சிறுகதை : பெய்யெனப் பெய்யும் மழை
காலையில 4 மணிக்கு எந்திரிச்சு மாட்டுத்தாவணிக்குப் போகணும். சல்லிசா விக்கிற காய்கறியை வாங்கிக்கிட்டு அவனியாபுரம் சந்தைக்கு வரணும். ஆண்டவன் புண்ணியத்துல மதியம் வரைக்கும் மழை இல்லாம இருக்கணும். மனசுக்குள் எண்ணங்கள் ஓடியது. காலையில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் செல்லும் பெண்களை ஏற்றிச்செல்வதற்கான வாடிக்கையான ஷேர் ஆட்டோ வந்தது. கை காட்டவும் என்ன லெட்சுமி அக்கா இன்னிக்கு லேட் ஆயிடுச்சா? என்று கேட்டவாறே ஆட்டோவை நிறுத்தினார்.
ஆமாம் தம்பி. எம் மவளுக்கு காய்ச்சல் ஓவரா இருக்கு. சாயங்காலம் டாக்டரு கிட்ட கூட்டிட்டுப் போகணும். இன்னிக்கு வியாபாரம் நல்லபடியா முடிஞ்சு சாயங்காலமா டாக்டருகிட்ட போனா தான் வர்ற வாரத்தில நடக்கிற பரீட்சைய ஒழுங்கா எழுத முடியும். நம்மளோட இந்த வியாபராம்லாம் போகட்டும். நாலு எழுத்தப் படிச்சு வேலைக்குப் போயி சம்பாதிக்கணும். முத ரெண்டு வாக்கியத்தை உரக்கப் பேசின லெட்சுமி மத்ததையெல்லாம் மனசுக்குள்ள பேசிக்கிட்டே அதிகாலை ஈரக்காற்றை நுரையீலுக்குள் சுவாசித்தவாறு ஆட்டோவின் கம்பியில் சாய்ந்து கொண்டாள்.
மாட்டுத்தாவணியில இறங்கி சுருக்குப் பையில இருந்து கசங்கிய ரெண்டு இருபது ரூபாயை ஆட்டோக்காரத் தம்பியிடம் கொடுத்துவிட்டு மார்க்கெட்டுக்குள்ள கோணிச்சாக்கோட ஒவ்வொரு வியாபாரியாப் பார்த்து பேரம் பேசத் தொடங்கினாள். ஏலத்தில் வசப்பட்ட காய்கறிகளைப் பத்துப் பத்துக் கிலோவா வாங்கி மூட்டையை நிரப்பிக்கிட்டு அவனியாபுரம் கிளம்ப குட்டி யானையைத் தேடினாள். இன்னும் ரெண்டு, மூணு வியாபாரிகள் சேர்ந்து ஒரு குட்டி யானையைப் பேசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டுப் புறப்பட்டார்கள்.
கருக்கல் லேசா விடியத் தொடங்கிருந்துச்சு. வளையங்குளம் பக்கத்தில இருந்த சோளங்குருணில செங்கேணி நடவு செய்யப்பட்ட மல்லிகைச் செடிகளைப் பார்த்துக் கொண்டும் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும் இருந்தார். இந்த முறை மொத்தமா மகள் கல்யாணத்துக்காக பூ மார்க்கெட் குத்தகை வியாபாரி கிட்ட ஜுன் மாசமே ஒரு லட்ச ரூபா முன்பணமா வாங்கியாச்சு. இரெண்டு மூணு மாசமா மழை கொஞ்சம் கம்மியா இருந்ததால வாடல் நோயால பூ கம்மியாத் தான் பூத்துக்கிட்டு இருந்துச்சு. இந்த வயல்ல ரொம்ப நாளைக்குப் பொறகு மல்லிப்பூ நடவு செஞ்சாச்சு. பூ நல்லா பூத்தா தான் சட்டு புட்டுன்னு கடனை அடைக்க முடியும். இந்த இடத்தில கிணத்துப் பாசனம் இல்லை. ஐப்பசி மாசம் மழை பெய்யும்ணு காத்துக் கிடக்க வேண்டியிருக்கு. இன்னிக்காவது மழை வந்துச்சுண்ணா ஒரு பத்துப் பதினைஞ்சு நாளுல பூப்பறிக்க ஆரம்பிச்சுடலாம். எவ்வளவு பூ போட்டாலும் வட்டிக்கே போகுதே தவிர அசலை அடைக்க முடியலை. அந்த சாமி தான் மனசு வைக்கணும். கடனை அடைச்சிற முடியும்னு நம்பிக்கை வந்துட்டாலே தைப்பூசத்துக்கு பழநிக்கு மாலை போட்டு நடந்தே போயிட வேண்டியது தான்.
ஞாயிற்றுக்கிழமை அவனியாபுரம் மார்க்கெட்டு படு பிசியா இருக்கும். மழை மட்டும் பெய்யறதைத் தள்ளிப் போட்டு கருணை காண்பிச்சதுன்னா 12 மணிக்கு அவ்வளவு காய்கறியும் வித்துப்புடும். லெட்சுமி காய்கறி மூட்டைகளை ரோட்டுக்கு மேற்கால இறக்கிப் போட்டிருந்தாள்.
கோணியை விரித்து காய்கறிகளைத் தனித்தனியா பாத்தி கட்டினா மாதிரி குவிச்சு வைச்சாச்சு. வெண்டைக்காய் மூட்டைல வாங்கினாலும் இப்பத்தான் தோட்டத்தில இருந்து பறிச்சுட்டு வந்த மாதிரி பச்சுபச்சுன்னு இருக்கு. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு காய்க்கு கிராக்கி வரும். தக்காளி ஒரு நேரம் நூறு ரூபாயத் தொடும். ஒரு மூணு வாரத்தில திடீர்னு அதல பாதாளத்துக்குப் போயிடும் வாங்கின காசை விடக் கம்மியா விக்கறதுக்குப் பதிலா ரோட்டோரமா கொட்டிட்டுப் போற வியாபாரமும் தக்காளியோடது. வெண்டைக்காய் இப்பல்லாம் கிலோ முப்பது ரூபாய்க்கு மேல விக்கறதுல்ல. போற ஆட்டோவுக்குக் காசு, வர்றதுக்கு குட்டியானைக்கு காசு. எல்லாம் சேர்த்து விலையில கூட்டி வைச்சாலும் ஒடிச்சுப் போடற முத்துன வெண்டைக்காய் கழிவுக்கான காசுன்னு பாத்தா தொடச்சுக்க வலிச்சுக்கன்னு தான் லாபம் கையில நிக்கும்.
முதல் போனிக்காக தராசு படிக்கல்லையெல்லாம் எடுத்து வைச்சுட்டு விலையச் சொல்லி கூவுறதுக்குள்ள மேகம் ஒரு மாதிரி ஈசான்ய மூலையில கருத்துக்கிட்டு இருந்துச்சு. நெஞ்சுக்குள்ள பகீர்னு இருந்துச்சு. ஒரு வாரம் கஞ்சிப்பாட்டுக்கே கேடு வந்துரும் போலருக்கே. வர்ற மழை ஒரு அந்தி நேரமா வரக்கூடாதா? வியாபாரம் பார்க்கிற நேரத்தில தானா வரணும். சாமி எப்படியாவது காப்பாத்து. பூசத்துக்கு மாலை போட்டு நடந்து வர்றேன். மனம் தானாக உறுதிமொழி ஏத்துக்கிட்டது.
காத்து லேசா வீசத் தொடங்கியது. தெற்காமயா மேகத்தை இழுத்துக்கிட்டுப் போகத் தொடங்கிச்சு. பன்னீர் தெளிச்ச மாதிரி காய்கறி மேல தெளிச்சிட்டுப் போன மழையைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறே சைக்கிள்ல வந்த சுக்குக் காபியை ஒரு டம்ளரில் வாங்கி தொண்டைய நனைக்கத் தொடங்கினாள் லெட்சுமி.
செங்கேணிக்குச் சந்தோசம் தாங்க முடியல. இன்னிக்காவது மழை பெய்யாதான்னு ஏங்கிக் கிடந்தவனுக்கு சரியா பைபாஸ் ரோட்டில இருந்து புதுசா மல்லிப்பூ நடவு நட்ட வயலைச்சுத்தி 3 மைல் பரப்புக்கு ஒரு மணி நேரமா நல்லா மழை நின்னு கொட்டிடுச்சு.
முருகா … என் வயித்துல பால வார்த்துட்ட என்றவாறே மழையில் ஆனந்தமாக நனையத் தொடங்கினான். மல்லிகைப்பூ செடிகள் லெட்சுமி அக்கா மகள் தலைக்குப் பூ தருவதற்காக மழை நீரை வேரிலிருந்து நன்கு உள்ளிழுக்கத் தொடங்கின.
எழுதியவர் :
மகாலிங்கம் இரெத்தினவேலு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.