
எப்பொழுதோ அல்ல
எப்பொழுதும் எழுத நினைக்கிறேன்
அதை..!
எடுக்கிற காகிதங்களெல்லாம்
நிரப்பட்டிருந்தன..
நிரம்பிய அந்த வடிவங்களை
உற்று நோக்கினேன்..
எழுத்துக்கான வடிவமில்லை
அவை குறியீடாகவுமில்லை
ஓவியமாகவுமில்லை..
எதுவுமாக இல்லாத அவை
நான் எழுத நினைக்கிற
அது இல்லை..
அதைப் புரியவில்லையெனச் சொன்னால்..
முட்டாள் நானென
காகிதத்தை நிரப்பியவர்களால்
பரிகாசிக்கக் கூடும்..!
அது கூடினாலும்
பரவாயில்லை..
எனக்கான அதை எழுதியே தீர வேண்டும்..!
நான்
காகிதங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன்..
எப்படியும்
அதை எழுதிவிடுவேன்..!

அள்ளித் தெறித்தாற்போல்
அந்த வானம்..
யாருக்கானது..?!
பறவைகளுக்கான தானியத்தை
தூவி இறைத்தாற்போல்
பரவிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்
பாருங்கள்..
தானியங்களுக்கிடையே வைக்கப்பட்டிருக்கும்
தண்ணீர் நிரம்பிய வட்டப் பாத்திரமாய்.,
அந்த நிலவினைப் பாருங்கள்..
வருகிற காலத்தில்
நுண்வினாடிப் பொழுதும்
நீங்கள் பார்க்க விழைகிற அவற்றிற்கு..
கட்டணம் நிர்ணயம் செய்வார்கள்.,
நீங்கள் மண்பார்த்து நடங்கள்.,
அவர்கள்..
மண்பார்க்கவும் கட்டணமிடுகிற பொழுது
நீங்கள் எதைப் பார்த்து நடப்பீர்கள்..!?
கண் மூடிக்கூட
நடக்கப் பழகிவிடும்
உங்களிடம் இதை சும்மாவாவது
கேட்டு வைக்கிறேன்..
நீங்கள்
என்றாவது விழிக்கக்கூடும்.!

உன்னை
நினைக்கையில்…
கண்கள் நீர்முட்டி குளமாகிவிடுகிறது…
அதிலும் நீ
எதையாவது பூக்கச் செய்துவிடுகிறாய்!
அது சூன்யத்தை நிரப்பி விடுகிறது!

அடிமைகளை விரும்புகிறவர்கள்
ஆளுமைக்கான தகுதி உள்ளோரை
வளரவிடுவதில்லை.
அடிமைகளோடு ஆளுமைகளாக
தங்களை விவரித்துக் கொள்கிறார்கள்.
ஓர் உறையில் இரு கத்தி
எதற்கென்று பேசும்
இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சமூக அநீதிகளுக்கெதிராக
ஒரு கத்தி அமைதி காத்தாலும்
மறுகத்தி வெட்டுமென்று.
ஒரு சுலுவான கூட்டுக்குள்
அடைந்து கொள்கிறார்கள்..
இழுத்துச் செல்வதற்கான
கண்ணிகளை கட்டுகிற பொழுது
வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்..
ஏதோ ஒரு நேரம்
முயற்சிப்பதாய் அவர்கள் சொல்வதை
நம்பத்தான் வேண்டியிருக்கிறது..
திக்கு தெரியாத காட்டில்
அலைவதைப் போல..
அம்முயற்சி வடிவமடையும் வரை.
பல நேரங்களில் அவ்வடிவம்
கிடைப்பதாயில்லை…
நம்பிக்கையின் கீற்றுக்களை
ஒத்துழையாமையின் பேரிருள்
கபளீகரம் செய்துவிடத் துடிக்கிறது.
நாங்களெல்லாம்…
என்று மார்தட்டிக் கொள்கிற இவர்களுக்கு
அடுத்தவர்களின் தோள்களே
பல்லக்காகிப் போகின்றன.
இவர்களுடன் கரம் கோர்த்திருப்பதாய்
நாம் நினைக்கிற கணங்கள்
ஏதோ திடீர் கனவென
நினைவில் நில்லாமல் போய்விடுகின்றன.
பொத்திக் கொள்ளவும்
பொத்தி வைக்கவும்.,
சுகபோக வெற்றுத்தனங்களும்
தனக்கான முன்னிறுத்தலும்
பாராட்டுக் குளிர்த்தல்களும்
இலக்கில்லாத துடிப்பும்
நான்கு கால்களாகின்றன.
இதைச் சுற்றி வேயப்படுகிற
சுளுவான கூட்டுக்குள்
இவர்கள் லகுவாக வாழ்கிறார்கள்.
வாழ்க்கை எனப்படுவது
யாதெனின்..!
பிச்சைமணி ஐயப்பன்
தேனி

