பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு – நூல் அறிமுகம்
தினந்தோறும் கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். நெற்றியில் திருநீறு இல்லாமல் இருந்தால் அப்பா கோபித்துக் கொள்வார். அத்தகையதொரு பக்தி சிரத்தை உள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இளமையில் சந்திக்கும் ஒவ்வொருவரையும் சாதி அடையாளத்துடன் தான் பார்க்க வேண்டும் என்பதை நான் பார்த்த பெரியவர்கள் அனைவரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் குறிப்பால் உணர்த்திக் கொண்டே இருந்தார்கள். அன்பு, கருணை, பாசம், நட்பு, காதல் எல்லாமே சாதியைப் பார்த்துத்தான் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சமூக விதி.
பள்ளி முடித்து, கல்லூரி செல்லும் காலத்தில், உள்ளூர் நூலகத்தின் சில நூல்கள் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற இலட்சியங்கள் பற்றிப் பேசின. அப்போதுதான் எனக்கு அறிமுகமானார் தந்தை பெரியார். பெரியார் எழுதிய நூல்களை, உரைகளை வாசித்தேன். அவரது வாழ்க்கைப் பயணத்தைத் தொகுத்து சாமி சிதம்பரனார் எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் வெளிவரும் வாழ்க்கை வரலாறு நூல்கள் போன்று சமகால ஆளுமைகள் குறித்த முழுமையான வாழ்க்கை வரலாறுகள் தமிழில் எழுதப்படுவதில்லை. அதுபோலவே, ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் சமூகத்தில் ஆளுமை மிக்க தலைவராக விளங்கியவராக இருந்தாலும், தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னும் வெளிவரவில்லை. ஒரு தத்துவ கோட்பாடு அல்லது அரசியல் கோட்பாடு அடிப்படையில் ஒரு தலைவரையோ, ஒரு நிகழ்வையோ தொகுத்து எழுதக் கூடிய ஒரு வழக்கம் தமிழில் பெருமளவு இல்லை. அத்தகைய நூல்களை ஆங்கிலத்தில் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், தமிழில் அத்தகைய நூல்கள் இல்லையே என்று மனம் ஏங்கும். இத்தகைய ஒரு அறிவுச் சூழல் நிலவுகின்ற தமிழ்ப்பரப்பில், அண்மையில் கார்த்திக் ராம் மனோகரன் எழுதிய பெரியார் நாத்திக அரசியல் பற்றிய ஒரு ஆய்வு என்ற ஆங்கில நூல் அந்த போதாமையைப் போக்குவதாக அமைந்தது. பெரியார் இராமசாமியின் கருத்துக்களை, வாழ்நாள் முழுவதுமான போராட்டங்களை தத்துவார்த்த புரிதலுடன் கூடிய மிகச் சிறப்பான நூலை ஆங்கிலத்தில் கார்த்திக் எழுதி இருக்கிறார். பரவலான கவனத்தைப் பெற்றுள்ள இந்த ஆங்கில நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகமே இக்கட்டுரை.
நூற்று முப்பத்து மூன்று பக்கங்கள் கொண்ட இந்நூல், ஐந்து அத்தியாயங்களாக அமைந்திருக்கிறது. சிறிய நூல் என்றாலும் தந்தை பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய சிறப்பானதொரு அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல்.
முதல் அத்தியாயம் : பெரியார் ஈவேரா – ‘முழுமையான பகுத்தறிவுவாதியாக ஓர் எதிர் தத்துவவியலாளர்’ ( The Complete Rationalist as Anti-Philosopher)
தமிழ்ச்சூழலில் பலர் பெரியாரை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவர் ஒரு தத்துவவாதி அல்ல. அவர் ஒரு சாதாரண அரசியல்வாதிதான், அவருடைய சிந்தனைகளுக்கு ஒரு தத்துவப் பின்புலம் கிடையாது, அவர் தேர்ந்த அரசியல் கருத்தியலை வெளிப்படுத்தியவர் அல்ல என்பது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இது ஓரளவுக்கு நாகரிகமான விமர்சனம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், இதை விட மிக மோசமான, தரக்குறைவான விமர்சனங்கள் சொல்லப்பட்டுள்ளன. தந்தை பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் அவருடைய எழுத்துக்கள் பேசுபொருளாக இருக்கின்றன. எதிர்வினையை ஏற்படுத்துகின்றன. மக்களை மன உறுதி கொள்ளவைக்கும் சொல்லாடல்களை வழங்குகின்றன. அதற்கு சாட்சியே இந்த எதிர்வினைகள்.
‘1879ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்த தந்தை பெரியார் அவர்கள், நவீன தமிழ்நாட்டின் மிகவும் பிரச்சினைக்குரிய நபராக வாழ்ந்தார்’ என்று கார்த்திக் கூறுகிறார். பிரச்சினைகளை பெரியார் தேடி உருவாக்கவில்லை. சமூகத்தில் எரிகின்ற பிரச்சினைகளுக்கு அவர் முகம் கொடுத்தார். சமூக இழிவுகளை, சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, பிரிவுகளை, ஆண்-பெண் வேற்றுமைகளை, சாதியக் கொடுமைகளை எதிர்த்து வினையாற்றும்போது அவை பிரச்சினைக்குரியவையாக மாறிவிடுகின்றன. தீர்க்கப்பட வேண்டிய கட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. காங்கிரசின் சென்னை மாகாணத் தலைவராக இருந்து, பிறகு நீதிக்கட்சியை உருமாற்றி, திராவிடர் கழகத்தை தோற்றுவித்த பெரியார் தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மத்தியில் பகுத்தறிவு, சமதர்மம், சம உரிமை,விடுதலை குறித்து பேசிவந்திருக்கிறார்.
ஆதிக்கவாதிகளுக்கு எப்போதும் கசப்பானவராக இருந்துள்ள அவரை வெகுமக்கள் எப்படிப் பார்த்தார்கள்?
ஈ.வெ.ராமசாமி அவர்களை, “பெரியார் ராமசாமி” என்று முதன்முதலில் குறிப்பிட்ட தமிழ் இலக்கியப் பனுவல் குறித்த கட்டுரையை, அண்மையில் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதியிருந்தார். அந்தப்பனுவல், 1934ஆம் ஆண்டு புதுமைப்பித்தனால் எழுதப்பட்ட’புதிய நந்தன்’ என்ற சிறுகதை. தந்தை பெரியாருக்கு 1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், ‘பெரியார்’ என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. ஆனால், 1934-லேயே புதுமைப்பித்தன் இதை எழுதி இருக்கிறார் என்றால், அதற்கு முன்பே மக்கள் அவரை அப்படி அழைத்து வந்தார்கள் என்பது இந்த பதிவிலிருந்து நமக்கு தெரிகிறது. பெரியாரை ஆதரிப்பவர்களை பற்றிக் குறிப்பிடுகின்ற கார்த்திக், அதே காலக்கட்டத்தில் பெரியாரை எதிர்த்தவர்கள் எப்படி அவரைப் பார்த்தார்கள் என்றும் விவாதிக்கிறார். பார்ப்பன எதிர்ப்பாளராக, ஹிந்து எதிர்ப்பாளராக இதனாலேயே இந்திய எதிர்ப்பாளராக, வலதுசாரி சிந்தனையாளர்களால் அவர் குறிப்பிடப்படுகிறார்.
2002ஆம் ஆண்டு முதலமைச்சர் மாயாவதி அவர்கள் பெரியாருடைய சிலையை உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நிறுவுவதற்கு முயன்றபோது, அதை ஒரு தேசியவாத கட்சி தடுத்தது. அண்மைக் காலங்களில், பல இடங்களில் அவருடைய சிலைகள் மீது காவி சாயம் பூசுவது, சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தீவிர இந்து தேசியவாதிகள், இந்தக் காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, பெரியாருடைய சிலையின் கீழே, “ கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுள் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்ற முழக்கங்கள் இருப்பது பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதால் அவற்றை நீக்கவேண்டும் என்று கோரினார். வழக்கை தள்ளுபடி செய்து, “கடவுளின் பெயரால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதால் பெரியார் கடவுளை எதிர்த்தார். ஆனால், சுயமரியாதை, சமூக சீர்திருத்தம், சாதி அமைப்பை ஒழிப்பது, சமத்துவம், சமமான உரிமைகள் கொண்டதொரு சகோதரத்துவ சமுதாயத்தை அமைப்பதே பெரியாருடைய நோக்கமாக இருந்தது. இந்தக்கருத்துகளை பரப்ப, நம் அரசியலமைப்பு இசைவளிக்கிறது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம், என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பௌத்த சிந்தனைகள், பகுத்தறிவு, தமிழர் நலம் குறித்த சிந்தனைகள் தமிழ்ப்பரப்பில் பெரியாருக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டன. அவருக்கு முன்பே பல தலைவர்கள் இது குறித்துப் பேசி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சைவ நெறியாளர் தமிழறிஞர் மறைமலை அடிகள், தமிழ் பவுத்தர் அயோத்திதாச பண்டிதர், சமத்துவ சிந்தனையாளர் சிங்காரவேலர் எனப்பலர். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பரவலான அங்கீகாரம், பரந்துபட்ட தலைவர் என்ற வரவேற்பு பொதுமக்களிடையே பெரியாருக்கு எப்படி கிடைத்தது என்ற ஒரு கேள்வியை எழுப்புகிறார் கார்த்திக். பெரியார், ஏன் மற்ற தலைவர்களை விட புகழ் பெற்றவராக, மக்கள் மனதில் நிறைந்தவராக இருந்தார்? பெரியார் பேசிய விஷயங்கள், அவற்றை அவர் சொன்ன முறை இவை இரண்டும் தான் அவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது. வெறும் பார்ப்பனிய மதத்தை மட்டும் அவர் எதிர்த்து குரல் எழுப்பவில்லை. ஆனால், பார்ப்பனர் அல்லாத மற்ற சாதியினர், தலித் மக்கள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரும் படிக்க வேண்டும்; அரசியல் உரிமையை பெற வேண்டும் என கிராம, நகர முச்சந்திகளில் மேடை போட்டு அமர்ந்து மக்களிடையே நேரடியாக பேசினார். அவர் பேசிய மொழியை கொச்சையான தமிழ் என்று சொன்னார்கள். மக்களுக்கு புரியக்கூடிய பேச்சுவழக்கில் அவர் பேசினார். அதனால், அவரால் மிகப் பெருமளவு மக்களை சென்றடைய முடிந்தது. நாகரிகமற்ற முறையில் பேசினார் என்றுகூட ஒரு விமர்சனம் உண்டு. அதை பற்றி பெரியார் கவலைப்பட்டதில்லை. தான், என்ன சொல்ல வருகிறோம்? தன்னுடைய கருத்து என்ன? அந்தக் கருத்தை மக்களிடையே எப்படி கொண்டு போய் சேர்ப்பது? அது தான் முக்கியமே தவிர, அழகான, இலக்கிய நயம் வாய்ந்த, கேட்பதற்கு இனிமையான சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டும் என்று பெரியார் எப்போதுமே நினைத்ததில்லை. நேரடியாக விஷயங்களை மக்களுடைய கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக அவருக்குக் கைவந்த உரையாடல் பாணியில் அவர் மக்களிடம் நேரடியாகப் பேசினார். அது மிகவும் சக்தி வாய்ந்த பேச்சாக இருந்தது. பேசுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தான் நடத்தி வந்த பத்திரிக்கைகளில் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். அதுமட்டுமில்லாமல் அவர், எங்கெங்கு, எந்தெந்த கூட்டங்களில் சென்று பேசுகிறாரோ, அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதற்கு அடுத்த நாளோ, அதற்கு அடுத்து வரும் இதழிலோ அச்சிலே வரும் மக்கள் படிப்பதற்கு; தொடர்ந்து விவாதிப்பதற்கு. மிகவும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய வகையில் தன்னுடைய இதழ்களையும் நூல்களையும் அவர் நடத்தி வந்தார். அவருடைய உரைகள் பதிப்பிக்கப்பட்டு, மலிவுவிலையில் விநியோகமாயின. இவ்வாறு, பெரியார் பரந்துபட்ட மக்களிடையே அங்கீகாரம் பெற்றதற்கான காரணங்களை விளக்குகிறார் கார்த்திக்.
ஒரு தத்துவவாதி, அரசியல்வாதி, தலைவருக்கான வரலாற்றிடம் அவருக்கு பிறகான காலங்களில் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பார் தத்துவவியலாளர் ஹெகல். 1917இல் ரஷ்யாவில் விளாடிமிர் இலியிச் லெனின் மேற்கொண்ட புரட்சியின் விளைவாய் அமைந்த சோஷலிச குடியரசு தான் காரல் மார்க்சுக்கு வரலாற்றில் ஒரு உன்னத இடத்தைப் பெற்றுத் தந்தது. அதுபோல, 1967-இல் சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் பங்கேற்று, அரசுக்கட்டிலில் அமர்ந்ததுதான், தந்தை பெரியாருக்குத் தென்னிந்திய வரலாற்றில், இந்திய வரலாற்றில் அவருக்கான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது என்று குறிப்பிடுகிறார் கார்த்திக். இது விவாதத்துக்குரிய ஒரு புள்ளி. ஏனென்றால் பெரியாருக்கு அரசியல் அதிகாரம் குறித்தெல்லாம் எப்பொழுதுமே கவலை இருந்ததில்லை. சில நேரங்களில் இணக்கமாகவும், சில நேரங்களில் எதிர்த்தும் அரசோடு செயல்பட்டிருக்கிறார். ஆனால், தன்னுடைய கொள்கைகளைப் பரப்புவதை மட்டுமே முக்கியமான குறிக்கோளாக அவர் வைத்திருந்தார். பெயர், புகழ் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதும் இல்லை. அவருடைய நடவடிக்கைகளும் பேச்சுக்களும் அவ்விதமே இருந்தன. மக்களிடையே பகுத்தறிவுப் பரப்புரையை தடையின்றி மேற்கொண்டு, சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களையவேண்டும் என்பதற்காகவே தன் அரசியல் நிலைப்பாடுகளை அவர் தகவமைத்துக்கொண்டார் என்பதை அவதானிக்க முடிகிறது.
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே, ‘புது யுகத்தின் தீர்க்கதரிசி’, ‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். பெரியார், சாக்ரடீசு போலவே சட்டமன்றங்களில் அல்லாமல், தெருக்களில் தன்னுடைய பரப்புரையை மேற்கொண்டவர் என்று கீதாவும், எஸ்.வி.ராஜதுரையும் குறிப்பிடுவதாக கார்த்திக் மேற்கோள் காட்டுகிறார். குறிப்பாக பெரியாரை யாருடன் ஒப்பிடுவது? அவர் ஒரு தத்துவவாதியா? அவரை சாக்கிரட்டீஸுடன் ஒப்பிடுவதா, இல்லை பிரெஞ்சு தத்துவவாதி ரூஸோவுடன் ஒப்பிடுவதா என்பதை விவாதிக்கிறார் நூலாசிரியர். சாக்ரட்டீஸ் மிகவும் வலியுறுத்திய ஒரு விஷயம், ஒழுக்கமான நடத்தை. நடைமுறை அறிவை, மக்கள் பெற்றிருக்கவேண்டும்; எதையும் பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் சாக்ரடீஸ். அவர் நாத்திகர் இல்லை என்றாலும், கடவுளர்களை மிகவும் மோசமாக சித்தரித்த கிரேக்க புராணங்களே மக்களுடைய மோசமான நடத்தைக்கு காரணம் என்று சொன்னவர். மக்கள் இழிவாக நடந்துகொள்வதற்கு அத்தகைய புராணங்கள் வழிவகுக்கின்றன. அவற்றை எழுதிய புலவர்களைக் குறை சொல்லிய சாக்ரடீஸ். கடவுள்களை மிக மோசமாக காண்பித்த படைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கோரினார், பகுத்தறிவு, கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் எதிராக பேசுவது போன்ற விஷயங்களில் பெரியாருக்கும் சாக்கிரட்டீஸுக்கும் ஒற்றுமை இருக்கிறது. ஆனால், அந்த ஒற்றுமை அங்கேயே நின்று விடுகிறது என்கிறார் கார்த்திக். பெரியார், புராணங்களை எதிர்ப்பது புராணங்கள் கடவுளர்களை மிகக் கீழாக காட்டுகின்றன என்பதற்காக அல்ல. அவை பொய்யாக கடவுள்களின் புகழ் பாடி, மக்களை மயக்குகின்றன என்பதற்காக. பெரியாரின் பகுத்தறிவு, சாக்ரடீஸின் (Logos) சொல்லாடலிலிருந்து மாறுபட்டது. பகுத்தறிவு தான் மிருகங்களிடம் இருந்து மனிதர்களை பிரித்து காண்பிக்கிறது என்று நினைத்தவர் பெரியார். சாக்ரடீஸ் நீதி நல்லது; அழகானது; தூய்மையானது; எல்லாம் முன்பாகவே உலகத்தில் இருக்கின்றன. நம்முடைய அறிவின் மூலமாக அவற்றை நாம் கண்டடைய வேண்டும் என்று சொன்னார். ஆனால், பெரியாருடைய பகுத்தறிவு என்பது பொருள் முதல் வாதத்தை, அதாவது நேரடி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகை அறிவது. இந்த இடத்தில், இரண்டு பேரும் வேறுபடுகிறார்கள். அழியாத ஆன்மாவை நம்பினார் சாக்ரடீஸ். பெரியாருக்கு அது சுத்தமாக ஒத்துவராத ஒரு கொள்கை.
சாக்ரடீஸ் எழுதிய உரையாடல்கள், பொதுவாக சமூகத்தில் நிலவும் ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து தொடங்கும். அந்த கருத்துக்கு நேர் எதிரான ஒரு வாதத்தை வைத்து, வாத-விவாதம் மூலமாக ஒரு புதிய இடத்தை சென்று அடையும். பெரியாரும் உரையாடல்களை எழுதினார். ஆனால், அவை சமூகம் பற்றி, சாதி பற்றி, அரசியல் பற்றி, அன்றாட நடப்புக்கள் பற்றி, மதம் பற்றிய உரையாடல்கள். ஏற்கனவே தான் கொண்டிருக்கும் ஒரு கருத்தை எள்ளல் தொனியில், உரையாடல் பாணியில் மக்களுக்கு புரியும் வகையிலே பெரியார் எழுதினார். அது கிட்டத்தட்ட அறிவொளிக் கால பிரான்சில் வாழ்ந்த மத எதிர்ப்பு கிண்டல் எழுத்துக்காரர்களின் எழுத்துக்களை ஒத்திருந்தது.
நீதிக்கட்சியின் ஏ.இராமசாமி முதலியார், “தமிழ்நாட்டின் ரூஸோ” என்று பெரியாரை அழைத்தார். இந்த ஒப்பீடு குறித்தும் கார்த்திக் விவாதிக்கிறார. அறிவொளிக் காலம், சிந்தனையாளர்களிடையே ‘ஃபிலோசஃப்’ என்றொரு குழுவை உருவாக்கியது. அதில், ரூஸோ ஒரு முக்கியமான ஒரு சிந்தனையாளர். அக்குழுவில் கல்விப்புலம் சார்ந்த தத்துவ அறிஞர்கள் கிடையாது. எளிமையான படைப்புகள் மூலமாக மக்களை சென்றடையக் கூடிய பொது அறிஞர்களாக அவர்கள் விளங்கினார்கள். கிருத்துவ மதக் கட்டமைப்பினுடைய ஊழல்களையும், அது அதிகாரத்துடன் கைகோப்பதையும் கடுமையாக எதிர்த்த ரூஸோ அதற்கு மாற்றாக, மக்களைச் சார்ந்த மத அமைப்பு ஒன்று தேவை என்று கருதினார். ஆனால், மதவழியில் நிச்சயம் ஒழுக்கமுடன் வாழ முடியாது என்று பெரியார் நம்பினார். இயற்கை சார்ந்த ஆதி மனிதனை நாகரிகம் கெடுத்துவிட்டது என்று ரூஸோ நினைத்தார். ஆனால், பெரியாரோ பகுத்தறிவுள்ள நாகரிகம் மட்டும் இல்லாவிட்டால், மனிதன் ஒரு காட்டுமிராண்டியாகவே இருந்திருப்பான் என்று சொன்னார்.
பெரியாரை பிரெஞ்சு சிந்தனையாளர் வால்டேருடன் ஒப்பிட முடியும்; அவரோடு ஓரளவுக்கு ஒத்த கருத்துக்களை உடையவராக பெரியார் இருக்கிறார் என்று கார்த்திக் கூறுகிறார. கல்விக்கும், பகுத்தறிவு வளர்வதற்கும் மிகவும் ஆதரவாக இருந்த வால்டேர், மதகுருமார்கள் வர்க்கத்தை மிகத்தீவிரமாக விமர்சித்தார். மதங்கள் குறித்த கேலிச் சித்திரங்களை, கிண்டல் படைப்புகளை வால்டேர் எழுதியிருக்கிறார். மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களிடையே ஊடுருவி வாழக்கூடிய ஒரு கூட்டமாக மதகுருமார்கள் வர்க்கம் இருக்கிறது; அக்கூட்டத்தால், சமூகத்திற்கு எந்த விதமான உபயோகப்பட கூடிய எந்த உற்பத்தியும் கிடைக்கவில்லை என்று எழுதினார் வால்டேர். அதனால்தான் என்னவோ, அம்பேத்கர் வால்டேரை ஒரு லட்சிய அறிஞராக கருதினார். பார்ப்பனர்களால் வால்டேர் போல ஒருவரை கூட உருவாக்க முடியவில்லை என்று அம்பேத்கர் விமர்சித்தார்.
பெரியார் ஒரு தத்துவ அறிஞர் கிடையாது என்று சில தலித் ஆர்வலர்களும், தீவிர தமிழ்த் தேசியர்களும் அண்மைக்காலமாக தெரிவித்து வருகிறார்கள். எந்த தத்துவ மரபில் அவரை பொருத்திப்பார்ப்பது என்ற கேள்வியில் தொடங்கி விவாதிக்கிறார் கார்த்திக். ‘தமிழ் ஆளுமைகள்’ என்ற ஆங்கில நூலில், ஆ.இரா.வேங்கடாசலபதி பெரியார் ஒரு தத்துவ அறிஞரோ, ஒரு சீரான சிந்தனையாளரோ இல்லை என்று எழுதியிருக்கிறார். பெரியார் 1967-ஆம் ஆண்டில் விடுதலை நாளிதழில் தன்னைப்பற்றிச் சொல்லும்போது, ‘இப்போது இருக்கக்கூடிய தமிழறிஞர்கள் ஏட்டறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நான் நடைமுறையில் தேர்ச்சி பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறார்.
தத்துவவாதிகள் என்றால் யார்? நிகழ் நடைமுறை அமைப்பை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்களே தத்துவவாதிகள். இன்று நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பை இரக்கமற்று விமர்சிப்பவர்கள்தான் தத்துவவாதிகள் என்கிற வாதத்தை கார்த்திக் வைக்கிறார். கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ், வால்டர் பெஞ்சமின் ஆகியோரை அந்த வரிசையில் சேர்க்கிறார்.
ஒரு கட்டமைப்பை உருவாக்கக் கூடியவர்கள் தத்துவவாதிகள் என்று வைத்துக்கொண்டால், அரிஸ்டாட்டில், இமானுவேல் கான்ட், ஃப்ரெட்ரிக் ஹெகல் ஆகியோர் ஒரு கட்டமைப்பை உருவாக்கக்கூடிய தத்துவவாதிகளாக கருதப்படுகிறார்கள். அதேவேளையில், இருக்கின்ற கட்டமைப்பை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய எதிர் அறிஞர்களாக கார்ல் மார்க்ஸையும், ஃப்ரெட்ரிக் நீட்ஷே வையும் குறிப்பிடலாம் என்று கார்த்திக் சொல்கிறார். அந்த வகையில் பார்த்தால், பெரியாருடைய இடம் என்பது மிகாயில் பக்குனின் தத்துவ வாதங்களை ஒட்டி வருகிறது. குறிப்பாக, மத அரசியலின் பொய் முகத்தை, அதனுடைய பிம்பங்களைக் கட்டவிழ்த்து, நிதர்சனமான உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு எதிர்த்தத்துவவாதியாக பக்குனின் இருக்கிறார். அந்த வகையிலே பெரியாருடைய நாத்திக அரசியலை இந்த நூலிலே கார்த்திக் பார்க்கிறார்.
சாமி சிதம்பரனாரின் நூலிலே பெரியார், தான் ஒரு முழுமையான பகுத்தறிவுவாதி; சாதிய கட்டமைப்பை எந்த வகையிலாவது ஒழிக்கக் கூடிய ஒரு முழுமையான பகுத்தறிவுவாதி என்று பெரியார் தன்னைத்தானே வறையறுத்துக் கொள்வது பதிவாகி இருக்கிறது. பெரியாருடைய பிராமண எதிர்ப்பு என்பது, நாத்திக அரசியலின் ஒரு பகுதி. பிராமணியத்தின் மத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் பிம்பத்தை கட்டுடைத்து, அதிகார பீடத்திலிருந்து கீழிறக்க வேண்டும் என்ற கொள்கையே பெரியாருடைய நாத்திக அரசியல் என்று வரையறுக்கிறார் கார்த்திக்.
பெரியாரின் மதம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய நீதி, சமத்துவம், சுதந்திரம் குறித்த தற்காலச் சொல்லாடல்களில் பெரியாரின் தேவையையும், சிறப்பையும் நிறுவுவதற்கே இந்த நூல் என்று சொல்கிறார் கார்த்திக்.
****
இரண்டாவது அத்தியாயம்: – ‘நாத்திக அரசியல்’ (Political Atheism) (மார்க்சியம்,கட்டற்றவியல், பெரியாரியல்) (Marxism, Anarchism, Periyarism)
நாத்திக அரசியல் என்பது, மத அரசியலுக்கு விடப்படும் சவால். மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான ஒற்றுமைப்பிணைப்பை அது கவனப்படுத்துகிறது. மதம், அரசு இரண்டையும் நாத்திக அரசியல் எதிர்க்கிறது.
மதத்தைப் போல மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைத் தன்னிடம் குவித்து வைத்திருக்கக்கூடிய அரசு எப்படி பலவித தந்திரப் புதிர்களை கொண்டு இயங்குகிறது என்பதை நாத்திக அரசியல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அப்புதிர்களை, மர்மங்களை கட்டவிழ்த்து மக்களுக்குப் புரியவைப்பதை தன்னுடைய கடமையாக நாத்திக அரசியல் கொண்டிருக்கிறது. அது ஒரு எதிர்மறை நடவடிக்கை. தெய்வத்தையும், அரசையும் எதிர்த்து வேலை செய்யும் அது, தனி மனிதனின் இறையாண்மையையும், அவனுடன் பின்னிப் பிணைந்த தனிமனித உரிமைகளையும் வலியுறுத்துகிறது.
மதத்திற்கு எதிரான விமர்சனங்களோடு மட்டும் தன்னை சுருக்கிக் கொண்ட ஒரு தாராளவாத நாத்திகவாதி அல்ல பெரியார் என்கிறார் கார்த்திக். அவரது நாத்திக அரசியல் கடவுள் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. மத மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. மதத்துக்கும், அரசுக்கும் இடையிலான உறவைத் தோலுரித்துக் காட்டியது. 1930களின் சோவியத் யூனியன் பயணத்துக்குப் பிறகு, பெரியார் இந்திய கம்யூனிஸ்ட்கள், மார்க்சிய அரசியல் செயல்பாட்டாளர்கள் உடன் தொடர்ந்து உரையாடினார்.
பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் எழுச்சிக்கு முன்னதாக, பிரெஞ்சு தத்துவவாதிகள் மதத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டனர். குறிப்பாக வால்டேர், திதரோ இருவரும் மதத்தையும், மத அதிகாரத்தையும் விமர்சித்தனர். மத குருமார்களுக்குச் சமூகத்தின் மீது உள்ள அதிகாரத்தை வரையறுத்து, அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
கார்ல் மார்க்ஸைப் பொருத்தவரை நாத்திகம் தேவையானது தான். ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. “மக்களுக்கு மதம் அபின் போன்றது” என்ற மார்க்ஸுடைய மிகப் புகழ்பெற்ற வாசகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மதம், மக்களுடைய நோய்களை குணப்படுத்தும் மருந்தல்ல; நோயின் வலியை மறப்பததற்கான போதை தான் மதம் என்று மார்க்ஸ் பார்த்தார். மார்க்ஸை விட எங்கல்ஸ் மேலும் தீவிரமான கருத்தைக் கொண்டிருந்தார். மனிதனிடமும் இயற்கையிடமும் இருக்கக்கூடிய அனைத்து இயல்பான தன்மைகளையும் காலி செய்து விடக் கூடிய அமைப்பாக மதம் இருக்கிறது என்றார் எங்கல்ஸ். மனித மாண்பு, மனித முயற்சி, இயற்கையின் வலிமை இவற்றை தெய்வ சக்தி பதிலீடு செய்து விடுகிறது.
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும், மத எதிர்ப்பு நாத்திகத்தை, வரலாற்று ரீதியில் சமூக பொருளாதார நிலைமைகளைப் பார்க்கும் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் இணைத்தால் அது முன்னேற்றப்பாதைக்கு வழி வகுக்கும் என்று நம்பினர்.
கோட்பாட்டையும் செயல்பாட்டையும் இணைத்து உலகின் முதல் சோசலிச அரசை நிறுவிய மிகச்சிறந்த, தனித்த மார்க்சிய அறிஞரான லெனின், மதத்தை கட்டுப்படுத்துவதற்கான தேவையை உணர்ந்திருந்தார். உலகத்தில் இருக்கக்கூடிய மிக மிக ஊழல் தன்மை வாய்ந்த விஷயங்களில் ஒன்று மதம் என்று அவர் கருதினார். லெனின் மனதளவிலான ஒரு புரட்சிகர செயல்முறையை வலியுறுத்தினார். அதன்மூலம், ஏற்கனவே சமூகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புக் கூறுகளை ஒழித்து, அவற்றை மறு உருவாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று கூறினார். ஒழிக்க வேண்டிய அத்தகைய கூறுகளில் ஒன்று தான் மதம் என்று லெனின் கூறினார்.
கட்டற்ற நிலை (Anarchy) என்றாலே முழுமையான ஒழுங்கின்மை, குழப்பங்கள், திடீர் வன்முறை நிகழ்வுகள் என்ற ஒரு பிம்பம்தான் நம் மனதில் உருவாகிறது. தமிழில் இந்நிலைக்கு அராஜகவாதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பொது அறிஞர், கட்டற்றவியலாளர் நோம் சாம்ஸ்கி, கட்டற்ற நிலையை பற்றி சொல்லும்போது, அது சோசலிசத்தின் தாராளவாதக் கிளை என்று குறிப்பிடுகிறார். கட்டற்றவியலின் அடிப்படையான ஒரு விஷயம் என்னவென்றால், நியாயமானது என்று நி ரூபித்துக் கொள்ளும்வரை, அதிகாரம் எப்பொழுதுமே நியாயமற்றதுதான் என சாம்ஸ்கி வாதிடுகிறார். அதிகாரத்தைக் கட்டுடைத்து, அதனுடைய முகமூடியைக் கிழித்தல் என்பதே கட்டற்ற நிலை என்று குறிப்பிடுகிறார். கார்ல் மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த மிகைல் பக்குனின், முக்கியமான கட்டற்ற நிலை கோட்பாட்டாளராக கருதப்படுகிறார். மார்க்சியம் குறித்த அவருடைய முக்கியமான விமர்சனம் என்னவென்றால், தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றி, அதன் மூலம் முதலாளித்துவ அதிகாரத்தை மாற்றியமைக்க முடியும் என்ற கருதுகோளை பக்குனின் ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிலாளர் வர்க்கம், அரசு அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், அரசு அதிகாரத்தை இல்லாமல் செய்வது என்பது குறித்த மார்க்ஸின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பக்குனின் குறிப்பிடுவதை கவனப்படுத்துகிறார் கார்த்திக்.
அதிகாரமும், மேலாண்மையும் தம்மைத்தாமே மறுஉற்பத்தி செய்துகொள்ளக் கூடிய வல்லமை உடையவை என்று பக்குனின் நம்பினார். தொழிலாளர் வர்க்க தலைமையிலான அரசிலும் மேல்தட்டு வர்க்கம் ஒன்று உருவாகும். பெரும்பான்மையானோர் நலன்களுக்கு எதிராக அம்மேல்தட்டு வர்க்கம் செயல்படும். மத அரசியலை எதிர்த்த பக்குனினுடைய விமர்சனமானது, கடவுள், அரசு இரண்டையும் எதிர்ப்பதிலிருந்து எழுகிறது.
பக்குனினைப் பொருத்தவரை, விவிலியத்தின் கடவுள், மிகத்தீவிரமான பொறாமை கொண்ட, தன்னலம் மிக்க, மிகக் கொடூரமான, மிக நியாயமற்ற, மிகுந்த ரத்தவெறி கொண்ட, மிகக் கொடுங்கோன்மை வாய்ந்த, மனித மாண்புக்கும், சுதந்திரத்துக்கும் எதிரான ஒருவராக இருக்கிறார். அதேவேளையில், கடவுளுக்கு நேரெதிரான சாத்தான், எப்பொழுதும் ஒரு இடையறாத எதிர்ப்பாளராகவும், முதல் விடுதலைச்சிந்தனையாளராகவும், உலகத்தை உய்விப்பவராகவும் இருக்கிறார். எல்லா மத அமைப்புகளின் சாராம்சமும், மனிதர்களை பட்டினி கிடக்க வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி, கொன்றொழித்து அதன் பலனை தெய்வத்துக்கு அளிப்பது என்பதாக இருக்கிறது. கடவுள் என்ற கருத்தாக்கம், மனிதன் தன்னுடைய தர்க்க நியாயத்தையும் விட்டொழிக்க வேண்டுமென்கிறது. மனித சுதந்திரத்தின் மிகத்தீவிரமான விரோதியாக கடவுள் என்ற கருத்தாக்கம் இருக்கிறது. கோட்பாட்டளவிலும் சரி; செயல்பாட்டளவிலும் சரி; மனிதகுலத்தை அடிமைப்படுத்துவதிலேயே அது சென்று முடிகிறது என்கிறார் பக்குனின்.
பிரெஞ்சு அறிவொளி எழுத்தாளர் வால்டேர் ஒருமுறை, ‘கடவுள் என்று ஒன்று இல்லை என்றால், அதை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். அக்கருதுகோளை புரட்டிப்போட்ட பக்குனின், ‘கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், அவரை அழித்து ஒழிக்க வேண்டியது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது’ என்றார். அறிவியல் கல்வி, மக்களிடையே விடுதலை பற்றிய ஒரு புரிதலையும், மதத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்று பக்குனின் கருதினார். அதே வேளையில், அறிவியல் அறிஞர் கூட்டத்தின் மேலாதிக்கத்தையும் அவர் எதிர்த்தார்.
இதேபோன்றதொரு விமர்சனத்தை, கார்ல் மார்க்ஸ் குறித்தும் பக்குனின் வெளிப்படுத்துகிறார். கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு சிறிய தேவாலயம் போல் கார்ல் மார்க்ஸ் உருவாக்குகிறார். அதில், இருப்பவர்கள் எல்லோரும் சோசலிச மார்க்சியத்தின் மீது மிகத் தீவிரமான பக்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது பக்குனினின் பார்வை.
கடவுளுக்கு எதிராக சாத்தானை நிறுத்தி பேசக்கூடிய அணுகுமுறையை, சால் நியூமன், ‘மத எதிர்ப்பு மதவியல்’ என்று வரையறுக்கிறார். இத்தகையதொரு ‘மதஎதிர்ப்பு மதவியல்’, பெரியாரிடமும் செயல்படுவதை நாம் பார்க்கமுடியும் என்கிறார் கார்த்திக்.
ஆரிய, பார்ப்பன நாயகன் ராமருக்கு எதிராக திராவிடப் புரட்சியாளராக, அசுர அரசன் ராவணனை முன்னிறுத்துகிறார் பெரியார். அப்படி முன்னிறுத்துவதன் மூலம் அரசு, மதம் பற்றி கேள்விகளற்று ஏற்றுக்கொள்ளப்படும் கட்டுக்கதைகள் மீதான விமர்சனத்தையும் பெரியார் வைக்கிறார். இப்படி மிகாயில் பக்குனின் கருத்துக்களையும், பெரியாருடைய கருத்துக்களையும் ஒப்பிட்டு மிக விரிவாக இந்த அத்தியாயத்தில் விவாதிக்கிறார் கார்த்திக்.
அரசு அதிகாரம், பார்ப்பனர்களுக்கு சலுகைகள் உள்ள மேல் நிலைக்கும், தமிழ் மக்களை சூத்திர கீழ் நிலைக்கும், தீண்டாமை நிலைக்கும் உட்படுத்தி விட்டது என்று பெரியார் கருதினார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற படைப்பில் பெரியார், பொதுவாக மதமும், சட்டமும் பால் அடிப்படையிலான ஒழுக்கவியல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பெண்விடுதலையைக் கட்டுப்படுத்தி விட்டன என்கிறார்.
அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் முதலானோரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் நாத்திக கருத்தாக்கங்கள், இருபதாம் நூற்றாண்டில் அதனுடைய முழு வீச்சுக்கு பெரியாரால் கொண்டு செல்லப்பட்டது. பெரியாரின் நாத்திகம் பற்றி எழுதுகையில், எம். எஸ். எஸ் பாண்டியன் ‘மதத்தையும், பகுத்தறிவையும் நேர் எதிரானதாக கட்டமைத்தவர் பெரியார். மதத்திடம் அடிமைப்பட்டு இருப்பவர்களுக்கு தன் மதிப்பு இருக்காது. தன்னுணர்வு உள்ள காரண,காரிய புரிதலால் மட்டுமே அவர்கள், தங்கள் மதிப்பை திரும்பப் பெற உதவும் என்று அவர் கருதினார்’ என்று எழுதுகிறார். பொருளாதார அடிப்படையில் மட்டும் அணுகாமல், மக்களை, அவர்களுடைய ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்டு வரையறுத்தார் பெரியார். சீர்திருத்தத்திற்கு ஒத்துவராத மதம், இந்து மதம் என்றும், சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இந்து மதத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்தால்தான் அது முடியும் என்று பெரியார் நம்பினார். ‘இனிவரும் உலகம்’ என்ற அவருடைய படைப்பில், அவர் கனவு கண்ட லட்சிய உலகத்தில், மதத்தை, அறிவியலும், பகுத்தறிவும் பதிலீடு செய்து விடும் என்று அவர் நம்பினார்.
காட்டுமிராண்டி காலச்சமூகத்தின் எச்சம்தான் கடவுள் எனக் கருதினார் பெரியார். இன்றைய பகுத்தறிவுக் காலத்தில் காட்டுமிராண்டி சமூகத்தைச் சார்ந்த கடவுள் தேவையற்றது. எல்லாம் வல்ல, எல்லா காலத்துக்கும், எல்லா இடங்களிலும் சர்வவியாபகமாக நிறைந்திருக்கின்ற கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்று மக்கள் சொல்கிறார்கள். நான், அவரை எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறை அமைப்பை உருவாக்கி, அதற்கு நியாயம் கற்பிக்கின்ற கடவுளைத்தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றார். பெரியாரைப் பொருத்தவரை பகுத்தறிவுவாதி என்பவர், கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்க வேண்டும். மத நம்பிக்கை அற்றவராக, கடவுள், மதம், நாடு, மொழி இவற்றின் மீது பற்றில்லாதவராக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, முன்னோர் வழிபாட்டை பற்றியும், கவலை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். இது போன்ற நம்பிக்கைகள் கற்றுக் கொடுக்கப் பட்டவையே என்பதால், அவற்றைக் கற்றபின் மறப்பது நல்லது என்று அவர் சொன்னார். பார்ப்பனர்களை மட்டும் அல்ல; பார்ப்பனர்களுடைய நடைமுறைகளைப் பின்பற்ற கூடிய பார்ப்பனரல்லாதவரையும் பெரியார் கண்டித்தார். இதுபோன்று பார்ப்பனர்களுடைய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக பெண் குலத்தை இழிவு செய்து அடிமைப்படுத்தி, பெண்களை நடமாடும் பிணங்களாக மாற்றிவிட்டோம் என்றார். தீண்டாமையை உருவாக்கியவர் கடவுள்தான் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையானால், முதல் காரியமாக அந்த கடவுளை ஒழிக்க வேண்டும். இல்லை, அந்த மாதிரியான ஒரு நடைமுறை இருக்கிறது என்பதை பற்றி அறியாதவராக கடவுள் இருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட அறியாமையை உடைய கடவுளையும் உடனடியாக அழிக்க வேண்டும். இதுபோன்ற ஒரு கொடுமையை, தீமையைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாத ஒருவருக்கு இந்த உலகத்தில் இருப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், அது நாத்திகத்தை மட்டும் பற்றிக் கொண்டால் போதாது. பெண் விடுதலைக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தால்தான் இந்தியா முன்னேற முடியும் என்று பெரியார் நம்பினார்.
தேசம், மொழி, மதம், சாதி ஆகியவற்றின் விதிகளுக்குள் அடிமைப்பட்டு கிடக்கும் மனித சமுதாயம், இழிநிலையைத்தான் சென்றடையும் என்று பெரியார் வாதிட்டார். பகுத்தறிவும், நாத்திகமும் முடிந்த முடிவுகள் அல்ல. அவை இருக்கக்கூடிய அதிகார அமைப்புகளைக் கேள்வி கேட்பதற்கான வழிமுறைகள் ஆகும். இந்த நிலைப்பாடு, பெரியாருடைய நாத்திகத்தை வெறும் அரசியலாக, அதாவது கடவுளையும் கடவுள் நம்பிக்கையும் மறுக்கக் கூடிய வெற்று அரசியலாகக் குறுக்கி பார்த்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. ஒடுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்வதை நியாயப்படுத்தும் சமூக, அரசியல், பொருளாதார, ஒழுக்கவியல், தத்துவ அமைப்புகளைக் களைவதற்கான ஒரு வழிதான் பெரியாருடைய நாத்திகம்.
பெரியார் கம்யூனிசத்திற்கு இணக்கமானவராக இருந்தார். சோவியத் ரஷ்யா பயணத்துக்குப் பிறகு, 1933ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில், கம்யூனிசம் என்பது பொருளாதார மற்றும் ஆன்மநேய அடிப்படையில், சமத்துவத்தை வலியுறுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது என்று எழுதியிருக்கிறார். 1930ஆம் ஆண்டில் இருந்து 1935ஆம் ஆண்டு வரை, ‘மதம்’ பற்றிய பெரியாருடைய எழுத்துக்களில் ஐந்து விதமான நிலைப்பாடுகளை பார்க்க முடிகிறது என்று குறிப்பிடுகிறார் கார்த்திக். கம்யூனிச சோஷலிச சிந்தனை என்பது மதங்கள் சொல்லக்கூடிய நல்ல போதனைகளை ஒத்ததாக இருக்கிறது; கம்யூனிசத்திற்கு நாத்திகம் மிகவும் தேவையான ஒன்று; மதம் வன்முறையை விளைவிக்கிறது; இஸ்லாம் தமிழர்களுக்கு ஏற்ற மதம்; நல்ல வாழ்க்கைக்கு எந்த மதமும் நல்லதல்ல ஆகியவையே அவை.
பார்ப்பனிய எதிர்ப்பில் பெரியார் தொடர்ந்து நிலையான ஒரு கண்ணோட்டத்தில் இருந்தார். மதம் குறித்த அவருடைய பல்வேறு நிலைப்பாடுகளை இதன் அடிப்படையிலேயே நாம் நோக்க வேண்டும்.
1951-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், பெரியாருடைய திராவிடர் கழகத்தின் துணையோடு கம்யூனிஸ்டுகள் பல இடங்களில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் பல விஷயங்களில் கம்யூனிஸ்டுகளுக்கும், பெரியார் இயக்கத்திற்கும் ஒருமித்த கருத்து இல்லை – குறிப்பாக, சாதி குறித்த கேள்வியிலும், தேசியம் குறித்த கேள்வியிலும். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, பார்ப்பனர்கள் கையில் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் வடவர் ஆதிக்கத்திற்கு அடிபணிகிறார்கள் என்று பெரியார் குறிப்பிட்டார்.
1944ஆம் ஆண்டு, பெரியார் எழுதிய, ‘கம்யூனிசம்? பொது உரிமை? எது முதலில்? ‘ என்ற கட்டுரையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக பார்ப்பனர்களால் நிரம்பியிருப்பதால், சாதி இருக்கும் வரை, கம்யூனிசம் பார்ப்பனர்களுக்குத்தான் நன்மை பயப்பதாக இருக்கும். ஏனென்றால், பொருளாதார நிலைமையில் ஏற்படும் மாற்றம், சடங்கு அடிப்படையிலான படிநிலை அமைப்பில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது என்று பெரியார் திட்டவட்டமாக குறிப்பிட்டார். பெரியாரின் ‘நாத்திக அரசியல்’ என்பது நிறுவப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் கேள்வி கேட்பது. விடுதலையோடு இணைந்து இருந்தால் தான் சமத்துவமும் சமதர்மமும் நிலைத்திருக்கும் என்று வலியுறுத்தினார் அவர். சமூக, பொருளாதார, மத, அரசியல் வடிவங்களில் இருக்கின்ற அனைத்து வகையான ஒடுக்குமுறைகளிலிருந்து, படிநிலை அமைப்புகளிலிருந்து விடுதலையை பெரியார் கோரினார். அத்தகைய விடுதலைதான், ஒருவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், தனித்தன்மையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும். இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மதமான இந்து மதம், இந்திய அரசினுடைய அமைப்புகளான சட்டம், கல்வி, போலீஸ், பத்திரிக்கை அனைத்துமே பார்ப்பனியத்தால் கறை படிந்து இருப்பதாக பெரியார் கருதினார். சாதியின் பெயரால் சிலரிடம் அதிகாரம் குவிந்து இருப்பதை எதிர்ப்பதற்காகவே பெரியார் கடவுளையும் மதத்தையும் சாதியையும் அரசையும் எதிர்த்து குரல் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறார் கார்த்திக் இந்தப்பகுதியில்.
****
மூன்றாவது அத்தியாயம் : ‘ராமசாமியும், ராமாயணமும்’ (Ramasamy and the Ramayana) இந்து மதம் குறித்த பெரியாரின் பார்வை (Periyar’s Approach to Hinduism)
மதத்தின் பெயரால் ஆதிக்கத்தைச் செலுத்த புராணங்களை பார்ப்பனர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ராமாயணம் குறித்த விமர்சனங்களின் மூலம் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார் வைத்து வந்தார். ஜெர்மன் தத்துவவியலாளர் நீட்சே குறிப்பிட்டதைப்போல, அனைத்து விதமான மதிப்பீடுகளையும் மறுவரையறை செய்ய வேண்டும் என்று பெரியார் கூறினார். இதிகாசங்களையும் புராணங்களையும் சாத்திரங்களையும் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரானதாக, எந்த விதத்திலும் பயனற்றதாக அவை இருக்கின்றன என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
****
நான்காவது அத்தியாயம் : ‘மதமாற்றம் மூலம் விடுதலையா?’ (Emanicipation through Coversion?) பெரியார், இஸ்லாம், பௌத்தம் (Periyar, Islam and Buddhism)
நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் பெரியாருடைய வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டிருந்த விஷயங்களாக இருந்தபோதிலும் சில நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை வேறு மதங்களுக்கு மாறுங்கள் என்று கூட அவர் கேட்டுக்கொண்டார். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு சூழல்களில் அவர் இஸ்லாம் மதத்தையும், பௌத்த மதத்தையும் மதம் மாறுவதற்கு ஏற்ற மதங்களாக குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பல தருணங்களில் அவர் மதமாற்றம் குறித்து பேசி இருந்தாலும், அடிப்படையில் பெரியார் மதம் இல்லாத ஒரு சமூகத்தை, மனிதநேயக் கட்டமைப்பை வலியுறுத்தி வந்திருக்கிறார். மக்கள் கடவுளுக்கோ, அரசுக்கோ கடப்பாடு உடையவர்கள் இல்லை. மக்களே கடவுள்களை உருவாக்கினர்; மக்களே அரசுகளை உருவாக்கினர். அதனால், மக்களே அவற்றைப் புறந்தள்ள முடியும். திரும்பத் திரும்ப, ஒரு விஷயத்தை பெரியார் மக்களிடம் வலியுறுத்தினார். அதாவது, மக்கள் மனிதாபிமானத்தின் மீதும், மனித சமூகத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய, கடவுள் மீது பற்று உடையவர்களாக, மதத்தின் மீது பற்று உடையவர்களாக, சாதியின் மீது பற்று உடையவர்களாக, மொழியின் மீது பற்று உடையவர்களாக, தேசத்தின் மீது பற்று உடையவர்களாக இருக்க கூடாது என்று அவர் வலியுறுத்தினார். பெரியாருடைய நாத்திக அரசியல் என்பது கடவுள், அரசு இல்லாமல் மக்கள் வாழமுடியும்; வாழ விரும்பவேண்டும். இதுவே பெரியாரின் விடுதலை குறித்த கருத்தின் மையம்.
****
ஐந்தாவது இறுதி அத்தியாயம் : ‘நமது காலத்துக்கு பெரியார்’ (Periyar for our Times)
இருபதாம் நூற்றாண்டு முடிந்து, இருபத்தியோராம் நூற்றாண்டின் கால் பகுதி கடக்கும் நிலையில் இருக்கிறோம். இக்காலகட்டத்தில், மத அடிப்படைவாதம் பல்வேறு நாடுகளில் தலைதூக்குகிறது. அது கொடுங்கோன்மை என்கின்ற நிலையை தொடுவதாக இருக்கிறது. இச்சூழலில் எங்கெல்லாம் மதமும் அரசியலும் ஒன்றின் மீது ஒன்று தாக்கம் செலுத்துவதாக இருக்கிறதோ, அங்கெல்லாம் நாத்திகர்கள் மிகவும் இக்கட்டான இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பங்களாதேஷில் நாத்திக எழுத்தாளர்களுடைய படுகொலையை பற்றி கேள்விப்படுகிறோம். இந்தியாவில், நாத்திகவாதிகள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் இந்து அடிப்படைவாதிகளால், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாட்டில், 2017 ஆம் ஆண்டு அவ்வளவாக அறியப்படாத திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பகுத்தறிவுவாதி எம்.ஃபரூக் என்பவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அவர் கொண்டிருந்த கொள்கைக்காக கொல்லப்படுகிறார். இப்படி பகுத்தறிவுவாதிகள் மீதான தாக்குதல், மத அடிப்படைவாதம் வளர்ந்தோங்கி வரக்கூடிய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகெங்கிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த வரலாற்றுத்தருணத்தில், பெரியாருடைய கொள்கை மிகவும் தேவையானதாக, அவருடைய அரசியல் நடைமுறை மிகவும் அவசியமாக இருக்கின்றது என்று குறிப்பிடுகிறார் கார்த்திக். அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவருடைய கருத்துக்கள் பற்றிய உலகளாவிய வெளிச்சம் மிகக் குறைவாகத்தான் இருந்தது. மிகவும் கட்டுப்பட்ட அளவில்தான் இருந்தது. ஆனால், உலக அளவில் நடைபெறுகின்ற மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி குறித்த உரையாடல்களில், பெரியாரியம் முக்கியமான ஒரு பங்கை ஆற்றக்கூடியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் கார்த்திக்.
பெரியார், தீவிரமான விடுதலையை கோரியவராக இருந்தார். மதத்தை விமர்சனம் செய்வதற்கான சுதந்திரம், மதம் இல்லாமல் வாழ்வதற்கான சுதந்திரம், சாதியற்ற சமூகத்தை நோக்கிப் போவதற்கான சுதந்திரம், பாலியல் சுதந்திரம், மாற்று அரசியலைக் கனவு காண்பதற்கான சுதந்திரம் என்று மிகத் தீவிரமான சுதந்திரங்களைப் பெரியார் கோரினார். பகுத்தறிவுவாதிகள் கடவுள், மதம், சாதி, மொழி, தேசம் இவற்றின் எதன்மீதும் பற்று கொண்டிருக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். உலகு தழுவிய மனித நேயத்தை பகுத்தறிவாதிகள் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பெரியாருடைய அரசியல் நாத்திகம், மதச்சார்பின்மைக்கு பிறகான அரசியலையும் (Post-Secularism), மத அடையாள அரசியலையும், புதிய நாத்திகத்தையும் மறுதலிக்கிறது.
கடவுள் மறுப்பை மட்டுமே தமது ஒரே கொள்கையாகப் பெரியார் கொண்டிருக்கவில்லை. குன்றக்குடி அடிகளாரிடம் அவர் நடத்திய உரையாடலிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ளலாம். ‘கடவுளோடு எனக்கு எந்த சண்டை சச்சரவும் கிடையாது. மதத்தால் உருவாக்கப்படும் கடவுள், எப்பொழுதுமே அநீதியான அரசியல் மற்றும் அநீதியான சமூக அமைப்புகளுக்கு துணை போகக்கூடியதாக இருக்கிறது என்று பெரியார் குறிப்பிடுகிறார். குன்றக்குடி அடிகளாரை எடுத்துக் கொண்டால், கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அவருடைய உதாரணத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். மதத்தை விமர்சனம் செய்வதை அவர் எதிர்க்கவில்லை. ஆனால், அவ்வாறு விமர்சனம் செய்பவரோடு உரையாடல் நிகழ்த்தும் ஒருவராகக் குன்றக்குடி அடிகளார் இருக்கிறார். அதே சமயத்தில் கடவுள் நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுகிறார். ஆனால், மத அடிப்படைவாதிகள் கடவுளையோ, மதத்தையோ யாராவது குறை சொன்னால், உடனே வன்முறையில் இறங்கி விடுகின்றார்கள். மத அடிப்படைவாதிகளின் நம்பிக்கை மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. கார்ட்டூன், நாவல், படம் என ஏதோ ஒன்று அவர்கள் தீவிரவாதத்தில் இறங்குவதற்கு காரணமாகி விடுகிறது. பெரியார், மத சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக எப்பொழுதும் குரல் கொடுத்தார். ஆனால், அதே சமயத்தில் மதங்களையும் விமர்சனம் செய்வதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறுவார். அதுதான், பெரியாருடைய நாத்திக அரசியலின் வழி என்று சொல்லுகிறார் கார்த்திக். இஸ்லாத்தை சில சந்தர்ப்பங்களில் அவர் ஆதரித்தாலும், இஸ்லாமிய சமூகங்களில் இருக்கக்கூடிய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை, பழக்கவழக்கங்களை தொடர்ந்து கண்டித்து வந்தார். தன்னுடைய பகுத்தறிவு வாதத்திற்கும் சமத்துவத்துக்கும் உடன்பாடு உள்ள ஒரு மதமாக பௌத்தத்தை அவர் பார்த்தார். இந்து மதத்தை மிகக் கடுமையாக விமர்சித்தவராக அவர் இருந்தாலும், குன்றக்குடி அடிகளார் போன்ற சைவசமய அறிஞர்களுடன் தொடர்ந்து சமூக பணியாற்றுவதில் எந்த சுணக்கமும் காட்டியதில்லை. எந்த மதமும் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால், கடவுள் இல்லாத, அரசு இல்லாத ஒரு சமூகத்தை உடனே அடைய முடியாது; அதைப்பற்றி கற்பனை கூடச் செய்யமுடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால், அரசையும் கடவுளையும் எதிர்த்து கேள்வி கேட்பதற்கான உரிமை, கடவுளும் அரசும் இல்லாத ஒரு சமூகத்தை கனவு காண்பதற்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்று அவர் சொல்லி வந்தார். பெரியார், கடும் கோட்பாட்டு வாதம் இல்லாத ஓர் எதிர் தத்துவவாதி. எல்லாவிதமான ஆன்மீகக் கோட்பாடுகளையும் அவர் கேள்வி கேட்டார். மதம் சார்ந்த கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தையும் அவர் கேள்வி கேட்டார். பெரியாருடைய அரசியல் நாத்திகம், இன்றைய காலகட்டத்தில், சமத்துவச் சிந்தனைக்கு நம்மத் தூண்டுவதற்கு ஒரு காரணியாக இருக்கும் என்று கார்த்திக் கருதுகிறார். சுதந்திரம் குறித்த புரட்சிகரமான கருத்தாக்கத்தை உள்ளடக்கிய சமூக நீதி, சமத்துவம் நோக்கிய ஒரு கருத்தாக்கத்திற்கு பெரியாருடைய கருத்துக்கள் உதவும். அதேநேரத்தில், மத அரசியல் குறித்து மிக தீவிரமாக விமர்சனம் செய்வதற்கான ஒரு உலகளாவிய உரையாடலைத் தொடங்குவதற்கும் பெரியாரியல் நமக்கு உதவும் என்று முடிக்கிறார் கார்த்திக்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மிக முக்கியமான ஒரு நூல் என்று இந்த நூலைச் சொல்ல வேண்டும். பெரியாருடைய வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை கோடிட்டு காட்டிச்சென்றாலும், குறிப்பாக, அவருடைய நாத்திக அரசியலுடைய பல்வேறு கூறுகளை, உலகளாவிய சிந்தனையாளர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு, அவருடைய நாத்திக அரசியல் எப்படி வளர்ந்தது; அது எப்படி இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்றாக இருக்கிறது ஆகியவற்றை விவாதிக்கிறார் ஆசிரியர். பெரியாரின் சிந்தனைகளை மென்மேலும் வளர்த்தெடுக்கவேண்டிய நெருக்கடியான வரலாற்றுக்கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்ட உதவுகிறது, “பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு” என்ற இந்த நூல்.
கட்டுரையாளர் :
அருணன் திரு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.