திராவிடர் கழகத் தலைவரும், தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாரின் அரசியல் வாரிசுமான ஐயா கி.வீரமணி அவர்கள் பெரியாரின் வாழ்க்கையின் சில சம்பவங்களை சுவைபட விவரித்துள்ள ‘பெரியார் – வாழ்வின் வெளிச்சங்கள்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். பெரியாரின் வாழ்க்கை பற்றிப் பலர் எழுதியதையும் படிக்கத்தான் செய்திருக்கிறேன்.  இருந்தாலும், பெரியாரால் வளர்க்கப்பட்டவரும் அவரது அரசியல் வாரிசுமான ஐயா கி.வீரமணி எழுதியது என்பதால் நிச்சயம் சுவையானதாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படித்தேன்.  மிகவும் சுவையானதாகவே இருந்தது.

பெரியாரின் சிறு வயது முதல் அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை ஆசிரியர் மிகவும் சிறப்பாக, சிறிய அத்தியாயங்களாக விளக்கியுள்ளார்.  அதைச் செய்யும்போதே, அந்தச் சம்பவங்களுடன் அதனுடன் தொடர்புடைய திருக்குறளுடன் சேர்த்துக் கூறியிருப்பது திருக்குறளுக்கும் மரியாதை செய்தது போல் ஆயிற்று.  நாம் ஒழுக்கங்களாகக் கற்பதைப் பெரியவர்கள் வாழ்ந்து காட்டி விடுகிறார்கள்.

கட்டற்றவனாக ஊரைச் சுற்றியது முதல், காவி உடை தரித்து காசியில் சுற்றியது வரை அனைத்தையும் செய்து பார்த்திருக்கிறார் பெரியார்.  படிப்போ தலையிலே ஏறவில்லை என்கிறார்கள்.  ஆனால் அவர் மறைந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும், நாம் அவரைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.  இதுவல்லவோ மேன்மை.

பெரியாரைக் கருமி என்று பலரும் தவறாகப் பேசுவதுண்டு.  அவருடையது கருமித்தனமோ, கஞ்சத்தனமோ அல்ல, சிக்கனம் என்பதை நன்கு விளக்குகிறார் ஆசிரியர்.  அவரது வாரிசான ஆசிரியர் குடியரசு பத்திரிகையின் துவக்க விழாவின்போது எப்படி ‘சிக்கனமாக’ தேநீர் விருந்து அளித்தார் என்பது மிகவும் நகைச்சுவையான நிகழ்ச்சி மட்டுமல்ல, பெரியாரின் சிக்கனம் இவரையும் எப்படிப் பற்றிக் கொண்டது என்பதை விளக்குகிறது.

ஈ-வெ-ராமசாமி - செந்தமிழர் பேரவை

அதேபோல் பெரியார் காங்கிரசில் முழுதும் ஈடுபட்டு, தனது சௌகரியங்களையும், உயர்ரக ஆடைகளையும் துறந்து விட்டு, கதர் விற்ற போது ஒருமுறை ரயிலில் தமிழ்த்தாத்தா உ.வே.சா.வை சந்திக்க அவர் பெரியார் வறுமையில் ஆழ்ந்து விட்டதாக நினைத்து உருகி ஆறுதல் கூற, அங்கு ஒரு தமிழ் வகுப்பே நடக்கிறது.  ஆன்மீகமும் சரி, மார்க்சியமும் சரி, அறிவியலும் சரி, அனைத்துமே நிலையாமை பற்றித்தான் பேசுகின்றன.  “மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும்’ என்கிறது மார்க்சியம்.  எல்லா இடங்களிலும் ‘இன்று உன்னுடையது நாளை யாருடையதோ’ என்று கீதையின் சாரம் என்று தொங்க விட்டிருக்கிறார்களே அதுவும் நிலையாமைதான்.  ஆனால் அந்த நிலையாமையைத் தமிழ் எப்படியெல்லாம் கூறுகிறது என்று உ.வே.சா அவர்கள் கூற, அதைப் பெரியார் வாய்திறவாமல் கேட்பதை பெரியாரே தமது வாழ்க்கைச் சரிதத்தில் எழுதியுள்ளதாகக் கூறுகிறார் ஆசிரியர்.  ஆக, இந்தப் புத்தகம் தமிழுக்கும் புகழ் சேர்க்கிறது.

அதேபோல் வைக்கம் போராட்டம் குறித்தும் சிறப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.  மகாத்மா காந்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதையும் அதைச் செய்யாமல் இருக்கத் தடையும் போட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியானது.  ஆனால் திருவாங்கூர் தலைவர்கள் பெரியாரால்தான் இந்தப் போராட்டத்தை முன்கொண்டு செல்ல முடியும் என்று நினைத்து அவரை அழைத்தது தமிழகத்தின் பெருமை.  அவர் கைதுக்குப் பிறகு நாகம்மையார் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.  தமிழக மக்கள் ஏராளமாக நிதி அளித்துள்ளனர்.  தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் முன் நின்றுள்ளது என்பது பெருமைதானே.

இந்தப் போராட்டத்தின் போது, சத்ருசங்காரம் என்ற யாகத்தை தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.  அதாவது எதிரியை வதம் செய்வது.  அந்த யாகமோ அவரை விட்டுவிட்டு நடத்தியவர்களையே தாக்கி விட்டதாகத் தோன்றுகிறது என்று ஆசிரியர் நகைச்சுவையாகக் கூறுகிறார்.  திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்திவிட, ராணியார் உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்.

பெரியார் அவர்கள் குன்றக்குடி அடிகளார் மீது வைத்த மரியாதை குறித்துப் படித்திருக்கிறேன்.  இந்தப் புத்தகத்தில் தவத்திரு கடலூர் ஞானியார் அடிகளின் காலிலேயே விழுந்து வணங்கினார் என்பது எனக்குச் செய்தி.  அதற்கு அவர் கூறிய விளக்கமும் அவர் தமிழரல்ல என்று கூறித் திரிபவர்களுக்கு ஒரு செய்தி:

”தமிழர்களுக்கும், தமிழர்களில் மிகப்பெரிய அறிஞர்கள், வழிகாட்டியாக வருகிறவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; நம்மவர்களை நாம் உயர்த்திடும் பழக்கத்தினை உயர்த்துவதன் மூலமே நம் இனப் பெருமையை உலகுக்கு உணர்த்திட முடியும்.

ஆன்மீக அரசியல் என்பது ஏமாற்றுவேலை ...
கி.வீரமணி

இவர் காலில் நான் விழுந்ததால், என் மரியாதைக்கு என்ன பெரிய இழப்பு ஏற்பட்டது? அப்படி ஏற்பட்டால், அது என்னை மட்டும் பாதிக்காது – ஏற்பட்ட விளைவோ இனத்திற்கே கிடைத்த பெருமை ஆயிற்றே”.

பெரியார் பெரியார்தான்.

ஐயா நீங்கள் இப்படி எழுதலாமா?

இந்த முழுப் புத்தகத்தையும் படித்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் ஒரு சிறிய நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது.  பெரியாரை முதலில் அவரது பெற்றோர் ஒரு அத்தையிடம் தத்துக் கொடுத்துள்ளனர்.  அங்கு அவர் கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளார்.  அதைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். “கம்மனாட்டி வளர்ப்பது கழுதைக்குட்டிதான்” என்ற பழமொழிக்கு ஒரு உருவாரமாய் இருந்து வந்தார்.  மீண்டும் அடுத்த பக்கத்திலேயே, “அவன் விதவை வளர்த்த பிள்ளையாய், ஊர்சுற்றியாய், “லோலனாய்”த் திரிந்ததால் படிப்பு இல்லை” என்கிறார்.

இப்படிப்பட்ட ஆணாதிக்க, பெண்கள் விரோதக் கருத்துக்கள் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் வாரிசான உங்களிடமிருந்து வரலாமா?  உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியும், வருத்தமும் ஏற்பட்டது.  பெண்கள் விடுதலைக்கு உரத்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.  இந்தப் புத்தகத்திலேயே தாலியை மறுக்க வேண்டும் என்ற செய்தியும் உள்ளது.  பெண்களிடம் துடப்பக் கட்டையைப் பிடுங்கிக் கொண்டு புத்தகத்தைக் கொடுங்கள் என்றவர் பெரியார்.  அப்படிப்பட்ட பெரியாரின் வாழ்க்கையை எழுதும்போது இந்தச் சொற்கள் வரலாமா?  நீங்கள் எழுதும் வேகத்தில் இதை எழுதியிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  அடுத்த பதிப்பு வரும்போது இந்தச் சொற்களை நீங்கள் அகற்றி விட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

ஆசிரியர்: கி.வீரமணி

தி.க இயக்க வெளியீடு

நன்கொடை: ரூ.150/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *