நூல் அறிமுகம்: பேரிருளின் புதுச்சுடர்கள் – கார்த்தி டாவின்சிநூல்: பேரிருளின் புதுச்சுடர்கள்
ஆசிரியர்: அ. உமர் பாரூக்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க கிளிக் செய்க: பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்

பேரிருளின் புதுச்சுடர்கள் என்றத் தலைப்பிலான இந்த தொகுப்பை படிக்கையில் எனக்கு வியப்பும் ஆர்வமும் அதீதமாகத் தோன்றின. இந்நூலின் பன்னிரண்டு சிறுகதைகளில் ஐந்து கதைகள் நற்கருத்துகளோடும் சில வழிக்காட்டுதல்களையும் கொடுத்து நேர்மறையாகவும், ஒன்பது கதைகள் சாதாரண மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை எழுத்தில் வடித்து எதிர்மறையாகவும் அமைந்திருக்கின்றன.

இக்கதைகள் பெரும்பாலானவை முற்போக்கு தன்மையுடனும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாகவும் இருப்பது மனதிற்குள் நெருக்கம் கொள்கிறது. மேலும் இத்தொகுப்பு உருவான விதம் குறித்தும் அறம் கிளையின் செயல்பாடுகள் குறித்தும் உமர் பாரூக் எழுதியிருப்பது இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை அதிகமாக்கிட, அதே நேரம், இந்நூல் தோழர் கருப்பு கருணாவிற்காக சமர்ப்பனம் செய்யப்பட்டுமை நூலை இன்னும் நெருக்கி அனுகச் செய்கிறது. பன்னிரண்டு கதைகளும் பெண்ணியம் பேசி, சமூக அக்கறைக் காட்டி, குழந்தைகளின் உளவியலைப் பேசி, நோய்த்தொற்றின் கொடுமைகளைச் சொல்லி, மக்களின் போராட்டத்தை எடுத்துக் காட்டி, சமகால விசயங்களை பிம்பமிட்டு காட்டுகின்றன.

1.பொறி.

அருணா என்ற பெண் கதாப்பாத்திரம் மூலம் முதல் கதை இருந்தாலும் அருணாவே நம்மோடு உரையாடுவதைப்போல இயல்பாக அமைந்திருக்கிறது இக்கதை. ‘ஹரே ராம..’ என்று தொடங்கும் இக்கதை, இறுதியில் ஒரு எலிப்பொறியில் முடித்து வைக்கப் பட்டிருக்கிறது. ஏனென்ற கேள்விக்கு பதில் கதைக்குள்ளேயே இருக்கிறது.

மிக இயல்பாக அனைவருடனும் பழகும் பண்புள்ள கணவன் மனைவி. ஆனால் சிறிது காலமாக கணவன் மட்டும் சில வேண்டாத எண்ணங்களைக் கொள்கிறான். தன் சொந்த மதத்தினரைத் தவிர மற்றவர்களை எதிரியாக பாவிக்கும்படியான நஞ்செண்ணங்கள் அவனது மனதில் விதைக்கப்படுகிறது. அப்படியிருக்க, ஏன் தன் கணவர் இப்படிபட்டவராக மாறினார் என்ற கேள்வி வருகையில், அருணா கண்ட காட்சி அவளைக் குழம்ப வைத்தது. ஒரு அரசியல் கட்சியின் வட்டச் செயலாளராக இருக்கும் குமார் தான் இதற்கு காரணம். குற்றங்கள் செய்யும் பல பேருக்கு வட்டச் செயலாளர் என்றுதான் பட்டங்கள் கிடைக்குமோ என்னவோ என்ற எண்ணத்தை ஆசிரியர் கதையினூடாக ஊட்டி விடுகிறார்.

குமாருடன் பழகும் கணவருக்கு அவன் வேண்டாத எண்ணங்களை மனதில் விதைத்து வருகிறான். எடுப்பார் கைப்பிள்ளையாய் கணவனும் உற்ற உறவினனைப்போல குமாருடன் பழக, அதைக் கண்டித்து கேள்வி கேட்கிறாள் அருணா. அவளது கேள்வியை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன், ஒரு கட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு தன் பங்காக பெருந்தொகையை அளிக்கிறான். சாதி சாதி என்று இழுத்து பிடிக்கிறான். இதையெல்லாம் கண்டவளுக்கு ஆத்திரம் வர, கணவனிடம் அவள் கேள்விக்கேட்க, அவனோ மறுக்க, அவளது கூற்றை ஏற்காதனாகிறான் கணவன். ஆனால் அன்று திடீரென தன் உறவினனைப்போல நினைத்த குமார் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொலை செய்து தற்போது தலைமறைவாகி, போலீஸ் தேடும் குற்றவாளியாகி விட்டான் என்று செய்தி மூலம் அறிந்தப் பின்னர் தன் வாழ்க்கை இணையின் முகத்தைக்கூட பார்க்க முடியாதவனாகி முகம் சுருங்கிப்போகிறான். தன் மனைவியின் கூற்றில் இருந்த நியாயத்தை கேட்காமல் போனதற்கு தலைக்குனிந்து கொண்டான்.

ஆனால் கதையில் ராமனுக்கு கோயில் கட்ட பணம் அதிகம் கொடுத்ததைக் கடிந்து கொண்டிருந்தபோது அருணா சொல்லும் ஒரு சொல், ‘அதென்ன (ராமன்) நம்ம சாமி.? அய்யனார்தான் நம்ம சாமி. இந்த சாமியை என்னைக்கு நீங்க கும்பிட்டிருக்கீங்க.?’ என்று ஒரு கூற்று இடம் பெறுகிறது. இதன்படி கதாசிரியர் நாட்டார் தெய்வங்கள் என்பதையும் அதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதன் மூலம் கதையின் சாரம் நமக்கு புரிய வருகிறது. கடவுள் பக்தி எது என்ற கேள்வி இக்கதையில் இருக்கிறது. பெண்களின் கூற்றுகளை மதிக்காத ஆண்களுக்கு இது சவுக்கடி. இப்படி பல ஆண்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் இடமாகவும் எலிப்பொறியைக் கொள்ளலாம்.2. ஜீம்பூம்பா.

கொரோனா பரவல் என்ற நோக்காட்டு காலத்தால் எழுந்த, இத்தொகுப்பின் முதல்கதை.பிஞ்சு மரத்தில் பழம் தேடியதுப் போல மூன்று வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதும் அதில் வரும் சிக்கல்களும் குழந்தைகளின் இயல்பிற்கும் வகுப்பு ஒழுங்குமுறைக்கும் இடையாலான ஊடாட்டமும், ஒரு போட்டாப்போட்டியாக, இக்கதையில் வெளிபடுகிறது.

ரிஷி என்ற மூன்று வயது குழந்தை ஆன்லைன் வகுப்பில் தாமதமாக இணைகிறான். வகுப்பு இடையில் வணக்கம் சொல்கிறான். அவனைப்போல சில குழந்தைகளும் சொல்கின்றன. வகுப்பிலிருந்து பாதியில் கழிவறைக்கு ஓடிப்போய் சோப்பு நுரையில் முட்டையிட்டு விளையாடுகிறான். பிஸ்கட் கேட்கிறான். எங்கோயிருந்தபடி ஆசிரியர் அவனை அமரவைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் அல்லலுருவதாக நினைக்கும் தாய் சௌமியாவுக்கு தன் பிள்ளைப் பிராய நினைவுகளும் வந்து போகின்றன. இறுதியில் மூன்று வயது குழந்தைக்கு ஆன்லைனில் வகுப்பு அனாவசியமானது என்ற புரிதலுக்கு வந்தப் பின்னர்தான் அவளும் சாவகாசமாக ரிஷியுடன் குளியலறையில் விளையாடுகிறாள். குழந்தைகளின் ஒலி தடைசெய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பில் ஆசிரியரின் ஒலி தடைசெய்யப்பட்டது தெரியாமல் ஆசிரியர் கத்திக் கொண்டிருப்பதோடு இக்கதை முடிகிறது.

மழலையர் உலகம் விளையாட்டுகளால் நிரம்பியது. அதை பள்ளி என்ற பெயரில் சூரையாடும் கல்வி நிறுவனங்களை கேள்வி கேட்கிறார் கதையின் ஆசிரியர். கதையின் இடையில் குழந்தைகளின் மேல் திணிக்கப்படும் கல்விச்சுமைக் குறித்தும் புதியக் கல்விக் கொள்கைக் குறித்தும் ஐந்து மற்றும் பத்தாம் வகுப்பினருக்கு பொதுத்தேர்வு போன்றவற்றின் மீதான பார்வையையும் கதையின் ஆசிரியர் காட்டுகிறார். வகுப்பேயானாலும் மூன்ற வயது குழந்தைக்கு அது அனாவசியம் என்று உரைத்திருக்கிறது இக்கதை.

3. சுவாதி.

கதையின் ஆரம்பமே சுவாதி கத்தியை எடுத்து கையை அறுத்துக்கொள்ள நினைக்கும் இடத்திலிருந்து ஆரம்பமாகி, ஏன் இப்படி செய்கிறாள் என்று வாசகர்களை கதை தனக்குள் இழுத்துக் கொள்கிறது.

‘ நான் ஏன் அங்கு போனேன்.?’ என்ற வரிக்கு வருகையில் இது பாலியல் வன்கொடுமை சம்பந்தமான கதை என்று தோன்றியது. அப்படியானால் கதை இன்னும் நீண்டு மனதைப் பிசைந்து விடும்போல என்று தோன்றியது. அதற்கேற்பவே கதையும் நகர்ந்தது. சுவாதிக்கு கல்லூரியிலிருக்கும் ஒரு மாணவனை சந்தித்து பேசி பழகி நட்பாகி காதலாகிறது. ஒருமுறை அவனது வீட்டிற்கு அழைத்து புதிய ஆடைகளை பரிசளித்து அணிந்து காட்டச் சொல்கிறான். அவள் உடையை மாற்றுவதை ரகசிய கேமராவில் படம் பிடித்து வைத்து, மறுநாளே அதைக்காட்டி தனக்கும் தன் நண்பர்களுக்கும் அவளை படையலாகச் சொல்கிறான். இல்லையேல் படத்தை இணையத்தில் ஏற்றுவேன் என்று பயமுறுத்துகிறான். அதன் பிறகான புள்ளியிலிருந்துதான் கதையை ஆசிரியர் நமக்கு விவரிக்கிறார்.

அப்பெண்ணின் மன ஓட்டத்தையும் பெற்றோர்களையும் சமூகத்தையும் நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கும் குமுறி எழும் கதறல்கள் ஒலியின்றியே கரைந்து போக, வேறு வழியின்றி அவள் நிற்க, ‘அச்சோ இவள் தன்னைத் தானே மாய்த்து கொள்வாள் போலிருக்கிறதே’ என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு எழுப்பியது. ஆனால் கதையின் இறுதியில் அவன் அழைத்தபோது சுவாதி சொல்லும் பதில்தான் பெண்களுக்கு தேவையான மனோதிடத்தைத் தருகிறது.

‘ என்ன சுவாதி ரெடியா இருக்கியா.?’ என்று அலைபேசியில் அவன் ஏளனமாகக் கேட்டபோது, ‘என்ன நெட்டுல போடுவியா.? போட்டுக்கோ. அது நானில்ல. கிராஃபிக்ஸ்னு சொல்லிட்டு போய்க்கிட்ணே இருப்பேன்’ என்று தைரியமாக சொல்கிறாள். அவனது அழைப்பு அறுபடும் இடத்தோடு கதை முடிகிறது. ப்ளாக் மெய்ல் செய்து பெண்களை சீரழிக்கும் ஒரு சமூகப்பதரை தைரியமாக எதிர் கொண்டு தன் நியாயத்தை சரியாக கையாள்கிறாள் சுவாதி. பல பெண்களுக்கு இது தேவையான கதையாக அமைந்திருக்கிறது. இதில் வரும் கதையின் முடிவு அருமை. ஏனெனில், பாலியல் குறித்த எந்த அடிப்படை அறிவுமே இல்லாத மாபெரும் மக்கள் கூட்டம் வாழும் நம் நாட்டில், பாலியல் வன்முறைகளைக் கேள்விப்படும்போதே பெண்களை மட்டமாகத் திட்டும் ஒரு சமூகம், ‘இவ ஏன் போறா.? போனா அப்படிதான் நடக்கும்.’ இதுபோன்ற நியாயமற்ற கற்பிதங்களைக் கூறிவிட்டு கடந்து போகிற மக்களாகவே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். இப்போது, இங்கே, கதையின் நாயகி சுவாதியும் அதே கடந்து செல்லும் மனநிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறாள். எப்படியெனில், தான் போனது எதேச்சையாக தவறாகிப் போகலாம், ஆனால் இனியும் தான் போனால் அதுதான் பெருந்தவறு என்றுணர்ந்து, ரொம்ப பெரிதாக எதையும் யோசிக்காமல் எளிமையாக, தைரியமாக யோசித்து ஒரு சொல்லை அவனிடம் வெளிப்படுத்துகிறாள். பல பெண்களுக்கு இக்கதை நிச்சயம் ஒரு உத்வேகம்தான்.!4. அடிமைகள்.

கொரோனா நோக்காட்டு காலத்தைப் பற்றிய, இத்தொகுப்பின் இரண்டாவது கதை.ஐ.டி துறையில் பணிபுரியும் பல பெண்களின் கொரோனா கால அவதிகளை காட்டும் கதைகளில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. தலைப்பிலேயே கதையின் சாரம் புரிந்து விடுகிறது. மாலினி, நிரோஷா என்ற இரு பெண்களின் மன ஓட்டங்களிலும் உரையாடல்களிலும் இக்கதை நகர்கிறது.

மாலினிக்கு தான் வேலை செய்யும் இடத்திலிருக்கும் ஆட்களைவிட அடுத்தத் துறையைச் சேர்ந்தவர்களோடு நட்பு. ஆனால் அது அவளது தவறல்ல, அனைவரும் நன்றாக பழகிவிட்டால் ஒன்றுக்கூடி விடுவார்கள், அப்படி கூடினால் சம்பளம் வேலை நேரம் குறைப்பு, விடுப்பு நாள் அதிகரிப்பு என்று பல பிரச்சனைகளை கிளப்புவார்கள், அவர்களது உழைப்பை சுரண்டுவதே தெரியாமல் இருக்க பொறாமை, துரோகம், வஞ்சகம் போன்ற எண்ணங்களை கம்பனிகளே ஊட்டுகின்றன, அதன் மூலம் அவர்களை ஒன்றிணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றன. இப்படியான உண்மையை போட்டுடைத்து காட்டுகிறது கதை.

ஐம்பது பேர் வேலை செய்யும் இடத்தில் கொரோனா நோயைக் காரணம் காட்டி நாற்பது பேரை பணிநீக்கம் செய்து விட்டு பத்து பேரை வைத்து முழுமையாக பிழிந்தெடுப்பதையும் கதை காட்டுகிறது. அதில் ஒரே ஒருவன் மட்டும் நிலைமைத் தெரிந்து எங்கள் உழைப்பைச் சுரண்டாதே என்று சத்தமாக கூறியிருக்கிறான். அத்தோடு அவனது பணியும் காலி. மேற்படி, யாரெல்லாம் தத்ரூபமான அடிமைகளாக இருக்கிறார்களோ அவர்களை வைத்தே வேலை வாங்குவது, கொரோனா காலம் முடிந்த பின்னரும் இப்படியே நடைமுறைப் படுத்துவது என்ற திட்டமும் வெளிப்படுகிறது. இதெல்லாம் இவர்களது உரையாடலிலிருந்து வெளிப்பட, இடையில் தங்களையும் அந்த தத்ரூபமான அடிமைகள் என்று கூறி அடையாளப்படுத்நிக் கொள்கின்றனர். ஐ.டி துறை இப்படியானதா.? என்று மீண்டும் முகம் சுழிக்க வைக்கிறது.

5. என்னங்க சர் உங்க சட்டம்..

ஜோக்கர் படத்தின் பாடல் வரியுடன் அமைந்த இந்த கதையின் சாரமே அந்ந வரியின் ரீதியில் ஏழைகள் எழுப்பும் கேள்விகள்தான். கட்டிடக் கூலிகளான பாக்கியம், ராக்கு ஆகிய இருவரின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்வுதான் கதை. கிறுத்துவ பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆண்டாண்டுக்கு வந்து தங்களது பகுதி வாழ் குழந்தைகளை தமது பள்ளியில் சேர்ப்பதைப்போல இந்த ஆண்டு இன்னும் ஏன் வரவில்லை என்று தெரியாததால், பள்ளியிலேயே நேரடியாக சென்று கேட்கலாம் என்று நினைத்து கட்டிடத்தில் கொத்துவேலைக்கு சென்றவர்கள் பணி விரைந்து முடித்து உணவுகூட உண்ணாமல் பள்ளிக்கு சென்று கேட்கின்றனர். ஆனால் இப்பள்ளியில் மாணவர்கள் மிகக் குறைவாக படிப்பதால் இதை மூடச் சொல்லியிருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகிறார். அது மட்டுமின்றி, இப்பள்ளியை அடுத்து பதினைந்து கி.மீ தள்ளிதான் பள்ளிக்கூடம் இருக்கிறது என்றும் இனி அங்கு குழந்தைகளை கொண்டுபோய் சேர்க்கச் சொல்கிறார். இவர்கள் இங்கேயே சேர்க்கச் சொல்லி வேண்ட, முடியாது என்று தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார். பதினைந்து கி.மீ தூரம் குழந்தைகளை எப்படி அனுப்புவது என்று குழப்பதோடு வெளியேறுகின்றனர் ராக்கும் பாக்கியமும். அதன் பின், தலைமையாசிரியரின் அறையில் கல்விக்காகவும் சுந்திரத்திற்காகவும் பாடுபட்ட, காந்தியின் படமும் காமராஜரின் படமும் காவி நிறமேறிக் கிடந்தன என்று கதை முடிகிறது.

தற்போதைய இந்திய கல்விச்சூழலும் அரசியல் சூழலும் ஏழைகளின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று உணர்த்தும் கதை. ‘அரசியலுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்.? உன் பாட்டுக்கு படிக்க வேண்டியதுதானே.?’ என்று பொத்தாம் பொதுவாக வாய் உதிர்ப்பவரை செவிட்டில் அரையும் வண்ணம் இக்கதை அமைந்திருப்பதாக தோன்றுகிறது.!6. முடக்கம்.

கொரோனா நோய் தொற்று பரவும் காலத்தில் நடக்கும், இத்தொகுப்பின் மூன்றாவது கதை. அதன் தலைப்பிலேயே கதையின் பொருள் புரிகிறது. கந்து வட்டிக்கு பணம் வாங்கி சிறியதாக ஓட்டல் கடை நடத்தும் சாதாரண ஏழை எளிய மக்களின் துயரத்தை சொல்லும் ஒரு கதை. அந்த துயரத்தை இரட்டிப்பாக்கும்படியாக அரசு எந்திரத்தின் அடக்குமுறையை அம்பலமாக்கும் கதை. அதிகாரத்தை கையில் எடுப்பவர்கள் எச்சரிக்கைக்கூட விடுப்பதில்லை என்று மீண்டும் நிரூபணம் ஆகிறது. முருகன் என்ற உணவுக்கடை நடத்துபவருக்கு கொரோனா காலத்தில் வந்த இயல்பான முடக்கநிலை அரசு அதிகாரிகளால் இரட்டிப்பாகிறது. கடனுக்கு பணம் வாங்கி, காயாத வனவாசப பச்சை விறகில் உணவுகள் செய்து அதை விற்பதற்குள் சில முட்டானுபூதிகள் சமூக இடைவெளியைப் பேணாமல் கடைக்குள் அடைந்துக் கொண்டு நிற்க, நகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கே வந்து அவர்களை முதலில் பயமுறுத்துகிறார்கள். புகைக்கு எழும் இயல்பான இருமல்கூட நோய்ப்பரப்பும் இருமலாக சொல்லி, வியாபாரத்தினின்று அவர்களைப் பிரிக்கின்றனர். சூழ்நிலைக்கான விளக்கம் சொல்லியும்கூட விடாமல், கடையைப் பூட்டி சீல் வைப்போம் என்று அதிகார வர்க்கம் தன் திமிரையே காட்டியது. இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று, வியாபாரமாகாத அந்த கடைக்கு இரண்டாயிரம் ரூபாய் தண்டம் போடுகிறார்கள். கடையா,.. தண்டப் பணமா.. இரண்டையுமே விட முடியாது. கல்லாவில் பார்த்தபோது இருந்த, அசல் கூட. சேர்ந்திராத ஐநூற்று சொச்சம் ரூபாயை எடுத்து நீட்டி, இத வாங்குறதும் கடைக்கு சீல் வைக்கிறதும் ஒன்னுதான் என்று வந்த கோபத்தை அடக்கிவிட்டு உடைந்த குரலில் சொல்கிறார். கதை இந்த இடத்தில் முடிந்து விடுகிறது. அங்கிருந்தவர்கள் இதையெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்கவே இல்லை. தனக்கு வேண்டும் என்று முந்திக்கொண்டு கடைக்குள் வந்தவர்களை கடைக்காரர் வெளியே துரத்த முடியுமா.? எச்சரிக்கை கொடுத்து எப்படி நிற்க வேண்டும் என்று கடைக்கு வரிம் வாடிக்கையாளர்களுக்கு விளக்கமாக சொல்லியிருந்தால் பரவாயில்லை. மாறாக தவறு செய்பவர்களை விட்டுவிட்டு முடக்க காலத்திலும் பலருக்கு பசியாற்றும் கடைக்காரருக்கு தண்டம் விதிப்பதுதான் குற்றம்.

7. மீறல்.

வனிதாவும் ப்ரீத்தாவும் கல்லூரியில் அறிமுகமான தோழிகள். தமிழ்த்துறையில் சேர்ந்து, ஆசிரியர்களால் தமிழின்மீது ஆர்வம் கொண்டு அதை நேசிக்கின்றனர்.வனிதாவின் சாதி சான்றிதழை எதேச்சையாக ப்ரீத்தா கண்டுவிட, அவளது தாத்தா வீட்டில் எவ்வளவு சாதி வக்கிரம் நிறைந்தவராக இருக்கிறார் என்பதும் சிறு வயதில் தன் தோழி ஒருத்தியை வீட்டிற்கு அழைத்து வந்தபோது நடந்த சாதி ஆணவ நிகழ்வும் நினைவாடியது. அதனாலேயே ப்ரீத்தா வனிதாவுடனேயே பழகத் தொடங்குகிறாள். அவள் மூலம் ஆசிஃப் என்ற நண்பன் கிடைக்கிறான்.

ப்ரீத்தாவுக்குள் தமிழ் ஊற ஊற, அவள் தன்னியல்பாகவே முற்போக்குவாதியாக மாறுகிறாள். தன் குடும்பத்தை எதிர்த்து தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இந்த ரீதியில் மூன்றாண்டுகள் கழிய, ஆசிஃப் தான் எழுதிய நூலை ப்ரீத்தாவிற்கு பரிசளித்து காதலை வெளிப்படுத்துகிறான். அதை ஏற்றுக்கொண்டவள் வீட்டிற்கு வருகையில், அவளது அண்ணன் தாத்தாவோடு சேர்ந்து சிஏஏ மற்றும் என்ஆர்ஐ சட்டங்களை ஆதரிக்கும் இந்துத்துவ இயக்கத்தில் இணைந்திருந்தான். அதைக் கண்டு அவள் மனதுக்குள் வெகுண்டெழும்போது ஆசிஃப் அவளுக்கு பரிசளித்த, மீறல் என்ற நூல் அவளது எண்ணம் சரியானதே என்று பறைச்சாட்டியபடியாக அமைகிறது.!

‘இதையெல்லாம் எதிர்த்துபெண்களால் என்ன செய்ய முடியும்.?’ என்ற கேள்விக்கு முழுமையான பதிலும், என்னவெல்லாம் செய்யலாம் என்ற வழிக்காட்டுதலும் உள்ளடங்கிய முற்போக்கான கதைதான் மீறல். ஒரு விசயம் தவறெனப்படுகையில் அதை மீறல் கொள்வது நியாயம் என்று கட்டியங் கூறுகிறது இக்கதை.8.மொட்டுகள்.

வித்யா என்ற தாய் கதாபாத்திரத்தின் மன ஓட்டங்களைக் காட்டும் ஒரு கதையாக இது அமைந்திருக்கிறது. உதாரணமாக, திரைப்படங்களில் காட்டப்படும் சில வன்முறை காட்சிகளை கண்டாலே அதை நினைத்து மனக் கஷ்டம் அடைந்து புலம்புகிற கதாப்பாத்திரம் வித்யா. சமீப காலத்திய பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் நிறைய பயத்தை ஊட்டி இருந்த சமயத்தில் மகள் ஹரிணி பூப்பெய்துகிறாள். அவளது பயம் அதிகரிக்கவே, தனித்து தன் கணவனிடம் புலம்புகிறாள் வித்யா.
‘ஒரு உளவியல் கட்டுரையில் படித்த ஞாபகம் ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் அன்பும் அக்கறையும் காட்டாவிட்டால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு கிரிமினல் ஆக மாறி அந்த அன்பின் பற்றாக்குறை அங்கு வெளிப்படுகிறது என்று.’ இது கதையில் சொல்லப்பட்டிருக்கும் மாபெரும் சமூகத் தவறின் பிம்பக் காட்சி. அந்த தவறின் விளைவால், ‘இந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதே மடியில் நெருப்பு என்று அம்மா சொல்வது ஞாபகம்,’ என்ற தவறான கருதுகோள் உருவாகின்றது.
சமீபகால பாலியல் அத்துமீறல்களில் பாதிப்பில் உருவான கதை என்ற எண்ணத்தைப் படிக்கும்போது வாசகர்கள் பெறுகிறோம். பெண் குழந்தைகளின் பெற்றோர்களுனுடைய பயத்தையும்மனக்குமுறல்களையும், பெண் குழந்தையுடன் இருக்கும் குடும்பமும் மற்ற மனிதர்களுடன் சமூகத்துடனும் இயல்பாக இன்றி பாலியல் பாதிப்புகள் குறித்த பயத்துடனும், மற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு படி இடைவெளியை பின்பற்றியும் வாழ வேண்டிய நிலைக்கு போகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார் எவர் என்று அனைவரும் அறிய கதைசொல்லி காட்டுகிறது. ஆண்கள் வர்க்கமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
குட் டச்+பேட் டச் சொல்லிக் கொடுத்தால் போதுமா.? மாற்றம் என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆக ஆண்பிள்ளைகளுக்கு சிந்தையில்ஊட்ட வேண்டியது பெண்+ஆண்+… என உயிர்கள் அனைத்தும் சமம் என்பதே.

கதையின் கடைசியில் தேசிய கொடியையும் நாட்டின் உருவம் தலை கவிழ்ந்து இருப்பது போல ஒரு உருவகம் ஒட்டுமொத்த நாட்டிலும் பெண்களுக்கும் இதே நிலைதான் என்று சொல்லாமல் காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பில் மிக மோசமாக பலவீனமாக இருக்கிறதையும் இந்த நாடு பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக மீண்டும் அறியப்படுகிறதையும் காட்டுகிறது கதை. ஆனால் கதையின் சாரம் புரியாமல் சில கூமுட்டைகள் தேசியக் கொடியை அவமதித்து விட்டார் என்று வழக்கு தொடுக்காமல் இருந்தால் சரிதான்.

9.சு’தந்திரம்.’

காவ்யா என்ற பெண் பத்திரிக்கையாளர் ஒரு வாரத்தில் அதிக கட்டுரைகளை எழுதுகிறவர், தான் எழுதும் எழுத்தை மனதிற்கு நேர்மையாக எழுதக்கூடியவர். பத்திரிக்கை தர்மம் பற்றி அறிந்து எழுதுபவர். யாரும் அதிகம் பேசாத விஷயங்களை, மக்களின் பிரச்சனையை பற்றி சரியாக பேசுபவர். ஆனால் பத்திரிக்கை எடிட்டரின் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமான அரசியலால் எழுத்து சுதந்திரம் பறிபோகிறது. அரசு கொள்கையை விமர்சிக்கக் கூடாது, அரசை விமர்சிக்கக் கூடாது அரசு நடவடிக்கையில் தலையிட வேண்டாம். இப்படி ஏகப்பட்ட காரணங்களை அடுக்கி அரசுக்கு எதிராக நீ எதையுமே செய்யாதே அரசு நடவடிக்கை பற்றி எதுவுமே பேசாதே, எழுதாதே என்று கட்டுப்படுத்துகையில், முழுக்க முழுக்க, கட்டமைக்கப்பட்டு கடிவாளமிட்டு எழுதச் சொன்னால் என்னால் எழுத முடியாது என்று நேர்மையாக பத்திரிக்கை துறையில் இருந்து வெளியே வருகிறாள் அந்த பெண் பத்திரிக்கையாளர்.

இந்தக் கதையின் ஊடாக இன்றைய ஆளும் மத்திய அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் கொள்கைகள் அனைத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார் ஆசிரியர். காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் இனி விவசாயம் செய்ய உரிமை இல்லாமல் போவது, நீட் பரிட்சை, குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய கல்வி கொள்கை என இவ்வளவு பிரச்சினைகளையும் நாட்டின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கணக்கில் வைத்து மக்களுக்கான தன் கருத்தை ஒரு பத்திரிக்கையாளர் கூறுகையில் அதை பிடுங்கி கொள்கிறார் அந்த எடிட்டர். இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் அந்த சமயத்தில். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள். கிரிக்கெட்டில் யாரெல்லாம் விளையாட போகிறார்கள் சினிமாவில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்று அடுக்கடுக்காக வெற்று விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறது ஊடகங்கள் எனசொந்தத் துறையில் விமர்சனம் வைக்கிறார்.

தனக்கு என்ன நிகழ்கிறது என்று அவர் நண்பரோடு பகிர்ந்து கொண்டு புலம்புகிறாள். தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை, தான் விலகிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறுகிறாள். ‘நீங்க கம்யூனிஸம் பேசிட்டு கார்ப்பரேட் ஆபீஸ்ல வேலை செய்ய முடியுமா என்று ஒருவர் சொல்கிறதை எடுத்துக் காட்டுகிறார். இடையில் சக பத்திரிக்கையாளர்களுடன் பிணக்கை முன்வைத்து எடிட்டர் அவரை மீண்டும் கட்டுப்படுத்த வர, அதைத் தூக்கி தூர எறிந்து தன் பணியை உதறிவிட்டு, இனி மக்கள் பிரச்சனையை பற்றி உரக்கக் கூறுவேன் என்று அங்கிருந்து வெளியேறுகிறார்.

இன்றைய நடைமுறையிள்ள யூடியூப் சேனல் என்னும் துறையில் கால் பதிக்க தயாராகிறாள். எந்த செய்தி ஊடகமும் சொல்லாத பிரச்சினைகளை. மக்களுக்கு தேவையான கருத்துக்களை எந்த ஊடகத்தின் வாயிலாகவும் தான் சொல்லுவதற்கு தயார் என்று தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறாள். நேர்மையான குரலையும் பேனாவையும் பிடுங்கிக் கொண்டால் தனக்கு கிடைக்கும் சாதாரண சத்தத்தைக் கூட நியாயமாகவே பயன்படுத்துவேன் என்று அடித்துக் கூறுகிறது இக்கதை.ஒரு நேர்மறையான கதை. வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு இருக்கும் என்று நேரடியாக சொல்லுகிறது.
ஒரு பத்திரிக்கையாளர் என்ன எழுத வேண்டும், எதை எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும் என்று ஒருதலை பட்சமாக ஓர வஞ்சனையோடு தன் தலைமை அதிகாரியால் கட்டுப்படுத்தப்படுகையில் குன்றி குறுகி பொய்யெழுத்து எழுதி அதையே பல லட்சம் வாடிக்கையாளர்களை படித்து இன்புருங்கள் என்று ஆசையைத் தூண்டம்படி விளம்பரம் செய்து காசு பார்க்கிற ஒரு பத்திரிக்கை நிறுவனத்நை என்னவென்றும் கூறலாம். இது வரவேற்கத்தக்க கதை..!10. அனுமதி.

கொரோனா நோய்த்தொற்று காலத்தைப்பற்றிய, இந்த தொகுப்பில் இடம்பெறும் நான்காம் கதை.!குஜராத்தில் தனது மனைவிக்கு பிரசவம் ஆகியிருப்பதால், அங்கே செல்வதற்காக கொரோனா காலத்தில் ஈ-பாஸ் கேட்டு காத்திருக்கும் மோகன். இடையில் லஞ்சம் கொடுத்து ஈ-பாஸ் வாங்கிக்கொண்டு ஒரு காரில் போகிறார். இடையில் நாட்டு நடப்புகளை பேசியபடி போக, ஒவ்வொரு இடத்திலும் போலீஸ் பரிசோதனை செய்கின்றனர். அப்படி இப்படியென குஜராத்தின் எல்லையை நெருங்கும்போது தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று தடுக்கின்றனர். உள்ளே போக வேண்டுமெனில் பதினான்கு நாட்கள் தன்னைத்தானே குவாரன்டைன் செய்துக்கொள்ள வேண்டும் அல்ரது திரும்ப ஊருக்கே போக வேண்டும் என்று சொல்லிவிட்டு போலீஸ் நகர்கிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்து பிறந்த குழந்தையைப் பார்க்க ஆசையோடு மாநிலங்களைத் தாண்டி வந்திருக்கும்போது இந்த போலீஸ் அனுமதி மறுத்ழுவிட்டதால் கண்ணிருட்டி, மயங்கி விழுவதைப்போல உணர்கிறார் மோகன். தன் அன்பு மனைவியையும் பெற்றக் குழந்தையையும் இன்னும் பார்க்க முடியவில்லையே என்று நொந்து கொள்வதோடு கதைமுடிகிறது. கொரோனா நோய் தொற்று காலத்தை மையமாக கொண்டு, ஈ-பாஸ் வாங்க அலைந்து வாங்கியும் அது இடம்விட்டு இடம்போன பிறகு செல்லாமல் போகிறதும் குஜராத் அரசு கொடுத்த ஈ-பாஸ் அனுமதி அந்த அரசாலேயே மறுக்கப்பட்டது என அரசு எந்திரத்தின் கோளாறான நடைமுறையைக் காட்டுகிறது இக்கதை.!

11. குமிழி

அரசு பணிக்காக கடினப்பட்டு படித்து வேலை வாங்கியவர் சதீஸ். விழிச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி. சிரமப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். ஆனால், நாட்டில் இருக்கும் பெரு முதலாளிகளுக்கு நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களை தாரை வார்க்கும் கார்ப்பரேட் அடிமை அரசு நடைபெறுகையில் பல அரசு வங்கிகளும் தனியார்மயமாகின்றன. இது இப்படியிருக்க, இந்த சூழ்நிலையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள், ஏற்கனவே இருப்பவர்கள் எல்லாரும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். நான் அப்படி படித்திருத்தேன் அதனால் இந்த வேலை, ஆனால் இதையும் தனியார்வசம் மூன்றாண்டுகளுக்கு கொடுத்து விட்டார்கள் என்ற வரியில்தான் கதையின் கரு நமக்கு பிடிபடுகிறது. ஆட்குறைப்பு செய்கின்ற, வங்கி நடத்துவதற்கான பணத்தில் பாதியை விழுங்குகின்ற, அரசு பணியாளர்கள் அனைவரையும் தற்காலிக பணியாளர்களாக மாற்றுகிற, தனியார் மயம் என்பது எத்தனை விரோதமாக செயல்படுகிறது என்பதை சில வரிகளில், உரையாடல்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் கதையின் ஆசிரியர். இதில் தனியார் மயத்தின் உச்சபட்ச கொடுமையே என்னவென்றால், அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பே கிடையாது, பார்பூதமாக உழைப்பை சுரண்டுவார்கள், லாப நோக்கை மட்டுமே கணக்கில் வைத்து செயல்படுகையில் மக்களுக்கான சேவை என்ற நியாயமே அடிப்பட்டு போய்விடும்.!

ஆறு மணிக்கு மேல் இருபது சதவீதம் மட்டுமே தெரியும் கண் பார்வையும் அற்று போய்விடும் நிலையில் வேறு அரசு வங்கயின் பணிக்கு படிக்கலாம் என்று நினைத்திருந்த சதீசிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, ஒரு அரசு செய்தி வருகிறது. மேலும் சில வங்கிகளையும் மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதாக அரசு புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் தெரிவித்துள்ளது என்று அச்செய்தி கூறியபோது சதீஷ் மீண்டும் ஒருமுறை பார்வை இழந்தவனைப்போல ஆகிறான். இந்த ஏமாற்றத்தின் வலியோடு கதை முடிகிறது.

ஆனால் அரசு பணிக்காகவென்று எவ்வளவோ பிரச்சனைகளுக்கு நடுவில் பயிற்சி, படிப்பு என்று காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன மாற்று வைத்திருக்கிறது..? வயது கடந்து நிற்கும் படித்த பட்டதாரிகளான இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாவது யாரால்.? வயது போனப்பின் என்ன வாழ்வாதாரத்தை நம்பி ஒருவர் இந்நாட்டில் வாழ முடியும்.? இப்படியான கேள்விகள் எழுகின்றன. படித்தவர்களுக்கே இப்படியானால் படிக்காதவர்களின் நிலையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. எந்த வகையிலுமே உத்தரவாதமற்ற நிலையில் நுழைக்குமிழிபோல உடைந்து விடும் நமது எண்ணங்களை உருவகிக்கும் இடம் குமிழி.!12. செலவு.

கொரோனா நோய்த்தொற்று காலத்தைப் பற்றிய ஐந்தாவது கதை.கதையின் தலைப்பே இதன் சாரத்தைக் காட்டுகிறது. ஆனால் எப்படி இது நடைபெறுகிறது, எதனால் இது ஏற்கப்படுகிறது என்று நணுக்கமாக காட்டுகிறது இக்கதை.ரவி தன் அம்மாவுக்கு மூச்சுப்பிரச்சனை இருக்கிறது என்று ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறான். அங்கோ மருத்துவர் முதலில் அவரை ஐசியுவில் வைக்க வேண்டும், பெட் இருக்கானு தெரியல, என்று உயர் சிகிச்சைக்கான ஆவலை ரவிக்கு உருவாக்குகிறார். பெட் இருக்கு, நீங்க லக்கி’ என்று சொல்லி, அம்மாவை ஐசியுவில் வைக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் என்று பத்து நாட்கள் ஆகின்றன. இடையில் பலமுறை அம்மாவைப் பார்க்க முயற்சித்தும் ரவியை யாரும் விடவில்லை. பல பல மருத்துவத்துறை சார் கலைச் சொற்களைச் சொல்லி, அந்த ட்ரீட்மென்ட் பண்ணனும், இப்போ இந்த பிரச்சனை இருக்கானு செக் பண்ணனும் என்று பலவிதமாகப் பேசி, அம்மாவின் உயிர் குறித்து ஒரு பயத்தை உருவாக்கி, அதன் மூலம் அம்மாவை வைத்து சாதாரண மருத்துவத்தைப் பார்த்துவிட்டு ஆறு லட்சத்திற்கு பில் போடுகிறது மருத்துவமனை. இதற்குமேல் தன்னிடம் பணமில்லை என்றும் உடனே அம்மாவை டிஸ்சார்ஜ் செய்யச்சொல்லி கெஞ்சிக் கேட்டப்பின், மருத்துவர் ஒப்புக்கொண்டு பில்லைக் கொடுக்கச் சொல்கிறார். ரவிக்கு இது அனாவசியமாக தன் தலைமேல் சுமத்தப்பட்ட சுமை என்று தெரிந்தும் வேறு வழியின்றி பணத்தைக் கட்டுகிறான். அதன் பிறகுதான் அம்மாவை வெளியே விடுகிறார்கள். தனியே நடந்து வருபவரை அழைத்து சென்று ஆட்டோவில் ஏறும்போது ஆட்டோக்காரருடன் பயணச்செலவு குறித்து பேரம் பேசுகிறார் என்பதோடு இந்த கதை முடிகிறது.

ஒரு மருத்துவமனைக்குள் நாம் இருப்பதைப்போன்ற உணர்வை இக்கதை ஏற்படுத்துகிறது. உள்ளே எப்படியெல்லாம் ஏமாற்று வேலை நடக்க வாய்ப்புள்ளது என்று எடுத்துக் காட்டுகிறது. அதாவது தனது சொத்தெல்லாம் மருத்துவமனை பில்லில் முடங்கியப்பின் இனி செலவுக்கு ஒன்றுமில்லாம் திணரும்போது, பணத்தை இனி சிக்கனமாக செலவு செய்யும் நபராக மாறுகிறான் ரவி. அதன் விளைவாகத்தான் ஆட்டோக்காரனோடு பேரம் பேசுகிறான்.

இதன் மூலம் பல விசயங்கள் நமக்கு தெரிகின்றது. மருத்துவமனைக்கு பாதி சொத்து என்று ஒரு கருத்து இருந்ததை இக்கதை உடைத்துவிட்டது. மருத்துவமனைக்கு போனால் முழு சொத்தும் போகும் என்ற புதியகருத்து உருவாகிவிட்டது. அடுத்து தனியார் மருத்துவமனையில் மறைமுகமாக மருத்துவம் பார்க்கும்போது நிச்சயம் மற்றவர்கள் சந்தேகம் கொள்வதும், என்ன மருத்துவம் நடைபெறுகிறது என்று விசாரிப்பதும் நியாயமனதே. தெரியாமலோ, அவசரத்திற்கோ தனியார் மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகளுக்கு இப்படியொரு கொடுமை நடைபெறுவது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்ட இக்காலத்தில் அதனை மக்களே சகித்துக் கொண்டு போவது கொடுமை. இப்படி பல கருதுகோள்களை உருவாக்குகிறது இக்கதை. நேரடியாக ஒரு மருத்துவமனையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த கதையை கதாசிரியர் எழுதியுள்ளார் என்று படிக்கையில் தோன்றுகிறது.

இப்படி பல எண்ணங்களுக்கு தோற்றுவாயாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது. பளபளக்கும் சொல்மாலைகள் இல்லை. நன்கு தெறிந்த எழுத்தாளர்கள் இல்லை. அனைவருமே புதியவர்கள். ஆனால் சிறுகதை என்னும் வடிவத்தை இவர்கள் கையாண்டுள்ள விதம் வியப்பு. இன்னும் எளிமையாகக் கூறப்போனால் இக்கதைகளை ரசிக்க முடிகிறது. அதுவே இதன் வெற்றி.

அத்தனைக் கதைகளும் வெவ்வேறு தளம் வெவ்வேறு அமைப்பு. ஆனால் அனைத்துமே சமூக அக்கறை என்ற புள்ளியில் ஒன்றிணைகின்றன. அதுவும் சாதாரணமாக அல்ல முற்போக்கு பண்பாட்டோடு. ஆக, இனி இச்சமூகத்திற்ககான தேவையை இதுபோன்ற கதைகள்தான் கூறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.!

— கார்த்தி டாவின்சி (எழுத்தாளர்)
18, காந்திநகர்புதியகாலனி,
பெரியகொல்லப்பட்டி,
சேலம் – 636008.