோயாளியைக் கையில் வைத்துக்கொண்டு அவர்களின் குடும்பத்தினரிடம் நடத்திய சுரண்டலை மிக அற்புதமாக குரு மாணிக்கத்தின் “செலவு” கதை பேசுகிறது. இந்த சுரண்டலில் அகப்பட்ட எல்லோருக்கும் இந்த கதை தவிர்க்கமுடியாத அவர்களின் சொந்த கதையாக இருக்கும்.

“பேரிருளின் புதுச்சுடர்கள்” கதை தொகுப்பில் உள்ள  பெரும்பாலான கதைகள் கொரானோ காலத்தை மையப்படுத்தி அதனின் பல்வேறு முகங்களைப் பேசுகிறது அந்த வகையில் இது முக்கியமான தொகுப்பாகுகிறது. துவக்க நிலையில் இருக்கும் சிறு சிறு குறைகளை மட்டும் எழுத்தாளர்கள் அவர்களின் தொடர் வாசிப்பின் மூலம் சரி செய்துகொள்ள முடியும். புதிய புதிய படைப்பாளர்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக இயங்கி வரும் அறம் கிளைக்கும், அந்த பணிகளைச் சிறப்பாக  ஒருங்கிணைத்து வரும் இந்த புத்தகத்தின் தொகுப்பாளர் அ.உமர் பாரூக், இத்தொகுப்பின் எழுத்தாளர்கள்,  இதனை வெளிக்கொண்டு வந்த பாரதி புத்தகலாயம் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.