நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு | PFAS | acid | சூழலியல் - https://bookday.in/

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு – எஸ்.விஜயன்

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு
பாலிஃபுளோரோ அல்கைல் சப்ஸடன்ஸ்-பிஃபாஸ்

இந்திய சூழலியல் செயற்பாட்டாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் இன்னும் வராத பிரச்சனையிது. எப்பொழுதுமே நேரடியாக கண்ணுக்குத் தெரியும் பிரச்சனைகளும், உடனடி நெருக்கடி ஏற்படுத்தும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவதுதான் மனித மரபு. நிரந்தர இரசாயன மாசு (Forever Chemicals) என்று அழைக்கப்படும் பாலிஃபுளோரோஅல்கைல் சப்ஸடன்ஸ் (PFAS – Polyfluoroalkyl Substance) இன்று வெகுவேகமாக பரவிவரும் மாசுப்பொருள் ஆகும். இந்தவகை இரசாயனங்கள் உடனடியாக மக்கிப்போகாமல் நீண்டகாலத்துக் நீடித்து இருக்கும் தன்மையுள்ளதால் இவை நிரந்தர இரசாயனம் என்று அழைக்கப்படுகிறது. சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் உலகில் பிஃபாஸ் (PFAS) என்ற சொல் பயன்படுத்தப்படுவதால் நாமும் இச்சொல்லையே பயன்படுத்துவோம். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெளுப்பிகள் (Surfactants), உயவுப் பொருட்கள்(Lubricants), பல்வேறு பாலிமர்கள் போன்றவற்றில் உள்ள மூலக்கூறின் அங்கம் ஆகும். இவை நிலத்தடி நீரில் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பிஃபாஸ் நமது உடலுக்குள் வந்தால் பல்வேறு நோய்களை ஏற்படும். பிஃபாஸ் மாசானது பிபிடியில் (PPT – Parts per Trillion) அளவு கோலில் அளக்கப்படுகிறது. 1 பிபிடி என்பது ஒன்றில் 0.000000000001 பங்கு ஆகும். பிஃபாஸ் வகையினத்தைச் சேர்ந்த இரசாயனங்கள், அன்றாட வாழ்வில் பிஃபாஸ் மாசு பரவுவதற்கான மூலாதாரங்கள், பிஃபாஸ் நச்சுத்தன்மையால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், உடல் நலம் கெடாமல் இருக்க ஒவ்வொரு வகை பிஃபாஸ் நச்சுத்தன்மையின் உச்சபட்ச அளவு, பிஃபாஸ் நச்சுபரவலுக்கெதிரான சர்வதேச முன்னெடுப்புகள், குடிநீரில் பிஃபாஸை சுத்திகரிக்கும் முறைகள், இந்தியாவில் நடைபெற்ற பிஃபாஸ் சர்வே, சூழலியல் செயல்பாட்டாளர்கள் இந்த விஷயத்தில் செய்யவேண்டியது ஆகியவற்றை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பிஃபாஸ் இரசாயனங்கள்

பிஃபாஸ் இரசாயனங்கள் கரிம இரசாயனங்கள் ஆகும். பிரபல தமிழ் வார்த்தையில் கூறினால் ஆர்கானிக் இரசாயனங்கள். பிஃபாஸ் பட்டியலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் இருக்கின்றன. இவற்றில் 150 இரசாயனங்களை மட்டுமே அடையாளம் காணும் சோதனை முறைகள் உள்ளன. மிக அதிகமாக மாசு ஏற்படுத்துபவை என்று ஒன்பது இரசாயனங்களைக் கூறலாம்

  • பெர்ஃபுளோரோபியூட்டேனிக் அமிலம் (perfluorobutanoic acid – PFBA)
  • பெர்ஃபுளோரோடிகோனிக் அமிலம் (perfluorodecanoic acid – PFDA)
  • பெர்ஃபுளோரோஹெக்சேனிக் அமிலம் (perfluorohexanoic acid – PFHxA)
  • பெர்ஃபுளோரோஆக்டானிக் அமிலம் (perfluorooctanoic acid – PFOA)
  • பெர்ஃபுளோரோநானேனிக் அமிலம் (perfluorononanoic acid – PFNA)
  • பெர்ஃபுளோரோபியூட்டேன்சல்ஃபோனிக் அமிலம் (perfluorobutanesulfonic acid – PFBS)
  • பெர்ஃபுளோரோஆக்டேன்சல்ஃபோனிக் அமிலம் (perfluorooctanesulfonic acid – PFOS)
  • பெர்ஃபுளோரோஹெக்சேன்சல்ஃபோனிக் அமிலம் (perfluorohexanesulfonic acid – PFHxS)
  • ஹெக்ஸாஃபுளோரோபுரொப்பைலின் ஆக்ஸைட்-டைமர் அமிலம் (hexafluoropropylene oxide-dimer acid – HFPO-DA or GenX)
அன்றாட வாழ்வில் பிஃபாஸ் நச்சு பரவுவதற்கான மூலாதாரங்கள்
  • நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் பிஃபாஸ் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது.
  • குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் உள்ள மண், தண்ணீர்
  • தீயணைப்பானிலிருந்து வெளியேறும் நுரை. குறிப்பாக திரவ எரிபொருட்கள் மூலம் ஏற்படும் தீயை அணைப்பதற்கு பயன்படுத்தப்படும் தீயணைப்பான்கள். திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடைபெறும் தீயணைப்பு பயிற்சிகளில் இவை வெளியேறுகிறது.
  • சிலவகை பண்டங்களின் உற்பத்தி நிகழ்முறை – உதாரணத்திற்கு குரோமிய முலாம் பூசுதல், எலக்ட்ரானிக் பொருட்கள், சிலவகை ஜவுளி ஆலைகள், காகித உற்பத்தி,
  • சிலவகை உணவுகள்- பிஃபாஸ் மாசு சூழலில் வளர்ந்த மீன்கள், கால்நடைகளின் இரைச்சிகள்
  • தண்ணீர் புகா வழுவழுப்பான தாள்களில் கட்டப்படும் உணவுப் பொட்டலங்கள். உதாரணமாக பிட்சா பெட்டிகள், பாப்கான் பெட்டிகள், டீ கப்கள், சாக்லேட்/மிட்டாய்களை சுற்றப்பயன்படும் தண்ணீர் புகா தாள்கள்.
  • வீட்டு உபயோகப் பொருட்கள் – உணவு ஒட்டா பாத்திரங்கள் (Non-Stick Cookware), பெயிண்ட், வார்னீஷ்கள், வழுவழப்பான தரைவிரிப்பான்கள், தண்ணீர் ஒட்டா துணிவகைகள், தண்ணீர் ஒழுக்கு அடைக்கும் களிம்புகள.
  • ஷாம்பு, சில அழகுசாதனப் பொருட்கள், சிலவகை பற்குத்திகள், சில வாசனை திரவியங்கள்
  • கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் கிடைக்கும் கம்போஸ்ட் உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள்

இந்த மூலாதாரங்கள் மூலம் பிஃபாஸ் நச்சு மனித உடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள்

  • பிஃபாஸ் இரசாயனங்களைக் கொண்ட பிற உற்பத்தி ஆலைகளில் பணியாற்றுவது
  • பிஃபாஸ் மாசு கலந்த தண்ணீரைக் குடிப்பது.
  • பிஃபாஸ் மாசு கலந்த உணவை உண்பது
  • பிஃபாஸ் மாசு மண்/தூசிகள் வாய் மூலமாக உடலுக்குள் செல்வது
  • பிஃபாஸ் மாசு மண்/தூசிகள் சுவாசம் மூலமாக உடலுக்குள் செல்வது
  • பிஃபாஸ் இரசாயனங்களைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் மூலமாக தருவிக்கப்படும் உணவை உண்பது
பிஃபாஸ் நச்சுத்தன்மையால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்

பிஃபாஸ் நச்சுத்தன்மையால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் சம்பந்தமாக அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அறிவியல் முடிவுகளை நாம் பீதியை கிளப்புவதற்கு பயன்படுத்தக் கூடாது மாறாக எச்சரிக்கையுடன் இருப்பதற்கு பயன்படுத்த வேண்டும். அத்துடன் மனித உடல் என்பது ஒரு சிக்கலான உயிரியல் இயந்திரம் ஆகும். எனவே என்னென்ன வகை கோளாறு கண்டிப்பாக எல்லாருக்கும் ஏற்படும் என்று அடித்துக் கூறமுடியாது. ஆனால் ஆய்வுகளில் கோளாறு ஏற்படுத்துவதற்கான நிகழ்தகவு குறிப்பிட்ட சதவீதத்தை எட்டினால் எச்சரிப்பதற்காக பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என்பது நிகழ்தகவின் அடிப்படையில் கூறுவது. 100 வயதுள்ள முதியவர் ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டே நான் 85 வருடங்களாக புகைப்பிடிக்கிறேன், எனக்கு புற்றுநோய் ஏற்படவில்லை என்ற வாட்ஸ்சப் வீடியோக்களில் ஓரளவு உண்மை இருந்தாலும், புகைப்பிடித்தால் புற்றுநோய் கண்டிப்பாக வராது என்று கூறமுடியாது. இந்தப் புரிதலில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் பட்டியல்

  • இனப்பெருக்க கோளாறு – குறிப்பாக கருவுறும் வாய்ப்பு குறைதல் அல்லது கருவுற்ற பெண்களுக்கு அதிகரிக்கும் இரத்த அழுத்தம்.
  • குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு – வளர்ச்சியில் ஏற்படும் காலதாமதம், பிறப்பு எடை குறைபாடு, குறைந்த வயதில் பூப்பெய்துவது, உறுதியற்ற எலும்புகள், நடத்தை மாறுபாடுகள் 
  • புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் – குறிப்பாக ஆண்மைசுரப்பி (prostate), சிறுநீரகம், விதைப்பை (Testicles) புற்றுநோய்கள்
  • நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு
  • ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டுக் கோளாறு
  • இரத்தத்தில் அதிகரிக்கும் கொழுப்பு மற்றும் உடல்பருமானதல்

எனினும் இந்தவகை பிஃபாஸ் மாசு இந்த நோய்க்கு காரணம் என்று குறிப்பாக ஆய்ந்தறிந்து கூறுவதில் உள்ள சிக்கல்கள்.

  • நூற்றுக்கணக்கான பிஃபாஸ்,இரசாயனங்கள் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட உடல்நலக்கோளாறுக்கு குறிப்பிட்ட பிஃபாஸ்தான் காரணம் என்று அடையாளம் காண்பதில் அந்த குறிப்பிட்ட பிஃபாஸ் நச்சுத்தன்மை எவ்வளவு, பாதிக்கப்பட்டவர் உடலுக்குள் என்ன அளவு பிஃபாஸ் சென்றுள்ளது என்பதை அறிவது கடினம்.
  • பிஃபாஸ் நச்சுத்தன்மைக்கு இரையானவர் எந்த வேகத்தில் உட்சென்றது, என்ன வயதில் உட்சென்றது, எத்தனைகாலத்துக்கு இது சென்றது என்ற கேள்விக்கான விடையைச் சார்ந்தது.
  • பிஃபாஸ் வகையினங்களும் அவற்றின் பயன்பாடுகளும் காலப்போக்கில் மாறிவருவதால் ஒருவருக்கு எந்தளவு குறிப்பிட்ட வகை பிஃபாஸ் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார் என்பதும் அது எந்தவகை உடற்கோளாரை ஏற்படுத்தியது என்பதையும் கண்டுபிடிப்பது சிரமம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் என்ற இணையதளத்தில் இது சம்பந்தமாக பல்வேறு ஆய்வறிக்கைகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றின் இணைப்புகள் கட்டுரையின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஃபாஸ் நச்சுத்தன்மையின் உச்சபட்ச அளவு

பிஃபாஸ் இரசாயனங்கள் அதிகபட்சமாக எந்தளவு கலந்திருந்தால் உடல்நலம் கெடுவதை தடுக்க முடியும் என்பது இதுவரை இறுதியாகவில்லை, தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இதற்கான கட்டுப்பாடுகள் வரத் துவங்கியுள்ளன. இக்கட்டுப்பாடுகளும் ஆண்டுக்காண்டு இறுகப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பானது இதற்கான விதிமுறைகளை விதித்து வந்துள்ளது. 2014லிருந்து செய்யப்பட்ட திருத்தங்களில் சமீபத்திய திருத்தம் நிர்ணயித்த உச்சபட்ட அளவு

பெர்ஃபுளோரோஆக்டானிக் அமிலம் (PFOA) – 4 பிபிடி
பெர்ஃபுளோரோநானேனிக் அமிலம் (PFNA) – 10 பிபிடி
பெர்ஃபுளோரோஆக்டேன்சல்ஃபோனிக் அமிலம் (PFOS) – 4 பிபிடி
பெர்ஃபுளோரோஹெக்சேன்சல்ஃபோனிக் அமிலம் (PFHxS) – 10 பிபிடி
ஹெக்ஸாஃபுளோரோபுரொப்பைலின் ஆக்ஸைட்-டைமர் அமிலம் (GenX) – 10 பிபிடி

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு | PFAS | acid | சூழலியல் - https://bookday.in/
பிஃபாஸ் நச்சுபரவலுக்கெதிரான சர்வதேச முன்னெடுப்புகள்

பெருகிவரும் அபாய இரசாயனங்களின் பயன்பாட்டை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுஎன்இபி (ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திடடம் UNEP) முன்முயற்சியால் ஐசிசிஎம் என்றழைக்கப்படும் இன்டர்நேனஷல் கான்ஃபரன்ஸ் ஆன் கெமிக்கல் மேனேஜ்மென்ட் என்ற தொடர் மாநாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 2006ம் ஆண்டு முதல் நடைபெறத் துவங்கியது. இதில் 150 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் இரண்டாவது மாநாடு 11-15 மே, 2009ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிஃபாஸ் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. இதுசம்பந்தமான தீர்மானம் எண் II/5 நிறைவேற்றப்பட்டது. பிஃபாஸ் இரசாயனங்கள் ஏற்படுத்தும் உடல்நலக் கோளாரை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதென்றும், காலப்போக்கில் இவ்வகை இரசாயனங்களின் பயன்பாட்டை முற்றிலும் நீக்குவது என்றும் தீர்மானித்தது. இதற்கான பணிகளை ஓசிஇடி (OCED) கூட்டமைப்பு முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஓசிஇடி-யுஎன்இபி உலக பிஃஎப்சி குழு 2012ல் (OECD/UNEP Global PFC Group) உருவாக்கப்பட்டது. இக்குழுவானது பிஃபாஸ் இரசாயன உற்பத்தியை ஒழுங்குபடுத்த தேவையான சட்டவிதிமுறைகளை தேசிய சர்வதேச நாடுகள் வகுப்பதை ஊக்குவிப்பதும், உதவுவதும் இலட்சியமாகக் கொண்டது. இது சம்பந்தமான சர்வதேச நாடுகளுக்கிடையிலான தகவல் பரிவர்த்தனைகளையும், இந்தவகை இரசாயனப் பயன்பாடுகளிலிருந்து மாற்று இரசாயனங்களுக்கு மாறிச் செல்வதையும் இக்குழு ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற பிஃபாஸ் சர்வே

பிஃபாஸ் நச்சுத்தன்மை பற்றிய ஆய்வுகளும் தகவல்களும் இந்தியாவில் குறைவு. எனினும் இது தற்போது சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு களஆய்வுகள் நடைபெற்றுள்ளன. அவை குறுகிய எல்லைக்குள் நடைபெற்றன என்றாலும் இந்த ஆபத்திலிருந்து இந்தியாவும் விலகியிருக்கவில்லை என்பது தெரிகிறது.

  • 2016ம் ஆண்டு கங்கையில் நடைபெற்ற ஆய்வில் 15 வகை பிஃபாஸ்வகை இரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 1.3பிபிடியிலிருந்து 15.9பிபிடிவரை இருப்பதாக அறியப்பட்டுள்ளது,
  • பதினான்கு நகரங்களில் வாழும் மனிதர்களிடம் நடைபெற்ற ஆய்வில் மனிதர்களின் முடியில் 0.02 – 3.78 நானோகிராம்/கிராம் பிஃபாஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
  • உலகளாவிய அளவில் இயங்கிவரும் IPEN-Toixc Free Future என்ற அமைப்பு இந்தியாவில் பிஃபாஸ் பற்றிய ஆய்வை2019ல் நடத்தியுள்ளது. இந்த ஆய்வை இதன் ஐரோப்பிய உறுப்பினர் குழு செய்துள்ளது. இந்த ஆய்வில் அதிர்ச்சிதரும் தகவல்கள் பல உள்ளன. இருவிஷயத்தை மட்டும் குறிப்பிடலாம், மற்றவைகளை பின்னால் கொடுக்கப்பட்ட இணைப்பைச் சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்,

      இந்தியத்தாய்மார்களின் தாய்ப்பாலில் 46பிபிடி PFOS என்ற பிஃபாஸ் உள்ளது

     சென்னை, சிதம்பரம், கொல்கத்தா ஆகிய நகரங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு பிஃபாஸ் இரசாயனங்களும் அவற்றின் கூட்டுப்பொருட்களும்  பரவியிருக்கிறது.

  • 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட Impact of COVID-19 on Emerging Contaminants என்ற நூலில் இந்தியாவில் பிஃபாஸ் பற்றிய ஆய்வுக்கட்டுரை உள்ளது. ஆறு ஆய்வாளர்கள் சேர்ந்து எழுதிய கட்டுரை இது. இக்கட்டுரையானது மேற்குநோக்கிப் பாயும் தென்னிந்திய ஆறுகளில் குறிப்பிடத்தகுந்தளவு பிஃபாஸ் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • Environmental Science Europe என்ற சஞ்சிகையில் மார்ச் 24ம் தேதி ஒரு ஆய்வுக்கட்டுரை வந்துள்ளது. இக்கட்டுரையானது சென்னைநகரில் உள்ள நிர்வளத்தில் கலந்துள்ள பிஃபாஸ் இரசாயனங்களை குறிப்பிடுகிறது. இரண்டு ஆய்வாளர்களின் கட்டுரை இது. ஆய்வாளர்கள் அடையாறு ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய், செம்பரப்பாக்கம் ஏரி அதையொட்டிய சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் நிலத்தடி நீர் மற்றும் மேல்மட்ட நீர் ஆகியவற்றை சாம்பிள் எடுத்து ஆய்வு செய்தனர். இவற்றில் பிஃபாஸ் இரசாயனங்கள் 0.10 நானோகிராம்/லிட்டர் என்ற அளவிலிருந்து 136.27 நானோகிராம்/லிட்டர் என்ற அளவுவரை இருக்கிறது. குறிப்பாக நிலத்தடி நீரில் மிக அதிகமாக இருக்கிறது, (L-PFBS 136.27 ng/L வரையும் PFOA 77.61 ng/L வரையும் உள்ளது)
பிஃபாஸ் சுத்திகரிப்பு முறைகள்

பிஃபாஸ் சுத்திகரிப்பு என்பது இருகட்டத்தில் நடைபெறக் கூடியது. முதல் கட்டத்தில் உள்ளீட்டு நிரில் மிகப் பெரும் பகுதி பிஃபாஸ் அல்லாத நீராகவும் சிறுபகுதி பிஃபாஸ் அடர்த்தியான நீராகவும் பிரிக்கப்படுகிறது/ பிஃபாஸ் அல்லாத நீர் பயன்பாட்டுக்கு சென்றுவிடுகிறது. முதல் கட்ட சுத்திகரிப்பு எளிதான விஷயம்தான். அது செரிவூட்டப்பட்ட கார்பன் அல்லது சில ரெசின்கள் மூலமாக வடிகட்டினால் போய்விடும். பிறகு அந்த ஊடகங்களை சுத்திகரிக்கும் போது பிஃபாஸ் அடர்த்தியான நீர் கிடைக்கும். இந்நீரை மீண்டும் வெவ்வேறு வழிகளில் அந்த இரசாயனத்தை உடைத்து வேறுபொருட்களாக மாற்றி கழிவாக்க வேண்டும். இதுவரை கையாளப்படும் சில வழிமுறைகள்,

  • அயனி பரிமாற்ற செயல்முறை (Ion Exchange Process)
  • படிமானயூக்க செயல்முறை (Coagulant aids Process)
  • முன்னேறிய ஆக்ஸிடைசேசன் செயல்முறை (Advanced oxidation processes)
  • மின்வேதி ஆக்ஸிடைசேசன் செயல்முறை (Electrochemical oxidation processes)
  • உயிரிவினை செயல்முறை (Biological treatment Process)
  • வெப்ப பகுப்பு செயல்முறை (Pyrolysis Process)
  • ஒலிவேதியல் செயல்முறை (Sonochemica Process)

இப்படி பல்வேறு செயல்முறைகள் இருந்தாலும், ஒவ்வொரு நீரில் கலந்துள்ள பிஃபாஸ் இராசயனங்களின் அளவு மற்றும் சேர்மானத்தின் அடிப்படையில் கணக்கீட்டு முறையில் சுத்திகரிப்பு செயல்முறை வடிவமைக்கப்பட வேண்டும். அதிக தேர்ச்சித்திறன் பெற்ற வேதிப் பொறியாளர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணி இது.

சூழலியல் செயல்பாட்டாளர்கள் கடமை

இந்தியாவில் சூழலியல் செயல்பாட்டாளர்கள் வளர்ச்சியடைந்த நாடுகள் போன்று வலுவாக இல்லை. இந்திய சூழலியல் செயல்பாட்டாளர்களில் இடதுசாரிகளும், தூய்மைசூழலியல் பேசுபவர்களும் அதிகம் பழங்காலத்துக்குச் செல்லவேண்டும் என்பது வலதுசாரி சூழலியல்வாதிகளின் நிலைப்பாடாகும். அத்துடன் அறிவியல் அடிப்படையிலும், சமூக விஞ்ஞான, அரசியல், பொருளாதார அடிப்படையிலும், ஆய்வுசெய்து மாற்றை முன்னெடுப்பதற்கான போதாமை என்பது எல்லாச் சூழலியல் வாதிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகும். எனவே இந்திய சூழலியல் செயல்பாட்டில் கணிசமான வெற்றிடம் நிலவுகிறது. இதுவரை அடையப்பெற்ற வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்துக் கொள்வது, மேலும் முன்னேறிச் செல்வது, அதே நேரத்தில் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருப்பது என்ற நிலைப்பாடானது அரசியல் சார்ந்த சூழலியல்வாதிகளுக்கு சரிப்பட்டுவராது.

அடுத்தது சூழல் சீர்கேட்டுக்கு காரணமான மூலாதாரத்தை நீக்குவதில் செலுத்தும் கவனம் சீர்கெட்ட சூழலை சரிசெய்வதில் கிடையாது, உதாரணத்திற்கு ஸ்ட்டெரிலைட் ஆலையானது தனது கழிவை மாவட்டம் முழுவதும் கொட்டி நிலத்தடி நீரை ஆர்சனிக் மாசு படர்ந்ததாகிவிட்டது. ஆலையை மூடவேண்டும் என்ற இயக்கம் நடைபெற்று உயிரிழப்புடன் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால் நிலத்தடி நீரை மீட்டெடுப்பது என்ற கோரிக்கை இதுவரை எழவில்லை. பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்து செய்யப்பட்ட ஆய்வில் தூத்துக்குடி வட்டாரத்தில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்த மீட்டெடுப்பு களம் (Remediation Site) உருவாகவில்லை, அதே நேரத்தில் கொடைக்கானலில் நிலத்தடி நீரின் பாதரச மாசு மீட்டெடுப்பதற்கு, மீட்டெடுப்பு களங்கள் அமைக்கப்பட்டு  கிட்டத்தட்ட அங்கே பாதரசம் சுத்தப்படுத்தப்பட்டுவிட்டது. இவ்விஷயத்திலும் பிஃபாஸ் சம்பந்தமாக நமது சூழலியல் செயல்பாட்டாளர்கள் அக்கரை செலுத்த வேண்டும்,

உலகிலேய மிகவும் அற்புதமான சட்டங்கள் உள்ள நாடு இந்தியா ஆகும். எனினும் எந்த சட்டங்கயும் முறையாக அமல்படுத்தாத நாட்டில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். குறிப்பாக சுற்றுச்சூழல் சட்டங்கள் விஷயத்தில் பேரழிவு ஏற்பட்ட பின்புதான் உடனடியாக இந்த சட்டவிதிமுறை மீறப்பட்டது என்று வழக்கு தொடரப்படும். எனவே எல்லா சட்டங்களிலும் அமலாக்க அறிக்கை (Compliance Report) குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொறுப்பானவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வறிக்கைகளில் உள்ளூர் மக்கள், நிரூபணமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உயர் கல்விநிலையங்களில் பணியாற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கிய கமிட்டி உறுப்பினர்கள் கையொப்பமிட்டால்தான் செல்லுபடியாகும் என்று எல்லா சுற்றுச்குழல் சட்டங்களையும் மாற்ற வேண்டும். இதையும் நமது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்த வேண்டும்.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அநேகப் பொருட்களில் பிஃபாஸ் இருக்கிறது. உடனடியாக இவற்றை நாம் கைகழுவமுடியாது. ஓசோன் படலத்தை அரித்த சிஎஃசி இரசாயனங்களுக்கு மாற்று கண்டுபிடித்து அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டது போல் இதற்கும் மாற்று இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதுவரை பிஃபாஸ் மூலாதார உற்பத்தி நிறுவனங்களை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இதுதான் நமது சூழலியல் செயற்பாட்டாளர்களின் முதல்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். The Water (Prevention and Control of Pollution) Act, 1974 உடனடியாக திருத்தப்பட வேண்டும். அதில் பிஃபாஸ் கட்டுப்படுத்துவதை சேர்க்கக் கோர வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பிஃபாஸ் நீக்கும் செயல்பாட்டு கூடுதல் சுத்திகரிப்பு அலகு சேர்க்கவேண்டும் என்று கோர வேண்டும். சென்னைக் குடிநீரில் பட்டவர்த்தனமாக பிஃபாஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனடியாக நகரின் ஆறு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும், இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநிரை ஆய்வு செய்து உரிய பிஃபாஸ் நீக்கும் செயல்பாட்டு அலகு நிர்மாணிக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் விநியோகிக்கப்படும் குடிநீரை பரிசோதித்து தேவைப்பட்டால் பிஃபாஸ் நீக்கும் செயல்பாட்டு அலகை அந்தந்த சுத்திகரிப்பு நிலையங்களில் நிர்மாணிக்க வேண்டும். இவையும் நமது சூழலியல் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டும்

References

https://www.epa.gov/pfas/our-current-understanding-human-health-and-environmental-risks-pfas
https://www.niehs.nih.gov/health/topics/agents/pfc#:~:text=Per%2D%20and%20polyfluoroalkyl%20substances%20(PFAS,ingredients%20in%20various%20everyday%20products.
https://www.federalregister.gov/documents/2024/02/08/2024-02324/listing-of-specific-pfas-as-hazardous-constituents#:~:text=These%20nine%20PFAS%20are%20perfluorooctanoic,perfluorohexanoic%20acid%20(PFHxA)%2C%20and
https://ipen.org/sites/default/files/documents/india_pfas_country_situation_report_mar_2019.pdf
https://www.epa.gov/sites/default/files/2016-05/documents/pfos_hesd_final_508.pdf
https://www.epa.gov/sites/default/files/2016-05/documents/pfoa_hesd_final-plain.pdf
https://pubmed.ncbi.nlm.nih.gov/37884429/
https://pubmed.ncbi.nlm.nih.gov/35475652/
https://pubmed.ncbi.nlm.nih.gov/29498927/
https://pubmed.ncbi.nlm.nih.gov/38061983/
https://pubmed.ncbi.nlm.nih.gov/38061983/
https://www.rqmplus.com/hubfs/White%20Paper%20PFAS/RQM%2B%20White%20Paper%20Are%20We%20Equipped%20to%20Handle%20a%20PFAS-Free%20Future.pdf
https://s3.us-west-2.amazonaws.com/enb.iisd.org/archive/download/pdf/enb15175e.pdf?X-Amz-Content-Sha256=UNSIGNED-PAYLOAD&X-Amz-Algorithm=AWS4-HMAC-SHA256&X-Amz-Credential=AKIA6QW3YWTJ6YORWEEL%2F20240701%2Fus-west-2%2Fs3%2Faws4_request&X-Amz-Date=20240701T041814Z&X-Amz-SignedHeaders=host&X-Amz-Expires=60&X-Amz-Signature=90ab70cd0a4d9d3e416a8674bbce988ae8b954c8d38d9ad9e141e296dafb5602
https://enveurope.springeropen.com/articles/10.1186/s12302-024-00881-1#:~:text=India%20is%20a%20fast%2Ddeveloping,Indian%20state%20of%20Tamil%20Nadu.
https://link.springer.com/chapter/10.1007/978-981-19-1847-6_1#:~:text=In%20the%20Indian%20scenario%2C%20none,had%20been%20exposed%20to%20PFAS.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *