இரா.தெ.முத்து எழுதிய (R.T.Muthu) பேசா பொருளை பேசிய பாரதி (Pesa Porulai Pesiya Bharathi) - நூல் அறிமுகம்- பாரதி புத்தகாலயம் - https://bookday.in/

பேசா பொருளை பேசிய பாரதி (Pesa Porulai Pesiya Bharathi) – நூல் அறிமுகம்

பேசா பொருளை பேசிய பாரதி (Pesa Porulai Pesiya Bharathi) – நூல் அறிமுகம்

பாரதி காலங்கள் தாண்டி என்றைக்கும் நம்மை ஆகர்ஷிக்கும் சக்தியாக நிற்கிறான் என்பதன் அடையாளமே இக்கட்டுரைகள். பாரதியின் படைப்புகள் குறித்து அவ்வப்போது சில புரியாமல் எழுதப்படும் கட்டுரைகளும் வந்து விடுகின்றன. அவற்றிற்கெல்லாம் எதிர்வினையாகவும் தன் வாசிப்பில் பாரதி இன்று என்னவாக தனக்கு அர்த்தம் ஆகிறான் என்பதைச் சொல்லும் விதமாகவும் இக்கட்டுரைகள் அமைகின்றன. பாரதியின் படைப்புகளை அவன் இயங்கிய காலத்தில் வைத்து பார்க்கும் பார்வையை மைய அட்சாக கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது
(இப்புத்தக முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள்)

தோராயமாக. 150 க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஏராளமான தலைப்புகளில் 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பாரதி நூல்கள் குறித்த ஆய்வு செய்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

இன்னமும் பாரதி போற்றப்படுகின்றார். ஆனாலும் கூட பாரதியின் கவிதை வரிகளிலும் சில கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்ட சில சொல்லாடல் சொற்களையும் குறித்து சில கட்டுரைகள் வெளிவந்து விடுகின்றன. அவை ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும் அது சரியான ஆய்வாக இல்லை என்று மறுத்து வலியுறுத்தி சுமார் 17 கட்டுரைகளை எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.

“தன்னைக் கட்டுதல்” என்கிற முதல் கட்டுரையில் பாரதியின் கடவுள் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்புகிறார்.

கடவுள் குறித்து பாடினாலும் அதன் உட்பொருள் மக்கள் தேவை சார்ந்தே அமைந்ததுள்ளது எனவும்

“கடமை ஆவண தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்.”

பாரதியின் இந்த தன் கட்டு என்ற சொற்பிரயோகம் மத அடையாளத்தையும் ஜாதி அடையாளத்தையும் விலக்கி பொது நலனுக்காய் ஒரு படைப்பாளி ஒரு சமூக ஊழியராக” தன்னை கட்டுதல்” அவசியம் எனவும் கூறுகிறார்.

இரண்டாம் கட்டுரையில் ஒரு படைப்பு எதை நோக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் எந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் பார்க்காமல் மரபு வாசிப்பு என்றும் நவீன வாசிப்பு என்றும் பின்னப்படுத்தக் கூடாது என்றும் அதற்காக அந்தப் படைப்பை காலத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார். பாரதி தன் “கருத்தைச் சொல்ல உதவிய ஓர் ஊடகம் தான் கடவுள்” என சில சான்றுகளை முன் வைத்து கட்டுரையாக்கியிருக்கிறார்.

அடுத்த கட்டுரையில் பாரதி இந்து கடவுள்களை மட்டுமா பாடியிருக்கிறார். அல்லா இயேசு பற்றியும் பாடியிருக்கிறார் என வினாவெழுப்பி மனித சமூகத்தில் ஆதாரமான ஐந்து பிரிவினரும் ஒரே நிலம் சார்ந்த மக்கள் திரள் என பாரதி கருதியதால் தான் இவர்களை இந்துக்கள் என்று சொன்னாரே தவிர சிலர் சொல்வது போல் இந்து தேசியத்தை மொழிந்தவர் அல்ல என்று நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

காணி நிலம் வேண்டும் பாட்டில் “பாட்டு கலந்திடவே அங்கு ஒரு பத்தினி பெண் வேண்டும்” என்பது பாரதி மோனைக்காக கையாண்ட சொற்கள் எனவும் “அடுத்த வரியில் எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும்” என்பது கருத்தொரு மித்த ஆண் பெண் உறவை காட்டும் அற்புத சொல்லாகும் என்று வலியுறுத்துகிறார்.

எட்டயபுர சமஸ்தான அதிபரோடு கிடைத்த நட்பை சரச, சிலேடை கவிதைகள் பாடி மகிழ்வித்து சுகவாழ்வு வாழும் சூழலுக்காக பயன்படுத்தாமல், விட்டொழித்து, தன் நலன் குடும்ப நலன் பாராது தேச சூழலை முன்னிறுத்தி தேச விடுதலைக்காக இயங்கிய ஒரு அரசியல் பண்பாட்டு போராளி பாரதிதான் என்ற பெருமிதமும்

வாழத் தெரியாதவன், ஊரோடு ஒட்டி போகாதவன், கிறுக்கன், குடும்பத்தை நட்டாத்தில் தவிக்க விட்டவன், அரசாங்கத்தோடு மோதி அழிந்து போனவன் இப்படி பாரதி பற்றிய அக்காலத்திய சொல்லாடல்களை நினைவு கூர்ந்து இப்பொழுது இருக்கும் கவிஞர்களின் தியாகங்களை பாரதியோடு ஒப்பிட்டு கேள்விக்குறியாக்குகிறார்.

அடுத்தது ஔவையின் ஆத்திச்சூடியை பாரதியின் ஆத்திச்சூடியோடு ஒப்பிடுகிறார். ஔவையின் ஆத்திச்சூடி நில உடமை நோக்கு சிந்தனை கொண்ட ஆளும் வர்க்கத்திற்கு அனுசரணையான, பெண் குறித்த பழமை வாய்ந்த நோக்கு கொண்ட, தனிமனித ஆளுமை சுதந்திரத்திற்கு எதிராக இருந்தது என்றும், ஆனால் பாரதியின் எழுத்தோ ,ஔவை சொல்வதற்கு மாறாக கேட்டிலும் துணிந்து நில், சீறுவோருக்கு சீறு, தாழ்ந்து நடவேல், தையலை உயர்வு செய், நேர்பட பேசு,
பாட்டினில் அன்பு செய் போர் தொழில் பழகு, என்றெல்லாம் பாடி இருப்பதை எடுத்துரைத்து பாரதியின் சமூக உணர்வை வெளிச்சமிடுகிறார்.

“பாரதி முதன்மைகள்” பல உள்ளன. தமிழின் முதல் கார்ட்டூனிஸ்ட். தமிழின் முதல் ஐக்கூ எழுத்தாளர். தமிழின் முதல் புதுக்கவிதை எழுத்தாளர்.
தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டே செல்லலாம். இவற்றோடு முதல் அரசியற்புனை கவிதை எழுதியவரும் பாரதி என வலியுறுத்தி இக்கட்டுரையில் சான்றுடன் விளக்குகிறார்.

வள்ளலார் அவர்களும் வள்ளலாருக்கு முன் வாழ்ந்த ஐயா வைகுண்டசாமி அவர்களும் ஏன் வள்ளுவரும் கூட அரசியல் பற்றி எழுதி இருக்கிறார்கள் என்றும் ஆனால் ஆட்சியாளர்களை நோக்கி தீவிரமாக பேசிய கவிதைகள் என பார்க்கும் பொழுது பாரதி வாழ்ந்த காலம் மிக முக்கியமானது என்றும் அக்காலத்தில் கடைப்பிடித்த அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னுடைய கவிதைகளை ஒரு ஊடகமாக ,ஒரு ஆயுதமாக பயன்படுத்தியவர் பாரதி என கூறுகிறார்.

பாரதி எதைப் பற்றி எழுதினாலும் வெள்ளை அரசு நடுங்கியது. அரசாங்க பார்வையில் பாரதி ஒரு வெடிகுண்டு. ஒரு கிளர்ச்சிக்காரன். என்பதால் அவனின் பாடல்கள் கவிதைகளை சுடச்சுட அரசாங்கம் மொழிபெயர்த்து அவரை கண்காணிப்பிற்கு உள்ளாகியது. பல பாடல்கள் தடை செய்யப்பட்டன. வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டன.ஆகவே பாரதி தணிக்கை தொல்லையிலிருந்து படைப்பை பாதுகாத்து மக்கள் மத்தியில் பரப்ப சில கவிதை உத்திகளையும் கையாண்டிருக்கிறார். பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு மற்றும் வேள்வித்தீ போன்ற பாடல்களில் இலை மறை காயாக பொருள் புரியும்படி எழுதியிருக்கிறார் என்றும் அந்தப் பாடல்களை உதாரணமாக கூறி அவை எவற்றை விளக்கி உள்ளன என்பதையும் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.

பாரதியின் இன்னொரு முதன்மையை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே பாரதி தன் கவிதையில் மொழி வாரி மாநிலம் பற்றி பதித்திருக்கிறார் எனவும் பாரதியின் பாடலை உதாரணம் காட்டுகிறார்.

மேலும் அவருடைய பாடல் வரியில் அந்தணர் என சொல் வந்துள்ளதை மேற்கோள் காட்டி அந்தணர் என்பதற்கு பாரதி கண்ட அர்த்தம் என்ன என்பதை நூல் ஆசிரியர் விளக்கியுள்ளதையும் பார்க்கவேண்டும்

அன்பின் பார்ப்பட்ட ஆன்மீகம் என்ற தலைப்பிலான கட்டுரை மிக முக்கியமானதாகும். பாரதி ஆன்மீகத்தில் உள்ளொளி தேடி பயணப்பட்டவர் என்றும் சிவனைப் பற்றி வேலனைப் பற்றி விநாயகரை பற்றி பராசக்தியை பற்றி பாடியிருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களான மாடன் சாத்தன் வேலன் இன்னும் பிற தெய்வங்களை தன்னுடைய பாடல்களில் பதிவு செய்திருக்கிறார் பாரதி எனவும் தான் வாழும் காலத்தில் நடைபெற்ற மத மோதல்கள் குறித்தும் அந்த மோதல்களுக்கு இடையே இணக்கத்தை கொண்டு வரும் அன்பையும் முன்வைத்து தான் பாரதி கவிதைகளை ஏற்றி இருக்கிறார் என்று சில உதாரணங்களை கூறி இந்த கட்டுரையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர்.

தான் வாழ்ந்த காலத்தில் அவர் சார்ந்த குடும்பம் தோழர்கள் அடைந்த துன்பங்கள் துயரங்கள் அளவிடர் கரியது,கைது இரட்டை ஆயுள் தண்டனை நாடு கடத்தல், தலை மறைவு குடும்ப வாழ்க்கையை வேவுபார்த்தல், அடக்குமுறை,தொடர்ந்த காலத்தில் வாழ்க்கையை பணயம் வைத்து அரசியல் கொள்கை வெற்றி பெற நாடு விடுதலை பெற சூறாளியை போன்ற தீச்சுடர் தான் பாரதியென நம்மை பெருமை கொள்ள வைக்கிறார் ஆசிரியர்.

அனைத்து கட்டுரைகளுமே சில கேள்விகளை முன்வைத்து அந்த கேள்விகளுக்கு உண்டான பதிலையும் தக்க ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறது.

பாரதி வாழ்ந்த காலம் குறைவு தான் என்றாலும் தன்னுடைய படைப்பின் மூலம் எக்காலத்துக்கும் விவாதிக்கக் கூடிய போற்றக்கூடிய ஒரு நபராக தான் இன்னமும் இருக்கிறார் என்பதை இந்த கட்டுரைகள் மூலம் அறியலாம்.

நூல் ஆசிரியர் இரா. தெ.முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நூஓலின் தகவ்கள் :

நூலின் பெயர் : பேசா பொருளைப்  பேசிய பாரதி
நூல் ஆசிரியர் : இரா.தெ.முத்து
வகைமை : கட்டுரைகள்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 60/

நூலின் தகவல்கள் : 

சகுவரதன்
குடியாத்தம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *