Picasso Marathi Language Drama Movie Review In Tamil By Era. Ramanan - Book Day Is Branch Of Bharathi Puthakalayam



இந்த மராத்தி மொழி திரைப்படம் 2019இல் தயாரிக்கப்பட்டு மும்பை மற்றும் கவுகாத்தி நகரில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் வெளிவர இயலவில்லை. இப்பொழுது மார்ச் 2021இல் அமேசான் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பிரதேசத்தில் 800ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமாக இருக்கும் தசாவதாரா எனும் நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலைவடிவம் கொங்கண் பிராந்தியத்திலுள்ள வாவெல் கிராமத்தில் லக்ஷ்மி நாராயண் கோவிலில் இன்றும் செயல்படுகிறது. 27நாட்களில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தக் கோயிலிலேயே படமாக்கப்பட்டது. அரசாங்க உதவி எதுவும் இல்லாத நிலையிலும் 3500கலைஞர்கள் இந்தக் கலை வடிவத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.

இதன் தயாரிப்பாளர் ஷிலாதித்ய போரா மற்றும் இயக்குனர் அபிஜித் மோகன் வராங் இருவருக்கும் இது முதல் படமாம். பிரபல நடிகர் பிரசாத் ஓக், குழந்தை நட்சத்திரம் சமய் சஞ்சீவ் டாம்பே ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் 2021இல் சிறப்பு கவன பிரிவில் கதாசிரியரும் இயக்குனருமான அப்ஜீத் மோகன் வராங்கிற்கு தேசிய திரைப்பட விருது கிடைத்துள்ளது.

ஏழாவது வகுப்பில் படிக்கும் காந்தர்வ் அவனது தந்தை பாண்டுரங்கினால் ஓவியம் வரைவதில் ஊக்குவிக்கப்படுகிறான். பாண்டுரங்கன் ஒரு ஓவியன்; சிற்பி; தசவாதார நாடகக் கலைஞன். ஒரு காலத்தில் அவன் அதில் மிகச் சிறந்த நடிகனாக இருக்கிறான். ஆனால் குடிப்பழக்கத்தினால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மனைவி உடல்நலம் இல்லாதவள். நாடகக் கம்பெனி உரிமையாளரிடம் நிறையக் கடன் வாங்கியிருக்கிறான்.

மாநிலத்தில் நடந்த ஓவியப்போட்டியில் காந்தர்வ் முதலாவதாக வருகிறான். அடுத்து இந்திய அளவில் நடக்கும் பிக்காசோ கலை விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் ஸ்பெயின் நாட்டிலுள்ள பிக்காசோவின் பிறந்த ஊரான பார்சிலோனாவுக்கு சென்று ஒரு மாதகாலம் பயிற்சி பெறலாம். இந்தக் கடிதம் நகரத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் அவன் ஊர் பள்ளிக்கு தாமதமாக இறுதி நாளைக்கு முதல் நாள் வருகிறது. மறுநாளுக்குள் ரூ 1500/ கட்ட வேண்டும்.

Picasso Marathi Language Drama Movie Review In Tamil By Era. Ramanan - Book Day Is Branch Of Bharathi Puthakalayam

அவனது தாயாருக்கு மறுநாள் சோனோகிராம் சோதனை எடுக்க வேண்டும். தந்தை பக்கத்து நகரில் நாடகத்தில் நடிக்க சென்றிருக்கிறார். காந்தர்வ் அங்கு சென்று பரிசு பெற்றதையும் மறுநாள் பணம் கட்டவேண்டியதையும் கூறுகிறான். நாடக உரிமையாளரிடம் பாண்டுரங்கன் பணம் கேட்கிறான். அவனுக்கு ஏற்கனவே 10000க்கு மேல் கடன் கொடுத்தாகிவிட்டது; இந்தக் காட்சிக்கு வசூலாகும் தொகை போக்குவரத்து செலவுக்காவது ஆகுமா என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.

நாடகத்தில் பெண்வேடத்தில் நடிக்கும் நீலகண்டன் எனும் நடிகருக்கு பாராட்டுகளும் பணமும் குவிகிறது. பாண்டுரங்கனின் முக்கியத்துவத்தைக் குறைத்து தனது பெருமையை காட்டுவதற்காக, நீலகண்டன் ஒரு இடைவேளையில் நீண்ட நேரம் ஒப்பனை செய்துகொண்டு தாமதப்படுத்துகிறான். பார்வையாளர்களை அமைதிப்படுத்துவதற்காக பாண்டுரங்கன் மேடையில் தோன்றி பாட்டுப் பாடுகிறான். அதை ரசித்த பார்வையாளர்கள் அவனுக்கு பண மாலை அணிவிக்கிறார்கள். நீலகண்டன் அவனிடம் மன்னிப்பு கேட்டு தான் மேடைக்கு வரவில்லை என்கிறான்.. ‘நாமெல்லோரும் ஒன்றுதான். நாடகத்தை நடித்து நம் கம்பெனியைக் காப்பாற்றுவோம்’ என்கிறான் பாண்டுரங்கன். நாடகம் சிறப்பாக முடிகிறது. மகிழ்ச்சியான நாடக கம்பெனி உரிமையாளர் பாண்டுரங்கனுக்கு தரவேண்டிய ஊதியத்துடன் அந்த பணமாலையையும் சேர்த்து தருகிறார். மறுநாள் மகனின் ஓவியப் போட்டிக்கான கட்டணத்தைக் கொடுக்கிறான். மனைவியையும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்வதுடன் படம் முடிகிறது.

இயக்குனரின் முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு காட்சிகள் சிறப்பாக உள்ளது. காந்தர்வின் பரிசுக் கடிதம் அவன் பள்ளிக்கு ஏன் தாமதமாக வந்தது என்பதற்கு, தபால் பை நகரில் பேருந்தில் ஏற்றப்பட்டு பல தொலைவு கடந்து கிராமத்தில் இறக்கப்பட்டு தபால்காரர் பள்ளியில் சேர்ப்பிப்பதை காட்டியுள்ளார். இதை ஒரே வசனத்திலும் சொல்லியிருக்கலாம். ஆனால் நம் நாட்டில் கிராமங்கள் தகவல் தொடர்பில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் நமக்கு இந்தக் காட்சியின் முக்கியத்துவம் என்ன என்பது சிறிது நேரம் சஸ்பென்சாகவும் இருக்கிறது.

Picasso Marathi Language Drama Movie Review In Tamil By Era. Ramanan - Book Day Is Branch Of Bharathi Puthakalayam

இன்னொரு காட்சி. தந்தையை சந்தித்து தான் பரிசு பெற்றதை சொல்ல ஓடி வருகிறான். நகரத்துக்கு செல்லும் பஸ் போய்விடுகிறது. ஓட்டமும் நடையுமாக செல்கிறான். ஒரு ஆறு குறுக்கே இருக்கிறது. அதை தோணியில் கடக்கிறான். மழை பெய்து கொண்டிருக்கிறது. தோணிக்காரர் இருக்கையின் அடியில் இருக்கும் குடையை எடுத்துக் கொள்ள சொல்கிறார். எளிய மனிதர்களின் அன்பு அந்த மழைபோல் குளிர்கிறது. படத்தில் மிகச்சிறந்த காட்சியாக இதை சொல்லலாம்.

பாண்டுரங்கன் குடிப்பழக்கம் உள்ளவன்தான். ஆனால் அவனுடைய மனிதத்தனம் பல இடங்களில் வெளிப்படுகிறது. உடல்நலம் இல்லாத தாயை விட்டுவிட்டு வந்த மகனை கடிந்து கொண்டாலும் பரிசு பெற்றதற்காக பாராட்டுகிறான். மறுநாள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் ‘இதெல்லாம் வாழ்க்கைக்கு ஆகாது; படிப்பைப் பாரு’ என்கிறான். தன்னை ஓரம்கட்ட நினைத்த சக நடிகனை அணைத்துக்கொள்ளும் விதம்; கம்பெனிக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்று நினைப்பது; மகன் சாப்பிடாமல் இருப்பதை நினைத்து தனக்கு வந்த தேநீரை அவனுக்கு தரும் இடம் என பல இடங்கள் நெகிழ்வாக இருக்கின்றன.

படத்தில் வரும் நாடகம் நமக்கு எல்லோருக்கும் தெரிந்த புராணக் கதைதான். ஒரு அசுரன், அவனை எதிர்க்கும் ஒரு நல்ல அரசன் அவனுக்கு உதவும் கடவுள். ஆனால் நம் மக்கள் உள்ளத்தில் இத்தகைய புராணக் கதைகள் மிக ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதை நாடக பார்வையாளர்களில் இளம் பெண்கள், வயதான பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பல தரப்பினரும் காட்சிகளை ரசிக்கும் விதத்தை இயக்குனர் காட்டுகிறார்.

படத்தின் முடிவு மகிழ்வான ஒன்றாக காட்டியிருந்தாலும் கலைஞர்களின் வறுமை, சிறுவர்களின் திறமை அவர்களுக்கு கிடைக்கும் அல்லது கிடைக்காத வாய்ப்பைப் பொறுத்தே வெளித் தெரிவது, கிராமத்து மக்களின் எளிமை, சக கலைஞர்களிடையே வெளிப்படும் போட்டி பொறாமை என எதார்த்தத்தை அழகுணர்வோடு சொல்லுகிறது இந்தப் படம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *