Peththa Magaluku Pirasavam Pitchumani Poetry in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.



பெத்த மகளுக்குப்
பிரசவம்.

மூத்த மவனுக்கு
பிள்ளை பிறக்கையில்
குடும்ப வாரிசுயென
கூறிக் களித்தவள்.

மருமவளப் பார்த்து
நானும் நாலு பிள்ளை பெத்தவயென்று
வறட்டு தைரியம் சொன்னவள்..

பெத்தமகளுக்கு பிரசவமன்னு
கேட்டதும்.
தேகமெல்லாம் பதறுது
நினைவெல்லாம் வலிக்குது

எப்படிக் கழித்தாளோ மகள்
ஏழெட்டு மாசத்த

தேநீர் குடிக்கயில்
தொலைகாட்சிப் பெட்டியில்
கழிப்பறையைக் கண்டாலே
வெடுக்கென மாத்திருவா

வாந்தி சத்தம் கேட்டாலே
மூக்க பொத்திருவா

கைவிரல் பட்ட தண்ணீய
வாய் கூட கொப்பளிக்கமாட்டா

மசக்கையானதும் எப்படி
மறந்தாளோ இதையெல்லாம்.

குப்புறப் படுத்துக்கிட்டு
தலவாணியவ இறுக்கி அணைச்சு
வலது கையில் கன்னம் பதிச்சு
வசதியா அசதிக்கெத்து..
உருண்டு புரண்டு படுத்த மகள்

மல்லாக்கப் படுத்து
வலது இடது திருப்பிப் படுக்க
என்ன பாடு பட்டளோ.

தண்ணி கொடம் தூக்கினாலே
கனக்குதம்மா இடுப்பு..
வலிக்குதம்மா வயிறு என்பாளே

பனிக்குடத்தில் மிதக்கும்
கருப்பைக் கருவை
எப்படித் தூக்கிச் சுமந்தாளோ
மூம்மூன்று மாதங்கள்.

அவளைப் பெத்து எடுக்கையில்
தான் பெற்ற வலியின் ரணங்கள்
ஆறாமல் இருக்க..

பெத்த மவளுக்கு
பிரசவமின்னு நினைக்கையில்
உள்ளம் பதறுது

பனிக்குடம் உடைந்து
கருப்பை சுருங்கி..வாய் விரிந்து
புதுஉயிர் தலைகீழாய்
யோனி வழியே
உலகைப் பார்க்கையில்
நாம் ஏன்
பெண்ணாய் பிறந்தோமென்று
எண்ணத்தோன்றுமடி
நா பெத்த மகளே..

கெண்டை கால் நரம்பு
சதையை கவ்வியிழுக்கும்
முட்டி இரண்டும் குழலாடும்
குறுக்கு எலும்பு பிடிச்சிழுக்கும்
முன் வயிற்றுப் பாரம் மூச்சடைக்கும்..
எப்படி பொறுக்கப்போற
இக் கொடிய வலியை.

இப்போது எண்ணுகிறேன் மகளே…
அப்பனுக்கோ.. அண்ணனுக்கோ
புருசனுக்கோ ..மகனுக்கோ
பிள்ளை பெத்தெடுக்கும்
கருப்பை இருந்திருந்தா
எப்படிஇருந்திருக்கும்
இவ்வுலகம்?

– பிச்சுமணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *