தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளை தன் படைப்புகளில் தொடர்ந்து முன்வைத்து வரும் “இமயம்” அவர்கள், “பெத்தவன்” கதையின் மூலம் தன் எழுத்துக்களை சமூகத்தின் கண்ணாடியாக வடிவமைத்துள்ளார்.
சாதியக் கட்டமைப்புகளால் ஒரு குடும்பம் என்னென்ன இன்னல்களுக்குட்பட்டு, உடன் வசிக்கும் ஊராரின் பழிச் சொற்களால் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதை திறம்பட விவரித்துள்ளார். சாதிய வன்முறையிலிருந்து “காதல்” என்னும் ஆயுதத்தைக் கொண்டு, ஓர் குடும்பம் வெளிவர முயற்சிப்பினும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சாதிய உணர்வுகளை மீண்டும் அவர்கள் மனதில் திணிக்கும் எதார்த்தத்தை திரைப்படங்களே தோற்றுப் போகும் அளவிற்கு தன் எழுத்துக்களால் படம்பிடித்துள்ளார், இமயம். ஒரு பெண் பிறக்கிறாள் என்றால், அந்த குடும்பத்திற்கும் மேலாக அவள், “அவளின் சாதிக்கு உரியவள்” என்று பல பெண்களும் தன் கனவுகளை சுருட்டி மடித்து வைத்து வாழ்கின்றனர் அல்லது வாழ வைக்கப்படுகின்றனர். அப் பெண்டிர்களுள் ஒருவர் தாம் பாக்கியம். சாதி வெறி முற்றிய ஆணாதிக்கக்காரர்களால் துன்புறுத்தப்பட்ட போதிலும் பெண்டிர் மனதில் ‘காதல்’ அசையாதிருக்கும் என்பதற்கு பாக்கியமும் சான்றாவாள்.

தந்தையர்களைப் போற்றும் வகையிலிருக்கும் இக்கதை, “பெத்தவன்களின்” மனதில் என்றென்றும் பாட்டிசைக்கும். “செத்துப் போடி” எனத் திட்டும் ஒவ்வொரு தகப்பனுக்குள்ளேயும், அவளைத் தன் தோளில் சுமந்து “வானமும் கைவசம் தான்; வா பிடிக்கலாம்” என வாழ்க்கையையும் கற்றுத்தந்த ‘பெற்றவன்’ வாழத்தான் செய்கிறான் என்பதை நான் உணர்ந்த வகையில் நீரும் உணர்வீர். காரணங்களுக்காக தந்தையை வெறுத்தாலும் அவரின் ஒரு துளி கண்ணீர் நமக்குள் பேரலையை உண்டாக்கும்; பாக்கியம் உணர்ந்திருப்பாள்! “சாதி எனப்படுவது உயிர் பயத்தை உண்டாக்கும் கருவி” என்பதே என் கருத்து. ஆனால் “பெத்தவன்” என்பவன் எப்பயத்தையும் உடைத்து தன் உயிரைக் கொடுத்தேனும் தன் பெண்பிள்ளையைக் காப்பவர். கதையின் இறுதியில் படிப்போரின் கண்கள் கசியுமாயின் “இமயம் என்றும் இமயமே!”
பெத்தவன்
இமையம்
க்ரியா பதிப்பகம்
விலை : 35ரூ
மதிவதணி இராஜசேகரன்
மெட்ராஸ் கிருத்துவ கல்லூரி
Indha kadhaiyai idhuvarai padithadhillai..
Indha padhivai kandadhum, padithey aagavendum endra ennam thondritru. Padhivuku nandri!