விக்கிகொள்ளும் போது
சரியாக பெரியம்மா
ஞாபத்திற்கு வந்துவிடுவாள்
வலிக்காமல் உச்சந்தலையில்
தட்டிவிட்டு
அடுக்குப்பானைக்குள்ளிருந்து
அஞ்சுரூபாயை எடுத்தது நீ தான
என்று அதிர்ச்சியளிப்பாள்
நிற்காத விக்கலும்
சட்டென்று நின்று போக
இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்த
பத்து ரூபாயை காணோம் என்று ஆரம்பிப்பார் தாத்தா
சட்டென்று புரையேறிவிடும் எனக்கு
ராமாயணப் புத்தகங்கள் எங்களுக்கு பெரும் புதையலாகவும்
தாத்தாவுக்கு கடும் இழப்புக்களாவும் இருந்தன
அம்மாவின் சுருக்குப்பையில்
வெற்றிலைப் பாக்கோடு
கருத்துப்போய்க் கிடக்கும் எட்டணா
சட்டென சீடை உருண்டைகளாக
என் டவுசர் பையில் உருண்டு கொண்டிருக்கும்
சமயத்தில் பெரியம்மாவின் முந்தானையில்
முடிந்திருக்கும்
ஒற்றை ரூபாய் நாணயம்
எங்களூர் டூரிங்டாக்கீஸ் தரை டிக்கெட்டுகளாக
என் கையில் முளைத்திருக்கும்
ஒத்தைக்கையை ஊண்டிகிட்டே சாப்பிட்டா
பெலமெல்லாம் அதுவழியா இறங்கி
தரைக்குள் போயிரும் என்பாள் பார்வதி பாட்டி
வாய்நிறைய அதக்கியிருக்கும் வெற்றிலைக்கு
எப்போதும் செக்கச் செவேலென
சிவந்தே இருக்கும் உதடுகள்
( உபயம் நானும் வெற்றிலை உரலும் )
மச்சு வீட்டுக்குள் அடுக்கியிருக்கும்
குதிரை வாலி கம்பு சோளம் கேப்பை
ஐ ஆர் எட்டு நெல் மூட்டைகள்
தும்பைப் பூவாய்
அடைகாத்துக் கிடக்கும்
பருத்தி எல்லாம்
சமயத்திற்கு ஏற்றாற் போல
நாயக்கர் கடையில்
சீனிமிட்டாய்
காராச்சேவு
கல்கோணா என
பண்டமாற்று முறையில்
என் டிரவுசர்
பைக்குள் எப்படியும் இடம்பிடித்து விடும்
ஆனால் ஊரில்
மழை தண்ணியற்று
விவசாயம் பொய்த்து
குடும்பங்கள் நாலாவிதமும்
கொத்தப் பருத்தியுமான காலங்களில்
முதலில் பார்வதிப் பாட்டி திரும்பி வராத
பெரிய ஊருக்குப் போனாள்
ரொம்ப நாள் சீவித்திருக்காமல்
அவளுக்குத் துணையாகத் தாத்தா போனார்
வண்டிமாடு கலப்பை வயக்காடு என
ஒவ்வொன்றாய் எங்களைவிட்டுப்
போய்கொண்டிருந்த நாளில்
புள்ளை குட்டிகளை தூக்கி கொண்டு அப்பாவோடு
சித்தாள் வேலைக்காக
அம்மா டவுனுக்குப்போனாள்
என்ன ஆனாலும் பரவாயில்லை
ஊரை விட்டு வரவேமாட்டேன்
என்று அடம்பிடித்த பெரியம்மா
கடைசியில் பைத்தியமாய்ப் போனாள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.