நூல் அறிமுகம்: “என் பார்வையில்” பேரிருளின் புதுச்சுடர்கள்! சிறுகதைத் தொகுப்பு. – தேனி சீருடையான்நூல்: பேரிருளின் புதுச்சுடர்கள்
ஆசிரியர்: அ. உமர் பாரூக்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க கிளிக் செய்க: பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்

தமுஎகச அறம் கிளையின் பன்னிரண்டு படைப்பாளிகளின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாமே புதுப்பேனாக்களின் புது விளைச்சல்கள். வாசிக்க வாசிக்க ஆச்சரியம். இவ்வளவு நேர்த்தியாக எழுதுகிறார்களே! ச. தமிழ்ச்செல்வன், உதயசங்கர், அ. கரீம் ஆகிய படைப்பாளுமைகள் தந்த பயிற்சி மிகச்சரியாகப் பதியமாகியிருக்கிறது. சிறப்பான உழவும் தரமான விளைச்சலும் நம்பிக்கை தருகின்றன.

ச. தமிழ்ச்செல்வன் ஊக்கமூட்டக்கூடிய அணிந்துரை வழங்கியிருக்கிறார். பன்னிரண்டு படைப்புகளையும் தனித்தனியாக ஆய்ந்து நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இளம் படைப்பாளிகளின் கிரியா ஊக்கி அவர். வல்லிக்கண்ணனைப் போலவே புதியவர்களைப் பாராட்டுவது அவரது பண்பு. இந்தக் கதாசிரியர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஏறத்தாழ முழுநூலையும் தனித்தனியாக ஆய்வு செய்து தமிழ்ச்செல்வன் அதன் உட்கூறுகளை வெளிப்படுத்திவிட்டதால் ஒருசில உத்திகளைமட்டும் சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.

1 “பொறி” என்ற முதல் சிறுகதையை ஹேமலதா எழுதியிருக்கிறார். மதவாதிகளின் இன்றைய “மனங்கவர்” உத்திகளைச் சரியாக விவரித்து, ஒரு பெண் தனது கணவனை, மீட்டெடுக்கும் சிறுகதை. மதவாதியாகிய குமாரிடமிருந்து காப்பாற்றும் உத்தி சிறப்பானது. எலிப்பொறியிலிருந்து எலி தப்பிவிடுகிறது. அயோக்கியனான குமாரிடமிருந்து நல்லவனான செந்தில். அதாவது அருணாவின் கணவன் தப்பிவிடுகிறான். கணவன் செந்தில் ஓர் எலியென்றும் குமார் பொறியென்றும் சொல்வது நுட்பமான இடம். தேங்காய்ச்சில் பொருத்திய கொக்கி இழுக்கப்படும்போது பொறி சட்டென அடித்து எலி செத்துவிடும் என்பது யதார்த்தம். ஆனால் இங்கு எலி தப்பிவிடுகிறது என்று சொல்வதன்மூலம் மதவாத பிடியிலிருந்து இந்திய அரசியல் மீண்டெழும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது கதை.

2 சாந்தி சரவணன் எழுதியுள்ள ஜும்பூம்பா இணையதளக் கல்வியைப் பகடி செய்கிறது. அதாவது குழந்தைகளின் விளையாட்டு மகிழ்ச்சியைக் குலைத்துப் போட்டு அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அம்மாவாகிய சௌமியா தன் குழந்தை ரிஷியின் குறும்பு மனத்தைக் கலைக்க விரும்பாமல் lkg வாசிக்கும் அவனின் வீட்டுப் பாடத்தை அவளே எழுதி முடிக்கிறாள். குழந்தை ஆராக்கியமாய் வளரவேண்டும் என்றால் கல்வி அமைதியானதாய் நெருக்கடி தராததாய் இருக்கவேண்டும். குழந்தை வளர்ச்சி என்பது குறும்புத்தனமான அதன் விளையாட்டோடு சம்பந்தப்பட்டது. விளையாட்டு நீங்கிய கல்வி முகம் நீங்கிய உடல் போன்றது. zoom. google meet போன்ற செயலிகள் மூலம் பாடம் நடத்துவது குழந்தையை அபாயகரமான பாதையில் பயணிக்க வைக்கும் எனக் கவலைப்படுகிறது கதை.

3 ராதிகா விஜயபாபு எழுதியுள்ள சுவாதி கதை ஆண்களின் வக்கிர குணத்தை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. சுவாதியும் மதியும் ஒரே கல்லூரியின் மாணவர்கள். மதி சுவாதி;;யைக் காதலிக்கிறான். ஒருநாள் தன் வீட்டுக்கு அவளை வரச்சொல்லி அவளுக்குப் புத்தாடை எடுத்துத் தந்து, தனியறையில் சென்று அணிந்து வரும்படி சொல்கிறான். அவளும் அப்படியே செய்ய, அன்போடு அவளை வழியனுப்புகிறான். தனிமையிலும் தனது உடலைத் தீண்டாதவனாக இருக்கிறானே என்று பெருமைப்படுகிறாள். ஆனால் ஒருகட்டத்தில் அவளை அவன் தனது நண்பர்களுக்கு விருந்தாக்க முயல்கிறான். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவளின் நிர்வாணப் படத்தைப் பொதுவெளியில் பரப்பப்போவதாக மிரட்டுகிறான். அப்போதுதான் அவனின் வக்கிரம் வெளிச்சத்துக்கு வருகிறது. தற்கொலை செய்ய முயல்கிறாள். ஆனாலும் அவளின் அந்தரங்கமனம் அவளை தைரியப்படுத்துகிறது. தவறு செய்தவன் உயிரோடிருக்கத் தான் ஏன் சாகவேண்டும் என்று கேட்டபடி “நீ வேண்னா போட்டுக்க” என்று சொல்லிவிட்டுத் தனது தற்கொலை முடிவை மாற்றிக்கொள்கிறாள்.

தற்கொலை என்பது உணர்ச்சிப்படலத்தின் முழு அழுத்தத்தால் நிகழ்கிற ஓர் அனிச்சைச் செயல். அந்த அழுத்தத்தில் கடுகளவு பிளவு ஏற்பட்டாலும் தற்கொலை மனோபாவம் செயலிழந்து வாழ்வின் அர்த்தம் புரிபட்டு, மீண்டெழும் நிகழ்வு நடக்கிறது. அது மனித இயல்பு. அந்த சிறு பிளவு உண்டாகாமல் போகும்போதுதான் தற்கொலை நிகழ்கிறது. அதாவது low sugar அல்லது low pressure ஏற்படும்போது உடல் தனது வலிமையை இழந்துவிடுவது போலத் தற்கொலை அழுத்தம் மன இயக்கத்தைச் செயலிழக்கச் செய்து மரணத்தை நோக்கி நகர்த்துகிறது. இங்குச் சுவாதியின் துணிச்சல் அவளை மீட்டெடுக்கிறது.

4 அடிமைகள்: தீபலட்சுமி. நிறுவனத்தில் வேலை செய்யும் மனிதர்களுக்கிடையிலான “போட்டுக்கொடுக்கும்” அரசியல் பேசப்படுகிறது. மாலினியும் நிரோஷாவும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்க்கும் சிநேகிதிகள். ஆண் ஊழியர்கள் மற்றவர்களைப் பற்றி மேலாளரிடம் இல்லாத பொல்லாதவைகளைப் போட்டுக் கொடுத்துத் தங்கள் இக்ரிமென்ட், அல்லது ப்ரொமோஷன் லாபங்களைச் சம்பாதிக்கிறார்கள். குற்றத்துக்கு இலக்காகுபவர்கள் தங்கள் வேலை போய்விடுமோ எனப் பயந்து அடங்கி நடக்கிறார்கள். மேல்மட்ட மனிதர்களுக்கு அடங்கி நடக்கும் சூழல் உண்டாகிறது. அதோடு சங்கம் சேர்க்கும் உரிமை பறிபோகிறது. சங்கம் என்பது மனிதர்கள் ஒன்றுகூடி உரிமைக்குரல் எழுப்பும் ஓர் அரசியல் செயல்பாடு. அது பறிபோகும்போது சதாசர்வ காலமும் வளர்ந்தபடி இருக்கும் மானுட வாழ்வியல் பரிணாமத் தாக்கம் நின்று போகிறது. அப்புறம் மனிதனுக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம். இந்த மாதிரியான நிறுவனம் அரசியலால் பெண்களின் வாழ்வில் வரண்ட சூழல் நிலவுகிறது. மனிதமனம் விரக்தி அடைகிறது. கொரோனா காலத்தில் ஆட்சியாளர்கள் சொல்லிய வார்த்தையை மாலினி வேறு மாதிரி சொல்கிறாள். “அதாண்டி: கொரோனாவோடும் நிறுவனத்தோடும் அரசாங்கத்தோடும் சேந்து வாழப் பழகிக்கணும்.” இன்றைய நிறுவனங்களுக்குள் நிகழும் அசாதாரணச் சூழல் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.5 என்னங்க சார் ஒங்க சட்டம்? மீ. முத்துவிஜயன்.:- பாக்கியம் ஒரு கட்டுமான தொழிலாளி. ராக்கு உள்ளிட்ட பலரோடும் சேர்ந்து வேலை செய்கிறாள். கொரோனா முடிந்தும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் வரவில்லை. கிராமங்களில் வீடுகள் தோறும் ஆசிரியர்கள் சென்றுதான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவார்கள். (ITI தொழில் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்ட போதும் இதே நிலைதான். ஆசிரியர்கள் சென்று பெற்றோர்களைப் பார்த்து, தொழில் கற்றுக் கொள்வதால் மாணவனின் எதிர்காலம் எப்படி ஜோலிக்கும் என்று எடுத்துரைத்து வம்படியாக மாணவ◌ர்களை இழுத்து வருவார்கள்.) பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. அந்தக்காலத்து மாணவர்கள் பள்ளிக் கல்வியை விரும்பாதவர்களாக இருந்தார்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. தம் பிள்ளைகள் கற்று உயரவேண்டும் என்று விரும்பிய பாக்கியமும் ராக்குவும் வேலைமுடிந்து பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கின்றனர். குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளை மூட அரசு உத்திரவிட்டிருப்பதாக அவர் சொல்கிறார். அதிர்ச்சியடைந்து திரும்புகின்றனர் இருவரும். “ஆண்ட பரம்பர கைநாட்டு: ஆட்டிப் படைக்குது கார்ப்பரேட்டு” என்ற கவிதை வரிகள்தான் இந்தக் கதையின் மையம். அரசாங்கத்தின் எல்லாச் சட்டங்களிலும் திட்டங்களிலும் கார்ப்பரேட் தாக்கம் இருக்கிறது என்பதை பள்ளிக்கல்வியின் வழியாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர்.

6 முடக்கம்: கம்பம் மு. ஜெய்கணேஷ்:- பொது முடக்க காலத்தில் இரவுநேர சிற்றுண்டிக் கடைக்காரர் படும் பாட்டைச் சொல்கிறது கதை. முடக்கத்தின்
முதல் தளர்வாகச் சிற்றுண்டி மற்றும் டீக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி என்ற கட்டுப்பாடுகளுடன் கடை திறக்கப்படுகிறது. முருகனும் அவன் மனைவி முத்தம்மாளும் பெருமாளிடம் கடன் வாங்கி கடையைத் திறக்கின்றனர். வெகு காலமாய்க் கடைச்சாப்பாடின்றிக் காய்ந்து கிடந்தவர்கள் சிற்றுண்டிப் பார்சல் வாங்க இடைவெளியில்லாமல் கடையை முற்றுகையிடும் போது போலிஸ் வந்துவிடுகிறது. ஆறுநூறு ரூபாய்க்குக்கூட விற்காத நிலையில் இரண்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கிறது. முடக்கக் காலத்தில் சிறு வியாபாரிகள் படும் அவஸ்தை நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

7 மீறல்: சு. இளவரசி:- சி ஏ ஏ மற்றும் என் ஆர் ஐ ஆகிய சமூக விரோத சட்டங்களை எதிர்க்கும் கதை. பிரீதா தாத்தாவின்மேல் அபரிமிதமான அன்பு கொண்டவள். தாத்தாவோ ஜாதி மதங்களின் மேல் அபிமானம் கொண்டவர். அவள் இளங்கலை இலக்கியம் படிக்க ஆரம்பித்த போது ஆசிப் முதுகலை வாசிக்கிறான். அவன் சிறந்த இலக்கியவாதி. அவனின் தமிழ்ப்பற்றை வெகுவாகப் பாராட்டும் பிரீதா அவன்மேல் காதல் கொள்கிறாள். ஆசிப் கடைசி ஆண்டு படித்துமுடித்து வெளியேறும் போது “மீறல்” என்ற புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடுகிறான். அதை வாங்கிச் செல்லும் பிரீதா தாத்தாவின் மத அபிமானத்தை மீறுவது என முடிவு செய்கிறாள். சாதிமத அபிமானிகள் அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அப்புறம் ஏன் அடுத்த ஜாதி மற்றும் மதங்கள்மேல் வெறுப்பு ஏற்படுகிறது? ஆசிரியர் ஓரிடத்தில் குறிப்பிடுவது போல “அது நம்ம சாமிக்கு ஆகாது.” ஆண்டாண்டு காலமாய் மனித மனதுக்குள் திணிக்கப்பட்டுள்ள ஆன்மீக சித்தாந்தம் இது. அந்த சித்தாந்தத்தின் அசட்டுத்தனத்தை மீறல்செய்து வாழ்வைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ஆசிரியர். மனித வாழ்வுக்கு ஒவ்வாத எதையும் மீறவேண்டும் என்பதை அழகாகச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

8 மொட்டுகள்: மு. காயத்ரி தேவி. வித்யாவின் மகள் ஹரிணி சுட்டிக்குழந்தை. விளையாட்டுப் பருவம் வீணாகாதபடி குழந்தையை வளர்க்கவேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் அடுத்த பிளாட்டில் ஓர் இளைஞன் வேறொரு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தபோது ப்ளாட் உரிமையாளர் அனைவரையும் எச்சரிக்கிறார். வித்யாவுக்கு மனச்சங்கடம். வெளியில் போகவிடாமல் குழந்தையை வளர்ப்பதன்மூலம் குழந்தையைக் காணாமல் போகுமே என வருந்துகிறாள். விளையாட அனுப்பாமல் இருந்தால் பறவையின் சிறகுகளை ஒடிப்பதுபோல் ஆகுமே என்றும் கவலைப்படுகிறாள். அவளின் இயலாமை ஆத்திரமாக மாறியிருந்தது. ஆத்திரப்பட்டு என்ன செய்ய? விளையாட்டு மைதானத்தை நோக்குகிறாள். அங்கு ஏற்றப்பட்டிருந்த சுதந்திரக் கொடி காற்றசைவு இல்லாமல் கவிழ்ந்து நின்றது எனக் கதையை முடிக்கிறார் ஆசிரியர். “காற்றசைவு” என்பது இங்கு ஒரு சமூகவியல் குறியீடு. வக்கிரங்களுக்கு இடங்கொடுக்காத பண்பாட்டுப் பதிவுதான் குழ்ந்தைமையை மீட்டெடுக்கும் எனப் பூடகமாகச் சொல்கிறார் ஆசிரியர்.

9 சு”தந்திரம்”. இவள் பாரதி. கார்ப்பரேட் மய காலத்தில் பத்திரிகைப் பணியாளர்கள் படும் அவஸ்தையை விவரிக்கிறது கதை. தாங்கள் நினைத்ததைப் பத்திரிகையில் எழுத முடியவில்லை. பொதுவாக அறிவுஜீவிகள் தாங்கள் உள்வாங்கிய உண்மைகளைச் சுதந்திரமாக எழுத விரும்புவார்கள். அது அவர்களின் இயல்பு. அப்படி இருந்தால்தான் அது அறிவுஜீவித்தனம். நாட்டில் நடக்கும் மக்கள் விரோதத் திட்டங்களை எழுதக்கூடாது என்றோ மேலோட்டமாக எழுதினால் போதும் என்றோ எடிட்டோரியல் போர்டு உத்தரவிடும் போது அதுவே அந்தப் பணியாளர்கள் மீதான சித்திரவதையாக மாறுகிறது. இந்தக் கதையின் நாயகி காவியா அப்படியான சித்திரவதைக்கு உள்ளான போது வேலையை விட்டு விலகுகிறாள். சுதந்திரமாகச் செயல்படக் கூடிய யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவள் திட்டம். (யூடியூப் சேனலும் நெருக்கடியில் அமுங்கியிருக்கிறது என்பது இன்னொரு கதையாக எழுதப்பட முடியும்.) தலைப்பு அருமை. சுதந்திரம் எனக் கூறிக்கொண்டே சுதந்திரத்தைப் பறிக்கத் தந்திரத்தோடு செயல்படும் அதிகார வர்க்கத்தின் முகமூடியைக் கிழிக்கிறது கதை.

10 அனுமதி.: அ. ஆஃப்ரின் பானு.:- இது பொது முடக்கக் காலத்தின் இ பாஸ் கதை. மோகன் குழந்தை ஈன்ற தன் மனைவியைக் காணப் பல போராட்டங்களுக்குப்பின் குஜராத் செல்ல கொரோனா சோதனைச் சான்று பெற்று இ. பாஸ் வாங்கிவிட்டான். இடைவழியில் தண்ணீரோ உணவோ கிடைக்காமல் மிகவும் சோர்வோடு குஜராத் எல்லையை அடைகிறான். அங்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காவலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளே நுழைய முடியாமலும் திரும்ப முடியாமலும் தத்தளிக்கிறான் மோகன். நிவாரணமாகக் காவலர்கள் ஒரு யோசனை சொல்கிறார்கள். 15 நாட்கள் தனிமைப் படுத்திக்கொண்டு நெகடிவ் என்று வந்தால் போகலாம் என்பதே அந்த நிவாரணம். கண்கள் இருள என்ன செய்வது என்று தடுமாறுகிறான். கதையை வாசிக்கும்போது நெஞ்சு கனக்கிறது.11 குமிழி: சுகன்யா. இரா.:- ரெட்டினா பிக்மென்டோஜான் என்ற நோய் தாக்கி கண்பார்வைக் குறைவுடைய மாற்றுத்திறனாளியான சதீஷ் கஷ்டப்பட்டு ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். தனியார் வங்கியில் இதே வேலை கிடைத்திருந்தால் கான்ட்ராக்ட் முறையில் தான் பணியாற்ற வேண்டும். இது அரசு வங்கி. மகிழ்ந்திருந்தபோது மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் மேலும் நான்கு அரசு வங்கிகள் தனியார்மயம் என அறிவித்தது. அதாவது அனைத்து அலுவலர்களையும் கான்ட்ராக்ட் தொழிலாளியாக்கி பெருமுதலாளிகளுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட அறிவிப்பு. இப்படியான அறிவிப்புகளால் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையும் நிரந்தரமில்லாத குமிழிபோல் வெடித்துச்சிதறுகிறது.

12 செலவு: சீ. குரு மாணிக்கம்:- கொரோனா சிகிச்சையின்போது தனியார் மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை. ரவி ஒரு கம்பனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். அதாவது உயர் நடுத்தர வர்க்கப் பிரதிநிரி. அவனிடம் சில லட்ச ரூபா கையிருப்பு இருக்கிறது. அவன் அம்மா அன்னபூரணிக்குக் கொரோனாச் சோதனையில் பாசிடிவ் என்று வருகிறது. சேர்க்கும்போதே சில லட்சங்கள் கேட்கிறார்கள். தேவையில்லாத சோதனைகள், ஐ சி யூ வில் அட்மிஷன் என்று பில் அதிகம் செலவாகிறது.

இவன் எதிர்பார்த்ததற்கும் மேல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கிறது. ஐந்து லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ரூபா பில் வருகிறது. குறைத்துப் போடச் சொன்னால் சலுகை என்ற பெயரில் பதினைந்தாயிரம் குறைக்கிறார்கள். பேரம் பேச முடியவில்லை. ஆனால் ஆட்டோக்காரரிடம் பாதிக்குப் பாதி பேரம் பேசி சவாரி செய்கிறான் ரவி. கதை மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. மருத்துவக் கருவிகளின் பெயர்களும் மாத்திரைகளின் பெயர்களும் சரியாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஐ சியூ, என் ஐ வி. வெண்ட்டிலேட்டர், ஆக்சிமீட்டர், பி சி ஆர். பிபிஈரெம்டிசிவிர், சாமானியர்களுக்குப் புரியாத இந்தச் சொற்கள் மருத்துவர்களுக்கு லாபம் ஈட்டித் தருகின்றன. நாற்பது வருடங்களுக்குமுன் ஆனந்தவிகடனில் ஒரு துணுக்கு வந்திருந்தது. நோயாளி மருந்துக் கடைக்குச் சென்று மருந்துச் சீட்டைக் காட்டுகிறான். கடைக்காரர் “இது என்ன குண்டு குண்டா எழுதியிருக்கு? டாக்டர்ட்ட போயி கிறுக்கி எழுதிட்டு வா” என்பார். அன்று முதல் இன்றுவரை சாமானிய மக்களுக்குப் புரியாத மொழியோடும் திட்டமிடலோடும் தான் மருத்துவமனைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற கலைச் சொற்களை ஆதுரசாலை நாவல் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

மருத்துவக் கலைச் சொல்லுக்கும் மனித வாழ்வுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி? பன்னிரண்டு கதைகளும் பன்னிரண்டு உள்ளடக்கத்தோடும் உருவ வித்தியாசத்தோடும் எழுதப் பட்டிருக்கின்றன. கார்ப்ப்பரேட்டுகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது. முற்போக்குப் போராட்ட வாதிகளின் புரட்சி விளைச்சலை அறுவடை செய்வதற்கான விதைகளை இவை தூவியிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனாலும் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் தனது அணிந்துரையின் கடைசிப் பேராவில் குறிப்பிட்டதை நானும் வழிமொழிகிறேன். “இன்னும் ஆழ்ந்த, அகன்ற வாசிப்பும், தங்கள் எழுத்தின்மீதான சுய
விமர்சனமும் கைகூடும்போது இவற்றை விடவும் செறிவான கதைகளை இவர்கள் எழுதுவார்கள் என்பதைக் கட்டியம் கூறும் கதைகள் இவை. அனைவருக்கும் வாழ்த்துகள்.”

தேனி சீருடையான்.

நூல்: பேரிருளின் புதுச்சுடர்கள்
ஆசிரியர்: அ. உமர் பாரூக்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க கிளிக் செய்க: பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்