Pillai Thaniyam book review by chandru Rc

 

 

 

கவிஞர் ஜெயாபுதீன் அவர்களின் பிள்ளைத்தானியம் என்ற கவிதைத்தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் தான் வாழ்ந்த மண்ணின்…மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் அனுபவத் தொகுப்பாய் மெல்லிய உணர்வுகளோடு நீண்டு நெய்யப்பட்டிருக்கிறது. தனது கவிதைகளுக்கான பாடுபொருளை அவர் தன்னுடன் பயணிக்கும் மனிதர்களின் வாழ்விலிருந்தும் அவர்களின் அனுபவங்களிலிருந்துமே எடுத்துக்கொள்கிறார். தொலைந்துவிட்ட நதியையும் தொலையாத அதன் நினைவுகளையும் பாடுகிறார். அம்மாவை அப்பாவை அத்தைகளை தங்கைகளை வற்றாத அவர்களின் அன்பை கவிதைக்குள் பாடுபொருளாய் வைக்கிறார். தாத்தா பேரனுக்குள்ளிருக்கும் இணக்கத்தை இனம்புரியா நட்பை இளகிய சொற்களால் பாடுபொருளாக்குகிறார். சீந்துவாரின்றி காலவதியாகிப்போன அப்பாவின் சைக்கிளை கவிதைக்குள் உயிர்த்தெழ வைக்கிறார். பஞ்சாலையில் சுவாசக்கோளாறுகளோடு குடும்பத்துக்காகவே வாழ்வை ஒப்புக்கொடுத்த மனிதர்களும் ஆலைச் சங்கொலிகளும் அவரது கவிதைக்குள் வலியும் இதமுமான மெல்லிய இசையாய் இரைந்து கிடக்கிறது. அடித்தட்டு மக்களின் வலிகளை முடி திருத்துபவரையும் ஆட்டோ ஓட்டுபவனின் வெள்ளந்தி மனதையும் தையல்காரரின் உறவையும் யாசித்து நிற்பதை கூச்சமெனக்கருதி தனது ஈமச்சடங்குக்கும் சேர்த்தே உழைத்த மூதாட்டியையும் புறந்தள்ளப்பட்ட மனிதர்களையும் வாழ்ந்த வீட்டை விற்பவனின் வலியையும் என வகை வகையாய் மண் வாசம் மிதக்கும் சொற்களால் படைத்திருப்பது இவரது கவிதையின் தனிச்சிறப்பு. வெறும் அலங்கார வார்த்தைகளோடு கவிதையை நிறுத்தாமல் அந்தந்த காலத்துக்கே வாசிப்பவர்களை அழைத்துச்சென்று வட்டாரச் சொல்லாடல்களுடன் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்… வழக்கொழிந்த பொருட்களையும் வாழ்ந்து மடிந்த மனிதர்களையும் கண்முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்துகிறது அவரது கவிதைகள்.

எளிய நடையில் எல்லா தரப்பு மனிதர்களைப் பற்றியும் இயற்கையையும் சமூகத்தையும் தொட்டுப் பார்க்கும் இவரது கவிதைகளில் குறிப்பாக அம்மாவைப் பற்றிய கவிதைகளில் வழியும் தாய்மையின் பரிவும் கரிசனமும் வாஞ்சையும் நம்மை கூடுதலாய் ஈர்க்கிறது. ஈரம் சொட்டும் அக்கவிதை வரிகள் அவரவர் அம்மாவின் மடியில் வாசிப்பவரையும் ஓடிச்சென்று தலைசாய்க்க வைக்கிறது… தேவைகள் அதிக அளவில் இருந்தாலும் பற்றாக்குறைகளுடன் நிறைவாக வாழ்ந்த மனிதர்களின் அழகான காலங்கள் இவரது கவிதைகளில் வழிகிறது. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு கதையாடலை கையாண்டிருக்கிறார்… சில கவிதைகளை வட்டார மொழியின் அழகியலோடு அள்ளிப்பருகச் செய்திருக்கிறார்… இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வின் இருவேறு பக்கங்களை துல்லியமாய் செதுக்கியிருக்கிறார். பிள்ளைத்தானியம் என்ற இக்கவிதைத்தொகுப்பில் வரும் ஒவ்வொரு கவிதையையும் தனித்தனியாய் நீண்ட விமர்சனம் செய்து அதன் ஆழங்களை அலசுமளவுக்கு செறிவான படைப்புகளாய் மிளிர்கிறது… வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டதாய் கருதப்படும் இக்காலத்தில் கவிஞர் ஜெயாபுதீனின் இந்த கவிதைத்தொகுப்பை வாசிப்பவர் அடுத்தடுத்து கவிதைகளின் மீதான தங்களுக்கிருக்கும் காதலை கண்டிப்பாக வளர்த்துக்கொள்வார்கள்…

மொத்தத்தில் சொல்வதானால்….

 

தாத்தன் தின்ற தானியத்தின்

தகப்பன் தானியம்

பூட்டன் விளைவித்த தானியத்தின்

பிள்ளைத் தானியம்

குதிருக்குள் எஞ்சிய ஒருதுளிக் காலம்...

என்று அவர் எழுதியிருக்கும் ஒரு கவிதையின் கடைசி வரிகளிலேயே சொல்வதானால்…

தமிழுலகத்தின் நூற்களஞ்சியத்தின் குதிருக்குள் இடப்பட்டிருக்கும் கவிதை தானியத்தின் ஒரு துளிக்காலம் இவரது பிள்ளைத்தானியம் கவிதைத் தொகுப்பு….

ஜெயாபுதீனின் ஒவ்வொரு கவிதையையும் தனித்தனியாய் நிறுத்தி விவாதிக்குமளவு ஆழ்ந்த கருத்தாக்கங்களை கொண்டிருப்பதை இத் தொகுதி முழுக்க காண முடிகிறது….

பிள்ளைத்தானியம் என்ற கவிதைத் தொகுதியில் அவரது முதற் கவிதையே நம்மை பின்னோக்கிய காலத்துக்குள் சுகமாய் அழைத்துச்சென்று விடுகிறது… பின்னோக்கிய காலத்தின் ஜன்னல்களை எட்டிப்பார்க்கும் உணர்வை அது நம்முள் விதைக்கிறது. தினந்தோறும் விடியல்களில் எல்லா வீடுகளின் வழியாகவும் ஏதாவது ஒன்றை விற்றுக்கொண்டு செல்பவர்களை இளவயதில் கண்டிருப்போம். தயிர் விற்கும் பெண்மணிகள் தாளித்த இட்டிலியும் அவித்த பயறுகளும் விற்பவர்கள் கருவாடு கொண்டு வருவோம் புட்டு விற்பவர் என ஏதாவதொரு உணவுப்பண்டத்தை விற்று வரும் அத்தனைபேரும் தங்களின் வாடிக்கையாளர்களின் வீட்டிலிருக்கும் பிள்ளைகளின் மீது வஞ்சனையின்றி வாழ்த்துகளை பொழிந்து விட்டுச்செல்வர். அவர்கள் மற்றவர்க்கு ரத்த உறவில்லையென்றாலும் பிள்ளைகளின் மீதும் குடும்பத்தின் மீதும் உரிமையாய் சொந்தம் கொண்டாடுவதில்… பாசத்தை மிச்சம் வைக்காதவர்கள். எக்காலமும் நம் ஞாபகங்களில் படிந்து கிடக்கும் அத்தகைய உறவுகளில் ஒருவரைப் பற்றி பால்யத்தின் நினைவுகளாய் தனது கவிதையில் கூறுகிறார்.

ம்மா..

தயிர்க்காரி வந்திருக்கா

என்று விளித்துவிடும் என் தம்பியை

அத்தைன்னு சொல்லுடா

என்றபடியே அவன் குஞ்சிப்பிடித்துக்

கொஞ்சுவாள்…

வாடா மருமவனே

அருகழைத்து கொஞ்சுவாள்

ஆ காட்டு என்று சொல்லி

மோர்ப்பானை ஓரமய்த் திரளும்

வெண்ணைச் சிற்றுருண்டையை

உதடுகளில் தடவிப் போவாள்..

ஒவ்வொருவரின் பிஞ்சுப்பருவத்தின் நினைவுகளிலும் தேங்கி நிற்கும் வசந்தங்கள் அவை.

அம்மா பற்றிய கவிதையொன்றில்…

குழிந்த வட்டலில் குளமாக தேங்கி நிற்கும்

கருவாட்டுக் குழம்புக்கு மத்தியில்

சொத்தென்று வைக்கப்படும் அம்மாவின்

விரலச்சு பதிந்த களியுருண்டை

என் தங்கைகளுக்கு கொடுத்ததை விட

ஒரு சுற்றுப் பெருத்திருக்கும்…

தன் மீதான கூடுதல் கரிசனத்தை ஒவ்வொரு கவளத்திலும் காட்டும் அம்மா தனக்கு மட்டும் ஏனப்படிச் செய்தாள்… உணவுக்குள் தனிசலுகை தந்து ஏன் வளர்த்தாள்… மகன் வளர்ந்து குடும்பத்தின் உறவுகளை தாங்கிப்பிடிப்பானென்றா… பின்னாளில் குடும்பத்தை தூக்கி நிறுத்த வலுவேண்டும் என்ற வாஞ்சையிலா… ஆண் பிள்ளையென்ற பாசத்திலா… அப்பாவி பிள்ளைகளுக்கு எப்போதும் அம்மாவின் இதயத்தினோரம் சற்று கூடுதலாய் சுரக்கும் பேரன்பினாலா… எது எப்படியிருந்தாலும் அம்மா என்பவள் அம்மாவாகத்தானே இருக்க முடியும் என்று சமாதானம் கொண்டாலும் தனக்கு மட்டும் எப்போதும் தனிக்கவனம் செலுத்திய அம்மாவை பின்னாளில் நினைத்து ஏங்கும் கவிதையில் கடைசியாய் இப்படிச் சொல்கிறார்.

அம்மா இறந்த திதியன்று

படையல் சோற்றை படைத்துவிட்டு

எடுக்கக் காக்கையை விளித்தபடி

நின்று கொண்டிருக்கிறேன்

அழுதபடி நான்.

என்று முடிக்கும்போது நம்முள்ளும் அம்மாவுக்கென நிறைவேற்ற முடியாமல் போன சில கடமைகளும் வாழ்ந்த வரை அம்மாவை இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவனித்துக்கொண்டிருக்கலாம் என்ற ஆதங்கம் நமக்குள்ளும் எழுந்துவிடுகிறது..

“உசிரு” எனும் ஒரு கவிதையில் மோட்டார் பைக்குகள் புழக்கத்தில் பெரிதாய் இல்லாத காலத்தில்… அப்பாவின் சைக்கிளின் அமர்ந்து சென்றதும் அப்பாவை அமர்த்திச்சென்ற நினைவுகளும் நெருக்கமாய் வந்து செல்கின்றன.. குடும்பத்தில் ஒருவராய் வீட்டில் வளைய வரும் நாய் பூனை போன்ற ஜீவன்களைப்போல் மற்றுமொரு ஜீவனாய் நேசித்து பாதுகாப்பாய் பார்த்துக்கொண்ட அப்பாவின் சைக்கிள் அனைத்து பருவங்களிலும் எல்லா நிகழ்வுகளிலும் கூடவே துணைவந்ததும்… அப்பாவின் அடையாளத்தில் ஒன்றாய் மாறிவிட்ட அந்த சைக்கிள் வாகனப்பயன்பாட்டின் காலமாற்றத்தால் அப்பாவின் மறைவுக்குப்பின் சீந்துவாரற்று வெறும் இரும்புக்கூடுபோல் காட்சிப்பொருளாய் மாறிவிட்டிருந்தாலும்,…

அப்பா போன பெறகு உண்மையிலேயே

அநாதையாய்ப் போனது

இந்த சைக்கிளும் அம்மாவும்தேன்

என்று சொல்லும் வரிகளில் கணவனைப்பிரிந்தபின் உறவுகள் இருந்தும் பகிர்தலுக்கிருந்த இணையை தொலைத்து தனிமரமாய் நிற்கும் ஒரு மனைவியின் உள்ளக்கிடக்கையை சைக்கிளுக்குள்ளும் ஒரு இதயம் வைத்து நமக்குள் எதையோ கடத்திச்செல்கிறது கவிதை.

அப்பாவின் நினைவு நாளில்

சாமி கும்பிடுவதற்காக

அழுக்கான சைக்கிளை

அழுத்தித் துடைத்தபோது

பக்கத்தில் வந்த அம்மா சொன்னாள்

“அதுவும் ஒரு உசிரு தாண்டா

அழுத்தித் தொடக்காதேடா

அப்பாவுக்கு வலிக்கும்…

என்று முடியும் கவிதைக்குள் ஒரு குடும்பத்தலைவனுடன் வாழ்ந்த பெருவாழ்வையும் உறவுகளுடன் சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியின் காலத்தையும் நம்மால் மெல்ல ருசிக்க முடிகிறது…

அதிகாலை எழுவதற்கு அலாரமடிக்கும் கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்த காலத்தில் தாங்கள் வசித்த நகரம்… மில்கள் எனும் பஞ்சாலைகள் நிறைந்திருந்த இடங்களில் கடிகாரங்கள் தேவைப்படவில்லை ஆலைச் சங்கொலிகளே எல்லா கால நேரங்களையும் வாழ்க்கையின் தூரங்களையும் காட்டிக்கொண்டிருந்தது என்பதை அதிகாலை சங்கு ஒலித்து மாலை வேலை முடியும் வரைக்குமான கால நேரங்களை பஞ்சாலை தொழிலாளர்களின் அன்றாடங்களை ஒரு கணவன் மனைவியின் தினசரி வாழ்க்கையுடன் பிணைத்து சங்கு எனும் கவிதையை நெகிழ்வாய் புனைந்திருக்கிறார்.

அதிகாலை எழுப்பிவிடும் சங்கிலிருந்து வேலை முடிந்து இரவு உறக்கம் வரையிலான காட்சிகளுக்குள் அழைத்துச்செல்பவர் இறுதி வரிகளில்…

ஏழேகால் சங்குக்கு

புள்ளைகளுக்கு ராச்சோற

ஏழே முக்காலுக்கு பெரியவங்க

சாப்பாட்டுக்கப்புறம்

எட்டரை மணிக்குள்ளே அடங்க்கீரும்

எங்கூரு.

 

சோறு போட்ட தெய்வம் மாதிரி

ஊருக்குள்ளே மில்லுக

செழித்திருந்தவரை

பசியுமில்ல பட்டினியுமில்ல

நேரம் பார்க்க கடிகாரமும்

தேவைப்பட்டதில்லே

புதிய இயந்திர வரவுகளால் மெல்ல மெல்ல தொலைந்து போன சின்னச்சின்ன ஆலைகளின் காலத்தையும் நமக்கு நினைவு படுத்துகிறது. சென்னையின் பிரம்மாண்டமான பி&சி கர்னாட்டிக் மில் அழிந்த கதையும் அதன் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்க்கையும் கண்முன் வந்து நிற்கிறது.

இன்னொரு கவிதையில் அண்ணன் தங்கைகள் இரண்டு தரப்புக்குள்ளும் இருக்கும் உறவுப்பிணைப்பினை குழந்தைப்பருவம் தொடங்கி திருமணம் வரைக்குமான ஒரு நேசிப்பின் அடர்த்தியை கிண்டலும் மகிழ்ச்சியுமாய் அடர்ந்த பாசத்துடன் படைத்திருக்கிறார் கவிஞர்.

தங்கைகள்…….

அண்ணனுக்கான சோற்றுத் தட்டில்

தன் பங்குக் கறியையும்

அள்ளி வைக்கிறார்கள்

 

திட்டிக்கொண்டிருக்கும் அம்மாவிடம்

அண்ணனுக்காக வக்காலத்து வாங்கி

அடி படுகிறார்கள்…

என்று தங்கைகளின் விலைமதிப்பற்ற அன்பைச் சொல்லி நீளுமக்கவிதையில்

 

அம்மாவின் இறப்புக்கு

அழுதழுது ஓய்ந்த தங்கைகள்

அண்ணன்களின் பாசத்தை

அம்மாவின் கருப்பையாய்

உருவகித்துக் கொள்கிறார்கள்…

 

பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு

கண்கள் கசிய அண்ணனை அணைத்தபடி

அழுது கொண்டே புருஷனுடன்

ரயிலேறிப்போன இரவொன்றில்தான்

அந்த அண்ணன்

பத்தாண்டுகளுக்கு முன்

தாய் இறந்த துக்கம் தாளாமல்

அழுது தீர்க்கிறான்…

தாய் பிள்ளை என்ற பாசத்தின் ஆழ்ந்த நெருக்கத்தைத் தாண்டி அண்ணன் தங்கை உறவுகளுக்குள்ளும் நேசிப்பின் அடர்த்தியில் எந்த மாற்றமுமின்றி தேவைப்படின் கூடுதல் தியாகங்களுடன் விட்டுக்கொடுத்து தாய்மையின் அதே சமன் கோட்டில் அண்ணன் தங்கைகளின் உறவு பயணிப்பதை சொல்லிய விதம் கவிதைக்கு எழில் கோர்க்கிறது.

பிரதிகள் எனும் கவிதை… பெருமரத்துக்கும் அதன் கிளைகளில் துளிர்த்திறங்கும் விழுதுகளுக்குமான உன்னத உறவைப்போல் தாத்தா பேரனுக்குள் நிகழும் நட்புகலந்த உறவொன்றை சொல்கிறது.. காலகாலமாய் தாத்தாக்கள் பேரப்பிள்ளைகள் கற்றுத்தெளிவு பெறும் முதல் பாட சாலையாகவும் பல்கலைக் கழகமுமாய்த் தான் எப்போதும் இருக்கிறார்கள்… தாத்தாக்களிடமிருந்தும் தங்களின் உலகத்தை வெவ்வேறு வடிவங்களில் தரிசிக்கிறார்கள். சாகசக்கதைகளிலிருந்து கண்ணீர் முட்டும் கதைகள் வரை அன்பு தொடங்கி அறிவுரைகள் வரை தாத்தா என்னும் அனுபவ மரத்தினடியில் அமர்ந்து பேரப்பிள்ளைகள் ஞானம் பெறுகிறார்கள்… பொருந்தா காதலைப்போல இருவரின் அனுபவத்தையும் ஒரே சிமிழ்களுக்குள் அடைக்க முடியாத நட்பு முரண் என்றாலும் அதுதான் ஆகச்சிறந்த நட்பின் உறவென தொடர இருவரும் விரும்புகிறார்கள்…

விடுமுறையில் ஊருக்கு வரும் பேரக்குழந்தைகள்

தாத்தாக்களை இறந்த காலத்திற்குள்

தூக்கிப் போய்விடுகிறார்கள்.

 

வெளுத்த மயிரடர்ந்த கிழம் தாடிகளை

இளஞ்சிவப்பு உதடுகளால்

ஆசிர்வதிக்கிறார்கள்…

என நீளும் கவிதையில் தாத்தாக்கள் பேரப்பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ற தங்களை முதுகில் ஏற்றிச் சுமக்கும் ஒரு வாகனமாய் வேலையாளாய் நடைப்பயிற்சிக்கு உடன் வரும் நண்பனாய் கதை சொல்லியாய் என பல அவதாரங்கள் எடுக்கிறார்கள்… முதிர்ந்த வயதிலிருக்கும் தாத்தாக்கள் பலருக்கும் ஒவ்வாமைகளையும் மறைமுக புறக்கணிப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும் மருந்தாக பேரப்பிள்ளைகள் மாறிவிடுகிறார்கள்… விடுமுறை முடிந்து பேரப்பிள்ளைகள் வீடு திரும்பும் நாள் வரும்போது குழந்தைகள் தாத்தாவை பிரிய நேர்வதை பெருஞ்சோகமாய் சுமக்கத்தொடங்கி விடுகிறார்கள்.. கடைசி நாளில் அழுதுகொண்டே விடைபெரும் அவர்கள்

அடுத்த வருடம் வரும் வரையிலும்

வாழ்வதற்கான ஆவலையும் நம்பிக்கையையும்

தாத்தாக்களுக்கு கொடுத்துவிட்டு

ரயிலேறிவிடுகிறார்கள்…

என கவிதையை கவிஞர் முடிக்கும்போது தாத்தாக்களின் அருகாமையும் உறவும் கிடைக்காமல் போனவர்களுக்குள்ளும் ஒரு ஏக்கம் வந்தமர்ந்து கொள்கிறது.

தங்களூரில் ஓடும் நொய்யலாற்றின் அழகையும்… தனக்கும் அதற்குமான வெளிச்சொல்லத் தெரியாத ஒரு புரிதலையும் தன் உணர்வுகளுக்குள் ஊறிக்கிடக்கும் அந்த ஆற்றுடனான உறவையும் ஒரு கவிதைமூலம் துளித்துளியாய் சிலாகிக்கும் இவர்

ஒரு நதியின்

மரணத்தை பார்த்ததுண்டா நீ..?

என் மூத்த தலைமுறைகள்

நீந்திக்களித்த நதி..

என்று நதிக்கும் தனக்குமான உறவைச் சொல்லி உங்களில் யாருக்காவது அந்த அனுபவமிருக்கிறதா என கேட்கும் அக்கவிதைக்குள் ஆற்றில் துணி துவைக்கும் காட்சிகளை, பிடித்த மீனின் குழம்பு ருசியை… ஆற்றில் மீன் பிடித்து அப்பாவிடம் அடிவாங்கிய அனுபவத்தை… திருவிழாவில் முளைப்பாரிகள் நீர்ப்பரப்பில் மிதந்துவரும் பச்சை அழகை… தூரத்திலெறியும் பிணத்தை என ஒவ்வொரு காட்சியையும் கண்முன் நிறுத்தி இந்த அனுபவங்களேதுமுண்டா என நம்மிடம் கேள்வி கேட்கும் அவர்.

சாய நிறத்தில்

சாம்பல் நிறத்தில்

சாக்கடை நிறத்தில்

கொடும்.. நாற்றத்துடன்

தேங்கிக்கிடக்கும் என் நொய்யல்

நதிபார்த்து… நானழுத அழுகை….?

என முடிக்கையில்… காலவோட்டத்தில் தன் அடையாளங்கள் அனைத்தும் தொலைந்து ஒரு காலத்தில் தனது தோழியாய் தோழனாய் இருந்த நொய்யலாற்றை இன்று சாயக்கழிவுகளுக்கு சாகக்கொடுத்துவிட்ட காட்சிகளை எண்ணி கவிதைக்குள் கலங்கியழும்போது நமது ஊரிலும் மரணித்த ஆறொன்று சடலமாய் படுத்துக்கிடக்கும் காட்சி நிச்சயமாய் வந்து போகலாம்.

நெடு நாட்கள் வாழ்ந்த வீடு… அது வாடகை வீடென்றாலும் காலி செய்யும் நிலை வரும்போது அதுவரை அந்த வீட்டில் வாழ்ந்த காலத்தின் நினைவுகள் நெஞ்சழுத்தும். அதுவும் முன்னோர்கள் புழங்கிய பூர்வீக வீட்டை பால்யத்திலிருந்து புரண்டு எழுந்த வீட்டை… அந்த வீடு புழக்கத்தில் இல்லாமல் சிதைந்து கிடந்தாலும் இடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலும்… ஒரு காலத்தில் ஆழமாய் வேர்பிடித்து கிளைபரப்பி விழுதுகளாய் நிலம்பரவி நின்ற பெருங்குடும்பத்தின் நினைவுகளும் முன்னோர்கள் வாழ்ந்த நாட்களின் ஞாபகங்களும் மனசெங்கும் நுரை மிதக்க அலையடித்துக்கொண்டேயிருக்கும்… தனது தாத்தாவும் அப்பாவும் வாழ்ந்து முடித்த சிதலமடைந்த வீட்டை இடிக்க நேரும்போது… வீட்டின் பரண்களில் வாழ்ந்து முடிந்த மூத்தோர்களின் வாழ்வியல் அடையாளத்தின் மிச்சங்களாய் அவர்கள் விட்டுச்சென்ற பழங்காலப் பொருட்களை பொக்கிஷம் போன்று ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து வரிசையாய் காட்சிப்படுத்துகிறார்…

இடித்துக் கட்டுவதற்குத் தீர்மானித்துவிட்ட

தாத்தனின்

சிதிலமடைந்துவிட்ட பூர்வீக வீட்டிலிருந்த

பரணிலிருந்த புளிக்கொட்டி…உப்புத்தாளி, கொத்துக்கரண்டி, பாதாள ஜல்லி, பழைய நாதாங்கி, மீன்வேட்டை வாள், கிருஷ்ணாயில் லாந்தரு, எடால் ஈட்டி ஒலக்கை, பல்லாங்குழி கிணத்துருளை, இரும்புப்பொட்டி, மாட்டுலாடம், இங்கிலீஷ்ராலேவின் பிரேம், டைனமோ ஹப்…. இன்னும் இன்னும் வரிசையாய் கேள்விப்படாத பல பொருட்களை பரணிலிருந்து இறக்கி அடுக்குகிறார்.

நம் வழக்கில் இல்லாத அப்பொருட்களை வாசிக்க வாசிக்க ஒரு அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து புராதனப்பொருட்களை கண்டு திரும்பும் ஆராய்ச்சியாளனின் சிலிர்ப்பை அது நமக்குத் தருகிறது.

தாத்தனின் இருள் படிந்த வீட்டுக்குள்ளிருந்து சிலந்தி பின்னிய வலையகற்றி பரண்களிலிருந்து அத்தனையும் எடுத்த பின்பு தென் மேற்கு குபேர மூலைக்குள் நுழையும் முன் என்று…. ஒரு நொடி… கவிதையை நிறுத்தி பின் இப்படித் தொடர்கிறார்…

தென்மேற்கு குபேர மூலையறையின்

குதிருக்குள் கிடந்த புராதன தானியத்தின்

ஒற்றை மணி…

பறவைகள் தின்றதுபோக

எலிகள் தின்றதுபோக

மனிதன் தின்றதுபோக

காலம் தின்றதுபோக

சந்துரு ஆர்.சி
       சென்னை.
நூல் : பிள்ளைத் தானியம் [கவிதைத்தொகுப்பு]
ஆசிரியர்: கவிஞர் ஜெயாபுதீன்
வெளியீடு : கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடு.
May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்   (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *