பூக்குழி (Pookuzhi Novel) நாவல் – இக்கதையில் புதிதாக எதுவொன்றும் இருந்துவிடவில்லை. பல காலமாக தொடர்ந்துக்கொண்டிருக்கும், பல கதைகளிலும் படைப்புகளிலும் வெளிவந்த அதே கதை தான். ஒவ்வொரு கதையும் அதே அளவு கனத்தை சுமக்கிறது. எதிர்ப்பார்த்த முடிவுதான் என்றாலும் நெஞ்சில் பெரும் பாரத்தை கடத்துகிறது. அதைத்தவிர வேறு முடிவு நடந்திருந்தாலும் அது அதிசயமாகவும் நம்பமுடியாத்தாகவுமே இருந்திருக்கும்.
எத்தனை சரோஜாக்களையும், குமரேசன்களையும் இனவெறி காவுக்கொண்டிருக்கும்? இனவெறியில் ஊறிப்போன ஒரு கிராமத்தில் பிறந்தாலும் அப்பாவியாகவே இருக்கும் குமரேசனை என்னவென்று சொல்வது? இவ்வளவு காலம் அதே ஊரில் இருந்தாலும், வேறு இனத்தில் பிறந்த சரோஜாவுடன் வாழ விட்டுவிடுவார்கள் என்று நினைத்த அவனது அறியாமையை என்னவென்று சொல்வது? நகரத்தில் சோடாக்கடையில் வேலைக்குச் சென்ற அவனுக்கு, அங்கேயே வளர்ந்த சரோஜாவைப் பிடித்துப்போக, கலியாணம் செய்து அவன் ஊருக்குக் கூட்டிச் செல்கிறான்.
ஊரில் நுழையும்போதே அந்த இடம் அவளுக்கு அந்நியமாக தோன்றுகிறது. ஆசையோடு வளர்த்தப் பெண்ணானாலும் அவளைத் தேடி போகும் ஆவல் அவளின் அப்பாவிற்கும் அண்ணனிற்கும் இருக்கவில்லை. நகரத்தில் வளர்ந்த சரோஜாவிற்கு வீட்டு வேலைகள் எல்லாமே தெரிந்தாலும், கிராம வாழ்வியலும், அவர்களது பேச்சும் புரியாமலே இருந்தது. அவள் வாழ்ந்த சூழல் இது இல்லை. அவள் தின்ற சோறு இங்கு இல்லை. அதை ஏற்றுக்கொள்வதே அவளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தது. அதற்குப் பழகிக்கொள்ளவும் சரோஜா தயாராகவே இருந்தாள்.
சிறிது ஏச்சுப்பேச்சுகளுக்குப் பின் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றே குமரேசன் பெரிதும் நம்பினான். ஆனால் அவனின் சொந்தங்களின் உண்மை முகங்கள் அவன் நினைத்தது போல அவ்வளவு இனிமையாக இருந்துவிடவில்லை. அவர்கள் நினைத்தது போல் இருக்கும் வரைக்கும் மட்டுமே அவர்களின் அன்பு பாசம் எல்லாம். அதை மீறினால் அடுத்த கணமே வெட்டிப்போடவும் தயாரவே இருந்தனர். அவமானமும், அடி உதையுமே குமரேசனின் நம்பிக்கைக்குப் பரிசாக கிடைத்தது. சோடாக்கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று அவன் அலைய, தனியே விடப்படும் சரோஜாவை அங்கிருப்பவர்களின் சொற்களே சிறிது சிறிதாய் வதைத்தன.
அவளை உயிருடன் விடமாட்டார்கள் என்று காய்க்காரக் கிழவி எச்சரித்தது பயம் தருவதாகவே இருந்தாலும் அத்தனைக் கொடியவர்களாக அவ்வூர்க்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்றே அசட்டையாக இருந்துவிட்டாள். பல கொடுஞ்சொற்கள் கூறி அவளை துன்பப்படுத்தினாள் குமரேசனின் அம்மா. குமரேசனின் அன்பு ஒன்றே அவளுக்கு ஆறுதல். ஊரிலிருந்து ஒதுக்கி வைத்தாலும், எப்படியேனும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தனர் சரோஜாவும் குமரேசனும். குமரேசனை கலியாணம் செய்துக்கொண்டது தவறோ என்ற எண்ணத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.
இதற்கிடையில் கரு ஒன்று அவளின் வயிற்றில் உதிக்க, வெளியே சொல்லி மகிழ்வை வெளிப்படுத்த முடியாத நிலை. குமரேசன் இல்லாத ஒரு முன்னிறவு பொழுதில் அவளை கொல்லவும் துணிகின்றனர் – காரணம்? அவள் ஊரிலிருப்பது சாமிக்குத் தீட்டு. அவளை வெளியேற்றினால்தான் நோம்பிக்கு பூஜை செய்ய முடியும் என்று அவர்கள் நம்பினர். அவள் யார்? என்ன இனம்? என்று சகலமும் விசாரித்து எடுத்த முடிவு தான் அவளைக் கொல்வது. சிக்கல் இல்லை என்று தெரிந்து எடுத்த முடிவு தான்.
சிக்கல் வந்தாலும் ஊரே சேர்ந்து அப்படி ஒருத்தி இங்கு வரவே இல்லை என்று கூறினால் யாரால் என்ன செய்ய முடியும்? சரோஜா மேல் குமரேசன் ஆசைப்பட்டது அவர்களுக்கு தவறில்லை, அவளை கலியாணம் செய்து மனைவி என்று அங்கீகரிப்பாதே அவர்களுக்கு உறுத்தியது. எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் கடவுள் அவ்வூரில் சரோஜா இருப்பதை மட்டும் தீட்டாக பார்ப்பது அதிசயம் தான்.
நூலின் விவரம்:
நூல்: பூக்குழி (Pookuzhi Novel) நாவல்
ஆசிரியர்: பெருமாள் முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு (Kalachuvadu Publications)
விலை: ₹.200.00
நூல் அறிமுகம் எழுதியவர்:
பிரீத்தி ஜெயக்குமார்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.