சு முத்துக்குமார் ஓர் இளைஞர். ஒரு பொறியாளர். அவற்றிலொன்றும் செய்தியில்லை. அவர் சமூக அக்கறை உள்ளவராக இருக்கிறார். அறிவியல் தேடல் உள்ளவராக இருக்கிறார். சுற்றுச் சூழலில் கரிசனம் மிக்கவராக இருக்கிறார். முக்கியமாகத் தன் எண்ணங்களை எளிய தமிழில் சரளமாகச் சொல்லக்கூடிய வன்மையுள்ளவராகவும் இருக்கிறார். ஆகவே இவரும் இந்த நூலும் செய்தியாகின்றன.
இந்த நூலில் முத்துக்குமார் பின்னயிருப்பவை 11 கட்டுரைகள். முதல் கட்டுரையில், பழந்தமிழரின் முருக வழிபாட்டை வைதீக மரபு எப்படி உட்செரித்துக் கொண்டுவிட்டது என்பதைக் கள விவரங்களோடும் இலக்கியச் சான்றுகளோடும் விளக்குகிறார். இன்னொரு கட்டுரையில், அஸ்ஸாம் மண்ணையும் மக்களையும் மூழ்கடிப்பது வெள்ளம் மட்டுமில்லை, நிர்வாகப் போதாமையும்தான் என்கிறார். முத்துக்குமாரின் பார்வை தமிழர்களோடும் இந்தியர்களோடும் நின்று விடுவதில்லை, அது உலகளாவியது. லெபனானில் நேர்ந்த பெருவெடிப்பிற்குப் பின்னாலுள்ள ஆட்சியாளர்களின் அலட்சியத்தைப் பேசும்போது, நாட்டின் பொருளாதாரச் சீரழிவிற்கும் அதுவே காரணம் என்று இணைக்கிறார். சீனாவின் வளர்ச்சியைப் பேசும்போது பொருளாதாரத்தோடு மனிதமும் சேர்ந்து கொள்கிறது. தான் பணியாற்றும் கிழக்கிந்தியாவில் ஒரு மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்பதை அறியும்போது அதைக் கவனப்படுத்துகிறார்; அந்த மொழி மெல்லத் தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதில் கவலையுறுகிறார். நூலில் அறிவியல் கட்டுரைகள் நெடுக உள்ளன. வானவியல், நீர்மூழ்கிக் கேபிள்கள், மெய்நிகர் வலை, புயலின் திசைவழி என அவைப் பல பொருள்களில் அமைகின்றன.
நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருப்பது அண்மையில் காலமான பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் நிகழ்த்திய நேர்காணல். அதில் தொ.ப சொல்கிறார்: ‘இன்றைய இளைஞர்களுக்கு மனித வாசிப்பு இல்லை. எழுத்து வாசிப்பு என்பது மனித வாசிப்பிற்குப் பின்தான்.’
முத்துக்குமாரிடம் மனித வாசிப்பு இருக்கிறது. ஆதலால் சக மனிதர்களின் மீது கரிசனம் இருக்கிறது. அவருக்கு எழுத்து வாசிப்பும் இருக்கிறது. இரண்டு வாசிப்பையும் இணைத்தும் தொகுத்தும் சொல்லும் திறனும் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த நூல். இது ஒரு தொடக்கம்தான். முத்துக்குமாரிடம் நாம் நிறைய எதிர்பார்க்கலாம்.
[பின்னல்-11
அரசியல் – அறிவியல் -ஆன்மிகம்; வலைப்பூக் கட்டுரைகள்.
நூல் அமேசான் கிண்டிலில் கிடைக்கும். https://www.amazon.in/…/ref=
நூலின் சலுகை விலை : ₹ 49/-]
(மு இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected])
Leave a Reply