நிஷா மன்சூர் ஏழுதியா பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் - நூல் அறிமுகம் | Nisha mansoor - Pinthangiya Padaiyilirunthu Oru Apayakural - https://bookday.in/

பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் – நூல் அறிமுகம்

பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

புத்தகம் : பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
ஆசிரியர் : நிஷா மன்சூர்
பிரிவு : கவிதைத் தொகுப்பு
பதிப்பகம் : தேநீர் பதிப்பகம்

சீனிவாசன் நடராஜன் அவர்களின் சிறப்பான கவர் டிசைன். கவிஞர் ஹாமீம் முஸ்தபா அவர்களின் சிறப்பான மதிப்புரை. கவிஞர் நிஷா மன்சூர் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. தொகுப்பில் நூற்றி ஐம்பது கவிதைகள் இருக்கின்றன.

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்கள், சமயம் சார்ந்த கவிதைகளில், தொகுப்பெங்கும் வருகிறது.
கவிதைகளின் பாடுபொருள் காதல், காமம், சமூக நீதி, சமயம், குழந்தைகள், சுய விமர்சனம் எனப் பரந்து இருக்கின்றது. அழகான படிமங்கள் தொகுப்பெங்கும் காணக்கிடைக்கிறது.

அடர்வனப் பொதும்பு கவிதை ஒரு சுய அலசல். மயிலும் இருக்கிறது, ராஜாளியும் இருப்பதால், ‘மற்றபடி நானொரு நடமாடும் அடர்வனம்’ என்கிறார் கவிஞர்.

உம்மத்தே வஸதெனும் சமநிலைச் சமுதாயம் கவிதை, தன்னுடைய சமயத்திலிருக்கும் போலிகள் குறித்த விமர்சனம்:

‘சூரியன் பிருஷ்டத்தைச் சுட்டபோது திகைத்தெழுந்து
ஸ்டேட்டஸ் போட்டான்
முஸ்லிம்களைக் கண்டு இஸ்லாத்தை எடை போடாதீர்கள்
எங்கள் மார்க்கம் பரிசுத்தமானது’
கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதையான ‘பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்’ கவிதை, பேருண்மையை அடைவதற்கும், லௌகீக வாழ்விற்குமான போர். இதில் கவிஞர் பின்தங்கிய படையணியிலிருந்து அபயக்குரல் கொடுக்கிறார்: ‘விரைந்து முன்னேறும் சூபியின்
கடைக்கண் பார்வையை யாசித்தபடி
பீற்றற் துருத்திதனை தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறேன்’
தேடலின் மற்றும் ஒரு உதாரணம் நான் கவிதை:
‘அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும்
வெள்ளாடு நான்’

போதாமைகளின் பெருநகரம் ஐந்து தொடர் கவிதைகளில், போதாமைகளால் விரிந்து கொண்டே செல்லும் நகரத்தில் மூச்சுத் திணற வசிக்கும் கவிஞனின் ஆற்றாமை. திடுக்கென்று அதிர்வலைகள் படிப்பவர்கள் மனதில்:

‘பள்ளிகளில் வன்புணர்வு செய்யப்படும் சிறுமிகளின் கூக்குரல்கள் விண்ணைப் பிளக்கும் வளர்ச்சி கோஷங்களில் அமுங்கி மறைகின்றன அடையாளமற்று’
பூ மலரும் தருணத்தில் கவிதையில் நிகழ்கால வாழ்வின் கொடுமையை விவரிக்கிறது:
‘எங்கோ ஒரு பதின்மவயதுச் சிறுமி
தன் வயிற்றுச் சிசுவைச் சுரண்டியெடுத்து
குப்பையிலிட்டுக் கடந்துபோகிறாள்’.
பெருநகரத்தின் நவீன வாழ்வில் இது சகஜமான ஒன்றாக இருக்கக் கூடும். ஆனால் படிக்கும் நமக்கு மிகப்பெரிய அதிர்வைக் கடத்துகிறது.நமது கலாச்சாரம் எங்கே செல்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

காதல் கவிதைகளில் இவரா அவர் என்னுமளவிற்கு சிறப்பான வரிகளுடனான கவிதைகள்:

‘எந்நேரமும் நினைவுவைத்து இளைப்பாறிக் கொள்ளும்
உன் முத்தத்துக்கோ
மழைநேரத்து மண்வாசனை’
‘சொல்ல முடியாத வார்த்தைகள் கண்களில் கோர்த்து நிற்க
வெல்லமுடியாத மனசை
கோபச் சிறையிலிடுகிறோம்’
‘ஓசைகளற்ற கொலுசுகளின் துயரம்
மின்னும் மூக்குத்திக்களுக்கில்லை
மின்னும் மூக்குத்திக்களுக்கில்லை’
‘நீ என்பது நினைவுச்சுழல் எனில்
நின்னைக் காண்பது நிகழ்கனா’
‘எல்லா தேன்மொழிகளும் திருமணப் பத்திரிகையை
அழுது வீங்கிய கண்களுடன்
நடுங்கும் கரங்களில் திணித்துவிட்டுச் செல்கிறார்கள்’
வாக்குமூலம் தொடர் கவிதைகளில் சுயதேடல்:
‘எனினும்
நேற்றின் அழுக்குகளோ இன்றைய அழுக்குகளோ
நினைவடுக்குகளில் ததும்பி விழுமெனில்
நாளைக்கும் வரமுடியாமற் போகலாம்’

நிஷா மன்சூர் ஏழுதியா பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் - நூல் அறிமுகம் | Nisha mansoor - Pinthangiya Padaiyilirunthu Oru Apayakural - https://bookday.in/

காமத்தை அழகான வரிகளில் விவரிக்கின்றன பல கவிதைகள்:

‘இவ்வுலகின் சகல இசைக்கருவிகளும் சேர்ந்திசைக்கும்
உன்னத இசையில் நம் சுயத்தைத் தொலைக்கிறோம்
அல்லது மீட்டெடுக்கிறோம்’

இச்சமூகத்தின் மீது எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருந்தாலும், நம்பிக்கையையும் விதைக்கிறார் கவிஞர்:

‘அப்படியொன்றும் மோசமில்லாத
ஒரு தேநீர்
எங்காவது கிடைத்து விடுகிறது
அப்படியொன்றும் மோசமில்லாத
ஒரு அறையும்
ஒரு வாகனமும்
ஒரு பயணமும்
ஒரு தோழமையும்
ஒரு வழித்துணையும்
எப்படியாவது அமைந்துவிட
அப்படியொன்றும் மோசமில்லை
இந்த வாழ்க்கை’

வரம் கவிதை குழந்தைகளின் உலகில் கவிஞர்:

‘ஏந்தும் கரங்களை வெறுங்கையாக்க விரும்பாத
ரட்சகனின் வாக்கை
தேவதைகள்தான் எவ்வளவு இலகுவாக
நிறைவேற்றி விடுகிறார்கள்’
பாஹிமாவுக்கான கவிதை ஒரு மகளதிகாரம்:
‘அசந்து உறங்கும் தகப்பனின் ஆடைகளைப்
சரிசெய்து நகரும் மகளுக்கு
ஒரு தாயின் தோரணை’

குறுங் கவிதைகளில் இயற்கையை இழந்த வெறுமை:

‘மரித்த காடுகளின் சிதிலங்கள் மிதிபடும்
நகரமெங்கும் தென்படுகின்றன
மரம் வளர்க்க வலியுறுத்தும் பதாகைகள்’
படிமங்களின் அழகில் ஜெயராம் ஹோட்டல் கவிதை.

பற்றுச்சீட்டுகளில் நெளியும் சர்ப்பம் கவிதை கம்பெனி முதலாளிகளின் மனநிலையைச் சொல்கிறது:

‘மானுட மாமிசம்
அப்படியொன்றும் முன்னம் போல
சுவையாக இல்லையெனச் சலித்துக் கொள்கிறோம்’
நாற்பதுகளின் பூதம் கவிதை முதுமையை நெருங்கும் பெண்களின் மனநிலை.
இப்படியாக பல சிறப்பான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
சமயம் சார்ந்த கவிதைகளைத் தனியாக ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கலாம்.
தேவையற்ற கவிதைகளை கருணையின்றி நீக்கி இருக்கலாம்.
குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களைத் தேடிப் படிக்கத் தூண்டும் ஒரு தொகுப்பு.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

நிஷா மன்சூர் ஏழுதியா பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் - நூல் அறிமுகம் | Nisha mansoor - Pinthangiya Padaiyilirunthu Oru Apayakural - https://bookday.in/

கண்ணன் விஸ்வகாந்தி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *